Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Friday, 28 March 2025

கடைசித் துளி ரத்தம் (THE LAST BLOOD)

சிறுகதை

ஆத்மாநாம்


புழுதி படிந்த மாலை நேரம். காற்று வீசிக் கொண்டிருந்தது. டாக்டரின் மனதில் பல்வகை எண்ணங்கள் அலையெனப் புரண்டு கொண்டிருந்தன. பற்றற்ற உணர்வோடு தம் பணியைத் தொடங்க வேண்டுமென்று என்று தான் அவர் முயன்று கொண்டிருந்தார். ஆனால் அவரையும் மீறி அவர் உள்ளத்தில் அந்த நோயாளி புகுந்து சிந்தனையைக் கிளறி வேடிக்கைப் பார்த்தான். அவன் வலது கையில் அதென்ன கோளாறு? பொறுக்க முடியாத வேதனையிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்காக அவன் அடிக்கடி கையைக் கிழித்துக் கொண்டுவந்து நிற்கிறானே?

அன்றும் டாக்டரைக் காண அந்த நோயாளி வந்து சேர்ந்தான். நோயாளிக்கு நம்பிக்கையே போய் விட்டாற் போலிருந்தது. இயற்கைச் சூழலும் அவனுக்கு விபரீதமாக் அமைந்திருந்தது ; ஆறுதல் அளிக்கக் கூடியதாயில்லை. ஆயினும் அவன் எப்படியோ டாக்டரின் வீட்டை அடைதான். வாசலில் காவலுக்கு அமர்ந்திருந்த வேலையாள் அவனைத் தடுத்து நிறுத்த முயன்றான். ஆனால் நொந்துபோன அவன் உணர்வுகளை படித்த அவன், அவனைத் தடுக்க முடியாமல் தவித்து நின்றான்.

அவனைப் பார்த்ததும் டாக்டர், “உனது உடல்நிலை இப்பொழுது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

”என்ன செய்வேன் டாக்டர்? ஏறகுறைய ஒரு வார காலமாக நான் உறங்கவே இல்லை. இஎன் வலது கையில் முன்போலவே பொறுக்க முடியாத வலி கண்டிருக்கிறது. இந்தக் கைக்குள் அப்படி வலிக்க என்ன இருக்கிறது என்றே விளங்கவில்லை. புற்றுநோயாக அல்லது அதைக்காட்டிலும் பயங்கரமான வேறு ஏதாவது நோயாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. அறுபது நாழிகையும் (1 நாள் / 24 மணி நேரம்) தணலை (நெருப்பை) வைத்துக் கட்டினாற் போன்ற எரிச்சல்! ஒரு கணம்கூட நான் உயிர் வாழ விரும்பவில்லை. நான் இந்த நகரத்துக்கு வந்ததே உங்களிடம் சிகிச்சை பெறத்தான். வேண்டுமானால் என் இந்தக் கையை வெட்டி விறகாக்கி எரித்து விடுங்கள். இந்த வேதனையிலிருந்து நான் விடுபட நீங்கள் எது செய்தாலும் எனக்கு சம்மதமே. எப்படியாவது வேதனை தீர்ந்தால் சரி.” இதைக் கூறும்பொழுது அவன் கண்களில் நீர் பொங்கி வழிந்தது. 

டாக்டர் மீண்டும் அவன் கையைப் பரிசோதித்தார். ஆனாலும் அவரால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. நோயாளியைப் போன்றே டாக்டரின் உள்ளமும் அவன் வேதனையை உணர முடியாமல் அழுதது. அதனால் அவர் நெற்றியில் வியர்வை திட்டுதிட்டாக துளித்து நின்றது. ஆனாலும் நோயாலிக்கு ஆறுதல் சொல்லும் முயற்சியில் “இதற்கு அறுவைச் சிகிச்சை தேவையில்லை என்றே எனக்கு படுகிறது. பரிசோதித்துப் பார்க்கவும் ஒரு முடிவுக்கு வரவும் இன்னும் எனக்கு சிறிது அவகாசம் கொடு. நம்பிக்கை இழக்காதே. சீக்கிரமே குண்மாகி விடும் !” என்றார்.

ஆனால் அந்த நோயாளியோ அடிக்கடி ’கிழித்துப் போடுங்கள் டாக்டர் ! கிழித்துப் போடுங்கள்’ என்றே சொல்லிக் கொண்டிருந்தான். அறுவை இல்லாமல் இதர்கு சிகிச்சையே கிடையாது என்பது போன்ற எண்ணம் அவன் உள்ளத்தில் வேரூன்றி விட்டது. டாக்டர் ’அவகாசம் கொடு’ என்று சொல்லவே, பொறுமை இழந்து அவனே டாக்டரின் மேசை மேலிருக்கும் ஒரு பொருளைக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தன் கையை கீறி காயமேற்படுத்திக் கொண்டான். டாக்டர் அவனது இந்த செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்து சற்று சுதாரித்துக் கொண்டு அவனை அதட்டியவாறு கடிந்து கொண்டார். அதே நேரத்தில் காயம்பட்ட இடத்திற்கு மருந்திட்டு கட்டுப்போட்டு அவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். 

பல மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் அந்த நோயாளி வரவில்லை. டாக்டரோ அவனை எந்த நிமிஷமும் எதிர்பார்த்தார். அவன்நினைவு அவருக்கு எந்த நாளும் மறந்ததே இல்லை.

குறிப்பு : 

டாவின்சி கோட் படத்தில் தன்னையே சாட்டையால் அடித்து துன்புறுத்திக் கொள்ளும் பக்தன்.

ஒருநாள் டாக்டர் காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு எழுந்தபோது வேலையாள் அவர் கையில் ஓர் உறையைக் கொடுத்தான். அத்தனை பெரிய உறையைப் பார்த்த டாக்டர் அதனை வியப்போடு பிரித்தார். முழுதாக மூன்று பக்கங்கள் நீண்டிருந்தது அந்தக் கடிதம். பற்றாக்குறைக்கு அதன் ஆரம்பமும் வியப்பை வளர்ப்பதாக இருந்தது. அதில் எழுதியிருந்தது :

”டாக்டர் சார்! வணக்கம், தங்களுக்கு வெகுநாட்கள் நான் துன்பம் தந்துவிட்டேன். அதற்காக மன்னிப்பு கோருகிறேன். நான் வசதியான வீட்டைச் சேர்ந்தவன். என் தந்தையும் பெரும் பணக்காரர். அவருடைய ஆதரவிலும், பலத்திலும் தான் நான் மிகப்பெரும் சொத்துக்கு உரிமையுள்ளவனாக ஆக முடிந்தது. எத்தனையோ தொழிர்சாலைகள் எனக்கு சொந்தமாக இருந்தன. ஆரம்பத்தில் எனது வாழ்க்கை ஆடம்பரமிக்க பணக்காரர்களுக்கே உரிய பண போதையில் மிதந்தது. எப்படியெல்லாமோ இன்பம் காண முயன்றேன். பிறகு நல்ல நண்பர்களின் அறிவுறுத்தலினால் மனம் திருந்தி நல்ல பண்புகளை கொண்ட ஒரு பெண்ணை மனந்து கொண்டேன். மூன்று வருட மண வாழ்க்கையில் ” இல்லறம் இல்லாத வாழ்க்கை நல்லறமில்லாத வாழ்க்கை” என்பதைக் கண்கூடாகக் கண்டேன். திருமண பந்தத்தில் உள்ள மணத்தை நுகர்ந்து, அதன் சிறப்ப உணர்ந்தேன். மனித வாழ்வில் திருமணம் அவசியம். அதைக் காட்டிலும் சிரந்த உறவு கிடையாது என்பதையும் கண்டேன். மனைவியின் எல்லையில்லாத அன்பில் முக்குளித்து எழுந்தவனுக்கு இன்பத்தின் எல்லையைக் கண்டாற் போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. காலையிலிருந்து மாலை வரையில் தொழிற்சாலை வேலைகளில் ஈடுபட்டிருப்பேன். உழைப்பினால் ஏற்பட்ட களைப்போடு வீடு திரும்புவேன். வரவேற்கும் மனைவியின் புன்னகை அத்தனை களைப்பையும் பனியாக மறைத்து விடும். களைப்பு கலிப்பாக மாறி இன்பம் தரும்.

எனது இந்த மகிழ்ச்சியைக் காண விதிக்கே பொறுக்கவில்லை போலும்!

ஒருநாள் தொழிற்சாலையிலிருந்து நண்பகலில் சிறிது சீக்கிரமாகவே வீடு திரும்பினேன். என் மனைவி வீட்டில் இல்லாததால் வேலைக்காரனை கேட்டேன். எங்கோ வெளியில் போயிருப்பதாக கூறினான். 

அவள் எங்கே போயிருப்பாள்? உள்ளத்தில் இந்தக் கேள்வி கள்ளத்தனமாக புகுந்துவிடவே, மறுநாளும் அலுவலகத்தில் இருப்புக் கொள்ளாமல் சீக்கிரமாகவே வீடு திரும்பினேன். அன்றும் என் மனைவியை வீட்டில் காணவில்லை. எனது ஐயம் வேர் விடத்தொடங்கவே, வேலைக்காரனைக் கூப்பிட்டு விசாரித்தேன்.

”என் மனைவி ‘தினமும் இப்படி வெளியில் போகிறார்களா?”  

“ஆமாங்க சார்!”

”எப்போ திரும்பறாங்க?”

”நீங்க அலுவலகத்தில இருந்து வர்றதுக்கு கொஞ்சம் முன்னாலே”

”சரி நீ போ. நான் வந்தது போனது உன்கிட்ட இப்ப கேட்டது எதையும் காட்டிக்காதே” என்று சொல்லி அவனை அனுப்பினேன்.

கிட்டத்தட்ட மாலை நெருங்கும் நேரத்தில் (5 மணி) என் மனைவி வீட்டுக்கு வந்தாள். என்னைக் கண்டதும் ஆர்வம் பொங்க ஓடிவந்து அணைத்துக் கொண்டாள். எம்பொழுதும்போல் அனபுமழை பொழிந்தாள். என் உலர்ந்த மனம் மலர்ந்தது. ஆனால் என் உள்ளத்தில் புகுந்துவிட்ட சந்தேகப் பேய்க்கு தான் நிம்மதியே ஏற்படவில்லை. சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக வேர்விட்டு ஆலமரம் போல் வளர்ந்து விடவே மனம் இல்லாதது பொல்லாதது எல்லாம் எண்ணலாயிற்று.

பெண் என்பவள் ஒரு வேஷக்காரி. ஆண்கள் ஒருசில வேஷங்கள் போட்டு நடித்தாலும் நாளடைவில் அந்த வேஷம் அவர்களுக்கு அலுத்து சலித்துப் போகக்கூடும். ஆனால் பெண்? உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டி நடிப்பதில் கை தேர்ந்தவர்கள். அவர்கள் காட்டும் வர்ணஜால வேஷங்களை புரிந்துகொள்ள முடியவே முடியாது.

பெண் படுமோசக்காரி. பெண்ணின் மாற்றுப் பெயரே மோசம் என்று சொல்லலாம். ஆம்; மோசமே தான்!

அன்றிரவு நான் படுக்கையில் புரண்டு புரண்டு அவளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். தூக்கமே வரவில்லை. கொஞ்சநஞ்சம் வந்த தூக்கத்தை தெருநாய்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் குரைத்து விரட்டி விட்டன. 

மூன்றாவது நாளும் நான் தொழிற்சாலையிலிருந்து வீட்டுக்கு சீக்கிரமாகவே திரும்பினேன். நான் நினைத்தாற் போலவே நடந்திருந்தது. என் மனைவி அன்றும் வீட்டில் இல்லை.

நான் அவளுடைய அறையிலுள்ள ஒவ்வொரு பொருளையும் சந்தேகக் கண்கொண்டு நோட்டம் விட்டேன். அவள் எங்கே போகிறாள் என்பதை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்று துடித்தேன். அவளுடையது என்று சொல்லக்கூடிய ஒவ்வொரு பொருளையும் குடைந்து குடைந்து பார்த்தேன். அவளது தையல் மிஷினில் உள்ள ட்ராயர் பூட்டுப்போட்டு பூட்டியிருந்தது. நான் மறு சாவி போட்டு எப்படியோ அதை திறந்து விட்டேன். ட்ராயருக்குள் 40-50 கடிதங்கள் சிவப்பு ரிப்பனால் மொத்தமாக கட்டி வைக்கப் பட்டிருந்தன. அதை பிரித்து படித்துப் பார்த்தால் அத்தனையும் காதல் கடிதங்கள்! நான் சந்தேகப்பட்டது உண்மை என்பது அப்போது உறுதியாயிற்று. நான் அந்தக் கடிதங்களை பழையபடியே ட்ராயரில் வைத்துப் பூட்டினேன். எனக்கு என் மனைவி மீதிருந்த நம்பிக்கை அனைத்தும் போய்விட்டது. அவள் நச்சுப்பாம்பாக தோன்றினாள். என் நம்பிக்கைகளை குழிதோண்டி புதைத்த வஞ்சகி அவள் என்ற முடிவுக்கு வந்தேன். 

அன்றிரவு அவள் என் அருகில் படுத்தாள். அதை என்னால் பொறுக்க முடியவில்லை. நள்ளிரவு இரண்டு மனி சுமாருக்கு எழுந்தேன். நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த அவள் கழுத்தில் கைவைத்தேன். சிறுகச் சிறுக அவள் கழுத்தை அழுத்தினேன். விழிப்புக் கொடுத்த அவள் என்னைக் கண் திறந்து பார்த்தாள்.  உலர்ந்த ஒரு புன்னகை அவள் முகத்தில் மின்னி மறைந்தது.   பிறகு ஒன்றும் பேசாமல் கண்களை மூடிக் கொண்டாள். மிகுந்த வெறியுடன் இருந்த நான் அவள் கழுத்தை என் பலம் கொண்ட மட்டும் இறுக அழுத்தி விட்டேன். நான் அழுத்திய அழுத்தத்தில் அவள் வாயிலிருந்து குபுக்கென்று ரத்தம் கொப்பளித்து வாய் வழியே வழிந்தது. அந்த ரத்தம் முழுவதும் என் வலது கையில் வந்து விழுந்து மூட்டுப்பகுதியிலிருந்து மணிக்கட்டு வரை முழுவதுமாக நனைத்தது. சில வினாடிகளுக்கு பிறகு அவள் தொண்டையிலிருந்து ‘கிறீச்’ என்ற ஒலியுடன் அவள் வாயிலிருந்து சிறுதுளி ரத்தம் ஒன்று தெறித்து என் கழுத்தின் முன் பகுதியில் கோடிட்டாற் போல் (. . . . . . . .  Dot.. Dot.. Dot.. Dot என்று) ஒரு நான்கு அங்குல அளவிற்கு வந்து படிந்தது. அடுத்த நிமிடங்களில் உயிரற்ற சடலமாக என்னருகில் அவள் படுக்கையில் கிடந்தாள். 

நான் நடுநடுங்கிப் போனேன். பதறிப்போய் வேலைக்காரனுக்கு குரல் கொடுத்தேன். நான் செய்த முட்டாள்தனத்தை அவனிடம் மறைக்காமல் கூறினேன். 

என் மேல் விசுவாசமுள்ள அவன் “முதலாளி! நடந்தது நடந்து விட்டது. இந்த சடலத்தை இங்கிருந்து எடுத்து வாருங்கள். அதற்குள் நான் காரேஜிலிருந்து காரை எடுத்து வருகிறேன். இரவுக்கிரவே இதை எரித்து விடுவோம். உங்கள் பேருக்கு எந்த கலங்கமும் வந்து விடக் கூடாது” என்றான். 

என் உள்ளுணர்வு என்னை எச்சரிக்கவே”நான் செய்த இந்த கொலைக்காக போலிசில் சரண்டர் ஆவது தான் சரி!” என்று அவனிடம் சொன்னேன்.

“முதலாளி! நீங்கள் ரொம்பவும் இப்படி அப்பாவியாக இருக்கிறீர்களே. உங்கள் அந்தஸ்துக்காக இல்லாவிட்டாலும் உங்கள் அப்பா, தாத்தா குலப்பெருமைக்கு இதனால் இழுக்கு ஏற்படாதா? கொஞ்சம் நினத்துப் பாருங்கள்! நல்ல பெயர் எடுப்பது சிரமம். ஆனால் அதனை கெடுத்து கொள்வது நிமிஷ நேர வேலை!”

“ஆனாலும்...”

அவன் கொடுத்த தைரியத்தில் என் மனைவியின் சடலத்தை இரவுக்கிரவே எரித்துவிட்டு வந்தோம். அதன் விளைவாக ரகசியம் ரகசியமாகவே இருந்து விட்டது. யாருக்கும் உண்மை நிலை பற்றி எதுவுமே தெரியவில்லை. மரடைப்பினால் என் மனைவி மரித்து விட்டதாக ஊரெல்லாம் என் வேலைக்காரன் செய்தியை பரப்பி விட்டான்.

காலப்போக்கில் நினைவுகள் கூட மங்கித்தானே போகின்றன! ந்நளடைவில் என் செயல்களே எனக்கு மறந்தாற் போல் ஆகி விட்டன. நான் செய்தது எத்தகைய பாவச்செயல் என்பதையே நான் மறந்து விட்டேன். 

ஒருநாள் இரவு நான் என் அறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த பொழுது வெள்ளையாடை அணிந்த ஒரு பெண் என்னைப் பார்க்க வந்திருப்பதாக வேலைக்காரன் தெரிவித்தான். நான் அவளைப் பார்க்க  ஹாலுக்கு சென்றேன். அழகிய அந்த பெண்ணைப் பார்த்ததும் எனக்கு ஒருசேர வியப்பாகவும், குழப்பமாகவும் இருந்தது. இந்த நேரத்தில் இந்தப் பெண் என்னைக் காண வருவானேன்? என்னிடம் அவளுக்கு அப்படியென்ன பேச இருக்கிறது? என்று மனதுக்குள் கேள்வி மேல் கேள்வி எழுந்தது. அதனை கலைப்பது போல் முதலில் அவளே முந்திக்கொண்டு பேசினாள்.

“உங்களுக்கு என்னைத் தெரியுமா?”

”தெரியாது” என்று குழறினேன்.

”ஆனால் எனக்கு உங்களைத் தெரியும்”

அதைக் கேட்டதும் எனக்கு சற்று வியப்பாக இருந்தது. “என்னை எப்படி உங்களுக்கு தெரியும்? என்று கேட்டேன்.

“நான் உங்கள் மனைவியின் தோழி. அவர்கள் என் மீது மிகுந்த பிரியம் வைத்திருந்தார்கள். நானும் அவர்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தேன். அவர்கள் இறந்த செய்திகேட்டு துடிதுடித்துப் போய்விட்டேன்!”

என் மனைவியின் தோழி என்றதும் எனக்கு சிறிது ஆசுவாசமேற்பட்டது. நின்று கொண்டிருந்த அவளை ஷோபாவில் அமரச் சொன்னேன். உட்கார்ந்த அவள் “நான் உங்களிடம் ஒரு உதவி கேட்க வந்திருக்கிறேன். எனக்காக அதை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும்” என்றாள்.

”என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்கிறேன். என்ன உதவி என்று சொல்லுங்கள்”

“எனது தோழி அவர்களுடைய தையல் மிஷினிலுள்ள ட்ராயரில் எனது கடிதங்களை ஒளித்து வைத்திருக்கிறார்கள். எனது ஒவ்வொரு கடிதத்திலும் ’நீலம்’ என்ற என் பெயர் எழுதப்பட்டிருக்கும். உண்மையில் எனக்கு கல்யாணம் ஆவதற்கு முன்னால் நான் வேறு ஒருவரை காதலித்து வந்தேன். இந்த விஷயம் என் வீட்டிர்கு தெரிந்துவிடவே என்னை வேறு ஒருவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். நானும் எனது மானத்தை காத்துக்கொள்ளும் வேகத்தில் அந்த காதல் கடிதங்கள் அத்தனையையும் கட்டி உங்கள் மனைவியாகிய எனது தோழியிடம் கொடுத்து வைத்தேன். அதனை தனது தையல் மெஷினின் ட்ராயரில் ஒளித்து வைத்திருப்பதாக அப்போதே என்னிடம் சொன்னார்கள். அப்புறம் சிறிது நாட்களுக்குப் பிறகு நான் எனது கணவருடன் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டேன். திரும்பி வந்து விசாரித்தபொழுது எனது தோழி இறந்துவிட்டாள் என்று கேள்விப்பட்டு கதிகலங்கிப் போனேன். அதிலிருந்து மீண்டபோது என் கடிதங்களை பற்றிய நினைவு வந்தது. அது வேறு யார் கையிலும் கிடைத்து விடக்கூடாது என்ற பதட்டத்தில் ஓடி வந்தேன்” என்று சொல்லி முடித்தாள். 

அவள் அந்தக் கடிதங்கள் தன்னுடையவை என்று சொன்னதுமே என் தலை சுற்ற ஆரம்பித்திருந்தது. அவள் மேலும் பேசப்பேச என் தலை சுக்கு நூறாக வெடிப்பது போலிருந்தது. அவள் பேசி முடித்த மறுகணமே நான் தையல் மெஷின் இருக்கும் திசையை நோக்கி ஓடினேன். ட்ராயரைத் திறந்து ஒரு கடிதத்தை பார்த்தேன். இரண்டாவது கடிதத்தை பார்த்தேன். மூன்றாவது கடிதத்தை பார்த்தேன். எல்லாக் கடிதங்களிலும் ‘என் அன்பிற்குரிய நீலம்’ என்றே தொடங்கியிருந்தது. எனக்கு பித்துப்பிடித்தாற் போன்ற நிலை ஏற்பட்டது. நான் எனது மனைவியின் பெயரைக் கூறியவாறு சத்தமிட்டு அலறினேன்.  சிறிது பின்னால் அங்கு ஓடி வந்த அவள் என் கையிலிருந்த கடிதங்களை எடுத்துக் கொண்டாள். சத்தம் கேட்டு ஓடிவந்த வேலைக்காரன் கீழே விழவிருந்த என்னை தாங்கிப் பிடித்துக்கொண்டான். என்னுடைய இந்த செயலைக் குழப்பமுடன் பார்த்துக் கொண்டிருந்த அவளை “ஐயாவுக்கு எப்பவாச்சும் இப்படி  ஆகும். கொஞ்ச நேரத்துலயே அது சரியாயிடும். நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. நான் பாத்துக்கறேன்” என்று அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தான். 

அன்றிலிருந்து ஓவ்வொரு நாளும் நான் என் மனைவிக்கு செய்த துரோகத்தை நினைத்து துடிதுடிக்க ஆரம்பித்தேன். குற்றவுணர்வு நாளுக்குநாள் என்னை வதைக்க ஆரம்பித்தது. உறக்கம் வரவில்லை. அப்படி தப்பித்தவறி வந்தாலும் கனவின் கொடூரத்தன்மை என்னை அலறியடித்துக் கொண்டு எழுப்பிப் போட்டது. 

அப்பழுக்கற்ற எனது அன்பு மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற இந்தக் கை எனது முழு எதிரியாக எனக்குப் பட்டது. என் மனைவியின் கழுத்தை இந்தக் கையினால் நெரித்தபோது அவல் எப்படியெல்லாம் துடித்திருப்பாளோ? அவள் மனதில் இந்த நயவஞ்சகனைப் பற்றி என்னவெல்லாம் நினைத்திருப்பாளோ? அவளின் அத்மார்த்தமான அன்புக்கு நான் கொடுத்த அந்த துரோகப்பரிசை நினைத்து அந்த மரண வலியிலும் தன் மனதுக்குல் எவ்வளவு தூரம் அழுதிருப்பாள்? அதிலிருந்து என்னுடைய அந்த வலது கை வலியால் துடிக்க ஆரம்பித்தது. நாள் செல்லச்செல்ல அந்த வலி கூடிக்கொண்டே போனது. சொல்லொணாத் துயரம் அனுபவித்த நான் அந்தக் கையை அடிக்கடி கத்தியினால் கீறி காயமேற்படுத்திக் கொண்டேன். ஆனால் தாங்கள் எனக்கு அளித்த சிகிச்சையினால் ஒவ்வொரு முறையும் குணம் அடைந்தது. அப்படியும் எனக்கு நிம்மதி ஏற்படவில்லை.

நான் இப்பொழுது வாழ்க்கையின் கடைசிக் கோட்டில் நிற்கிறேன். எனது பாவச்செயலுக்கான இறுதி தீர்ப்பை நானே எழுதும் நேரம் வந்து விட்டது. டாக்டர் இனி என்னை காப்பாற்ற எவராலும் முடியாது. டாக்டர் நீங்கள் எவ்வளவோ கேட்டும் நான் உங்களிடம் மறைத்தது இதைத்தான். டாக்டர் நீங்கள் என் கையை காப்பாற்றத் தான் அப்படி கேட்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் எனது உயிரை உங்களால் ஒருபோது காப்பாற்ற முடியாது. இறுதியாக உங்களிடம் வேறொரு உண்மையை சொல்லிவிட்டு விடைபெறுகிறேன். எனது மனைவியின் கழுததை நெரித்து கொன்றபோது அவள் வாயிலிருந்து வெளிப்பட்ட ரத்தம் எனது கை மீது மட்டும் விழவில்லை. அவள் ஆத்மாவிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தின் இறுதித்துளி எனது கழுத்தில் சுருக்குக் கயிறாக தெரித்து விழுந்தது. அதுவே  தினம்தினம் மரண வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் எனது வலியைப் போக்க அவள் கொடுத்த இறுதிப்பரிசு. இனி எனக்கு வலி என்பதே இல்லை. இது எனது அன்பு மனைவி சாவின் பரிசு. மறுபடியும் என்னை மன்னித்து விடுங்கள் டாக்டர். இனி என்னால் உங்களுக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது.  கண்ணுக்கு தெரியாத என்னுடைய காயத்தின் கதையை உங்களுக்கு சொல்லிவிட்டேன். சென்று வருகிறேன் டாக்டர்.

அந்தக் கடைசி வாக்கியங்களை படிக்கும்போதே டாக்டரின் விழிகளை கண்ணீர் திரை மூடி மறைத்தது. 

அல்லது

அந்தக் கடைசி வாக்கியங்களை படிக்கும்போதே பொறுமையிழந்து போலிஸாரின் உதவியுடன் அவன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவன் கழுத்தை இடது கையினால் அறுத்துக்கொண்டு உயிரற்றுக் கிடந்தான். இனி என்றென்றும் கலையாத அவன் உறக்கத்தை கண்ட டாக்டரின் விழிகளை கண்ணீர் திரை மூடி மறைத்தது.

மூன்று தலைமுறைகள் இரண்டு மனிதர்கள் ஒரு வண்டி

சிறுகதை

ஆத்மாநாம்


சாத்தூர் செல்லும் பிரதான சாலையில் வில்வண்டி ஒன்று சென்று கொண்டிருக்கிறது.

அன்றைய பொழுது முனியன் வழக்கம்போல சந்தையில் இருந்து காய்கறிகளை இறக்கி விட்டு தனது வில்வண்டியில் சாத்தூரின் பிரதான சாலை வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தான். 

அன்று காலையிலிருந்தே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வண்டியில் பூட்டப்பட்டிருந்த மாடு வாயை அசை போட்டபடி மெதுவாக சாலையில் நடை போட்டுக் கொண்டிருந்தது. அதன் கழுத்தில் பூட்டப்பட்டிருந்த சலங்கைகள் அதன் நடைக்கேற்றவாறு ஒருவித  ராக லயத்துடன் 'ஜல்.. ஜல்.. ஜல்.. என ஒலித்துக் கொண்டிருந்தது. முனியனின் மனதிலோ பலவித நினைவுகள் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அன்று காலை அவனது மனைவி செல்லாத்தா அவர்களின் ஒரே மகன் ரங்கனுக்கு ஸ்கூல் ஆண்டு விழாவிற்காக புதுத்துணி ஒன்று வாங்கி வரக் கேட்டிருந்தாள். 

பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் அவனது மகன் ரங்கன் எப்போதுமே தனக்கு ஏதாவது வேண்டுமென்றால் தனது அப்பாவான முனியனிடம் நேரடியாக கேட்க மாட்டான். அவனது அம்மா மூலமாகவே கேட்பது வழக்கம். இன்றும் அப்படித்தான் கேட்டிருந்தான். முனியனும் எதாவது கேட்க வேண்டுமென்றால் அவனது அம்மாவிடமே கேட்பது வழக்கம். அது அப்படியே அச்சுப் பிசகாமல் தனது மகனிடம் வந்து சேர்ந்திருப்பது அவனுக்கு ஆச்சரியமாகவும் ஒரு வகையில் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இம்முறை செட்டியாரிடம் வாங்கிய கடன் அடுத்த மாதத்தில் தான் முடிகிறது. ஆனாலும் இன்று இரவு அவரிடம் பணம் கேட்டு பெற வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.  

இந்த நினைவுகளுடன் முனியன் வில்வண்டியை ஒருமுறை கவனமாக பார்வையிட்டான். அவனது முகத்தில் ஒரு பெருமிதம் தோன்றி மறைந்தது.  ஒருநாளில் ஒரு தடவையாவது அவன் இப்படிச் செய்வது வழக்கம். அந்த வில்வண்டி மீது அப்படியொரு வாஞ்சையிருந்தது முனியனுக்கு. 

அந்த வில்வண்டி அவனோடு சேர்த்தால் மூன்று தலைமுறைகளை வாழ வைத்துக் கொண்டிருந்தது. முனியன் அவனது அப்பா அவனது தாத்தா மூவரையும் ஒரே நேர்கோட்டில் இணைக்கும் சங்கிலித் தொடராக  அது இருந்தது.  நூற்றிருபது ஆண்டுகளுக்கும் மேலான வில்வண்டி அது. அந்த வில்வண்டியை பார்க்கும்போதே அதன் பாரம்பரியத்தை கண்டுகொள்ளலாம். வண்டி மீது பூசப்பட்டிருந்த வண்ணங்கள் சற்று மங்கியிருந்தாலும் அதன் தேக அமைப்பு கம்பீரமாகவே காட்சியளித்தது. அவ்வளவு பழமையானதாக இருந்தாலும் அந்த வில்வண்டி மீது முனியனுக்கு இருந்த நேசம் அளவிட முடியாதது. ஒரு வகையில் பார்த்தால் தனது பெற்ற பிள்ளையை போல அதை அவன் நேசித்தான். அதற்கான காரணமும் இருக்கத்தான் செய்தது. 

அந்த வில்வண்டி கிருஷ்ணாபுரம் மிராசுதாரரான அழகிரிசாமி நாயக்கரால் அவரிடம் வேலை செய்து கொண்டிருந்த முனியனின் தாத்தாவிற்கு தானமாக வழங்கப்பட்டது. அழகிரிசாமி நாயக்கர் தான தர்மங்களுக்கு கட்டுப்படாத ஒரு மனிதர். தனது அந்திம காலத்தில் தன்னால்  தர முடிந்தது இதுதான் என்று சொல்லி அவனது தாத்தாவிற்கு  வில் வண்டியை  கொடுத்ததை அப்பா மூலமாக கேள்விப்பட்டிருந்தான். வண்டியின் உட்புறமாக வலது பக்கத்தில் பாலிதீன் கவரால் பாடம் செய்து சொருகப்பட்டிருந்த அழகிரிசாமி நாயக்கரின் மங்கிய புகைப்படத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டான். மூன்று தலைமுறைகளை வாழவைத்துக் கொண்டிருந்த அந்த வில்வண்டியின் பிரம்மாண்ட வடிவமாக அவர் காட்சியளித்துக் கொண்டிருந்தார். 

தூரத்திலிருந்த சாத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் ஹாரன் சத்தம் கேட்டது. முனியனின் அந்த வில்வண்டி  சாத்தூர் பஸ் நிலையத்தை சமீபத்துக் கொண்டிருந்தது. 

ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு வண்டி பஸ் நிலையத்தை கடந்த போது சாலையின் ஓரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் வண்டியை நிறுத்தும்படி கைகளால் சைகை செய்தார். அவரது கால்களுக்கு அடியில் சில பைகள் வைக்கப்பட்டிருந்தது. முனியன் மாடுகளுக்கு "ஹோய் ஹோய்' என்று சத்தம் கொடுத்து கைகளில் பிடித்திருந்த தாரை இழுத்துப் பிடித்து  வண்டியை நிறுத்தினான். கீழே நின்றிருந்த அந்தப் பெரியவர் ’வண்டி எங்கே போகிறது’ என்று கேட்டார். ’ஐயா நீங்கள் எங்கே  செல்ல வேண்டும்’ என்று முனியன்  அவரிடம் கேட்டான். ’கிருஷ்ணாபுரம் குறுக்குச் சாலை வரை செல்ல வேண்டும்’ என்று அவர் சொல்ல ’நான் அந்த வழியாகத்தான் போகிறேன் ஏறிக்கொள்ளுங்கள்’ என்று முனியன் சொல்ல, அந்தப் பெரியவர்  மகிழ்ச்சியுடன் கீழே வைக்கப்பட்டிருந்த பைகளை எடுத்துக் கொண்டு வண்டியின் பின்னால் சென்று ஏறிக்கொண்டார். முனியன் திரும்பிப் பார்த்து அவரிடம் ‘கிளம்பலாமா ஐயா’ என்று கேட்டான். ‘போலாம்பா’ என்று சொன்னார். 

முனியன் கைகளில் இருந்த தாரை தளர விட்டு வண்டியை நகர்த்தினான். சாத்தூரின் பிரதான சாலையைத் தாண்டி இடது புறமாக திரும்பிய ஒரு குறுகிய சாலையில் முனியன் வண்டியை திருப்பினான். சாலையின் இருபுறமும் வயல்வெளிகள் அடர்ந்து காணப்பட்டது.  வில்வண்டி சீரான வேகத்துடன் அதன் சக்கரங்கள் சுழல இயற்கை கம்பளம் விரித்தாற் போன்ற அந்த குறுகிய சாலை வழியாக சென்று கொண்டிருந்தது.

அப்போது வண்டியில் அமர்ந்திருந்த அந்தப் பெரியவர் வண்டியின் அதன் உட்புறத்தை சற்று நோட்டமிட்டார். அப்போது வண்டியின் முன்பக்கத்தில் சொருகப்பட்டிருந்த அழகிரிசாமி நாயக்கரின் புகைப்படம் அவரது கண்களில் தென்பட்டது. ஒருகணம் அவர் முகத்தில் ஆச்சரியத்தின் ரேகைகள் மின்னி மறைந்தது. சாத்தூரில் இருந்தே பேசாமலிருந்த அவர்  இப்போது வண்டியை கவனமாக ஓட்டிக் கொண்டிருந்த முனியனைப் பார்த்து ‘உன் பெயர் என்னப்பா என்று’ கேட்டார். ‘முனியனுங்கய்யா’ என்று சொன்னான். ’இந்த வண்டி உன்னோட சொந்த வண்டியாப்பா’ என்று கேட்டார். அவன் சிறிது தயங்குவது போல் தெரிந்தது. அவர் அவனது பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். சில நொடிப்பொழுது அவகாசத்திற்கு பின் ’இல்லீங்கய்யா’ என்று சொன்னான். ’அப்படின்னா இந்த வண்டியை வாடகைக்கு எடுத்து ஓட்டறியா’ என்று அவர் கேட்க முனியன் ’இல்லை’ என்பது போல் தலையாட்டினான். ’அப்போ யாரோட வண்டிப்பா இது’ என்று கொஞ்சம் அழுத்தமாகவே கேட்டார். அப்போது மாலையின் வெக்கைக்கு இதமாக  குளிர்ந்த காற்று ஒன்று அவர்களிருவையும் தழுவிச் சென்றது. அவன் புன்னகை தோய்ந்த முகத்துடன் உள்ளிருக்கும் அவரை திரும்பிப் பார்த்தான். அவரோடு சேர்ந்த நிலையில் அழகிரிசாமி நாயக்கரின் முகம் காட்சியளித்தது. ‘ஐயா இந்த வண்டியை பத்திச் சொல்லணும்னா எவ்ளோ சொல்லலாம். இந்த வண்டிக்கு  அவ்ளோ பெரிய கதை இருக்கு. ’சொல்லலாங்களாய்யா’ என்று முனியன் அவரிடம் கேட்டான். அவரும் அவனிடம் ஏதோ மிகப்பெரிய பதிலுக்காக காத்திருந்தார் போல் ‘பீடிகையெல்லாம் எதுக்கு முனியா. தாராளமா சொல்லு’ என்று அவன் பெயரை உரிமையுடன் அழைத்த நிலையில் சொல்ல, அதைக்கேட்டு முகம் மலந்த முனியன் வண்டியின் கதையைப் பற்றி சொல்லலானான். 

’ஐயா இந்த வண்டிய அவ்ளோ அல்ப சுல்பமாவெல்லாம் நெனக்க்க் கூடாதுங்கய்யா. எனக்கு மட்டுமில்ல. எங்க அப்பா, என்னோட தாத்தா மூணு பேருக்கும் இது தாய்யா ஒரே சொத்து. அதோ வண்டிக்குள்ள ஒரு போட்டோ இருக்கே.. பாத்தீங்களா’ என்று திரும்பியவாறு கேட்டான். 

அவர் புன்னகையுடன் ‘பார்த்தேன்’ என்பது போல் தலையாட்டினார். 

முனியன்  தலையை சாலை பக்கமாக ஓட்டியவாறு பேசத் தொடங்கினான். ’அவரு தான்யா கிருஷ்ணாபுரத்து மிராசுதார் அழகிரிசாமி ஐயா.. தான தருமத்துக்கு பேர் போனவரு. அவர பத்தி சொல்லனும்னா கூட எவ்வளவோ சொல்லம்யா..எங்க தாத்தா அவரு கிட்ட தான் வேலை செஞ்சிகிட்டிருந்தாரு. அவுரோட கடைசி காலத்துல எங்க தாத்தாவுக்கு கொடுத்த வண்டி தான்யா இது. அவ்ளோ கம்பீரமான வண்டிங்கய்யா இது. இப்பவே இப்படி இருக்குன்னா.. எங்க தாத்தா காலத்துல எப்பிடி இருந்துருக்குன்னு பாருங்களேன்’

’நீ அவர பாத்திருக்கியா முனியா’

‘அந்த கொடுப்பின எனக்கு இல்லிங்கய்யா.. ஆனா எங்கப்பா அவர ரெண்டு மூணு தடவ பாத்ததா சொல்லியிருக்காரு.. ஐயாவோட இந்த போட்டோ கூட அப்பா அவரு கிட்ட கேட்டு வாங்கியாந்தது தான். எங்க அப்பாரு எனக்கு இந்த வண்டிய தந்தப்போ  இருந்த போட்டோ அப்டியே அதே இடத்துல இருக்கு. என்ன.. கலரு தான் கொஞ்சம் மங்கிப்போச்சு.’

’உனக்கு பிள்ளைங்க எத்தன பேரு’

‘ஒரே பையன் தான்யா. பேரு ரங்கன். எங்கப்பாவுக்கு நான்  ஒரே பிள்ளை.  அதே போல எனக்கும் ஒரே பிள்ளை..’ 

’பையன் படிக்கிறானாப்பா’

‘ஆமாங்கய்யா.. பத்தாங்கிளாஸ்.. படிப்புல ரொம்ப கெட்டி..’ என்று சொல்லும்போது காலையில் செல்லாத்தா சொன்னது ஞாபகத்து வந்தது., அந்த நினைவு சில கணங்கள் அவனை மௌனத்திலாழ்த்தியது. அப்போது அவரின் குரல் அவனை நினைவுக்கு கொண்டு வந்தது. 

‘என்ன முனியா.. திடீர்னு பேச்ச நிறுத்திட்ட..’

‘ஏதோ வீட்டு ஞாபகம் அதான்யா’

‘அப்புறம் உங்கய்யா பத்தி சொல்ல நெறைய இருக்குன்னு சொன்னியே..’ 

இதைக்கேட்டதும் முனியன் சற்று ஆர்வமானான். 

’ஐயாவ நா நேர்ல பாக்கலன்னாலும் எங்கப்பா அவர பத்தி நெறைய சொல்லியிருக்காரு.. அவங்க ஊர்ல மட்டும் இல்லாம சுத்துபட்டு ஊருக்கெல்லாம் எவ்ளவோ தான தருமங்க செஞ்சிருக்காரு.. பள்ளிக்கூடம் கட்டி தந்துருக்காரு நெறைய குளங்கல தூர் வாரியிருக்காரு.. கோயில் கொடன்னு வந்துட்டா அவரு காசுல திருவிழாவே நடக்குமாம்.. உதவின்னு அவராண்ட போயி யாரு நின்னாலும் வெறுங்கையோட திரும்புனதில்லையாம்’ 

இதை முனியன் சொல்லியவாறு முனியன் உட்புறமாக திரும்பிப் பார்த்தான். உள்ளிருந்தவர் அவன் சொல்வதையே புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் எதிரில் இருந்த அழகிரிசாமி ஐயாவும் அதே புன்னகையுடன் முனியனை பார்த்துக் கொண்டிருந்தார். 

’இப்படியே செஞ்ச தர்மங்களால ஐயாவோட கடைசி காலத்துல கொஞ்சம் நொடிஞ்சி போய்டதா எங்கப்பா சொன்னாரு. அவரு இறப்புக்கு போனப்போ கூட்டம்னா கூட்டம். அவ்ளோ கூட்டங்களாம்.. அவரோட தான தருமத்தோட பலன அப்ப தான் நேர்ல பாத்ததா எங்கப்பா சொன்னாரு.. அந்த வாரம் முழுக்க இதையே பாக்கறவங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டிருந்தாரு.. அவரு எங்கிட்ட சொன்னதத் தான் நா உங்ககிட்ட சொல்லிட்டிருக்கேன்..’  

இதைச் சொல்லி முடிக்கும்போது இம்முறை முனியன் உட்பக்கம்  திரும்பவில்லை. சாலையை மங்கலாக்கி மாடுகளிரண்டும் நடை போட்டது. முனியன் கண்களில் நிழலாடிய நீர்த்துளிகளை தோளில் இருந்த துண்டால் ஒற்றியெடுத்தான். 

சற்று நேரம் இருவருக்கும் மத்தியில் மௌனம் நிலவியது. வண்டிச் சத்தத்தை தவிர அப்போது வேறெந்த சத்தமும் இல்லை. 

உள்ளிருந்தவர் சற்று தொண்டையை செருமிக் கொண்டார். அதைக்கேட்டு முனியன் அவர் பக்கம் திரும்ப..

‘அது சரி முனியா.. நா ஆரம்பத்துல வண்டி உன்னதான்னு கேட்டப்போ இல்லன்னு சொன்னியே.. அதான் உங்க அழகிரிசாமி ஐயா உங்க தாத்தாவுக்கு வண்டிய கொடுத்திட்டதா  சொல்றியே.. அப்படின்னா வண்டி உங்களோடது தானே.. அத சொல்ல ஏம்பா அவ்ளோ தயக்கம்’

இம்முறை முனியன் அழுத்தமாகவே உட்புறமாக திரும்பி ’ஐயா இது என்னோட வண்டின்னு சொல்ல அரம்பிச்சிட்டா.. நாளாவ நாளாவ ஐயா மேல எனக்கிருக்கற அன்பு எங்க கொறஞ்சிடுமோன்னு எனக்குள்ள ஒரு தயக்கம் அதான்.. எப்ப யாரு கேட்டாலும் உங்களுக்கு சொன்ன அதே பதில தான் சொல்லிட்டு வாரேன்’ என்று கூறினான். 

சில கணங்களுக்கு பிறகு ‘அது மட்டுமில்லங்கய்யா..’ என்று முனியன் வாயெடுக்கும் முன் உள்ளிருந்தவர் அவன் பேசுவதை தடுத்து ‘எங்க தாத்தாவும் அப்பாவும் கூட இப்டியே தான் சொல்லிட்டு வந்திருக்காங்கன்னு சொல்லுவியே’ என்று கேட்டு சிரித்தார். முனியனும் அதை ஆமோதிப்பது போல் சிரித்தான். அழகிரிசாமி ஐயாவும் இதை சிரித்தவாறே பார்த்துக் கொண்டிருந்தார். வண்டியில் இருந்த மாட்டின் சலங்கைகள் எழுப்பிய சத்தமும் அப்போது கலகலவென சிரிக்கிறார்போல் இருந்தது. 

வெகுதூரத்தில் கிருஷ்ணாபுரம் குறுக்குச்சாலை புள்ளியாக தெரிந்தது. 

உள்ளிருந்தவர் முனியனை அழைத்தார். அவன் அவரை திரும்பிப் பார்க்க அவரிடமிருந்த ஒரு பையை எடுத்து முனியனிடம் கொடுத்தார். 

‘என்ன்ங்கய்யா இது’ என்று முனியன் கேட்டான். 

’இதுல ஒரு பேண்ட் சர்ட் இருக்கு. பையனுக்கு கொடு’ என்றார். 

அவன் சற்று பதட்டத்துடன் ’அதெல்லா வேண்டாங்கய்யா’ என்றவாறு அவரிடமே பையை நீட்ட முனையும்போது, அவர் தடுத்து 

‘முனியா இதெல்லாம் என் சொந்தக்கார பிள்ளைகளுக்காக வாங்கியது. அதுல ஒரு பிள்ளையா ஒம் மகன நெனச்சிட்டு போறேன்.’ இதற்கு மேல் முனியனால் மறுக்க முடியவில்லை.

மேலும் அவர் தனது சட்டைப் பையிலிருந்து சிறிது பணத்தை எடுத்து அவனது சட்டைப்பையில் திணிக்க ‘ஐயா..’ என்று அவன் மறுபடியும் இழுக்க ‘துணிய தைக்க வேணாமா?’ என்று சிரித்தவாறே சொன்னார். அதற்குள் கிருஷ்ணாபுரம் குறுக்குச்சாலை வந்துவிட இதை கவனித்துவிட்ட அவர் ‘முனியா நா இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு. வண்டியை நிறுத்திக்கோ’ என்று சொல்ல முனியன் வண்டியை நிறுத்தினான். பைகளுடன் கீழிறங்கிய அவர் ‘பையன நல்லா படிக்க வைப்பா’ என்று  சோலியவாறே வண்டியின் முன்பக்கமாக வந்து நின்றார். 

’சரிப்பா.. நா வரட்டுமா’ என்று சொல்லி நகர ஆரம்பித்தார். அப்போது முனியன் ஏதோ நினைத்துக் கொண்டவனாய்  ’ஐயா மன்னிச்சுக்கங்க.. நீங்க யாருன்னு நான் கேக்கவே இல்ல.. ‘

அவர் புன்சிரிப்புடன் முனினைப்பார்த்து ‘நீ இவ்ளோ நேரம் சொல்லிட்டிருந்தயே. அந்த அழகிரிசாமி அய்யாவோட பேரன் தான் நான்’ என்றதும், முனியனுக்கு வெலவெலத்து போய்விட்டது. உடனே அவன் சுதாரித்துக்கொண்டு வண்டியிலிருந்து சடாரென கீழே குதித்து அவரிடம் ஓடிச் சென்று அவர் கைகளை பிடித்துக் கொண்டான்.

அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. நாத்தழுதக்க ‘ஐயா நா எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்.. என்ன பத்தியே பேசிட்டிருந்த நான் உங்கள மறந்திட்டேனே..’ என்று சொல்ல, அவர் அவன் கைகளை ஆதரவுடன் பற்றியவாறு ‘நீ எதையுமே நீ மறக்கலப்பா.. இன்னிக்கு பாக்கற ஒருத்தர நாளைக்கு தெரியலன்னு சொல்ற உலகத்துல மூணாவது தலைமுறைல உதவி செஞ்ச ஒரு மனிதரைப் பத்தி இன்னிக்கும் நெனச்சிட்டிருக்கியே.. அத என்னன்னு சொல்றது.. உன்னப்போல நானும் என் தாத்தாவ பாக்கல.. ஆனா இன்னிக்கு உன் மூலமா அவர பாத்தாப்போல இருக்கு. சரி நீ கிளம்பு. அதிர்ஷ்டம் இருந்தா இன்னொரு முறை சந்திக்கலாம்’ என்று சொல்லி பைகளை கையில் எடுத்துக்கொண்டார்.

‘ஐயா வீடு வரைக்கும் கொண்டு வந்து விடறேனே..’

‘வேணாம் முனியா.. இங்கிருந்து நடந்து போறது தான் என்னோட வழக்கம்.’ என்று சொல்லியவாறு நடக்க ஆரம்பித்தார். 

போகும்போதே அவர் குரலை சற்று உயர்த்தி ‘முனியா இது ஒன்னோட வண்டி தான். இனி யாரு கேட்டாலும் அதையே சொல்லு. ஐயா இருந்தாலும் இதையே தான் சொல்லியிருப்பாரு..’ 

முனியன் அவர் போவதையே நன்றி உணர்ச்சி மேலிட சிறிது நேரம் பார்த்துக்கொண்டு நின்றான். பின் வண்டியில் சென்றமர்ந்து மாடுகளை தட்டிக்கொடுத்து குரல் கொடுத்தவாறு கையிலிருந்த தாரை தளரவிட்ட்டான்.

அன்றைய நினைவுகளை தாங்கியவாறு அந்த வில்வண்டி அங்கிருந்து நகர ஆரம்பித்தது.

தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்

 நா.மம்மது  உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...