Wednesday, 12 March 2025

பறவை நோக்குதல் எனும் ரசனையான பணி

ராஜேந்திரன்






பறவை என்பதை இப்படி எளிமையாக விளக்கலாம். உலகிலேயே சிறகு உடைய பிராணி பறவைதான். நமது பெருவிரல் பருமனே உள்ள மிகச் சிறிய ரீங்காரப் பறவை முதல், குதிரை அளவு உயர்ந்து நிற்கும் மிகப் பெரும் தீக்கோழி வரை பறவைகளில் பலவகை உண்டு. பறவைகளைப் பார்த்து ரசிக்க கண்களே போதும். இருப்பினும் பறவை இனங்களின் தனித்தன்மைகளை உணர பறவை நோக்குதல் மிக அவசியமாகிறது. பறவையை பார்த்து ரசித்து பழக மூன்று முக்கிய கருவிகள் தேவை.

1. பைனாகுலர் எனும் தொலைநோக்கி

2. இரண்டு குறிப்பு புத்தகம்

3. பறவைகளை கண்டுபிடிக்கும் கைநூல்.

தூரத்தில் இருக்கும் பறவைகளை தெளிவாக நெருக்கத்தில் காட்டக் கூடிய பைனாக்குலர் தேவை. பறவை இனங்களை பார்த்து ரசிப்பவர் முதலில் சில நாட்களுக்காவது உடனுக்குடன் பார்த்து தெரிந்து கொள்ளும் துணை நூல் ஒன்றை பயன்படுத்த வேண்டும். அதற்கு உதவியாக இருக்கக்கூடிய சில புத்தகங்கள் :

விஸ்லரின் 'இந்திய பறவைகளின் கையேடு' ( Popular and book of Indian birds)

சலீம் அலியின் 'இந்தியாவின் பறவைகள்'

ஒரு பறவையை இனஞ்சுட்ட வேண்டுமெனில் நாம் பார்த்த பறவையின் பருமன், நிறம் ஆகியவற்றை மனதில் நிறுத்தி பழக வேண்டும். நாம் பார்த்தது வெள்ளையும் கருப்பும் கலந்த பறவை என வைத்துக் கொள்வோம். அதன் எந்த. பாகம் வெள்ளை? - தலையா? இறக்கையா? வாயா அல்லது அடிபாகமா? அதன் அலகின் உருவம், நிறம் அவற்றை உடனே கூர்ந்து பார்த்துக்கொள்ள வேண்டும். அது போலவே அதன் காலின் நீளம், வாலின் அமைப்பு, தலையில் கொண்டை அல்லது எழும்பிய சிறகுகள் என எல்லாவற்றையும் உடன் நோக்கி பதிவு செய்ய வேண்டும்.

               

ஒரு பறவை இலைகளுக்குள் மறைந்து பறந்து விடுகிறது என வைத்துக் கொள்வோம். அப்போது அந்தப் பறவை பற்றிய எல்லா விவரங்களையும் நாம் கவனித்திருக்க மாட்டோம். எனவே ஒன்றிரண்டு முக்கிய பண்புகளை மட்டும் விரைவாக மனதில் பதிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது. நாம் ஞாபகத்தில் பலவற்றை வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கலாம். ஆனால் இரண்டு மணி நேரத்தில் பல நுண்ணிய குறிப்புகள் நிறங்கள், அளவு போன்றவை மனதில் இருந்து நீங்கி விடுவது சாத்தியம் இருப்பதால் அவற்றை அவ்வப்போது குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பெடுப்பதற்கான சிறு நோட் புத்தகம் ஒன்றும் பேனாவையும் கொண்டு செல்வது நல்லது.

ஒரு பறவையை வெகு நேரம் கவனிக்க வாய்ப்பு கிடைத்தால் அதை பற்றிய பல குறிப்புகளை பறவையை பார்த்து பார்த்து விரிவாக உடனே குறிப்பேட்டில் குறித்துக் கொள்வது நல்லது. 

பறவையின் கூப்பிடு குரல் அல்லது பாடும் தன்மை மற்றொரு அடையாளமாகும். ஆனால் இது எல்லா பறவைகளிலும் சுலபமாக எழுதக்கூடியது அல்ல. இருப்பினும் நீண்ட விசில், குவாக், குவாக் சத்தம் பறக்கும்போது ’கிளிக்’ என ஒலி எழுப்புதல் என சில ஒலிகளை குறிப்பெடுக்கலாம்.

புத்தகங்களும் படங்களும் பறவைகளின் நிறங்களை தனியாக காட்டினாலும் முதலில் பறவை பார்ப்பவர்கள் எல்லா நிறங்களையும் கண்டு கொள்வதில்லை. அதற்கு பழக்கம் தேவை. மிகப் பிரகாசமான சூரிய வெளிச்சத்திலும் சில குறிப்பிட்ட கோணங்களிலும் சில நிறங்கள் வேறு விதமாக காட்சியளிக்கலாம். அதனாலேயே நிறங்களை மட்டும் வைத்து பறவைகளை  இனஞ்சுட்ட நினைக்காமல் வேறு ஒன்றிரண்டு பண்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

பறவை நோக்குதலில் சிறிது பழக்கப்பட்ட பின் ஒரு பறவை பார்த்த மாத்திரத்தில் அது தெரியாத பறவையாக இருந்தாலும் கூட இன்ன குடும்பத்தை சேர்ந்தது என சொல்லிவிட முடியும். பறவையை பார்ப்பதில் ஈடுபடுகிறவர்கள் எல்லோருமே புதிய சாதனைகளை உண்டு பண்ணிவிட முடியும் என நினைப்பது தவறு. அது சாத்தியமும் அல்ல.

ஆனால் பல நாள் பறவை பார்ப்பதில் ஈடுபட்ட பிறகு பறவைகள் மீது உண்டாகும் நெருக்கமும், ரசிக்கும் தன்மையுமே ஒரு நிலையான பரிசு போல ஆகி மனதுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய ஒன்றாக மாறிவிடும்..

ஷேக்ஸ்பியரின் பறவைகள்






ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில் 74 விதமான பறவைகளைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் என்கிறார்கள்.

Blackbird, Bunting, Buzzard, Chough, Cock, Cormorant, Crow, Cuckoo, Dive-dapper, Dove and Pigeon, Duck, Eagle, Estridge, Eyas-musket, Guinea-hen, Handsaw Falcon and Sparrowhawk, Finch, Goose, Hedge Sparrow, House Martin, Jackdaw, Jay, Kite, Lapwing, Lark, Loon, Magpie, Nightingale, Osprey, Ostrich, Owl, Parrot, Partridge, Peacock, Pelican, Pheasant, Quail, Raven, Robin, Snipe, Sparrow, Starling, Swallow, Swan, Scamels Thrush, Turkey, Vulture, Wagtail, Woodcock and the Wren. 

என நீள்கிறது இந்தப்பட்டியல்

இந்தப் பறவைகளை அடையாளம் கண்டு  The birds of Shakespeare  எனத் தனியே தொகுத்திருக்கிறார் Archibald Geiki.

நூறு ஆண்டுகளுக்கு முன்பாக  ஷேக்ஸ்பியர் ஆர்வலரான Eugene Schieffelinஷேக்ஸ்பியர் குறிப்பிட்டுள்ள பறவைகள் அத்தனையும் அமெரிக்காவிற்கு தேவை என்று முடிவு செய்து தனது சொந்தப் பணத்தில் அவற்றைச் சேகரித்து அமெரிக்காவில் உள்ள தேசியக் காப்பகங்களில் பறக்க விட்டிருக்கிறார், அவை இன்று பல்கிப் பெருகி அமெரிக்காவெங்கும் வசிக்கின்றன, இலக்கியத்தின் மீதான ஈடுபாடு எப்படியான செயல்முறையாக மாறுகிறது பாருங்கள்.

இன்று ஷேக்ஸ்பியர் குறிப்பிட்ட பல பறவை இனங்கள் அழியும் நிலையில் இருக்கின்றன, அதில் முக்கியமானது குருவிகள், 1852ம் ஆண்டு தான் குருவிகள் ஆஸ்திரேலியாவிற்கு அறிமுகமானது என்கிறார்கள், வடஅமெரிக்காவிற்கு Schieffelin1851ல் வீட்டுக்குருவிகளை அறிமுகம் செய்திருக்கிறார்.

Hamlet, As You Like It, The Tempest ,Troilus and Cressida ஆகிய நான்கு நாடகங்களிலும் குருவிகள் பற்றி ஷேக்ஸ்பியர் எழுதியிருக்கிறார்.

இதில் ஹாம்லெட்டில் there is special providence in the fall of a sparrow [Hamlet - V, 2]. என்ற புகழ்மிக்க வரி இடம் பெற்றுள்ளது, இது பைபிளில் வரும் மத்தேயு சொல்லும் குருவி பற்றிய வரிகளின் நினைவில் எழுதப்பட்டிருக்கிறது.

ஷேக்ஸ்பியர் போல எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்கள் படைப்பில் இடம்பெற்றுள்ள பறவைகளையும் தனியே தொகுக்கலாம், அவ்வளவு எழுதியிருக்கிறார், கரிசல்காட்டில் வாழும் பறவைகளின் உலகம் பற்றி முழுமையாக எழுத்தில் பதிவு செய்திருப்பவர் அவரே, காசியின் படித்துறைகளில் குருவிகளின் பெரும்படையொன்று ஒன்றையொன்று துரத்திப் போவதைப் பல நாட்கள் கண்டிருக்கிறேன், மாலைநேரங்களில் எல்லாப்படித்துறைகளிலும் இதைக் காண ஒரு கூட்டமே காத்துக்கிடக்கும் ,கங்கையின் மீது பறந்தபடியே அந்தக் குருவிகள் செய்யும் ஜாலம் அபாராமானது.

அலை அலையாக வானில் சுழன்று செல்லும் குருவிகளின் ஒன்றிணைந்த நடனத்தைக் காணப் பரவசமாக இருக்கும, இந்தக்குருவிகள் எங்கிருந்து வருகின்றன எங்கே செல்கின்றன என்று அறிய முடியாது, ஆனால் அவை வானில் சேர்ந்து நடனமாடுகின்றன, கீச்சிட்டுப் பறக்கின்றனஆற்றில் விழுந்துவிடுவது போல பாவனை செய்கின்றன, குருவியின் வீழ்ச்சி  நடனத்தின் உச்சம் போலவேயிருக்கிறது.

இன்று நகரங்களில் குருவிகளைக் காண்பது அரிதாகிவருகிறது,சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்கான முக்கியக் காரணங்களாக சொல்லப்படுபவை, கூடு கட்டுவதற்கு வசதியான கட்டிடங்கள். கூரைகள் இல்லாமல் போனது.  பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட உணவுதானியங்கள். காற்று மாசுபடல் மற்றும் ரசயானக் கழிவு புகையால் ஏற்படும் நெருக்கடி, வணிக காரணங்களால் இயற்கைச் சூழல் அழிக்கப்படுவது. மற்றும் செல்போன் டவரின் கதிரியக்கத்தால் ஏற்படும் அழிவு, உலகெங்கும் குருவிகள் அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மார்ச் 20ம் தேதியை உலக சிட்டுக்குருவிகள் தினமாக்க் கொண்டாடுகிறார்கள், பெங்களுரில் உள்ள எனது நண்பர் சதீஷ் முத்துகோபால் இது குறித்து பழனியில் ஒரு விழிப்புணர்வு முகாம் நடத்த இருக்கிறார், இன்று இணையத்திலும் சிட்டுக்குருவிகள் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் பரவலாக வெளிப்பட்டு வருகிறது.

அழிந்து வரும் குருவிகளைக் காப்பாற்ற நாம் ஒவ்வொருவரும் முனைப்பு கொள்ள வேண்டும். குருவிகளுக்காக ஒரு சிறிய கிண்ணத்தில் நீர் வைக்கலாம், திறந்த வெளியில் தானியங்களை உணவாகப் போட்டுவைக்கலாம். இயற்கைச் சூழலை பாதுகாத்து அதற்கான வாழ்விடத்தை உருவாக்கித் தரலாம். அதைவிடவும் குருவிகளை வேட்டையாடல். துன்புறுத்தல் போன்றவற்றில் ஈடுபடாமல் இருக்கலாம்,

டெல்லியில் அடிபட்ட பறவைகளுக்கு உதவி செய்ய ஜெயின் மருத்துவமனை ஒன்றிருக்கிறது, அங்கே பல்வேறுவிதமான  பறவைகள் உணவு மற்றும் குடிநீர் தரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன, இது போன்ற பறவைகளுக்கான மருத்துவமனைகள் இந்தியாவெங்கும் அவசியம் தேவை என்றே தோன்றுகிறது.


அமெடியஸ் (Amadeus)

 .ஸ்ரீநிவாசன்



அமெடியஸ்திரைப்படம் இசை மாமேதை மொஸார்ட்டின் (வுல்ஃப்கேங் அமெடியஸ் மொஸார்ட்) கதை.

ஆனால் அவர் காலத்தில் வாழ்ந்த இசை வல்லுனர் அன்டோனியோ சலய்ரியின் மூலமாகஃப்ளாஷ் பேக்கில் சொல்லப் பட்டது.

சலய்ரி, இசையில் மெய்மறந்து போகும் சிறுவன். அவன் தந்தைக்கு இசை ஒரு பொருட்டல்ல. அதே காலகட்டத்தில் சலய்ரி, தன் பிள்ளையை பயிற்றுவித்து வெவ்வேறு முக்கிய மனிதர் சபைகளில் இசைக்கச் சொல்லும் அமெடியஸின் தந்தையைப் பற்றியும் கேள்விப் படுகிறான். அமெடியஸ் ஒருபயிற்றுவிக்கப் பட்ட வித்தை காட்டும் குரங்குஎன்கிறார் சலய்ரியின் தந்தை.

இசையால் உயிர் கவ்வப் பட்ட சலய்ரி, கடவுளிடம் தனக்கு மகத்தான திறமையைத் தரச் சொல்லி வேண்டுகிறான். அதற்கு காணிக்கையாக தன் எல்லாவற்றையும் தர சித்தமாயிருக்கிறான். ‘ஒவ்வொரு மணிநேரமும் என் இசையால் உன் புகழ் பாடுவேன்என்னும் சலய்ரியின் வாழ்வில் உடனே ஓர் அற்புதம் நடக்கிறது. தொண்டையில் உணவு சிக்கி அவன் தகப்பனார் இறக்கிறார். தடை நீங்கி விட்டது. சலய்ரி இசை பயின்று வியன்னாவுக்குச் சென்று அரசரின் ஆஸ்தான இசைக் கலைஞராகிறார்.

மீண்டும் அமெடியஸ். அவன் வருகை தெரிந்து அந்த இடத்துக்கு சலய்ரி போகிறார். இசை கேட்க குழுமி இருக்கும் மனிதர்களிடையே அவனைத் தேடுகிறார். அவன் ஒர் இளம் பெண்ணுடன் விளையாடிக் கொண்டு இருக்கிறான். சலய்ரி ஒளிந்திருப்பது தெரியாத இருவரும் ஓர் அறையில் சல்லாபித்துக் கொண்டே சொல் விளையாட்டு ஒன்றை ஆடுகிறார்கள். கடைசியிலிருந்து ஆரம்பம் வரை எழுத்தொலிகளை தலைகீழாகக் கூறி அப்படி சொல்கையில்கிஸ் மை ஆஸ்’ ‘ஈட் மை ஷிட்என்கிற வாக்கியங்கள் வருமாறு விளையாடுகின்ற, அவன் ஆபாசப் பேச்சும், நாசூக்கற்ற நடவடிக்கைகளும் அவரை தாக்குகின்றன. அந்த நிமிஷம் அவன் இல்லாமலேயே அவனது இசை அவையில் வாசிக்கப்படுவதைக் கேட்டு அங்கு ஓடிச் சென்று இசைக்க ஆரம்பிகிறான்.

இசை நர்த்தனம் புரிகிறது. மழையாய்ப் பொழிகிறது. பூக்களைத் தலையாட்டச் செய்கிறது. வருடி விடுகிறது. விம்மிப் பதைக்கிறது. எம்பி குதிக்கிறது. இதயம் நிரம்பி வழிந்து உலகெலாம் நிறைகிறது. என்ன தெய்வீகம் ! எந்த உலகத்தது?

ஆனால் கடவுளின் இவ்விசை உலகை நிரப்புவது இதற்கென்றே சகலத்தையும் துறந்த , சகலத்தையும் உணர்ந்து ரசிக்கிற சலய்ரி மூலம் அல்ல, ஒரு நாசூக்கற்ற, கோமாளித் தனமான, கெக்கெலி கொட்டி இடம் பொருள் ஏவல் தெரியாமல் சிரிக்கிற,

அனாச்சாரமான அமெடியஸின் மூலம். ‘என்ன அநியாயம். இசையை ரசிக்கிற, இசையில் உருகுகிற ரசனையை மட்டும் கொடுத்து மகத்தான சிருஷ்டித் திறனைத் எனக்குத் தராமல் ஒரு ஆபாச, அல்ப, விளையாட்டுப் பிள்ளைக்கு இத்தனை திறமையைக் கொடுத்தாயே, எனக்கு துரோகம் செய்து விட்டாயே, கடவுளேஎன்கிற சலய்ரியின் வாழ்வு மாறிப் போய் விடுகிறது. கடவுளின் எதிரி என்று தன்னைப் பிரகடனப் படுத்திக் கொள்கிறார். கடவுளின் தேர்வான அமெடியஸை அழிப்பதே தன் வேலை என்றும் சூளுரைக்கிறார்.

படம் சலய்ரியின் தற்கொலை முயற்சியில் ஆரம்பிக்கிறது. மன நோய் காப்பகத்தில் அமெடியஸின் மரணத்துக்குப் பின் 32 வருடங்கள் அந்தக் குற்ற உணர்விலேயே பயித்தியமான அவரை ஒரு பாதிரியார் சந்திக்கையில் அவரிடம் தன் கதையைச் சொல்வது போல் படம் நடக்கிறது.

பாதிரியாரிடம், “என்னை யார் என்று தெரியுமாஎன்பவரிடம் அவர்எனக்கு அது அவசியமில்லை. துயர்படும் ஆத்மாக்களுக்கு ஆறுதல் அளிப்பதே என் வேலை.’ என்கிறார். தொடர்ந்துகடவுளின் படைப்பில் அனைவரும் சமம்என்கிற பாதிரியாரிடம் சலய்ரியின் கேள்விஅப்படியா சமமா?” இது மனித வாழ்வின் அடிப்படைக் கேள்வி. பாக்கிப் படம் அப்படி சமம் இல்லை என்பதை சலய்ரியின் கோணத்தில் விவரிக்கின்றது.

அமெடியஸ் அப்பாவியாக இருகிறான். அவனது இசை மேதைமை மட்டுமே அதற்கான அங்கீகாரம் பெறுவதற்கு போதுமான தகுதியாக இவ்வுலகம் இல்லை.

சலய்ரியின் சூதால் அவன் ஆபெராக்கள் ஒன்பது முறைகளும், ஐந்து முறைகளுமே மேடை ஏற்றப் படுகின்றன.

ஆனால் அவன் சலய்ரிதான் தனக்கு அரசில் இருக்கும் நண்பன் எனக் கொள்கிறான். அவனிடம் தன் ஆதங்கங்களைச் சொல்கிறான்.

இது கொஞ்சம் உண்மை வரலாற்றாலும், மிகுந்த கற்பனையாலும் பின்னப் பட்ட திரைக் கதை. அமெடியஸின் தாய், அவன் முதல் காதலி, (மனைவியின் மூத்த சகோதரி) இன்னொரு மகன் பற்றியெல்லாம் இல்லை. சலய்ரி பற்றிய வடிவாக்கமே அவர் குற்றவுணர்வு கொண்டிருந்தார் என்கிற செய்தியின் அடிப்படையில் எழுந்தது.

நாடகமாக பலமுறை மேடை எற்றப்பட்டு மெருகேறி, மெருகேறி கிட்டத்தட்டபர்ஃபெக்ட்டான வடிவத்தில் இத்திரைப்படம் வந்துள்ளது.

சில காட்சிகள்:

ஒரு இசை நாடகத்தை ஜெர்மானிய மொழியில் செய்வதா இத்தாலிய மொழியில் செய்வதா என்கிற பிரச்னை வரும்போது இத்தாலிய மொழியையே பண்டிதர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அங்கும் நீச பாஷை, தேவ பாஷை உண்டு போலும். அமெடியஸ் ஜெர்மானிய மொழியையே தேர்ந்து எடுக்கிறான். அவனுக்கு நாசூக்கு தெரிவதில்லை. அவனிடம்ஈகோஇல்லை. அரசரை அவன் கேட்கிறான். “பெரியவர்களைப் பற்றி மட்டுமே, உயர்ந்தவர்களைப் பற்றி மட்டுமே கடவுளர்களைப் பற்றி மட்டுமே கலைகளைப் படைக்க வேண்டுமா? அவர்கள் மட்டுமென்ன மார்பிளை (marble)யா கழிக்கிறார்கள்? (டு தே ஷிட் மார்பிள்?) என்கிறான். அரசர் முன்னிலையில் பேசக்கூடிய வாசகமா? அவை அசௌகரியமான நிசப்தத்தில் ஆழ்கிறது. அடுத்த நொடி அவனது அப்பாவியான இரைந்த கெக்கெலி கொட்டும் சிரிப்பு. Innocence is ashamed of nothing. Roussau.

அமெடியஸ், அவன் மனைவி, அவன் தந்தை மூவரும் அவர் (தந்தையின்) வருகையை கொண்டாட ஒரு இரவுப் பார்ட்டிக்கு செல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு முகமூடி கொடுக்கப் படுகிறது. அலங்காரமான, அரை முகத்தை மூடும், முழு முகத்தை மூடும், இரண்டு புறமும் முகமிருக்கும் முகமூடிகள் என்று வித விதமான முகமூடிகள்.; அங்கே சலய்ரியும் வருகிறார். ஒரு முகமூடியுடன். ஒரு விளையாட்டில் தோற்ற அமெடியஸின் மனைவியை மேடையில் ஏற்றி விளையாட்டாக தண்டனை அளிக்கிறார்கள். என்ன தண்டனை தராலாம் என்று கூட்டம் உரக்க யோசிக்கையில்அவளை தன் கால்களைக் காட்டச் சொல்லுங்கள்என்று ஒரு சிரிக்கும் குரல் சொல்கிறது. அது அமெடியஸினுடையது. கூட்டம் சிரிக்கிறது. சிரித்தவாறே அவளும் தன் ஆடையைத் தூக்கி ஸ்டாக்கிங்க்ஸால், மறைக்கப் பட்ட தன் கால்களை காட்டுகிறாள். அடுத்து அமெடியஸின் முறை. வேடிக்கையான தண்டனை. அவனை தலைகீழாய்த் தொங்க விட்டு பியானோவை வாசிக்கச் சொல்கிறார்கள். முதுகுப் புறம் பியானோவைப் பார்த்தவாறு கைகளை மாற்றி என்று தொங்கியவாறே வாசிக்கிறான். ஒவ்வொரு இசைக் கலைஞன் மாதிரியும் வாசித்துக் காட்டும் அவன் ஒரு சமயம் சலய்ரியின் இசையை வாசிக்கிறேன் என்று குனிந்து, பின்புறத்தைக் காட்டியவாறேபுர்ரென்ற ஒலியை வாயினால் எழுப்புகிறான். கூட்டம் சிரிக்கிறது. சலய்ரி அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் அமெடியஸின் தந்தை இதையேல்லாம் ரசிக்கவில்லை. அவர் முகமூடி ஒருபுறம் சிரீயஸாகவும் மறுபுறம் சிரித்துக் கொண்டும் இருக்கும் இருபுறமும் உள்ள முகமூடி.

கொஞ்ச நாட்களில் நிகழும் தந்தையின் மரணம் அமெடியஸைப் பெரிதும் பாதிகிறது. அதன் முலம் பிறந்த இசை நாடகத்தின் மகிமையை சலய்ரி உணர்கிறார். அதுவும் வெற்றியடையாமல் செய்கிறார். அதில் மரணத்திலிருந்து எழுந்து வருவது அமெடியஸின் தந்தையின் உருவகம்தான் என்பது அறிந்த சலய்ரி அத்தந்தையின் ஆளுமையை உபயோகப் படுத்தி அதே இரு புற முகமூடி அணிந்த ஒருவனை அனுப்பி

இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்கானதொழுகை பிரலாபம்” (“Mass requiem”) தனக்கு அளிக்குமாறு கேட்கிறார். (மரண கீதத்தை எழுதச் சொல்லும் தந்தையின் தோற்றத்தை அந்த முகமூடியின் மூலம் கொண்டு வரும் உருவம் பண முடிப்பைக் கொடுத்து விட்டு திரும்பிச் செல்கையில் அது இறங்கிச் சென்ற சில நொடிகளுக்குப் பிறகும் அதன் நிழல் சென்று கொண்டிருக்கும், அவரது தாக்கம் என்றும் அவர் இறப்பிற்குப் பின்பும் தொடரும் என்பதாக.)

சிருஷ்டிக்கும் இசையில், இரண்டறக் கலக்கும் அமெடியஸைக் கொல்ல சலய்ரி கையாளும் ஆயுதம் அந்த தொழுகை பிரலாபம்.அதற்கு பெரிய சம்பளமும் கொடுக்கிறார். பணத் தேவை மிகுந்த அமெடியஸ் ( அவன் கொண்டு வந்த ஒன்பது சிமிழ்களில் இருந்த அத்தனை பொற்காசுகளும் தீர்ந்து விட்டன) அந்த வேலையை ஒத்துக் கொள்கிறான்.

மனனவி, குழந்தையுடன் அவனை விட்டு விட்டுப் போய்விட்ட ஒருநாளில் அரங்கிலேயே மயங்கி விழும் அவனை சலய்ரி வீட்டுக்கு கொண்டு வந்து உடனிருக்கிறார். விழித்த அமெடியஸ்நான் ஒரு முட்டாள். நீங்கள் என் இசையைப் பொருட்படுத்தியதில்லை என்று தவறாக எண்ணியிருந்தேன். என்னை மன்னியுங்கள்என்கிற போது யார் யாரிடம் மன்னிப்பு கேட்பது என்று நமக்கு அழுகையும், கோபமும் வரும். படுக்கையிலிருந்து எழ முடியாது, எழுத முடியாது தொய்ந்து போய் இருக்கும் அவன்மரண இசையை சொல்லச் சொல்ல சலய்ரி அதை எழுதிக் கொள்கிறார்.

அமெடியஸின் மனைவியும், மகனும் வருகிறார்கள். களைப்பின் உச்சியில் இருந்த அமெடியஸ் மேல் இருக்கும் மரண இசையின் நொடேஷன்கள் நிரம்பிய காகிதங்களை பார்க்கும் அவன் மனைவி, அதை எழுதினால் அதில் முழுதுமாய் ஈடுபட்டு அமெடியஸே இறக்க நேரிடலாம் என்று உணர்ந்து அதை மேற்கொண்டு எழுதக் கூடாது என்று எடுத்து வைத்து விடுகிறாள். சலய்ரியையும் வெளியே போகச் சொல்கிறாள். ‘அமெடியஸ் சொல்லட்டும், போகிறேன்என்று நிற்கும் சலய்ரிக்காகபோகச் சொல்என்று அமெடியஸின் அருகே செல்லும் அவள் அவன் இறந்து விட்டதை உணருகிறாள்.

அமெடியஸின் உடல் ஒரு வெள்ளைத்துணியில் சுற்றப் பட்டு வேறு பல பிணங்கள் இருக்கும் ஒரு புதைகுழிக்குள் போடப் படுகிறது. அடையாளம் எதுவும், அறிவிப்பு எதுவும் இல்லாமல். தனியாய் அறிவிப்போடு புதைக்கப் பட்டிருந்தால் மட்டுமென்ன? அதனால் அமெடியஸுக்கு என்ன லாபம்? நாம் நம் நெற்றியில் அந்த ஞாபகச் சாம்பலைப் பூசிக் கொள்ளலாம் என்பதை தவிர.

பாதிரியாரை ரட்சிகிறேன் , இந்த உலகில் உள்ள நடுவாந்திர ( mediocre) மனிதர்கள் அனைவருக்குமான பிரதிநிதி நான்என்று நம்மனைவரின் பிரதிநிதியாய் சலய்ரி கூறிச் செல்கையில் அமெடியஸின் அந்த வெகுளித்தனமான, மரியாதை- அவமரியாதை, புனிதம்-ஆபாசம், கௌரவம்-கீழ்மை அனைத்திற்கும் அப்பாற்பட்ட இவ்வாழ்க்கையின் ஒரே உண்மை முன் நம்மை நிர்தாட்சண்யமாய், ஆனால் நோக்கமற்று நிறுத்துகின்ற கெக்கலி சிரிப்போடு படம் முடிவடைகிறது.

காட்சிகளின் ஆரம்பம், ஒளி அமைப்பு, பின்னணி இசை, கை விரல்களும், பாத்திரத்தின் முழு உடலும், கண்களும் இசைக்க தொடங்குகையிலேயே பின்னால் பொங்கி எழும் இசை பிராவாகம், அது காட்சியாய் மாறுவது, இடையே மீண்டும் சொல்பவர், ஒரு வார்த்தை, ஒரு விரலசைப்பு. மொஸார்ட்டின் ஒரு ஸ்வரத்தைக் கூட மாற்ற முடியாது என்பது போல ஒருஷாட்டைக் கூட மாற்ற முடியாத காட்சிகள்.

குறைகள் எனில், ஒரு காட்சியில் பாதி எரிந்த மெழுவர்த்தி, பின்பு முழுதுமாய்த் தெரிவது முதலியவை மற்றும் சரித்திர திரிபுகள் பற்றி படித்தேன். எனக்குத் தோன்றுவது, ‘ஃப்ளாஷ் பேக்உத்தியில், சலய்ரி சொல்லும் கதையில் அவர் இல்லாத காட்சிகள் கூட படத்தில் இடம் பெறுவது.

மகத்தான நடிப்பு. அமெடியஸ் சசின் டெண்டுல்கரை நினைவுறுத்தும் பாலகனுடைய முகம் கொண்ட இளைஞர் டாம் ஹல்ஸ். சலய்ரிஓம் பூரிபோல் முகம்கொண்ட முரேஅப்ரஹாம். நாம் வாழும் இருவரைப் பார்க்கிறோம். அந்த இருவர் மட்டுமல்ல, அமெடியஸின்வுல்ஃபிஎன்று கொஞ்சும், இறுதி நாட்களில், இசை நாடகம் வேண்டும் என்று வருபவர்களிடம் பணம் பற்றி பேசும், சம்பளம் இன்றி வரும் வேலைக்காரியை வேண்டாம் என்று சொல்லும் மாமனாரிடம் நீங்கள் யார் இதைச் சொல்ல என்று கேட்டு அவளை வேலைக்குஅமர்த்திக்கொள்ளும், மொஸார்ட்டோடு விளையாடும், அவனைப் பிரிந்து போயும் தன்னை அணைத்து பார்ட்டியில் ஆடிக் கொண்டிருப்பவனிடம்நான் செய்வது தப்புஎன்று கணவனிடம் ஓடி வரும், சலய்ரியை மொஸார்ட்டின் அறையில் கண்டதும்போய் விடுங்கள், துரதிருஷ்டவசமாக உங்களை வெளியே அனுப்ப எங்களிடம் வெலையாட்கள் இல்லைஎன்று நிச்சயத்தோடு கூறும், அமெடியஸின் மீது அவன் இன்னொஸென்ஸின் மீது அவன் மகத்தான மேதைமையின் மீது காதலைப் பொழியும் மனைவியாக வரும். எலிஸ்பத் பெர்ரிட்ஜ்... . .கும்மாளம் இடும் மகன், தான் வேண்டாம் என்று சொன்ன பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவன், தன்கனவின் நினைவுருவம்அதன் கட்டை மீறி செல்வதைக் காணச் சகிக்காமல், அவன் நன்மைக்காகவே என்று வாழும் கண்டிப்பான தந்தை, சலய்ரியால்ஒற்றுசெய்யவரும் சம்பளமில்லாத வேலைக்காரி, ஆர்ச் பிஷப், மன்னர், அவர் கூடவே இருக்கும் பிரபுக்கள், பிரபலஸ்தர்கள், தனியே அரசின் உதவியின்றி செயல்படும் ஆபெரா குழுக்கள், ஒவ்வொருவரும் வாழ்கிறார்கள் நம்மனைவரின் குறைகளோடு, நிறைகளோடு, குமுறல்களோடு, ஆசாபாசங்களோடு, டாம்பீகத்தோடு.

நீதி, நியாயம், கடவுள், அவர் சித்தமென்று மனித குலம் கற்பித்துக்கொண்டுள்ளவை பற்றி சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பும் படம்.

வாழ்வில் இசையில் அமெடியஸிடம் ஒட்டு மொத்தமாக தோல்வியுற்ற சலய்ரி ஒரே இடத்தில் வென்றார். சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் பரிசு சலய்ரியாக நடித்த முரே அப்ரஹாமுக்குக் கிடைத்தது. அதே பிரிவில் போட்டி யிட்ட டாம் ஹல்ஸ் தோற்றார். சிறந்த துணை நடிகர் பிரிவில் அவரை சேர்த்திருந்தால் நிச்சயம் அவருக்குத்தான் பரிசு கிடைத்திருக்கும். இரண்டு பேருக்கு பரிசை பிரித்து வழங்கும் வழக்கம் இருந்தால் அவருக்கும் கிடைத்திருக்க வேண்டும். அது போன்ற நடிப்பு எப்பொதாவதுதான் காணக் கிடைக்கிறது.

பீடர் ஷாஃபர், மிலோஸ் ஃபோர்மன் எனும் மேதைகளின் படைப்பு இப்படம். இதன் இசையமைப்பாளர், மொஸார்ட்டின் ஒரு நோட்டைக் கூட மாற்ற அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னவர். மேடையை விட சினிமாவில் இசையை அதிகம் சேர்க்க முடிந்திருக்கிறது. எட்டு ஆஸ்கார் பரிசுகளை வென்ற படம்.

மனிதர்கள் வாழ்வது எதனால்?’ என்ற கேள்வியைக் கேட்டுபிறரின் அன்பால்என்று டால்ஸ்டாய் சுலபமாகச் சொல்லிவிட்டார். “பிறர் மேல் உள்ள பொறாமையாலும்தான். ‘Jealousy is as cruel as the grave’ என்கிறது விவிலியம். ‘as powerful as love’ என்பதும் உண்மைதான்.

கம்பனும் ஒட்டக் கூத்தனும் இப்படி வாழ்ந்திருக்கலாம். ராஜாஜி இறந்ததற்கு பெரியார் அடக்க முடியாமல் அழுதது எதனால்?

மனித மனதைப் பற்றிய படங்கள் என்னை கவருகின்றன. வாழ்வைப் போலவே பல தளங்களிலும் இப்படம் இயங்குகிறது. இப்படத்தின் (மொஸார்ட்) இசையைக் கேட்கையில், பாமரனான எனக்கே All art constantly aspires towards the condition of music என்பது புரிகிறது. ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் ஒரு பொருளின், உள், வெளி, விளிம்பு அனைத்தும் தெரிவது போல் இப்படம் மனிதர்களின் அக புற நிகழ்வுகளை அனாயாசமாய்ச் சொல்லிச் செல்கிறது. வைக்கோல் அடைக்கப் பட்ட கன்றுக் குட்டிகளால் ஆன கலைப் படைப்புகள் என்று சொல்லப் படுபவைகளின் நடுவே சில துள்ளி விளையாடும் கன்றுகளைக் காணும் போது தாங்கொணா பரவசம் வருகிறது. அவ்விதத்தில் இது முதல் வரிசைப் படம். இதன் பரவசமே வாழ்வை சின்னாப் பின்னமாக்கும், மாமேதைமையையும் புழுதியில் எறியும் மனிதர்களின் தன்முனைப்பும், பேதமையும், குரூரமும் நிறைந்த, வெறும் கொடுக்கல், வாங்கலாக வாழ்க்கையைச் சுருக்கிவிட்ட இயல்பைக் காட்டும் சோகம்தான்.

The heart of the melody can never be put down on paper. இசையின் இதயத்தை காகிதத்தில் கொண்டு வர முடியாது. அமெடியஸ் படத்தைப் பற்றியும்தான்.

 

பறவை நோக்குதல் எனும் ரசனையான பணி

ராஜேந்திரன் பறவை என்பதை இப்படி எளிமையாக விளக்கலாம். உலகிலேயே சிறகு உடைய பிராணி பறவைதான். நமது பெருவிரல் பருமனே உள்ள மிகச் சிறிய ரீங்காரப் பற...