Monday 26 March 2018

சிட்டகாங் : கத்தியோடும் ரத்தத்தோடும் சுதந்திரம்





புரட்சியாளர்கள் இந்திய விடுதலைக்குரிய வழியாக தேர்ந்தெடுத்த பாதை என்பது….

‘வெளியிலிருந்து ஒரு வல்லரசின் உதவியைப் பெறாமல் இந்தியாவைச் சுதந்திர பூமியாக்க முடியாது ; இப்படித்தான் பயங்கரவாத்த்தில் தோய்ந்திருந்த புரட்சிக்காரர்கள் எண்ணுவது வழக்கம். ஒரு சில அரசாங்க , சில ஐரோப்பியர்களையோ அல்லது போலிஸ் ஆபிஸர்களையோ கொன்று விடுவதனால் பிரிட்டிஷ் அரசாங்கத்தை தகர்த்துவிட முடியாதென்று அவர்கள் ஏற்கனவே கண்டுகொண்டார்கள். அதன் விளைவாக புரட்சிக்காரர்கள் மனமொடிந்து அவநம்பிக்கையில் மூழ்கியிருந்தார்கள். செயலிழந்து நிற்கும் இந்த நிலையை போக வேண்டும் என்று சிட்டகாங்கிலுள்ள இளம் புரட்சிக்காரர்கள் விரும்பினார்கள்.




வெளிநாட்டு உதவியில்லாமலேயே அரசாங்கத்தோடு போராடுவது சாத்தியம் என்பதைக் காட்டித் தன்னம்பிக்கையைத் திரும்பவும் ஊட்டவேண்டுமென்பது அவர்கள் விருப்பம். இதற்கு அவர்கள் போட்ட திட்டம் என்ன? ஆயுதங்களைக் கொண்டு வெளிப்படையாக போர்தொடுப்பது, அரசாங்க ஆயுதச் சாலையைச் சூரையாடி அங்குள்ள அங்குள்ள ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்கு விரிவான திட்டம் வகுத்து தை நிறைவேற்றுவது, போக்குவரத்து சாதனங்களை சின்னா பின்னாப் படுத்தி இந்தியாவின் இதர பகுதிகளிலிருந்து அரசாங்கத்துக்கு படையும், ஆயுதமும் வராமல் தடை செய்வது தனிப்பட்ட ஐரோப்பியர்களைத் தாக்காமல், அவர்கள் கூட்டமாக கூடியிருக்கும் ‘கிளப்’பைச் சூறையாடி அங்கே அவர்களோடு போர்தொடுப்பது. இதுதான் அவர்கள் திட்டம். ஒரு வாரத்திற்கு சிட்டகாங் சுதந்திரமாக இருக்கும். அதன்பிறகு சிட்டகாங்கை பிடிப்பதற்கு அரசாங்கத்தார் துருப்புகளைக் கொண்டுவந்தால், எதிரிக்கு கொஞ்சம் கூட இடம் கோடுக்காமல் போராடி அவர்கள் உயிர் விடுவார்கள். குறுகிய காலத்தில் தாங்கள் காட்டிய இந்த வீரதீரச் செயல் நாடு முழுவதும் பரவி எதிரொலிக்கும். தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடும்படி புதிய சந்த்தியாளர்களுக்கு இது ஒரு ஆவேசத்தை உண்டுபண்ணும் என்று அவர்கள் எண்ணினார்கள்” அவ்வாறே செயல்பட்டார்கள்.

ஒரு கட்டத்தில் பயங்கரவாதப் பாதையிலிருந்து சரியான வழியில் செல்ல வைத்ததும் அவர்களுள் மூண்டெழுந்த சுதந்திர வேட்கைதான் என்பதையும் சுட்டிக்காட்டும் கல்பனாதத்…




”என்ன செய்வதென்றே தெரியாமல் நம்பிக்கை இழந்து நிற்கும் ஒரு நிலையை தோல்வியென்பதையே அறியாத அவர்களது இதயத்தை என்றும் பீடித்ததில்லை. அரசாங்க அடக்குமுறை அவர்களை நசுக்கிவிட முயன்றது வாஸ்தவம்தான். ஆனால் மக்கள் மீது வைத்திருந்த மரியாதையையும், அன்பையும் ஒரு கணமேனும் இவர்கள் இழந்திருந்தார்கள் என்று சொல்லமுடியாது. உணர்ச்சியற்ற நிசப்தமயமான சிறைச்சாலை அறையில் புதிய கொள்கைகளைப் படித்து ஆராயவும், அவற்றை அங்கீகரிக்கவும் போதிய அவகாசமும், சந்தர்ப்பமும் அவர்களுக்கு கிடைத்தன.

எனவே, கடைசியாக கம்யூனிஸ்ட் தத்துவத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். தோழமையுணர்ச்சி, கட்டுப்பாடு, தன்னலமற்ற தன்மை யாவும் தங்களுடைய இயக்கத்தில் இருப்பது போலவே, கம்யூனிசத்திலும் மிளிர்வதைக் கண்டார்கள். தனி நபர்களாக நின்று புரியும் வீரச் செயல்கள், அளவிலா தியாகம், லட்சியத்திற்கு செலுத்தும் பக்தி இவை மூலம் தேச விடுதலையைப் பெறலாம் என்று இந்த ஆண், பெண் வீரர்கள் கண்டு வந்த கனவுகள் மறைந்தன. அது குறுகிய கண்ணோட்டமுடையது என்பதை கண்டறிந்து அதனை விட்டொழித்தனர். கம்யூனிஸ்ட் தத்துவம் காட்டியழைத்த பாதையிலே காலடி வைத்தனர். தனி நபர்களின் வீரமும், பெருந்தன்மையும் போதாது ; ஒருசில வாலிபர்களின் நெஞ்சிலே வீர உணர்ச்சியையும், தேச பக்தியையும் சுடர்விட்டு பிரகாசிக்கும்படி செய்ய பாடுபடுவது மட்டும் லட்சியத்தை அடைவதற்கு போதுமானதாகாது. மக்களைப் பார். அந்த கோடானு கோடி மக்களைத் தட்டியெழுப்பி விடுதலைப் பாதையிலே திருப்பி விடு. தங்களுடைய பலத்தையும், பரம்பரை மேன்மையையும் மக்களுக்கு உணர்த்தி  வீறுகொண்டு எழச் செய். கம்யூனிஸ்ட்  தத்துவம் காட்டிய தெளிவான பாதை இது. விசாலமான பாதை இது. மக்கள் சமூகத்தையே வீரர்களாக்கவல்ல போர்ப்பாதை இது என்பது அவர்களுக்கு புலப்பட்டது.

அவர்களைப் பரிபூரணமாக ஆட்கொண்டுவிட்ட அதே சுதந்திர வேட்கை இந்தப் பாதைக்கு திரும்பும்படி அழைக்கிறது. அதேகாலத்தில், வீரபுருஷர்களாக தனித்து நின்று போராடித் திகழும் கூட்டமாக விருப்பத்திற்கு பதிலாக, மக்கள் மத்தியில் வந்து அவர்களை திரட்டும் பணியில் இறங்கும்படி கேட்கிறது. பழைய பாதையின் தொடர்ச்சியாகவே அவர்கள் இந்த புதிய பாதைக்கு திரும்பி விட்டனர் ; திரும்பும்போது பழைய புரட்சி இயக்கத்துடன் தொடர்பை அறுத்துக் கொள்ளவும் வேண்டியதாயிற்று ; சுதந்திரத்திற்காக அன்றே அர்பணித்து விட்ட அவர்களது வாழ்க்கையும், அவர்களை வசீகரித்துவிட்ட விடுதலை வேட்கையும் சேர்த்து இன்று கம்யூனிசத்திற்கு திரும்பி விட்டது.”




இந்த வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் மகத்தான தியாகங்களைச் செய்தும், தங்களது வாழ்க்கையின் சிறந்த பகுதியைத் தேச்சேவைக்கு அர்ப்பணம் செய்தும், இன்று தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களைத் தலைமைப் பீடத்தில் அமர்த்தினார்கள். “வங்கத்தாயின் வீரப்புதல்வர்கள் விலையற்ற ரத்தம் தோய்ந்து புனிதமடைந்திருக்கும் இந்த வங்கத்தின் மண்ணின் மீது நின்றுகொண்டு ஏளனத்திற்கிடமான இப்படிப்பட்ட தலைமைப் பதவியில் இன்னும் இருந்து வருவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டும் இந்த தலைவர்களை நான் இன்று கேட்க விரும்புகிறேன். கேட்காமல் விட, என் நெஞ்சு பொறுக்குதில்லையே !

சிட்டகாங் மாறிய வரலாற்றின் மறுபெயர்



கல்பனாதத்
(கல்பனாதத் எழுதிய ’சிட்டகாங் வீரர்கள்’ நூல் முன்னுரையில்)

No comments:

Post a Comment