Monday 26 March 2018

அகஸ்தோ போவால் : கண்ணுக்கு புலப்படாத தியேட்டர்




ஆசிரியர் பற்றிய குறிப்பு :

1931-ல் பிரேஸில் நாட்டிலுள்ள ரியோலில் பிறந்த அகஸ்தோ போவால் 1956-லிருந்து பிரேஸில் உட்பட பல நாடுகளில் பிரச்சினைக்குரிய நாடகங்கள் பலவற்றை நிகழ்த்தியவர். பிரேஸிலில் சனநாயகத்தை மீட்பதற்கான முயற்சிகளில் ஒன்றாகவே அவரது நாடகங்கள் அமைந்தன. இதன் காரணமாக 1971-ல் அவரது நாடகக்குழு தாக்கப்பட்டது. கைது, சிறையில் சித்திரவதை என்ற அனுபவ பின்னணியில் அவர் உருவாக்கிய Invisible Theatre- ஐ ‘புரட்சிக்கான முன் ஒத்திகை’ என்கிறார்.  Legislative Theatre என்கிற புதுவித அரங்கை உருவாக்க முயற்சித்து வரும் போவால் 1995-ல் ரியோலில் நகரசபை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு

”ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு’ நாடகமென்பதை பேசப்படுவதற்கான மொழியாக அடையாளப்படுத்துகிறது. கவனித்துக் கொண்டிருக்க வேண்டியதொரு உரையாடலாக அல்ல. அது மட்டுமன்றி நாடகமென்பது மேலும் செழுமைப்படுத்த வேண்டியதொரு நடைமுறை தானேயொழிய நுகர்வதற்கு தயாராகி தயாரித்து வைக்கப்பட்டிருக்குமொரு பண்டம் அல்ல என அது வலியுருத்துகிறது. ’ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு’ நாடகம் என்பதன் சாதாரண எல்லைகளை தாண்டிச் செல்கிறது. ஏனென்றால் அது ஒடுக்கப்பட்ட மக்களை நாடக நடவடிக்கைக்கான சடப் பொருட்களாக கருதாமல் தன்னிலைகளை அங்கீகரிக்கிறது. இது மட்டுமன்றி ’ஒடுக்கப்பட்டோரது அரங்கு’ வாழ்வின் பிற துறைகளான விளையாட்டு, அரசியல், மனோவியல், தத்துவம் என எல்ல்லாவற்றையும் நோக்கிச் செல்கிறது. நாடகம் போலவே அவற்றையும் பல்வேறு கூறுகள் இணைந்த துறைகளாக அது அங்கீகரிக்கிறது.”

அகஸ்தோ போவால்





சில கேள்விகளும் பதில்களும் :


இன்விசிபிள் தியேட்டர்என்பதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா?

முதலில் அது தோன்றிய விதத்தை சொல்கிறேன். 1971-ல் நான் பிரேஸில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். அப்புறம் விடுதலை செய்யப்பட்டு அர்ஜெண்டினாவுக்குப் போனேன். நாங்கள் அங்கே ஒரு நாடகத்தை தயாரித்தோம். அர்ஜெண்டினாவில் எந்த ஒரு குடிமகனும் பசியால் சாகக்கூடாது எனக்கூறும் அந்நாட்டின் சட்டத்தைப் பற்றிய நாடகம் அது. அந்தச் சட்டத்தின்படி நீங்கள் பசியோடிருந்தால் எந்தவொரு ஓட்டலுக்கும் சென்று, இனிப்பும் ஒயினும் தவிர உங்களுக்கு வேண்டியதை வாங்கிச் சாப்பிடலாம். பில் வந்தால் அதில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு பணம் ஏதும் தராமலே போய்விடலாம். ஏனென்றால் சட்டத்தின் பாதுகாப்பு உங்களுக்கு இருக்கிறது. ஆனால் உண்மையிலேயே இப்படிச் செய்தால் என்ன நடக்கும். இதற்காகத்தான் நாங்கள் அந்த நாடகத்தை தயாரித்தோம். அந்த நாடகத்தை எழுதுவதற்கு நான் உதவினேன். அதைத் தெருவுக்கு எடுத்துச் சென்று அங்கே போடுவதென முடிவு செய்தோம். “நான் இதில் நடிக்க மாட்டேன். ஏனென்றால் போலிஸ் என்னைக் கைது செய்தால் மீண்டும் பிரேஸிலுக்கு அனுஒப்பி விடுவார்கள்” என்று அவர்களிடம் கூறினேன். “இல்லை இல்லை, இந்த நாடகத்தை நீங்கள் பார்த்தே ஆக வேண்டும். போலிஸ் வருமென்பதால் தான் நீங்கள் தெருவுக்கு வரவில்லையென்றால் இந்த நாடகத்தை உண்மையான ஓட்டல் ஒன்றிலேயே போடுவோம். இது நாடகம் என்று சொல்லாமல் போடுவோம். நீங்கள் அங்கே முன்பே போய் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்றார்கள். நாங்கள் ஒரு ஓட்டலுக்கு போய் அந்த நாடகத்தை போட்டோம். அது நாடகம் தான் என்பதை யாருக்கும் கூறவில்லை. ஒரு நடிகர் ஒரு பக்கம் அமர்ந்தார். இன்னொரு நடிகர் இன்னொரு பக்கம் அமர்ந்தார். நான் ஒரு பக்கம் அமர்ந்து கொண்டேன். வெளியிலிருந்து ஓட்டலுக்குள் ஒரு நடிகர் நுழைந்தார். தான் ஒரு அர்ஜெண்டினா குடிமகன் என்றும், த்னக்கு பசிக்கிறது ஆனால் இனிப்பு ஒயின் இரண்டும் வேண்டாம் என்றும் கூறினார். அபோது வெயிட்டர் அங்கு வந்து “உனக்கு என்ன வேண்டாமென்று சொல்லாதே எது வேண்டுமோ அதை கேள்” என்றார். உடனே நடிகர் “எனக்குக் கொஞ்சம் கறி, இரண்டு முட்டை இதெல்லாம் வேண்டும். ஆனால் இனிப்பும் ஒயினும் வேண்டாம்” என்றார். அதன் பிறகு உணவைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டார்கள். அந்த நடிகர் பில்லில் கையெழுத்து போட்டார். அந்த வெயிட்டர் வந்தார். என்ன பேசுவாரென நாங்கள் நினைத்தோமோ அதையே பேசினார். எங்கள் நடிகர்களிலேயே ஒருத்தர் வெயிட்டராக நடிப்பதாக இருந்த்து. ஆனால் அவர் குறுக்கிட வேண்டிய தேவை இல்லாமல் நிஜமான வெயிட்டரே நாங்கள் எதிர்பார்த்திருந்ததை பேசிவிட்டார். வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்த நடிகர்கள் இயற்கையாக நடப்பது போலவே பலவற்றை விவாதிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் அங்கு நடந்தவை எல்லாமே முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்தன. அந்த நிகழ்வு மிகவும் சக்திமிக்கதாக, வலிமை வாய்ந்த்தாக முழுக்க முழுக்க நாடகத்தின் ஆற்றல் நிரம்பியதாக இருந்த்து. பிறகு நான் உணர்ந்து கொண்டேன். இது ஒரு புதுவகையான நாடகவடிவம் அதாவது இன்விசிபிள் தியேட்டர். ஏனென்றால் உங்களுக்கு நடப்பது நாடகமெனத் தோன்றுவதில்லை.



அங்கே அதற்கான எதிர்வினை எப்படியிருந்தது ?

மிகவும் நன்றாக இருந்தது. அவர்கள் விவாதத்தில் பங்கேற்று பலவற்றையும் பேசினார்கள். ’அர்ஜெண்டினாவில் இவ்வளவு உணவு இருக்கும்போது மக்கள் ஏன் பசியால் சாகிறார்கள்?’ என்று விவாதித்தார்கள். பெண்கள் மீதான ஒடுக்குமுறை பற்றி ஒரு நாடகம் போட்டோம். அது இத்தாலியில் நடந்த்து. பெண்களுக்கான பொருட்கள் விற்கிற கைடைக்கு ஒரு ஆணும் பெண்ணும் போகிறார்கள். அந்தப் பெண் எதையோ வாங்க வேண்டும் என்கிறாள். அவன் வேண்டாம் வா என்கிறான். அவர்கள் சாதாரணமாகத்தான் இதைச் செய்தார்கள். அவன் அவளது சட்டைக் காலரைப் பிடித்து இழுக்கிறான். அப்போது அங்கே இன்னொரு நடிகை வருகிறாள். ‘அவன் இப்படிப் பிடித்து இழுக்க நீ அனுமதிக்கலாமா?’ என அந்தப் பெண்ணிடம் கேட்கிறாள். ‘ஏன் இழுத்தால் என்ன? அவர் என்மேல் எவ்வளவோ பிரியம் வைத்திருக்கிறார்’ என்கிறாள் அந்தப் பெண். அப்போது இன்னொரு பெண் அங்கே வந்து பெண்கள் மீதான ஒடுக்குமுறை பற்றிப் பேசுகிறார். நான் இந்த நாடகத்தைப் பல நாடுகளில் போட்டிருக்கிறேன். சுவிட்சர்லாந்தில் இந்த நாடகத்தை போட்டபோது 15 நிமிடங்களில் போலிஸ் வந்து விட்டது. இதையே மாற்றி ஒரு பெண் ஒரு ஆணின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துப் போவதாக காட்டியபோது ஒரு நிமிடம் ஆவதற்குள்ளாகவே போலிஸ் வந்து விட்டது. மேற்கொண்டு தொடர அனுமதிக்கவும் இல்லை.  இதுதான் ‘இன்விசிபிள் தியேட்டர்’. இது அவசியத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்று.


ஒரு ‘இன்விசிபிள் தியேட்டர்’ நிகழ்வு எப்போது முடிகிறது ?

‘இன்விசிபிள் தியேட்டர்’ முடிவதே இல்லை. ஏனென்றால் மனிதர்களாகிய நாம் முடிந்து விடுவதில்லை.

ஆனால் நிகழ்ந்து கொண்டிருப்பதிலிருந்து நடிகர்கள் விலகிக் கொள்கிற ஒரு கணம் இருக்கத்தானே செய்யும் ?

ஆமாம் ! ஆனால் நடிகர்கள் விலகும்போது வேறு சில நடிகர்கள் அங்கேயிருந்த மக்களிடம் உரையாடலைத் தொடர்வார்கள். அவர்களுக்கு தகவல்களைத் தருவார்கள். இப்படியிருக்கும் நடிகர்கள் நாடகத்தினுள் முக்கிய கதாபாத்திரங்களாக வருவதில்லை. நாங்கள் நிறவேற்றுமையைப் பற்றி ஒரு நாடகம் போட்டோம். அதில் பத்துக்கும் மேற்பட்ட நடிகர்கள் பங்கேற்றனர். அது பட்டறையும் கூட. அதில் முக்கிய நடிகர்கள் வெளியேறிய பின்னரும் சுமார் மூன்று மணி நேரத்துக்கு நாடகம் தொடர்ந்த்து. நாங்கள் விரும்புவதெல்லாம் விவாதம் தொடர வேண்டும். இதுபோலத்தான் ‘ஃபோரம் தியேட்டரிலும்’. நாங்கள் முடிக்க விரும்புவதில்லை. சரியான தீர்வு இதுதான் என்று சொல்ல நாங்கள் விரும்புவதில்லை. தீர்வுகளைப் பற்றி சிந்திப்பதற்கு மக்களைப் பழக்கப்படுத்த வேண்டும். ஏனென்றால் இன்றைக்கு நாம் கண்டடைகிற தீர்வு நாளைக்கே சரியான தீர்வாக இல்லாமல் போய்விடலாம்.


ஆக, நாடக நிகழ்வு முடிந்து விடுகிறது. உரையாடல் தொடர்கிறது அல்லவா ?


ஆமாம், உரையாடல் தொடர்கிறது. நாடகம் என்பது ஒருவர் தன்னைத்தானே அறிந்து கொள்ளும் ஒரு கலை. அப்படியே அது தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நம்மை நாமே அறிவது, மற்றவர்களை அறிந்து கொள்வது. ’ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு’ எதிர்காலத்தை உருவாக்க முற்படுகிறது. அது அதற்காகக் காத்துக் கொண்டிருப்பதில்லை. ஆக, அது எப்போதும் மாற்றத்துக்கு உள்ளாகிக் கொண்டேயிருக்கிறது. 



நன்றி : உரையாடல் தொடர்கிறது நூல் (தமிழில் : ரவிக்குமார்)


No comments:

Post a Comment