ஒருவரின் நாட்குறிப்பை படிப்பது என்பது
அவரின் மனதை படிப்பதாக மட்டும் அல்லாமல்
அந்தரங்கத்தை திருட்டுத்தனமாக படமெடுப்பதாகவும் ஆகி விடுகிறது.
இன்றைய சமூகம்
பொது அளவுகோள்களை நிறைய உண்டாக்கி வைத்திருக்கிறது.
அதற்கு உட்படாத தனி மனித சாத்தியங்கள்
எங்கோ நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
நாம் நம்மளவில் சுயநலமிகளாக இருக்கும் பட்சத்தில்
எதிரிலிருப்பவை மங்கலாகத் தான் தெரியும்
பல நேரங்களில் பல விஷயங்கள்
வெளிப்படைத் தன்மையிலிருந்து வேறு ரூபம் கொண்டுள்ளன.
உறவுகளின் ஆழம் வலியது.
சற்று இடறினாலும் மிகுந்த மனவலியை உண்டுபண்ண வல்லது.
கார்ல் மார்க்ஸ், சேகுவேரா, மாசேதுங், சார்த்தர்,
அல்தூஸர், மிஷேல் ஃபூக்கோ, ழான் ஜெனே என எல்லோருமே ஒரு வகையில் தனி மனித பலவீனங்களை கொண்டிருந்தவர்கள்
தான்.
பாலியல் மட்டுமல்லாமல்
இன்னும் பலவற்றை குறித்த நமது பிரம்மைகள் தான்
இவர்களை மனிதர்களிலிருந்து புனிதர்களாக ஆக்கி வைத்தது.
இங்கு நம்மில் பலர்
தங்களின் கருத்தை மாத்திரமே பற்றிக்கொண்டு
மற்றவரின் இருப்பை மறுதலிப்பதன் மூலம்
அதிகாரத்தை ஒரு சுழற்சி முறையில்
மறு உற்பத்தி செய்து கொண்டிருப்பதை கட்டவிழ்த்து
மற்றவர் இருப்பு மற்றும்
மாற்றுக் கருத்து பரவலுக்கான நியாயப்பாட்டுடன்
எண்ணற்ற புனித பிம்பங்களை போட்டுடைப்பதான
எழுத்துக் காரியத்தையும்
இந்த நாட்குறிப்பு நிகழ்த்திக் காட்டும்போது
இதன் பணி சற்று பிரம்மிக்கத்தக்கது தான்.
ஒரு சமூக உயிரிக்கான மொழிப்பயன்பாட்டின்
நுட்பங்களை இயன்றவரையிலும் பயன்படுத்தி
பதியப்பட்டிருக்கும் இந்த எழுத்து வகையை
படித்து முகம் திருப்பிக் கொள்வதும், வாசித்து உள்வாங்குவதும்
அவரவர் வசம்.
”நாட்டில் நடப்பதை சொல்லியிருக்கிறேன்.
இதில் உங்களுக்கு பிடிக்காதது இருந்தால்
இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? என்று வேண்டுமானால் கேளுங்கள்.
‘இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?’ என்று
தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள்.
உண்மையைச் சொல்வதென்றால்
முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும்.
நான் விரும்பும் அளவுக்கு சொல்லமுடியவில்லையே
என்பது தான் என் வருத்தம்.
ஜி. நாகராஜன் (தனது எழுத்தின் நியாயப்பாட்டுக்காக முன்வைத்த கருத்து)
மறுபடியும் மறுபடியும் உங்களுக்கு கூற விரும்புவது இதைத் தான்.
நீங்கள் உங்கள் அளவுகோள்களின் மூலம் தான்
என்னை (மற்றவரை)
அளக்க முற்படுகிறீர்கள் என்பதை.
ஆத்மாநாம்
No comments:
Post a Comment