பாவ்லோ கல்லூஸி (Paolo Galluzzi)*
லியனார்டோ தம்மையே வரைந்த இந்த ஓவியம் இங்கிலாந்தில் விண்ட்ஸரிலுள்ளது. இதில் அவரது கையொப்பம் காணப்படுகின்றது. அவர் தனது இடது கையால் எழுதியும், வரைந்தும் வந்தார். தமது குறிப்பேடுகளில் பெரும்பாலும் கண்ணாடியில் தெரிவது போன்று வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதியிருந்தார். இந்த இரு பக்கங்களி காணப்படும் ‘லோ லியோனார்டோ’ எனும் கையொப்பமும் அவ்வாறே எழுதப்பெற்றுள்ளது. அதற்கு மேலே அவரது கையொப்பம் வழக்கம்போல் இடமிருந்து வலமாக எழுதப்பெற்றுள்ளது.
குறிப்பேடுகள் பற்றிய சில குறிப்புகள்
நீண்டகாலமாக மறைந்துபோன இரு குறிப்பேடுகளில் காணப்படும் லியோனார்டோ டா வின்சியின் சாதனைகளை ஒரு அறிமுகம் தான் இக்கட்டுரை. இந்த ஏடுகள் 1965-ல் மாட்ரிட் நகரில் கண்டெடுக்கப்பட்டன. அதனாலேயே ’மாட்ரிட் குறிப்பேடுகள்’ என பெயர் பெற்றன. ’மாட்ரிட் சுவடிகள் I, II எனப்படும் இவை சென்ற நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட அருஞ்சுவடிகள் எனலாம். ’மாட்ரிட் சுவடிகளின்’ 5 தொகுதியுள்ள நகல் பதிப்புகளை ஸ்பெயினிலுள்ள டாரஸ் பதிப்பகமும், மெக்கிரா ஹில் எனும் அமெரிக்க நிறுவனமும், ஸ்பெயின் அரசாங்க துனையுடன் வெளியிட்டுள்ளது. (1) வின்சியை பற்றி ஆய்வுகள் நிகழ்த்திய லடிஸ்லாவ் ரேட்டி இந்நூலை பதிப்பித்தார். இவர் சென்ற ஆண்டு அக்டோபரில் இறப்பதற்கு முன் படி எழுதுவதையும், (இக்கால இத்தாலி மொழியிலும், ஆங்கிலத்திலும்) மொழிபெயர்ப்பதை முடித்து விட்டார். ”இதனை வெளியிட அமெரிக்க நிறுவனம் உதவி செய்தது. படங்களின் மீள் நகல்களை சுவிட்ஸர்லாந்தில் எடுக்கப்பட்டன. அதன் அமைப்பு இங்கிலாந்திலும், பதிப்பு இத்தாலியிலும், அமெரிக்காவிலும், அச்சடித்தல் ஸ்பெயினிலும் நடைபெற்றது. முகப்பு அட்டை ஜெர்மானிய கூட்டாட்சி குடியரசில் தயாரிக்கப்பட்டது.” படங்கள் அதிகம் இடம் பெற்ற ’நாம் அறியாத லியனார்டோ’ (20) எனும் 320 பக்க நூல் ஒன்றையும் மெக்கிரா ஹில் பதிப்பகம் வெளியிடுகின்றது. லடிஸ்லாவ் ரேட்டி தான் அதன் பதிப்பாசிரியர். ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மானிய கூட்டாட்சி குடியரசு, நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இது வெளியிடப்பட்டது. அன்மையில் தொகுக்கப்பட்ட மற்றோர் அரிய லியனார்டோ சுவடியாகிய ‘கோடக்ஸ் அட்லாண்டிக்கஸ்’ ஃப்ளாரன்ஸ் பதிப்பகமாகிய கியுண்டி – பார்பரா, ஜான்சன் மறுபதிப்பு நிறுவனத்தாரால் (3) 12 தொகுதியுள்ள முழு அளவு மறு நகல் பதிப்பாக வெளியிடப்பட்டது.
லியனார்டோ டா வின்சி சிறந்த ஓவியர் மட்டுமல்ல ; அவர் தேர்ந்த விஞ்ஞானியும், பொறியாளரும் ஆவார். அவர் இறந்த 1519-ஆம் ஆண்டுக்கு பின் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டு காலமாய் அவரது ஏராளமான விஞ்ஞான குறிப்புகளும், பொறியியல் வரைபடங்களும் இருளில் கிடந்தன. பல குறிப்புப் புத்தகங்களிலும், துண்டுக் காகிதங்களிலும் புதைந்து கிடந்த அவை ஒழுங்குபட வைக்கப் பெறாமல், படிக்க இயலாதபடி தாறிமாறாக இருந்தன. எனவே 18ஆம் நூற்றாண்டின் இறுதிவரை லியனார்டோ ஓர் ஓவியர் என்ற புகழே மேலோங்கியிருந்தது. அவ்ரது கையெழுத்துக் குறிப்புகள் கவனிப்பாரற்றுக் கிடந்தாலும் , பின்பு அவை கிடைத்தபோது அவற்றை வகைதொகையின்றி பிரித்து சிறகடிகடிக்க செய்ததாலும், அவருடைய விஞ்ஞான அறிவு, பொறியியல் திறமை ஆகியவற்றைப் பற்றி வெளியில் தெரியவில்லை. அவரது கையெழுத்துக் குறிப்புகளில் பெரும்பாலானவை அகப்படாமலே போனதும் உண்டு.
லியனார்டோ தன் உயிலில் கையெழுத்துக் குறிப்புகள் யாவும் தன்னுடைய விசுவாசமிக்க மாணவர் பிரான்செஸ்கோ மெல்ஸி என்பவரை சேரவேண்டுமென்று எழுதியிருந்தார். பிரான்செஸ்கோ தனது குருவான லியனார்டோ பல இடங்களுக்கு பிரயாணம் செய்தபோது கூடவே இருந்த்து மட்டுமல்லாமல், லியனார்டோ டா வின்ஸி இறக்கும் தருவாயிலும் உடனிருந்தவர். லியனார்டோ மரணத்திற்கு பின் பிரான்செஸ்கோ தன்னுடைய குழுவின் கையெழுத்துப் பிரதிகளை மிலான் நகரினை அடுத்துள்ள வாப்ரியோ டி அட்டா ஊரிலுள்ள தனது இல்லத்திற்கு கொண்டு கொண்டு சென்றார். 1570ஆம் ஆண்டு பிரான்செஸ்கோ இறந்த பின் அவரது மகனும், வாரிசுமான ஒரேஸியா மெல்ஸி லியனார்டோவின் கையெழுத்துப் பிரதிகளை அவற்றின் முக்கியத்துவத்தை சிறிதும் உணராமல், வேண்டாத சாமன்களை போட்டு வைக்கும் மாடியிலுள்ள ஒரு பரணில் போட்டு வைத்தார்.
அவர் வீட்டுப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித்தர வரும் லெலியோ கவார்டி என்ற ஆசிரியர் லியனார்டோவின் 13 கையெழுத்துப் பிரதிகளை எடுத்துச் சென்றார். பின்னர் அவற்றை ஃப்ளாரன்ஸ் நகரத்துக்கு கொண்டு சென்ற அவர் அங்கே பிரான்செஸ்கோடி டி மெடிசிஸ் என்ற பிரபுவிடம் நல்ல விலைக்கு விற்க முயன்றார். ஆனால் அந்த பிரபுவின் ஆலோசகர் ஒருவர் ’மேதகு பிரபு அவர்கள் இதனை பொருட்படுத்தத் தேவையில்லை’ எனக் கூறியதையடுத்து விற்பனை முயற்சி வெற்றிபெறவில்லை. எனவே கவார்டி தனது நண்பர் அம்ப்ரோஜியோ மெஸண்டா என்பவரிடம் அவற்றைக் கொடுத்து, ஒரேஸியேவிடமே சேர்த்து விடும்படி சொன்னார். ஆனால் ஒரேஸியோ அதனை பெற்றுக்கொள்ளாமல் அவரிடமே திருப்பியளித்து விட்டார். இது குறித்து மெஸண்டா தனது நினைவுக் குறிப்பில் இப்படி எழுதி வைத்துள்ளார். ”அத்தனை பாடுபட்டு கொண்டு சென்ற பிரதிகளை ஒரேஸியா வேண்டாமென்று சொல்லவும் நான் அசந்துபோய் விட்டேன். அதனை எனக்கே பரிசாக எடுத்துக்கொள்ள சொல்லி விட்டார்.”
இதனை அடுத்து லியோனி என்ற சிற்பி லியனார்டோவின் கையெழுத்துப் பிரதிகளைப் பற்றி கேள்விபட்டு, அக்கறையுடன் அதனை பிரான்செஸ்கோ மெல்ஸியின் வாரிசுகளிடமிருந்து பெற முயன்று வெற்றி பெற்றார். அதனுடன் ஒரேஸியோ மாஸெண்டா வைத்துக்கொள்ளும்படி கொடுத்திருந்த 13 கையெழுத்துப் பிரதிகளில் பத்தை வாங்கிக் கொண்டார். இவ்வாறு 1582-க்கும் - 1590-க்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டுகளில் அநேகமாக எல்லா கையெழுத்துப் பிரதிகளும் லியோனி வசம் வந்து சேர்ந்தன.
அக் கையெழுத்துப் பிரதிகளை சரிவரத் தொகுத்து கொடுக்க வேண்டுமென்று எண்ணி, லியோனி அவற்றை பலவாறு பிரித்து தனக்கு தோன்றியபடி தொகுதிகளாக்கி வைத்தார். ஆனால் அவர் அத்தகைய தொகுப்பு வேலைக்கு சிறிதும் தகுதி படைத்தவர் அல்லர். அவருடைய இந்த முறையில்லாத முயற்சியால் தீமையே விளைந்தது. கையெழுத்துப் பிரதிகளின் வரிசையமைப்பையே மாற்றி, எப்போது எது எழுதப்பட்டது, எது முந்தியது, எது பிந்தியது என்று எதுவும் தெரிந்து கொள்ள இடமில்லாதபடி குழப்பி விட்டிருந்தார். அதனால் அவசியமான விவரங்கள் ஏதும் தெரிந்துகொள்ள முடியாமலே போயின. பிரதிகளின் ஒழுங்கு முறை கெட்டது மட்டுமல்லாமல் அவை சிதறிப்போகவும் நேரிட்டது.
மேலே : லியோனார்டோ கண்ணாடியில் தெரிவதுபோல் மாற்றி எழுதிய பெரிய எழுத்துக்கள். இவை ‘கோடெக்ஸ் மாட்ரிட் I’ லிருந்து எடுத்து பெரிதாக்கப்பட்டவை. லியோனார்டோவின் எழுத்துக்கள் எல்லாம் இத்தனை அழகாக இருக்கவில்லை. அவர் அடிக்கடி குறிப்பேடுகளின் ஓரங்களில் தமது கருத்துகளை கிறுக்கி வைத்தார். ஒவ்வொரு வாசகத்தின் தொடக்கத்திலுள்ள பெரிய எழுத்துக்கள் கண்ணாடியில் தெரிவது போன்று மாற்றி எழுதப்பட்டிருந்தன.
இந்த மிதி இயந்திரம் ‘கோடெக்ஸ் அட்லாண்டிக்கஸ்’ தொகுப்பில் உள்ளது. கால்வாய் வெட்டும்போது தோண்டப்படும் பொருளை வெளியே எடுப்பதற்காக லியோனார்டோ இதனை வரைந்திருந்தார். அவரது காலத்தில் ஃப்ளாரன்ஸுக்கும் கடலுக்கும் இடையிலுள்ள ஆர்னோ நதியின் சில பகுதிகளில் போக்குவரத்து நடைபெற முடியாமல் இருந்தது. ஏனெனில் அதில் பல வளைவுகள் இருந்த்து மட்டுமல்லாமல் நீர் மட்டமும் திடீர் திடீரென மாறியவாறு இருந்தது.
மேலே : ‘மாட்ரிட் கோடக்ஸ் I’ – லிலுள்ள வரைபடம். லியோனார்டோ பொறிகளின் அட்டிப்படைக் கூறுகளை விளக்கும் பல படங்களில் இது ஒன்றாகும். இது திருகாணிகள், சக்கரங்கள் வழியாக ஆற்றலையும், இயக்கத்தையும் கடத்தும் ஒரு கருவியின் மாதிரி. இப்பொருள் பற்றி லியோனார்டோ தனது முன்வைப்புகளில் அடிக்கடி விளக்கி வந்தார்.
ஒரேஸியோவிடமிருந்து கையெழுத்துப் பிரதிகளை வாங்கும்போது லியோனி தான் அவற்றை ஸ்பெயின் தேசத்து மன்னன் இரண்டாம் பிலிப்பிடம் பரிசாகக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். அதன்படி லியோனி நடக்காமல், ஒரு சிலவற்றை ஒப்புக்கு மன்னனிடம் கொடுத்துவிட்டு மீதியை தானே வைத்துக்கொண்டார். லியோனொயின் காலத்திற்கு பின்னர் அவருடைய மருமகனும் வாரிசுமான போலிடோரோ கால்ச்சி என்பவரின் கைக்கு அவை வந்தன.
1622ஆம் ஆண்டுவாக்கில் போலிடோரோ கால்ச்சி அக் கையெழுத்துப் பிரதிகளின் பெரிய தொகுப்பு ஒன்றை மிலானைச் சேர்ந்த காலீஸோ அர்கோனாட்டி பிரபுவுக்கு விற்றுவிட்டார். அத் தொகுப்பு இன்று ‘கோடக்ஸ் அட்லாண்டிக்கஸ்’ என்று அழைக்கப்படுகின்றது. 1636-ல் அர்கோனாட்டி பிரபு அத் தொகுப்பை மிலானில் உள்ள அம்ப்ரோஸியன் நூலகத்திற்கு அளித்தார். அர்கோனாட்டி பிரபுவிற்கு கிடைத்த வேறு சில கையெழுத்துப் பிரதிகளும் அந் நூலகத்திற்கே அளிக்கப்பட்டன.
லியோனின் கைவசமிருந்த இதர கையெழுத்துப் பிரதிகள் எப்படியோ இங்கிலாந்து தேசம் போய்ச் சேர்ந்தன. அருண்டேல் பகுதிக்கு பிரபுவாக விளங்கிய தாமஸ் ஹோவார்டு என்பவர் லியோனி தொகுத்த இரண்டாவது தொகுதியை வாங்கினார். பல வரைபடங்கள் அடங்கியுள்ள இத் தொகுப்பு இறுதியாக ராயல் விண்ட்ஸர் நூலகத்திற்கு வந்து சேர்ந்தது. அதனால் இத் தொகுப்பு இன்றுவரை ‘விண்ட்ஸர் தொகுப்பு’ என்றே அழைக்கப்படுகிறது. தாமஸ் ஹோவார்டு மற்றொரு தொகுப்பையும் வாங்கியிருந்தார். பின்னர் அவருடைய வாரிசு ஒருவர் அதனை ராயல் சொசைட்டிக்கு வழங்கினார். இத் தொகுப்பின் இன்றைய பெயர் ‘கோடெக்ஸ் அருண்டே 263’ என்பதாகும். தாமஸ் ஹோவார்டு தொகுப்புகளை வாங்கிய காலம் 1630 – 1640 என வரையருக்கலாம்.
18ஆம் நூற்றாண்டில் லியனார்டோவின் கையெழுத்துப் பிரதிகள் சில எங்கெங்கோ சுற்றி வந்தன. 1715-ல் லீசெஸ்டர் பிரபு ஒரு தொகுப்பை வாங்கி இங்கிலாந்து கொண்டு சென்றார். அத் தொகுப்பிற்கு அவரது பெயரே விளங்கி வருகிறது. பல்வேறு சொற்கள் குறிக்கப்பட்டுள்ள இன்னொரு தொகுப்பான ’கோடெக்ஸ் ட்ரைவல்சியானஸ்’ அம்ப்ரோஸியன் நூலகத்திற்கு 1715ஆம் ஆண்டு வாக்கில் வந்து சேர்ந்தது. அந் நூலகத்திற்கு முதலில் இதனை நன்கொடையாக கொடுத்திருந்த அர்கோனாட்டி பின்பு அதை எடுத்துக்கொண்டார். அது சுற்றி வந்து 1750ஆம் வாக்கில் மறுபடியும் அம்ப்ரோஸியன் நூலகத்திற்கே வந்தடைந்தது.
இவ்விரு படங்களும் ரோமின் அருகிலுள்ள க்ரோட்டா ஃபெரட்டா மடாலயத் துறவிகள் அணமையில் கண்டெடுத்த ‘கோடெக்ஸ் அட்லாண்டிக்கஸ்’ சுவடித் தொகுப்பிலுள்ளவை. இப்போது இது 12 தொகுதியுள்ள நகல் பதிப்பாக வெளிவந்துள்ளது.
கால்வாய் வெட்டும் இயந்திரம். இது மண்ணைத் தோண்டி தரையில் குவிக்கிறது.
தொடரும்......
பாவ்லோ கல்லூஸி (Paolo Galluzzi)*
இவர் மேற்கு ஃப்ளாரன்சின் வின்சியிலுள்ள லியோனார்டோ அருங்காட்சியகம் மற்றும் நூலக இயக்குநர்.
No comments:
Post a Comment