Wednesday 21 March 2018

நானொரு பெண்


மார்ஜியே அஹமேதி ஓஸ்க்குத்
(ஈரான்)












நானொரு தாய்
நானொரு சகோதரி
நானொரு பணிவுள்ள மனைவி
நானொரு பெண்
நினைவறிந்த நாள் முதல்
பாலைவனச் சுடுமணலில்
மேலும் கீழுமாய் உழைத்துக் களைக்கின்றேன்.
வடபகுதிக் கிராமத்திலிருந்து வந்தவள் நான்.
நெல் விளையும் கழனியிலே
தேயிலைத் தோட்டங்களிலே
கசக்கிப் பிழியப்பட்டு
உழைக்கிறேன்.
நினைவறிந்த நாள் முதல் உழைக்கிறேன்.
காலை முதல் மாலை வரை களத்து மேடுகளில்
உடலெல்லாம் இறுக்கிப் பிழிய
நானும் என்னுடன் எலும்பும் தோலுமாய்
ஒரு மாடும்
உழைக்கிறோம்.
நானொரு பெண்
உழைத்துக் கொண்டிருக்கும்போதே
மலைகளே படுக்கையாக
என் மகவை ஈன்றெடுத்தேன்.

*
நானொரு பெண்
நானொரு தொழிலாளி
ஆலையின் பிரும்மாண்டமான யந்திரங்களை
என் கரங்கள் இயக்குகின்றன.
அவற்றின் சக்கரப் பற்கள்
எனது வலிமையை, எனது சக்தியை
என் கண்ணெதிரேயே
துண்டு துண்டாக கிழித்தெறிகின்றன.
நானொரு பெண்
எனது உயிரின் அழுத்தமான ரத்தம் குடித்துச்
சுரண்டுபவனின் பிண்டம் தடித்துக் கொழுக்கிறது. 
எனது ரத்தம் சுண்டுகிறது. 
கந்து வட்டிக்காரனின் மூலத்தனம் ஊதிப் பெருக்குகிறது. 
ஏ, கேடு கெட்ட சுரண்டும் வர்க்கங்களே !

உங்களது வெட்கங்கெட்ட அகராதியில் 
பெண்களுக்கு என்ன தகுதி கொடுத்திருக்கிறீர்கள்? 
உங்களது காம சூத்திரங்களிலே 
பெண்ணின் கைகள் மலர் போல சிவந்தது 
உடல் பூப்போல மென்மையானது 
தோல் பட்டுப்போல மிருதுவானது 
தலை மயிர் வாசம் நிறைந்தது 
பதிலடி கொடுக்கிறேன் நான் பெற்றுக் கொள்ளுங்கள் 
நானொரு பெண்  
எனது உடல் தோல் வெங்கனலை வீசியடிக்கும்
எனது தலை மயிர் ஆலைப்புகை வீச்சமடிக்கும் 
எனது கைகள் வலியென்னும் கத்தி கிழித்துக் 
காயம் பட்டுச் சிவந்திருக்கும் 
ஏ, வெட்கங்கெட்டவர்களே, 
எனது பசி போலியானதென்றா கூறினீர்கள்? 
எனது அம்மணம் போலி வேடம் என்றா கூறினீர்கள்? 
கெடு கெட்ட சுரண்டும் வர்கங்களே ! 
உங்களது வெட்கங்கெட்ட அகராதியிலே 
பெண்களுக்கு என்ன தகுதி கொடுத்திருக்கிறீர்கள் ? 
நானொரு பெண் 
துன்பங்கள் கொத்திக் காயங்கள் நிரம்பிய 
இதயமொன்று எனக்குண்டு 
எனது கண்களிலே 
தீச்சொரியும் விடுதலை அம்புகளின் 
சிவந்த பிம்பங்கள் சீறிப் பறக்கின்றன. 
எனது கரங்கள் பயிற்சி பெற்று விட்டன. 
துயரங்கள் கோடி துரத்தினாலும் அஞ்சமாட்டேன் 


No comments:

Post a Comment