Wednesday, 12 March 2025

பறவை நோக்குதல் எனும் ரசனையான பணி

ராஜேந்திரன்






பறவை என்பதை இப்படி எளிமையாக விளக்கலாம். உலகிலேயே சிறகு உடைய பிராணி பறவைதான். நமது பெருவிரல் பருமனே உள்ள மிகச் சிறிய ரீங்காரப் பறவை முதல், குதிரை அளவு உயர்ந்து நிற்கும் மிகப் பெரும் தீக்கோழி வரை பறவைகளில் பலவகை உண்டு. பறவைகளைப் பார்த்து ரசிக்க கண்களே போதும். இருப்பினும் பறவை இனங்களின் தனித்தன்மைகளை உணர பறவை நோக்குதல் மிக அவசியமாகிறது. பறவையை பார்த்து ரசித்து பழக மூன்று முக்கிய கருவிகள் தேவை.

1. பைனாகுலர் எனும் தொலைநோக்கி

2. இரண்டு குறிப்பு புத்தகம்

3. பறவைகளை கண்டுபிடிக்கும் கைநூல்.

தூரத்தில் இருக்கும் பறவைகளை தெளிவாக நெருக்கத்தில் காட்டக் கூடிய பைனாக்குலர் தேவை. பறவை இனங்களை பார்த்து ரசிப்பவர் முதலில் சில நாட்களுக்காவது உடனுக்குடன் பார்த்து தெரிந்து கொள்ளும் துணை நூல் ஒன்றை பயன்படுத்த வேண்டும். அதற்கு உதவியாக இருக்கக்கூடிய சில புத்தகங்கள் :

விஸ்லரின் 'இந்திய பறவைகளின் கையேடு' ( Popular and book of Indian birds)

சலீம் அலியின் 'இந்தியாவின் பறவைகள்'

ஒரு பறவையை இனஞ்சுட்ட வேண்டுமெனில் நாம் பார்த்த பறவையின் பருமன், நிறம் ஆகியவற்றை மனதில் நிறுத்தி பழக வேண்டும். நாம் பார்த்தது வெள்ளையும் கருப்பும் கலந்த பறவை என வைத்துக் கொள்வோம். அதன் எந்த. பாகம் வெள்ளை? - தலையா? இறக்கையா? வாயா அல்லது அடிபாகமா? அதன் அலகின் உருவம், நிறம் அவற்றை உடனே கூர்ந்து பார்த்துக்கொள்ள வேண்டும். அது போலவே அதன் காலின் நீளம், வாலின் அமைப்பு, தலையில் கொண்டை அல்லது எழும்பிய சிறகுகள் என எல்லாவற்றையும் உடன் நோக்கி பதிவு செய்ய வேண்டும்.

               

ஒரு பறவை இலைகளுக்குள் மறைந்து பறந்து விடுகிறது என வைத்துக் கொள்வோம். அப்போது அந்தப் பறவை பற்றிய எல்லா விவரங்களையும் நாம் கவனித்திருக்க மாட்டோம். எனவே ஒன்றிரண்டு முக்கிய பண்புகளை மட்டும் விரைவாக மனதில் பதிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. நாம் ஞாபகத்தில் பலவற்றை வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கலாம். ஆனால் இரண்டு மணி நேரத்தில் பல நுண்ணிய குறிப்புகள் நிறங்கள், அளவு போன்றவை மனதில் இருந்து நீங்கி விடுவது சாத்தியம் இருப்பதால் அவற்றை அவ்வப்போது குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பெடுப்பதற்கான சிறு நோட் புத்தகம் ஒன்றும் பேனாவையும் கொண்டு செல்வது நல்லது.

ஒரு பறவையை வெகு நேரம் கவனிக்க வாய்ப்பு கிடைத்தால் அதை பற்றிய பல குறிப்புகளை பறவையை பார்த்து பார்த்து விரிவாக உடனே குறிப்பேட்டில் குறித்துக் கொள்வது நல்லது. 

பறவையின் கூப்பிடு குரல் அல்லது பாடும் தன்மை மற்றொரு அடையாளமாகும். ஆனால் இது எல்லா பறவைகளிலும் சுலபமாக எழுதக்கூடியது அல்ல. இருப்பினும் நீண்ட விசில், குவாக், குவாக் சத்தம் பறக்கும்போது ’கிளிக்’ என ஒலி எழுப்புதல் என சில ஒலிகளை குறிப்பெடுக்கலாம்.

புத்தகங்களும் படங்களும் பறவைகளின் நிறங்களை தனியாக காட்டினாலும் முதலில் பறவை பார்ப்பவர்கள் எல்லா நிறங்களையும் கண்டு கொள்வதில்லை. அதற்கு பழக்கம் தேவை. மிகப் பிரகாசமான சூரிய வெளிச்சத்திலும் சில குறிப்பிட்ட கோணங்களிலும் சில நிறங்கள் வேறு விதமாக காட்சியளிக்கலாம். அதனாலேயே நிறங்களை மட்டும் வைத்து பறவைகளை  இனஞ்சுட்ட நினைக்காமல் வேறு ஒன்றிரண்டு பண்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

பறவை நோக்குதலில் சிறிது பழக்கப்பட்ட பின் ஒரு பறவை பார்த்த மாத்திரத்தில் அது தெரியாத பறவையாக இருந்தாலும் கூட இன்ன குடும்பத்தை சேர்ந்தது என சொல்லிவிட முடியும். பறவையை பார்ப்பதில் ஈடுபடுகிறவர்கள் எல்லோருமே புதிய சாதனைகளை உண்டு பண்ணிவிட முடியும் என நினைப்பது தவறு. அது சாத்தியமும் அல்ல.

ஆனால் பல நாள் பறவை பார்ப்பதில் ஈடுபட்ட பிறகு பறவைகள் மீது உண்டாகும் நெருக்கமும், ரசிக்கும் தன்மையுமே ஒரு நிலையான பரிசு போல ஆகி மனதுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய ஒன்றாக மாறிவிடும்..

No comments:

Post a Comment

பறவை நோக்குதல் எனும் ரசனையான பணி

ராஜேந்திரன் பறவை என்பதை இப்படி எளிமையாக விளக்கலாம். உலகிலேயே சிறகு உடைய பிராணி பறவைதான். நமது பெருவிரல் பருமனே உள்ள மிகச் சிறிய ரீங்காரப் பற...