Thursday 8 March 2018

ஜென் கதைகள் – கவிதைகள்




ஒரு பழைய குட்டை
தவளை குதிக்கிறது
க்ளக்.

ஆளரவமற்ற அமைதியான சூழ்நிலையில் ஒரு சிறிய ஒலி கேட்கிறது. அந்த ஒலி நிசப்தத்திற்கு அழுத்தமும், அர்த்தமும் தருகிறது. அவ்வளவு மெலிதான ஒலி கேட்கும் அளவிற்கு அங்கு அமைதி நிலவுகிறது.
ஜென் குருகுலத்தில் மாணவர்கள் தியானத்தை தொடங்கும் போதுசூன்யமே உருவம் உருவமே சூன்யம்என்று ஜெபிப்பது வழக்கம். உருவத்தின் மூலமே சூன்யத்தை உணர முடியும். அமைதியான நீர் நிலை நிசப்தத்தை உருவகிக்கிறது. ஒலி ஒலியின்மைக்கு அழுத்தம் தருகிறது. ஓவியத்தில் வெற்றிடங்கள், கவிதையில் இடைவெளி, நடனத்தில் அசைவற்று நிற்பது (Non-Movement) – இவையெல்லாம் சிருஷ்டிக்கு அழகையும், தெளிவையும் தருகிற விஷயங்கள்.

வீசுகின்ற காற்றைக் கேளுங்கள்
அடுத்து விழப்போவது
எந்த மரத்தின் இலை.

கீழே விழுந்த மலர்
செடியின் கிளைக்கு திரும்புகிறது
வண்ணத்துப்பூச்சி.

மேன்மை தாங்கிய அரசர் முன்
சோளக்கொல்லை பொம்மை
தொப்பியை எடுப்பதேயில்லை.



மனிதர்கள்

மனிதர்கள் வேட்டை நாய்களை போன்றவர்கள். இயந்திரத்தால் செய்யப்பட்ட முயலை வேட்டையாட அவர்கள் பந்தயத் தடத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் எப்போதும் இறுக்கத்துடனும், நிம்மதியில்லாமலும் இருக்கிறார்கள். வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் வேட்கையுடன் துரத்துவது முயலையல்ல ; இயந்திரத்தினால் ஆன ஒரு பொருளையே என்று ஜென் கூறுகிறது. மனிதன் இதை உணரும் போது வேட்கையை கைவிட்டு மன அமைதியடைகிறான். விழிப்புணர்ச்சி பெறத் தேவையான பக்குவம் அவனுக்கு வந்து சேர்கிறது.

புத்தர் சொன்ன கதை                                                                                                                                         
வயல் வரப்பு வழியாக ஒருவன் நடந்து கொண்டிருக்கும்போது புலி ஒன்று வந்து விட அதனைப் பார்த்து அவன் ஓட, புலி துரத்தியது. ஒரு சிறிய குன்றின் உச்சிக்கு வந்து விளிம்பில் இருந்த காட்டு மரத்தின் வேர்களை பிடித்துக்கொண்டு தொங்கினான்.

புலி அவனை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. நடுங்கிக்கொண்டே கீழே பார்த்தான். இன்னொரு புலி காத்துக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ வந்த இரண்டு எலிகள் அவன் பற்றியிருந்த வேர்களை கடிக்க ஆரம்பித்தன. அவனுக்கு கையெட்டும் தூரத்தில் காட்டுச்செடியின் பழம் இருந்தது. ஒரு கையால் வேரைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் பழத்தை பறித்து தின்றான். ’ஆஹா..இந்தப் பழம் எவ்வளவு சுவையாக இருக்கிறது.’

நிலவைத் திருட முடியாது

ஜென் குரு ஒருவர் மலையடிவாரத்தில் எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் குடிசைக்குள் திருடன் நுழைந்து விட்டான். அவனுக்கு திருட எதுவுமே கிடைக்கவில்லை. அந்த நேரம் அங்கு வந்த ஜென் குருவை பார்த்து திகைத்து நின்றான் திருடன். அவருக்கு  நிலைமை புரிந்தது. ‘நீ நீண்ட தூரத்திலிருந்து வந்திருக்கிறாய். வெறும் கையோடு திரும்பக்கூடாது. என்னிடம் இந்த ஆடையைத் தவிர வேறு எதுவுமில்லை. இதை என் அன்பளிப்பாக எடுத்துச் செல்என்றார். அதனை வாங்கிக்கொண்டு திருடன் ஓடி விட்டான். அன்றைய இரவு நிர்வாணமாக குளிரில் நடுங்கியவாறு நிலவைப் பார்த்து ஜென் குரு சொன்னார். ‘பாவம், அந்தத் திருடன். இந்த நிலவை அவனுக்கு தர முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.’

திருடன்
விட்டுச் சென்று விட்டான்.
சன்னல் வழியாக நிலா!

இறுதித் தத்துவம்

பார்வையில்லாத ஒருவன் தனது நண்பனை பார்க்க அவனது வீட்டிற்கு வந்திருந்தான். அவன் வீட்டிற்கு திரும்பும்போது நண்பன் விளக்கொன்றை கையில் கொடுத்தான். ‘எதற்கு விளக்க இருளும் ஒளியும் எனக்கு ஒன்று தானேஎன்றான் பார்வயற்றவன். ‘இது உனக்கல்ல, மற்றவர்கள் உன் மீது மோதி விடாமலிருக்க விளக்கு அவசியமல்லவா?’ என்று பதில் கூறினான் நண்பன்.

பார்வையற்றவன் சிறிது தூரம் விளக்கை கையில் பிடித்துக்கொண்டு நடந்தான். பாதி தூரம் கடந்த பின்னர் எதிரே  வந்த பிரயாணியுடன் மோதிக்கொண்டான். ‘என் கையிலிருக்கும் விளக்கு உன் கண்ணிற்கு தெரியவில்லையா? என்று கடிந்து கொண்டான். அதற்கு வழிப்போக்கன்விளக்கு அணைந்து விட்டது நண்பனேஎன்று பதிலளித்தான்.

குகைக்கால தனிமை

சாமுராய் வீரன் ஒருவன் ஒரு பெரிய அதிகாரியின் மெய்க்காப்பாளானாக வேலைக்குச் சேர்ந்தான். நாளடைவில் அதிகாரியின் மனைவியுடன் அவனுக்கு தொடர்பு ஏற்பட்டு அது அதிகாரிக்கும் தெரிந்து விட்டது. தற்காப்புக்காக அதிகாரியை கொன்றுவிட்டு அவர் மனைவியுடன் வேறு ஊருக்கு ஓடிவந்து விட்டான் சாமுராய் வீரன்.

நாட்கள் உருண்டோட இருவருக்கும் திருடிப் பிழைக்க வேண்டிய நிலமையேற்பட்டது. அதிகாரியின் மனைவி ஆடம்பர வாழ்வுக்கு பழக்கப்பட்டிருந்ததால் அவளுடைய தேவையை அவனால் பூர்த்தி செய்ய முடியவில்லை. விரக்தியடைந்த சாமுராய் வீரன் அவளை விட்டு விலகி நீண்ட தூரம் சென்று சன்யாசி ஆனான். தான் செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேட நற்செயல்கள் செய்ய விரும்பினான். ஒரு மலையின் மேல் போடப்பட்ட சாலை அபாயகரமான வளைவுகளுடன் இருந்ததால் பல பிரயாணிகள் உயிர் துறக்க நேரிட்டது. அதனால் மலையில் குகை ஒன்றை வெட்டி பாதையேற்படுத்த முனைந்தான்.

பகலில் பிச்சையெடுத்து சாப்பிட்டு இரவில் சிறிது சிறிதாக மலை குடைந்து பாதையேற்படுத்தத் தொடங்கினான். முப்பதாண்டுகள் சென்றன. இரண்டாயிரம் அடி நீளமும், இருபதடி உயரமும், முப்பதடி அகலமும் உள்ள பாதை தயாரானது. வேலை முடிய இரண்டு ஆண்டுகள் இருக்கும்போது அவனால் கொலை செய்யப்பட்ட அதிகாரியின் மகன் பழிவாங்கும் எண்ணத்துடன் அவனைத் தேடி வந்தான். அவனும் திறமையான வாள் வீரன். அவனிடம் சாமுராய் வீரன் இந்த வேலையை முடிக்க எனக்கு அனுமதி கொடு. முடிந்த அன்றைக்கே என்னைக் கொன்றுவிடலாம்என்றான்.

அதற்கு ஒப்புக்கொண்ட அதிகாரியின் மகன் குகைப்பாதை முடிவடைவதற்காக காத்திருந்தான். பல மாதங்கள் சென்றன. சாமுராய் வீரனோ பாறையை வெட்டிக் கொண்டேயிருந்தான். பழிவாங்க வந்தவன் காத்திருப்பதில் சலிப்படைந்துவிட்டு பாதை வெட்டுவதில் சாமுராய்க்கு உதவி செய்ய ஆரம்பித்தான். ஒரு ஆண்டு முழுவதும் வேலை செய்ததில் சாமுராயின் மன உறுதியும், பண்பையும் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

கடைசியாக குகைப்பாதை அமைக்கும் வேலை பூர்த்தியடைந்தது. பொதுமக்கள் உபயோகத்திற்காக பாதை திறந்து விடப்பட்டது. விபத்துக்களும் நீங்கியது. ‘என் வேலை முடிந்தது. இதோ எடுத்துக்கொள் என் தலையைஎன்றான் சாமுராய் வீரன். இளைஞன் கண்களில் நீர் மல்கஎன் குருவை நான் எப்படி கொல்ல முடியும்?’ என்று கூறினான்.

நன்றி : தமிழில் : சுப்பிரமணியன்

No comments:

Post a Comment