வெசாக்தின முழுநிலவு
தலையில்
கைவைத்து அழுகிறது
அதன் மூக்குச்
சளி
சாளரம் வழியாக
தெறிக்கின்றது
அயல் வீட்டில்
வெசாக்கிற்கு மொட்டவிழ்ந்த
ஏழு தாமறைப் பூக்கள்
இன்னும் வாடவில்லை
ஐந்நூற்று ஐம்பது
புராணக் கதைகளை
சுருக்கி, நவீனப்படுத்தி
தூரத்தில் அமைந்த
வெசாக் பந்தலில்
இடைக்கிடை
விருது பாடுவது
கேட்கின்றது
என் முன்
வெற்றுக்காகிதத்
தாள்
கவிதைக்காக
விழித்திருக்கின்றது
சடுதியாக எங்கிருந்தோ
மிதந்து வந்த
இறைச்சித் துண்டமொன்று
காகிதத்தில் வீழ்ந்து
யோனியின் வடிவமைந்தது
அது
கோணேஸ்வரியினுடையது
அம்பாறையிலிருந்து
கொழும்பு வர
இத்தனை நாளா?
எவ்வளவு தூரத்தில்
நம் கண்களில் கண்ணீர்
குளிர்கின்றது
கண்ணீருக்கு மத்தியில்
நான்
அங்குலி மாலாவாக
அல்ல
லிங்க மாலா வாகினேன்
எனக்கு விரல்கள்
தேவையில்லை
ஆண்குறிகளே தேவை
வெகு பக்தியாக
வலது கரத்தில்
இறைச்சியையும்
வெகு பக்தியாக
வலது கரத்தில்
ஆயுதத்தையும்
எடுத்துப் புறப்படலானேன்
வழியில் சந்திக்கும்
வீடுகளைத் தட்டி
சகல சிங்கள ஆண்குறிகளையும்
-வெட்டி நூலாக
கோர்த்து
இறுதியில் எனது
ஆ …..
வேதனையை தாங்கிக்
கொண்டு
ஸ்ரீபாத மலையின்
கழுத்திற்கு
ஆண்குறிகளை மாலையாய்
சூட்டினேன்
என்னை தடுத்து
நிறுத்த
போதி மாதவன் இல்லாததால்
நான் இதனைச் செய்தேன்
சகோதர பாசமற்ற
உணர்வு அற்ற
இனம் ஒன்று எதற்கு
என் முன் வெற்றுக்
காகிதம்
அதன் மீது ரத்தக்கறை
இது ஒரு தமிழ்க்
கவிதை
அதனால் சிங்களவருக்கு
இது புரிவதற்கில்லை.
மஞ்சுள வெடிவர்தன
குறிப்பு :
2000 ஜூனில் வெளிவந்த ’ராவய’ பத்திரிகையில் அதன் ஆசிரியர் குழுவிலுள்ள மஞ்சுள வெடிவர்தன
எழுதி, செல்வர் என்பவரால் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதை இது. சிங்கள வாசகர்களை
நோக்கி எழுதப்பட்ட இந்தக் கவிதை மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட கவிதை. சிங்கள பேரினவாத
சக்திகள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி விட்டிருந்த கவிதை இது. மஞ்சுள வெடிவர்தனவின்
கன்னி மரியா எனும் சிறுகதைத் தொகுதி 1999-ல் இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
நன்றி : பறை 2001
No comments:
Post a Comment