அவளிடம் நான் ஒரு
பூவைக் கொடுத்தேன்
அவள் அதைத்
தீப்பொறியாக மாற்றினாள்
அதன் நறுமணம் சீறியெழுந்து
ஒளிப்பிழம்பாகக் கனன்றது
அதன் மென்மை
என் முகத்தில் காறி உமிழ்ந்தது
அவள் சொன்னாள் ;
“ எழுதுங்கள் தீ ”
படிப்பறிவில்லா சில
தொழிலாளர்கள்
வயல்களில் நாள் முழுதும்
பாடுபட்ட களைப்போடு
தலைகளைச் சாய்த்துக் கொண்டு
தமது கரும்பலகைகளில்
எழுதுகுச்சிகளால்
தட்டுத் தடுமாறி எழுதினார்கள்
” தீ “
மீண்டும் அவள் சொன்னாள் ;
“ இன்னொரு தடவை தெளிவாக
எழுதுங்கள் – தீ
“
தலைகளைச் சாய்த்துக் கொண்டு
அவர்கள் எழுத ஆரம்பித்தார்கள்
இம்முறை
அதிக நம்பிக்கையோடு
கரும்பலகைகளின் மேல்
நகரும்
அவர்களின் விரல்கள்
தீச்சுடர்களாக மாறியதை
நான் கண்ணுற்றேன்.
அந்த சொல்லை
எழுதி முடித்தபோது
அவர்களுடைய கைகள்
தீப்பந்தங்களாக
ஒளிர்ந்து கொண்டிருந்தன.
“ இதோ உங்களுக்கு தேவையானால்
இப்போது எடுத்துக் கொள்ளுங்கள் “
சொல்லிக்கொண்டே அவள்
அந்தப் பூவைத் திரும்ப
என்னிடம் கொடுத்தாள்.
No comments:
Post a Comment