அறிமுகம்
ஸ்பானிய உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில், 26 ஏப்ரல் 1937 பிற்பகல் 4:40 மணிக்கு தளபதி ஃபிராங்கோவிற்கு உதவியாக வந்த நாஸி குண்டு வீச்சு போர் விமானங்கள் வட ஸ்பெயினிலுள்ள பாஸ்க் இனத்தவரின் வரலாற்றுச் சிறப்புள்ள தலைநகரான குவர்ணிக்காவை அழித்தன. இப்பயங்கர குண்டுவீச்சு ஆயிரக்கனக்கான மக்களை கொன்றொழித்தது. இதைத் தொடர்ந்து உலகெங்கும் எழுந்த கண்டனக் குரலின் எதிரொலி இன்னமும் அடங்கி விடவில்லை. இக் குற்றத்தை வன்மையாக கண்டிப்பதற்காக பாப்லோ பிக்காஸோ கலையை பயன்படுத்தியபோது ’குவர்ணிக்கா’ எனும் மாபெரும் போர் எதிர்ப்பு ஓவியம் பிறந்தது.
’குவர்ணிக்கா’ ஓவியம்
பாரிஸில் 1937 இளவேனில் இறுதியில் தொடங்கவிருந்த பன்னாட்டு கண்காட்சியில், ஸ்பானிய
அரங்கிற்காக பெருந் திரையோவியம் அல்லது சுவரோவியம் ஒன்றை தீட்டுவதற்காக ஸ்பானிய அரசு
அவ்வாண்டு ஜனவரியில் பிக்காஸோவை நியமித்தது.
ஜனவரி 8-ல், 9 செவ்வக கட்டங்களை கொண்ட பன்முக செதுக்கு சித்திரத் தட்டம் ஒன்றை
பிக்காஸோ தயாரித்தார். ஒவ்வொரு கட்டமும் ஒரு நீதிக்கதையை சித்தரித்தது. இது ஒரு கேலிச்சித்திரம்
என்பதை குறிக்கும் வகையில் இதற்கு ”ஃபிராங்கோவின் கனவும் பொய்யும்” எனப் பெயரிட்டிருந்தார்.
அதில் நாட்டுப்படம், எருது, பறக்கும் குதிரை ஆகியவை மட்டுமே கேலிச்சித்திரமாக செதுக்கப்படவில்லை.
அன்றே இரண்டாம் தட்டம் ஒன்றை செய்யலானார். இதனையும் 9 செவ்வகங்களாக பகுத்தார்.
ஒரு கட்டத்தை அன்றே நிரப்பினார். மறுநாள் மேலும் இரண்டை பூர்த்தி செய்தார். மற்ற 6
கட்டங்களையும், ‘குவர்ணிக்கா’ ஓவியம் முடிவுறும் போதோ அல்லது அதன் பின்போ நிறைவு செய்தார்.
முதல் தட்டத்தில் போலவே, இதிலும் பிரதான உருவமாக எருது விளங்கியது. இவ்வுருவத்தை இவர்
ஜனவரி 9-ல் வரைந்தார்.
நாட்கள் சென்றன. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் கடந்தன. ஏப்ரலில் பெரும்பகுதி
சென்றுவிட்டது. பிக்காஸோ தான் ஏற்ற பணியை தொடவில்லை. இதற்கு தேவையான அகத்தூண்டல் ஏற்படவில்லையோ
அல்லது ஏற்ற கருப்பொருள் கிடைக்கவில்லையோ எனத் தோன்றியது. திடீரென 1937 ஏப்ரல் 26-ல்
ஃபிராங்கோவின் இசைவுடன் நாஜி விமானப்படை குவர்ணிக்கா நகரின் மீது குண்டு வீசித் தாக்கியது.
உலக வரலாற்றிலேயே, முதலாவது சர்வாதிகார குண்டு வீச்சு இதுவேயாகும். இக்கொடுந்தாக்குதல்
பற்றிய தமது புனையா ஓவியங்களை மே 1 அன்று பிக்காஸோ வரைந்தார்.
ஸ்பானிய உள்நாட்டுப் போர் ஏற்கனவே 9 மாதங்களாக நடந்து கொண்டிருந்தது. ஆராகோன் முனையில்
கடும்போர் நடந்தது. மாட்ரிட் முற்றுகை பயங்கரமாக நிகழ்ந்தது. பிப்ரவரி 13-ல் பிக்காஸோ
ப்றந்த ஊராகிய மாலகாவினுள் ஃபிராங்கோவின் படைகள் புகுந்தன. அப்போதெல்லாம் வாளாவிருந்த
பிக்காஸோ, குவர்ணிக்கா குண்டுவீச்சால் மட்டும் ஏன் அகத்தூண்டல் பெற்றார்?
ஓரேயொரு காரணம் தாம் எனக்கு புலனாகின்றது. ஆரோகான் சண்டையையும், மாட்ரிட் முற்றுகையையும்,
மாலகா வீழ்ச்சியையும் பல உயிர்களை பலி கொண்டது உண்மை தான். எனினும் அவையெல்லாம் சகோதரச்
சண்டை தான். ஆனால் குவர்ணிக்காவில் பாதுகாப்பற்ற அப்பாவி குடிமக்கள் மீது ராட்சத பலம்
கொண்ட ராணுவம் குண்டு வீசித் தாக்கியது. இக்கொடுமை கண்டு பிக்காஸோவின் தார்மிக உணர்வு
கிளர்ந்தெழுந்தது. அவருள் வெகுண்டெழுந்த ஆவேசம் ‘குவர்ணிக்கா’ ஓவியத்தை தீட்டத் தூண்டியது.
இந்த ஓவியத்தை வரைவதற்கு நான்காண்டுகளுக்கு முன்பு, தமது சொந்த வாழ்வை பிரதிபலிக்கும்
வகையில் மத்திய தரைக்கடல் பகுதிப் புராண நிகழ்ச்சிகளை அவர் ஓவியங்களாக்கினார். இவற்றில்,
“மினேட்டார்” என்ற மனிதக் காளையுருவப் பிராணி வாயிலாக தம் சொந்த வாழ்வின் பற்பல ரகசியங்களை
வெளிப்படுத்தினார். வல்லார்டு என்ற ஓவிய விற்பனையாளரின் கலைக்கூடத்திலுள்ள இவரது செதுக்கு
சித்திரங்களிலும் இந்த ரகசியங்களுல் சிலவற்றை காணலாம். இவர் 1933-ல் உருவாக்கிய மாபெரும்
‘மனிதக் காளை” செதுக்கோவியம், இவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளின் சங்கமமாக திகழ்கின்றது.
இவர் தமது மனைவி ஆல்காவை பிரிந்ததும், 1927 முதல் இவர் ஏற்கனவே காதல் கொண்டிருந்த மேரி
தெரசாவால்டெர் மூலம் இவருக்கு மாய்வா என்ற மகள் பிறந்தது, குறியீட்டு மொழி வாயிலாக
இந்த ஓவியத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
‘குவர்ணிக்கா’ ஓவியத்தை வரைவதற்கு சற்றுமுன் (1937 நவம்பர் 12) ‘கடலோரம் விளையாடும்
சிறுமியர்’ என்ற ஓவியத்தை தீட்டினார். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, மனித வடிவங்களை
எலும்பு போன்ற உருவங்களாக சித்தரிக்க தொடங்கியிருந்தார். இந்த ஓவியத்தில் அந்த உத்தி
முழுமை பெற்றுள்ளது. இந்த நவீனக் கலவை பாணியும், அகவாய்மை பாணியும் இணைந்துள்ளது.
மகள் மாய்வாவை மகிழ்விக்க1937 ஏப்ரல் முதல் இவர் சிறுவர் ஓவியங்களை தீட்டலானார்.
எலும்பு போன்ற உருவங்களும், சிறுவர் சித்திரங்களும் சுவரோவியங்களில் காணப்படுகின்றன.
முதல் வகை உருவங்களைக் குதிரையின் கழுத்திலும், இரண்டாம் வகையை வாய்பிளந்து நிற்கும்
பறவையிலும், வாத்திலும் காணலாம்.
‘குவர்ணிக்கா’விற்கு முன், பிக்காஸோவினுடைய கலைமொழியின் அடிப்படையாக குறியீடுகள்
அமைந்திருந்தன. இயற்கையை இன்னும் எளிதாகவும், நேரடியாகவும் அணுகுவதற்கும், தாம் வெளிப்படுத்த
விரும்பிய அவலத்தை மேலும் இயல்பாக சித்தரிக்கவும் இக்குறியீடுகளை அவர் கைவிட நேர்ந்தது.
இதற்கு முன்னர் ஒரு பெண் அல்லது ஏதேனும் நிகழ்ச்சி தம்மை பாதித்த போது பிக்காஸோவிடம்
உண்டான அகத்தூண்டல், அவரிடம் புதியதொரு பாணியை – உத்தியை உருவாக்கத் தூண்டியிருக்கிறது.
இப்போது அவ்விதம் செய்யாமல், பண்டைய மரபினை அவர் நாடியிருக்கிறார். இதற்கு அழகியல்
நோக்கங்களை விட அறிவியல் நோக்கங்கள் இவரை ஆட்கொண்டதே காரணமாகும். இச் சமயத்தில் பிக்காஸோவிடம்
குமுறியெழுந்த ஆத்திர உணர்வு, புதிய பாணியைப் பற்றியோ, அழகியல் குறித்தோ இவரை சிந்திக்க
விடவில்லை. தமது சீற்றத்தை ஆழமாகவும், அழுத்தமாகவும் வெளிப்படுத்துவது தம் கடமை என
எண்ணினார். அதன் விளைவாக ‘குவர்ணிக்கா’ பிறந்தது. இவ்வாறு ஒருவிதக் கட்டுப்பாட்டிலிருந்து
இந்த ஓவியம் தோன்றினாலும், வேறெங்கும் காணவியலாத ஆழ்ந்த உணர்ச்சியும், உறுதிப்பாடும்
இதில் காணப்படுகின்றது.
குறியீடுகள் மூலம் பிக்காஸோ தம் ஆளுமையை வெளிப்படுத்தினார். எனவே இவரது ஓவியங்களில் இக்குறியீடுகள் மிகுதியாக காணக் கிடைக்கின்றது. இவர் மே 1-ல் தொடங்கிய புனையா ஓவியங்களில் இக்குறிப்பு மொழியின் அம்சங்கள் காணப்படுகின்றன. இக்குறிப்பு மொழியினைச் சிரமத்துடனேயே பிக்காஸோவினால் விளக்க இயலும். எருதினை ஸ்பானிய மக்களாகவும், குதிரையை பாசிசமாகவும் சித்தரிக்க எண்ணிய பிக்காஸோ, இதற்கு எத்தனை சிரமப்பட்டிருக்கிறார் என்பதை இந்த ஓவியமே உணர்த்துகின்றது.
குறியீடுகள் மூலம் பிக்காஸோ தம் ஆளுமையை வெளிப்படுத்தினார். எனவே இவரது ஓவியங்களில் இக்குறியீடுகள் மிகுதியாக காணக் கிடைக்கின்றது. இவர் மே 1-ல் தொடங்கிய புனையா ஓவியங்களில் இக்குறிப்பு மொழியின் அம்சங்கள் காணப்படுகின்றன. இக்குறிப்பு மொழியினைச் சிரமத்துடனேயே பிக்காஸோவினால் விளக்க இயலும். எருதினை ஸ்பானிய மக்களாகவும், குதிரையை பாசிசமாகவும் சித்தரிக்க எண்ணிய பிக்காஸோ, இதற்கு எத்தனை சிரமப்பட்டிருக்கிறார் என்பதை இந்த ஓவியமே உணர்த்துகின்றது.
இதில் குதிரை மட்டும் தான் சிக்கலான உருவமாகும். இதனை நகைச்சுவையாக அல்லது குழந்தைத்தனமாக
சித்தரிக்க திட்டமிட்டார். பின்னர் குதிரையை பரிதாபமாக உருவகிக்க நேர்ந்தபோது, இளமையில்
தாம் குதிரையினை இளமைத்துடிப்பின் சின்னமாக சித்தரித்ததை நினைவுகூர்ந்தார். அதனால்
குறியீடுகளை உதறிவிட்டு, அலங்காரமற்ற நிர்வாண உருவங்களையே வரைந்தார். ஸ்பானியர் நன்கறிந்த
எருதையும், குதிரையையும் தமது ஓவியத்தில் பிரதான பாத்திரங்களாக்கினார்.
இவருடைய இப்போக்கு இரு அம்சங்களில் முக்கியமானதாகும். இவரது கடந்த காலம், பல வெற்றிகளை
குவித்த பொற்காலம் (நீலப் பருவம், சிவப்புப் பருவம், கலவை ஓவியப் பருவம், வளைவடிவக்
கலை முதலிய பல சாதனைகள் இதில் அடங்கும்). தாம் போராடிய நோக்கத்திற்காக தமது திறன் முழுவதையும்
அர்ப்பணிக்க இவர் விரும்பினார். எனவே குவர்ணிக்காவின் நாசத்திற்கு தமது திறன் அனைத்தையும்
ஈடாக அளிக்க முன்வந்தார்.
இதில் எருதும் குதிரையும், எதிரிகளாக சித்தரிக்கப்படவில்லை. இறுதி ஓவியத்தில் எல்லா
உருவங்களுக்குமே ஒரே கதி தான். பலியாகும் முடிவு தான் ஏற்படுகின்றது. ஆனால் குதிரைக்கு
மட்டும் முதலில் குறிக்கப்பட்டிருந்த அதே முடிவு தான் இதிலும் ஏற்படுகின்றது. ‘குவர்ணிக்கா’
ஓவியத்தின் அடிப்பக்கம் அடைப்பட்டுள்ளது ; வலது – இடது பக்கங்களுக்கு எல்லைக்கோடுகள்
உள்ளன. மேற்பக்கம் திறப்பாக உள்ளது. எருதின் கொம்பு மற்றும் வால் வீழ்கின்றன. பெண்ணின்
கைகள், குதிரையின் கனைப்பு, எண்ணெய் விளக்கேந்திய பெண் ஆகிய அனைத்து அம்சங்களும், ஏதாவதொரு
வழியில் உச்சியை நோக்கிப் பல இடைவெளிகளை அல்லது திறப்புகளை உண்டாக்க உதவுகின்றன.
இக்கொடுமைக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கிய விமானங்கள் திரைச்சீலைக்கு வெளியே கண் மறைவான
இடத்தில் இருப்பதாக உணர்கிறோம். இரண்டாவது புவியீர்ப்பு மையம் ஒன்றை இந்த அம்சங்கள்
அனைத்தும் இந்த ஓவியத்திற்கு அளிக்கின்றன. அவ்வகையில் இத்திரையோவியம் மேலே மேலே உயர்ந்து
சென்று, உண்மையில் செவ்வக வடிவிலிருந்தாலும், இதன் அளவு விகிதங்கள் மேல் நோக்கிய உந்து
விசையால் அகவுணர்வின்படி சமச்சீருடையதாகவும், எல்லை கடந்ததாயும் அமைந்துள்ளன.
அனைத்திற்கும் மேலாக ‘குவர்ணிக்கா’வின் ஓவியக் கலைப் பண்புகள், அதனை இன்றைய வாழ்வுக்கு
பெரிதும் இயல்புடையதாக்குகின்றன. உண்மையில் இந்த இயல்பு காரணமாகத் தான் இந்த ஓவியம்
தலைசிறந்த கலைப்படைப்பாக போற்றப்படுகின்றது.
’குவர்ணிக்கா’ ஓவியம் ஆரம்பக் கட்டத்தில் இருந்தபோது எடுத்த நிழற்படம்
முட்டிக்கையை மேலே தூக்கிய நிலையில் சித்தரிக்க பிக்காஸோ முதலில் எண்ணியதை, இவர்
மே 9-ல் வரைந்த புனையா ஓவியத்தின் முதலிரு கட்டங்களின் நிழற்படங்களும் காட்டுகின்றன.
முட்டிக்கை தனிச்சிறப்பு வாய்ந்தது. ஓவியம் சித்தரிக்கும் கொடுஞ்செயலுக்கு ஆண்டவனின்
மன்னிப்பு அறவே இல்லை என்பதை இது குறிக்கிறது. பழிக்குப் பழி வாங்கும்படி இறைவனை இது
இறைஞ்சுகின்றது. காட்டுமிராண்டித் தனமான அட்டூழியத்தினால் கொடும் துயருக்குள்ளான அப்பாவி
மக்களின் அபயக் குரலை இப்படைப்பு எதிரொலிக்கின்றது. ’குவர்ணிக்கா’ ஓவியம் பிக்காஸோவின்
‘ஒப்பாரி’ பாடலாகவே எனக்கு தோன்றுகிறது. இதன் சில அம்சங்களும், இதன் வாயிலாக எதிரொலிக்கும்
அவலக் குரல்களும், நெஞ்சைப் பிளந்திடும் அண்டலூசியச் சோக இசையின் சித்திர வடிவமாக இதனைக்
காட்டுகின்றன. ஓவியரின் குழந்தைப் பருவத்திலிருந்து மட்டுமின்றி, அதற்கு முன்பு இவரது
மூதாதையரிடமிருந்து வழிவழியாக வந்து இவரிடம் குடிகொண்ட ஆழ்ந்த பண்பாட்டுப் பின்னணி,
தக்க தருணத்தில் வெளிப்பட்டு, இவரது கடந்த கால ஓவியத் திறனுடன் இரண்டறக் கலந்து ‘குவர்ணிக்கா’
ஓவியமாக உருவெடுத்தது.
பிக்காஸோவின் இந்த ஓவியத்தை முழுமையாகக் காணும்பொழுது, இதனை
இருபதாம் நூற்றாண்டு மனிதனின் உருவமாகவே நான் காண்கின்றேன். ஏனென்றால் இது மனித குலத்தின்
பல்வேறு பாணிகளையும், பருவங்களையும் தழுவி நிற்கின்றது. தங்களது சமயம், வாழ்க்கை முறை,
சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், மொழி, நிறம், பண்பியல்புகள் அனைத்தாலும்
முற்றிலும் மாறுபட்டுள்ள வேறு மக்களும் உலகில் வாழ்கின்றார்கள் என்பதை இன்றைய உலக மக்கள்
நன்கு உணந்திருக்கின்றார்கள். இத்தகைய வேற்றுமையிலிருந்து எழும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு
இரண்டு வழிகள் தான் உண்டு. ‘நான் செய்வது தான் சரி ; மற்றவர் செய்வதெல்லாம் தவறு’ என்று
ஒவ்வொரு மனிதனும் நினைத்தால், தீராத பூசல்கள் தான் மிஞ்சும். ‘மற்ற்வர்களின் வாழ்க்கை
முறையும் நம்முடையதைப் போல் சிறந்தது தான் ; நாமும் வேறிடத்தில், வேறு சூழ்நிலைகளில்
பிறந்திருந்தால், நாம் பகைவர்களாக கருதுகின்ற அப்பகுதி மக்களின் மனப்பான்மை தான் நம்மிடமும்
குடிகொண்டிருக்கும்’ என்ற உண்மையினை உணர்ந்து, சகிப்புணர்வையும், நல்லெண்ணத்தையும்
வளர்த்துக் கொள்வது தான் இதற்கு மாற்று வழி. வேற்றுமையினுள் ஒற்றுமையைக் கண்டு, மனித
வேறுபாடுகளையும், முரண்பாடுகளையும் இயன்ற வரையில் பிக்காஸோ இந்த ஓவியத்தில் சித்தரித்திருப்பதாக
நம்புகின்றேன்.
ஓவியர் என்ற முறையில் பிக்காஸோவின் கடந்த காலக் கலைத்திறனுக்கு ஒரு தொகுப்புரையாக
‘குவர்ணிக்கா’ திகழ்கின்றது. இதில் சித்தரிக்கப்பட்டுள்ள மாறுபட்ட பாணிகளும், பருவங்களும்,
மிகவும் எதிரிடையான நுட்பங்களும் கூட சக வாழ்வு கொண்டு ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்க
இயலும் என்ற அரிய உண்மையை உணர்த்துகின்றன. எனவே ‘குவர்ணிக்கா’ ஒரு போர் ஓவியம் மட்டுமன்று
; அது மானுட சகவாழ்வை போதிக்கும் நீதி ஓவியமாகும். பிக்காஸோ கொண்டிருந்த அதே மனோதிடமும்,
உணர்ச்சியும் கொண்டிருந்ததால் தான், இதைப்போன்ற ஒத்திசைவான ஓவியத்தில் இத்தகைய சுமூக
உணர்வினை கொணர்ந்திட இயலும் என்பதையும் இது அறிவுறுத்துகின்றது. இந்த உணர்ச்சிக்கு
பெயர் தான் அன்பு. அவதியுற்றவர்கள் மீதான – கொடூரமாக கொல்லப்பட்டவர்களின் மீதான – அபிரீதமான
அன்பு காரணமாகவே, இவர் சாகாவரம் பெற்ற ‘குவர்ணிக்கா’ என்னும் இந்த அற்புதப் படைப்பினைத்
தீட்டினார்.
ஜோசப் பலாவ் இ ஃபேபர் (Josep Palau i Fabre)
ஸ்பானியக் கவிஞர், கட்டுரையாளர், நாடக ஆசிரியர், பிக்காஸோவின் நண்பர், பிக்காஸோ
படைப்புகள் குறித்த நூல்களை வெளியிட்டுள்ளார். இக்கட்டுரை பிக்காஸோ பற்றிய மாநாட்டில்
வாசிக்கப்பட்டது.
தமிழில் : இரா.நடராசன்
No comments:
Post a Comment