ஆத்மாநாம்
’உங்களது கருப்புத்தோலை
உடலை மூடும் ஓரு அங்கியைப்போல்
அணியாதீர்கள்.
அதனை ஒரு போர்க்கொடியைப் போல்
உயர்த்திப் பிடியுங்கள்.’
லாங்டன் ஹ்யூக்ஸ்
நாம் காணும் இயற்கை பல்வேறு நிறங்களை உள்ளடக்கியது. நாம் காணும் சமூகம் பல்வேறு
மனிதர்களை உள்ளடக்கியது. எல்லாவித இயற்கை பொருட்களிலும் நிற வேறுபாடு உள்ளது போல மனித
உடம்பிலும் அதாவது தோலிலும் நிறவேறுபாடுகள் உள்ளன.
அது நாம் வாழும் பிரதேசம், அதன் தட்பவெப்பநிலை, வாழ்வின் ஆதாரங்கள் என்பதை பொறுத்து
மாறுபட்டு விளங்குகிறது. ஆனால் இந்த வேறுபாடுகள் இன்றைய உலகில் ஆதிக்கம் செய்யும் பிரிவினருக்கு
உகந்த முறையில் ஏற்றம் கண்டுவிட்டதால் மனிதத்தோலின் நிறமானது வறுமைக்கு அல்லது வளமைக்கு,
உயர்வுக்கு அல்லது தாழ்வுக்கு, அதிகாரத்துக்கு அல்லது அடிமைத்தனத்திற்கு, ஒடுக்குமுறைக்கு
அல்லது அதற்கு எதிரான போராட்டத்திற்கு உரிய குறியீடுகளாக மாறிப்போனது.
கறுப்பு, சிவப்பு ஆகிய இரண்டு நிறங்கள் சமூகத்தின் சகல மட்டங்களிலும் கீழ் சாதிக்காரன்,
மேல் சாதிக்காரன் என்கிற கட்டமைப்புடனேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு
கருத்து ஒவ்வொருவர் அடிமனங்களிலும் கறுப்பானவன் கீழ் சாதிக்காரன், சிவப்பானவன் மேல்
சாதிக்காரன் என்பதாக கெட்டிதட்டிப் போயிருக்கிறது. இந்த நிறப்பாகுபாடு சாதியத்துடன்
கொண்டுள்ள உறவு மிகுந்த ஆய்வுக்குரிய ஒன்று.
இன்றைய சமூக நிகழ்வுகளிலும், அதன் அசைவியக்கங்களிலும் கறுப்பு என்ற நிறம் வெறும்
கீழ் சாதிக்காரன் என்கிற வரையறைக்குள் மட்டுமே அடங்கி விடுவதில்லை. அதன் பரிமாணம் வேறு
பல வடிவங்களுடன் தொடர்புடையதாக வெளிப்படுவதை காணலாம். அதாவது கறுப்பாக இருக்கிறான்(ள்)
என்பதன் பொருள் ’அவன் கல்வியறிவில்லாதவன், வறுமைப்பட்டவன், நாகரீகமில்லாதவன், அழகற்றவன்
என்று அர்த்தம் கற்பிக்கப்படுகின்றது. சாதாரண மனிதனின் அழகுணர்ச்சியை பொறுத்தமட்டில்
கறுப்பானது அழகற்ற நிறம் என்பதாக ஆகிவிட்டது. இன்றைய அறிவுசார் உலகில் கறுப்பு என்பது
தீண்டத்தகாத நிறம் மட்டுமல்ல. அது சந்தோஷத்திற்கு எதிரானது; துக்கத்திற்கான குறியீடு.
இந்த எப்படி சாத்தியமானது?
பழந்தமிழ் இலக்கியங்களில் கறுப்பு நிறம் எவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று
சிறிது பார்ப்போம். பக்தி இலக்கியங்களில் நாம் காணும் ஒரு செய்தி, கறுப்பு அழகுக்குரிய
நிறம் என்றும், அது ஒளிவீசும் என்பது தான்.
திருமாலை, ‘கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப்பழகி கிடப்பேன்’ என்கிறார் ஆண்டாள்.
ஆழ்வார்கள் பலரும் திருமாலை ’கரிய மாணிக்கம்‘ என்றே பாடியுள்ளனர்.
’ராமனது கரிய உடம்பிலிருந்து ஒளி கிளர்ந்தது’ என்று கம்பர் வர்ணிக்கிறார். கண்ணப்பர்
பிறந்தபோது அவரது கருத்த மேனி ஒளியுடையதாக இருந்தது என்பதனை ’கருங்கதிர் விரிக்கும்
மேனி காமரு குழவி’ என்று பாடுகிறார் சேக்கிழார். நன்னூலில் கூட ’கறுப்பின் கண் மிக்குள்ளது
அழகு’ என்று வரும் சொற்றொடர் நெருப்பின் உள்ளார்ந்த தன்மையே சுடுவது என்பது போல, கறுப்பின்
உள்ளார்ந்த தன்மையே அழகு தான் எனும் பொருள்பட வருகிறது. தன்மீது பட்ட ஒளியை பளபளப்புடைய
கறுப்புநிற மனிதத்தோல் ‘எதிரொளி’ செய்து காட்டும் என்பது தான் மேற்கண்ட புராண மற்றும்
பக்தி இலக்கியங்கள் மூலம் கிடைக்கும் செய்தியாக நம்மால் அவதானிக்க முடிகிறது.
இப்படி அழகோடு சேர்த்து எண்ணப்பட்ட கறுப்பு நிறம் அழகின்மை என்பதற்கு உதாரணமாக
மாறிப்போனது எப்படி? தாழ்வுக்கும், இழிவுக்கும் உரியதாக கறுப்பு நிறம் ஆக்கப்பட்ட்தற்கான
வரலாற்றுக் காரணிகளை பார்ப்பதற்கு முன்பு அதன் விஞ்ஞான ரீதியான காரணங்களை விளங்கிக்
கொள்வது நல்லது.
மனிதத்தோலின் கறுப்பு நிறத்துக்கும், சிவப்பு நிறத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்திற்கான
விஞ்ஞான விளக்கம் இதுதான். மனிதனின் தோல் பகுதியில் இருக்கும் ’மெலனின்’ என்கிற நிறமி
தான் நிறத்தை தீர்மானிக்கும் பிரதான காரணியாக விளங்குகிறது. இந்த ’மெலனின்’ குறைவாக
இருப்பவர்கள் தான் வெள்ளையாக இருக்கிறார்கள். இது அதிகமாக இருப்பவர்களே கறுப்பு நிறத்தை
பெற்றிருக்கிறார்கள். இந்த ’மெலனின்’ நடுத்தர அளவில் இருப்பதால் தான் ஆசியக் கண்டத்தில்
பெரும்பாலோர் பழுப்பு நிறத்தில் இருக்கின்றனர். ’மெலனின்’ குறைவாக இருக்கும் காரணத்தால் தான் அமெரிக்கர்களும்,
ஆஸ்திரேலியர்களும் அதிக சிவப்பாக காட்சியளிக்கின்றனர்.
பொதுவாக சூரியனிலிருந்து, அதன் கதிர்களிலிருந்து வரும் அல்ட்ரா வயலட் கதிர்வீச்சு
சருமப்புற்று நோயை உண்டாக்கும் சக்தி பெற்றவை. இந்த புற ஊதா (அல்ட்ரா வயலட்) கதிர்களில்
உள்ள ஆபத்தை தடுப்பதே ’மெலனின்’ என்கிற நிறமி தான். எனவே தான் சருமப்புற்று நோய் ஆசியக்கண்டத்தில்
வசிப்பவர்களுக்கு அதிகம் வருவதில்லை. இதன் காரணமாகத்தான் பெரும்பாலும் வெள்ளைக்காரர்கள்
தங்கள் உடலின் நிறத்தை கொஞ்சம் குறைத்துக்கொள்ள ’சண்டேன்’ (SUN TAN) என்கிற ஒளிக்குளியல்
நடத்துகிறார்கள். தங்களை கொஞ்சம் கறுப்பாக்கிக் கொள்ள நிராயுதபாணியாக உடைகளை களைந்து
’சண்டேன் ஆயிலை’ ((SUN TAN OIL) உடம்பில் பூசிக்கொண்டு வெயிலில் காய்கிறார்கள். ஆனால்
’மெலனின்’ என்கிற நிறமியை அதிகம் பெற்றுள்ள கறுப்பு நிற மனிதனுக்கு இந்த சூரிய ஒளிக்குளியல்
தேவையில்லை. அறிவியல் கூற்றுப்படி மனிதனுக்கு வாழ்நிலையை பொறுத்தும், உடலியல் ரீதியாகவும்
ஏற்ற நிறம் கறுப்பு நிறம். அப்புறம் எங்கிருந்து வந்தது இந்த வெள்ளைத்தோல் மோகம்?
நாம் வாழும் இந்த நாட்டை வெள்ளைக்காரர்கள் ஆண்டதனால் தான் இந்த வெள்ளை மனோபாவம்.
ஒருவேளை நீக்ரோக்கள் (கறுப்பர்கள்) ஆண்டிருந்தால் நாம் எல்லோரும் கருப்பைத்தான் விரும்பியிருப்போம்.
ஒருவேளை நம் முகத்தில் பூசும் பவுடர் கூட கறுப்பு நிறத்தில் தான் இருந்திருக்கும் என்கிற
கருத்து ஒன்றும் உள்ளது தெரியுமா?
வெள்ளைத்தோல் மனோபாவம் என்பதே
ஒருவகையிலான ஆரியத்தின் எச்சம் தான். கருப்பு நிறம் தீமை (Evil), கொடுமை என உருவகிக்கப் படுகிறது. நன்றாக யோசித்துப்பாருங்கள். எம்.ஜி.ஆர் சிவந்த நிறம். ஜெயலலிதாவும் சிவந்த நிறம். அதுவும்
கான்வெண்ட் இங்கிலீஷை கரைத்துக் குடித்து அதனை தனது நுனி நாக்கிலேயே பாம்பு விஷத்தை வைத்திருந்தது போல் வைத்திருந்தவர்
அவர். அந்த பாம்பிங்லீஷை எப்போது கக்க வேண்டும் என்பது அவருக்கு மட்டுமே வாய்த்த கைவந்த
கலை. ஆனால் இதில் ஆச்சரியமான விஷயம் இவ்விருவரின் தீவிர ரசிகர்களோ கறுப்பு நிறத்தினர். எதிர் பாலின ஈர்ப்பு போல் எதிர் நிற ஈர்ப்பு.
எம்.ஜி.ஆர் ஒருவேளை
கறுப்பு நிறமாக இருந்திருந்தால் தமிழ்நாட்டின் தலையெழுத்தே தலைகீழாக இருந்திருக்கும்.
ஜெயலலிதா கறுப்பாக பிறந்திருந்தால் இன்னும் பல ஆண்டு காலம் வாழ்ந்திருக்கும் பெரும்
பாக்கியம் அவருக்கு வாய்த்திருக்கும். பாவம் ‘மெலனின்’ அவரது விஷயத்தில் விளையாடிவிட்டு
சென்று விட்டது.
அமெரிக்காவில் கறுப்பின எதிர்ப்பு என்பது வேறாகவும், கறுப்பு நிற விறுப்பு என்பது
வேறாகவும் இருப்பது தெரியுமா? அதில் ஊடாடும் அரசியல் என்னவென்றாவது புரியுமா?
இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு சொந்தமான நிறமான கருப்பு தொடர்ந்து தொடர்பு
சாதனங்களால் இழிவு படுத்தப்பட்டு வந்திருக்கிறது. சினிமாவில் இது இன்னும் மேலோங்கி ஒலிக்கும் ஒன்றாக இருக்கிறது. தமிழ் மண்ணில் பிறந்த கிராமத்து பெண்ணை சித்தரிப்பதற்கு வட இந்தியாவிலிருந்தும்,
இப்போதெல்லாம் கேராளாவிலிருந்தும் வெள்ளைத்தோல் நடிகைகளை இறக்குமதி செய்வது
தமிழ் திரையுலக நடைமுறை. ரஜினி, விஜய்காந்த்
கூட வெள்ளைத்தோல் ஓப்பனையின்றி திரையில் தோன்றியதில்லை.தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் முதல் தொகுப்பாளர் வரை சிவந்த நிறத்துக்காரர்களே.
தொலைக்காட்சி விளம்பரங்கள் கறுப்பு நிறத்தின் மீது இதுவரை
ஏற்படுத்தியிருக்கும் குற்றவுணர்ச்சி கறுப்பு மனித இனத்தின் மீது தொடுக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான
உச்சபட்ச வன்முறை எனலாம். உதாரணமாக ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வோம். பெண்களிடத்தில்
Fair&Lovely என்ற சிவப்பழகு கிரீம் ஏற்படுத்தியிருக்கும் குற்றவுணர்வு
என்ன தெரியுமா? நீங்கள் சற்று கருப்பாயிருக்கிறீர்கள்.
சற்று கருப்பாயிருந்தாலும் உங்களை யாரும் திரும்பி பார்க்க மாட்டார்கள். பார்த்தாலும் முகஞ்சுளிப்பார்கள்.
வேலை கிடைக்காது. முக்கியமாக கல்யாணமே நடக்காது.
விளம்பரத்தை கூர்ந்து கவனியுங்கள். மேலே சொன்ன
விஷயம் துல்லியமாக விஷூவலைஸ் செய்யப்பட்டிருக்கும். அதாவது Fair&Lovely-ஐ நீங்கள் யூஸ் செய்த பிறகு வீட்டிலுள்ளவர்கள் தேவதையாக உங்களை இனங்காணுவார்கள்.
இண்டர்வியூவில் நீங்கள் தேர்வு செய்யப்படுவது, நீங்கள் போகும் பாதையில் உள்ளவர்கள் உங்களை அதிசயமாக திரும்பிப் பார்ப்பது.
திருமணத்தில் மாப்பிள்ளை விழுங்கிவிடுவது போல் பார்ப்பது. ஆக சிவப்பு அழகின் சொரூபம். உள்மறை கருத்தாக கருப்பு
அசிங்கம். வேண்டத்தகாதது.
நாம் சிவந்த நிறத்துக்காரர்களை தவறாகவோ, எதிரிகளாகவோ பார்க்கவில்லை. கறுப்பு நிறத்தையும்,
அந்நிறம் வாய்க்கப் பெற்ற மனிதனையும் இரண்டாம் தரமாகவும், கீழ்நிலையில் வைத்துப் பார்ப்பதையும்
தான் அடியோடு எதிர்க்கிறோம். நமது எதிர்ப்பு என்பது ஆதிக்கத்துக்கும், அதிகாரத்துக்கும்,
அகம்பாவத்துக்கும் காரணமாக விளங்கும் வெள்ளைத்தோல் மனோபாவ (மோகம்) கருத்தியலைத் தான்.
அதற்கு காரணமாக விளங்கும் தனிப்பட்ட மனிதர்களின் மீதல்ல.
(இதனை எழுத உதவிய சில கருத்துக்களுக்காக தொ. பரமசிவன் அவர்களுக்கு என் நன்றி.)
No comments:
Post a Comment