Thursday 8 March 2018

வரைதல் 1


சிந்தனைச் செல்வனுக்கு,

இந்த எந்திர யுகத்தில் உண்மையான, அர்த்தமுள்ள உறவுக்கான சாத்தியங்கள் குறைவாகவே ஆகிக் கொண்டிருக்கின்றன. நம்மைப் புரிந்து கொண்டு வாழ்க்கையைப் பழக முதலில் நமது உறவுகளை புரிந்து கொள்வது அவசியம். இந்த கணத்தில் வால்டேரின் கூற்று ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. ‘நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள். பகைவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள எனக்குத் தெரியும்.’ நான் மற்றவரை நோகடித்த சமயங்களை விட மற்றவர்களால் நான் மனம் நொந்து சரிந்த தருணங்கள் அநேகம். மனித இனத்தை வேண்டுமானால் பொதுப்படையாக அறிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு மனிதனை தனியாக பிரித்தறிவது அவ்வளவு எளிதானதல்ல என்பதை எப்படி இவர்களுக்கு புரிய வைப்பது?

வாழ்க்கையில்முன்னேற வேண்டும்என்கிற அந்த பழமைவாதப் பாடத்தின் காலாவதியாகிப்போன லட்சியத்தை முன்னிறுத்தி நாம் இன்னும் எத்தனை காலம் தான் ஒருவருக்கொருவர் சுரண்டி வாழ்வது. அதனையே முதுகில் சுமந்துகொண்டு சதா நம்முடன் சிரித்துக்கொண்டிருக்கும் சகபாடிகளை எப்போது தான் முகம் கிழிப்பது. இதனை ஒரு தத்துவப்பாடமாக முன்வைக்கும்போதுகலகக்காரர்கள்என எளிதாக கட்டம் கட்டி ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப்படுகிறோம். தோல்வி என்பது என்ன? அது ஏழைகளின் நெருங்கிய உறவு தானே. அதன் பாதை எதை அடையாளப்படுத்துகிறது. வெற்றியாளர்களின் கறைபடிந்த வரலாற்றை அல்லவா. ‘ஏழு தலைமுறைகள்எழுதிய அலெக்ஸ் ஹேலி சொல்கிறார். ‘வெற்றி கொண்டவர்களே சரித்திரம் எழுதும் சம்பிரதாயத்தை உடைத்தெறிவதற்கு இந்த என் மக்களின் கதை உதவிடும்.’ என்று. இவ்வளவும்வெற்றிஎனும் மந்திர முழக்கத்தின் முன் நாக்கை தொங்க விட்டு அலையும் நமது நண்பர்களின் ஆக்கங்கெட்ட தனத்தை தோலுரித்துக் காட்டத் தான்.

தெளிவிலிருந்து தான் பாசிசம் பிறக்கிறது என்று சமூகவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மதவாதிகளும், அரசியல்வாதிகளுமே தெளிவானவர்கள். இலக்கியவாதியும், கலைஞர்களும் ஒருபோதும் தெளிவாக இருக்க முடியாது. இலக்கியவாதி என்றைக்கு தெளிவாக ஆகிறானோ, அன்றைக்கே அவன் மதபோதகராக மாறி விடுகிறான். நான் எப்போது தோல்வியின் பக்கம் இருக்கவே விரும்புகிறேன். ஏனென்றால் வரலாற்றில் இன்றளவும் ஒடுக்கப்பட்ட மக்களும், விளிம்புநிலை மக்களுமே தோல்வியுற்றவர்களாக இருக்கிறார்கள்

ஆத்மாநாம்

No comments:

Post a Comment