“என்னிடம் உள்ளதை உரித்தெடுத்து
என் தன்மானத்தைப் பறித்துச்செல்லப் பார்க்கிறார்கள்.
என் உள்ளத்தை வதைத்து
வெள்ளையனுக்கு ஒத்தூதும் குழலாக்க நினைக்கிறார்கள்.
ஆனால் என் ஆன்மா விற்பனைக்கல்ல.
நான் போராடப் பிறந்தவள்
அவர்களுக்கு நான் ஒரு சவால் !”
ஓயாது சுற்றிச் சுற்றி வட்டமிடும் குரல். வைரம் பாய்ந்த குரல். இது கறுப்பின பாடகி டிரேஸி சாப்மனின் குரல். அமெரிக்காவில் முப்பதுகளில் எழுந்த கறுப்புப் போராட்ட இசை
மீண்டும் பிறந்திருக்கிறது. இதில் முக்கிய பங்கு ட்ரேஸிக்கு உண்டு.
அமெரிக்காவில் இன்று காட்டுக் கூச்சல் போடும் இசையே எங்கும் பரப்பப்பட்டுள்ளது.
மைக்கேல் ஜாக்சன், ஓசிபிசா, போனி எம் குழுக்களுக்கு ஏராளமான விளம்பரங்கள். இதன் மத்தியில்
மக்களின் வாழ்க்கை குறித்த மதிப்போடு, அவர்களின் பிரச்சினை பற்றிய அக்கறையோடு பாடும்
ட்ரேஸி சாப்மன் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஒளி வீசுகிறார்.
பிரம்மாண்டமான மேடை, கண்ணை பொசுக்கும் அலங்கார விளக்குகள், மிகையான ஒப்பனைகள்,
எலெக்ட்ரானிக் ஜாலங்கள் இவைகளோடு தான் எல்லா ’பாப்’ வெறி இசைக் குழுக்களும் பாடுகின்றன,
ஆடுகின்றன. பார்வையாளர்கள் கூடவே வெறியாட்டம் போடுகிறார்கள். இந்த ஆர்பாட்டங்கள் டிரேஸியின்
நிகழ்ச்சிகளில் இல்லை.
இன்னும் டிரேஸி அவர்கள் கையில் அகப்படவேயில்லை
“எனக்கொரு விலை உண்டு என்று நினைக்கிறீர்கள்
இருப்பதை ஒரு விலைக்கு விற்பேன் என்று நம்புகிறீர்கள்
காசே கடவுள் மற்றது பொய் என்று அலறுகிறீர்கள்.”
என்று சாடுகிறார் டிரேஸி. அவர் எப்படி வலைகளில் அகப்படாமல் தப்பினார்? அவரது வாழ்க்கைத்தான் அவருக்கு கற்றுக்
கொடுத்த்து. அவர் வளர்ந்த ஏழை நீக்ரோ குடியிருப்பு அமெரிக்கச் சமுதாயத்தின் உண்மை முகத்தை
வெளிச்சம் போட்டுக் காட்டியது.
டிரேஸியின் தாய் அவருக்கு கஷ்டம் என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுத்தாள். தனது
குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். சுரண்டும், ஒடுக்கும் வெள்ளை
இன அடக்குமுறை பற்றி நிறைய சொல்லிக் கொடுத்தாள். நீக்ரோ குடியிருப்பில் டிரேஸி தான்
வாழ்ந்து அனுபவித்ததன் மூலம் அமெரிக்கா பற்றிய ஆரம்பப் பாடங்களை நேரடியாகவே கற்றுக்
கொண்டார்.
“அப்படியா, அப்படி ஓர் இடம் இருக்கிறதா?
ஒன்றும் தெரியாதது போல
பாசாங்கு செய்கிறார்கள்.
ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
அப்படி ஓர் ரகசிய உலகம் இருக்கிறது என்பதை
சகமனிதர்கள் உமிழும் கழிவிலும்
குப்பைக் கூளத்திலும்தான்
சிலர் வாழ்கிறார்கள் என்பதை
ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
அனுபவம் செரிந்த இந்தச் சொற்கள் டிரேஸிக்கு எங்கிருந்து கிடைத்தன? அவருக்கு முன்னால்
வாழ்ந்த கவிஞர்களிடம் எடுத்ததா? அகராதியில் முக்குளித்து அகழ்ந்தெடுத்ததா? அல்ல.
அதே குப்பை அழுகல் நிறைந்த நீக்ரோ சேரிகளில் வாழ்ந்த அனுபவமே பாடல்களாக வந்திருக்கிறது.
அமெரிக்க சமுதாயத்தை ஆள்கின்ற சுரண்டும் வர்க்கத்துக்கு கேள்வி எழுப்புபவர்களை
கண்டால் பிடிக்காது. அவர்களை ஒன்று மயக்கி விலை கொடுத்து வாங்கப் பார்க்கும். அல்லது
வெட்டிக் கொன்றுவிடும். சுட்டுத் தள்ளிவிடும். முப்பதுகளில் மெக்கார்த்தியிச அடக்குமுறை
இயக்கம் எழுந்து சோசலிசத்தை ஆதரித்த, கறுப்பர் விடுதலைக்கு குரல் கொடுத்த போராளிகளை,
கலைஞர்களை அமெரிக்க அரசு நரவேட்டையாடியது. அன்று முன்னிலையில் நின்ற நீக்ரோ போராளிப்
பாடகர் பால் ராப்சன்.
நன்றி : புதிய கலாச்சாரம் (ஆக-செப் 1990 இதழ்)
அவரது பள்ளிப்படிப்பு மற்றொரு தரப்பான வெள்ளையர் உலகத்தை அறிமுகப்படுத்தியது. ஏழைப்பெண்
ஒருத்தியை முதன்முதலாக அங்கே அவர்கள் சந்தித்தார்கள். ஏழ்மை, நிறப்பாகுபாடு பற்றி அறியாதவர்கள்
– “கறுப்பர் இனத்தில் பிறந்த நீ என்ன நினக்கிறாய்?” என்ற கேள்வியை கேட்டார்கள். தன்
நீக்ரோ இனத்துக்கு ஏற்பட்ட இழிவுகள் பற்றி, யார் இழிவை ஏற்படுத்தியதற்கு காரணமானவர்களோ
அவர்களிடமே விளக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு அவலத்தையும், அருவெறுப்பையும், எரிச்சலையும்
மூட்டியது. நிறவெறி அவரது கன்னத்தில் மாறி மாறி அறைந்தது. ’நீ நீக்ரோ, ’நீ நீக்ரோ’.
அதுவே அவரது அடிமனதில் அடுத்த கேள்வியையும் விதைத்து விட்டது: விடுதலை எப்போது?
“நீ
ஆடம்பர மோகத்தில்
பொருளாசையில் விழுந்து
கண்ணுக்கு தெரியாத ரத்தச்
சங்கிலிப் பிணைப்பைக்
காணத் தவறிவிட்டாய்!
அந்தஸ்தில் உயரப் பார்க்கிறாய்.
ஆனால் கீழே உன்னைச் சந்தையில் விற்கிறார்கள்
இது இன்னொருவகை அடிமைத்தனம்
மனிதன் படைத்த உலகம் முழுதும் வெள்ளையர் கையில்
அதுவே உனது எசமான் – இன்றும்”
நீக்ரோ இன விடுதலை என்ற லட்சியத்தில் தானே தன்னை புடம் போட்டு எடுத்துக்கொண்ட டிரேஸிக்கு
ஒரு பெரிய மன வருத்தம். டிரேஸி மட்டுமல்ல ; இந்த லட்சியத்துக்காக கலையை பயன்படுத்திய
பலருக்கு இதேபோன் ற மனவருத்தம் உண்டு.
யார் தங்களது கருத்துகளை கேட்க வேண்டுமென்று படைத்தார்களோ, அந்தச் சகோதரர்கள் ஆடம்பர
மோகத்தில் அடிமைப்பட்டு கானல் நீர் தேடி ஓடும் விலங்குகளாக அலைவதைப் பார்க்கிறார்கள்
; ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
இங்கே இந்தியாவில் இடஒடுக்கீட்டு உரிமையினால் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறிய சிலர்
கீழே உழலும் தன் சக மக்களை, அவர்களின் துன்ப துயரங்களை என்றென்றைக்குமாக மறந்துவிட்டு
புதுப் பார்ப்பனர்களாக மாறிவிடுகிறார்கள்.
இதுபோலவே தான் கறுப்பர் இன மக்களில் சிலர் சொந்த சங்கிலிப் பிணைப்பை மறப்பது
மட்டுமல்ல, வெள்ளை இன எசமானர்கள் தங்களுக்கு பூட்டுவது பூவிலங்கு, பொன் விலங்கென்று
விளக்கவும் தொடங்கி விட்டார்கள். இந்த அவலத்தில் விளைந்தது தான் டிரேஸி பாடல்களின்
ஆதங்கம், கோபம், அழுத்தம், சோகம், விம்மல், வெடிப்பு எல்லாம்.
அமெரிக்க இசை உலகத்தில் மன எழுச்சி உணர்வுகள் ஆபாசமான, பகட்டான, பசப்புணர்ச்சியாகி
விட்ட்து. வலுவும், பலமும் ஆரவாரமாகி விட்டது. நகைச்சுவை உணர்வு அற்ப உணர்வாகி விட்டது.
மொத்தத்தில் இசை முட்டாள் தனத்தின் உச்சக்கட்டமாகி விட்டது. நீக்ரோக்களின் வாழ்க்கையும்,
இசையும் சீரழிக்கப்பட்ட்தை கண்டு உள்ளம் கொதிக்கும் டிரேஸி அந்தக் கனவைத் தன் பாடல்
வரிகளுக்கு மாற்றிக் கொடுக்கிறார்.
தாய் வாங்கிக் கொடுத்த கிடாரை மீட்டிய இளம் விரல்கள் பள்ளி வயதிலேயே புரட்சியை
இசையாக்கித் தீட்டிப் பார்த்தன.
“புரட்சி ஒலி இதோ இந்தக் கணம்
உன் காதில் விழவில்லையா?”
1982-ல் டிரேஸி படித்த பள்ளியின் ஆண்டுக் குறிப்பில் இப்படி எழுதினார்கள். “டிரேஸி
சாப்மன் தன் கிடாரையே மணம் செய்துகொண்டு நீண்ட காலத்துக்கு இன்பமாக வாழ்க்கை நடத்துவார்.”
வாழ்க்கை – கலை இரண்டிலும் முரண்பாடில்லாத ஒற்றுமையை அடைந்த டிரேஸிக்கு எந்த இசை
அலங்காரமும் தேவைப்படவில்லை. 1989-ல் அமெரிக்காவின் மிக உயர்ந்த விருதான ‘கிராமி’ ப்
பரிசுகள் மூன்றினை அவர் வென்றார். டிரேஸியின் பாடல்களில் இசை கவர்ச்சியான ஒன்றாக இல்லாமல்
இயல்பான நாட்டுப்புற மக்கள் இசையாக வெளிப்படுகிறது
என்று பத்திரிக்கைகள் பாராட்டி எழுதின.
“என் உடமை அத்தனைக்கும்
ஒரு விலை உண்டென
பணமே வெல்லும் மற்றவை தோற்கும் என
நீங்கள் நினைக்கிறீர்கள்
போய் ஆன்மாவை விற்று
தோலைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் !
என்னுள்ளே எரியும் சுடரை நான்
காப்பாற்ற வேண்டும் – நான்
உயிர் வாழ்வது அதற்காகத்தான் !”
மற்றவர்கள் பெற்றிராத நேரடி அனுபவம் நீக்ரோக்களுக்கு உண்டு. ஏகாதிபத்திய சுரண்டல்
என்றால் என்ன என்பது அவர்களுக்கு மிக நன்றாக தெரியும். அவர்களை பொறுத்த அளவில் அது
எங்கோ தொலைவில் உள்ள தத்துவப் பிரச்சினை அல்ல. எந்த ஏகாதிபத்தியம் உலகெங்கிலும் உள்ள
பலகோடி காலனிய மக்களுக்கு வேலை கொடுப்பதில் பாரபட்சம் – வெள்ளையர் – கறுப்பர் என்கிற
பாகுபாடு – சனநாயக உரிமைகள் மறுப்பு என்ற முறைகள் மூலம் அடக்கி ஒடுக்கி ஆள்கிறதோ, அதே
முறைகளைத் தான் நீக்ரோக்கள் மீதும் காட்டுகிறது.” என்று சாடினார் பால் ராப்சன்.
அறுபதுகளில் இதேபோல வியட்நாம் ஆக்கிரமிப்புக்கு எதிராக கேள்வியெழுப்பி இஅயக்கங்களில்
பங்கெடுத்தார் அமெரிக்கப் பாடகி ஜோன்பெய்ஸ். பால் ராப்சன், ஜோன்பெய்ஸ் பாரம்பரியம்
டிரேஸி சாப்மனிடம் தொடர்கிறது. “அரசின் எச்சில் காசு வேண்டாம். தேவை மானத்தோடு வாழ
ஒரு வழி” என்ற பாடல் வர்ரிகள் ராப்சனின் தொடர்ச்சி.
வெறுமனே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கேள்வி கேட்டுவிட்டு போகிறவர்
அல்ல ட்ரேஸி. நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்யக்கோரும் இயக்கம், மனித உரிமைகள் இயக்கம்
போன்றவற்றில் நேரடியாக பங்கேற்றார். இந்தியாவுக்கு வந்து இசை நிகழ்ச்சிகள் நட்த்தியிருக்கிறார்.
என்னை விலை பேசாதீர்கள் என்று அவரே ஒதுங்கினாலும் அவரது குரலை அடக்கிவிடத் துடிக்கும்
அமெரிக்க ஆளும் கூட்டம் பல விசேஷ நபர்களை அனுப்பி பார்த்தது. கடுமையாக நடந்துகொண்டு
வெறிநாய்களை விரட்டுவதுபோல அவர்களை துரத்தியடித்தார். எளிமையான பாடலும் பாடுகிறார்.
கவிதைச் செறிவுள்ள பாடலும் பாடுகிறார். இதுவே டிரேஸியின் சிறப்பம்சம். சொல்கின்ற விஷயமே
அவருக்கு முக்கியம். பிரச்சினையை யார் விளங்கிக் கொள்ள வேண்டுமோ அவர்கள் விளங்கிக்
கொள்ளும் விதத்தில் அவர் பாடல்களை அமைக்கிறார்.
டிரேஸி தனது பாடல்களில் சொற்களை தெளிவாக உச்சரிக்கிறார். மேற்கத்திய இசைப்பாடகர்கள்
அநேகரிடம் இல்லாத சிறப்பம்சம் இது. எனவே தான் டிரேஸியின் இசைப்பாடல் பால் ராப்சன்,
ஜோன்பெய்ஸ் போல தெளிவாக இருக்கிறது. மிக வலுவான செய்தி இருப்பதால் தான் ’சுவருக்கு
பின்னே’ (Behind The Wall) என்கிற பாடலை எந்த பின்னணி இசையுமில்லாமல், தனது கிடாரைக்
கூட மீட்டாமல் பாடியிருக்கிறார்.
ட்ரேஸி சாப்மனின் பாடல்களை கேட்பது ஓர் ஆழ்ந்த அனுபவம். அந்தந்த உணர்ச்சிகளுக்கு
ஏற்ப இசையை குழைத்து அவர் சித்திரம் தீட்டுவதை
பலமுறை கேட்க வேண்டும். இணர்ச்சிகளும், இசைவடிவமும் ஒன்றாக கலந்து விடுகின்றன.
‘உனது பதிலுக்கு காத்திருக்க நேரமில்லை
நான் சொல்வதை கேட்கத் தயாரென்றால்
எவ்வளவு நேரமும் காத்திருப்பேன்”
என்று இதயத்தை தொட்டுப்பேசும் லாவகம் ;
“பளபளக்கும் ஆப்பிளுக்கு ஆசைப்படாதே
அது கசப்பான பழமாக இருக்கக்கூடும்
நியாயமான ருசிக்கு மட்டும் பசித்திரு
ஏனெனில் உனக்கிருக்கும் சொத்து
உன் ஆன்மா மட்டுமே !”
என்று பல பாடல்களில் ஊடாடும் அடிநாதமான செய்தி.
இப்படிப் பலப்பல உணர்ச்சிகளை டிரேஸி அடுக்கடுக்காய் தந்து நம் சிந்தனையில் தீமூட்டுகிறார்.
கீழை ஜெர்மானிய மார்க்சிய இசை அறிஞர் ஐஸ்லர் கூறுவது போல ஒரு புதிய இசை அமைப்பாளனுக்கு
இரண்டே இரண்டு பாத்திரங்கள் மட்டும் உண்டு. ஒன்று : இன்றுள்ள சுரண்டும் சமூகத்தின்
மேல் ஒட்டிக்கொண்டு அதன் ஜீவரசத்தை உறிஞ்சிக் கொழுத்து ஆள்பவரோடு கூட்டுச் சேர்ந்து
உல்லாசமாக வாழ்வது : மற்றது ஒரு ஒரு புரட்சிகர இசைப்போராளியாக வாழ்வது.
டிரேஸி சாப்மன் ஒரு அமெரிக்க கறுப்பின இசைப் போராளி. அந்த வகையில் பாடகியும், கவிஞருமான
டிரேஸி சாப்மன் உலகின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் போராடும் – ஒடுக்கப்படும் மக்களுக்கு
கிடைத்துள்ள வலுவான போர் ஆயுதம்.
நன்றி : புதிய கலாச்சாரம் (ஆக-செப் 1990 இதழ்)
No comments:
Post a Comment