Friday, 28 March 2025

வலித்துணை (குறும்படம்)

Elemental Story : O’Hendry

ஆத்மாநாம் 

CHARECTER

ஒரு திருடன்

ஒரு வலது கை பக்கவாத நோயாளி

வீட்டு வேலைக்காரி

போலிஸ் இன்ஸ்பெக்டர் & 3 கான்டபிள்கள்


LOCATION

சிறிய பங்களா

சின்ன சின்ன பங்களாக்கள் உள்ள வீதி

மது அருந்தும் இடம்


SYNOPSIS   

மூன்றாம் வகைத் திருடன் அவன். ஒரு வீதியில் நோட்டமிட்ட அவன் ஒரு சிறிய பங்களாவை தேர்ந்தெடுத்து அதில் நுழைகிறான். அங்கு ஒரு மனிதன் கட்டிலில் ஒரு கை பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு படுத்துக் கொண்டிருக்கிறான். அறையில் நுழைந்த திருடன் பணத்தை தேடிக்கொண்டிருந்தபோது அரவம் கேட்டு கண்விழித்த அந்த மனிதன் அவனை தடுக்க கட்டிலில் இருந்து எழ முயற்சித்து தவறுதலாக வலது கையை ஊண்றி விட்டதால் தடுமாறி கீழே விழுகிறான். எழ முயற்சித்து அவன் படும் சிரமத்தை பார்த்த திருடன் அவனிடம் வந்து கைத்தாங்கலாக அவனைத் தூக்கி கட்டிலில் படுக்க வைக்கிறான். அவனிடம் பேச்சுக் கொடுக்கும் திருடன் அவன் கை பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்கிறான். அவன் அவன் அந்த வலியைப்போக்க என்ன முறைகளை கையாள்கிறான் எனக்கேட்க அதற்கு அந்த மனிதன் சில வழிகளை கடைபிடிப்பதன் மூலம் வலியை குறைக்க முயல்வதாக கூறுகிறான். அதில் சிலதை மறுத்த திருடன் ‘எனக்கும் உன்னைப்போல அதே கையில் பக்கவாதப் பிரச்சினை தான். நீ சொன்ன அந்த மருந்தெல்லாம் சரிப்பட்டு வராது. நீ ஆமைக் கொழுப்பு தைலம் தேச்சி பாத்தியா?’ என்று கேட்கிறான். 

‘ம்..ம்.. தேச்சி பாத்திட்டேன். அது கொஞ்ச நேரத்துக்கு தான் வலியை குறைக்குது. ஆனா மறுபடியும் அந்த கையை குடையுற வலி ஆரம்பமாயிடுது’     

’நீ சொல்றதும் சரி தான். அந்தப் பாழாப்போன தைலத்த தேச்சவுடனே வலி சுத்தமா காணாமப்போன மாதிரி நம்மள ஏமாத்திடுது’

‘ஆனா இந்த முறை நான் சாரைப்பாம்பு கொழுப்புல செஞ்ச ஒரு தைலத்தை யூஸ் பண்ணேன். ஒரு நாள் பூரா வலி எனக்கு வெகுவா குறைஞ்சிடுச்சி. உனக்கு அந்த தைலத்தை கொண்டு வந்து தர்றேன். தேச்சிப்பாரு’

சிறிது நேரத்திலேயே இருவரும் நெடுநாள் பழகிய நண்பர்கள் போல் பேசிக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள், 

அப்போது அந்தத் திருடன் ’இப்ப உடனடியா வலியைக் குறைக்கிற ஒரு மருந்த சாப்பிடலாம் என்ன சொல்ற’ 

‘என்ன மருந்து அது’ 

‘ம்.. மது எல்லா வலியையும் போக்கற அருமருந்து’ எனச் சொல்லி சிரிக்கிறான்.  அந்த மனிதனும் சிரித்துக்கொண்டே ‘நீ சொல்றது சரிதான். பல நேரங்களில் அது தான் வலியைக் குறைக்க கைகொடுக்குது. அதுமட்டுமில்ல கொஞ்ச வெளியே போய் காலார நடக்கணும் போல இருக்கு. அதோ அந்த சட்டப்பையில பணமிருக்கு. எடுத்துட்டு வா நாம வெளியில போகலாம்’

‘அதெல்லாம் வேணாம். என் கையில கொஞ்சம் பணமிருக்கு. நம்ம ரெண்டு பேருக்கும் அதுவே போதும்’ என்று சொல்லி அவன் எழுவதற்கு உதவி செய்கிறான். இருவரும் அங்கிருந்து கிளம்புகிறார்கள். 

இதனிடையே இரவு 8 மணிக்கே வேலை முடித்துக் கிளம்பியிருந்த வேலைக்காரி ஏதேச்சையாக அந்த பங்களா வழியே போகும்போது முதலாளி ரூமில் லைட் எரிவதை பார்த்து கேட் சாவி எப்போது அவளிடமே முந்தானையில் இருப்பதால் கேட் பூட்டைத் திறந்து முதலாளி படுத்திருக்கும் சன்னல் அருகில் சென்று பார்த்தால் உள்ளே ஒரு மனிதன் நடமாடிக் கொண்டிருப்பது தெரிகிறது. திருடன் தான் பங்களாவுக்குள் புகுந்து விட்டான் என ஊகித்துக்கொண்டு அதனைப் போலிசிடம் சொல்லி கூட்டிவர விரைகிறாள்.

பாரில் அந்த மனிதனுக்கும் திருடனுக்கும் இடையிலான உரையாடல்கள். 

பாரில் மது அருந்திவிட்டு வந்து கொண்டிருக்கும் அந்த மனிதனும் திருடனும் பல நாட்கள் பழகிய நெருக்கமான நண்பர்களைப் போல் பேசிக்கொண்டு அந்த வீதி வழியே வந்து கொண்டிருக்கின்றனர்.   

அப்போது அவர்கள் அருகே ஒரு பேட்ரல் ஜீப் வந்து நிற்கிறது. அதிலிருந்து ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் 3 கான்ஸ்டபிள்களும் இறங்க கடைசியாக அந்த வீட்டு வேலைக்காரி இறங்குகிறாள்.

அவர்கள் அருகில் வந்த சப்-இன்ஸ்பெக்டர் நெருங்கியதும் அங்கு ஓடி வந்த வேலைக்காரி அந்த மனிதனை சுட்டிக்காட்டி ‘இவர் தான் சார் என்னோட முதலாளி’ என்கிறாள். 

அந்த மனிதன் இதையெல்லால் சற்று குழப்பமாக பார்க்க, சப்-இன்ஸ்பெக்டர் ‘ உங்க வீட்டில் திருடன் ஒருவன் புகுந்து விட்டதாக இந்த அம்மா வந்து சொன்னார்கள். அது உண்மையா? நீங்கள் அவனை பார்த்தீர்களா? இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்? உங்கள் உடன் இருக்கும் இவர் யார்? என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கினார். 

சப்-இன்ஸ்பெக்டரையே பார்த்துக் கொண்டிருந்த திருடன் அவரின் கேள்விகளால் மிரட்சியுற்று அந்த மனிதனின் பக்கம் பார்வையை திருப்பினான்.

அந்த மனிதன் சப்-இன்ஸ்பெக்டருக்கு ஒருவித நிதானத்துடன் பொறுமையாக விளக்கிக் கூறினான். 

’சப்-இன்ஸ்பெக்டர்.. திருடர்கள் யாரும் என் வீட்டில் நுழையவில்லை. இவர் என் பால்ய கால நண்பர். நெடுநாள் கழித்து இன்றிரவு என்னை சந்திக்க வந்தார். இரவு வெகுநேரம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். வீட்டில் திடீரென்று ஒரு புது நபரைக் கண்ட புரிந்துகொண்ட என் வேலைக்காரி அவரை திருடன் என தவறுதலாக புரிந்துகொண்டு உங்களை வரவழைத்து விட்டாள். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வளவு நாள் பிரிவுக்கபுறம் நாங்கள் ஒன்று சேர்ந்ததை கொண்டாடும் விதமாக சிறிது மருந்திவிட்டு வந்தோம். அவ்வளவு தான்.’ அதைக்கேட்டது சப்-இன்ஸ்பெக்டர் ‘பரவாயில்லை.. நாங்கள் வருகிறோம்’ என்று சொல்லியவாறு ஜீப்பில் ஏற 

அந்த மனிதன் திருடனை கனிவுடன் பார்த்தவாறு நட்பின் அரவணைப்புடன் அவன் கையை பிடிக்கிறான். திருடன் நெகிழ்ழ்சியினால் உந்தப்பட்டு கண்கள் கலங்க அந்த மனிதனின் கையை இறுக்கிப் பிடிக்கிறான். 

இறு கைகளும் பிண்ணிப் பிணைந்திருப்பதன் மேல் வலித்துணை என்று டைட்டில் போடப்படுகிறது.

No comments:

Post a Comment

தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்

 நா.மம்மது  உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...