Thursday, 8 March 2018

அடையாள அட்டை

எழுது
நான் ஒரு அராபியன்
எனது அடையாள அட்டை எண் 50000
எனக்கு எட்டுக் குழந்தைகள்
அடுத்த கோடையில் ஒன்பதாவது
இதில் உனக்கென்ன கோபம்?
 
எழுது
நான் ஒரு அராபியன்
தோழர்களுடன் கல் உடைப்பவன் நான்
எனக்கு எட்டுக் குழந்தைகள்
அவர்களுக்காக
ஒரு ரொட்டித் துண்டை
ஆடைகளை
ஒரு நோட்டுப் புத்தகத்தை
பாறையிலிருந்து பிய்த்தெடுப்பவன் நான்
உனது கதவை தட்டி யாசித்து நிற்பவனல்ல நான்
உனது வாசற்படியில் முழந்தாளிடுபவனும் அல்ல
இதில் உனக்கென்ன கோபம்?

எழுது
நான் ஒரு அராபியன்
எனக்கொரு பெயருண்டு ; பட்டம் இல்லை
கோபத்தில் சுழலும் இந்த மண்ணில்
பொறுமையைக் கடைப்பிடிப்பவன் நான்
எனது வேர்கள் ஆழப் புதைந்துள்ளன
யுகங்களுக்கு அப்பால்
காலத்துக்கு அப்பால்
நாகரிகங்கள் உதிப்பதற்கு முன்னதாக
ஸைப்ரஸ் மரமும் ஒலிவ மரமும்
தோன்றுவதற்கு முன்னதாக
கிளைகள் பரவுவதற்கு முன்னதாக

எனது மூதாதையர்
கலப்பையின் மைந்தர்கள்
மேட்டுக்குடியினரல்லர்
எனது பாட்டனார் விவசாயி
பெருமை மிகுந்த வம்சாவளியில்
பிறந்தவர் அல்லர்
நாணலும் குச்சிகளும் வேய்ந்த
காவற்காரனின் குடிசையே என் வீடு
தந்தை வழிச் செல்வத்தை
சுவீகரிக்கும் பெயரல்ல என்னுடையது

எழுது
நான் ஒரு அராபியன்
முடியின் நிறம் : கருப்பு,
கண்கள் : மண் நிறம்,
எடுப்பான அம்சங்கள் :
கஃபியேவை* என் தலையில்
இறுக்கிப் பிடிக்கும்
இந்த முரட்டுக் கயிறு
முகவரி :
மறக்கப்பட்டுவிட்ட ஒரு தொலைதூர கிராமம்
அதன் தெருக்களுக்கு பெயர்கள் இல்லை
கிராமத்து ஆண்கள்
வயல்களில் வேலை செய்கிறார்கள்
கல் உடைக்கிறார்கள்
இதில் உனக்கென்ன கோபம்?

எழுது
நான் ஒரு அராபியன்
எனது குடும்பத்தின் பழத்தோட்டத்தை
நானும் என் பிள்ளைகளும் உழும் என் நிலத்தை
நீ திருடிக் கொண்டாய்
எங்கள் பேரக் குழந்தைகளுக்காக
நீ விட்டுவைத்ததோ வெறும் பாறைகளே
நீ சொல்வது போல்
அவற்றையும் கூட
உனது அரசாங்கம் எடுத்துக்கொள்ளுமோ?

எனவே
எழுது
முதல் பக்கத்தில், முதலில் :
நான் யாரையும் வெறுப்பவன் அல்ல
யாருடைய நிலத்தின் மீதும் அத்துமீறி நடப்பவன் அல்ல
ஆனால் நான் பசியால் துடிக்கும்போது
எனது மண்ணை அபகரித்தவர்களின் சதையை
விழுங்குபவன் நான்
அச்சம் கொள்
எனது பசியைக் கண்டு.
அச்சம் கொள்
எனது சினத்தைக் கண்டு.

மஹ்மூத் தார்விஷ்

தமிழில் : .கீதா, எஸ்.வி.ராஜதுரை

கஃபியேஅரேபியர் அணியும் தலைப்பாகை

No comments:

Post a Comment