நா.மம்மது
உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலாம் மரபு, பண்ணையும் இராகத்தையும் ஆங்கிலத்தில் Mode என்றும் Scale என்றும் குறிக்கின்றது. ராகம் என்பது அராகம் என்ற பழஞ் சொல்லில் இருந்து வந்தது. இதற்கு பண் என்ற பழம் பெயரும் உண்டு.
முதல் மரபைச் சார்ந்த தமிழ் இசை, தென்னக இசை என்றும் கர்நாடக இசை என்றும் இந்திய இசை என்றும் கீழை இசை என்றும் இன்னிசை என்றும் (Melodic Music) என்றும் குரல் பகுப்பு இசை (just intonation) என்றும் பல பெயர் பெறும்.
இந்த இசை முறை அராபிய, எகிப்திய வட்டாரம் மற்றும் அதற்குக் கிழக்கே உள்ள இந்தியத் துணை கண்ட நாடுகள் சீனா தாய்லாந்து முதலிய கீழ் திசை நாடுகளில் வழங்கி வருகிறது எனவே இது கீழை இசை (Eastern Music) என்றே அழைக்கப்படுகிறது.
இசையில் இரண்டாம் வரவு ஆங்கில இசை என்றும் ஐரோப்பிய இசை என்றும் மேல இசை என்றும் பொருந்திசை அல்லது ஒத்திசை என்றும் (Harmonic Music) சமப்பகுப்பிசை (Equal Temporament) என்றும் பல பெயர் பெறும். இது பண்ணிசை அல்லாத மரபைச் சேர்ந்தது. இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து முதலிய மேலை நாடுகளில் வழங்குகிறது. எனவே இது மேலை இசை என்று அழைக்கப்படுகிறது.
ஐரோப்பிய இசையின் மூலமாக கிரேக்க இசையே உள்ளது. பழமையான கிரேக்க இசை பண்முறை இசையே. கி.பி. 15 ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய இசை பண்ணிசையாகவே வளர்ந்து வந்தது. பண்டைய கிரேக்க இசை 5 இசை பன்முறையால் ( Pentamatric Scale) ஆனது.
தமிழகம் கிரேக்கத்தில் மட்டுமல்லாது சீனா போன்ற நாடுகளிலும் இந்த ஐந்து இசை பண்முறை தான் பழங்காலம் தொட்டே வழக்கில் இருந்து வந்துள்ளது.
தமிழர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் நிலப்பிரிவுகளைக் கொண்டு குறிஞ்சி யாழ், முல்லை யாழ், மறுத யாழ், நெய்தல் யாழ், பாலை யாழ் என்று ஐந்து வகை சிறு பண்களுக்கும் பெயர் வைத்தனர் இதேபோல் கிரேக்கரும் தோரியன், லித்தியன், ஐயோனியன், ஃபிரிட்சியன், ஏயோலியன் என்று நிலப்பெயர் சுட்டி அழைத்தனர்.
நமது ஏழ் பெரும் பண்களுக்கு இணையான கிரேக்க, ஐரோப்பிய பண்கள் ஆவன.
ஐரோப்பிய இசைக்குக் கிரேக்க இசை மூலமானதால், ஐரோப்பிய இசையானது தொடக்கத்தில் பண்ணிசையாகவே வளர்ந்து வந்தது. அதன் மிச்சம், மீதிக் கூறுகள் இன்றும் ஐரோப்பிய இசையில் விளங்கக் காணலாம். ஐரோப்பிய இசையில் நமது பழம்பஞ்சுரம் (சங்கராபரணம்) 'C-major scale' என்று வழங்கப்படுகிறது. அவர்களது இசையில் நடபைரவி, கீரவாணி முதலிய பண்கள் இன்றும் ஒலிக்கக் கேட்கலாம்.
இன்னிசைச் சிறுபண், ஒத்திசைச் சிறுபண், இயற்சிறுபண் (Melodic Minor, Hormonic minior, Natural minior) என்ற பண்கள் நடைமுறையில் உள்ளன.
ஆனால் கி.பி. 15 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஐரோப்பிய இசை குரல் பகுப்பு இசை (Just intonation) முறையில் இருந்து அதாவது பண்ணிசை முறையிலிருந்து மாற்றம் பெற்று சமபகுப்பு (Equal temprament) முறை என்ற அல் பண்ணிசை முறைக்கு மாறியது.
இந்த முறைக்கு பெரிதும் பங்காற்றி பியானோவின் சுரத்தானங்களை அறுதி இட்டு அமைத்தவர் ஜான் செபாஸ்டின் பாக் என்ற ஐரோப்பிய இசை மேதையே. அக்கால முதல் வாய்ப்பாட்டு இசையாகவும், பண்ணிசையாகவும் வளர்ந்த ஐரோப்பிய இசை. கருவி இசையாகவும், அல்பண்முறை இசையாகவும் மாறியது.
ஏழு சுரங்களில் ஏதாவது ஒரு சுரத்தை அடிப்படைச் சுரமாக அதாவது ஆதாரமாக வைத்துப் பாடுவதை ஆதார சுருதி என்பர். குரல், உழை (ச, ம) போன்று எந்தச் சுரத்தையும் ஆதாரமாக வைத்து இசை பாடலாம். பண்டைத் தமிழிசை முறையில் ஒரே ஆதார சுருதிக்குப் பாடும் முறை கிடையாது. ஆதார சுருதியை மாற்றி மாற்றிப் பாடும் முறையே வழங்கி வந்துள்ளது. அதாவது ச-வையோ, ம-வையோ அடிப்படையாக வைத்துப் பாடினர். குரல் திரிபு, சுருதி பேதம், மாறுமுதல் பண்ணல் ஆகிய இசைச் சொற்களே இதற்கு ஆதாரங்கள்.
அதே சமயத்தில் இம்முறையில் சிறிது மாற்றம் தந்து வளர்ச்சி முகமாக ஒரே ஆதார சுருதிக்கு (Basic tonic note) இசைபாடும் முறையும் தமிழிசையில் வழங்கியதைப் பார்க்கலாம். "குரல் குரலாக வருமுதல் பாலை", "உழை குரலாக வருமுதற்பாலை", "குரல் இளி என்றிறு நரம்பின்" போன்ற செய்திகளால் குரல் (ச) ஆதார சுரமாக மாறிய வரலாறு அறியப்படுகிறது.
நமது வாய்ப் பாட்டுமுறையும், வீணை, புல்லாங்குழல் போன்ற கருவி இசைமுறையும் குரல் (ச) சுரத்தை ஆதார சுருதியாகக் கொண்டது. நமது நாதசுர இசை உழை (ம) சுரத்தை ஆதார சுருதியாகக் கொண்டது.
நமது தமிழ் இசை மரபைச் சேர்ந்த இந்துஸ்தானி இசையிலும் இவ்வாறே ஆதார சுருதி முறை மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு சுரத்தை ஆதார சுரமாக ஏன் வைத்துக் கொள்கிறோம் என்றால் பண்ணுப் பெயர்த்தலை அதாவது பண் உருவாக்கத்தை அது எளிதாக்குகிறது. "ச ரி க ம ப த நி என்ற இசை நிரலில் குரல் (ச) சூரத்தை ஆதாரமாக வைத்தால் குரலுக்கு (ச) ஐந்தாவது சுரமான (ப) சுரம் கிடைக்கும். அந்த இளியை (ப), குரலாக (ச) வைத்தால் ஐந்தாவது சுரம் துத்தம் (ரி) வரும். இந்த துத்தத்திற்கு ஐந்தாம் சுரம் விளரி (த). இந்த விளரிக்கு (த) ஐந்தாவது சுரம் கைக்கிளை (க). இவ்வாறு ஆதார சுருதியாக குரலை (ச) வைத்துக் கொள்ளும் முறையால் ச ரி க ப த என்ற சுரவரிசை கிடைக்கும். இப்படி ஐந்தைந்து சுரமாகக் கண்டுபிடிப்பது இளிக்கிரமம், சட்சம பஞ்சம பாவம் என்று அழைக்கப்படுகிறது.
குரல் - இளி - ச, ப
இளி - துத்தம் - ப, ரி
துத்தம் - விளரி - ரி,த
விளரி - கைக்கிளி - த,க
ச ரி க ப த என்ற இந்த சுரவரிசை ஏறிய சுரவரிசை எனப்படும். இவற்றை வன்மையான, மேற் சுரங்கள் என்றும் கூறலாம். உழை (ம) தவிர்த்து ரி க ம ப த நி' என்ற வரிசையில் உழை (த) தவிர்த்து மற்ற மேற்சுரங்கள் யாவும் இயற்கைச் சுரங்கள் என்றே வழங்கப்பெறும். உழையின் (ம) கீழ்ச்சுரம் சுத்தமத்திமம் என்ற சுத்த சுரமாகும். ஐரோப்பிய இசையிலும் ரி க த நி-யின் மேற் சுரங்கள் Natural என்றும் ம - வின் கீழ்ச்சுரம் F-Natural என்றும் ம - வின் மேற்சுரமான பிரதி மத்திமம் F-sharp என்றும் வழங்கப்படுகிறது.
எனவே மேற்கண்ட ச ரி க ப த என்ற முறையில் ரி க த. சுரங்கள் மேற்சுரங்களாகி, சுத்த சுரங்கள் என்ற இயற்கைச் சுரங்களாக ஆகின்றன.
அச்சுரவரிசை இன்றைய முறையில் ச ரி2 க4 ப த2 என்று அமைகிறது. அதுவே ஆய்ச்சியர் குரவையில் இளங்கோ அடிகள் காட்டும் முல்லைத் தீம்பாணி என்ற. பின்னாளில் சாதாரி என்று பெயர் பெற்ற மோகன ராகம் ஆகும்.
ஒரே ஆதார சுருதி கொள்வதால் பல்வேறு சுரக் கோவை கொண்டு பல பண்களை எளிதாக அடைய முடிகிறது. எனவே நமது இசைமுறை பண்ணிசை ஆகிறது.
இம்முறை மேற்கொள்ளப் படாத காரணத்தால் பல்வகைப் பண்கள் ஐரோப்பிய இசையில் வளர்த்தெடுக்கப்படவில்லை. எனவேதான் அதை அல்பண்ணிசை முறை என்கிறோம்.
சுருதி மாற்றம்
சுருதிமாற்றம் (Tonic shift) என்பது ஐரோப்பிய இசையில் சிறப்பான ஒன்று. ஐரோப்பிய இசையில் ஏதாவது ஒரு சுரத்தை மட்டுமே ஆதார சுருதியாகக் கொள்வதில்லை. அவர்களது இசைமுறைக்கு அது தேவைப்படவில்லை.
ஆனால் சுருதியை அடிக்கடி சுருதி பேதம் (Tonic shift) மாற்றுவதால் தானநிலை (Octave) மாற்றத்தை ஏற்படுத்தி இசையில் ஓர் அலாதியான இனிமையைக் கொண்டுவருவது ஐரோப்பிய முறையாகும். இசையின் இனிமைக்கு இது ஆதாரமானது.
இந்த தானநிலை மாற்றம் நமது திரை இசையில் பெரிதும் பின்பற்றப்பட்டு இனிய இசைப் பொழிவு நமக்குக் கிடைக்கிறது.
ஆளத்தி
ஆளத்தி இசை என்பது இசையின் சிறப்பு. ஆலம் என்றால் வட்டம் ஆலம்+தீ = ஆலத்தி = ஆளத்தி என்றாகிறது. (ஆலத்தி எடுத்தல் இன்றும் நமது மரபில் உள்ளது). இந்த ஆளத்தி இன்று ஆலாபனை (ஆலம்(தமிழ்) - ஆலாப் (வடமொழி) + அனை = ஆலாபனை) என்று வழங்கப்படுகிறது. இந்த ஆலாபனை என் இந்துஸ்தானியில் ஆலாப் என்றே வழங்கப்படுகிறது.
ஒருபண்ணை எடுத்துக்கொண்டு பாடலே இல்லாமல் சொற்களும் இன்றி உயிர் எழுத்துக்களால் அ,ஆ என்று மணிக்கணக்கில், நாள் கணக்கில் அந்தப் பண்ணை விருத்தி செய்தல் ஆளத்தி எனப்படும். திருவாவடுதுறை ராசரத்தினம் பிள்ளை செவ்வழிப் பண்ணான தோடியை 7 நாட்கள் ஆலாபனை செய்துள்ளார். இதில் சிறப்பு என்னவெனில் "வந்தது வராமல் வாசித்தது' ஆகும்.
இந்த ஆளத்தி (ஆலாபனை) முறை ஐரோப்பிய இசையில் இல்லை. ஏனெனில் அது பண் இசை அன்று. ஆயினும் மேற்குறிப்பிட்ட முறையில் பொருந்து சுரக்கூட்டங்களை (Group of harmonic notes -Chords) கொண்டு மேனாட்டுச் செவ்வியல் இசையும், சிம்பொனியும் நம் ஆளத்தி போன்று மிக நீண்டதாகி செவிக்கு இனிமை தருவதாகும்.
தான நிலை (Octave) என்பது இசையில் அடிப்படையானது. ஏழு சுரங்களும் (Tones / Notes) பன்னிரண்டு சுரத்தானங்களும் (Semi tones) உலகப் பொதுவானவை. ஏழு சுரங்களை அல்லது பன்னிரண்டு சுரத்தானங்களைக் கொண்டது ஒருதான நிலை ஆகும். தானம் என்பது தாயி என்றாகி, ஸ்தாயி (Octave) என்றாகியது. இதுமண்டிலம், வட்டம், வட்டனை என்றும் விரிவடையும்.
நமது தமிழிசை மூன்று தான நிலைகளில் பாடப்படுகிறது.
மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பி (சிலம்பு : வேனிற்காதை) 'மேலது உழை கீழது கைக்கிளை' (சிலம்பு : அரங்.) உழை முதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி' (சிலம்பு : வேனில்) ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி' (சிலம்பு : அரங்.) மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பி (சிலம்பு : வேனில்.) என்பன இதற்குச் சான்று. மூன்று தாயியிலும் 21 சுரங்களைக் கையாண்டு இசை வழங்கும் திறமை மிகக் கடுமையானதாகும். மதுரை சோமு போன்ற மாமேதைகள் மட்டுமே இதைச் செய்துள்ளனர்.
இந்துஸ்தானி இசை, சிற்சில சமயங்களில் ஐந்து தான நிலைகளில் பாடப்படுகிறது. கிரானா கரானா என்ற இந்துஸ்தானி இசைப் பாணியில் பாடும் பர்வீண் சுல்தானா என்ற வாய்ப்பாட்டுக் கலைஞர் மேல் தாயிவரைப் பாடி அதில் பிர்கா அடிப்பது நம்மை அயரவைக்கும். இதே கரானவை, பண்டிட் பீம் சென் ஜோஸி பல் வேறு தானநிலைகளில் பாடுவது சொற்களில் விளக்க முடியாத இனிமை தருவது.
ஆனால் ஐரேப்பிய இசை, கருவி இசையாக (Instrumental Music) ஏழு தானத்திலும் இசைப்பது, மிக இயல்பான ஒன்றாக ஆகிவிடுகிறது. நாம் ஐரோப்பிய இசையைக் கேட்கும் போது அருவியின் ஓசையை, பாய்ந்து வரும் காட்டாற்று ஓசையை, பொழியும் மழையின் தாளோசையை, பெரும்புயலின் சீற்ற ஒலியை, தென்றலின் அசைவோசையைக் கேட்கிறோம். இவையும் ஐரோப்பிய இசையின் சிறப்புகளாகும். இவ்விசையில் ஏழு தானத்திலும் அமைந்த கருவி(பியானோ) இருப்பதால் இசையின் மாயம் சொல்லற்கரியது.
நன்றி : ஒப்புரவு இதழ் 4 முன்பனிக்காலம்
No comments:
Post a Comment