Monday, 26 March 2018

அகஸ்தோ போவால் : கண்ணுக்கு புலப்படாத தியேட்டர்




ஆசிரியர் பற்றிய குறிப்பு :

1931-ல் பிரேஸில் நாட்டிலுள்ள ரியோலில் பிறந்த அகஸ்தோ போவால் 1956-லிருந்து பிரேஸில் உட்பட பல நாடுகளில் பிரச்சினைக்குரிய நாடகங்கள் பலவற்றை நிகழ்த்தியவர். பிரேஸிலில் சனநாயகத்தை மீட்பதற்கான முயற்சிகளில் ஒன்றாகவே அவரது நாடகங்கள் அமைந்தன. இதன் காரணமாக 1971-ல் அவரது நாடகக்குழு தாக்கப்பட்டது. கைது, சிறையில் சித்திரவதை என்ற அனுபவ பின்னணியில் அவர் உருவாக்கிய Invisible Theatre- ஐ ‘புரட்சிக்கான முன் ஒத்திகை’ என்கிறார்.  Legislative Theatre என்கிற புதுவித அரங்கை உருவாக்க முயற்சித்து வரும் போவால் 1995-ல் ரியோலில் நகரசபை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு

”ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு’ நாடகமென்பதை பேசப்படுவதற்கான மொழியாக அடையாளப்படுத்துகிறது. கவனித்துக் கொண்டிருக்க வேண்டியதொரு உரையாடலாக அல்ல. அது மட்டுமன்றி நாடகமென்பது மேலும் செழுமைப்படுத்த வேண்டியதொரு நடைமுறை தானேயொழிய நுகர்வதற்கு தயாராகி தயாரித்து வைக்கப்பட்டிருக்குமொரு பண்டம் அல்ல என அது வலியுருத்துகிறது. ’ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு’ நாடகம் என்பதன் சாதாரண எல்லைகளை தாண்டிச் செல்கிறது. ஏனென்றால் அது ஒடுக்கப்பட்ட மக்களை நாடக நடவடிக்கைக்கான சடப் பொருட்களாக கருதாமல் தன்னிலைகளை அங்கீகரிக்கிறது. இது மட்டுமன்றி ’ஒடுக்கப்பட்டோரது அரங்கு’ வாழ்வின் பிற துறைகளான விளையாட்டு, அரசியல், மனோவியல், தத்துவம் என எல்ல்லாவற்றையும் நோக்கிச் செல்கிறது. நாடகம் போலவே அவற்றையும் பல்வேறு கூறுகள் இணைந்த துறைகளாக அது அங்கீகரிக்கிறது.”

அகஸ்தோ போவால்





சில கேள்விகளும் பதில்களும் :


இன்விசிபிள் தியேட்டர்என்பதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா?

முதலில் அது தோன்றிய விதத்தை சொல்கிறேன். 1971-ல் நான் பிரேஸில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். அப்புறம் விடுதலை செய்யப்பட்டு அர்ஜெண்டினாவுக்குப் போனேன். நாங்கள் அங்கே ஒரு நாடகத்தை தயாரித்தோம். அர்ஜெண்டினாவில் எந்த ஒரு குடிமகனும் பசியால் சாகக்கூடாது எனக்கூறும் அந்நாட்டின் சட்டத்தைப் பற்றிய நாடகம் அது. அந்தச் சட்டத்தின்படி நீங்கள் பசியோடிருந்தால் எந்தவொரு ஓட்டலுக்கும் சென்று, இனிப்பும் ஒயினும் தவிர உங்களுக்கு வேண்டியதை வாங்கிச் சாப்பிடலாம். பில் வந்தால் அதில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு பணம் ஏதும் தராமலே போய்விடலாம். ஏனென்றால் சட்டத்தின் பாதுகாப்பு உங்களுக்கு இருக்கிறது. ஆனால் உண்மையிலேயே இப்படிச் செய்தால் என்ன நடக்கும். இதற்காகத்தான் நாங்கள் அந்த நாடகத்தை தயாரித்தோம். அந்த நாடகத்தை எழுதுவதற்கு நான் உதவினேன். அதைத் தெருவுக்கு எடுத்துச் சென்று அங்கே போடுவதென முடிவு செய்தோம். “நான் இதில் நடிக்க மாட்டேன். ஏனென்றால் போலிஸ் என்னைக் கைது செய்தால் மீண்டும் பிரேஸிலுக்கு அனுஒப்பி விடுவார்கள்” என்று அவர்களிடம் கூறினேன். “இல்லை இல்லை, இந்த நாடகத்தை நீங்கள் பார்த்தே ஆக வேண்டும். போலிஸ் வருமென்பதால் தான் நீங்கள் தெருவுக்கு வரவில்லையென்றால் இந்த நாடகத்தை உண்மையான ஓட்டல் ஒன்றிலேயே போடுவோம். இது நாடகம் என்று சொல்லாமல் போடுவோம். நீங்கள் அங்கே முன்பே போய் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்றார்கள். நாங்கள் ஒரு ஓட்டலுக்கு போய் அந்த நாடகத்தை போட்டோம். அது நாடகம் தான் என்பதை யாருக்கும் கூறவில்லை. ஒரு நடிகர் ஒரு பக்கம் அமர்ந்தார். இன்னொரு நடிகர் இன்னொரு பக்கம் அமர்ந்தார். நான் ஒரு பக்கம் அமர்ந்து கொண்டேன். வெளியிலிருந்து ஓட்டலுக்குள் ஒரு நடிகர் நுழைந்தார். தான் ஒரு அர்ஜெண்டினா குடிமகன் என்றும், த்னக்கு பசிக்கிறது ஆனால் இனிப்பு ஒயின் இரண்டும் வேண்டாம் என்றும் கூறினார். அபோது வெயிட்டர் அங்கு வந்து “உனக்கு என்ன வேண்டாமென்று சொல்லாதே எது வேண்டுமோ அதை கேள்” என்றார். உடனே நடிகர் “எனக்குக் கொஞ்சம் கறி, இரண்டு முட்டை இதெல்லாம் வேண்டும். ஆனால் இனிப்பும் ஒயினும் வேண்டாம்” என்றார். அதன் பிறகு உணவைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டார்கள். அந்த நடிகர் பில்லில் கையெழுத்து போட்டார். அந்த வெயிட்டர் வந்தார். என்ன பேசுவாரென நாங்கள் நினைத்தோமோ அதையே பேசினார். எங்கள் நடிகர்களிலேயே ஒருத்தர் வெயிட்டராக நடிப்பதாக இருந்த்து. ஆனால் அவர் குறுக்கிட வேண்டிய தேவை இல்லாமல் நிஜமான வெயிட்டரே நாங்கள் எதிர்பார்த்திருந்ததை பேசிவிட்டார். வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்த நடிகர்கள் இயற்கையாக நடப்பது போலவே பலவற்றை விவாதிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் அங்கு நடந்தவை எல்லாமே முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்தன. அந்த நிகழ்வு மிகவும் சக்திமிக்கதாக, வலிமை வாய்ந்த்தாக முழுக்க முழுக்க நாடகத்தின் ஆற்றல் நிரம்பியதாக இருந்த்து. பிறகு நான் உணர்ந்து கொண்டேன். இது ஒரு புதுவகையான நாடகவடிவம் அதாவது இன்விசிபிள் தியேட்டர். ஏனென்றால் உங்களுக்கு நடப்பது நாடகமெனத் தோன்றுவதில்லை.



அங்கே அதற்கான எதிர்வினை எப்படியிருந்தது ?

மிகவும் நன்றாக இருந்தது. அவர்கள் விவாதத்தில் பங்கேற்று பலவற்றையும் பேசினார்கள். ’அர்ஜெண்டினாவில் இவ்வளவு உணவு இருக்கும்போது மக்கள் ஏன் பசியால் சாகிறார்கள்?’ என்று விவாதித்தார்கள். பெண்கள் மீதான ஒடுக்குமுறை பற்றி ஒரு நாடகம் போட்டோம். அது இத்தாலியில் நடந்த்து. பெண்களுக்கான பொருட்கள் விற்கிற கைடைக்கு ஒரு ஆணும் பெண்ணும் போகிறார்கள். அந்தப் பெண் எதையோ வாங்க வேண்டும் என்கிறாள். அவன் வேண்டாம் வா என்கிறான். அவர்கள் சாதாரணமாகத்தான் இதைச் செய்தார்கள். அவன் அவளது சட்டைக் காலரைப் பிடித்து இழுக்கிறான். அப்போது அங்கே இன்னொரு நடிகை வருகிறாள். ‘அவன் இப்படிப் பிடித்து இழுக்க நீ அனுமதிக்கலாமா?’ என அந்தப் பெண்ணிடம் கேட்கிறாள். ‘ஏன் இழுத்தால் என்ன? அவர் என்மேல் எவ்வளவோ பிரியம் வைத்திருக்கிறார்’ என்கிறாள் அந்தப் பெண். அப்போது இன்னொரு பெண் அங்கே வந்து பெண்கள் மீதான ஒடுக்குமுறை பற்றிப் பேசுகிறார். நான் இந்த நாடகத்தைப் பல நாடுகளில் போட்டிருக்கிறேன். சுவிட்சர்லாந்தில் இந்த நாடகத்தை போட்டபோது 15 நிமிடங்களில் போலிஸ் வந்து விட்டது. இதையே மாற்றி ஒரு பெண் ஒரு ஆணின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துப் போவதாக காட்டியபோது ஒரு நிமிடம் ஆவதற்குள்ளாகவே போலிஸ் வந்து விட்டது. மேற்கொண்டு தொடர அனுமதிக்கவும் இல்லை.  இதுதான் ‘இன்விசிபிள் தியேட்டர்’. இது அவசியத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்று.


ஒரு ‘இன்விசிபிள் தியேட்டர்’ நிகழ்வு எப்போது முடிகிறது ?

‘இன்விசிபிள் தியேட்டர்’ முடிவதே இல்லை. ஏனென்றால் மனிதர்களாகிய நாம் முடிந்து விடுவதில்லை.

ஆனால் நிகழ்ந்து கொண்டிருப்பதிலிருந்து நடிகர்கள் விலகிக் கொள்கிற ஒரு கணம் இருக்கத்தானே செய்யும் ?

ஆமாம் ! ஆனால் நடிகர்கள் விலகும்போது வேறு சில நடிகர்கள் அங்கேயிருந்த மக்களிடம் உரையாடலைத் தொடர்வார்கள். அவர்களுக்கு தகவல்களைத் தருவார்கள். இப்படியிருக்கும் நடிகர்கள் நாடகத்தினுள் முக்கிய கதாபாத்திரங்களாக வருவதில்லை. நாங்கள் நிறவேற்றுமையைப் பற்றி ஒரு நாடகம் போட்டோம். அதில் பத்துக்கும் மேற்பட்ட நடிகர்கள் பங்கேற்றனர். அது பட்டறையும் கூட. அதில் முக்கிய நடிகர்கள் வெளியேறிய பின்னரும் சுமார் மூன்று மணி நேரத்துக்கு நாடகம் தொடர்ந்த்து. நாங்கள் விரும்புவதெல்லாம் விவாதம் தொடர வேண்டும். இதுபோலத்தான் ‘ஃபோரம் தியேட்டரிலும்’. நாங்கள் முடிக்க விரும்புவதில்லை. சரியான தீர்வு இதுதான் என்று சொல்ல நாங்கள் விரும்புவதில்லை. தீர்வுகளைப் பற்றி சிந்திப்பதற்கு மக்களைப் பழக்கப்படுத்த வேண்டும். ஏனென்றால் இன்றைக்கு நாம் கண்டடைகிற தீர்வு நாளைக்கே சரியான தீர்வாக இல்லாமல் போய்விடலாம்.


ஆக, நாடக நிகழ்வு முடிந்து விடுகிறது. உரையாடல் தொடர்கிறது அல்லவா ?


ஆமாம், உரையாடல் தொடர்கிறது. நாடகம் என்பது ஒருவர் தன்னைத்தானே அறிந்து கொள்ளும் ஒரு கலை. அப்படியே அது தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நம்மை நாமே அறிவது, மற்றவர்களை அறிந்து கொள்வது. ’ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு’ எதிர்காலத்தை உருவாக்க முற்படுகிறது. அது அதற்காகக் காத்துக் கொண்டிருப்பதில்லை. ஆக, அது எப்போதும் மாற்றத்துக்கு உள்ளாகிக் கொண்டேயிருக்கிறது. 



நன்றி : உரையாடல் தொடர்கிறது நூல் (தமிழில் : ரவிக்குமார்)


சிட்டகாங் : கத்தியோடும் ரத்தத்தோடும் சுதந்திரம்





புரட்சியாளர்கள் இந்திய விடுதலைக்குரிய வழியாக தேர்ந்தெடுத்த பாதை என்பது….

‘வெளியிலிருந்து ஒரு வல்லரசின் உதவியைப் பெறாமல் இந்தியாவைச் சுதந்திர பூமியாக்க முடியாது ; இப்படித்தான் பயங்கரவாத்த்தில் தோய்ந்திருந்த புரட்சிக்காரர்கள் எண்ணுவது வழக்கம். ஒரு சில அரசாங்க , சில ஐரோப்பியர்களையோ அல்லது போலிஸ் ஆபிஸர்களையோ கொன்று விடுவதனால் பிரிட்டிஷ் அரசாங்கத்தை தகர்த்துவிட முடியாதென்று அவர்கள் ஏற்கனவே கண்டுகொண்டார்கள். அதன் விளைவாக புரட்சிக்காரர்கள் மனமொடிந்து அவநம்பிக்கையில் மூழ்கியிருந்தார்கள். செயலிழந்து நிற்கும் இந்த நிலையை போக வேண்டும் என்று சிட்டகாங்கிலுள்ள இளம் புரட்சிக்காரர்கள் விரும்பினார்கள்.




வெளிநாட்டு உதவியில்லாமலேயே அரசாங்கத்தோடு போராடுவது சாத்தியம் என்பதைக் காட்டித் தன்னம்பிக்கையைத் திரும்பவும் ஊட்டவேண்டுமென்பது அவர்கள் விருப்பம். இதற்கு அவர்கள் போட்ட திட்டம் என்ன? ஆயுதங்களைக் கொண்டு வெளிப்படையாக போர்தொடுப்பது, அரசாங்க ஆயுதச் சாலையைச் சூரையாடி அங்குள்ள அங்குள்ள ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்கு விரிவான திட்டம் வகுத்து தை நிறைவேற்றுவது, போக்குவரத்து சாதனங்களை சின்னா பின்னாப் படுத்தி இந்தியாவின் இதர பகுதிகளிலிருந்து அரசாங்கத்துக்கு படையும், ஆயுதமும் வராமல் தடை செய்வது தனிப்பட்ட ஐரோப்பியர்களைத் தாக்காமல், அவர்கள் கூட்டமாக கூடியிருக்கும் ‘கிளப்’பைச் சூறையாடி அங்கே அவர்களோடு போர்தொடுப்பது. இதுதான் அவர்கள் திட்டம். ஒரு வாரத்திற்கு சிட்டகாங் சுதந்திரமாக இருக்கும். அதன்பிறகு சிட்டகாங்கை பிடிப்பதற்கு அரசாங்கத்தார் துருப்புகளைக் கொண்டுவந்தால், எதிரிக்கு கொஞ்சம் கூட இடம் கோடுக்காமல் போராடி அவர்கள் உயிர் விடுவார்கள். குறுகிய காலத்தில் தாங்கள் காட்டிய இந்த வீரதீரச் செயல் நாடு முழுவதும் பரவி எதிரொலிக்கும். தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடும்படி புதிய சந்த்தியாளர்களுக்கு இது ஒரு ஆவேசத்தை உண்டுபண்ணும் என்று அவர்கள் எண்ணினார்கள்” அவ்வாறே செயல்பட்டார்கள்.

ஒரு கட்டத்தில் பயங்கரவாதப் பாதையிலிருந்து சரியான வழியில் செல்ல வைத்ததும் அவர்களுள் மூண்டெழுந்த சுதந்திர வேட்கைதான் என்பதையும் சுட்டிக்காட்டும் கல்பனாதத்…




”என்ன செய்வதென்றே தெரியாமல் நம்பிக்கை இழந்து நிற்கும் ஒரு நிலையை தோல்வியென்பதையே அறியாத அவர்களது இதயத்தை என்றும் பீடித்ததில்லை. அரசாங்க அடக்குமுறை அவர்களை நசுக்கிவிட முயன்றது வாஸ்தவம்தான். ஆனால் மக்கள் மீது வைத்திருந்த மரியாதையையும், அன்பையும் ஒரு கணமேனும் இவர்கள் இழந்திருந்தார்கள் என்று சொல்லமுடியாது. உணர்ச்சியற்ற நிசப்தமயமான சிறைச்சாலை அறையில் புதிய கொள்கைகளைப் படித்து ஆராயவும், அவற்றை அங்கீகரிக்கவும் போதிய அவகாசமும், சந்தர்ப்பமும் அவர்களுக்கு கிடைத்தன.

எனவே, கடைசியாக கம்யூனிஸ்ட் தத்துவத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். தோழமையுணர்ச்சி, கட்டுப்பாடு, தன்னலமற்ற தன்மை யாவும் தங்களுடைய இயக்கத்தில் இருப்பது போலவே, கம்யூனிசத்திலும் மிளிர்வதைக் கண்டார்கள். தனி நபர்களாக நின்று புரியும் வீரச் செயல்கள், அளவிலா தியாகம், லட்சியத்திற்கு செலுத்தும் பக்தி இவை மூலம் தேச விடுதலையைப் பெறலாம் என்று இந்த ஆண், பெண் வீரர்கள் கண்டு வந்த கனவுகள் மறைந்தன. அது குறுகிய கண்ணோட்டமுடையது என்பதை கண்டறிந்து அதனை விட்டொழித்தனர். கம்யூனிஸ்ட் தத்துவம் காட்டியழைத்த பாதையிலே காலடி வைத்தனர். தனி நபர்களின் வீரமும், பெருந்தன்மையும் போதாது ; ஒருசில வாலிபர்களின் நெஞ்சிலே வீர உணர்ச்சியையும், தேச பக்தியையும் சுடர்விட்டு பிரகாசிக்கும்படி செய்ய பாடுபடுவது மட்டும் லட்சியத்தை அடைவதற்கு போதுமானதாகாது. மக்களைப் பார். அந்த கோடானு கோடி மக்களைத் தட்டியெழுப்பி விடுதலைப் பாதையிலே திருப்பி விடு. தங்களுடைய பலத்தையும், பரம்பரை மேன்மையையும் மக்களுக்கு உணர்த்தி  வீறுகொண்டு எழச் செய். கம்யூனிஸ்ட்  தத்துவம் காட்டிய தெளிவான பாதை இது. விசாலமான பாதை இது. மக்கள் சமூகத்தையே வீரர்களாக்கவல்ல போர்ப்பாதை இது என்பது அவர்களுக்கு புலப்பட்டது.

அவர்களைப் பரிபூரணமாக ஆட்கொண்டுவிட்ட அதே சுதந்திர வேட்கை இந்தப் பாதைக்கு திரும்பும்படி அழைக்கிறது. அதேகாலத்தில், வீரபுருஷர்களாக தனித்து நின்று போராடித் திகழும் கூட்டமாக விருப்பத்திற்கு பதிலாக, மக்கள் மத்தியில் வந்து அவர்களை திரட்டும் பணியில் இறங்கும்படி கேட்கிறது. பழைய பாதையின் தொடர்ச்சியாகவே அவர்கள் இந்த புதிய பாதைக்கு திரும்பி விட்டனர் ; திரும்பும்போது பழைய புரட்சி இயக்கத்துடன் தொடர்பை அறுத்துக் கொள்ளவும் வேண்டியதாயிற்று ; சுதந்திரத்திற்காக அன்றே அர்பணித்து விட்ட அவர்களது வாழ்க்கையும், அவர்களை வசீகரித்துவிட்ட விடுதலை வேட்கையும் சேர்த்து இன்று கம்யூனிசத்திற்கு திரும்பி விட்டது.”




இந்த வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் மகத்தான தியாகங்களைச் செய்தும், தங்களது வாழ்க்கையின் சிறந்த பகுதியைத் தேச்சேவைக்கு அர்ப்பணம் செய்தும், இன்று தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களைத் தலைமைப் பீடத்தில் அமர்த்தினார்கள். “வங்கத்தாயின் வீரப்புதல்வர்கள் விலையற்ற ரத்தம் தோய்ந்து புனிதமடைந்திருக்கும் இந்த வங்கத்தின் மண்ணின் மீது நின்றுகொண்டு ஏளனத்திற்கிடமான இப்படிப்பட்ட தலைமைப் பதவியில் இன்னும் இருந்து வருவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்ற ஒரே ஒரு கேள்வியை மட்டும் இந்த தலைவர்களை நான் இன்று கேட்க விரும்புகிறேன். கேட்காமல் விட, என் நெஞ்சு பொறுக்குதில்லையே !

சிட்டகாங் மாறிய வரலாற்றின் மறுபெயர்



கல்பனாதத்
(கல்பனாதத் எழுதிய ’சிட்டகாங் வீரர்கள்’ நூல் முன்னுரையில்)

குவர்ணிக்கா : போர்க் கொடுமைகள் பற்றிய அனைத்துலகச் சித்திரம்


அறிமுகம்

ஸ்பானிய உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில், 26 ஏப்ரல் 1937 பிற்பகல் 4:40 மணிக்கு தளபதி ஃபிராங்கோவிற்கு உதவியாக வந்த நாஸி குண்டு வீச்சு போர் விமானங்கள் வட ஸ்பெயினிலுள்ள பாஸ்க் இனத்தவரின் வரலாற்றுச் சிறப்புள்ள தலைநகரான குவர்ணிக்காவை அழித்தனஇப்பயங்கர குண்டுவீச்சு ஆயிரக்கனக்கான மக்களை கொன்றொழித்ததுஇதைத் தொடர்ந்து உலகெங்கும் எழுந்த கண்டனக் குரலின் எதிரொலி இன்னமும் அடங்கி விடவில்லைஇக் குற்றத்தை வன்மையாக கண்டிப்பதற்காக பாப்லோ பிக்காஸோ கலையை பயன்படுத்தியபோது ’குவர்ணிக்கா’ எனும் மாபெரும் போர் எதிர்ப்பு ஓவியம் பிறந்தது.



’குவர்ணிக்கா’ ஓவியம் 

பாரிஸில் 1937 இளவேனில் இறுதியில் தொடங்கவிருந்த பன்னாட்டு கண்காட்சியில், ஸ்பானிய அரங்கிற்காக பெருந் திரையோவியம் அல்லது சுவரோவியம் ஒன்றை தீட்டுவதற்காக ஸ்பானிய அரசு அவ்வாண்டு ஜனவரியில் பிக்காஸோவை நியமித்தது.

ஜனவரி 8-ல், 9 செவ்வக கட்டங்களை கொண்ட பன்முக செதுக்கு சித்திரத் தட்டம் ஒன்றை பிக்காஸோ தயாரித்தார். ஒவ்வொரு கட்டமும் ஒரு நீதிக்கதையை சித்தரித்தது. இது ஒரு கேலிச்சித்திரம் என்பதை குறிக்கும் வகையில் இதற்கு ”ஃபிராங்கோவின் கனவும் பொய்யும்” எனப் பெயரிட்டிருந்தார். அதில் நாட்டுப்படம், எருது, பறக்கும் குதிரை ஆகியவை மட்டுமே கேலிச்சித்திரமாக செதுக்கப்படவில்லை.

அன்றே இரண்டாம் தட்டம் ஒன்றை செய்யலானார். இதனையும் 9 செவ்வகங்களாக பகுத்தார். ஒரு கட்டத்தை அன்றே நிரப்பினார். மறுநாள் மேலும் இரண்டை பூர்த்தி செய்தார். மற்ற 6 கட்டங்களையும், ‘குவர்ணிக்கா’ ஓவியம் முடிவுறும் போதோ அல்லது அதன் பின்போ நிறைவு செய்தார். முதல் தட்டத்தில் போலவே, இதிலும் பிரதான உருவமாக எருது விளங்கியது. இவ்வுருவத்தை இவர் ஜனவரி 9-ல் வரைந்தார்.

நாட்கள் சென்றன. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் கடந்தன. ஏப்ரலில் பெரும்பகுதி சென்றுவிட்டது. பிக்காஸோ தான் ஏற்ற பணியை தொடவில்லை. இதற்கு தேவையான அகத்தூண்டல் ஏற்படவில்லையோ அல்லது ஏற்ற கருப்பொருள் கிடைக்கவில்லையோ எனத் தோன்றியது. திடீரென 1937 ஏப்ரல் 26-ல் ஃபிராங்கோவின் இசைவுடன் நாஜி விமானப்படை குவர்ணிக்கா நகரின் மீது குண்டு வீசித் தாக்கியது. உலக வரலாற்றிலேயே, முதலாவது சர்வாதிகார குண்டு வீச்சு இதுவேயாகும். இக்கொடுந்தாக்குதல் பற்றிய தமது புனையா ஓவியங்களை மே 1 அன்று பிக்காஸோ வரைந்தார்.


ஸ்பானிய உள்நாட்டுப் போர் ஏற்கனவே 9 மாதங்களாக நடந்து கொண்டிருந்தது. ஆராகோன் முனையில் கடும்போர் நடந்தது. மாட்ரிட் முற்றுகை பயங்கரமாக நிகழ்ந்தது. பிப்ரவரி 13-ல் பிக்காஸோ ப்றந்த ஊராகிய மாலகாவினுள் ஃபிராங்கோவின் படைகள் புகுந்தன. அப்போதெல்லாம் வாளாவிருந்த பிக்காஸோ, குவர்ணிக்கா குண்டுவீச்சால் மட்டும் ஏன் அகத்தூண்டல் பெற்றார்?



ஓரேயொரு காரணம் தாம் எனக்கு புலனாகின்றது. ஆரோகான் சண்டையையும், மாட்ரிட் முற்றுகையையும், மாலகா வீழ்ச்சியையும் பல உயிர்களை பலி கொண்டது உண்மை தான். எனினும் அவையெல்லாம் சகோதரச் சண்டை தான். ஆனால் குவர்ணிக்காவில் பாதுகாப்பற்ற அப்பாவி குடிமக்கள் மீது ராட்சத பலம் கொண்ட ராணுவம் குண்டு வீசித் தாக்கியது. இக்கொடுமை கண்டு பிக்காஸோவின் தார்மிக உணர்வு கிளர்ந்தெழுந்தது. அவருள் வெகுண்டெழுந்த ஆவேசம் ‘குவர்ணிக்கா’ ஓவியத்தை தீட்டத் தூண்டியது.


இந்த ஓவியத்தை வரைவதற்கு நான்காண்டுகளுக்கு முன்பு, தமது சொந்த வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் மத்திய தரைக்கடல் பகுதிப் புராண நிகழ்ச்சிகளை அவர் ஓவியங்களாக்கினார். இவற்றில், “மினேட்டார்” என்ற மனிதக் காளையுருவப் பிராணி வாயிலாக தம் சொந்த வாழ்வின் பற்பல ரகசியங்களை வெளிப்படுத்தினார். வல்லார்டு என்ற ஓவிய விற்பனையாளரின் கலைக்கூடத்திலுள்ள இவரது செதுக்கு சித்திரங்களிலும் இந்த ரகசியங்களுல் சிலவற்றை காணலாம். இவர் 1933-ல் உருவாக்கிய மாபெரும் ‘மனிதக் காளை” செதுக்கோவியம், இவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளின் சங்கமமாக திகழ்கின்றது. இவர் தமது மனைவி ஆல்காவை பிரிந்ததும், 1927 முதல் இவர் ஏற்கனவே காதல் கொண்டிருந்த மேரி தெரசாவால்டெர் மூலம் இவருக்கு மாய்வா என்ற மகள் பிறந்தது, குறியீட்டு மொழி வாயிலாக இந்த ஓவியத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

‘குவர்ணிக்கா’ ஓவியத்தை வரைவதற்கு சற்றுமுன் (1937 நவம்பர் 12) ‘கடலோரம் விளையாடும் சிறுமியர்’ என்ற ஓவியத்தை தீட்டினார். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, மனித வடிவங்களை எலும்பு போன்ற உருவங்களாக சித்தரிக்க தொடங்கியிருந்தார். இந்த ஓவியத்தில் அந்த உத்தி முழுமை பெற்றுள்ளது. இந்த நவீனக் கலவை பாணியும், அகவாய்மை பாணியும் இணைந்துள்ளது.

மகள் மாய்வாவை மகிழ்விக்க1937 ஏப்ரல் முதல் இவர் சிறுவர் ஓவியங்களை தீட்டலானார். எலும்பு போன்ற உருவங்களும், சிறுவர் சித்திரங்களும் சுவரோவியங்களில் காணப்படுகின்றன. முதல் வகை உருவங்களைக் குதிரையின் கழுத்திலும், இரண்டாம் வகையை வாய்பிளந்து நிற்கும் பறவையிலும், வாத்திலும் காணலாம்.

‘குவர்ணிக்கா’விற்கு முன், பிக்காஸோவினுடைய கலைமொழியின் அடிப்படையாக குறியீடுகள் அமைந்திருந்தன. இயற்கையை இன்னும் எளிதாகவும், நேரடியாகவும் அணுகுவதற்கும், தாம் வெளிப்படுத்த விரும்பிய அவலத்தை மேலும் இயல்பாக சித்தரிக்கவும் இக்குறியீடுகளை அவர் கைவிட நேர்ந்தது.

இதற்கு முன்னர் ஒரு பெண் அல்லது ஏதேனும் நிகழ்ச்சி தம்மை பாதித்த போது பிக்காஸோவிடம் உண்டான அகத்தூண்டல், அவரிடம் புதியதொரு பாணியை – உத்தியை உருவாக்கத் தூண்டியிருக்கிறது. இப்போது அவ்விதம் செய்யாமல், பண்டைய மரபினை அவர் நாடியிருக்கிறார். இதற்கு அழகியல் நோக்கங்களை விட அறிவியல் நோக்கங்கள் இவரை ஆட்கொண்டதே காரணமாகும். இச் சமயத்தில் பிக்காஸோவிடம் குமுறியெழுந்த ஆத்திர உணர்வு, புதிய பாணியைப் பற்றியோ, அழகியல் குறித்தோ இவரை சிந்திக்க விடவில்லை. தமது சீற்றத்தை ஆழமாகவும், அழுத்தமாகவும் வெளிப்படுத்துவது தம் கடமை என எண்ணினார். அதன் விளைவாக ‘குவர்ணிக்கா’ பிறந்தது. இவ்வாறு ஒருவிதக் கட்டுப்பாட்டிலிருந்து இந்த ஓவியம் தோன்றினாலும், வேறெங்கும் காணவியலாத ஆழ்ந்த உணர்ச்சியும், உறுதிப்பாடும் இதில் காணப்படுகின்றது.

குறியீடுகள் மூலம் பிக்காஸோ தம் ஆளுமையை வெளிப்படுத்தினார். எனவே இவரது ஓவியங்களில் இக்குறியீடுகள் மிகுதியாக காணக் கிடைக்கின்றது. இவர் மே 1-ல் தொடங்கிய புனையா ஓவியங்களில் இக்குறிப்பு மொழியின் அம்சங்கள் காணப்படுகின்றன. இக்குறிப்பு மொழியினைச் சிரமத்துடனேயே பிக்காஸோவினால் விளக்க இயலும். எருதினை ஸ்பானிய மக்களாகவும், குதிரையை பாசிசமாகவும் சித்தரிக்க எண்ணிய பிக்காஸோ, இதற்கு எத்தனை சிரமப்பட்டிருக்கிறார் என்பதை இந்த ஓவியமே உணர்த்துகின்றது.

இதில் குதிரை மட்டும் தான் சிக்கலான உருவமாகும். இதனை நகைச்சுவையாக அல்லது குழந்தைத்தனமாக சித்தரிக்க திட்டமிட்டார். பின்னர் குதிரையை பரிதாபமாக உருவகிக்க நேர்ந்தபோது, இளமையில் தாம் குதிரையினை இளமைத்துடிப்பின் சின்னமாக சித்தரித்ததை நினைவுகூர்ந்தார். அதனால் குறியீடுகளை உதறிவிட்டு, அலங்காரமற்ற நிர்வாண உருவங்களையே வரைந்தார். ஸ்பானியர் நன்கறிந்த எருதையும், குதிரையையும் தமது ஓவியத்தில் பிரதான பாத்திரங்களாக்கினார்.

இவருடைய இப்போக்கு இரு அம்சங்களில் முக்கியமானதாகும். இவரது கடந்த காலம், பல வெற்றிகளை குவித்த பொற்காலம் (நீலப் பருவம், சிவப்புப் பருவம், கலவை ஓவியப் பருவம், வளைவடிவக் கலை முதலிய பல சாதனைகள் இதில் அடங்கும்). தாம் போராடிய நோக்கத்திற்காக தமது திறன் முழுவதையும் அர்ப்பணிக்க இவர் விரும்பினார். எனவே குவர்ணிக்காவின் நாசத்திற்கு தமது திறன் அனைத்தையும் ஈடாக அளிக்க முன்வந்தார்.

இதில் எருதும் குதிரையும், எதிரிகளாக சித்தரிக்கப்படவில்லை. இறுதி ஓவியத்தில் எல்லா உருவங்களுக்குமே ஒரே கதி தான். பலியாகும் முடிவு தான் ஏற்படுகின்றது. ஆனால் குதிரைக்கு மட்டும் முதலில் குறிக்கப்பட்டிருந்த அதே முடிவு தான் இதிலும் ஏற்படுகின்றது. ‘குவர்ணிக்கா’ ஓவியத்தின் அடிப்பக்கம் அடைப்பட்டுள்ளது ; வலது – இடது பக்கங்களுக்கு எல்லைக்கோடுகள் உள்ளன. மேற்பக்கம் திறப்பாக உள்ளது. எருதின் கொம்பு மற்றும் வால் வீழ்கின்றன. பெண்ணின் கைகள், குதிரையின் கனைப்பு, எண்ணெய் விளக்கேந்திய பெண் ஆகிய அனைத்து அம்சங்களும், ஏதாவதொரு வழியில் உச்சியை நோக்கிப் பல இடைவெளிகளை அல்லது திறப்புகளை உண்டாக்க உதவுகின்றன.

இக்கொடுமைக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கிய விமானங்கள் திரைச்சீலைக்கு வெளியே கண் மறைவான இடத்தில் இருப்பதாக உணர்கிறோம். இரண்டாவது புவியீர்ப்பு மையம் ஒன்றை இந்த அம்சங்கள் அனைத்தும் இந்த ஓவியத்திற்கு அளிக்கின்றன. அவ்வகையில் இத்திரையோவியம் மேலே மேலே உயர்ந்து சென்று, உண்மையில் செவ்வக வடிவிலிருந்தாலும், இதன் அளவு விகிதங்கள் மேல் நோக்கிய உந்து விசையால் அகவுணர்வின்படி சமச்சீருடையதாகவும், எல்லை கடந்ததாயும் அமைந்துள்ளன.

அனைத்திற்கும் மேலாக ‘குவர்ணிக்கா’வின் ஓவியக் கலைப் பண்புகள், அதனை இன்றைய வாழ்வுக்கு பெரிதும் இயல்புடையதாக்குகின்றன. உண்மையில் இந்த இயல்பு காரணமாகத் தான் இந்த ஓவியம் தலைசிறந்த கலைப்படைப்பாக போற்றப்படுகின்றது.



’குவர்ணிக்கா’ ஓவியம் ஆரம்பக் கட்டத்தில் இருந்தபோது எடுத்த நிழற்படம்

முட்டிக்கையை மேலே தூக்கிய நிலையில் சித்தரிக்க பிக்காஸோ முதலில் எண்ணியதை, இவர் மே 9-ல் வரைந்த புனையா ஓவியத்தின் முதலிரு கட்டங்களின் நிழற்படங்களும் காட்டுகின்றன. முட்டிக்கை தனிச்சிறப்பு வாய்ந்தது. ஓவியம் சித்தரிக்கும் கொடுஞ்செயலுக்கு ஆண்டவனின் மன்னிப்பு அறவே இல்லை என்பதை இது குறிக்கிறது. பழிக்குப் பழி வாங்கும்படி இறைவனை இது இறைஞ்சுகின்றது. காட்டுமிராண்டித் தனமான அட்டூழியத்தினால் கொடும் துயருக்குள்ளான அப்பாவி மக்களின் அபயக் குரலை இப்படைப்பு எதிரொலிக்கின்றது. ’குவர்ணிக்கா’ ஓவியம் பிக்காஸோவின் ‘ஒப்பாரி’ பாடலாகவே எனக்கு தோன்றுகிறது. இதன் சில அம்சங்களும், இதன் வாயிலாக எதிரொலிக்கும் அவலக் குரல்களும், நெஞ்சைப் பிளந்திடும் அண்டலூசியச் சோக இசையின் சித்திர வடிவமாக இதனைக் காட்டுகின்றன. ஓவியரின் குழந்தைப் பருவத்திலிருந்து மட்டுமின்றி, அதற்கு முன்பு இவரது மூதாதையரிடமிருந்து வழிவழியாக வந்து இவரிடம் குடிகொண்ட ஆழ்ந்த பண்பாட்டுப் பின்னணி, தக்க தருணத்தில் வெளிப்பட்டு, இவரது கடந்த கால ஓவியத் திறனுடன் இரண்டறக் கலந்து ‘குவர்ணிக்கா’ ஓவியமாக உருவெடுத்தது. 

பிக்காஸோவின் இந்த ஓவியத்தை முழுமையாகக் காணும்பொழுது, இதனை இருபதாம் நூற்றாண்டு மனிதனின் உருவமாகவே நான் காண்கின்றேன். ஏனென்றால் இது மனித குலத்தின் பல்வேறு பாணிகளையும், பருவங்களையும் தழுவி நிற்கின்றது. தங்களது சமயம், வாழ்க்கை முறை, சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், மொழி, நிறம், பண்பியல்புகள் அனைத்தாலும் முற்றிலும் மாறுபட்டுள்ள வேறு மக்களும் உலகில் வாழ்கின்றார்கள் என்பதை இன்றைய உலக மக்கள் நன்கு உணந்திருக்கின்றார்கள். இத்தகைய வேற்றுமையிலிருந்து எழும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இரண்டு வழிகள் தான் உண்டு. ‘நான் செய்வது தான் சரி ; மற்றவர் செய்வதெல்லாம் தவறு’ என்று ஒவ்வொரு மனிதனும் நினைத்தால், தீராத பூசல்கள் தான் மிஞ்சும். ‘மற்ற்வர்களின் வாழ்க்கை முறையும் நம்முடையதைப் போல் சிறந்தது தான் ; நாமும் வேறிடத்தில், வேறு சூழ்நிலைகளில் பிறந்திருந்தால், நாம் பகைவர்களாக கருதுகின்ற அப்பகுதி மக்களின் மனப்பான்மை தான் நம்மிடமும் குடிகொண்டிருக்கும்’ என்ற உண்மையினை உணர்ந்து, சகிப்புணர்வையும், நல்லெண்ணத்தையும் வளர்த்துக் கொள்வது தான் இதற்கு மாற்று வழி. வேற்றுமையினுள் ஒற்றுமையைக் கண்டு, மனித வேறுபாடுகளையும், முரண்பாடுகளையும் இயன்ற வரையில் பிக்காஸோ இந்த ஓவியத்தில் சித்தரித்திருப்பதாக நம்புகின்றேன்.



பாப்லோ பிக்காஸோ

ஓவியர் என்ற முறையில் பிக்காஸோவின் கடந்த காலக் கலைத்திறனுக்கு ஒரு தொகுப்புரையாக ‘குவர்ணிக்கா’ திகழ்கின்றது. இதில் சித்தரிக்கப்பட்டுள்ள மாறுபட்ட பாணிகளும், பருவங்களும், மிகவும் எதிரிடையான நுட்பங்களும் கூட சக வாழ்வு கொண்டு ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்க இயலும் என்ற அரிய உண்மையை உணர்த்துகின்றன. எனவே ‘குவர்ணிக்கா’ ஒரு போர் ஓவியம் மட்டுமன்று ; அது மானுட சகவாழ்வை போதிக்கும் நீதி ஓவியமாகும். பிக்காஸோ கொண்டிருந்த அதே மனோதிடமும், உணர்ச்சியும் கொண்டிருந்ததால் தான், இதைப்போன்ற ஒத்திசைவான ஓவியத்தில் இத்தகைய சுமூக உணர்வினை கொணர்ந்திட இயலும் என்பதையும் இது அறிவுறுத்துகின்றது. இந்த உணர்ச்சிக்கு பெயர் தான் அன்பு. அவதியுற்றவர்கள் மீதான – கொடூரமாக கொல்லப்பட்டவர்களின் மீதான – அபிரீதமான அன்பு காரணமாகவே, இவர் சாகாவரம் பெற்ற ‘குவர்ணிக்கா’ என்னும் இந்த அற்புதப் படைப்பினைத் தீட்டினார்.

ஜோசப் பலாவ் இ ஃபேபர் (Josep Palau i Fabre)

ஸ்பானியக் கவிஞர், கட்டுரையாளர், நாடக ஆசிரியர், பிக்காஸோவின் நண்பர், பிக்காஸோ படைப்புகள் குறித்த நூல்களை வெளியிட்டுள்ளார். இக்கட்டுரை பிக்காஸோ பற்றிய மாநாட்டில் வாசிக்கப்பட்டது.


தமிழில் : இரா.நடராசன்

டிரேஸி சாப்மன் : நான் போராடப் பிறந்தவள் !


“என்னிடம் உள்ளதை உரித்தெடுத்து
என் தன்மானத்தைப் பறித்துச்செல்லப் பார்க்கிறார்கள்.
என் உள்ளத்தை வதைத்து
வெள்ளையனுக்கு ஒத்தூதும் குழலாக்க நினைக்கிறார்கள்.
ஆனால் என் ஆன்மா விற்பனைக்கல்ல.
நான் போராடப் பிறந்தவள்
அவர்களுக்கு நான் ஒரு சவால் !”

ஓயாது சுற்றிச் சுற்றி வட்டமிடும் குரல். வைரம் பாய்ந்த குரல். இது கறுப்பின பாடகி டிரேஸி சாப்மனின் குரல். அமெரிக்காவில் முப்பதுகளில் எழுந்த கறுப்புப் போராட்ட இசை மீண்டும் பிறந்திருக்கிறது. இதில் முக்கிய பங்கு ட்ரேஸிக்கு உண்டு.

அமெரிக்காவில் இன்று காட்டுக் கூச்சல் போடும் இசையே எங்கும் பரப்பப்பட்டுள்ளது. மைக்கேல் ஜாக்‌சன், ஓசிபிசா, போனி எம் குழுக்களுக்கு ஏராளமான விளம்பரங்கள். இதன் மத்தியில் மக்களின் வாழ்க்கை குறித்த மதிப்போடு, அவர்களின் பிரச்சினை பற்றிய அக்கறையோடு பாடும் ட்ரேஸி சாப்மன் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஒளி வீசுகிறார்.




பிரம்மாண்டமான மேடை, கண்ணை பொசுக்கும் அலங்கார விளக்குகள், மிகையான ஒப்பனைகள், எலெக்ட்ரானிக் ஜாலங்கள் இவைகளோடு தான் எல்லா ’பாப்’ வெறி இசைக் குழுக்களும் பாடுகின்றன, ஆடுகின்றன. பார்வையாளர்கள் கூடவே வெறியாட்டம் போடுகிறார்கள். இந்த ஆர்பாட்டங்கள் டிரேஸியின் நிகழ்ச்சிகளில் இல்லை.

அதோ டிரேஸி பாடுகிறார். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் டிரேஸியின் மகுடிக்குக் கட்டுப்படுகிறார்கள். உறங்குவதற்கு அல்ல. சிந்திப்பதற்கு. டிரேஸியின் பாடல் லட்சக்கணக்கானவர்களை சிந்திக்க வைக்கிறது. சிந்திக்க வைப்பவர்களை அமெரிக்க முதலாளிகளுக்கு என்றுமே பிடிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களை பராமரிக்கப் போவதாக சொல்வார்கள். ஏதாவதொரு கௌரவப் பதவி கொடுத்து ஒரு நிறுவனத்தில் கட்டிப் போட்டு விடுவார்கள். சிறந்த இளைஞர்களை இப்படித்தான் விலைக்கு வாங்கி அடிமைகளாக்கி விடுவார்கள். இப்படி ‘வாய்ப்பு’ கிடைக்காமல் போனவர்கள் பிழைப்பு தேடி இசைக் கச்சேரிக்கு ஏறி இறங்கி அலைவார்கள். மக்களிடமிருந்தும், அவர்களது பிரச்சினைகளில் இருந்தும் இப்படிப்பட்டவர்கள் ரொம்ப தூரம் விலகிப் போய்விடுவார்கள்.

இன்னும் டிரேஸி அவர்கள் கையில் அகப்படவேயில்லை

“எனக்கொரு விலை உண்டு என்று நினைக்கிறீர்கள்
இருப்பதை ஒரு விலைக்கு விற்பேன் என்று நம்புகிறீர்கள்
காசே கடவுள் மற்றது பொய் என்று அலறுகிறீர்கள்.”

என்று சாடுகிறார் டிரேஸிஅவர் எப்படி வலைகளில் அகப்படாமல் தப்பினார்? அவரது வாழ்க்கைத்தான் அவருக்கு கற்றுக் கொடுத்த்து. அவர் வளர்ந்த ஏழை நீக்ரோ குடியிருப்பு அமெரிக்கச் சமுதாயத்தின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.





டிரேஸியின் தாய் அவருக்கு கஷ்டம் என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுத்தாள். தனது குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். சுரண்டும், ஒடுக்கும் வெள்ளை இன அடக்குமுறை பற்றி நிறைய சொல்லிக் கொடுத்தாள். நீக்ரோ குடியிருப்பில் டிரேஸி தான் வாழ்ந்து அனுபவித்ததன் மூலம் அமெரிக்கா பற்றிய ஆரம்பப் பாடங்களை நேரடியாகவே கற்றுக் கொண்டார்.

“அப்படியா, அப்படி ஓர் இடம் இருக்கிறதா?
ஒன்றும் தெரியாதது போல
பாசாங்கு செய்கிறார்கள்.
ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
அப்படி ஓர் ரகசிய உலகம் இருக்கிறது என்பதை
சகமனிதர்கள் உமிழும் கழிவிலும்
குப்பைக் கூளத்திலும்தான்
சிலர் வாழ்கிறார்கள் என்பதை
ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

அனுபவம் செரிந்த இந்தச் சொற்கள் டிரேஸிக்கு எங்கிருந்து கிடைத்தன? அவருக்கு முன்னால் வாழ்ந்த கவிஞர்களிடம் எடுத்ததா? அகராதியில் முக்குளித்து அகழ்ந்தெடுத்ததா? அல்ல. அதே குப்பை அழுகல் நிறைந்த நீக்ரோ சேரிகளில் வாழ்ந்த அனுபவமே பாடல்களாக வந்திருக்கிறது.





அவரது பள்ளிப்படிப்பு மற்றொரு தரப்பான வெள்ளையர் உலகத்தை அறிமுகப்படுத்தியது. ஏழைப்பெண் ஒருத்தியை முதன்முதலாக அங்கே அவர்கள் சந்தித்தார்கள். ஏழ்மை, நிறப்பாகுபாடு பற்றி அறியாதவர்கள் – “கறுப்பர் இனத்தில் பிறந்த நீ என்ன நினக்கிறாய்?” என்ற கேள்வியை கேட்டார்கள். தன் நீக்ரோ இனத்துக்கு ஏற்பட்ட இழிவுகள் பற்றி, யார் இழிவை ஏற்படுத்தியதற்கு காரணமானவர்களோ அவர்களிடமே விளக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு அவலத்தையும், அருவெறுப்பையும், எரிச்சலையும் மூட்டியது. நிறவெறி அவரது கன்னத்தில் மாறி மாறி அறைந்தது. ’நீ நீக்ரோ, ’நீ நீக்ரோ’. அதுவே அவரது அடிமனதில் அடுத்த கேள்வியையும் விதைத்து விட்டது: விடுதலை எப்போது?

“நீ
ஆடம்பர மோகத்தில்
பொருளாசையில் விழுந்து
கண்ணுக்கு தெரியாத ரத்தச்
சங்கிலிப் பிணைப்பைக்
காணத் தவறிவிட்டாய்!
அந்தஸ்தில் உயரப் பார்க்கிறாய்.
ஆனால் கீழே உன்னைச் சந்தையில் விற்கிறார்கள்
இது இன்னொருவகை அடிமைத்தனம்
மனிதன் படைத்த உலகம் முழுதும் வெள்ளையர் கையில்
அதுவே உனது எசமான் – இன்றும்”

நீக்ரோ இன விடுதலை என்ற லட்சியத்தில் தானே தன்னை புடம் போட்டு எடுத்துக்கொண்ட டிரேஸிக்கு ஒரு பெரிய மன வருத்தம். டிரேஸி மட்டுமல்ல ; இந்த லட்சியத்துக்காக கலையை பயன்படுத்திய பலருக்கு இதேபோன்         ற மனவருத்தம் உண்டு. யார் தங்களது கருத்துகளை கேட்க வேண்டுமென்று படைத்தார்களோ, அந்தச் சகோதரர்கள் ஆடம்பர மோகத்தில் அடிமைப்பட்டு கானல் நீர் தேடி ஓடும் விலங்குகளாக அலைவதைப் பார்க்கிறார்கள் ; ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இங்கே இந்தியாவில் இடஒடுக்கீட்டு உரிமையினால் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறிய சிலர் கீழே உழலும் தன் சக மக்களை, அவர்களின் துன்ப துயரங்களை என்றென்றைக்குமாக மறந்துவிட்டு புதுப் பார்ப்பனர்களாக மாறிவிடுகிறார்கள்.  இதுபோலவே தான் கறுப்பர் இன மக்களில் சிலர் சொந்த சங்கிலிப் பிணைப்பை மறப்பது மட்டுமல்ல, வெள்ளை இன எசமானர்கள் தங்களுக்கு பூட்டுவது பூவிலங்கு, பொன் விலங்கென்று விளக்கவும் தொடங்கி விட்டார்கள். இந்த அவலத்தில் விளைந்தது தான் டிரேஸி பாடல்களின் ஆதங்கம், கோபம், அழுத்தம், சோகம், விம்மல், வெடிப்பு எல்லாம்.

அமெரிக்க இசை உலகத்தில் மன எழுச்சி உணர்வுகள் ஆபாசமான, பகட்டான, பசப்புணர்ச்சியாகி விட்ட்து. வலுவும், பலமும் ஆரவாரமாகி விட்டது. நகைச்சுவை உணர்வு அற்ப உணர்வாகி விட்டது. மொத்தத்தில் இசை முட்டாள் தனத்தின் உச்சக்கட்டமாகி விட்டது. நீக்ரோக்களின் வாழ்க்கையும், இசையும் சீரழிக்கப்பட்ட்தை கண்டு உள்ளம் கொதிக்கும் டிரேஸி அந்தக் கனவைத் தன் பாடல் வரிகளுக்கு மாற்றிக் கொடுக்கிறார்.

தாய் வாங்கிக் கொடுத்த கிடாரை மீட்டிய இளம் விரல்கள் பள்ளி வயதிலேயே புரட்சியை இசையாக்கித் தீட்டிப் பார்த்தன.

“புரட்சி ஒலி இதோ இந்தக் கணம்
உன் காதில் விழவில்லையா?”

1982-ல் டிரேஸி படித்த பள்ளியின் ஆண்டுக் குறிப்பில் இப்படி எழுதினார்கள். “டிரேஸி சாப்மன் தன் கிடாரையே மணம் செய்துகொண்டு நீண்ட காலத்துக்கு இன்பமாக வாழ்க்கை நடத்துவார்.”


வாழ்க்கை – கலை இரண்டிலும் முரண்பாடில்லாத ஒற்றுமையை அடைந்த டிரேஸிக்கு எந்த இசை அலங்காரமும் தேவைப்படவில்லை. 1989-ல் அமெரிக்காவின் மிக உயர்ந்த விருதான ‘கிராமி’ ப் பரிசுகள் மூன்றினை அவர் வென்றார். டிரேஸியின் பாடல்களில் இசை கவர்ச்சியான ஒன்றாக இல்லாமல் இயல்பான நாட்டுப்புற மக்கள் இசையாக  வெளிப்படுகிறது என்று பத்திரிக்கைகள் பாராட்டி எழுதின.

“என் உடமை அத்தனைக்கும்
ஒரு விலை உண்டென
பணமே வெல்லும் மற்றவை தோற்கும் என
நீங்கள் நினைக்கிறீர்கள்
போய் ஆன்மாவை விற்று
தோலைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் !
என்னுள்ளே எரியும் சுடரை நான்
காப்பாற்ற வேண்டும் – நான்

உயிர் வாழ்வது அதற்காகத்தான் !”

அமெரிக்க சமுதாயத்தை ஆள்கின்ற சுரண்டும் வர்க்கத்துக்கு கேள்வி எழுப்புபவர்களை கண்டால் பிடிக்காது. அவர்களை ஒன்று மயக்கி விலை கொடுத்து வாங்கப் பார்க்கும். அல்லது வெட்டிக் கொன்றுவிடும். சுட்டுத் தள்ளிவிடும். முப்பதுகளில் மெக்கார்த்தியிச அடக்குமுறை இயக்கம் எழுந்து சோசலிசத்தை ஆதரித்த, கறுப்பர் விடுதலைக்கு குரல் கொடுத்த போராளிகளை, கலைஞர்களை அமெரிக்க அரசு நரவேட்டையாடியது. அன்று முன்னிலையில் நின்ற நீக்ரோ போராளிப் பாடகர் பால் ராப்சன்.


மற்றவர்கள் பெற்றிராத நேரடி அனுபவம் நீக்ரோக்களுக்கு உண்டு. ஏகாதிபத்திய சுரண்டல் என்றால் என்ன என்பது அவர்களுக்கு மிக நன்றாக தெரியும். அவர்களை பொறுத்த அளவில் அது எங்கோ தொலைவில் உள்ள தத்துவப் பிரச்சினை அல்ல. எந்த ஏகாதிபத்தியம் உலகெங்கிலும் உள்ள பலகோடி காலனிய மக்களுக்கு வேலை கொடுப்பதில் பாரபட்சம் – வெள்ளையர் – கறுப்பர் என்கிற பாகுபாடு – சனநாயக உரிமைகள் மறுப்பு என்ற முறைகள் மூலம் அடக்கி ஒடுக்கி ஆள்கிறதோ, அதே முறைகளைத் தான் நீக்ரோக்கள் மீதும் காட்டுகிறது.” என்று சாடினார் பால் ராப்சன்.

அறுபதுகளில் இதேபோல வியட்நாம் ஆக்கிரமிப்புக்கு எதிராக கேள்வியெழுப்பி இஅயக்கங்களில் பங்கெடுத்தார் அமெரிக்கப் பாடகி ஜோன்பெய்ஸ். பால் ராப்சன், ஜோன்பெய்ஸ் பாரம்பரியம் டிரேஸி சாப்மனிடம் தொடர்கிறது. “அரசின் எச்சில் காசு வேண்டாம். தேவை மானத்தோடு வாழ ஒரு வழி” என்ற பாடல் வர்ரிகள் ராப்சனின் தொடர்ச்சி.

வெறுமனே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கேள்வி கேட்டுவிட்டு போகிறவர் அல்ல ட்ரேஸி. நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்யக்கோரும் இயக்கம், மனித உரிமைகள் இயக்கம் போன்றவற்றில் நேரடியாக பங்கேற்றார். இந்தியாவுக்கு வந்து இசை நிகழ்ச்சிகள் நட்த்தியிருக்கிறார்.


என்னை விலை பேசாதீர்கள் என்று அவரே ஒதுங்கினாலும் அவரது குரலை அடக்கிவிடத் துடிக்கும் அமெரிக்க ஆளும் கூட்டம் பல விசேஷ நபர்களை அனுப்பி பார்த்தது. கடுமையாக நடந்துகொண்டு வெறிநாய்களை விரட்டுவதுபோல அவர்களை துரத்தியடித்தார். எளிமையான பாடலும் பாடுகிறார். கவிதைச் செறிவுள்ள பாடலும் பாடுகிறார். இதுவே டிரேஸியின் சிறப்பம்சம். சொல்கின்ற விஷயமே அவருக்கு முக்கியம். பிரச்சினையை யார் விளங்கிக் கொள்ள வேண்டுமோ அவர்கள் விளங்கிக் கொள்ளும் விதத்தில்  அவர் பாடல்களை அமைக்கிறார். 

டிரேஸி தனது பாடல்களில் சொற்களை தெளிவாக உச்சரிக்கிறார். மேற்கத்திய இசைப்பாடகர்கள் அநேகரிடம் இல்லாத சிறப்பம்சம் இது. எனவே தான் டிரேஸியின் இசைப்பாடல் பால் ராப்சன், ஜோன்பெய்ஸ் போல தெளிவாக இருக்கிறது. மிக வலுவான செய்தி இருப்பதால் தான் ’சுவருக்கு பின்னே’ (Behind The Wall) என்கிற பாடலை எந்த பின்னணி இசையுமில்லாமல், தனது கிடாரைக் கூட மீட்டாமல் பாடியிருக்கிறார்.

ட்ரேஸி சாப்மனின் பாடல்களை கேட்பது ஓர் ஆழ்ந்த அனுபவம். அந்தந்த உணர்ச்சிகளுக்கு ஏற்ப இசையை குழைத்து அவர் சித்திரம் தீட்டுவதை  பலமுறை கேட்க வேண்டும். இணர்ச்சிகளும், இசைவடிவமும் ஒன்றாக கலந்து விடுகின்றன.

‘உனது பதிலுக்கு காத்திருக்க நேரமில்லை
நான் சொல்வதை கேட்கத் தயாரென்றால்
எவ்வளவு நேரமும் காத்திருப்பேன்”

என்று இதயத்தை தொட்டுப்பேசும் லாவகம் ;

“பளபளக்கும் ஆப்பிளுக்கு ஆசைப்படாதே
அது கசப்பான பழமாக இருக்கக்கூடும்  
நியாயமான ருசிக்கு மட்டும் பசித்திரு
ஏனெனில் உனக்கிருக்கும் சொத்து
உன் ஆன்மா மட்டுமே !”

என்று பல பாடல்களில் ஊடாடும் அடிநாதமான செய்தி.


இப்படிப் பலப்பல உணர்ச்சிகளை டிரேஸி அடுக்கடுக்காய் தந்து நம் சிந்தனையில் தீமூட்டுகிறார்.

கீழை ஜெர்மானிய மார்க்சிய இசை அறிஞர் ஐஸ்லர் கூறுவது போல ஒரு புதிய இசை அமைப்பாளனுக்கு இரண்டே இரண்டு பாத்திரங்கள் மட்டும் உண்டு. ஒன்று : இன்றுள்ள சுரண்டும் சமூகத்தின் மேல் ஒட்டிக்கொண்டு அதன் ஜீவரசத்தை உறிஞ்சிக் கொழுத்து ஆள்பவரோடு கூட்டுச் சேர்ந்து உல்லாசமாக வாழ்வது : மற்றது ஒரு ஒரு புரட்சிகர இசைப்போராளியாக வாழ்வது.




டிரேஸி சாப்மன் ஒரு அமெரிக்க கறுப்பின இசைப் போராளி. அந்த வகையில் பாடகியும், கவிஞருமான டிரேஸி சாப்மன் உலகின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் போராடும் – ஒடுக்கப்படும் மக்களுக்கு கிடைத்துள்ள வலுவான போர் ஆயுதம்.

நன்றி : புதிய கலாச்சாரம் (ஆக-செப் 1990 இதழ்)
            


Sunday, 25 March 2018

“வரலாற்றை பயன்படுத்துதலும் அதனைத் தவறாகப் பயன்படுத்துதலும்“



நமக்கு வரலாறு தேவை. ஆனால் அறிவுத்
தோட்டத்தில் திரியும் தறுதலைக்குத் தேவைப்படும்
வரலாறு போன்றதல்ல அது.


ஃப்ரெட்ரிக் நீட்சே

பகத்சிங்


இன்று இவன் இருந்திருந்தால் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக மத்திய இந்தியாவில் பழங்குடி மக்கள் நடத்தும் போருக்கு தலைமையேற்றிருப்பான். மக்கள் விடுதலையை முன்னிருத்தும் ஆயுதப்போராட்டத்தில் பிராபகரனுக்கும் முன்னதான  முன்னோடியாக விளங்கியிருப்பான். லால்கர் போராட்டத்தில் இடது தீவிரவாதிகளின் துரோகத்தை அம்பலப்படுத்தியிருப்பான். 



தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்

 நா.மம்மது  உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...