Thursday 8 March 2018

வரைதல் 2


நண்பா!
நேற்றைய இரவு உன் எதிர்பார்ப்பை 
குலைத்ததற்காக வருந்துகிறேன்.
நிச்சயமில்லாத கணங்களுடன் 
நகர்கிறதென் வாழ்க்கை.
தவறவிட்ட காலங்களை நினைத்துப் பார்க்கையில்
என் வழியை அடைத்து கொண்டிருக்கும் முட்களில்
என் முகம் தான் காணக்கிடைக்கிறது.
என்னுடைய சின்னச்சின்ன 
சலனங்களும், கவனச் சிதறல்களும்
நிச்சயம் உன் (அனைத்தினதன்மீதான அலட்சியம் அல்ல.
எல்லோரும் போல்
மற்றவர்களுடன்
நான் என்கிற முகமூடியை பொருத்திக் கொள்வதில்
ஏற்படுகிற கால இடைவெளி தூரத்தைத் தான்.
ஒரு மனிதனை அவனிடமிருந்து பிரிப்பது என்பது
அணுவைப் பிளப்பதை விட 
ஆபத்தானது தெரியுமா?
சமூகம் அணுவை விடவும் ஆபத்தானது. 
நானும் பிரிந்து கொண்டிருக்கிறேன்.
ஒருவகையில் இழை இழையாக நெய்யப்பட்ட
தூங்கணாங்குருவி கூட்டைப்போல் தான் நானும்
இழையிழையாகத் தான் பிரிவேன்.
உன்னுடைய இப்போதைய இறுக்கத்துக்கு
நான் காரணமாக இருந்தால்
மறுபடியும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்மேல் ஏதாகிலும் கோபம் இருந்தால்
அதை தளர்த்திக் கொள்வாய் என்ற நம்பிக்கையுடன்
என் எதிரிலிருக்கும் வாழைப்பழத்திலொன்றை
எடுத்துக் கொள்கிறேன்.
பழம் என்பது எதன் குறியீடு.
பிள்ளைப்பிராயம் சிநேகம் டூ பழம் நட்பு
வாழை என்பதும் ஒரு குறியீடு தான்.
அது காலாகாலத்துக்குமான தொடர்ச்சி
தொடர்ச்சியின் தொடர்ச்சி.
வாழையடி வாழை.

ஆத்மாநாம்

No comments:

Post a Comment