Saturday, 24 February 2018

ரஞ்சன் காலத்து ஒளி




சில குறிப்புகள் :

எண்பதுகளின் இறுதிக் காலத்தில் ஒரு காதல் கதை. மன்னிக்கவும் ஒருதலைக் காதல் கதை. இது வெறும் ஒரு அத்தியாயத்தோடு முடிந்து போனது. காரணம்... குறிப்பு இன்னும் முடிவடையவில்லை.

அத்தியாயம் ஒன்று

ஆங்காங்கே சிதறிக்கிடந்த மேகமெல்லாம் ஒன்றாகத் திரண்டு கருப்புக்கொடி காட்ட ஆரம்பித்துவிட்டன. ஆதவனின் பதுங்கலில் உலகமே மங்கிப்போன மாதிரி ஆகிவிட்டது. எங்கிருந்தோ கிளம்பிய சுழற்காற்று ஒன்று புங்கை மரத்தின் உதிரிலைகளை அள்ளிக்கொண்டுபோய் பரவலாக தூவிவிட்டு சென்றது.

நேரம் கரையக் கரைய காற்றின் ஓங்காரம் ய்…ய்... என்ற சப்தராகத்துடன் நடையை எட்டிப்போட ஆரம்பித்தது. அந்த சலசலப்பின் உந்துதலில் கல்லூரி வளாகத்தின் புறப்பிரதேசமெங்கும் கிளர்ச்சியுற்று எழவே அதன் சுற்றுப்பகுதி முழுக்க பனியின் ஊடே புகைந்து கொண்டிருக்கும் ஃபேக்டரியைப்போல் மாறத்தொடங்கியது.

கூடிக்கொண்டே போன காற்றின் உக்கிரகீதம் உச்சஸ்தாயில் இறையத்தொடங்க கல்லூரி சன்னல்களோடு கதவுகளும் படபடவென்று ஆரவாரக் கூச்சல் போட ஆரம்பித்தன. அதற்கேற்ப அசோகமரத்துடன் சேர்ந்த சவுக்கு மரக் கிளைகளிரண்டு தங்கள் உச்சிக்கிளையின் நாட்டிய வேகத்தை திறம்பட செய்துகாட்டி மகிழ்ந்தது.

இப்படியே எங்கும் வியாபித்திருந்த இயற்கையின் லாவனங்கள் விளைவித்த ஜதியில் நர்த்தனங்களும் நாட்டிய வேகமும் மாறியதாலோ என்னவோஅந்த கோபக்காற்றின் கோரப்பிடியிலே குலைந்துபோய் கலகலவென கதறல் ஒலி எழுப்பிய சருகுப்பூக்களின் சத்தத்தைக் கேட்டோ என்னவோ!

சில நிமிடங்களின் அவகாசத் திணிப்பில் பளிங்குநீரில் போட்ட மண் துகள்களைப்போல் புழுதியெல்லாம் பூமியில் படிய மைதீர்ந்த பேனாவைப்போல் காற்றும் கொஞ்சம் கொஞ்சமாக தேய ஆரம்பித்தது. பல விணாடிகளை விழுங்கித்தீர்த்த காலக்கரைசலில் கத்தலோடும், கானத்தோடும் கிளம்பிய காற்றின் கச்சேரி ஊமையாகிப்போன ஒலியில்லா அந்த இயற்கை நிலையில்….
பொட்டுபொட்டாக ஒன்றிரண்டு நீர்த்துளிகள் செம்மண் தரையில் பட்டு மண்ணை ஈரமாக்கிவிட்டு உள்ளே சென்றது. சிறிது நேரத்தில் கல்லூரி புல்தரையில் மழைத்துளிகள் மிருதுவாகப் பட்டு தெறிக்கத் தொடங்கியது. மண்வாசத்தின் கமகமவோடு மலர்களின் வாசமும் சேர்ந்ததனால் மணம் கமழும் அந்த மாலைநேரத்தில் ஏதோ மனநிம்மதிக்காக கொட்டத்தொடங்கிய மழைத்தூறல் காற்றின் கைவரிசையை பார்த்து காப்பியடித்ததாலோ என்னவோ போகபோக பனித்தூவலாக தொடங்கி அடைமழையாக அடித்துக்கொண்டு ஓடலாயிற்று.

இவ்வளவு நேரமும் இயற்கை புரிந்திட்ட இந்திர ஜாலங்கள் அனைத்தையும் மழலையின் குறும்புகளை ரசிக்கும் தாயுள்ளத்தோடு வகுப்பறைக் கதவின் வழியே நோட்டமிட்டு கொண்டிருந்த என் சிந்தனைக்கனவு சிதறியதுபோல் அறைந்து கொண்டிருந்த கதவு ஆசிரியரால் அடைக்கப்பட்டதால் காட்சிகளின் களியாட்டம் கும்மிருட்டை தழுவவே ரசிக்கப்பட்ட ரோஜா ஒருவனால் ருசிக்கப்பட்டது போல் மறைந்து மாயமானது.

எதார்த்தமான செயலாக இருப்பினும் சூழ்நிலையின் தன்மை கூண்டிலடைக்கப்பட்ட கிளியின் இறக்கை போல என் இதயத்தை வேகத்துடன் துடிதுடிக்க வைத்தது. இயற்கையன்னை தொடுத்த நாட்டிய பாவங்களை வெட்டிப்போட்ட அந்த சென்சாசிரியரை சபித்துவிட்டு மனம் மறுபடியும் காட்சிகளின் கணிப்பில் கலந்து போனது.

?

ஆட்டிடையனின் புல்லாங்குழல் வாசிப்பில் மிதந்து வரும் உன்னத ராகமானது கேட்பவரை மெய்மறக்கச் செய்யும்போது, வாசிப்பவன் வாசிப்பை நிறுத்தினாலும் அதன் ஓசை அதிர்வுகள் ஒலிவடிவம் பெற்று நெஞ்சிலே நீண்டநேரம் நீங்காமல் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்குமே அப்படிப்பட்ட்தொரு உணர்ச்சி ஊற்றில் தாகத்தை தணித்துக் கொண்டு அமைதியுற முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

ஆயினும் அடுத்த அறையிலிருந்து வெளிப்படும் மாணவர்களின் சலசலப்பு சத்தமானது இனிய பாடலின் போது ஏற்படும் கரகரவென்ற இறைச்சலைப் போல் இடையே ஓடிக் கொண்டிருந்தது. தடுக்க முடியாத தொந்தரவாயிற்றே! என்ன செய்வது?

ஒண்ணாங்கிளாஸ் மாணவனின் சிலேட்டை பூதக் கண்ணாடியில் பார்ப்பது போலிருந்த கரும்பலகையில் கையிலிருந்த சாக்பீஸை தேய்த்து வட்டவட்டமான வேதியியல் வடிவங்களை வரைந்து கொண்டு வினைகளில் மூழ்கிப் போயிருந்த வாத்திக்கு வெப்பவீச்சு லேசான தாக்குதலை உண்டாக்கியிருக்க வேண்டும். அடுத்து அவரது ஆணைக்குட்பட்ட மாணவ மணியொன்றின் கைங்கரியத்தில் ‘ங்ய்ங்’ என்ற சத்தத்துடன் சன்னல் திறக்கப்பட உதயதாரகையின் ஒளி வெள்ளத்துக்கு ஆளான கடல் பிராந்தியம் போல் என் இதயம் பூராவும் வெளிச்ச வண்ணத்தை பூசிக் கொண்டது.

இப்போது திரை விலக்கப்பட்ட வெளிப்பகுதி முழுக்க ஓடி ஓடி களைத்துப்போன காற்றும், மழையும் சீரான அலைவரிசையுடன் பூமியில் பதிவாகிப் போயிருந்தபடியினால் ஊதக்காத்து உருவெடுத்துக் கொண்டிருக்க அதன் தழுவலில் கிளாஸ் ரூமிலிருந்த தேகச்சூடு வெளிக்குளிர் பட்டு கரைந்து லேசாக வெடவெடக்க தொடங்கி விட்டது கைகளில் பரவியிருந்த முடிகளின் சிலிர்ப்பிலிருந்து உணர முடிந்தது.

இப்படியாக இயற்கையோடு இயற்கையாக இரண்டற கலந்துவிட்ட எனக்கு ஏனோ மாஸ்டரின் பாடம் மனதுக்கு எட்டவில்லை. அவரின் வாய் அசைவு சக மாணவர்களின் கைகளை பதம் பார்ப்பது எனக்கு கொஞ்சமும் பிடிப்பதில்லை.

மழையின் குளிர்ச்சியில் மாற்றிப்போட்ட பார்வையை மறுபடியும் சன்னல் வழி செலுத்தத் தொடங்கினேன். ஃபிரேம் போட்ட வெளிக்களத்தின் வழிப்பகுதியில் குறுந்தொகை வரையும் நெய்தல் நிலக் கன்னிகளை ஒத்த இரு பெண்மணிகள் சேலையை முழங்காலுக்கு தூக்கிக்கட்டி, முந்தானையை தலைக்கு கொடுத்துவிட்டு ஓட்டமில்லாமல் ஓடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அவர்களின் வெடிப்புக்கால் பட்டு தெறித்தோடிய செம்மண் துளியிலிருந்து ரத்தக் கலரெடுத்த நீர் சிதறி விழுந்த காட்சி காஸ்ட்லியான ஓவியனின் சிவப்பு நிற சிதறல்களைப் போல்…… திடீரென்று வார்த்தை அறுபட ரத்தக் கலரெடுத்த நீர்! சிவப்பு நிற சிதறல்!!

எண்ணங்களிடையே சிக்கிக்கொண்ட ரத்த உச்சரிப்பு மனதின் மௌனக் குமுறலாக உடைந்து வழியத் தொடங்கியது.

ரத்தம்!

ஏழை வர்க்கத்தை பதம் பார்க்கத் துடிக்கும் பண முதலைகளின் பற்களில் வழியும் ரத்தம். சமூகத்தை பாழ்படுத்தி சீரழிக்கும் நாசக்கிருமிகளின் உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் ரத்தம். அதன் சொந்தம் என் இனம், ஏழை இனம். கணக்கற்று கிடக்கும் நெஞ்சங்களில் கனத்துக் கிடக்கும் ரணம்.

உள்ளக்குமுறல் இப்படியே நீண்டு ஒரு முழு வர்க்க ஆராய்ச்சிக்கு வழிவகுத்திருக்கும் ணங.. ணங.. ணங.. ணங.. என்று ஓவர்பெல் மட்டும் அடித்திருக்கா விட்டா. சில கணங்களில் மாணவத் தறிகளின் மிதி ஒலியில், அடி ஒலியில், தள்ளல் வேலையில் மேஜையும், நாற்காலியும் அமர்க்களப்பட்டன. அப்புறம் என்ன? மாணவ மாணவிகளின் வெளிநடப்பு.

அடுக்கு களையாத புத்தகங்களை அள்ளிக்கொண்டு நானும் இருக்கை விட்டு எழுந்து வாசற்படியன்றை வந்து நின்றேன்.

கல்லூரி வெளியேற்ற நேரமும், ரயிலேற்ற நேரமும் ஏறக்குறைய ஒன்றன்பின் ஒன்றாக அமைந்து விட்டதால் தூற்றலின் தோற்றத்தையும் பொருட்படுத்தாமல் ஓட்டத்துடன் வேகநடை பயிலும் கல்லூரிக் கோலங்கள் அனைத்தும் அமைதி கொண்ட ஆலமரத்தில் வேட்டுவனின் வெடிச்சத்தம் விளைவித்த ‘கணீர்’ ஓசையில் நாட்புறமும் சிதறியோடும் காக்கைக் கூட்டம் போல் கலைந்து கொண்டிருந்தனர்.

கூடணியோடு கூட்டணியாக நண்பர்களும் விடைபெற்றுச் சென்றுவிட தனிமையின் தாலாட்டினில் திளைத்துப்போய் கைகளை கதவில் தாங்கலாக்கி சிறிதுநேரம் அசைவினை தவிர்த்து நின்றபடியே நின்று கொண்டிருந்தேன்.

கண்முன்னே வேர்க்கடலை உடைப்பாக நீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருக்க கவனமும் அதன் திசையிலேயே லயித்து விட சலசலவென்று மழைநீர் சிமெண்ட் ஓடுகளின் வழியே தலைக்கு மேலே இறங்கிக் கொண்டிருப்பது காதில் விழ உருக்கொண்ட ஓசையின் ஒவ்வொரு துளியும் ஸ்ட்ரெயிட் லைனில் கோடிழுத்தாற் போல் கீழே விழுந்து கண்ணாடி புனலின் வாய்போல் வட்டமடைந்து கொண்டிருந்தது.

அதன் பிடியிலிருந்து பார்வையின் உன்னிப்பை தவிர்த்து தலை நிமிர்ந்தபோது கவனம் முழுவதும் எதிர் திசையில் எய்யப்பட்ட அம்பின் வேகத்துடன் குறிப்பிட்ட இலக்கில் சென்று பதிய அங்கே உள்ளூரின் சாவகாச தென்றலிரண்டு மெல்லநடை போட்டுக்கொண்டு மின்னி மறைவது மழைப்பொழியலின் ஊடே நீர்க்கோட்டின் பின்னணியில் மிக அழகாக கண்களை மங்கலாக்கி தெரிந்தது.

லயிப்பின் கணங்கள் ‘தடக்..தட்..’ என்ற சத்தத்தில் கலைந்து விட எரிச்சலுடன் பார்வைக் கோட்டினை காம்பஸில் மாட்டிய பென்சிலைப் போல் நகர்த்த தூரத்தில் பியூன் ஒவ்வொரு அறையாக பூட்டிக்கொண்டு வருவது தெரிந்தது. மழையின் சீற்றத்தை அளவிட அது சற்றுக் குறைந்திருக்கவே அள்ளி முடித்த கூந்தலின் நிலைக்கு ஆராய்ச்சி திறனையும் ஆளாக்கிவிட்டு எனது முதல் நடையை வராண்டாவிலிருந்து துவக்கினேன். படிதாண்டிய புல் தரையில் கால்கவசம் பட்டதும் தான் தாமதம் லைட் அட்ஜஸ்மெண்டில் ஷவரின் பூத்தூவலாக மழைத்துளிகள் தலை முதல் தோள் வரை கணிசமாக ஈராமாக்கி விட்டது.

சில்லென்ற அதிகாலை குளியலின் சகிப்பு நிலையில் நனைப்பினையும் பொருட்படுத்தாமல் நடக்க ஆரம்பித்தேன். “மாரி பொறந்தாச்சி, மழை வலுத்தாச்சி” ஒண்ணு டூ ரெண்டு நூலக எடுப்பில் குங்குமத்தில் மரபு சொல்லியது நினைவுக்கு வந்தது.

இவ்வளவு தேற்றலிலும் தூற்றலின் செயல்திறன் உடம்பை ஏதோ பண்ண கதகதப்பை தேடி மார்பின் அணைப்பிலிருந்த புத்தகத்தின் இறுக்கத்தை அதிகப்படுத்தினேன். மழுங்கிப்போன ஊசி முனைகளாய் விழுந்து வழிந்து கொண்டிருந்த தோள் வரை தூறல் இப்போது இடுப்பு வரை ஈரமாக்கியிருந்ததால் வேண்டிய மட்டும் வெப்பம் கிடைக்காமல் போகவே வெறும் நசநசப்பு மட்டும் தான் மிச்சமானது.

மேலும் இந்த நிலையினை தொடர இஷ்டப்படாமல் சீக்கிரமே பஸ் நிலையத்தை சென்றடைந்து விடவேண்டும் என்கிற முடிவுடன் கால்களின் இயக்கத்தில் பவர் ஷூக்களை தேய்க்க ஆரம்பித்தேன். வரவர நீர்மயம் அதிகமாகிக் கொண்டே வந்ததால் தேங்கல் நீரின் தீவுப் பிரதேசங்களில் தாண்டுநடை போட்டுக்கொண்டே செல்ல வேண்டியதாயிற்று. தண்ணீரில் கால்பட்ட போதெல்லாம் படகுக்காரனின் துடுப்பு வலிக்கும் சத்தமாக ‘சளக்..சளக்..’ கேட்டுக்கொண்டே வந்தது.   

கொஞ்சநேரம் போனதும் ரோட்டின் வளைவுப் பகுதியும் வந்துவிடவே பார்வையில் படுமாறு ‘சர்ச் ஆஃப் பாரிஜாதபுரம்’ போர்டு நீர்வழிய நின்று கொண்டிருந்தது. ஆலயத்தை சமீபித்து விட அகல விரித்த கண்களை வலப்புறமாக ஓட்டினேன். அங்கே வானளாவிய மரங்களாலும், வண்ண வண்ண மலர்களாலும் சூழப்பட்டு பச்சைப் புல்வெளிகளுடன் பரந்து விரிந்து பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் ‘மணிமலர் பூங்கா’ காட்சியளித்தது.

நல்ல வெயில் வீசக்கூடிய காலத்திலேயே துவண்டு நிற்கும் கொடிகூட மோகம் கொண்ட மங்கையின் முகத்தைப்போல் போதையூட்டுமென்றால், மழைபொழியுமிந்த மாலை நேரத்தில் கேட்கவா வேண்டும். புற்களில் மழை தேங்க பூக்களில் பனிப்போல் நீர் தூங்கும் காட்சி பல காண கண் பல வேண்டுமே. நினைக்க நினைக்க நெஞ்சுக்குள் தேன்பாலின் பிரவாகம் அலைமோதத் தொடங்கியது. மனம் விழைய உள்ளே சென்று வர ஆசை அழைத்தும் மழையின் பாதிப்பில் உடல் பட்ட பாட்டை நினைத்து பூங்காவினை கடக்க ஆரம்பித்தேன். ஆனாலும் அதன் நினைவுகளை கடக்க முடியவில்லை. சுழற்காற்று போல் சுற்றி சுற்றி வந்து கொண்டேயிருந்தது.

மரங்களின் நிழற்கூரையில் ஃபோம் மெத்தையாய் புற்கள் பரவியிருக்க, மலர்கள் யாவும் மணக்கவரி வீச, அதன் வாசத்தில் இந்த காளை வண்டு காலநேரம் தெரியாமல் கட்டுண்டு கிடந்த நாட்கள் தான் எத்தனை ! மனம் கசப்பு தட்டிய நேரத்திலெல்லாம் உடலையும் உடன் அழைத்துக்கொண்டு அமைதியைத் தேடி இங்கு ஓடி வந்துவிட்ட அவசரங்கள் தான் எத்தனை எத்தனை !! கல்லூரியின் பெரும்பாலான நேரங்களில் இந்த பூங்கா தானே என் புகலிடம். என் சிந்தனையை சீராக்கி, கூராக்கி, நேராக்கியதாலோ என்னவோ, மணிமலர் பூங்கா என் மட்டில் மன அமைதிப் பூங்காவாக மாறி ஜனித்து விட்ட……. ஹாரன் கொடுத்த ‘பாம்..பாம்..’ ஒலியில் பிளாஷ்பேக் கலந்து பார்வை விரிவடைய ‘திருபுவனம்’ டாபிக்குடன் ’ஜயலஷ்மி’ சகதிகளை அள்ளி இறைத்துக் கொண்டு உறுமியவாறே பஸ் நிலையத்தினுள் நுழைந்து கொண்டிருந்தாள்.

கால் போட்ட நடையின் கடைசி மையத்தை தொட்டுவிட்ட சந்தோஷத்துடன் கண்களை சுற்றிலும் திருப்பினேன். நல்லவேளை! நான் ஏற வேண்டிய பஸ் சாவகாசமாக உறங்கி வழிந்து கொண்டிருந்தது. சுற்றிலும் புதைகுழி கணக்கில் ஒரே சேறும் சகதியுமாக நிரம்பியிருக்க, எப்படிப் போவதென்றே தெரியாமல் கால்முனைகளை ஊன்றியவாறே வண்டியை சென்றடைந்தேன். அப்படியும் ஒன்றிரண்டு சேற்றுப் புள்ளிகள் வெள்ளைத்தாளில் பட்ட ‘இங்க்’ துளிகளைபோல் பாண்ட் துணியில் பற்றிக்கொண்டன.

பெருமூச்சு வாங்க ஃபுட்போர்டை கடந்து பஸ்ஸின் உள்ளே நுழைந்தேன். ப்ளவுட்ஸ் தளத்தின் பட்டை பட்டையான விரிசலில் அங்கங்கே நீர் சொட்டிக் கொண்டிருக்க சீட்டெல்லாம் ஒரே தண்ணிபட்ட பாடாக காட்சியளித்தது. மாரியின் ஒன்தேட் கோலத்தை நினைத்து மனதை தேற்றியவாறே மழைநீரை வழித்துப் போட்டுவிட்டு சீட் ஒன்றில் அமர்கிறேன்.   

கையிலிருந்த நீர்த்துளிகளை நிதானமாக கை கர்சீப்பால் துடைத்துவிட்டு பஸ்ஸின் உள் நடைபாதையை நோக்க சற்று தூரத்தில் திராட்சையின் கருப்புத் திப்பிகள் ‘தூ..தூ..’ என்ற துப்பலுடன் ஒன்றன்பின் ஒன்றாக வந்து விழுந்து கொண்டிருந்தது. யாரது? தெரிந்துகொள்ள அரைபாதி எழுந்த நிலையில் எட்டிப்பார்த்தேன். ஓட்டுநரை தள்ளிய இரண்டாவது இருக்கையின் ஓரத்தில் 7டீ ஏஜ் தென்பட்டது.

கிழிந்த காதின் எடைக்கற்கள் ஆட கிழவியின் வாய் போட்ட தகதிமியை ரசித்தவாறு முடியை சிலுப்பி விட்டுக்கொண்டு சத்தமில்லாத சிரிப்புடன் உட்காருகிறேன்.

திரும்புகிறேன்.
மஞ்சள் வண்ண சேரி.
திகைக்கிறேன். நீங்கிய பாடில்லை.
சேலைக்கு அழகா?
இல்லை அந்த சிலைக்கு அழகா?

மழையில் தெப்பமாக நனைந்து அம்மன் சிலை மாதிரி அவள் அமர்ந்திருக்கும் அழகு, மார்கழி மாதத்து பனித்துளியாக, மஞ்சள் வானத்தின் வண்ண முகிலாக ‘தமறைத் தலையாள் கொடி மேனியாள்’ வரிகளின் முழுமையுடன் கொலுவிருக்கும் கோலமகளாக, இயற்கையின் சிருஷ்டியில் இவள் பிசகில்லாமல் பிறந்திருக்க வேண்டும். மற்றவரை மயங்கச் செய்யும் செக்ஸி அவளிடம் சிறிதும் காணப்படவில்லை. அதற்கெல்லாம் அப்பாற்பட்ட தெய்வீக அழகே அவளிடம் நிலவிக் கொண்டிருந்தது.

வைத்த கண் வாங்கா கன்னி மீதிருந்த கவனிப்பு கண்ணியமா? கேள்வியெழ இமைகளை கீழே இறக்கினேன். ஏனோ தெரியவில்லை? பார்வை மறுபடியும் அவளிடமே சென்றது. காலேஜின் ஈ மொய்க்கும் கூட்ட்த்தில் நானும் ஒருவன் என நினைத்ததாலோ என்னவோ என்னை அவள் கவனித்ததாகவே தெரியவில்லை.

மழைக்குளிரில் மலர்ந்து கிடக்கும் முகத் தாமறையில் ஓட்டிக் கொண்டிருக்கும் தண்ணீர் காசுகளை தனது அழகிய கைக்குட்டையில் சேமித்துக்கொண்டே லாவகத்துடன் அதை மடித்து ‘எல்லோ’ பேக்கினுள் திணிக்கிறாள். அவுட்லைன் கிடைக்காமல் திணறுகிறேன்.

இதோ அவள் அசைகிறாள். நானும் அசைகிறேன். பிரிந்து கிடந்த புடவையின் மடிப்பை ஒரே சீராக அவள் ஒழுங்குபடுத்த …மின்னல் மின்னி மறைகிறது. கலையம்சம் பொருந்திய.. இது சரி. கலையம்சம் பொருந்திய கலைவடிவச் சிலை. கரெக்ட். கலைவடிவச் சிலை.

கட்டவிழ்ந்த கண்களுடன் மொட்டவிழ்ந்த முகத்தினை தேட………………………………………..
தேடலுடன்_______________________________________________________________________________________________குனிந்த தலையின் கருங்குழலில் குடிகொண்டிருக்கும் சாமந்திப்பூவுக்குத் தான் எத்தனை அழகு. அது அவள் கொடுத்த அழகு. அதைப்பெற அந்தப் பூவுக்கு முழு உரிமையும் உள்ளது.

ஏனெனில்….
அது பூவுக்கும் பூவுக்கும் உள்ள உரிமை.

No comments:

Post a Comment