Saturday, 31 March 2018

அவள்


கண்ணீரின் உப்புச்சுவைக்கும்
மூச்சடைத்து உலகங்கள் ஸ்தம்பித்த
ஒற்றை முத்தம்
அவளுக்கானது.

குறிகளின் வானம்
வீழ்ந்த எங்களின்
பிரத்யேக இரவில்
நீலத்தாரகைகளை
விதைத்தது
காமம்.
உடலைத்திறக்கையில்
உருகி பாய்ந்தோடிய
உதிரநதி
வானமெங்கும் நனைத்தது.
வெளிச்சத்தில் தெரியாத
அந்த நிலாத்துண்டை
உடல்களில் பொருத்திக்கொண்டு
இருளின் அந்திம
நொடிகளில் விலகினோம்
பழகிய அவரவர் கூட்டிற்கு...

இந்த அதிகாலையின்
என் படுக்கை விரிப்பில்
சிதறிக்கிடக்கின்றன
சிரிப்பொலிகள்

இரவில் உன்
உடலின் வெளியேறும்
ஒளி என்னவென
கிளர்ந்து
கேட்கிறான்
இவன்
கவிதை
2
அப்போது நான்
முழுக்கை சட்டையும், கால் சராயும்
அணிவது வழக்கம
அப்போது நான்
மாதம் ஒருமுறையென
சீராக முடிதிருத்தி வந்தேன்
அப்போது நான்
ஆண்களுடன்..,
பள்ளியில் தான் படித்தேன்
இருந்தாலும் அவர்கள் கிண்டல் செய்தார்கள்
நான் ஆணில்லைன்று
இப்போது நான்
புடவை கட்டி,
ஒத்தசடை பின்னி,
பூ முடிந்து,
பாந்தமாக வலைய வந்தாலும்
அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்களாம்
நான் பெண்ணில்லையென்று.
அஃறிணைகள்
அது, இது என்ற
சுட்டுப் பெயர்களால் அறியப்படுபவை
அவற்றின் குரல்கள்
மனித சப்தங்களுக்கு பொருளற்றவை
சிலதோ செய்திகளில் அடிபடும்.
நல்லது ஆனால்,
இதற்காக வாக்கு சாவடிகளில் அனுமதிப்பது
நகைப்பிற்குரியது
அவற்றின் காதற் பண்புகள்
காயடிக்கத்தக்கவை
நல்ல பொழுது போக்கிற்கும் உதவினாலும்
ரேசன் ஒதுக்குவதற்கோ
இது போதுமான காரணமில்லையே
அஃறிணைகளின் பொருள்
அவை மனிதர்கள் இல்லை என்பது மட்டுமே
கையிருந்தால் என்ன?
காலிருந்தால் என்ன?
மேலும்
ஆறு அறிவு இருந்தால் தான் என்ன?

லிவிங் ஸ்மைல் வித்யா

No comments:

Post a Comment