Wednesday, 12 March 2025

அமெடியஸ் (Amadeus)

 வ.ஸ்ரீநிவாசன்



‘அமெடியஸ்’ திரைப்படம் இசை மாமேதை மொஸார்ட்டின் (வுல்ஃப்கேங் அமெடியஸ் மொஸார்ட்) கதை.

ஆனால் அவர் காலத்தில் வாழ்ந்த இசை வல்லுனர் அன்டோனியோ சலய்ரியின் மூலமாக ‘ஃப்ளாஷ் பேக்’கில் சொல்லப் பட்டது.

சலய்ரி, இசையில் மெய்மறந்து போகும் சிறுவன். அவன் தந்தைக்கு இசை ஒரு பொருட்டல்ல. அதே காலகட்டத்தில் சலய்ரி, தன் பிள்ளையை பயிற்றுவித்து வெவ்வேறு முக்கிய மனிதர் சபைகளில் இசைக்கச் சொல்லும் அமெடியஸின் தந்தையைப் பற்றியும் கேள்விப் படுகிறான். அமெடியஸ் ஒரு ‘பயிற்றுவிக்கப் பட்ட வித்தை காட்டும் குரங்கு’ என்கிறார் சலய்ரியின் தந்தை.

இசையால் உயிர் கவ்வப் பட்ட சலய்ரி, கடவுளிடம் தனக்கு மகத்தான திறமையைத் தரச் சொல்லி வேண்டுகிறான். அதற்கு காணிக்கையாக தன் எல்லாவற்றையும் தர சித்தமாயிருக்கிறான். ‘ஒவ்வொரு மணிநேரமும் என் இசையால் உன் புகழ் பாடுவேன்’ என்னும் சலய்ரியின் வாழ்வில் உடனே ஓர் அற்புதம் நடக்கிறது. தொண்டையில் உணவு சிக்கி அவன் தகப்பனார் இறக்கிறார். தடை நீங்கி விட்டது. சலய்ரி இசை பயின்று வியன்னாவுக்குச் சென்று அரசரின் ஆஸ்தான இசைக் கலைஞராகிறார்.

மீண்டும் அமெடியஸ். அவன் வருகை தெரிந்து அந்த இடத்துக்கு சலய்ரி போகிறார். இசை கேட்க குழுமி இருக்கும் மனிதர்களிடையே அவனைத் தேடுகிறார். அவன் ஒர் இளம் பெண்ணுடன் விளையாடிக் கொண்டு இருக்கிறான். சலய்ரி ஒளிந்திருப்பது தெரியாத இருவரும் ஓர் அறையில் சல்லாபித்துக் கொண்டே சொல் விளையாட்டு ஒன்றை ஆடுகிறார்கள். கடைசியிலிருந்து ஆரம்பம் வரை எழுத்தொலிகளை தலைகீழாகக் கூறி அப்படி சொல்கையில் ‘கிஸ் மை ஆஸ்’ ‘ஈட் மை ஷிட்’ என்கிற வாக்கியங்கள் வருமாறு விளையாடுகின்ற, அவன் ஆபாசப் பேச்சும், நாசூக்கற்ற நடவடிக்கைகளும் அவரை தாக்குகின்றன. அந்த நிமிஷம் அவன் இல்லாமலேயே அவனது இசை அவையில் வாசிக்கப்படுவதைக் கேட்டு அங்கு ஓடிச் சென்று இசைக்க ஆரம்பிகிறான்.

இசை நர்த்தனம் புரிகிறது. மழையாய்ப் பொழிகிறது. பூக்களைத் தலையாட்டச் செய்கிறது. வருடி விடுகிறது. விம்மிப் பதைக்கிறது. எம்பி குதிக்கிறது. இதயம் நிரம்பி வழிந்து உலகெலாம் நிறைகிறது. என்ன தெய்வீகம் ! எந்த உலகத்தது?

ஆனால் கடவுளின் இவ்விசை உலகை நிரப்புவது இதற்கென்றே சகலத்தையும் துறந்த , சகலத்தையும் உணர்ந்து ரசிக்கிற சலய்ரி மூலம் அல்ல, ஒரு நாசூக்கற்ற, கோமாளித் தனமான, கெக்கெலி கொட்டி இடம் பொருள் ஏவல் தெரியாமல் சிரிக்கிற,

அனாச்சாரமான அமெடியஸின் மூலம். ‘என்ன அநியாயம். இசையை ரசிக்கிற, இசையில் உருகுகிற ரசனையை மட்டும் கொடுத்து மகத்தான சிருஷ்டித் திறனைத் எனக்குத் தராமல் ஒரு ஆபாச, அல்ப, விளையாட்டுப் பிள்ளைக்கு இத்தனை திறமையைக் கொடுத்தாயே, எனக்கு துரோகம் செய்து விட்டாயே, கடவுளே’ என்கிற சலய்ரியின் வாழ்வு மாறிப் போய் விடுகிறது. கடவுளின் எதிரி என்று தன்னைப் பிரகடனப் படுத்திக் கொள்கிறார். கடவுளின் தேர்வான அமெடியஸை அழிப்பதே தன் வேலை என்றும் சூளுரைக்கிறார்.

படம் சலய்ரியின் தற்கொலை முயற்சியில் ஆரம்பிக்கிறது. மன நோய் காப்பகத்தில் அமெடியஸின் மரணத்துக்குப் பின் 32 வருடங்கள் அந்தக் குற்ற உணர்விலேயே பயித்தியமான அவரை ஒரு பாதிரியார் சந்திக்கையில் அவரிடம் தன் கதையைச் சொல்வது போல் படம் நடக்கிறது.

பாதிரியாரிடம், “என்னை யார் என்று தெரியுமா” என்பவரிடம் அவர் ‘ எனக்கு அது அவசியமில்லை. துயர்படும் ஆத்மாக்களுக்கு ஆறுதல் அளிப்பதே என் வேலை.’ என்கிறார். தொடர்ந்து “கடவுளின் படைப்பில் அனைவரும் சமம்” என்கிற பாதிரியாரிடம் சலய்ரியின் கேள்வி”அப்படியா சமமா?” இது மனித வாழ்வின் அடிப்படைக் கேள்வி. பாக்கிப் படம் அப்படி சமம் இல்லை என்பதை சலய்ரியின் கோணத்தில் விவரிக்கின்றது.

அமெடியஸ் அப்பாவியாக இருகிறான். அவனது இசை மேதைமை மட்டுமே அதற்கான அங்கீகாரம் பெறுவதற்கு போதுமான தகுதியாக இவ்வுலகம் இல்லை.

சலய்ரியின் சூதால் அவன் ஆபெராக்கள் ஒன்பது முறைகளும், ஐந்து முறைகளுமே மேடை ஏற்றப் படுகின்றன.

ஆனால் அவன் சலய்ரிதான் தனக்கு அரசில் இருக்கும் நண்பன் எனக் கொள்கிறான். அவனிடம் தன் ஆதங்கங்களைச் சொல்கிறான்.

இது கொஞ்சம் உண்மை வரலாற்றாலும், மிகுந்த கற்பனையாலும் பின்னப் பட்ட திரைக் கதை. அமெடியஸின் தாய், அவன் முதல் காதலி, (மனைவியின் மூத்த சகோதரி) இன்னொரு மகன் பற்றியெல்லாம் இல்லை. சலய்ரி பற்றிய வடிவாக்கமே அவர் குற்றவுணர்வு கொண்டிருந்தார் என்கிற செய்தியின் அடிப்படையில் எழுந்தது.

நாடகமாக பலமுறை மேடை எற்றப்பட்டு மெருகேறி, மெருகேறி கிட்டத்தட்ட ‘பர்ஃபெக்ட்’ டான வடிவத்தில் இத்திரைப்படம் வந்துள்ளது.

சில காட்சிகள்:

ஒரு இசை நாடகத்தை ஜெர்மானிய மொழியில் செய்வதா இத்தாலிய மொழியில் செய்வதா என்கிற பிரச்னை வரும்போது இத்தாலிய மொழியையே பண்டிதர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அங்கும் நீச பாஷை, தேவ பாஷை உண்டு போலும். அமெடியஸ் ஜெர்மானிய மொழியையே தேர்ந்து எடுக்கிறான். அவனுக்கு நாசூக்கு தெரிவதில்லை. அவனிடம் ‘ஈகோ’ இல்லை. அரசரை அவன் கேட்கிறான். “பெரியவர்களைப் பற்றி மட்டுமே, உயர்ந்தவர்களைப் பற்றி மட்டுமே கடவுளர்களைப் பற்றி மட்டுமே கலைகளைப் படைக்க வேண்டுமா? அவர்கள் மட்டுமென்ன மார்பிளை (marble)யா கழிக்கிறார்கள்? (டு தே ஷிட் மார்பிள்?) என்கிறான். அரசர் முன்னிலையில் பேசக்கூடிய வாசகமா? அவை அசௌகரியமான நிசப்தத்தில் ஆழ்கிறது. அடுத்த நொடி அவனது அப்பாவியான இரைந்த கெக்கெலி கொட்டும் சிரிப்பு. Innocence is ashamed of nothing. Roussau.

அமெடியஸ், அவன் மனைவி, அவன் தந்தை மூவரும் அவர் (தந்தையின்) வருகையை கொண்டாட ஒரு இரவுப் பார்ட்டிக்கு செல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு முகமூடி கொடுக்கப் படுகிறது. அலங்காரமான, அரை முகத்தை மூடும், முழு முகத்தை மூடும், இரண்டு புறமும் முகமிருக்கும் முகமூடிகள் என்று வித விதமான முகமூடிகள்.; அங்கே சலய்ரியும் வருகிறார். ஒரு முகமூடியுடன். ஒரு விளையாட்டில் தோற்ற அமெடியஸின் மனைவியை மேடையில் ஏற்றி விளையாட்டாக தண்டனை அளிக்கிறார்கள். என்ன தண்டனை தராலாம் என்று கூட்டம் உரக்க யோசிக்கையில் ‘அவளை தன் கால்களைக் காட்டச் சொல்லுங்கள்’ என்று ஒரு சிரிக்கும் குரல் சொல்கிறது. அது அமெடியஸினுடையது. கூட்டம் சிரிக்கிறது. சிரித்தவாறே அவளும் தன் ஆடையைத் தூக்கி ஸ்டாக்கிங்க்ஸால், மறைக்கப் பட்ட தன் கால்களை காட்டுகிறாள். அடுத்து அமெடியஸின் முறை. வேடிக்கையான தண்டனை. அவனை தலைகீழாய்த் தொங்க விட்டு பியானோவை வாசிக்கச் சொல்கிறார்கள். முதுகுப் புறம் பியானோவைப் பார்த்தவாறு கைகளை மாற்றி என்று தொங்கியவாறே வாசிக்கிறான். ஒவ்வொரு இசைக் கலைஞன் மாதிரியும் வாசித்துக் காட்டும் அவன் ஒரு சமயம் சலய்ரியின் இசையை வாசிக்கிறேன் என்று குனிந்து, பின்புறத்தைக் காட்டியவாறே ‘புர்’ரென்ற ஒலியை வாயினால் எழுப்புகிறான். கூட்டம் சிரிக்கிறது. சலய்ரி அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் அமெடியஸின் தந்தை இதையேல்லாம் ரசிக்கவில்லை. அவர் முகமூடி ஒருபுறம் சிரீயஸாகவும் மறுபுறம் சிரித்துக் கொண்டும் இருக்கும் இருபுறமும் உள்ள முகமூடி.

கொஞ்ச நாட்களில் நிகழும் தந்தையின் மரணம் அமெடியஸைப் பெரிதும் பாதிகிறது. அதன் முலம் பிறந்த இசை நாடகத்தின் மகிமையை சலய்ரி உணர்கிறார். அதுவும் வெற்றியடையாமல் செய்கிறார். அதில் மரணத்திலிருந்து எழுந்து வருவது அமெடியஸின் தந்தையின் உருவகம்தான் என்பது அறிந்த சலய்ரி அத்தந்தையின் ஆளுமையை உபயோகப் படுத்தி அதே இரு புற முகமூடி அணிந்த ஒருவனை அனுப்பி

‘இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்கான ‘தொழுகை பிரலாபம்” (“Mass requiem”) தனக்கு அளிக்குமாறு கேட்கிறார். (மரண கீதத்தை எழுதச் சொல்லும் தந்தையின் தோற்றத்தை அந்த முகமூடியின் மூலம் கொண்டு வரும் உருவம் பண முடிப்பைக் கொடுத்து விட்டு திரும்பிச் செல்கையில் அது இறங்கிச் சென்ற சில நொடிகளுக்குப் பிறகும் அதன் நிழல் சென்று கொண்டிருக்கும், அவரது தாக்கம் என்றும் அவர் இறப்பிற்குப் பின்பும் தொடரும் என்பதாக.)

சிருஷ்டிக்கும் இசையில், இரண்டறக் கலக்கும் அமெடியஸைக் கொல்ல சலய்ரி கையாளும் ஆயுதம் அந்த தொழுகை பிரலாபம்.அதற்கு பெரிய சம்பளமும் கொடுக்கிறார். பணத் தேவை மிகுந்த அமெடியஸ் ( அவன் கொண்டு வந்த ஒன்பது சிமிழ்களில் இருந்த அத்தனை பொற்காசுகளும் தீர்ந்து விட்டன) அந்த வேலையை ஒத்துக் கொள்கிறான்.

மனனவி, குழந்தையுடன் அவனை விட்டு விட்டுப் போய்விட்ட ஒருநாளில் அரங்கிலேயே மயங்கி விழும் அவனை சலய்ரி வீட்டுக்கு கொண்டு வந்து உடனிருக்கிறார். விழித்த அமெடியஸ் ‘நான் ஒரு முட்டாள். நீங்கள் என் இசையைப் பொருட்படுத்தியதில்லை என்று தவறாக எண்ணியிருந்தேன். என்னை மன்னியுங்கள்” என்கிற போது யார் யாரிடம் மன்னிப்பு கேட்பது என்று நமக்கு அழுகையும், கோபமும் வரும். படுக்கையிலிருந்து எழ முடியாது, எழுத முடியாது தொய்ந்து போய் இருக்கும் அவன் ‘மரண இசை’யை சொல்லச் சொல்ல சலய்ரி அதை எழுதிக் கொள்கிறார்.

அமெடியஸின் மனைவியும், மகனும் வருகிறார்கள். களைப்பின் உச்சியில் இருந்த அமெடியஸ் மேல் இருக்கும் மரண இசையின் நொடேஷன்கள் நிரம்பிய காகிதங்களை பார்க்கும் அவன் மனைவி, அதை எழுதினால் அதில் முழுதுமாய் ஈடுபட்டு அமெடியஸே இறக்க நேரிடலாம் என்று உணர்ந்து அதை மேற்கொண்டு எழுதக் கூடாது என்று எடுத்து வைத்து விடுகிறாள். சலய்ரியையும் வெளியே போகச் சொல்கிறாள். ‘அமெடியஸ் சொல்லட்டும், போகிறேன்’ என்று நிற்கும் சலய்ரிக்காக ‘போகச் சொல்’ என்று அமெடியஸின் அருகே செல்லும் அவள் அவன் இறந்து விட்டதை உணருகிறாள்.

அமெடியஸின் உடல் ஒரு வெள்ளைத்துணியில் சுற்றப் பட்டு வேறு பல பிணங்கள் இருக்கும் ஒரு புதைகுழிக்குள் போடப் படுகிறது. அடையாளம் எதுவும், அறிவிப்பு எதுவும் இல்லாமல். தனியாய் அறிவிப்போடு புதைக்கப் பட்டிருந்தால் மட்டுமென்ன? அதனால் அமெடியஸுக்கு என்ன லாபம்? நாம் நம் நெற்றியில் அந்த ஞாபகச் சாம்பலைப் பூசிக் கொள்ளலாம் என்பதை தவிர.

‘பாதிரியாரை ரட்சிகிறேன் , இந்த உலகில் உள்ள நடுவாந்திர ( mediocre) மனிதர்கள் அனைவருக்குமான பிரதிநிதி நான்’ என்று நம்மனைவரின் பிரதிநிதியாய் சலய்ரி கூறிச் செல்கையில் அமெடியஸின் அந்த வெகுளித்தனமான, மரியாதை- அவமரியாதை, புனிதம்-ஆபாசம், கௌரவம்-கீழ்மை அனைத்திற்கும் அப்பாற்பட்ட இவ்வாழ்க்கையின் ஒரே உண்மை முன் நம்மை நிர்தாட்சண்யமாய், ஆனால் நோக்கமற்று நிறுத்துகின்ற கெக்கலி சிரிப்போடு படம் முடிவடைகிறது.

காட்சிகளின் ஆரம்பம், ஒளி அமைப்பு, பின்னணி இசை, கை விரல்களும், பாத்திரத்தின் முழு உடலும், கண்களும் இசைக்க தொடங்குகையிலேயே பின்னால் பொங்கி எழும் இசை பிராவாகம், அது காட்சியாய் மாறுவது, இடையே மீண்டும் சொல்பவர், ஒரு வார்த்தை, ஒரு விரலசைப்பு. மொஸார்ட்டின் ஒரு ஸ்வரத்தைக் கூட மாற்ற முடியாது என்பது போல ஒரு ‘ஷாட்’டைக் கூட மாற்ற முடியாத காட்சிகள்.

குறைகள் எனில், ஒரு காட்சியில் பாதி எரிந்த மெழுவர்த்தி, பின்பு முழுதுமாய்த் தெரிவது முதலியவை மற்றும் சரித்திர திரிபுகள் பற்றி படித்தேன். எனக்குத் தோன்றுவது, ‘ஃப்ளாஷ் பேக்’ உத்தியில், சலய்ரி சொல்லும் கதையில் அவர் இல்லாத காட்சிகள் கூட படத்தில் இடம் பெறுவது.

மகத்தான நடிப்பு. அமெடியஸ் சசின் டெண்டுல்கரை நினைவுறுத்தும் பாலகனுடைய முகம் கொண்ட இளைஞர் டாம் ஹல்ஸ். சலய்ரி ‘ஓம் பூரி’ போல் முகம்கொண்ட முரேஅப்ரஹாம். நாம் வாழும் இருவரைப் பார்க்கிறோம். அந்த இருவர் மட்டுமல்ல, அமெடியஸின் “வுல்ஃபி’ என்று கொஞ்சும், இறுதி நாட்களில், இசை நாடகம் வேண்டும் என்று வருபவர்களிடம் பணம் பற்றி பேசும், சம்பளம் இன்றி வரும் வேலைக்காரியை வேண்டாம் என்று சொல்லும் மாமனாரிடம் நீங்கள் யார் இதைச் சொல்ல என்று கேட்டு அவளை வேலைக்குஅமர்த்திக்கொள்ளும், மொஸார்ட்டோடு விளையாடும், அவனைப் பிரிந்து போயும் தன்னை அணைத்து பார்ட்டியில் ஆடிக் கொண்டிருப்பவனிடம் ‘நான் செய்வது தப்பு’ என்று கணவனிடம் ஓடி வரும், சலய்ரியை மொஸார்ட்டின் அறையில் கண்டதும் ‘போய் விடுங்கள், துரதிருஷ்டவசமாக உங்களை வெளியே அனுப்ப எங்களிடம் வெலையாட்கள் இல்லை’ என்று நிச்சயத்தோடு கூறும், அமெடியஸின் மீது அவன் இன்னொஸென்ஸின் மீது அவன் மகத்தான மேதைமையின் மீது காதலைப் பொழியும் மனைவியாக வரும். எலிஸ்பத் பெர்ரிட்ஜ்... . .கும்மாளம் இடும் மகன், தான் வேண்டாம் என்று சொன்ன பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவன், தன் ‘கனவின் நினைவுருவம்’ அதன் கட்டை மீறி செல்வதைக் காணச் சகிக்காமல், அவன் நன்மைக்காகவே என்று வாழும் கண்டிப்பான தந்தை, சலய்ரியால் ‘ஒற்று’ செய்யவரும் சம்பளமில்லாத வேலைக்காரி, ஆர்ச் பிஷப், மன்னர், அவர் கூடவே இருக்கும் பிரபுக்கள், பிரபலஸ்தர்கள், தனியே அரசின் உதவியின்றி செயல்படும் ஆபெரா குழுக்கள், ஒவ்வொருவரும் வாழ்கிறார்கள் நம்மனைவரின் குறைகளோடு, நிறைகளோடு, குமுறல்களோடு, ஆசாபாசங்களோடு, டாம்பீகத்தோடு.

நீதி, நியாயம், கடவுள், அவர் சித்தமென்று மனித குலம் கற்பித்துக்கொண்டுள்ளவை பற்றி சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பும் படம்.

வாழ்வில் இசையில் அமெடியஸிடம் ஒட்டு மொத்தமாக தோல்வியுற்ற சலய்ரி ஒரே இடத்தில் வென்றார். சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் பரிசு சலய்ரியாக நடித்த முரே அப்ரஹாமுக்குக் கிடைத்தது. அதே பிரிவில் போட்டி யிட்ட டாம் ஹல்ஸ் தோற்றார். சிறந்த துணை நடிகர் பிரிவில் அவரை சேர்த்திருந்தால் நிச்சயம் அவருக்குத்தான் பரிசு கிடைத்திருக்கும். இரண்டு பேருக்கு பரிசை பிரித்து வழங்கும் வழக்கம் இருந்தால் அவருக்கும் கிடைத்திருக்க வேண்டும். அது போன்ற நடிப்பு எப்பொதாவதுதான் காணக் கிடைக்கிறது.

பீடர் ஷாஃபர், மிலோஸ் ஃபோர்மன் எனும் மேதைகளின் படைப்பு இப்படம். இதன் இசையமைப்பாளர், மொஸார்ட்டின் ஒரு நோட்டைக் கூட மாற்ற அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னவர். மேடையை விட சினிமாவில் இசையை அதிகம் சேர்க்க முடிந்திருக்கிறது. எட்டு ஆஸ்கார் பரிசுகளை வென்ற படம்.

‘மனிதர்கள் வாழ்வது எதனால்?’ என்ற கேள்வியைக் கேட்டு ‘பிறரின் அன்பால்’ என்று டால்ஸ்டாய் சுலபமாகச் சொல்லிவிட்டார். “பிறர் மேல் உள்ள பொறாமையாலும்தான். ‘Jealousy is as cruel as the grave’ என்கிறது விவிலியம். ‘as powerful as love’ என்பதும் உண்மைதான்.

கம்பனும் ஒட்டக் கூத்தனும் இப்படி வாழ்ந்திருக்கலாம். ராஜாஜி இறந்ததற்கு பெரியார் அடக்க முடியாமல் அழுதது எதனால்?

மனித மனதைப் பற்றிய படங்கள் என்னை கவருகின்றன. வாழ்வைப் போலவே பல தளங்களிலும் இப்படம் இயங்குகிறது. இப்படத்தின் (மொஸார்ட்) இசையைக் கேட்கையில், பாமரனான எனக்கே All art constantly aspires towards the condition of music என்பது புரிகிறது. ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் ஒரு பொருளின், உள், வெளி, விளிம்பு அனைத்தும் தெரிவது போல் இப்படம் மனிதர்களின் அக புற நிகழ்வுகளை அனாயாசமாய்ச் சொல்லிச் செல்கிறது. வைக்கோல் அடைக்கப் பட்ட கன்றுக் குட்டிகளால் ஆன கலைப் படைப்புகள் என்று சொல்லப் படுபவைகளின் நடுவே சில துள்ளி விளையாடும் கன்றுகளைக் காணும் போது தாங்கொணா பரவசம் வருகிறது. அவ்விதத்தில் இது முதல் வரிசைப் படம். இதன் பரவசமே வாழ்வை சின்னாப் பின்னமாக்கும், மாமேதைமையையும் புழுதியில் எறியும் மனிதர்களின் தன்முனைப்பும், பேதமையும், குரூரமும் நிறைந்த, வெறும் கொடுக்கல், வாங்கலாக வாழ்க்கையைச் சுருக்கிவிட்ட இயல்பைக் காட்டும் சோகம்தான்.

The heart of the melody can never be put down on paper. இசையின் இதயத்தை காகிதத்தில் கொண்டு வர முடியாது. அமெடியஸ் படத்தைப் பற்றியும்தான்.

 

Friday, 28 February 2025

இன்றைய சூழலில் உங்களால் நடுநிலை வகிக்க முடியுமா ?

 அருந்ததிராய் நேர்காணல்



தெகல்கா’ ஆங்கில வார இதழுக்கு (31.3.07) எழுத்தாளர் அருந்ததிராய் அளித்துள்ள பேட்டியை அளவு கருதி சற்றே சுருக்கித் தருகிறோம். அமைதி வழியிலான மக்கள் போராட்டங்கள் அனைத்தும் அலட்சியப் படுத்தப் படும் சூழலில், நக்சல்பாரிகளுடைய ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை அங்கீகரிக்கிறார் ராய்.

அதே நேரத்தில், மாவோயிஸ்டு களும் அடக்குமுறையில் ஈடுபடுவ தாகவும், ஸ்டாலின்,மாவோ ஆகி யோரது ஆட்சியில் லட்சக்கணக்கா னோர் படுகொலை செய்யப்பட்ட தாகவும் சாடுகிறார். ஸ்டாலின் மாவோ மீது ஏகாதிபத்தியங்கள் பரப்பியுள்ள அவதூறுகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி நாம் ஏற்கெனவே எழுதியிருக்கி றோம். நீளம் கருதியும், மேற்கூறிய விமரிசனங்கள் இந்தப் பேட்டியின் மையக் கருத்துக்கு நேரடியாகத் தொடர்பற்றவை என்பதனாலும் பேட்டியின் அப்பகுதியை வெளியிடவில்லை.

நிலவும் ஏகாதிபத்தியக் கொடுங் கோன்மையையும் ஜனநாயக மோசடியையும் சகித்துக் கொள்ள முடியாமலும்,அதே நேரத்தில் கம்யூனிச அமைப்புகளுடன் இணங்கிப் போகமுடியாமலும் இருக்கும் ஒரு அறிவுஜீவி, இன்றைய சூழலில் நடுநிலை வகிக்க முடியுமா என்பதே அவருடைய பேட்டி எழுப்பும் கேள்வி.

இனி நேர்காணல்..


தற்போதைய சூழலில் நாடு முழுவதும் வன்முறை அதிகரித்து வருகிறது. இந்த அறிகுறிகளைத் தாங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்? இதனை எப்பொருளில் நாம் காண வேண்டும்?

இந்த அறிகுறிகளைக் காண நீங்களொன்றும் பிறவி மேதையாக இருக்க வேண்டியதில்லை. நம்மிடையே பேராசையும், நுகர்வு வெறியும் கருக்கொண்ட ஒரு நடுத்தர வர்க்கம் வளர்ந்து வருகிறது. தொழில் வளம் மிக்க மேற்கத்திய நாடுகளைப் போல வளங்களைக் கொள்ளையிடவும், அடிமைப்படுத்திக் கொள்ளவும் நம்மிடம் காலனி நாடுகள் இல்லை. எனவே, நாம் நம்மையே அடிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். நமது உறுப்புக்களையே நாம் தின்னத் தொடங்கி விட்டோம். பலவீனமான மக்களிடமிருந்து நிலம், நீர், வளங்களைப் பறித்துக் கொள்வதன் மூலம் மட்டுமே, அடங்கக் கூடிய இந்தப் பேராசை வெறியே தேசிய உணர்வாகவும் நல்லொழுக்கமாகவும் சித்தரிக்கப்படுகிறது.

சுதந்திர இந்தியாவில் தொடுக்கப்பட்ட பிரிவினைவாதப் போர்களிலேயே பெரு வெற்றியடைந்த ஒரு போரை இதோ நாம் நம் கண் முன்னால் காண்கிறோம். ஆம், நம் நாட்டின் மேட்டுக்குடி வர்க்கங்களும் நடுத்தர வர்க்கங்களும் ஏனைய இந்திய மக்களிடமிருந்து பிரிந்து தனி நாடாகவே ஆகிவிட்டனர். இப்பொழுது இந்தப் புதிய வல்லரசின் மேன்மை தங்கிய பிரஜைகளுக்கு, தங்களது பிரம்மாண்ட விளையாட்டுப் பொருட்களான கார்கள், வெடிகுண்டுகள், கண்ணி வெடிகளை மென்மேலும் உற்பத்தி செய்வதற்கு நிலமும் தேவைப்படுகிறது. எனவே இது ஒரு முழுநிறை யுத்தம். இரண்டு தரப்பினரும் தத்தம் ஆயுதங்களைத் தெரிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கமும் தொழிற்குழுமங்களும் கண்டுபிடித்திருக்கும் ஆயுதத்தின் பெயர் கட்டுமான மறு சீரமைப்பு. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, அன்னிய நேரடி மூலதனம், அவர்களுக்கு இணக்கமாக நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகள், இணக்கமான அரசியல் வல்லுனர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கார்ப்பரேட் ஊடகங்களின் இணக்கமான உதவி, இறுதியாக போலீஸ் படை  இவற்றின் துணையுடன் இந்தச் “சீரமைப்பு’ மக்களின் தொண்டைக் குழிக்குள் மூர்க்கமாகக் குத்தித் திணிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிப் போக்கை எதிர்த்துப் போராட விரும்புவோர் இதுநாள் வரை, தர்ணாக்களையும், சத்தியாக்கிரகங்களையும், நீதிமன்றங்களையும், நேச சக்திகள் என்று அவர்கள் கருதிக் கொண்டிருந்த ஊடகங்களையும்தான் தங்கள் ஆயுதங்கள் என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்றோ துப்பாக்கிகளை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 


இந்த வன்முறை வளருமா? ஆம், வளரத்தான் செய்யும். மக்கள் நலனையும் முன்னேற்றத்தையும் அளவிடுவதற்கு “தேசிய வளர்ச்சி விகிதத்தையும்’ பங்குச் சந்தைக் குறியீட்டு எண்களையும் அளவுகோல்களாக அரசு பயன்படுத்தும் வரை இந்த வன்முறையும் அதிகரிக்கத்தான் செய்யும். நான் இந்த அறிகுறிகளை எவ்வாறு காண்கிறேன்? அதுதான் கண் எதிரே கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறதே. தலைக்கு மேலே சுற்றும் மின்விசிறியில் பட்டுத் தெறித்து நாற்புறமும் வீசிக் கொண்டிருக்கிறது மலம். இதைப் புரிந்து கொள்வது அத்தனைக் கடினமா என்ன?

“நான் வன்முறையில் இறங்க மாட்டேன்,  ஆனால்  அதேவேளையில்  நாட்டில்   இன்று
நிலவும்  சூழலில்,  வன்முறையைக்   கண்டனம்  செய்யவும்  மாட்டேன்.      அவ்வாறு கண்டனம் செய்வது நெறியற்றது”   என முன்பொரு முறை    நீங்கள்  கூறியிருந்தீர்கள். அதனை விளக்க முடியுமா? "

நான் ஒரு கொரில்லாப் போராளியானால் மற்றவர்களுக்குச் சுமையாகத்தான் இருப்பேன். மற்றப்படி “நெறியற்றது’ என்ற சொல்லை நான் பயன்படுத்தினேனா எனச் சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், அறம், நெறி என்பவையெல்லாம் மிகவும் நெகிழ்ச்சியான, புதிரான சொற்கள். அவை தட்பவெட்ப நிலைகளைப் போல மாறக்கூடியவை.

நான் உணர்வது இதுதான்; சாத்வீக இயக்கங்கள் நம்முடைய ஜனநாயக அமைப்பின் எல்லாக் கதவுகளையும் ஆண்டுக்கணக்கில் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு தட்டித் தட்டி அவர்கள் கண்டதென்ன? அலட்சியமாக நிராகரிக்கப்பட்டதையும், அவமானப்படுத்தப்பட்டதையும் தவிர!

போபால் விஷ வாயுவினால் பாதிக்கப்பட்டோரையும்,நர்மதை பாதுகாப்பு இயக்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்நாட்டில் வெறெந்த மக்கள் இயக்கத்திற்கும் இல்லாத அளவில் நர்மதை பாதுகாப்பு இயக்கத்திற்கு பிரபலமான தலைமை, போதிய சக்திகள், ஊடகங்களின் ஆதரவு என எல்லாம் இருந்தது. ஆனால் ஏன் அது வெற்றி பெற முடியவில்லை? அந்த மக்கள் தமது போராட்ட வழிமுறைகளை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறார்கள். அத்தகைய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் போய் (உலக முதலாளிகள் கூட்டத்தில்- மொர்) சத்தியாக்கிரகத்தின் மேன்மையைப் பற்றி சோனியா காந்தி பேசுகிறார் என்றால், அப்போதாவது நாம் யோசிக்க வேண்டாமா?

உதாரணமாக, ஒரு ஜனநாயக நாட்டில் பெருந்திரளான மக்களின் சட்ட மறுப்பு அல்லது ஒத்துழையாமை சாத்தியமா? அதுவும் பொய்களையும் புனைச் சுருட்டுக்களையும் பரப்பும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவையாகச் செயல்படும் ஊடகங்களின் யுகமான இன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமா? பிரபலமானவராக இல்லாத ஒருவர் உண்ணாவிரதம் இருந்து என்ன பயன்?

நங்லாமச்சி சேரி மக்களோ அல்லது பட்டி சுரங்கத்தின் தொழிலாளர்களோ உண்ணாவிரதமிருந்தால், யாரேனும் கண்டு கொள்வார்களா? ஐரோம் சர்மிளா கடந்து ஆறாண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வருகிறார். இதிலிருந்தெல்லாம் நம்மில் பலர் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என நினைக்கிறேன்.

                                    

பிர்லா மாளிகையில் எளிமையான உடையில் சொகுசாக 'காந்தி'

நாம் இப்பொழுது ஒரு முற்றிலும் மாறுபட்ட கால கட்டத்தில், மாறுபட்ட இடத்தில் இருக்கிறோம்.  மக்கள் போராட்டம் என்பதையே துரோகத்தனமான வியாபாரமாக மாற்றி விட்ட அரசு சாரா நிறுவனங்களின், தன்னார்வக் குழுக்களின் அல்லது வேடதாரிகளின் யுகத்தில் நுழைந்திருக்கிறோம். பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் “ஸ்பான்சர்’ செய்யப்படுகின்றன. மாபெரும் போராளிகளைப் போல சண்டப் பிரசண்டம் செய்து விட்டு, பின்னர் தனது பிரச்சாரத்தின் ஒரு சிறு அம்சத்தைக் கூட தொடராமல் கை கழுவும் சமூக மன்றங்களைக் காண்கிறோம். போராட்டங்கள் போலவே தம்மைக் காட்டிக் கொள்ளும் தோற்றப் போலிகள் எங்கும் நிறைந்திருக்கின்றன.

இப்பொழுதுள்ள அரசு சாரா நிறுவனங்கள் மிகுதியாகக் கூச்சலிடுகின்றன. கற்றை கற்றையாக அறிக்கைகள் தயாரிக்கின்றன. ஆனால் அரசாங்கமோ அவர்களுடன் சந்தோஷமாகச் சகவாழ்வு நடத்துகிறது. இவற்றிலிருந்தெல்லாம் நாம் என்ன விளங்கிக் கொள்வது? எங்கும் புழுத்து நெளியும் தொழில்முறை சீர்குலைப்பாளர்களால் உண்மையான அரசியல் போராட்டங்கள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன.

நீதிமன்றங்களில் மக்கள் இயக்கங்கள் நியாயம் வேண்டி நின்ற காலம் ஒன்று இருந்தது. நீதிமன்றங்கள் அநீதியான தீர்ப்புக்களைப் பொழிகின்றன. வறிய மக்களை இழிவுபடுத்தும் வகையில் நீதிமன்றம் பயன்படுத்தும் மொழியைக் கேட்கும்போது அதிர்ச்சியால் நமது மூச்சே நின்றுவிடும் போலிருக்கிறது.  இந்த நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனத்தின் சித்தாந்த இதயத்தை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கார்ப்பரேட் ஊடகங்களோடு சேர்ந்து நீதிமன்றங்களும் நவீன காலனியாதிக்கத்தின் அச்சாணிகளில் ஒன்றாக மாறி விட்டதையே இவை அனைத்தும் உணர்த்துகின்றன.

இதுதான் நாம் காணும் சூழல். தாங்கள் நசுக்கித் தரைமட்டமாக்கப்படுவதை உணரும் மக்கள், முடிவில்லாத “ஜனநாயக’ வழிமுறைகளில் போராடி இறுதியில் இழிவுபடுத்தப்படும் மக்கள் வேறென்ன செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்?

ஆனால் இதனுடைய பொருள் வன்முறை அல்லது சாத்வீகம் என்ற இரண்டு முரண்பட்ட வழிமுறைகள்தான் உள்ளன என்பதல்ல. ஆயுதந்தாங்கிய போராட்டத்தில் நம்பிக்கையோடும், அதேவேளையில் தங்களது ஒட்டுமொத்த அரசியல் வழிமுறைகளில் அதனை ஒரு பகுதியாகவும் மட்டுமே கருதிச் செயல்படும் அரசியல் கட்சிகள் உள்ளன. இத்தகைய போராட்டங்களில் ஈடுபடும் அரசியல் ஊழியர்கள் சிறை, சித்திரவதை, பொய்வழக்குகள் என மிகக் கொடூரமாக ஒடுக்கப்படுகின்றனர்.

மற்ற எல்லா வழிகளையும் முயன்று விரக்திதான் மிச்சம் என்ற நிலையில், மக்கள் இந்த வழியைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, நாம் அவர்களைக் கண்டிக்க முடியுமா? நந்திகிராம் மக்கள் தர்ணா நடத்தி பாட்டு பாடிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்களேயானால் மேற்கு வங்க அரசு பணிந்திருக்குமா? அப்படி யாராவது நம்புகிறீர்களா?

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாறுபட்ட காலத்தில், நிலவும் அமைப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டம் என்பது பிரயோசனமற்றது. (சந்தேகமின்றி, நம்மில் பலர் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான்) பிரயோசனமாக ஏதேனும் செய்ய விரும்புகிறவர்கள் அதற்கு மிகக் கடுமையான விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய விலையைக் கொடுக்க தயாராயிருப்பவர்களை என்னால் கண்டிக்க இயலாது.



நீங்கள் மிக அதிகமான இடங்களுக்கு பயணித்து வருகிறீர்கள். பிரச்சினைக்குரிய பகுதிகள் குறித்தும், அங்கே நிலவும் சூழல், போராடும் தரப்புகள் குறித்தும் சொல்ல இயலுமா ?

மிகப் பெரிய கேள்வி எப்படிச் சொல்வது? காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கும் இராணுவம், குஜராத்தில் நிலவும் நவீன பாசிசம், சத்தீஸ்கரில் நிகழ்ந்து வரும் உள்நாட்டுப் போர், ஒரிசாவைக் கற்பழிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், மூழ்கிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான நர்மதை பள்ளத்தாக்கு கிராமங்கள், முழுப் பட்டினியின் நுனியில் விளிம்பில் தவித்து நிற்கும் மக்கள், சூறையாடப்படும் காடுகள், டௌ கெமிக்கல்ஸ் என்ற பெயரில் நந்திகிராமில் நுழையும் யூனியன் கார்பைடு நிறுவனத்தை உச்சி மோந்து வரவேற்கும் மேற்கு வங்க அரசு, இதனைக் காண்பதற்கு இன்னும் உயிரோடிருக்கும் போபால் விஷ வாயுவினால் தாக்கப்பட்ட மக்கள்.

இவை மட்டுமல்ல, மறைந்து கொண்டு நஞ்சைப் பரப்பும், மீண்டும் வெடிக்கக் காத்திருக்கும் இந்துத்துவாவை எப்படிக் குறிப்பிடாமல் இருக்க முடியும்? இவையனைத்தையும் விட மிகக் கேவலமானது என்னவெனில், இன்னமும் தீண்டாமையைப் போற்றிப் பாதுகாத்து வரும் ஒரு பண்பாடாக, சமூகமாக, நாடாக நாம் வாழ்கிறோம். நமது பொருளாதார வல்லுனர்கள் கோடிகளைக் கணக்கிட்டு, வளர்ச்சி விகிதத்தைக் குறித்து பீற்றிக் கொண்டிருக்கும் வேளையில், இலட்சக்கணக்கான மலம் அள்ளும் தொழிலாளர்கள் தம் வயிற்றைக் கழுவுவதற்காக கிலோக்கணக்கில் பிறரது மலத்தைத் தலையில் சுமக்கிறார்கள். அடுத்தவன் மலத்தைத் தலையில் சுமக்க மறுத்தால் அவர்கள் பட்டினி கிடந்து சாகவேண்டும். அடேயப்பா, இது பெரிய்ய புடுங்கி வல்லரசுதான்!

சமீபத்தில் வங்கத்தில் நிகழ்ந்த அரசு, போலீசு வன்முறையை நாம் எப்படிப் பார்ப்பது?

மற்ற இடங்களில் நடக்கும் போலீசு, அரச வன்முறையிலிருந்து எந்த வகையிலும் இது வேறுபட்டதல்ல. பொய், பம்மாத்து, இரட்டைவேடம் ஆகியனவற்றில் தேர்ந்த மற்ற அரசியல் கட்சிகளுக்கு பொது நீரோட்ட இடதுசாரிகள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. எங்கும் விசித்திரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சவுதி அரேபியாவில் பனி பொழிகிறது. பகலில் ஆந்தைகள் ஓலமிடுகின்றன. சீன அரசு தனிச் சொத்துடைமைக்காக மசோதா நிறைவேற்றுகிறது. 

சீனத்தின் கம்யூனிஸ்டுகள் 21ஆம் நூற்றாண்டின் மாபெரும் முதலாளிகளாக உருவெடுத்துக் கொண்டிருக்கும்போது நமது நாட்டு பாராளுமன்றக் கம்யூனிஸ்டுகளிடம் நாம்  வேறெதை எதிர்பார்க்க முடியும்? 


 
நந்திகிராமும், சிங்கூரும் மிகத் தெளிவான அபாயச் சின்னங்கள்.

போயும் போயும் நவீன முதலாளித்துவத்தில் தான் எல்லாப் புரட்சிகளும் முடிவடைய வேண்டுமோ, வியப்பாகத்தான் இருக்கிறது. சிந்தித்துப் பாருங்கள். பிரெஞ்சுப் புரட்சி, ரசியப் புரட்சி, சீனப் புரட்சி, வியத்நாம் யுத்தம், நிறவெறிக்கு எதிரான போராட்டம், சொல்லிக் கொள்ளப்படும் காந்திய சுதந்திரப் போராட்டம் இவையனைத்தும் எங்கு போய் நின்று கொள்கின்றன? முதலாளித்துவம் என்பதுதான் நம் கற்பனையின் முடிவா?

பிஜாப்பூரில் 55 போலீசுக்காரர்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
மாவோயிஸ்டுகளை அரசின் மற்றொரு முகம் எனச் சொல்வது சரியாக இருக்குமா?

போராளிகள் எவ்வாறு அரசின் மறு முகமாக இருக்க முடியும்? நிறவெறிக்கு எதிராகப் போராடியவர்களை, அவர்களுடைய வழிமுறைகள் எவ்வளவுதான் கொடூரமானவையாக இருந்த போதிலும், அவர்களை அரசின் இன்னொரு முகம் என யாரேனும் அழைக்க இயலுமா? அப்படியானால் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய அல்ஜீரியர்கள், அல்லது நாஜிக்களை எதிர்த்துப் போராடியவர்கள், அல்லது காலனிய அரசுகளை எதிர்த்துப் போராடியவர்கள், அல்லது அமெரிக்க ஆக்கிரமிப்புக்கெதிராக ஈராக்கில் போராடிக் கொண்டிருப்பவர்கள், இவர்கள் அனைவரையும் அரசின் இன்னொரு முகம் என்று எப்படிச் சொல்ல முடியும்?

அறிக்கைகளால் உருவாக்கப்படும் மேம்போக்கான இத்தகைய “மனித உரிமை’ச் சொல்லாடல்களும், எல்லா வன்முறைகளையும் கண்டிப்பதாகக் கூறிக் கொள்ளும் இந்தப் பழி போடும் விளையாட்டும்  இப்பிரச்சினைகள் அனைத்திலும் உறையும் உண்மையான அரசியலைக் கரைத்து வெளியேற்றி விடுகிறது. நாம் எவ்வளவுதான் தூய்மையாக இருக்க விரும்பினாலும், நமது ஒளிவட்டங்களுக்கு நாமே எவ்வளவுதான் மெருகேற்றிக் கொண்டாலும், வருந்தத்தக்க உண்மை என்னவென்றால் அத்தகைய தூய்மையான வாய்ப்புகளோ மாற்றுகளோ நம்முன் இல்லை. சத்தீஸ்கரில் அரசினால் நிகழ்த்தப்படும் உள்நாட்டுப் போர், புஷ்ஷினுடைய சித்தாந்தத்தை வெளிப்படையாக நடைமுறைப்படுத்துகிறது

.“நீ எங்களோடு இல்லையென்றால், நீ தீவிரவாதிகளோடு இருக்கிறாய்!” என்று கூறுகிறது. அரசின் பாதுகாப்புப் படைகள் ஒருபுறமிருக்க, இப்போரின் அச்சாணியே சல்வாஜுடும் என்ற படைதான். இது அரசின் நிர்ப்பந்தத்தினால் ஆயுதமேந்தியிருக்கின்ற சாதாரண மக்களைக் கொண்ட படை.  இந்திய அரசு ஏற்கெனவே காஷ்மீரிலும், மணிப்பூரிலும், நாகாலாந்திலும் இத்தகைய படையை உருவாக்க முயன்றிருக்கிறது. அதன் விளைவாக, பத்தாயிரக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தோற்றுப்போன இத்தந்திரங்களை இப்பொழுது இந்தியாவின் இதயப் பகுதியிலேயே இறக்குமதி செய்ய அரசு முயன்று வருகிறது. தமது கனிமவளம்மிக்க நிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் போலீசு முகாம்களுக்கு விரட்டியடிக்கப்படுகின்றனர். நூற்றுக்கணக்கான கிராமங்கள் பலவந்தமாகக் காலி செய்யப்பட்டிருக்கின்றன. இரும்புத் தாது வளம் மிக்க அவர்களது நிலங்கள் மீது டாடா, எஸ்ஸார் போன்ற முதலாளிகள் கண் வைத்து விட்டனர். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஆனால் அவற்றின் ஷரத்துக்கள் யாருக்கும் தெரிவதில்லை. நிலக் கையகப்படுத்தல் தொடங்கி விட்டது.  எல்லோருடைய பார்வையும், அரசின் கூலிப் படைகளுக்கும், கொரில்லாக் குழுக்களுக்குமிடையிலான வன்முறையில் பதிந்திருக்க, பன்னாட்டுக் குழுமங்கள் சத்தமின்றிக் கனிம வளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. சத்தீஸ்கரில் அரங்கேற்றப்பட்டு வரும் நாடகத்தின் ஒரு சிறு பகுதி இது.

55 போலீசுக்காரர்கள் கொல்லப்பட்டது பயங்கரமானதே. ஆனால் அவர்களும் மற்றவர்களைப் போல அரசின் கொள்கைகளின் விளைவாகப் பாதிக்கப்பட்டவர்களே. வெறும் பீரங்கித் தீனியாகத்தான் (இச்ணணணிண ஞூணிஞீஞீஞுணூ) அப்போலீசுக்காரர்களை அரசும், பன்னாட்டு நிறுவனங்களும் கருதுகின்றன. அந்தப் போலீசுக்காரர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பதை ஆராயப் புகுந்தால் அதில் சொல்வதற்கு ஏராளம் இருக்கிறது.

செத்துப் போன போலீசுக்காரர்களுக்காகச் சில நாட்களுக்கு முதலைக் கண்ணீர் வடிக்கப்படும். தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் நம் மீது ஏறி சவாரி செய்வார்கள், பின்னர் மேலும் கூடுதலான பீரங்கித் தீனி சப்ளை செய்யப்பட்டு விடும். மாவோயிஸ்ட் கொரில்லாக்களைப் பொருத்தவரை அவர்களால் கொல்லப்படும் போலீசுக்காரர்களும் சல்வா ஜுடும் சிப்பாய்களும் இந்திய அரசின் ஒடுக்குமுறை எந்திரத்தின் கையாட்கள்; சித்திரவதை, காவல் நிலைய சாவுகள், போலி மோதல்களை நடத்தும் ஆயுதப்படையினர்; அவர்கள் அப்பாவிக் குடிமக்கள் அல்லர்.

மாவோயிஸ்டுகளும் பலவந்தத்திலும், பயங்கரத்திலும் ஈடுபடக் கூடியவர்களே என்பதிலும், சொல்ல இயலாத அடக்குமுறைகளைச் செய்திருக்கிறார்கள் என்பதிலும், உள்ளூர் மக்களிடம் தங்களுக்கு விதிவிலக்கற்ற பேராதரவு இருப்பதாக அவர்கள் உரிமை கொண்டாட முடியாதென்பதிலும் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவ்வாறு யார்தான் உரிமை கொண்டாட முடியும்? எனினும், உள்ளூர் மக்களின் ஆதரவின்றி எந்தக் கொரில்லாப் படையும் இயங்க முடியாது. அது நடைமுறைச் சாத்தியமற்றது. மேலும்,

மாவோயிஸ்டுகளுக்கான ஆதரவு பெருகிக் கொண்டுதான் வருகிறதேயொழிய குறையவில்லை.ஆனால், கணக்கிடலங்கா அநீதிகளுக்கு எதிராகப் போராடும் எதிர்ப்பு இயக்கத்தை, அத்தகைய அநீதிகளைத் திணிக்கும் அரசோடு ஒப்பிடுவது அபத்தமானது.

வன்முறையற்ற எதிர்ப்பின் ஒவ்வொரு முயற்சியையும் அரசு முகத்திலறைந்தாற்போலக் கதவை மூடியிருக்கிறது. மக்கள் ஆயுதம் ஏந்தும்போது எல்லாவிதமான, வன்முறைகளும் இருக்கத்தான் செய்யும். புரட்சிகரமானது, உதிரித்தனமானது, கடைந்தெடுத்த கிரிமினல்தனமானது என எல்லா வன்முறைகளும் வரத்தான் செய்யும். தானே உருவாக்கிய இத்தகைய பயங்கரமான சூழலுக்கு இந்த அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

“நக்சல்கள்’, “மாவோயிஸ்டுகள்’, “வெளியாட்கள்’: இப்பதங்கள் தற்பொழுது வரையறை யற்றுப் பயன்படுத்தப்படுகின்றனவே ?

தனது சுயவிளம்பரத்தில் தானே மயங்கிவிட்டதால், தனது சொந்த மக்கள் தனக்கெதிராகக் கிளர்ந்தெழக் கூடும் என்பதை நம்ப இயலாத அரசுகள், அடக்குமுறையின் துவக்க காலகட்டங்களில் பயன்படுத்தும் மிகப் பொதுவான குற்றச்சாட்டுதான் “வெளியாட்கள்’ என்பது “வெளியாள்’ என்றால் என்ன? யார் எல்லைகளைத் தீர்மானிப்பது? அவை கிராமத்தின் எல்லைக்கோடுகளா? தாலுகாவினதா? மாவட்டமா அல்லது மாநிலமா? குறுகிய பிரதேச வாதமும் இனவாதமும்தான் கம்யூனிசத்தின் புதிய தாரக மந்திரமோ?

நக்சல்கள், மாவோயிஸ்டுகள் யார்? இந்தியா ஒரு போலீசு அரசாக மாறப் போகிறது. தற்போதைய அரசியல் நடப்புகளை ஏற்க மறுப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, தாங்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்படும் அபாயத்தை அவர்கள் எதிர்கொண்டாக வேண்டும். நாம் அனைவரும் மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள், தீவிரவாதிகள் அல்லது தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என அழைக்கப்படலாம். மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் என்றால் யாரென்றே தெரியாத அல்லது தெரிந்து கொள்ள விரும்பாத நபர்களால் நமது கதை முடித்து வைக்கப்படலாம். அத்தகைய காலம் வெகு தொலைவில் இல்லை.

தமிழாக்கம் : பால்ராஜ்

 

 

தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்

 நா.மம்மது  உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...