Thursday, 22 February 2018

தமிழ் நிலம் : தாய் நிலத்தின் வழியே ஓர் நெடும் பயணம் (நிகழ்ச்சி தயாரிப்பு குறித்த விபரம்)


தமிழ் நிலம் 

தாய் நிலத்தின் வழியே ஓர் நெடும் பயணம் 

முன்னதாக ஒரு தகவல் :

தமிழ் நிலம் என்கிற இந்த தமிழக வரலாற்றுத் தொடர் நிகழ்ச்சி  அப்போது வெளிவரவிருந்த ஒரு  தனியார் தொலைக்காட்சிக்காக  என்னால் எழுதி இயக்கப்பட்டது.  அதன் முதல் துவக்க நிகழ்ச்சியான Episode தான் பழவேற்காடு : சரித்திரச் சின்னங்களுடன் ஒரு நெய்தல் நிலம். அதற்கான Script ஐ இந்த வலைத்தளத்தில் தனியாக பதிவு செய்து செய்துள்ளேன். 

தமிழக வரலாறு பற்றிய விரிந்த ஒரு பார்வையுடன் தமிழகத்தின் ஊடாக பயணம் செய்து அதனை ஒவ்வொரு தொடர் நிகழ்ச்சியின் வாயிலாக காட்சிப்படுத்துவதே இத்தொடர் நிகழ்ச்சியின் நோக்கம். தமிழகத்தின் பாரம்பரியமிக்க இடங்கள், தொல்லியல் சான்றுகளுடன் அத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்கள், கோட்டைகள், கோயில்கள், சிற்பங்கள், அரண்மனைகள், அணைக்கட்டுகள், இசை பாரம்பரியம், சரணாலயங்கள், அதிசயமான பழக்கவழக்கங்கள் கொண்ட ஊர்கள், அழகிய சுற்றுலாத் தளங்கள் என பெரிய தளத்தில் கொண்டு செல்லப்போகும் நிகழ்ச்சி தான் தமிழ் நிலம்

ஒரு வகையில் இது Travell of Tamil History / Tamil People History / Tamilnadu History. ஒரு Cameraman, ஒரு Assistant Director, ஒரு Anchor, ஒரு Driver இவர்களை அனைவரையும் ஒருங்கிணைக்கும் Programme Director அனைவரும் சேர்ந்த படப்பிடிப்பு குழு ஒன்று தமிழகம் முழுக்க பயணித்தவாரே இதனை சுவாரசியமான வகையில் பதிவு செய்வார்கள்.

உதாரணத்துக்கு சில நிகழ்ச்சி குறித்த தகவல்கள் :

மானுடவியல்

குடியம் குகைகள்

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரிலிருந்து 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள குடியம் என்னும் இடத்தில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழையகற்கால மனிதர்கள் வாழ்ந்த  இரண்டு குகைகள் உள்ளன. முதல் குகை சுமார் 230 அடி நீளம் 65 அடி அகலம் உள்ளது. குறைஞ்சது 500 பேராவது இந்தக் குகையில படுத்துத் தூங்கி வசிக்கலாம். ரெண்டாவது குகை சின்னது. 100 பேர் அதில் வாழ முடியும்.

புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்ராபர்ட் புரூஸ் பூட்” 1864-ல் இங்கு ஆராய்ச்சி மேற்கொண்டு இந்த உண்மையை வெளிக்கொணர்ந்தார். அதன்பின் 1930 -60 வரை இந்திய தொல்லியல்துறையை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரும் ,1962 ல் கே.டி.பானர்ஜியும்,  1976 ல் . சுவாமியும், 2003 துளசிராமன், 2011 ல் சாந்திபப்பு ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். இவர்களின் ஆராய்ச்சிபடி இந்தியாவின் தொல்லியல் தன்மையை இந்த குடியம் குகைகள் தான் சிறப்பிக்கின்றன.

இதன்மூலம் தமிழர்களின் தொன்மம் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறியலாம். இங்குள்ள ஒவ்வொரு பாறையும் 140 மீட்டர் உயரமுள்ளவை.

2011ல் ஆய்வு செய்த பப்பு இந்த கற்பாறைகளின் பகுதிகளை பிரான்ஸ்க்கு அனுப்பி நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்த பாறைகள் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என கண்டுபிடிக்கப்பட்டது. 13 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த மலைகள் தொடர்ச்சியான வெயில், மழையினால் பல்வேறு நிலைகளை அடைந்து படிவுப்பாறைகளாக மாறியுள்ளன. மேலும் திருவள்ளூருக்கு அருகில் 1985ல் துவக்கப்பட்ட பூண்டி அகழ் வைப்பகம் தான் இந்தியாவிலேயே வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடர்புடைய பொருட்கள் கொண்டதாகும்

ஏராளமான நபர்கள் சென்று ஆய்வு செய்து வந்த இடத்தின் வழித்தடமெங்கும் பல மூலிகை தாவரங்கள் உள்ளன. இந்தப் பகுதி மக்கள் செயற்கை உரங்களை பயன்படுத்துவதில்லை. பண்டைய நெல்வகைகள், தானியங்களை இன்றளவும் பாரம்பரிய முறையில் பயிரிட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் இன்றளவும் சில பழமையான தமிழ் சொற்கள் பயன்பாட்டில் உள்ளது. உதாரணத்திற்கு "இட்டிகா" என்னும் சொல். அதைத்தான் நாம் இன்று செங்கல் என அழைக்கிறோம்.

கோயில்கள்

அழகர் கோயில்

அழகர்கோயில் என்றதும் நினைவுக்கு வருவது பசுமையான மலைகள், கோட்டை வாசலுக்குள் நுழைந்து செல்லும் பேருந்து, பெரிய கோபுரம், சந்தனம் பூசிய கதவில் குடிகொண்ட பதினெட்டாம்படிக்கருப்பு, அனுமானும் கருடனும் வரவேற்கும் வண்டிப்பாதை, சுந்தரத்தோளுடையான் குடியிருக்கும் அழகர்கோயில், தீர்த்தத்தொட்டிக்கு செல்லும் வழியில் விளையாடித்திரியும் மந்திகள், கொய்யாப்பழம், மாங்காய், மாம்பழம், பழாச்சுளை, வெள்ளரிப்பிஞ்சு, அன்னாச்சி, இலந்தைப்பழம், நவாப்பழம் என வழியில் விற்கும் எளிய வியாபாரிகள், கூழாங்கற்களுக்கிடையே சலசலத்து வரும் சிலம்பாறு, அடர் மரங்கள், கத்தாழை மற்றும் பாறைத்திட்டுகளில் காணப்படும் பெயர்கள், சிலம்பாற்றில் நீராடி சிரித்துபேசி வரும் மனிதர்கள், நீள்சாலை, பழமுதிர்சோலை, ஈரம் கசியும் கல்மண்டபம், தீர்த்தமாட வரிசையில் நிற்கும் பக்தர்கள், சில்லென வரும் நீர், தீர்த்தத்தொட்டிக்கு மேல் காவலிருக்கும் இராக்காயி அம்மன், குளித்துவிட்டு சாப்பிட இட்லி கெட்டி சட்னி புளியோதரை, பழம்உதிர்சோலையில் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கும் குமரன், மலையிறங்கி அழகரை வணங்கி வாங்கித் திங்கும் சம்பா தோசை, கூட்டமாக வரும் பேருந்து, குளிர்ந்த காற்று. அதுமட்டுமா அழகர் மலையின் ஆதிகாலக் குகை ஓவியங்களும் , சமணத்தின் சுவடுகளும், பொய்க்கரைப்பட்டி தெப்பத்திருவிழாவும், அழகர் கோயில் தேரோட்டமும் ஒரு பெரும் வைபவமாக கண்முன்னே விரிகின்றன.

தொல்லியல்

கொடுமணல் அகழாய்வு

ஈரோடு மாவட்டம் சென்னிமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் நொய்யல் நதியின் வடகரையில் அமைந்துள்ள கொடுமணல் என்கிற ஊர் சங்க காலத்தில் சிறப்புற்றிருந்த வணிகப்பெருநகரமாகும். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் இவ்வூர் கொடுமணம் என்றழைக்கப்பட்டிருக்கிறது. சங்க காலத்தில் அரிய கற்களால் ஆன அணிகலன்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடமாக விளங்கியது என்று சங்கப்புலவர் கபிலரும், அரிசில்கிழாரும் குறிப்பிடுகின்றனர்.

15 ஹெக்டேர் பரப்பளவுள்ள இவ்வூரில் 9 அகழாய்வு குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை நடந்துள்ள அகழாய்வுகள் மூலம் பச்சைக்கல், நீலக்கல், பளிங்கு, கார்லீனியன், அகேட், அமெதிஸ்ட் போன்ற அரிய கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு, எஃகு உர்வாக்கும் தொழிற்கூடமும் கண்டறியப்பட்டுள்ளன. யானை தந்தத்தால் ஆன அணிகலன்களும் கிடைத்துள்ளன

ஏறக்குறைய 500 ஆண்டுகள் நிலைத்துநின்ற கொடுமணலின் தொழிற்கூடங்களில் உருவாக்கப்பட்ட அணிகலன்களை வாங்குவதற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் வந்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக கங்கைச்சமவெளிப் பகுதி பண்பாட்டிற்கே உரித்தான வடக்கத்திய கருப்புநிற மண்பாண்டங்கள் கொடுமணலில் கிடைத்துள்ளன. இதை அமெரிக்காவில் உள்ள  காலக்கணிப்பு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பியபோது இது கி.மு 5ஆம் நூற்றாண்டை சேர்ர்ந்தது என்று உறுதிப்படுத்தப்பட்டது. இக்காலக்கணிப்பு இங்கு கிடைத்த 500 க்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி எழுத்துக்களுக்கும் பொருந்தும். கொடுமணலில் கிடைத்த இந்த மண்பாண்டங்களில் அதிந்தை, மாஅகந்தை, குவிரன், சுமணன், சம்பன், ஸ்ந்தை, வேளி, பன்னன், பாகன், ஆதன் பெயர் பொறித்திருப்பதை கொண்டு தமிழர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுததறிவு பெற்ற சிறந்த சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை இச்சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

கல்வெட்டுக் கதைகள்

செஞ்சியில் 447 ஆண்டுச்சந்தை

தமிழகத்தின் மலைக்கோட்டைகளில் அழகும் புகழும் பெற்றது செஞ்சிக்கோட்டை. செஞ்சிக்கோட்டையை சில மாதங்களே ஆட்சி செய்தாலும் , வீரத்தால் நாட்டு மக்களின் நெஞ்சிலே நீங்கா இடம் பெற்றவர் தேசிங்குராஜன். அவரைப்பற்றிய கதைப்பாடல்கள் இந்த கோட்டையின், வலிமையையும் பேசுகின்றன. செஞ்சிக்கோட்டைக்குள் ஒரு கோயிலுக்கு உள்ள சிறப்பான அததனை அமைப்புகளும் கொண்டு விளங்குகிறது திருவேங்கடமுடையனான வெங்கடரமண சுவாமி திருக்கோயில்

இந்தக்கோயிலுக்கு அந்தக்கால நித்தியப்படி திருத்தேர்விழாவும், சிறப்பு பூசைகளும் நடைபெற்று வந்தன. இந்த விழாக்கள் நடைபெறவும், திருப்பனிகளுக்காக நேரிடும் செலவுகளுக்கு செஞ்சிக்குள் நடக்கிற சுக்கிர வார ( வெள்ளிக்கிழமை) சந்தையிலிருந்து சுங்கவரி வழங்கப்பட்டன. இந்தச்செய்தி கோட்டைக்குல் இருக்கும் வெங்கடரமண சுவாமி கோயிலில் கி.பி 1551-ல் பொறிக்கப்பட்ட சதாசிவராயர் காலத்திய கல்வெட்டு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு 1714-ல் நடந்த போரில் செஞ்சிக்கோட்டை நவாபுகளின் ஆட்சிக்குட்பட்டது. அதனால் கோட்டைக்குள் உள்ள கோயிலில் இப்போது விக்ரகம் ஏதும் இல்லை. அப்போதிலிருந்து விருந்து பூசைகள், விழாக்கள் ஏதும் நடைபெறுவதும் இல்லை. ஆனால் இன்றைக்கும் 447 ஆண்டுகளுக்கு முன்னால் செஞ்சி நகருக்குள் (செட்டிபாளையம் பகுதி) சுக்கிரவாரச்சந்தை என கூறப்படும் வெள்ளிக்கிழமை சந்தை கிழமையிம், இடமும் மாறாமல் இன்றும் அப்படியே நடந்து வருகிறது. கல்வெட்டுகளில் கூறப்படும் செய்திகள் உண்மை என்பதற்கு செஞ்சி வரச்சந்தையே சிறந்த உதாரணம்.

பழங்குடிகள்

இருளர் என்ற இனக்குழுவினர்

பழங்குடிகளாக வாழ்ந்த மக்கள் கடற்கோள்களாலும், இயற்கை சீற்றங்களாலும் பல்வேறு இனக்குழுக்களாக இடம் பெயர்கிறார்கள். அங்கிருந்து கிளைக்கிறது இருளர் என்ற இனக்குழு. இருளர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு நாடோடியின் வாழ்க்கையாகவே வாழ்கிறார்கள். காடுகளில் தேன் எடுப்பது, பாம்பு பிடிப்பது, மூலிகைகள் சேகரிப்பது என அவர்களது வாழ்க்கை தொடர்கிறது. இருளர்களின் இன்னொரு மொழி இசை. இவர்களின் ஆடல், பாடல்களில் காதல் ரசம் சற்று தூக்கலாகவே இருக்கிறது. ஆண்களுக்கு இருப்பது போன்ற பாலின சமத்துவம். பெண்களுக்கும் உண்டு. திருமணம் நிச்சயமான பின் ஒரு வருடத்திற்கு மணமாகமலே சேர்ந்து வாழ்கிறார்கள். இருவருக்கும் கருத்து வேறுபாடு இல்லையென்றால் திருமணம். பிடிக்கவில்லையென்றால் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாம்

விபச்சாரம் என்கிற வார்த்தை இருளர்கள் மத்தியில் இல்லவே இல்லை. பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள் இருளர்கள். பாம்பு ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் முதலில் நாடுவது இவர்களைத்தான். மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இருளர்களின் பிரதான உணவு வரப்பெலி. சிறுவர் முதல் பெரியவர் வரை வரப்பெலி வேட்டையில் உற்சாகமாக ஈடுபடுகிறார்கள். இருளர்கள் எந்த ஒரு நிலையிலும் மரபை கைவிடாத தீவிர இந்துக்களாக திகழ்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் பல பகுதிகளில் வாழும் இருளர்கள் மாசிமகத்திற்கு முன் மூன்று நாட்கள் மாமல்லபுர கடற்கரையில் ஒன்றுகூடி தங்கள் குலதெய்வமான கன்னியம்மாவை பூசைமூலம் வணங்குகிறார்கள்.

பாரம்பரியம்

இந்தியாவின் மிகப்பெரிய கூட்டுக்குடும்பம்

ஒரே ஒரு வீடு கொண்ட சின்ன கிராமம் அது. மதுரை மாவட்டத்தில் நடுவில் உள்ள வடுவீரநாயக்கன் பட்டி தான் அந்த ஊர். வடுவீரநாயக்கன் பட்டியை பற்றி சுற்று வட்டாரத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் தெரியும். ஏனென்றால் அந்த வீடு அத்தனை பிரசித்தம். தேர்தல் காலங்களில் எல்லா அரசியல் கட்சிகளும் அந்த வீட்டில் இருக்கும் 82 வாக்காளர்களின் ஆதரவைக்கோரி நடையாய் நடக்க வைக்கும் வீடு. நினைத்து, நினைத்துக்கட்டப்பட்டது நீண்டுகிடக்கும் 21 அறை9கள். பிரம்மச்சாரிகள் படுக்க திறந்தவெளி மண்டபம். வீட்டைவிட்டு தள்ளி 2 சமையலறைகள்

குடும்பத்தலைவர் வடு வீர நாயக்கருக்கு குழந்தைகளின் எண்ணிக்கையும், பெயரும் கூட ஞாபகம் இல்லை. குழந்தைகள் தவிர்த்து 52 ஆண்கள், 46 பெண்கள் கொண்ட அது இந்தியாவின் மிகப்பெரிய கூட்டுக்குடும்பம். அந்த வீட்டில் இருக்கும் 130 பேரைத்தவிர குடும்பத்துக்கு சொந்தமான 75 ஏக்கர் நிலங்களை கவனிக்க வயல்களிலேயே தங்கியிருப்பவர்கர் 30 பேர். மனிதர்கள் தவிர முயல்களை வேட்டையாட, வயல்களை பாதுகாக்க 30 வேட்டை நாய்கள். தினசரி சமையலுக்கு பகலில் கூழுக்காக 36 கிலோ கேழ்வரகோ, சோளமாவோ தேவை. முழுச்சாப்பாட்டுக்கு தினமும் 72 கிலோ அரிசி, 15 கிலோ காய்கறி. ஒரு ஸ்தாபனத்துக்கு வேண்டிய நேர்த்தியுடன் தான் இங்கு எல்லா வேலையும் நடைபெறுகிறது


மேலும் சில உபரி விஷயங்கள் :

பெரும்பாலும் Documentary Narration என்கிறவகையில் அதேநேரம் இது ஒரு ட்ராவல் ஷோ என்கிற வகையில் ஒரு ப்ரொக்ராமுக்கான ஸூட்டுக்கு முழு ஸ்கிரிப்டுடன் செல்ல முடியாது. காரணம் நாம் நினைத்த விஷயங்கள் பல அங்கே வேறுபல மாற்றங்களுடன் இருக்கும். அதற்கு ஏற்றார்போல் ஸ்கிரிப்ட் அங்கே மனதளவில் ஒரு இயக்குநருக்கு முழுமைபெற்று விடும். ஆனால் நாம் எந்த விஷயத்தை படம் பிடிக்க போகிறோமோ அதற்கு போதுமான ஏன்? மேலதிக தகவல்களுடனே செல்லப்போகிறோம் என்பதுதான் நிஜம். ஆனால் நாம் படம் பிடிக்கப்போகும் உள்ளடக்கம் மட்டும் மாறாது. எடுத்துக்கொண்ட கருப்பொருளுக்கு தேவையான கிடைக்கும் அத்தனையும் படம் பிடிக்கப்போகிறோம். அதனை சுவாரசியமாக கொடுப்பது இறுதிக்கட்டம்.

இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை ஒரு நெட்வொர்க் போலத்தான் செயல்படும். தமிழகம் முழுக்க உள்ள என்னால் தொடர்பு கொள்ள முடிந்த வரலாற்று ஆய்வாளர்கள்இதில் எனக்கு உதவுவார்கள். உதாரணத்துக்கு மானுடவியல் நோக்கில் பழங்குடி இருளர் பற்றிய நிகழ்ச்சி என்றால் பழங்குடி இருளர் சங்கத்தின் ஆட்கள் சிலரை எனக்கு தெரியும்அழகர் கோயில் நிகழ்ச்சி என்றால் இருக்கவே இருக்கிறார் அழகர் கோயில் பற்றி முனைவர் பட்ட ஆய்ய்வேடு எழுதிய தொ.பரமசிவன் அய்யா அவர்கள். வரலாற்றுத் தகவல்களின் கருவூலம் அவர்

அழகர் கோயில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னர் நான் அழகர் கோயிலின் நிகழ்ச்சி பற்றி மேலே குறிப்பிட்டுள்ள (அது சுருக்கம் மட்டும் தான் முழு ஸ்கிரிப்ட் அல்ல) விஷயங்களை படம்பிடிக்க யாரையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பேசிவிடுவேன். மேலும் இதில் குறிப்பிடும் (மொத்த நிகழ்ச்சியில்) பல விழாக்கள் வரும் காலங்களில் தான் அதனை படம் பிடிக்க முடியும். உதாரணத்துக்கு மாமல்லபுர கடற்கரையில் வருடாவரும் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் இருளர்களின் மாசிமகத் திருவிழா. அழகர் தெப்பத்தில் இறங்குவதும் அப்படித்தான்

இது கவனமாக கையாள வேண்டிய கடினமான பணி. அதனால்தான் தமிழகம் முழுக்க உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் என்று பலரின் உதவியுடன் இதனை கொண்டு செல்ல உத்தேசம். நான் 200 எபிசோட் என்று அவசரப்பட்டெல்லாம் சொல்லிவிடவில்லை. அதற்கான அத்தனை தகவல்களையும் திரட்டி வைத்துக்கொண்டு தான் நிகழ்ச்சிக்குள்ளாகவே வருகிறேன். இனி நான் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு நீரோடை பல நமது நிகழ்ச்சிக்கான பயணம் குறித்த சார்ட்டை தயார் செய்வது தான். அதன்படி அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காக நமக்கு அந்தப்பகுதியில் உதவப்போகும் உதவியாளரை முன்கூட்டியே தொடர்புகொண்டு அதனை உறுதிப்படுத்திக்கொள்வது தான்.

ஒரு நிகழ்ச்சி பற்றி மட்டும் அதனை எப்படி படம் பிடிக்கப்போகிறோம் என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன். அது 2 லட்சத்துக்கு முன்னர் மனிதன் வாழ்ந்த குடியம் கிராமத்தை ஒட்டியுள்ள காடுகளில் உள்ள இரண்டு குகைகள்.

EPISODE ONE

v தமிழ் நிலம் டைட்டில்
v இன்றைய நிகழ்ச்சி பற்றி VOIICE OVER ல் சொன்னதும் வாகனம் சாலையிலிருந்து பிரிந்து காட்டுப்பாதையில் நுழைகிறது.
(இதில் கட் ஷாட் பலது இருக்கும். அது இப்போது நமக்கு தேவையில்லை)
v காரிலிருந்தவாரே நிகழ்ச்சியின் முன்னோட்டம் குறித்து ANCHOR உடன்வரும் ஆய்வாளருடன் பேசத்தொடங்குகிறார். இருவருக்குமான உரையாடல்
v தூரத்தில் தெரிகிறது குடியம் குகைகள் உள்ள மலை. ஆதிமனிதன் குறித்த படத்திலிருந்து சில கானொளி காட்சிகள்.
v VOIICE OVER ஒரு விளக்கத்தை சொல்கிறது.
v வாகனம் செல்ல முடியாத தூரம் வந்ததும் ANCHOR-ம்,ஆய்வாளரும்  வண்டியிலிருந்து இறங்குகிறார்கள்.
v நடைவழிப்பாதை பயணம். பேசிக்கொண்டே செல்கிறார்கள்.
v குடியம் கிராமத்தில் மக்களுடன் உரையாடல்.
v கிராமத்திலிருந்து ஒருவரை உடன் அழைத்துச் செல்கிறார்கள்.
v வழியெங்கும் கொட்டிக்கிடக்கும் மூலிகைகளையும், அதன் பயன்களையும் ஆய்வாளர் விளக்கிச்செல்கிறார்.
v படிக நிலைக்கு உட்பட்ட பாறைகள் தொடர்ச்சியாக தென்பட அவர் அதைப்பற்றி பேச இயற்கை சீற்றங்களினால் அது உருமாறியதை விஷூவலைஸ் செய்கிறோம்.
v குடியம் குகைகளை நெருங்குகிறார்கள்
v ஒரு அமானுஷ்யமான மௌனம். மூதாதையர் வாழ்ந்ததன் சாட்சியத்தை நுகரும் பரவசம்
v இதனை முதலில் கண்டுபிடித்த பிரிட்டிஷ் ஆய்வாளரான ராபர்ட் ப்ரூஸை நன்றியுடன் நினைவுகூர்கிறார்கள்.
v அவரின் ஆய்வேடு ஓவர்லேப் செய்யப்படுகிறது.
v குடியம் குகைகள் பற்றிய ஆய்வு தொடங்கிறது

EPIOSODE TWO

சுருக்கம் :

இந்த எபிசோடில் மேற்குறித்த குகைகள் பற்றி தொடர்ந்து பேசி இரண்டாவது குகைக்கு செல்கிறோம். அங்கு வந்திருக்கும் பார்வையாளருடன் உரையாடல். அதற்கடுத்து அருகிலேயே செல்லும் கோர்த்தலையாற்றில் படுகைகளில் இந்தியாவிலேயே அதிக கற்கருவிகள் கிடைத்த தகவல்கள். இந்தியாவிலேயே வரலாற்றுக்கு முற்பட்ட பொருட்கள் கொண்ட அருகிலுள்ள பூண்டி அகழாய்வு வைப்பகம். அங்கு விசிட். அதன் மேலாண்மையாளருடன் உரையாடல் மற்றும் நேர்காணல். பூண்டி நீர்தேக்கத்திலிருந்து பிரியும் ஒரு காலத்தில் பாலாறாக கோர்த்தலையாறு இருந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்ற ஆய்வு. கோர்த்தலையாற்றின் கரைகளில் தொல்மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள்.

முதல் எபிசோடில் பிரித்தது போல் இதனை பிரித்துக்கொள்ளலாம்.

ONE CONCEPT : TWO EPISODE









No comments:

Post a Comment