Showing posts with label சேரி. Show all posts
Showing posts with label சேரி. Show all posts

Sunday, 11 March 2018

வளர்ச்சியின் அரசியல் : சேரிகளும் 10 உண்மைகளும்


சென்னை பெருமழைக்கு அதிகபட்ச பாதிப்புகளை எதிர்கொண்டிருப்பவை சென்னை சேரிகள்தான். பேரிடர் தருணங்களில் மட்டுமல்ல, அன்றாட பொழுதுகளிலும் சேரிகள் என்றால் பாதிப்புகளுக்கு ஆளானவையே! மழை, வெள்ளம், நிவாரணம், நிர்வாகக் கோளாறுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது விவாதிக்கப்பட்டு வரும் ஒரு முக்கியமான விஷயம், சென்னையில் பெருகியுள்ள சேரி பகுதிகளை எப்படிக் கையாள்வது என்பதுதான்.
சட்டத்துக்கு விரோதமாக அமைந்துள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டும் என்கிறார்கள் சிலர். ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். ஆனால் சேரி  மக்களை வேறு பகுதிகளில் மீள்குடியமர்த்தவேண்டும் என்கிறார்கள் வேறு சிலர். எது சரியான தீர்வு? இந்தக் கேள்விக்கு விடை தெரியவேண்டுமானால் சேரிகள் பற்றிய சில அடிப்படை உண்மைகளை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

 1.    சேரி என்றால் என்ன?

மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டிராத பகுதியே சேரி. முறையாகக் கட்டப்பட்ட வீடு, சாலை, குடிநீர், கழிப்பறை, வெளிச்சம், காற்றோட்டம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத, பல சமயங்களில் மின்சாரமும் இல்லாத சுகாதாரமற்ற ஓர் இருண்ட பகுதி இது.

 2. சேரியில் யார் வசிக்கிறார்கள்?



வர்க்கரீதியில் பார்த்தால் வறுமையில் சிக்கித்தவிக்கும் ஏழை மக்கள். சாதி அடிப்படையில் பார்த்தால் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தலித் பிரிவினர். பெரும்பாலும் கல்லாதவர்கள். பெரும்பாலும் உடலுழைப்பே அவர்களுடைய ஒரே வாழ்வாதாரம். பெரும்திரளானவர்கள் நெருக்கியடித்துக்கொண்டு வாழ்வதால் உடலாலும் உள்ளத்தாலும் சேரி மக்கள் பல வகைகளில் பாதிக்கப்படுகிறார்கள்.


 3.  சேரி எப்படி உருவாகிறது?

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் கிராமப்புறங்களைவிட நகரங்களில் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளில் 217 மில்லியனில் இருந்து 377 மில்லியனாக மக்கள் தொகை நகரங்களில் அதிகரித்திருக்கிறது. 2031-ல் இந்த எண்ணிக்கை 600 மில்லியனாக உயரும் என்று சொல்லப்படுகிறது.
கிராமங்களைவிட நகரங்கள் துரிதவேகத்தில் வளர்வதற்குக் காரணம் அரசு அமைப்புகள் அங்கே மையம் கொண்டிருப்பது. அதைவிட முக்கியம், தொழில்மயமாக்கல் அளிக்கும் பொருளாதார சாத்தியங்கள். ஆலைகள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறு தொழில் அமைப்புகள் என்று பலவும் நகரங்களில் இயங்கிவருவதால் கிராமப்புற மக்கள் நகரங்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.

மற்றொரு புள்ளிவிவரத்தின்படி, 1901-க்கும் 2001-க்கும் இடையில் நகர்புற மக்கள் தொகை பத்து மடங்கு அதிகரித்திருக்கிறது. இப்படி நகரங்கள் வளரும்போது நகரத்து மக்கள் வசிப்பதற்கான இருப்பிடங்களும் அதிகரிக்கின்றன. நகரத்தையும் நகரத்து மக்களையும் நம்பி அவர்களைச் சார்ந்து தங்கள் வாழ்வைக் கட்டமைத்துள்ள பெரும் திரளான உழைக்கும் பிரிவினரால் நகரங்களில் வாழ முடிவதில்லை. இவர்களுடைய வருமானத்துக்கு ஏற்ற வீட்டு வாடகை கிடைப்பதில்லை. எனவே, தங்ளுடைய பணியிடங்களுக்கு முடிந்த வரை அருகில் உள்ள பகுதிகளில் இவர்கள் குவியல் குவியலாகக் குடியமர்கிறார்கள். தங்களுடைய வருமானத்தை நகர வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் உயர்த்திக்கொள்ளும் திராணி அவர்களுக்கு இல்லை என்பதால் தங்கள் வாழ்க்கை தரத்தைத் தாழ்த்திக்கொள்ள முடிவுசெய்து சேரிப் பகுதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி என்று இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் உள்ள சேரிகளின் பொதுவான இலக்கணம் இதுதான்.


 4.    இந்தியாவில் மட்டும்தான் சேரிகள் உள்ளனவா?




நகரங்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் சேரிகளும் இருக்கின்றன. ஒப்பீட்டளவில் வளர்ந்த நாடுகளில் உள்ள சேரிகள் இங்குள்ள சேரிகளைவிட அதிக வசதிகளைக் கொண்டிருக்கும். இந்தியாவில் சேரிகளில் வசிப்பவர்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் அதிகம் பேர் என்றால் அமெரிக்க சேரிகளில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படும் கறுப்பின மக்களும் மற்ற சிறுபான்மையினரும் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிழைப்பு தேடி வந்து சேர்ந்த தொழிலாளிகளும் இருக்கிறார்கள்.

ஓர் ஆய்வின்படி, அமெரிக்காவில் 30% அமெரிக்கக் குடும்பங்கள் சராசரி வாழ்க்கைத் தரத்தைவிட குறைந்த தரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் சேரிகளில் வசிப்பவர்கள். ஸ்வீடனில் உடைந்த தகரங்களையும் அட்டைப் பெட்டிகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்ட வீடுகளில் ஏழை மக்கள் வசித்து வருகிறார்கள். ஹாங்காங்கில் வானைத் தொடும் பளபளப்பான கட்டடங்களுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான குடிசைகளையும் சேரிப் பகுதிகளையும் காணமுடியும். சிங்கப்பூரில் லட்சக்கணக்கானவர்கள் பரிதாபகரமான வாழ்விடங்களில் வசித்து வருகிறார்கள்.
உலக மக்கள் தொகையை எடுத்துக்கொண்டால் அதில் பாதிப்பேர் நகரவாசிகள். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சேரிகளில் வசிக்கிறார்கள். மூன்று வகையான சேரிகள் உலகில் இருக்கின்றன.
1. தொடக்கத்தில் இருந்தே வளர்ச்சியடையாத, பின்தங்கிய, பாழடைந்த  கட்டடங்களைக் கொண்டிருக்கும் பகுதிகள். மெக்ஸிகோவில் இத்தகைய சேரிகள் உள்ளன.
2. ஒரு பகுதியில் இருந்து நடுத்தர, உயர் வர்க்க மக்கள் பல்வேறு காரணங்ளால் வெளியேறிய பிறகு அங்கே எஞ்சியுள்ள குடியிருப்புகள் தேக்கமடைந்து சேரிகளாகச் சுருங்கிப்போகின்றன. அமெரிக்காவில் பாஸ்டன் பகுதியில் இத்தகைய சேரிகளைக் காணலாம்.
3. ஒரு வர்த்தகப் பகுதி திடீரென்று வீழ்ச்சியடையும்போது அந்த வர்த்தகத்தை மையப்படுத்தி சுற்றிலும் அமைந்துள்ள குடியிருப்புகளும் வீழ்ச்சியடைகின்றன. இந்த வீழ்ச்சி அந்தப் பகுதிகளைச் சேரிகளாக உருமாற்றுகின்றன. அதன் விளைவாக, சமூக விரோதிகள், குடிகாரர்கள், பாலியல் தொழில் செய்பவர்கள் ஆகியோர் இங்கு பெருகுகிறார்கள். இத்தகைய பகுதிகள் இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ளன.

 5.    இந்தியாவில் சேரிகளின் நிலை என்ன?

இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் சேரிகள் அமைந்துள்ளன. சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வும் சமமற்ற வளர்ச்சியும் சேரிகளை வலுப்படுத்துகின்றன என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது. பிரிட்டன் இந்தியாவை ஒரு காலனி நாடாக உருமாற்றத் தொடங்கியபோதே சேரிகளும் உருவாகத் தொடங்கிவிட்டன. நகரங்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அப்போதைய வளர்ச்சித் திட்டங்களில் பங்கேற்க, கிராமத்து மக்கள் பெரும் திரளாக நகரங்களை நோக்கி வரத் தொடங்கினார்கள். அவர்களிடம் இருந்து உழைப்பை உறிஞ்சிக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்திய காலனிய அரசு தங்குமிடம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அவர்களுக்கு அளிக்காமல் புறக்கணித்தது.


19-ம் நூற்றாண்டில் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற பகுதிகளில் ஆலைகள் தொடங்கப்பட்டபோது அவற்றில் பணியாற்றுபவர்களுக்காக அருகில் சில தாற்காலிக குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன. பெரும் திரளான தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் தங்கியிருந்த இந்தக் குடியிருப்புகள் குறுகலாகவும் சுகாதாரமற்றவையாகவும் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாதவையாகவும் இருந்தன. மும்பை, டெல்லி, சென்னை என்று பிற இடங்களிலும் இத்தகைய மோசமான தங்குமிடங்களைக் கொண்ட சேரிகள் உருவாகத் தொடங்கின. நகரங்கள் நான்கு கால் பாய்ச்சலில் வளர்ந்தபோதும் இந்தச் சேரிகளின் நிலைமை மாறவேயில்லை. வளமும் வறுமையும் எப்படி ஒரே இடத்தில் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதற்கு ஓர் உதாரணம் இந்தியாவின் வர்த்தகத் தலைநகராகத் திகழும் மும்பை.

உலகில் உள்ள மோசமான சேரிகள் என்று கணக்கிட்டால் அவற்றில் பல இந்தியாவில் அமைந்துள்ளதைக் காணலாம். சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி என்று தொடங்கி இந்தியா முழுவதும் பரவியுள்ள சேரிகளின் சில பொதுத்தன்மைகளைக் கீழே காணலாம்.

1. சேரிகளில் குடியிருப்பவர்கள்தாம் அவற்றை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று நினைப்பது தவறு. பல பகுதிகளில் மக்கள் வாடகை செலுத்தி வசிக்கிறார்கள்.
2. கல் கட்டங்களைக் கொண்டிருக்கும் குடியிருப்புகள் தொடங்கி குடிசைகள், அட்டைப் பெட்டிகளையும் தார்பாலின் ஷீட்டுகளையும் தகரங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட குடியிருப்புகள் வரை பலவிதமான கட்டுமானங்களை சேரிகள் கொண்டிருக்கின்றன.
3. மும்பையில் கோலிவாடா என்னும் பகுதியில் மீனவர்கள் கட்டிய நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் சேரிகள் உள்ளன. பல மண் குடிசைகளில் முனிசிபல் கார்ப்பரேஷன் பணியாளர்கள் தொடங்கி பல தரப்பட்டவர்கள் தங்கியிருக்கிறார்கள்.
4.   பிரிவினையைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்த பல குடும்பங்கள் பழைய டெல்லியில் வசித்து வருகின்றனர். 
5. சென்னை, புனே, அகமதாபாத் ஆகிய நகரங்கள் வளர்ச்சியடைந்தபோது அங்குள்ள சேரிகளின் எண்ணிக்கையும் வளர்ந்தன. புதிதாக உருவான சண்டிகரில்கூட சேரிகள் உருவாகியுள்ளன.
6.   சேரிகளில் வசிக்கும் பெண்களின் நிலையும் குழந்தைகளின் நிலையும் மிகவும் பரிதாபத்துக்குரியவை. விவரிப்புக்கு அப்பாற்பட்ட கொடுமையான சூழலில் அவர்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

6.    சென்னையில் சேரிகளின் நிலை என்ன?

அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் என்று தொடங்கி சென்னையின் பல இடங்களில் சேரிகள் அமைந்துள்ளன. 1971ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் முக்கியப் பணி சேரிகளைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்துவதுதான். இந்த வாரியம் உடனடியாக 1202 சேரிகள் இருப்பதாக அறிவித்தது. 1985 வாக்கில் மேலும் 17 சேரிகளை இது கூடுதலாகக் கண்டறிந்தது. அவ்வளவுதான், அதற்குப் பிறகு புதிதாக எந்த சேரியும் கண்டறியப்பட்டு அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. எனவே சென்னையில் மொத்தம் எத்தனை சேரிகள் உள்ளன என்னும் கேள்விக்கு அதிகாரபூர்வமாக மேலே உள்ள எண்ணிக்கையை மட்டுமே அளிக்கமுடியும். 1985க்குப் பிறகு சென்னையில் உருவான எந்தவொரு சேரியும் கணக்கில் கொள்ளப்படவில்லை. அங்கீகரிக்கப்பட்ட சேரிகளின் நிலைமையே மோசமாக இருக்கும்போது, அரசின் கவனத்துக்கே வராத சேரிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமை என்னாகும்?

7.    யார் காரணம்?

ஒரு நாட்டின் அரசியல், சமூகப் பொருளாதாரக் கொள்கைகளே நகரங்கள் உருவாவதற்கும் அதன் நீட்சியாக சேரிகள் உருவாவதற்கும் காரணமாக இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் பிரிக்கமுடியாதபடி இந்த இரண்டும் சேர்ந்தே இருப்பதையே நாம் பல இடங்களில் பார்க்கிறோம். அதனால் நகரங்களின் பாதிப்புகள் அனைத்தையும் சேரிகள் பகிர்ந்துகொள்கின்றன. அதே சமயம் சேரிகளின் பிரச்னைகள் அனைத்தையும் நகரங்கள் எதிர்கொள்கின்றன என்று சொல்லமுடியாது.

தற்போது நடைபெறும் நகர்புற வளர்ச்சி என்பது திட்டமிடப்படாதது. நகரங்களின் விளிம்புகள் தொடங்கி அவற்றின் மையப் பகுதிகள் வரை பரவலாக அனைத்து இடங்களிலும் காற்றும் நிலமும் நீரும் மாசடைந்திருக்கின்றன. சட்டம், நகர்புரத்துக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விதிகள் என்று அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறியே நகரங்களில் பெரும்பாலான கட்டடமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. நீர் நிலைகள், விவசாய நிலங்கள் என்று தொடங்கி சுற்றுச்சூழல் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். இந்த அழிவின் விளைவுகளையும் அனுபவித்துவருகிறோம்.
பிழையான நகரமயமாக்கல் கொள்கைகளே சேரிகளை உருவாக்குகின்றன. இந்தக் கொள்கைகளுக்கு முதலில் பலியாகிறவர்கள் சேரி மக்கள்தாம். நகரங்களின் அழுத்தம் சேரிகளைப் பாதிப்பதைப் போலவே சேரிகளின் அழுத்தம் நகரங்களைப் பாதிக்கின்றன. நகரமயமாக்கலுக்கு நாம் கொடுக்கும் தவிர்க்கவியலாத விலை இது.

 8.   என்ன சொல்கிறார்கள்?

இடதுசாரிகள் மட்டுமல்ல வலதுசாரி பொருளாதார நிபுணர்கள் பலரும்கூட சேரி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டிய தேவையை அங்கீகரிக்கிறார்கள். மருத்துவ சுகாதார தேவைகளுக்காக அரசு செலவழிக்கும் தொகையை வெகுவாகக் குறைக்கவேண்டுமானால் சேரி மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்தாகவேண்டும் என்பதே அவர்களுடைய வாதம்.
முன்னதாக, மில்லினியம் திட்டம் என்றொன்றை ஐ.நா மிகுந்த ஆரவாரத்துடன் முன்வைத்தது. 2015-ம் ஆண்டுக்குள் சேரிப்பகுதிகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படும், 2020க்குள் குறைந்தது 100 மில்லியன் சேரி மக்களின் வாழ்நிலை கணிசமாக முன்னேற்றப்படும் ஆகியவை அந்த லட்சியங்களில் இடம்பெற்றன. ஆனால் இவை எதுவும் நிறைவேறவில்லை.

9. சேரிகளால் பிரச்னைகளா?

சேரிகள் நகரங்களைச் சார்ந்திருப்பதைப் போலவே நகரங்களும் சேரிகளைச் சார்ந்திருக்கின்றன. குறைந்த ஊதியத்தில் சேவைகளை அளிப்பவர்கள் ஒவ்வொரு நகரத்துக்கும் தேவைப்படுகிறார்கள். வீட்டு வேலை, கட்டுமானப் பணிகள், துப்புரவுப் பணிகள் என்று தொடங்கி பல்வேறு சேவைகளுக்கு சேரி மக்களையே நகரங்கள் சார்ந்திருக்கின்றன.  2013-ம் ஆண்டு 50 நகரங்களில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு இந்த உண்மையை நமக்கு உணர்த்துகிறது. எங்கள் அன்றாட வாழ்க்கைக்கும் வேலைக்கும் நாங்கள் சேரிப் பகுதிகளில் உள்ள மக்களையே சார்ந்திருக்கிறோம் என்று கணக்கெடுப்பில் கலந்துகொண்ட மூவரில் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

10.  என்ன செய்யவேண்டும்?

சேரி என்பது நகரத்தின் பிரச்னை அல்ல. நகரம் தன்னுடைய பிரச்னைகளை எதிர்கொள்வதற்காக உருவாக்கி வைத்துள்ள ஒரு தீர்வுதான் சேரி. சேரியைச் சரிசெய்யாமல், சேரியின் சவால்களை எதிர்கொள்ளாமல் நகரம் மட்டும் தனியே முன்னேறிவிடுவது சாத்தியமில்லை. நாட்டில் ஒரு பகுதி மக்கள் ஏழையாக இருக்கும்போது, ஒரு பிரிவினர் பசியோடு இருக்கும்போது, பெரும் திரளான மக்கள் சுகாதாரமற்ற சூழலில் வாழும்போது மற்றொரு பிரிவினர் மட்டும் வளர்ச்சியைப் பெற்றுவிடமுடியாது. சமூகம் என்பது அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கியது. அனைத்துப் பிரிவினரும் ஒருசேர முன்னேறினால்தான் அது ஆரோக்கியமான வளர்ச்சி.

அடுத்த முறை சேரிப் பகுதி ஒன்றைக் கடக்க நேரும்போது உங்கள் காதுகளையும், கண்களையும், மனதையும் முழுக்கத் திறந்து வைத்திருங்கள். இந்த உண்மை புரியும்!

மருதன்


(நன்றி : விகடன்) 

சேரி

சி. இராஜாராம் 


செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆலஞ்சேரிஎன்னும் ஊர்ப் பெயர் உண்டு. சென்னையில் வேளச்சேரி, சேலத்தில் மேச்சேரி என்னும் ஊர்ப் பெயர்களும் உண்டு. கொச்சியில் மட்டாஞ்சேரிஎன்ற ஊர் உண்டு. சிவகங்கை சமீனில் இரவுச்சேரி நாடுஎன்ற பகுதி இருந்துள்ளது. கேரளாவில் சங்கனாச்சேரிஎன்ற ஊர் உண்டு. பரமக்குடிக்கு அருகில் பெரும்பச்சேரிஎன்ற ஊர் உள்ளது. நாகர்கோவிலில் ஒழிகினச்சேரிஎன்ற ஊர் உண்டு.

தமிழகத்தில் பனங்காட்டுச் சேரி, பனஞ்சேரி, பனையஞ்சேரி ஆகிய பெயர்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் வயல்களுக்கு நடுவே உள்ள சிறிய ஊர் புரவசேரி. நாகர்கோவிலின் ஒருபகுதி, அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் வடசேரிஎன்ற ஊர் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவானை வட்டத்தில் இப்போது வீரநாராயண மங்கலம் என்ற ஊரின் பழைய பெயர் வீரநாராயணன் சேரி’.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் வீமனேரி: வீரநகரி, ‘வீமனசேரி’, உள்ளதை அறியலாம். நாஞ்சில் நாட்டில் கி.பி.1472ம் ஆண்டு அடிமை ஓலைப் பிரமாணம் ஒன்று தென்னாட்டுக் குறுநாட்டு ஆளூர் சேரியில் வாழ்ந்த பறையர் சாதி என்று குறிப்பிட்டுள்ளதில் ஆளூர் சேரியைக் காணலாம்.
பெருங்குன்னூர்க் கிழார் குடக்கோ இளஞ்சேரிரும்புரை என்ற மன்னனின் பெயரில் சேரிஎன்ற சொல் பொதிந்துள்ளதைக் காண்க.

இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தை அரும்பத உரையுடனும், அடியார்க்கு நல்லார் உரையுடனும் தென்கலைச் செல்வர் டாக்டர் உ.வே.சாமிநாதையர் வெளியிட்டார். அதில் சேரிப் பரதர் வலை முன்றில்கூறப்பட்டுள்ளது. சேரிப்பரதர்….. பரதர் என்னும் வகுப்பினர் மட்டும் சேர்ந்து செறிவாக வாழ்ந்ததால் சேரிஎனப்பட்டது. இதுபோல் பார்ப்பனச் சேரி, ஆயர்சேரி என்றும் பண்டு அழைக்கப்பட்டுள்ளன. இன்றும் வடுகச்சேரி, செட்டிச்சேரி என்னும் ஊர்கள் இருப்பதையும் நினைவில் கொள்க.

சோழர் காலத்தில் அவரவர் சாதிக்குப் பின்னால் (கிராமத்தை) தூய தமிழில் சேரி என்னும் பெயரைச் சேர்த்துக்கொண்டனர். அந்த வகையில் கண்மானச்சேரி, பறைச்சேரி, ஈழச்சேரி, வலைச்சேரி மற்றும் தீண்டாச்சேரி ஆகியவை உருவாயின. தீண்டாச்சேரி என்பது கைவினைஞர் குடியிருப்பு, பறையர் குடியிருப்பு, ஈழவர் குடியிருப்பு, வலைஞர் குடியிருப்பு மற்றும் தீண்டத்தகாதோர் குடியிருப்பு ஆகியவை. பார்ப்பனர் குடியிருப்புக் கூட, ‘சேரிஎன்ற நிலையில்தான் குடியிருப்புகள் அமைந்திருந்தன.
வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக, ஆதிக்க சாதிகளால் கூறப்படும் உத்திரமேருர் வைகுந்த பெருமாள் கோயில் கல்வெட்டு கி.பி. 14ம் நூற்றாண்டின் முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக் காலத்தில் கூட, இந்த 12 சேரிகளிலுமுள்ள முப்பது குடும்பத்துக்கும் குடவோலை முறைப்படி தேர்தல் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மேற்கண்ட குடியிருப்புகளும் சோழர்காலத்தில் உயர்குடி மக்களாகவே வாழ்ந்துள்ளனர்.
உத்திரமேரூருக்கு ஒரு கிலோ மீட்டர் முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் கிழக்கில் அருணாச்சலப்பிள்ளை சத்திரம் சேரி, தென் கிழக்கில் நல்லூர்ச்சேரி, தெற்கில் குப்பைய நல்லூர் சேரி, மேட்டுச்சேரி, காட்டுப்பாக்கம் சேரி, மேற்கில் வேடபாளையம் சேரி, வடக்கில் மல்லிகாபுரம் என்கிற கீழ்சேரி (இது மல்லிகாபுரத்திற்கும் உத்திரமேரூருக்கும் நடுப்பகுதியில் வயல் வெளியில் அமைந்த சேரிப்பகுதியாகும். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தற்போதுள்ள இடத்திற்கு இடம் பெயர்ந்ததோடு 1970களில் மல்லிகாபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது). இதையொட்டி மேற்கில் கல்லஞ்சேரி என்கிற கல்லமா நகரின் பெயரும் 1970களில் மாற்றப்பட்டதாகும். மேற்கண்ட அனைத்துக் குடியிருப்புகளும் பறையர் குடியிருப்புகளாகும்.

கேரளத்தின் பறையடிமை ஆவணங்களில் அடிமையானவர்களைக் குறிப்பிடும்போது சேரமாதேவிப் புறஞ்சேரியில் கிடக்கும் பறையரில்என்றும் (1459), ‘ஆளூர் புறஞ்சேரியில் கிடக்கும்… (1472, 1728) என்னும், ஆரைவாய் பாலபொய்கை புறஞ்சேரியில் கிடக்கும்…… என்றும் (1827), தாழைக்குடி பெரும் பறைச்சேரியில் கிடக்கும்என்றும் (1832) குறிப்பிடப்படுகிறது. இவற்றில் கூறப்பட்டுள்ளபடி கி.பி. 14ம் நூற்றாண்டுகளில் கேரளாவில் சேரியில் குடியிருந்தவர்கள் பறையரே என்பதைச் சுட்டுகிறது. இன்றும் கேரளாவில் சேரிஎன்ற பொருள் கூறும் ஊர்ப் பெயர்கள் பல உண்டு.

போதி சத்தர் கோதமர் பின்னர் புத்தர் ஆனார். அவன் முன் பிறவிகளைப் பற்றியவையே ஜாதகக் கதைகள் என்பது. இக்கதையில், இவர் சேரி நாட்டில்பானை சட்டி விற்பவராகப் பிறந்து ஆந்தபுரம் (ஆந்திரம்) சென்றார் என்று கூறப்படுகிறது. இக்கதையின் கூற்றுப்படி சேரிநாடுஎன்று ஒன்று இருந்துள்ளதை அறியமுடிகிறது.

தமிழ் ஆடற்கலை 1925 வரை சின்னமேளம்/சதிர்க்கச்சேரி என்றே அழைக்கப்பட்டது. அப்பெயரை மாற்றி பரதநாட்டியம்எனப் புதுப் பெயரிட்டவர் ஈ.கிருஷ்ண ஐயர். தமிழர் ஆடற்கலைக்கு, பரதநாட்டியம் என்று பெயர் வைத்ததை கண்டித்து பாரதிதாசன்  பல நூல்களில் விளக்கி அவரைக் கண்டித்துள்ளார். தமிழ் ஆடற்கலையான சின்னமேளம்/சதிர்க்கச்சேரி பெயர்களில் உள்ள சேரி/மேளம்என்ற சொற்களை நோக்குக.

சிலம்பில் மாதவிக்குப் பொன் அளிக்கப்பட்ட செய்தியைப் பேசும் இளங்கோவடிகள், ‘இக் கோவிலில் உள்ள ஐவர் மலைத் தேவருக்கு அவிப்புறம் முதலியவற்றிற் கென குவளைச் சேரியைச் சேர்ந்த வட்டம் வடுகி என்பவர் இரண்டு கழஞ்சு பொன் அளித்துள்ளார்என்ற கல்வெட்டுக் குறிப்பின் வாயிலாக, குவணச்சேரி என்ற ஊர் இருந்துள்ளதை அறிகிறோம்.

பண்டைத் தமிழகத்தில் சேரிகளில் குடியிருந்த மக்கள் பல இன, மொழி, பண்பாட்டைக் கொண்டவராக இருந்தனர் என தொல்காப்பியம், அகம், புறம், பரிபாடல், மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகிய பல இலக்கியங்களில் பரவலாகக் குறிக்கப்பட்டுள்ளன.

கலைமகிழ் ஊரான் ஒலிமணி நெடுந்தேர்
ஒல்லிழை மகளிர் சேரிப் பண்ணாள். (அகம் 146-5-6)
பாடுவார் பாக்கங் கொண்டென
ஆடுவார் சேரியடைந்த தென. (பரிபாடல் 7-32)
மீன் சீவும் பாண் சேரி’ (புறம் 348-4)
வலை வாழ்நர் சேரிவலை வணங்கும் முன்றில் (சிலம்பு கானல் 4-60 சிலம்பு கானல் – 38)
உறை கிணற்றுப் புறஞ்சேரி’ (பட்டினப்பாலை -75)
மன்றுதோறும் நின்ற குரவைச்சேரி’  (மதுரைக்காஞ்சி -615)
சேரிவாழ்வின் ஆர்ப்பெருந்தாங்கு (மதுரைக்காஞ்சி – 619)

என இலக்கிய நூல்கள் கூறியுள்ள சான்றுகளைப் பார்த்தால் சேரிகளில் வாழ்ந்தவர்கள் பெருமளவு வேற்று நாட்டினரும், வேறு திணை நிலங்களில் வாழ்ந்த மக்கள் என்பது புலனாகும்.

கி.பி. 9ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த இடைக்கால சோழராட்சியில் அருண்மொழித் தேவச்சேரி, ராச மார்த்தாண்டச் சேரி, குந்தவைச் சேரி, சன நாதச் சேரி, நித்த வினோதச் சேரி, சோழ சுந்தரிச் சேரி, தனிச்சேரி, பறைச்சேரி, வண்ணாரச் சேரி, கம்மான் சேரி, ஆரிய பார்ப்பனர் சேரி, தீண்டாச்சேரி போன்ற பல சேரிகள் இருந்ததாகவும், இந்தக் குடியிருப்புகளில் பல இனமக்கள் கலந்து வாழ்ந்ததாகவும் இம்மக்கள் சேர்ந்து வாழும் இடத்தைச் சேரிஎன்றும் பாவாணரின் பழந்தமிழராட்சிஎன்ற நூலில் குறிப்பிடப்படுகிறது.

சேரிகளில் வாழ்ந்தவர்கள் பேசும் மொழிக்கும் ஊர், நகரங்களில் வாழ்ந்தவர் பேசும் மொழிக்கும் வேற்றுமை இருந்த காரணத்தால் அதனை சேரி மொழி என வழங்கியுள்ளனர். கஞ்சி, உறங்கு போன்ற சொற்கள் பழந்தமிழ்ச் சொற்கள். இச்சொற்களைப் பேசுவோர் சேரிகளில் வாழ்ந்தவர்கள். அலை வாழ்நர், பரதவர், இடையர், வலையர், ஆடுவார், பாணர், பறையர், துடியர், கடம்பர், விறலியர், பரத்தையர், ஒளியர், அருவாளர், ஈழவர், யவனர், ஆரியப் பார்ப்பனர் போன்றவரும் மற்றும் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த மோரியார், கோசர், மழவர் போன்றவர்களின் படைவீரர்களில் சிலர் தமிழகத்தில் நிலைத்து, தமிழ் வேந்தர் படையில் சேர்ந்து பணியாற்றியவர்களும் இச்சேரிகளில் வாழ்ந்தவர்களாவர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

மேலும் ரோமர், கிரேக்கர்கள் வணிக நோக்கோடு தமிழகத்துக்கு வந்து இங்கு அரண்மனை வாயில் காப்பாளராகவும், அரண்மனைப் பணிப் பெண்களாகவும் இருந்துள்ளனர் என்றும், பல்லவர் படையெடுப்புடன் வந்து தமிழகத்தில் நிலைத்துவிட்ட களப்பிரரும் (ஆய்வுக்குரியது), விஜய நகரப் பேரரசு படையெடுப்புடன் வந்து தமிழகத்தில் நிலைத்துவிட்ட அருந்ததியரும் ஆகிய பல இனத்தவர், பல நாட்டினர், பல மொழியினர் கலந்து வாழ்ந்த இடத்தைச் சேரி என்றும், அவர்கள் திருத்தமான மொழி பேசாமல் கொச்சை மொழிப் பேசியதால் சேரி மொழியென்றும் வழங்கியுள்ளனர்.

பல்லவர் காலத்திலும் அந்தணச் சேரி, முட்டிகைச் சேரி, பரத்தையர் சேரி, புறம்பனைச் சேரி என்று பல சேரிகள் இருந்துள்ளன. தமிழ் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் ஆடுவார் சேரி, பாண்சேரி, வலை வாழ்நர் சேரி, பரதவர் சேரி, புறஞ்சேரி, முத்துக் குளிப்பவர் சேரி, சங்கு அறுப்பவர் சேரி எனப்பல சேரி வகைகள் இருந்ததாக இலக்கியங்கள் காட்டுகின்றன.


பல இனமக்களும் சேர்ந்து வாழுமிடத்தைக் குறித்த சேரிஎன்பது பின்னர் தீண்டாமையின் அடையாளமாக்கப்பட்டுவிட்டது.


தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்

 நா.மம்மது  உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...