லியோன் ட்ரொட்ஸ்கி
நூற்றாண்டுகளுக்கு முன்பு பெரும் ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் நவம்பர் 20, 1910 ல் மறைந்தார். பல எழுத்தாளர்களால் பெரும் பாராட்டுக்களை பெற்றிருந்த போதிலும், டால்ஸ்டாய்க்கு மிகச் சிறந்த பாராட்டு அவர் மறைவிற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு, லியோன் ட்ரொட்ஸ்கி டால்ஸ்டாயின் 80 வது பிறந்த தினத்தன்று எழுதிய இக்கட்டுரை மூலம் வந்தது. இது முதலில் ஜேர்மனியில் Die Neue Zeitல் செப்டம்பர் 18, 1908ல் வெளியிடப்பட்டது; அதன் பின் 1926ம் ஆண்டு ட்ரொட்ஸ்கியின் படைப்புக்கள், 20ம் தொகுப்பு ரஷ்ய மொழிபெயர்ப்பில் வந்தது ; இறுதியாக நான்காம் அகிலத்தின் இதழ் ஒன்றில் மேஜூன் 1951ல் “டால்ஸ்டாய், கவிஞரும்,எதிர்ப்பாளரும்” என்ற தலைப்பில் ஜோன் ஜி. ரைட்டின் மொழிபெயர்ப்பு வந்தது. மூல ஆங்கில மொழிபெயர்ப்பில் சிறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பல இறுதிக் குறிப்புக்கள் 1926 ரஷ்ய பதிப்பிற்கேற்ப சேர்க்கப்பட்டுள்ளன.
இல்யா ரெபின் வரைந்த டால்ஸ்டாய் ஓவியம்
டால்ஸ்டாய் இன்று தனது எண்பதாவது பிறந்த நாளைக் கடந்து, இப்பொழுது நம் முன் ஒரு மகத்தான செதுக்கப்பட்ட குன்றின் உச்சியில் மலைப்பாசி படர்ந்து, வேறுபட்ட வரலாற்று உலகில் இருந்து வந்துள்ளவராக நிற்கிறார்.
இது மிக வியப்பான பொருளாகும்! கார்ல் மார்க்ஸ் மட்டுமல்ல –டால்ஸ்டாய்க்கு நெருக்கமான துறையில் உள்ள பெயரை மேற்கோளிடும்போது—ஹெயின்ரிக் ஹெயினும் நம் சமகாலத்தவர் போல் தோன்றுகின்றார். ஆனால் நம் பெரும் சமகாலத்தவரான யாஸ்நயா போலியானவிற்கோ நாம் ஏற்கனவே அனைத்திலும் வேறுபாடுகளை மீண்டும் மாற்றப்பட முடியாத வகையில் ஏற்படுத்தி விடும் காலத்தினால் பிரிக்கப்பட்டுவிட்டோம்.
ரஷ்யாவில் பண்ணை அடிமை முறை அகற்றப்பட்டபோது இவருக்கு 33 வயது. “பத்து தலைமுறைகளாக உடலுழைப்பில் ஈடுபடாத தலைமுறைகளில்” தோன்றியவர் என்ற முறையில் அவர் பழைய பிரபுத்துவம், பூர்விகச் சொத்துக்கள், பரந்த பண்ணை வீடு, அமைதியாகவும்,பெருங்குடித் தன்மை நிறைந்தும் உள்ள லிண்டன் மர நிழலின் கீழ் உருவாக்கப்பட்ட சூழ்நிலை இவற்றிடையே வளர்ந்து, கனிந்து நின்றார்.
நிலக்கிழார் ஆட்சியின் மரபுகள், அதன் வசீகரத்தன்மை, அதன் கவிதை, அதன் முழு வாழ்க்கை ஒயில் ஆகியவை டால்ஸ்டாயினால் தவிர்க்க முடியாமல் உள்வாங்கப்பட்டன. அவை அவருடைய ஆன்மிகத் தன்மையில் இயல்பான பகுதியாக இருந்தன. அவருடைய முழு உணர்வு ஆண்டுகளின் முதல் பகுதியில், இன்றும் அவர் இருப்பது போல், அவர் ஒரு உயர் பண்பாளர்ஆவார் –அவருடைய படைப்பாற்றலில் மிக ஆழ்ந்த, இரகசிய இடைவெளிகளில்; இது அவருடைய பிந்தைய ஆன்மிக நெருக்கடிகள் அனைத்தையும் மீறி இருந்தது.
டால்ஸ்டாய் குடும்பம் மரபுடையமையாகப் பெற்றிருந்த பிரின்ஸஸ் வோல்கோன்ஸ்கி என்னும் பூர்விக இல்லத்தில், (War and Peace) போரும்அமைதியும் எழுதிய டால்ஸ்டாய் ஒரு எளிமையான, ஆடம்பரமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள அறை ஒன்றில் அமர்ந்துள்ளார். அறையில் ஒரு சிறிய ரம்பம் சுவரில் தொங்குகிறது; ஒரு அரிவாள் காணப்படுகிறது; மேலும் ஒரு கோடாரியும் தென்படுகிறது. ஆனால் இதே பகுதிக்கு மேல் மாடியில், சுவரில் ஏராளமான நலைமுறைகளின் புகழ்பெற்ற முன்னோர்களின், மரபுகளுடைய முழுப்பாதுகாவலர்கள் என்ற முறையில், இறுக்கமான முகத்தோடு பல ஓவியங்கள் சுவர்களில் மாட்டப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு அடையாளம் உண்டு. இந்த இரு தளங்களையுமே நாம் வீட்டின் எஜமானரின் இதயத்திலும் காண்கிறோம்— ஆனால் அவை தலைகீழாக நிலைபெற்றுள்ளன. முழு உணர்வின் உயர் சிகரங்களின் எளிய வாழ்க்கை, மக்களிடையே ஆழ்ந்து அமிழ்ந்திருத்தல் என்ற தத்துவம் ஒரு கூடு போல் பின்னப்பட்டிருந்தது என்றால், உணர்வுகள், தீவிர ஆர்வங்கள், விருப்பங்கள் அனைத்தும் வெளிப்படும் கீழ்ப்பகுதியில் இருந்து ஒரு நீண்ட மூதாதையர் கூட்டம் உற்று நோக்குகிறது.
செயற்கையாக வளர்க்கப்பட்ட விருப்பங்களைப் பெருமைப்படுத்தி, தங்கள் சாதி முன்கருத்துக்களை, போலி அழகைப் பற்றிய மேற்புகழ்ச்சியில் மூடிமறைக்கும் ஆளும் வர்க்கங்களின் தவறான, வெற்று உலகச் சார்புத் தன்மையை, டால்ஸ்டாய் தன் பின்னிரக்கச் சீற்றத்தால் துறந்தார். ஆனால் என்ன நடந்தது? அவருடைய கடைசி முக்கிய நூலான புத்துயிர்ப்பில்(Resurrection) டால்ஸ்டாய் தன்னுடைய கலைப்படைப்புக் கவனத்தின் மையப் பகுதியில் இன்னும் அதே செல்வந்தர்கள், வசதியான குடும்பங்களில் பிறந்த ரஷ்ய நிலக்கிழாரைப் படைத்து, அவரைச் சுற்றி பெரும் அக்கறையுடன் பிரபுத்துவ உறவுகள், பழக்க வழக்கங்கள் மற்றும் நினைவுகளைத்தான் இருத்துகிறார் – ஏதோ இந்த “வெற்று உலகத் தன்மை”, “போலித்தன”உலகிற்கு வெளியே முக்கியத்துவம் நிறைந்தவையோ அல்லது அழகு நிறைந்தவையோ இல்லை என்பது போல்.
நிலக்கிழாரின் பண்ணை வீட்டில் இருந்து ஒரு சிறு, குறுகிய பாதை நேரே விவசாயியின் குடிசைக்குச் செல்கிறது. அறநெறியாளரான டால்ஸ்டாய் அதை விமோசனப் பாதையாக மாற்றுவதற்கு முன்பு கவிஞரான டால்ஸ்டாய் இப்பாதையை பலமுறையும் நேசத்துடன் கடந்துள்ளார். நிலப் பண்ணை அடிமைமுறை அகற்றப்பட்ட பின்னரும் கூட, அவர் விவசாயியை “தன்னுடையவரே” என்று தன்னுடைய பொருள்சார் மற்றும் ஆன்மிக வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகத்தான் கருதினார். டால்ஸ்டாயின் சந்தேகத்திற்கிடமில்லாத, அவரே தன்னைப்பற்றி நம்மிடம் கூறியிருப்பதில் உள்ள “உண்மையான உழைக்கும் மக்கள்பால் இருந்த, உடல்ரீதியான நேசத்திற்குப்” பின்புறத்தில் இருந்து அதே போல் சந்தேகத்திற்கு இடமின்றி அவருடைய கூட்டுப் பிரபுத்துவ முன்னோரும் நம்மை இழிவுடன் நோக்குகிறார்—இம்முறை அது ஒரு கலைஞரின் மேதையினால் ஒளியூட்டப்படுகிறது.
நிலக்கிழாரும் முழிக்கும் (muzhik) -இவர்களைத்தான் இறுதிப்பகுப்பாய்வில் தன்னுடைய படைப்பாற்றல் என்னும் உயர் புகலிடத்தில் டால்ஸ்டாய் முழுமையாக ஏற்றார். ஆனால் அவருடைய ஆன்மிக நெருக்கடிக்கு முன்போ, பின்போ, அவர் எப்பொழுதும் நிலக்கிழாருக்கும் விவசாயிக்கும் இடையே இருந்த நபர்கள் பற்றிய முற்றிலும் பிரபுத்துவ இழிவில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை, விடுவித்துக் கொள்ள முயலவும் இல்லை. அல்லது இந்தப் புனித பழமையான ஒழுங்கின் இரு முனைகளில் இருப்பவர்களுக்கு அப்பாலும் எவரையும் பொருட்படுத்தவில்லை —ஜேர்மனியக் கண்காணிப்பாளர், வணிகர், பிரெஞ்சு தனி ஆசிரியர், மருத்துவர்,“அறிவார்ந்தவர்” மற்றும் இறுதியாக தன்னுடைய பாதுகாப்பையும் சங்கிலியையும் கொண்டிருந்த ஆலைத் தொழிலாளி என. இந்த வகைப் பிரிவினரை அறிந்து கொள்ள வேண்டிய, அவர்கள் ஆன்மாவை ஊடுருவிப் பார்க்க அல்லது அவர்கள் நம்பிக்கை பற்றி வினா எழுப்ப வேண்டிய தேவையையும் டால்ஸ்டாய் ஒருபொழுதும் கொண்டதில்லை. அவருடைய கலைஞர் பார்வையில் அவர்கள் பல முக்கியமற்ற, பெரும்பாலும் நகைச்சுவை பக்கவாட்டுத் தோற்றத்தில்தான் கடக்கப்படுகின்றனர். எழுபதுகள் அல்லது எண்பதுகளின் புரட்சியாளர்களின் தோற்றங்களை அவர் படைக்கும்போது, உதாரணத்திற்கு புத்துயிர்ப்பில், அவர் தன்னுடைய பழைய நிலக்கிழார் விவசாயி மாதிரியைத்தான் ஒரு புதிய தொகுப்பில் கொடுக்கிறார் அல்லது முற்றிலும் வெளித்தன்மை கொண்ட, நகைச் சுவையான படைப்பைத்தான் அளிக்கிறார்.
அறுபதுகளின் தொடக்கத்தில் புதிய ஐரோப்பியக் கருத்துக்கள், இன்னும் முக்கியமான விதத்தில் புதிய சமூக உறவுகள் ரஷ்யா முழுவதும் வெள்ளமெனப் புகுந்தபோது, நான் கூறியபடி, டால்ஸ்டாய் ஏற்கனவே தனக்குப் பின் ஒரு நூற்றாண்டின் மூன்றில் ஒரு பகுதியைக் கடந்துவிட்டார்:உளரீதியாக அவர் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டிருந்தார்.
இங்கு அவருடைய நெருங்கிய நண்பரும், நிலக்கிழாரும், சூட்சுமமான உணர்ச்சிப் பாடல் கவிஞருமான பெட் (ஷென்ஷின்) போல் பண்ணை அடிமை முறைக்கு டால்ஸ்டாய் வக்காலத்து வாங்குபவராக மாறவில்லை என்பது நினைவில் இருக்க வேண்டும் என்பதைக் கூறத் தேவையில்லை. முந்தையவருடைய இதயத்தில் இயற்கையை இளகிய மனத்துடன் ஏற்று நேசிக்கும் தன்மை பண்ணைமுறையில் கட்டாயச் சவுக்கடிக்கு முன் பாராட்டுதலுடன் தாழ்ந்து நிற்கும் குணமும் இணைந்திருந்தன. ஆனால் டால்ஸ்டாயிடம் இயைந்திருந்ததோ பழைய முறைக்குப் பதிலாக வந்திருந்த புதிய சமூக உறவுகளின் பால் ஏற்பட்ட ஆழ்ந்த வெறுப்பு ஆகும். “தனிப்பட்ட முறையில் அறநெறிகளில் எந்த முன்னேற்றத்தையும் நான் காணவில்லை.பிறர் அது பற்றிக் கூறுவதையும் ஏற்கத் தயாராக இல்லை. உதாரணமாக ஆலை உரிமையாளருக்கும் தொழிலாளருக்கும் இடையே உள்ள உறவு நிலக்கிழார் பண்ணை அடிமை இருவருக்கும் இடையே இருந்த மனிதாபிமானத்தைவிட அதிகம் இல்லை என்றுதான் நான் காண்கிறேன்.”என்று அவர் 1861ல் எழுதினார்.
எல்லா இடங்களிலும், எல்லாவற்றிலும் பரபரப்பும் கொந்தளிப்பும் வந்தன, பழைய பிரபுத்துவத்தின் சிதைவு ஏற்பட்டது, விவசாயிகள் தொகுப்பின் சிதைவு, அனைத்திலும் பெருங்குழப்பம் ஆகியவை வந்தன; வெறும் குப்பையும், அகற்றப்படுவதின் கூளங்களும் நிறைந்தன; நகர வாழ்வில் ஆரவாரங்கள் ஒலித்தன; மதுக்கூடங்களும், சிகரெட்டும் கிராமங்களில் நுழைந்தன, நாட்டுப்புறப் பாடல்களுக்குப் பதிலாக ஆலைப்பாடல்கள் ஒலித்தன—இவை அனைத்துமே டால்ஸ்டாயை ஒரு உயர்குடியாளர், மற்றும் கலைஞர் என்ற முறையில் வெறுப்புக் கொள்ளச் செய்தன.
இப்பெரும் வழிவகையில் இருந்து அவர் உளரீதியாக மாறுபட்டார், அதற்கு கலையளவு அங்கீகாரம் கொடுக்கவும் எப்பொழுதும் மறுத்தார். பண்ணை அடிமை முறையைக் காக்கும் உள் உந்துதலை அவர் உணர்ந்ததில்லை,ஆனால் முழுமனத்துடன் அறிவார்ந்த எளிமை உள்ளது என்று அவர் உணர்ந்த இடத்தில் முழுமையான உறுதிப்பாட்டைக் கொண்டார். இவர் அதை கலைவடிவில் முழுமையாக வெளிப்படுத்த முடிந்தது.
அங்கு வாழ்வு ஒரு தலைமுறை, தலைமுறையாகவும் நூற்றாண்டில் இருந்து நூற்றாண்டிற்கும் அதே மாறாத் தன்மையுடன் கழிக்கப்படுகிறது. அங்கு புனிதமான தேவை என்பதுதான் மற்றவற்றை ஆள்கிறது. ஒவ்வொரு நடவடிக்கையும் சூரியன், மழை, காற்று, வளரும் பசுமைப் புற்கள் ஆகியவற்றை ஒட்டித்தான் உள்ளது. இங்கு எதுவும் ஒருவருடைய தனிப்பாட்ட காரணத்திற்கோ, தனிநபரின் எழுச்சி மிகுத்த விருப்பச் செயலினாலோ வெளிப்படுவதில்லை; எனவே எந்தத் தனிப் பொறுப்பும் கிடையாது. அனைத்தும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டதுவே, முன்கூட்டியே நியாப்படத்தப்பட்டது, புனிதப்படுத்தப்பட்டது. எதற்கும் பொறுப்பற்ற முறையில், தன்னைப் பற்றியும் சிந்தியாத அளவில், மனிதன் கேட்டுக்கீழ்ப்படிந்துதான் வாழ்கிறான் என்று “Dominion of the Land” கவிதையை எழுதிய உஸ்பென்கி கூறுகிறார். இப்படி எப்பொழுதும் கேட்டுக் கீழ்ப்படிதல் என்பது எப்பொழுதும் கடும் உழைப்பாக மாறுகிறது, அதுதான் வாழ்வைத் துல்லியமாக உருவாக்குகிறது; வெளிப்படையாக எந்த விளைவுகளையும் கொடுப்பதில்லை—ஆனால் அதன் இயல்பிலேயே விளைவுகளை அடக்கியுள்ளது…. ஓ, என்ன அற்புதம்! இந்தக் கடின நம்பியிருக்கும் நிலைகூட—சிந்தனையோ, விருப்பமோ இல்லாமல், பிழைகளோ, நினைத்து வருந்ததலோ இல்லாமல் இருப்பதுதான்—“ரைப் பயிரைப் பாதுகாக்கும் கடுமையான வாழ்க்கைக்குப் பெரும் அறவகையிலான “எளிய தன்மையை”க் கொடுக்கிறது. நாடோடிப்பாடல் பேரிலக்கியத்தின் விவசாயி-கதாநாயகன் மிகுலா செல்யனினோவிச், தன்னைப் பற்றிக் கூறுகிறார்: “நான் இயல்பான நிலத்தின் மிகப் பிரியமானவன்.”
ரஷ்ய வெகுஜனத் திருப்திப் படுத்துதலின் சமயப் புராண நம்பிக்கையின் தன்மை, பல தசாப்தங்களாக ரஷ்ய அறிவார்ந்தவர்களின் மனத்தில் ஆட்சி செலுத்துவது இவ்விதத்தில்தான் உள்ளது. அதன் முற்போக்குத்தனப் போக்குகளுக்கு முற்றிலும் செவிமடுக்காமல், டால்ஸ்டாய் எப்பொழுதும் தனியே நின்று வெகுஜனத்திருப்தி இயக்கத்தில் கூட அதன் உயர்பண்பு கன்சர்வேடிவ் பிரிவைத்தான் பிரதிபலித்தார்.
டால்ஸ்டாய் புதியவை பற்றி வெறுப்புணர்வு கொண்டிருந்தார்; தான் அறிந்த,உணர்ந்த, நேசித்த செயற்கையான ஒரு ரஷ்ய வாழ்வைத் தோற்றுவிப்பதற்காக அவர் கடந்த காலத்திற்குத் திரும்பும் கட்டாயத்திற்கு உட்பட்டார், 19ம் நூற்றாண்டுத் தொடக்கங்களுக்கே செல்ல நேர்ந்தது. 1867-69ல் எழுதப்பட்ட போரும் அமைதியும் அவருடைய மிகச் சிறந்த, விஞ்சப்படாத படைப்பாகும்.
தன்னுடைய பாத்திரமான Karatayev ல் வாழ்க்கையில் தற்சார்பற்ற வெகுஜனத் தன்மை மற்றும் புனிதமான பொறுப்பற்ற தன்மை டால்ஸ்டாயால் உருவாக்கப்பட்டது; பொதுவாக ஒரு ஐரோப்பியத் தலைவருக்கு இத்தகைய பாத்திரத்தைப் புரிந்து கொள்ளுவது கடினம்; எவ்விதத்திலும் அத்தகைய குணநலன் அவரிடம் இருந்து மிகத் தொலைவில்தான் இருந்தது.
“தானே கண்டபடி காரடயேவின் வாழ்வு ஒரு தனநபர் என்ற முறையில் பொருளற்று இருந்தது. ஒரு பெரும் மொத்தத் தொகுப்பில் ஒரு சிறு பகுதி என்ற முறையில்தான் அது பொருளைக் கொண்டிருந்தது. தொடர்புகள்,நட்புகள், காதல் என்று Pierre உணர்ந்தவகையில், காரடயேவிடம் ஏதும் இல்லை. அவர் நேசித்தார், வாழ்க்கை அவருக்குத் தொடர்பு ஏற்படுத்திய அனைத்துடனும் நேசித்து வாழ்ந்தார், குறிப்பாக மனிதர்களுடன்….ஆனால் பீரேயோ தன்னிடத்தில் காட்டப்பட்ட பிரியமான நேசம் இருந்தபோதும்கூட காரடயேவ் தாங்கள் பிரிந்துவிட்டால் ஒருகணம் கூட வருத்தப்பட மாட்டார் என்றுதான் உணர்ந்தார்.
ஹெகல் கூறியது போல் அந்தக் கட்டத்தில், ஆவி இன்னும் உள் முழு உணர்வைப் பெறாத நிலையில், அதையொட்டி உள்ளே இருப்பதாக மட்டுமே வெளிப்பட்டிருக்கும் கணமாகும். அவ்வப்பொழுது தோன்றினாலும் காரடயேவ்போரும் அமைதியும் உடைய தத்துவார்த்த அச்சு ஆவார், இல்லாவிடின் கலைச் சார்பு அச்சு எனலாம். ஒரு தேசிய மாவீரராக டால்ஸ்டாய் மாற்றும் குடுஜோவ், இதே காரடயேவ்தான், ஒரு தலைமைத் தளபதி என்னும் பதவியில்தான். நெப்போலியனுக்கு முற்றிலும் எதிரிடையாக குடுஜோவிடம் தனிப்பட்ட திட்டங்கள் கிடையாது, தனிப்பட்ட விழைவுகள் ஏதும் கிடையாது. பகுதி உணர்வுடைய உத்திகளினால், அவர் பகுத்தறிவினால் வழிகாட்டப்படாமல், அதற்கும் உயர்ந்திருக்கும் தன்மையினால் வழிகாட்டப்படுகிறார்—அதாவது சத நிலைகள் பற்றிய ஒரு மங்கிய உள்ளுணர்வு மற்றும் மக்களின் ஆர்வம் கொடுக்கும் தூண்டுதல் ஆகியவற்றால். தன்னுடைய தெளிவான கணங்களின் ஜார் அலெக்சாந்தர் மற்றும் குடுஜோவின் வீரர்களில் சிலர் என அனைவரும் நாட்டின் மேலாதிக்கத்தின்கீழ் சமமாக நிற்கின்றனர்…. இந்த அறவகை ஒற்றுமையில்தான் டால்ஸ்டாய் நூலின் அருட்பண்பு உள்ளது.
வரலாற்றினால் வாரிசுத் தன்மை அகற்றப்பட்டுவிட்ட பிரபுத்துவம், படிப்படி அதிகார நிலைகளைக் கொண்டிருக்கும் சமூக அமைப்புக்களின் நளினமான கடந்த காலம் ஏதும் இல்லாத, சிலுவைப் போர்களில் ஈடுபடாத, தேர்ந்த குதிரைவீ ர ரின் காதலோ, அத்தகுதிக்கான போட்டிகளோ இல்லாத,கவனத்தை ஈர்க்கும் நெடுஞ்சாலைக் கொள்ளைகளோ கூட இல்லாத இந்தப் பழைய ரஷ்யாதான் உண்மையில் எவ்வளவு அவலமாக உள்ளது. அக அழகைப் பொறுத்தவரையில் அது எத்துணை வறிய நிலையில் உள்ளது.பொதுவான, கிட்டத்தட்ட விலங்கினங்கள் போல் வாழ்ந்து வரும் விவசாயிகள் தொகுப்பை இரக்கமற்ற முறையில் எத்தகைய கொள்ளை அடிக்கப்பட்டது !
ஆனால் மேதை உருவாக்கும் மறுபடைப்பின் அற்புதம்தான் என்னே? இந்தச் சுவையற்ற, ஒளியற்ற வாழ்வில் இருந்து அவர் அதன் இரகசிய அழகைப் பற்றி எடுக்கிறார். ஹோமர் காட்டும் அமைதி, ஹோர் குழந்தைகள்மீது கொண்டிருந்த அன்பு இவற்றைப் போல், இவரும் அனைத்தின்மீதும்,அனைவரின்மீதும் தன் கவனத்தைச் செலுத்துகிறார். குடுஜோவ்,பண்ணைவிட்டுப் பணியாட்கள், குதிரைப்படைக் குதிரை, வயதிற்கு வந்துவிட்ட சீமாட்டி, முஷிக், ஜார், ஒரு வீரரிடம் காணப்படும் வெற்றுத்தன்மை, வயது முதிர்ந்த Freemason—இவர்களிடையே அவர் தனி விருப்பத்தை எவர்மீதும் காட்டில்லை, ஒவ்வொருவருக்கும் உரிய இடத்தைச் சிறிதும் மறுக்கவில்லை. படிப்படியாக, ஒவ்வொரு நிதானமான அடியாக,அவர் ஒரு வரம்பற்ற மகத்தான காட்சியைத் தோற்றுவிக்கிறார்; அதன் பகுதிகள் அனைத்தும் ஒன்றாக ஒரு உட்பிணைப்பினால் சேர்ந்துள்ளன.தன்டனுடைய படைப்பில் டால்ஸ்டாய் வாழ்க்கையை ஓவியமாகத் தீட்டும்போது சிறிதும் அவசரப்படுவது இல்லை. இது ஒரு பயங்கரமான விஷயம்தான் கூறுவதற்கு, ஆனால் அவர் தன்னுடைய மாபெரும் படைப்பை ஏழு முறைகள் திரும்பத் திரும்ப எழுதினார்…இந்த மகத்தான படைப்பில் மிகப் பெரும் வியப்பைத் தருவது கலைஞர் தனக்கோ தன்னுடைய வாசகருக்கோ எந்தத் தனிப்பாத்திரத்துடன் ஒன்றாக மனத்தில் பிணைந்து நிற்பதற்கான வாய்ப்பும் கொடுக்கவில்லை.
டால்ஸ்டாய் விரும்பாத Tugenev செய்வது போல் அவர் தன்னுடைய கதாநாயகர்களைக் மத்தாப்பு, வாணவெடிகளுக்கு இடையே, மக்னீசியச் சுடர்களுக்கு நடுவே ஒரு காட்சிப் பொருளாக்குவதில்லை. அவர்களை மேன்மையாகக் காட்டுவதற்காக நிலைமைகளைத் தோற்றுவிப்பதில்லை, எதையும் மூடி மறைப்பதில்லை,எதையும் அடக்கி வைப்பதும் இல்லை. பரபரப்புடன் உண்மையைத் தேடும்Pierre Bezukhov, நமக்கு இறுதியில் ஒரு நிறைவான குடும்ப மனிதராகவும் மகிழ்ச்சியான நிலக்கிழாராகவும் காட்டப்படுகிறார். தன்னுடைய பாதிக் குழுந்தையைப் போல் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளத்தைத் தொடும் நடாஷா ரோஸ்டோவாவை அவர் கடவுளின் இரக்கமற்ற தன்மையுடன் கைகளில் குழந்தையின் கழிவுகளை அகற்றுவதற்கு வைத்திருக்கும் துணிகளைக் கொண்டுள்ள, ஒரு வெற்றுத்தன குழந்தைபெறும் பெண்ணாக மாற்றுகிறார், ஆனால் பார்த்தால் கவனமற்ற தன்மையைக் கொண்டிருப்பது போன்ற இத் தனிப் பகுதிகளில் இருந்து ஒரு பெரும் முழுமையின் உயர்ந்த சாராம்ச நிலை வெளிப்படுகிறது, அதற்குள்தான் அனைத்துமே உட்தேவை மற்றும் உள்ளிக்கத்தின் உணர்வைச் சுவாசிக்கின்றன. இந்தப் படைப்பாற்றல் முயற்சி ஒரு கலையுணர்வுப் பன்முகவிரிப்பில் ஆழ்ந்துள்ளது, என்று கூறுவது ஒருக்கால் பொருத்தமாக இருக்கும். இதில் அழகோ, அழகின்மையோ இல்லை, மகத்தானது, சிறியது என்று ஏதும் கிடையாது, ஏனெனில் அது மகத்தானது, அழகானது என்பதை வாழ்வின் முழுமையில்தான் கொண்டுள்ளது, வாழ்வின் எப்பொழுதும் நீடித்த வெளிப்பாடுகளின் சுழற்சியில்தான். இது ஒரு விவசாயக் கலை அழகு ஆகும்; இரக்கமற்ற முறையில் இயல்பாக கன்சர்வேடிவ்தான் (பழைமைத் தன்மை உடையதுதான்), ஆனால் அது டால்ஸ்டாயின் பெரும் காப்பியத்திற்கும் Pentateuch அல்லது இலியட்டிற்கும் [1] இடையே ஒரு உறவைத் தோற்றுவிக்கிறது.
உளரீதியான தோற்றங்கள் மற்றும் “அழகிய மாதிரிகள்” ஆகியவற்றிற்கு இடமளிக்கும் டால்ஸ்டாயின் இரு சமீபத்திய முயற்சிகள், முதலாம் பீட்டர் மற்றும் 1825 டிசம்பர்வாதிகள் உடைய வரலாற்றுக் கடத்தலாக வடிவமைப்பிற்குள் நெருக்கமான பிணைப்புகற் கொண்டவை என்று அவர் உணர்ந்துள்ளது, இந்த இரு கால கட்டங்களையும் தீவிரமாக தன்மயமாக்கும் வெளிநாட்டுச் செல்வாக்குகளுக்கு அவருடைய விரோதப் போக்கு இருப்பதால் சிதைந்துவிடுகின்றன. ஆனால் நம்முடைய காலத்திற்கு அருகே எங்கெல்லாம் டால்ஸ்டாய் அணுகுகிறாரோ, 1877ல் வெளிவந்த அன்னா கரினீனா. போன்றவற்றில், அவர் ஆதிக்கம் கொண்டுள்ள, ஒத்துவராத தன்மைக்கு உள்ளூர எதிர்ப்போக்கைக் காட்டி, தன்னுடைய கலைப் பழமைத்தனத்தில் அசைந்து கொடுக்காமல் உறுதியாக இருந்து, தன்னுடைய தொடுவானங்களின் பரப்பைக் குறைத்து, ரஷ்ய வாழ்வின் முழுமையிலும் நற்பண்பு என எஞ்சியிருக்கும் கானல் நீரை மட்டுமே தனியே காட்டி, அவற்றை பழைய மூதாதையர் வீடு, மூதாதையர் ஓவியங்கள், மீண்டும் மீண்டும் தொடரும் ஆடம்பரமான லிண்டன் மரங்களின் நிழல் நிறைந்த பாதைகள் ஆகியவற்றை ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கும் அதன் வடிவங்களை மாற்றாமல், பிறப்பு, அன்பு, இறப்பு என்ற சுழற்சியையும் அளிக்கிறார்.
இதன் பின் டால்ஸ்டாய் தன்னுடைய கதாநாயகர்களின் ஆன்மிக வாழ்க்கையை அவர்களுடைய தாய்நாட்டின் வாழ்வுடன் இணைந்த வகையில் விவரிக்கிறார்: பரபரப்பு இல்லாமல், மேகம் மூடிய பார்வை என்று இல்லாமல், நிதானமாக. உள் உணர்வுகள், சிந்தனைகள், உரையாடல்களைக் கடந்து அவர் கூறுவதில்லை. எங்கும் செல்வதற்கு அவர் அவசரப்படுவதில்லை; ஒரு பொழுதும் எங்கும் தாமதமாகவும் செல்லுவதில்லை. ஏராளமான வாழ்க்கைகளைப் பிணைந்து ஒன்றாக்கும் வழிவகைகளை அவர் கையில் கொண்டுள்ளார்; ஆனால் ஒருபோதும் தன் உறுதித் தன்மையை இழப்பதில்லை. ஒரு மகத்தான நிறுவனத்தின் தலைவர் அதன் பல பிரிவுகளையும் கவனத்துடன் கண்காணிப்பது போல் அவர் மனத்தளவில் ஒரு பிழையில்லாத இருப்புநிலைக் குறிப்பை இயற்றி வைத்துள்ளார்.இயற்கையை அனைத்துப் பணியையும் செய்யும்போது அவர் அதைக் கண்காணிக்கிறார் என்ற தோற்றம் மட்டும்தான் ஏற்படும். மண்ணில் ஒரு விதையை அவர் ஊன்றுகிறார்; ஒரு நல்ல பாதுகாப்பாளர்போல் அது இயற்கையாக வளர்ந்து, நல்ல கதிர்களைக் கொள்ள அமைதியாக அனுமதிக்கிறார். உவப்புடன் இருக்கும் காரடயேவ் தன்னுடைய இயற்கையின் விதிகளை மௌனமாக வழிபடுவது இதை ஒட்டித்தான்! ஒரு மலராக இதழ்களை விரிக்க வேண்டும் என்பதற்காக அவர் ஒரு மொட்டைக் கட்டாயமாகத் தொட முற்படமாட்டார். பெருநகரங்களின் பண்பாடு,கலைத்தன்மை ஆகியவை பற்றி அவர் எதிர்த்து, ஆழ்ந்த விரோதப் போக்கையும் காட்டுகிறார்; தன்னுடைய தன்னேயே விழுங்கும் பசியில் பெருநகரம் இயற்கையை மீறுகிறது, அதைச் சித்திரவதைப்படுத்துகிறது, அதன் வெளியீடுகளையும் சாராம்சங்களையும் வலியுறுத்திப் பெறுகிறது. அதுவோ,தன்னுடைய நடுங்கிப் பிடித்துவிடும் விரல்களால் ஒரு கதிரவனின் கதிர் அலைக்கற்றையில் இல்லாத வண்ணங்களைத் தட்டில் தேடுகிறது.
அவருடையை அனைத்து மேதைத் தன்மையுடன் டால்ஸ்டாயின் ஓயிலும் ஒருங்கிணைந்துள்ளது: நிதானமாக, பரபரப்பு இல்லாமல், சுருக்கமாக,கருமித்தனம் காட்டாமலும், அதே போல் துறவிப் பாங்கைக் காட்டாமலும்; அது தசைப்பிடிப்பு நிறைந்தது; சில சமயம் விலகிய தன்மையையும் கடினப் போக்கையும் காட்டும். மிக மிக எளிமையான நடை என்பதால் அதன் விளைவுகளுடன் ஒருபொழுதும் ஒப்பிட முடியாதது. (தன்னுணர்வுக் கவிதைகள் எழுதி, நயமான நேசத்தைக் காட்டும், பெரும் உவப்பைக் காட்டித் தன் மொழியின் அழகை நன்கு அறிந்திருந்த டர்ஜினீவிடம் இருந்து டால்ஸ்டாய் மிகத் தொலைவில் இருப்பவர். அதேபோல் மிகத் தீவிரமாக,நெஞ்சை அடைக்கும் விதத்தில், தழும்புகள் நிறைந்த டாஸ்டாயெவ்ஸ்கியின் சொல்லாட்சியில் இருந்தும் தொலைவில் இருப்பவர்.
நகரவாசியான, அதிகாரமோ, பட்டமோ இல்லாது, தீர்க்கமுடியாத கத்தரி போன்ற ஆன்மாவைக் கொண்ட மேதையான டாஸ்டோயெவ்ஸ்கி,கொடூரத்தையும், பச்சாத்தாபத்தையும் பேரழகில் படைக்கும் இக்கவிஞர், தன் புதினங்களில் ஒன்றில் தன்னை ஆழ்ந்த, குறிப்பிடத்தக்க வகையில் எதிரிடையாகக் காட்டி, ஒரு புதிய, “தற்செயலான ரஷ்யாக் குடும்பங்களைப்”படைக்கும் கலைஞராகக் காட்டுகிறார்; ஆனால் நிலக்கிழார்த் தன்மை நிறைந்த முழு வடிவங்களைப் பற்றி டால்ஸ்டாய் பிரபு இசைக்கிறார்.
“நான் ஒரு ரஷ்ய நாவலாசிரியராக, திறமையும் கொண்டவராக இருந்தால்,என்னுடைய கதாநாயகர்களை நற்குடி ரஷ்யப் பிரபுக்கள் குடும்பத்தில் இருந்துதான் எப்பொழுதும் கொள்ளுவேன்; ஏனெனில் இத்தகைய பண்பாடு உடைய ரஷ்ய மக்கள் மூலம்தான் அழகான ஒழுங்கையும், அழகான உணர்வுகளையும் வெளிப்படுத்தப்பட முடியும்…. இதை நான் ஒன்றும் நகைச் சுவையாகக் கூறவில்லை; இங்கு தேவையற்ற கருத்து நானே ஒன்றும் பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்தவன் இல்லை, அது உங்களுக்கே தெரியும்… ஆனால் என்னை நம்புங்கள், நம்மிடையே மிக அழகியவை இருப்பது இதுவரை முழுவதும் இக்குடும்பங்களில்தான்.” என்று தன்னுடைய பாத்திரங்கள் ஒருவர் வாயிலாக டாஸ்டோயெவ்ஸ்கி கூறுகிறார். “எப்படிப்பார்த்தாலும்,இவர்களிடத்தில் நம்மிடையே அதிக முழுமைத் தன்மை உடையதுதான் காணப்படும். இதை நான் கூறுவதற்குக் காரணம் இந்த அழகின் சரியான தன்மை அல்லது உண்மையுடன் நான் சிறிதும் தயக்கமின்றி ஒப்புக் கொள்ளுவதுதான். உதாரணமாக இங்கு நாம் ஏற்கனவே கௌரவம், கடமை ஆகியவற்றில் முழுமை பெற்ற வடிவங்களைக் காண்கிறோம்; இவை ரஷ்யாவின் முழுமை அடைந்துள்ள குடும்பங்கள் வேறு எவற்றிலும் காண்பதற்கில்லை, சொல்லப்போனால், துவங்கக் கூட இல்லை….இதுதான் நாவலாசிரியரின் நிலைப்பாடு.” என்று டாஸ்டோயெவ்ஸ்கி தொடர்கிறார். டால்ஸ்டாயைப் பெயரிடாமல், ஆனால் ஐயத்திற்கு இடமின்றி அவரை மனதில் கொண்டு கூறுவது: “அத்தகைய நிலையில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். அத்தகையவர் வரலாற்றுத் தன்மை தவிர வேறு எந்தவழியிலும் எழுத முடியாது; நம் காலத்தில் அழகிய வடிவங்கள் காணப்படவில்லை; சில இடங்களில் அவற்றின் எச்சம் உள்ளது என்றால், பின் இருக்கும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில், அவர்கள் தங்கள் அழகுத்தன்மை எதையும் தக்க வைத்துக் கொள்ளவில்லை.”
“அழகிய வடிவமைப்பு” மறைந்துவிடும்போது, கலைப் படைப்புத்திறனின் உடனடி நோக்கம் கீழே சரிந்துவிடுவது மட்டும் இல்லாமல், டால்ஸ்டாயின் அறவகையிலான நிர்ணயம், அவருடைய எழிலார்ந்த பன்முகப் படர்தல் ஆகியவற்றின் அஸ்திவாரங்களும் சரிந்துவிடுகின்றன: டால்ஸ்டாயின் ஆன்மாவில் உள்ள புனிதப்படுத்தப்பட்ட காரடவேயிசம் அழிந்து கொண்டிருக்கிறது. முன்பு சவாலுக்கு உட்படாத முழுமை என்று எடுத்துக் கொள்ளப்பட்டது இப்பொழுது ஒரு சிறு பகுதியாகிவிடுகிறது; இதையொட்டி ஒரு பிரச்சினையின் அடையாளமாகவும் ஆகிறது. பகுத்தறிவார்ந்தது என்று இருந்தது பகுத்தறிவற்றதாக மாறுகிறது. மேலும் எப்பொழுதும் நடப்பது போல், உயிர்த்திருத்தல் அதன் பழைய சொற்பொருளை இழந்துவிடும் கணத்தில், டால்ஸ்டாய் உயிர்த்திருத்தலின் பொருள் பற்றித் தன்னைத் தானே கேட்கத் தலைப்பட்டார். ஒரு பெரிய ஆன்மிக நெருக்கடி துவங்குகிறது (1870 களின் பிந்தைய பகுதிகளில்)—ஒரு இளைஞருடைய வாழ்வில் அல்ல, ஒரு 52 வயது மனிதருடைய வாழ்வில். டால்ஸ்டாய் கடவுள் பக்கம் மீண்டும் வருகிறார், கிறிஸ்துவின் போதனைகளை ஏற்கிறார், தொழில்பகுப்பு முறையை நிராகரிக்கிறார், அத்துடன் அப்பண்பாடு, அரசாங்கம் ஆகியவற்றையும் நிராகரிக்கிறார். விவசாயத் தொழிலாளிக்காக உபதேசிப்பவர் ஆகிறார்; எளிய வாழ்க்கை மற்றும் தீமையை வலிமையினால் எதிர்க்கும் நிலைப்பாட்டையும் துறக்கிறார்.
உள்ளார்ந்த நெருக்கடி ஆழமாகிறது; அவரே ஒப்புக் கொண்டுள்ளபடி ஐம்பத்தியிரண்டு வயது கலைஞர் நீண்டகாலம் தற்கொலை பற்றிச் சிந்திக்கிறார்—இது இன்னும் வியப்பு, ஏனெனில் இறுதி முடிவு காட்டுவது போல் டால்ஸ்டாய் தொடக்கக் கட்டத்திற்கே மீண்டும் திரும்பிவிட்டார்.விவசாயத் தொழிலாளர் தொகுப்பு – போரும் அமைதியும் என்னும் பெருங்காப்பியத்தின் தளம் இது அல்லவா? எளிய வாழ்க்கை, குறைந்த பட்சம் ஆன்மிக அளிவில் அதில் மூழ்குதல், மக்களின் இயல்பான தன்மையில் என்பது—இதில்தான் குடுஜோவின் வலிமை உள்ளது? சக்தி மூலம் தீமையைஎதிர்க்காமல் இருப்பது விதியைத் தாழ்ந்து ஏற்பது என்ற காரடயேவின் முழு நிலைப்பாட்டிலும் இதுதானே உள்ளது?
அது அவ்வாறானால், டால்ஸ்டாயின் நெருக்கடியில் உள்ளது என்ன? இதைப்பற்றிக் கூறுகையில், முன்பு எது இரகசியமாகவும் மனத்தடியிலும் இருந்ததோ, அது இப்பொழுது தளத்தைப் பிளந்து கொண்டு முழு உணர்வுப் பகுதிக்கு வருகிறது. இயல்பாக உள்ளே இருக்கும் ஆன்மிகத் தன்மை, அதைப் பிறப்பித்த “இயற்கையுடன்” மறைந்துவிட்டது என்றால், ஆன்மா உள் முழு உணர்வின் தேடுதலைத் துவங்குகிறது. அந்த இயல்பான இணக்கம், வாழ்வில் இயல்பான தன்மையே அதை எதிர்த்து நின்றபோது, இனி சிந்தனையின் முழு உணர்வுச் சக்தியால்தான் காப்பாற்றப்பட முடியும். இந்த பழைமைத்தனமான போரட்டத்தில் (அவருடைய அற மற்றும் எழிலார்ந்த தற்காப்பு நிமித்தம்),கலைஞர் தன்னுடைய உதவிக்குத் தத்துவவாதி-அறம் கூறுபவரை அழைத்துக் கொள்ளுகிறார்.
இந்த இரு டால்ஸ்டாய்களுள்—ஐரோப்பாவில் அதிகப் புகழை அடைந்தவர் கவிஞரா அல்லது அற உபதேசகரா—என்று நிர்ணயிப்பது எளிதல்ல. எப்படியும்,மூத்த யாஸ்நயா போலியானா பற்றி முதலாளித்துவப் பொதுமக்களின் பெருந்தன்மை காட்டும் சிரிப்பிற்குப் பின்னணியில், ஒரு விந்தையான அறநெறித் திருப்தியும் அடங்கியள்ளது: ஒரு புகழ்பெற்ற கவிஞர், மில்லியனர்,“நம் பிரிவைச் சேர்ந்த ஒருவர்”, போதாது என்று உயர்குடிப் பிறந்தவர், அறநெறி நம்பிக்கையை ஒட்டி ஒரு விவசாயியின் சட்டை அணிந்து கொள்ளுகிறார், சாதாரணக் காலணிகளில் நடக்கிறார், மரத்தை வெட்டுகிறார்,இவை அனைத்தும் ஒரு முழு வர்க்கத்தின்,ஒரு முழுப் பண்பாட்டின் பாவங்களுக்கு உறுதியான, மீட்பு என்பது போல். ஆனால் இது ஒன்றும் ஒவ்வொரு சிறு முதலாளித்தவத்தைச் சேர்ந்தவரையும் டால்ஸ்டாயை சற்றே தாழ்ந்த விதத்தில் பார்த்தலைத் தடுத்துவிடவில்லை ; அதேபோல் அவர் முழுத் தெளிவுடன் உள்ளாரா என்பது பற்றி ஐயத்தையும் இலேசாகக் கிளப்புவதையும் தடுக்கவில்லை. இங்கு குறிப்பிடப்பட வேண்டியது அதிகம் அறியப்படாத மாக்ஸ் நோர்டௌ [2], பழைய, நேர்மையான சாம்வெல் ஸ்மேல்ஸின் [3] தத்துவத்தை சற்றே அவநம்பிக்கைத் தன்மையுடன் கூடியதை, எடுத்துக் கொண்ட பண்புள்ள மனிதர்களில் ஒருவர், அதை ஞாயிற்றுக்கிழமை படிக்கும் கட்டுரைகளுக்காக விதூஷகரின் உடையில் அளிப்பது போல் ஆகும். Lombroso [4] குறிப்புப் பொருளுரையைக் கையில் வைத்துக் கொண்ட நிலையில், நோர்டௌ இழிசரிவின் அனைத்துச் சமிக்ஞேகளையும் கண்டுபிடிக்கிறார். இத்தகைய சிறு கடைக்காரர்கள் அனைவருக்கும் புத்திகெட்டத்தனம் எங்கு இலாபம் நின்றுவிடுகிறதோ, அங்கு துவங்கிவிடுகிறது.
ஆனால் இந்த பூர்ஷ்வா பக்தர்கள் டால்ஸ்டாயை சந்தேகத்துடனோ,விந்தையுடனோ அல்லது ஆதரவுடனோ, எப்படிக் கருதினாலும், அவர்கள் அனைவருக்கும் அவர் ஒரு மனோ தத்துவ வகைப் புதிர்தான். இரு சில பயனற்ற சீடர்களையும் பிரச்சாரகர்களையும் தவிர—அவர்களுள் ஒருவரான மென்ஷிகோவ் [5], இப்பொழுது ஒரு ரஷ்ய ஹாம்மெர்ஸ்டின் [6] பங்கைக் கொண்டுள்ளார்—அவருடைய வாழ்வின் கடைசி முப்பது ஆண்டுகளில் அறநெறியாளர் டால்ஸ்டாய்தான் முற்றிலும் தனியே உயர்ந்து நிற்கிறார் என்று கூறவேண்டும்.
இது உண்மையிலேயே ஒரூ தீர்க்கதரிசி நடுக்காட்டில் ஓலம் இடுவதின் சோகம் ததும்பிய நிலை ஆகும். தன்னுடைய பழைமைத்தன விவசாயப் பரிவுணர்வுகளிடன் ஆதிக்கத்தின்கீழ் முற்றிலும் இருந்த நிலையில்,டால்ஸ்டாய் இடைவிடாமல், சலிப்பின்றி, தன்னுடைய ஆன்மிக உலகை வெற்றிகரமாக அதை அனைத்துப்புறப் பாதிப்புக்களிடம் இருந்தும் காத்து வெற்றியடைந்தார். தனக்கும் ஒவ்வொருவித பூர்ஷ்வா தாராளவாதத்திற்கும் இடையே இறுதியாக ஓர் ஆழ்ந்த அகழ் ஒன்றை அவர் வெட்டி வைத்தார்;முதலில் அவர் “நம் காலத்தில் எங்கும் படர்ந்திருக்கும் முன்னேற்றம் பற்றிய மூட நம்பிக்கையை” ஒதுக்கினார்.
“மின்சாரம், தொலைபேசிகள், கண்காட்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள், தொகுப்புக்கள் உள்ள ஆர்கேடியா பூங்காவனங்கள் இருப்பது அனைத்தும்,அவற்றின்சிகரெட்டுக்கள், தீப்பெட்டிகள், ஸஸ்பெண்டர்கள், இயந்திரங்கள் அனைத்துடனும் நல்லதுதான். ஆனால் நான் அவை அனைத்தும் கடலின் அடியே இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அவை மட்டுமில்லாமல், இரயில்பாதைகளும், உற்பத்தி செய்யப்படும் பருத்தி மற்றும் உலகிலுள்ள கம்பளித் துணகளும்கூடத்தான். ஏனெனில் அவற்றை உற்பத்தி செய்வதற்கு 100 பேரில் 99 பேர் அடிமைகளாக இருந்து இவை உற்பத்தி செய்யப்படும் ஆலைகளில் ஆயிரக்கணக்கில் அழிந்துபடுவர்.” என்று அவர் புலம்புகிறார்.
தொழில்பகுப்பு முறையால் நம்முடைய வாழ்வு அலங்கரிக்கப்பட்டு, உயர் செழிப்பு அடையவில்லையா? ஆனால் தொழில்பகுப்பு முறை உயிர்த்துள்ள மனித ஆன்மைவையும் சிதைக்கிறது. தொழில்பகுப்பு முறை அழுகிப்போகட்டும்! ஆனால் உண்மையான கலை எல்லா மக்களையும் கடவுள் என்ற கருத்தின்கீழ் ஒன்றுபடுத்த வேண்டும், பிரிக்கக் கூடாது.நம்முடைய கலை உயரடுக்கிற்கு மட்டுமே பணிபுரிகிறது, மக்களைப் பிளவுறச் செய்கிறது, எனவே அது ஒரு பொய் ஆகும். ஷேக்ஸ்பியர்,கோத்தே, தன்னுடையது, வாக்னர் மற்றும் பொக்லினுடைய கலையைத் “தவறானது” என்று டால்ஸ்டாய் தைரியமாக நிராகரிக்கிறார். [7]
வணிகம், செல்வக் கொழிப்பிற்கு உறுதுணையாக நிற்கும் அனைத்துப் பொருட்களிடம் இருந்தும் அவர் தன்னை பிரித்துக் கொள்ளுகிறார்; எளிய விவசாயிகளின் ஆடைகளையே அணிகிறார், பண்பாட்டை நிராகரிக்கும் ஒரு அடையாளச் சடங்கைச் செய்வது போல். ஆனால் இந்த அடையாளச் செயலின் பின் எது பதுங்கியுள்ளது? “பொய்க்கு” எதிராக அது எதை எதிர்க்கிறது, அதாவது வரலாற்று வழிவகையையா?
அவருடைய படைப்புக்களின் அடிப்படையில், நாம் டால்ஸ்டாயின் சமூகத் தத்துவத்தை அளிக்க முடியும்—நமக்கு சற்று வன்முறை இதனால் ஏற்பட்டாலும். கீழேயுள்ள “நடைமுறை” கருத்தாய்வுகளின் வடிவில் அவை இருக்கும்.
1. ஏதோ இரும்புப் பிடி போன்ற சமூகச் சட்டங்கள் ஒன்றும் மக்களை அடிமைப்படுத்தும் முறையைத் தோற்றுவிப்பதில்லை, சட்டத் தொகுப்புக்கள்தான் தோற்றுவிக்கின்றன.
2. தற்கால அடிமை முறை மூன்று சட்ட வகைகளில் உள்ளன; நிலச் சட்டங்கள், வரிச் சட்டங்கள் மற்றும் சொத்துரிமைச் சட்டங்கள் என.
3. ரஷ்ய நாடு என்று இல்லாமல் ஒவ்வொரு நாடுமே வன்முறை,பாதுகாப்புமுறை மற்றும் கொடூரமான குற்றங்கள் புரிவதின் மூலம் நீடிக்கும் அமைப்பாக உள்ளது.
4. உண்மையான சமூக முன்னேற்றம் சமய மற்றும் அறநெறி மூலம் வரும் தனிநபருக்கான சுய முழுமை மூலம்தான் அடையப்பட முடியும்.
5. “அரசாங்கங்களை அகற்றுவதற்கு அவற்றிற்கு எதிராக வெளி வழிவகைகள் மூலம் போராட வேண்டிய தேவை இல்லை. தேவைப்படுவதெல்லாம் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்காமல் இருந்து, அதில் பங்கு பெறாமல் இருப்பதுதான்.
a. சாதாரண வீரர் அல்லது பீல்ட் மார்ஷல், மந்திரி, கிராம மூத்தவர்,நடுவர்குழு உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் என்று எந்தப் பதவியையும் ஏற்காமல் இருத்தல்.
b. அரசாங்கத்திற்கு தன்னார்வத்துடன் நேரடி அல்லது மறைமுக வரிகள் கொடுக்காமல் இருத்தல்.
c. அரசாங்க அமைப்புக்கள் அல்லது அரசாங்க நிதிகளை ஊதியங்கள்,ஓய்வூதியங்கள் என்றோ வாங்காமல் இருத்தல்.
d. அரசாங்கம் வன்முறை நடவடிக்கைகள் எடுக்கும்போது ஒருவருடைய சொத்தைப் பாதுகாக்காமல் இருத்தல்.
இந்தத் திட்டத்தில் இருந்து நான்காம் கருத்தை நாம் அகற்றினோம் என்றால்—அது தெளிவாகத் தனியே நிற்கிறது, சமய, அறநெறி சுய முழுமையைப் பொறுத்தது—பின் நாம் ஒரு முழுமையான பெருங்குழப்பத் திட்டத்தைப் பெறுகிறோம். முதலில், சமூகம் ஒரு தீமையான சட்டக் கருத்தாய்வின் வகையிலான முற்றிலும் இயந்திரத் தன்மை உடையது. அடுத்து, பொதுவாக அரசாங்கம் மற்றும் அரசியலை முறையாக மறுப்பது. மற்றும் இறுதியாக,போராட்டத்தின் வழிவகையாக—ஒரு செயலறு எதிர்ப்பு வகை பொது வேலைநிறுத்தம் மற்றும் பொதுப் புறக்கணிப்பு. ஆனால் சமய-அறநெறிக் கருத்தாய்வை அகற்றிவிட்டோம் என்றால், நாம் உண்மையில் இந்த முழுப் பகுத்தறிவார்ந்த கட்டமைப்பையும் அதன் கட்டமைப்பாளரையும் பிணைக்கும் ஒற்றை நரம்பை அகற்றிவிடுகிறோம்—அதாவது லெவ் டால்ஸ்டாயின் ஆன்மாவை. அவரைப் பொறுத்தவரையில், அவருடைய வளர்ச்சி நிலைப்பாடு ஆகியவை அனைத்தின் காரணமாக, முதலாளித்துவ ஒழுங்கிற்குப் பதிலாக “கம்யூனிஸ” அனார்க்கிசத்தை நிறுவுதல் என்பது பணி அல்ல. பொதுச் சமுதாய-விவசாய ஒழுங்கை “வெளியில் இருந்து வரும்” அழிவுதரக்கூடிய செல்வாக்குகளில் இருந்து காப்பாற்றுவதுதான் பணியாக உள்ளது.
அவருடைய “ஜனரஞ்சகத்தைப் போலவை” அவருடைய “அனார்க்கிசத்திலும்”டால்ஸ்டாய் பழைமையான விவசாய நலன்களைத்தான் பிரதிபலிக்கிறார்.தொடக்க ப்ரீமேசன்களைப் போல், சிந்தனைப் போக்குகள் மூலம் சமூகத்தில் சாதித் தொகுப்பின் அறமான பரஸ்பர உதவியை வலுப்படுத்தி மீட்பது என்பது பொருளாதார வளரச்சியின் தாக்குதல்கள் இயற்கையாகவே சிதைந்து வந்ததில், டால்ஸ்டாய் ஒரு சமய-அறவழிச் சிந்தனைமூலம் முற்றிலும் இயற்கையான பொருளாதாரத்தின்கீழ் வாழ்க்கையைப் புதுப்பிக்க முற்படுகிறார்.
இப்பாதையில் அவர் ஒரு பழைமைவாத அனார்க்கியராக (அராஜகவாதம்)மாறுகிறார்; ஏனெனில் அவருக்கு முதலிலும் முக்கியமானதுமாக தேவைப்படுவது அரசாங்கம், இதன் இராணுவவாதச் சாட்டைகள், அதன் மத்திய கருவூலத் தேள்களுடன் அனைத்தையும் காப்பாற்றும் காரடயேவ் சமூகத்தை அமைதியாக வாழவிட வேண்டும் என்பதுதான். இரு உலகங்களுக்கும் இடையே—பூர்ஷவா மற்றும் சோசலிசத்திற்கு இடையே—உலகம் தழுவிய முறையில் நடக்கும் போராட்டம் பற்றி டால்ஸ்டாய்க்கு எந்தக் குறிப்பும் இல்லை. அதன் விளைவில்தான் மனிதகுலத்தின் விதி விளிம்பில் நிற்கிறது என்பதையும் அறியவில்லை. அவருடைய பார்வையில் சோசலிசம் எப்பொழுதும் தாராளவாதத்தின் ஒரு பிரிவாகத்தான் இருந்தது—அதில் அவருக்கு அக்கறை சிறிதும் இல்லை. அவருடைய பார்வையில் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் பாஸ்டியல் [8] இருவருமே ஒரே “தவறான கொள்கையான” முதலாளித்துவப் பண்பாட்டின், நிலமற்ற தொழிலாளர்களின்,அரசாங்க வற்புறுத்தலுக்கு இணங்கும் தொகுப்பின் பிரதிநிதிகள்தாம்.பொதுவாக ஒருமுறை மனிதகுலம் ஒரு தவறான பாதையில் சென்றுவிட்டால், இந்தப் பாதையில் எவ்வளவு தூரம் பயணித்துள்ளோம் என்பது ஒரு பொருட்டல்ல. மீண்டும் முதல் நிலைக்குத் திரும்பினால்தான் விமோசனம் பிறக்கும்.
நாம் நீண்ட காலம் மிக மோசமாக “வரலாற்று, சமூக மற்றும் பிற முன்னேற்றப் பாதைகளின் விதிகள்” படி தொடர்ந்து இருப்போம் என்றாலும், நம் வாழ்வு எப்படியும் தானே இறுதியில் நல்ல தன்மையைப் பெற்றுவிடும் என்று வாதிடும் அறிவியல் கருத்திற்கு எதிராகச் சாடுவதற்கு போதிய சொற்கள் இல்லாமல் டால்ஸ்டாய் திணறினார்.
இப்பொழுதே தீமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், இதற்காக தீமை என்பது தீமைதான் என்பதைப் புரிந்து கொண்டாலே போதும். மக்களை ஒன்றாகப் பிணைத்துள்ள அனைத்து அறநெறி உணர்வுகளும் அனைத்து அறநெறிச்-சமய கட்டுக்கதைகள் என்று இந்தப் பிணைப்புக்களில் இருந்து தோன்றுபவை அனைத்தும் டால்ஸ்டாயால் மிக சூட்சுமமான அன்பு,பொறுமை, செயலற்ற எதிர்ப்பு ஆகியவற்றின் கட்டளைகளாக ஆக்கப்படுகின்றன. இக்கட்டளைகளுக்கு வரலாற்றுப் பொருளுரை ஏதும் இல்லாததால், அதையொட்டி எந்தப் பொருளுரையுமே இல்லாததால் அவை அவருக்கு எல்லாக் காலங்களிலும் எல்லா மக்களுக்கும் பொருந்தும் எனத் தோன்றுகிறது.
டால்ஸ்டாய் வரலாற்றை ஒப்புக் கொள்ளவில்லை; இது அவருடைய சிந்தனையின் அடிப்படைகள் அனைத்திற்கும் ஒரு தளத்தைக் கொடுக்கிறது.இதில்தான் அவருடைய மறுப்பு மற்றும் அவருடைய உபதேசங்களில் நடைமுறை செயலற்ற தன்மை அனைத்தும் தத்துவார்த்தச் சுதந்திரத்தைக் கொண்டுள்ளன. அவர் ஏற்றுக் கொள்ளும் மனித வாழ்வு—சமானா மாநிலத்தின் அதிக மக்கள் வசிக்காத புல்வெளிகளில் வாழும் யூரல்-கோசக்கினரின் முந்தைய வாழ்வு—வரலாற்றுக்குப் புறத்தே நடந்தது. இது இடைவிடாமல் தன்னையே மறு உற்பத்தி செய்து கொண்டது—தேன்கூடு போல அல்லது கரையான் புற்றுப் போல. வரலாறு என்று மக்கள் அழைப்பது பொருளற்ற தன்மை, பொய்க்காட்சிகள் மற்றும் கொடுமைகளின் விளைவு ஆகும், இவை மனிதகுலத்தின் உண்மையான ஆன்மாவைச் சிதைத்துவிட்டன. சிறிதும் அச்சமின்றி டால்ஸ்டாய் தன்னுடைய மரபியத்தையும் வரலாற்றுடன் சன்னல் வழியே தூக்கி எறிகிறார்.
தற்பொழுதைய வரலாற்றின் ஆவணங்களைப் போல் அவருக்கு செய்தித்தாட்களும் இதழ்களும் வெறுப்பைத் தந்தன. உலகப் பெருங்கடின அனைத்து அலைகளையும் அவர் தன் மார்பினால் எதிர்த்து விரட்டுவார்.அவருடைய வரலாற்றுக் குருட்டுத்தனம் உலக சமூகப் பிரிச்சினைகள் குறித்து சிறு குழந்தை போல் உதவியற்ற நிலையில் தள்ளியது. டால்ஸ்டாயின் தத்துவம் சீன ஒவியத்தை ஒத்துள்ளது. முற்றிலும் வேறான சகாப்தங்களின் கருத்துக்கள் ஒரு முன்னோக்கில் இருத்தப்படாமல், ஒரே தளத்திலேயே இருத்தப்படுகின்றன. போருக்கு எதிராக அவர் முழுத் தர்க்க வாதங்களைத் தொடங்குகிறார், அவற்றை வலியுறுத்துவதற்காக, எபிக்டெடஸ் [9] மற்றும் மோலினரி (10] உடைய வாதங்களை முன்வைக்கிறார். லாவோ சே [11] மற்றும் இரண்டாம் பிரெடரிக்கின் வாதங்களை முன்வைக்கிறார்;தீர்க்கதரிசி இசையா மற்றும் கட்டுரையாளர் ஹார்டௌயின், பாரிஸ் நகர வணிகர்களின் அசரீரிக் குரல்களையும் முன்வைக்கிறார். அவருடைய பார்வையில் எழுத்தாளர்கள், தத்துவமேதைகள் மற்றும் தீர்க்கதரிசிகள் அனைவரும் தங்கள் காலத்தை மட்டும் பிரதிபலிக்கவில்லை, யாண்டும் நீடிக்கும் அறநெறி வகைகளைத்தான் பிரதிபலிக்கின்றனர்.
அவருடைய கண்ணோட்டத்தில் கன்ப்யூசியன் ஹார்ப்பகஸுடன் 13] தோளோடு தோள் உராய்கிறார்; ஷோபன்ஹார் யேசுவுடன் மட்டும் இல்லாமல், மோசசுடனும் இணைந்து நிற்கிறார். அனைத்து வரலாற்றுப் பகுப்பாய்விற்கும் எதிரான சோகம் ததும்பிய அவருடைய ஒற்றைப் போராட்டத்தில், அவர் தன்னுடைய ஆம் -ஆம் அல்லது இல்லை-இல்லை என்பதை எதிரிடையாக வைக்கிறார்—அவருடைய மேதைத் தன்மையின் உறதிப்பாட்டிற்கு முற்றிலும் உகந்த வகையில். “மனிதனுடைய நிலை மற்றும் மனிதனுடைய அறநெறிச் செயல்களுக்கும் இடையே உள்ள பொருத்தமற்ற தன்மை உண்மையின் உறுதியாள அடையாளம் ஆகும்”என்று அவர் கூறுகிறார். ஆனால் இந்த உயர் சிந்தனைப் பெருமிதம் அதற்குள் அதன் தண்டனையைக் கொண்டுள்ளது. வரலாறு மிகக் கொடுமையாக டால்ஸ்டாயை நடத்தியது போல் வேறு ஒரு எழுத்தாளரைப் பார்ப்பது அரிது—அதுவும் அவருடைய விருப்பத்திற்கு எதிராக.
ஒரு மறுப்பாளரும், சமயப் புதிருமான அவர், அரசியல், புரட்சிக்கு விரோதியான அவர், பல ஆண்டுகளாக அவருடைய குறைகூறலை பல ஜனரஞ்சகப் பிரிவுகளின் குழப்பமான புரட்சிகர முழு உணர்வுடன் வளர்த்து வருகிறார்.
முதலாளித்துவப் பண்பாட்டின் அனைத்துக் கூறுபாடுகளையும் மறுப்பவர்,ஐரோப்பிய, அமெரிக்க பூர்ஷ்வாக்களின் நலம் சார்ந்த ஒப்புதலைப் பெறுகிறார்;அவருடைய உபதேசங்களில் அவர்கள் தங்கள் நோக்கமற்ற மானுடத்தையும்,புரட்சிகர மாற்றத்திற்கு எதிரான ஒரு உளரீதியான கேடயத்தையும் காண்கின்றனர்.
பழமைவாத அனார்க்கியர், தாராளவாதத்தின் பெரும் விரோதியான டால்ஸ்டாய் தன்னுடைய எண்பதாம் பிறந்த நாளில் ரஷ்யத் தாராளவாதத்தின் உரத்த, பூசலுக்கு நிற்கும் அரசியல் வெளிப்பாட்டிற்கு ஒரு பதாகையாகவும், ஆயுதமாகவும் தான் இருப்பதைக் காண்கிறார்.
அவர்மீது வரலாறு ஒரு வெற்றி கொண்டுவிட்டது; ஆனால் அவரைச் சிதைப்பதில் தோல்வியுற்றது. இப்பொழுதும் கூட அவருடைய முதிர்ந்த வயதில் அவர் அறநெறி இகழ்வைக் காட்டும் தன் விலைமதிப்பற்ற குணத்தைத் தக்க வைத்துள்ளார்.
மிகத்தீமையான, மிகக் குற்றம் சார்ந்த வரலாற்றிலுள்ள புரட்சி எதிர்ப்பின் உச்சக்கட்டத்தில் [14], அது நம் நாட்டின் சூரியனை சிறைகளில் தள்ளுவதற்கான இறுகிய நாற்றைத் தேட முற்படுகிறது; இழிந்த,கோழைத்தன உத்தியோகப்பூர்வ மக்கள் கருத்தை நெரிக்கும் சூழலில், இந்தக் கிறிஸ்துவ மன்னிப்பின் கடைசி இறைபணியாளர், பழைய ஏற்பாட்டின் சீற்றமிகு தீர்க்கதரிசி இறக்காமல் உள்ள நிலையில், தன்னுடைய துண்டுப்பிரசுரத்தை Cannot Keep Silent ஐ தூக்கிலிடுபவர்களாகச் செயல்படுபவர்களின் தலைமீது சாபமாகவும், மௌனமாக அதைப் பார்ப்பவர்கள் மீது கண்டனத்தையும் எறிகிறார்.
நம்முடைய புறநிலை புரட்சிகர இலக்குகளுக்கு ஒரு பரிவுணர்வை அவர் காட்ட மறுத்தாலும், அதற்குக் காரணம் வரலாறு அவருக்குத் தனிப்பட்ட முறையில் அதன் புரட்சிகரப் பாதைகளைப் புரிந்து கொள்ளுவதை மறுத்துவிட்டது என்பதை நாம் அறிவோம். அவரை இதற்காக நாம் கண்டிக்க வேண்டிய தேவையில்லை. அவருடைய பெரும் மேதைத் தன்மைக்கு மட்டும் இல்லாமல்—மனிதனுடைய கலை வாழ்வு நீடிக்கும் வரை அது மடியாது—அவருக்குச் சற்றும் வளைந்து கொடுக்காமல் இருந்த அறநெறித் தைரியத்திற்கும்தான்; அதுதான் அவரை அமைதியாக அவர்களுடைய போலித்தன திருச்சபைக் கூட்டத்தில் சேர அனுமதிக்கவில்லை,அவர்களுடைய சமூகத்திலும், அவர்களுடைய அரசாங்கத்திலும் அனுமதிக்கவில்லை, ஆனால் அவருடைய எண்ணற்ற பாராட்டுபவர்களுக்கு இடையே தனிமையில் தள்ளியது.
லியோன் ட்ரொட்ஸ்கி
செப்டம்பர் 1908
இறுதிக் குறிப்புக்கள் :
1. இலியட்: டிராய் முற்றுகை பற்றிய பண்டைய கிரேக்கக் கவிதை.மரபார்ந்த வகையில் இதன் ஆசிரியர் நீண்ட காலமாக கண்பார்வையற்ற ஹோமர் என்று கருதப்படுகிறது; அவர்தான் இரண்டாம் மிகப் பெரிய கிரேக்கக் காவியமான ஓடிசி யையும் எழுதியதாகக் கருதப்படுகிறார்.
2. மாக்ஸ் நோர்டௌ (1849-1923). ஹங்கேரி நாட்டு எழுத்தாளர், சமூக விமர்சகர், தியோடோர் ஹெர்செலுடன் உலக ஜியோனிச காங்கிரசை நிறுவியவர். The Conventional Lies of our Civilization (1883), Degeneration (1892), Paradoxes (1896) ஆகியவற்றை எழுதியவர்.
3. சாமுவெல் ஸ்மைல்ஸ் (1812-1904): தன்னை முன்னேற்றுவித்துக்கொள்ளப் பயன்படும் நூல்களை எழுதிய ஸ்காட்லாந்து எழுத்தாளர்; இவற்றுள் மிகப் புகழ் பெற்றது Self-Help.
4. சீசர் லாம்ப்ரோசோ (1836-1909). புகழ் பெற்ற இத்தாலிய உளவியல் மருத்துவர், குற்றத் தடயத் துறையில் புகழ் பெற்றவர், குற்றத் துறையில் பல மனித இனங்கள் என்ற ஒரு புதிய திட்டத்தை நிறுவியவர். ஒரு குறிப்பிட்ட குற்றம் சார்ந்த தன்மையுடையவர்கள் சில இயல்பான உடல்கூறுகளையும் கொண்டு விளங்குகின்றனர் என்று நம்பியவர்.
5. மிகைல் ஒசிபோவிச் மென்ஷிகோவ் (1859-1918). ரஷ்யச் செய்தியாளர்.அறநெறி பற்றிய உயர் சிந்தனைக் கட்டுரைகளை எழுதத் துவங்கி, பின்னர் 1880களில் பெருகிய முறையில் பிற்போக்குவாதியாக இறுதியில் ரஷ்ய தேசியம், செமிடிய எதிர்ப்பிற்கு வாதிடுபவர் என்று முடிந்தார். செப்டம்பர் 1918ல் சேக்காவால் சுடப்பட்டார்.
6. வில்ஹெல்ம் ஹாம்மெர்ஸிடின் (1838-1904). ஜேர்மனிய அரசியல்வாதி,ரீச்ஸ்டாக்கில் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர், பிற்போக்குத்தன, செமிடிய எதிர்ப்பு நாளேடு Kreuzzeitung ன் ஆசிரியர்.
7. ஆர்னோல்ட் பொக்லின் (127-101) ஸ்விட்ஸர்லாந்தின் அடையாள வகை ஓவியர்
8. பிரெடரிக் பாஸ்டியட் (1801-1850), பிரெஞ்சுப் பொருளாதார வல்லுனர்,மான்செஸ்டர் பயிலகத்தின் பிரதிநிதி, முதலாளித்துவத்திற்கு வாதிடுபவர்,சோசலிசத்தின் விரோதி.
9. எபிக்டீடஸ் (55 - 135 கி.பி) கிரேக்க கலங்காத் தன்மைத் தத்துவ மேதை
10. கஸ்டாவ் டி மொலினரி (1819-1912). பெல்ஜியப் பொருளாதார வல்லுனர்,மான்செஸ்டர் பயிலகத்துடன் தொடர்புடையவர், பிரெடரிக் பாஸ்டியட்டுடன் தொடர்புடையவர்.
11. லாவே சே (லாவோசி), சீன தத்துவமேதை, கன்பூசியஸ் சகாப்தத்திற்கும் முந்தையவர்
12. இரண்டாம் பிரெடரிக் (1712-1786) பிரஷ்ய அரசர், “அறிவு ஒளிசான்ற வல்லாட்சியின்” முகற்கியப் பிரதிநிதிகளில் ஒருவர். நடைமுறையில் ஹோகன் ஜோலர்ன் சர்வாதிகாரத்திற்கு உதாரணம். போருக்கு எதிரான கட்டுரைகள் ஒன்றில் (“Think it Over!” 1904) டால்ஸ்டாய், பிரெடரிக்கின் அறிக்கை ஒன்றை மேற்கோளிட்டுள்ளார்: “என்னுடைய வீரர்கள் சிந்திக்கத் தலைப்பட்டுவிட்டால், ஒருவர் கூட இராணுவத்தில் இருக்க மாட்டார்கள்."
13. ஹார்பகஸ்: மெடிய அரசர் அஸ்டைஜேஸின் மந்திரி. கி.மு.ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஹெரோடட்டஸ் கூற்றுப்படி சைரஸைக் கொல்ல வேண்டும் என்ற உத்தரவை ஹார்பகஸ் மறுத்தபடியால், அஸ்டைஜேஸ் அவருடைய ஒரே மகனைக் கொன்று அவருடைய உடல் சதையை ஒரு விருந்தின்போது ஹார்பகஸுக்குக் கொடுத்தார்.
14. இங்கு ட்ரொட்ஸ்கி ரஷ்யாவில் 1905 புரட்சிக்குப் பின் நிலவிய அச்சுறுத்தும் ஆட்சி பற்றிக் குறிப்பிடுகிறார்.