டேவிட் கூப்பர்
தமிழில் : லதா ராமகிருஷ்ணன்
வன்முறை என்று நாம் இங்கே கூறுவது மனிதர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதையோ அல்லது தீவிர மனநோய்க்காளானவர்கள் நடந்து கொள்வதாக கூறப்படுபவனவற்றையோ அல்ல. நார்மல் மனிதர்கள் என்று கூறப்படுகிறவர்கள், தங்களை தாங்களே கூறிக் கொள்கிறவர்கள், மனநிலை பிழந்தவர்களாக கணிக்கப்படுகிறவர்கள் மீது பிரயோகிக்கும் அவமான, அடக்குமுறைகளைத் தான்.
ஒருவன் எவ்வளவுக்கெவ்வளவு சமூகக் கட்டுதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, அவற்றால் அகத்தளவும் புறத்தளவுமாகக் கட்டுப்பட்டு அல்லது அகமொருவிதமாகவும், புறமொரு விதமாகவும் வாழப் பழகுகிறானோ, வாழ்ந்து வருகிறானோ, வருகிறானோ அந்த அளவுக்கு அவன் 'நார்மல்' மனிதனாகக் கருதப்படுகிறான் என்பதுதான் உண்மை. யாரோ வகுத்த விதிமுறைகளை இம்மி பிசகாமல் அடியொற்றி நடப்பவர்கள், இந்த இயந்திரத்தனத்தை, இயக்க மின்மையை மறைக்க, நெருக்கடிகளில் நிலைகுலையாமல் நிற்பதற்கும், மேம்படுவதற்குமான திறன், சகிப்புத்திறன் என்றெல்லாம் அலங்கார, தெளிவான பொருள் தராத வார்த்தைகளில் 'நார்மல்' தன்மையை ஏற்றிப் பிடிக்கிறோம். ஆனால் சற்றே தள்ளி நின்று நிலைமையை உன்னிப்பாகக் கவனித்தால் 'நார்மல்' மனிதர்கள் எத்தனை தூரம் வாழ்வின் உயிர்ப்பை, அனுபவங்களின் முழு பாதிப்பு அல்லது உச்சகட்ட இயக்க முக்கியத்துவத்தை இழந்தவர்கள், அந்த அனுபவங்களுள் புக இயலாமல், புக பயந்து ஒதுங்கி விட்டவர்கள் என்பதை உணர முடியும்.
இந்த இழப்பை, இன்மையைத் தங்கள் சிந்தனைச் சீர்மையாக, பூரணத்துவமாகக் கொண்டு அதிகாரஞ்செலுத்தி வருவது எவ் வகையில் நியாயம்? இப்படித்தான் நாஜிகள் பல்லாயிரக்கணக்கான மனநோயாளிகளை விஷவாயுவால் கொன்றார்கள். இப்படித்தான் உலகெங்கிலும் பல்லாயிரணக்கான மனங்களும், மூளைகளும் மருந்து மாத்திரைகளாலும், அறுவை சிகிச்சையாலும் குதறப்பட்டு வருகிறது. தொடர்ந்த ரீதியில் தரப்படும் மின் சிகிச்சையில் சிதைக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுடைய ஆளுமை, தனித்தன்மை, எதிர்ப்புணர்வு எல்லாமே உளவியல் மருத்துவமனை வாசத்தால் மழுங்கடிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment