Saturday, 15 March 2025

திரைப்படம் பற்றி ...

மூன்று திரைப்படைப்பாளிகளின் கருத்துக்கள் 


1

"ஒவ்வொருவருக்கும் தான் செய்ய விரும்பும் ஏதோ ஒன்றைப் பற்றிய ஒரு எண்ணம் இருக்கும். கற்பனையினால் மெருகேற்றப்பட்ட இந்த எண்ணத்திற்கும் இறுதியாக அவர் சாதித்து பெற்ற வடிவத்திற்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருக்கும். இந்த இடைவெளியை குறைப்பதற்கு தான் மீண்டும் மீண்டும் முயல வேண்டி இருக்கிறது."

                                                                                                                                    - லூயி மால் 


2

"நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில், நாம் நம்பிக்கை இழந்திருக்கும் தருணங்களில், நம் உடல் ஆரோக்கியம் குன்றியிருக்கும் போது, சில சமயங்களில் ஒரு திரைப்படம் நம் நினைவிற்கு வந்து நம்முடைய உள் மனதை ஒளிர்விக்கும். ஒரு காட்சியுயோ, ஒரு வசனமோ போதும், நமக்கு தைரியம் அளிப்பதற்கு, வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதற்கு, ஆனந்தத்தின் சுவையை அறிவதற்கு.

இது போன்ற சக்தியை கொண்ட திரைப்படங்கள் எண்ணிக்கையில் அதிகம் இல்லை. அவை ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானவையாக இருந்தாலும் அவற்றுக்கு பொதுவான ஒரு தன்மை இருக்கிறது. பாடலின் மெட்டுப் போன்ற பொதுவான ஒரு தன்மை.

இந்தக் காரணத்திற்காகவே த்ரூஃபோவின் படைப்புகளில் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்களை விரும்பியவர்கள் உலகில் பல பாகங்களில் இருக்கிறார்கள் என்று நான் உறுதியாக சொல்வேன். "

                                                                                                                                - ழான் கோலே  


 3

"திரைப்படம் என்கிற படைப்பில் பிம்பங்களின் ஒளி - நிழல், ஒலிப் பின்னணியின் சப்தம் - சப்தமின்மை, நடிப்பின் அசைவுகள் - அசைவின்மை என்ற கூறுகள் ஒன்று சேர்ந்து ஒரு இயக்கம் ஏற்படுகிறது. இந்த இயக்கத்தினுள்ளே ஒரு குறிப்பிட்ட தாளகதி அதை இயக்குகிறது. படத்தின் உள்ளே பொதிந்திருக்கும் அதன் லயம் திரைப்படம் ஒரு தொடர் நிகழ்ச்சியாக திரையில் ஓடும் போது வெளிப்படுகிறது. இதுதான் ப்ரெஸ்ஸோன் குறிப்பிடும் அகச்சலனம்."

"மனிதனின் முகத்தைச் சித்தரிக்கும் கலைஞன் மனிதனுக்கு ஆற்ற வேண்டிய கடமை ஒன்று இருக்கிறது. அவனுடைய இயல்பான கண்ணியத்தை காட்டக் கலைஞன் தவறினாலும், குறைந்தபட்சம் அவனுடைய மேலோட்டமான தன்மையையும், அவனுடைய அறிவீனத்தையும் மறைக்கவாவது முயல வேண்டும். இந்த உலகத்தில் எந்த மனிதனுமே அறிவீனனாகவோ, மேலோட்டமானவனாகவோ இருக்க மாட்டான் என்பது சாத்தியமே. சஞ்சலமுற்று இருப்பதால் அவன் அப்படித் தோன்றக்கூடும். ஏனென்றால் அவன் நிம்மதியாக இருப்பதற்கு ஏற்ற ஒரு சிறு மூலை கூட அவனுக்கு கிடைக்காமலேயே போயிருக்கும்." 

                                                                                            - ஜோசப் வான் ஸ்டெர்ன்பெர்க்

No comments:

Post a Comment

தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்

 நா.மம்மது  உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...