Friday, 19 January 2018

முகம் : தமிழ் சினிமாவில் ஒர் இடையீடு பிம்பத்தின் புனிதத்தை கட்டவிழ்த்தல் - ஆத்மாநாம்

I


”1885-ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்கள் முதன்முதலில் ஒளிரும் பிம்பங்களை காண்பித்தபோது பிறந்தது ஒரு புதிய கலை மட்டுமல்ல, அப்போது மனித மூளையில் உணர்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் ஒரு புதிய அமைப்பு தோன்றியது.”

(பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் - பேல பெலாஸ்)


சினிமா சமீபத்தில் புரட்டிப்பார்த்த தனது நூறு ஆண்டுகால வரலாற்றின் தொடர் ஓட்டத்தில் மனித குலத்திற்கு பல மேன்மையான விஷயங்கள் வாய்க்கப் பெற்றிருந்தும் அதன் குறை வளர்ச்சி குறித்த நினைவுகளையும் தன்னகத்தே சுமந்து கொண்டு தான் வந்துள்ளது. மேற்குறிப்பிட்ட பதத்தில் சினிமாவை ஒரு சமூக விஞ்ஞான கலையாக பலர் புரிந்து கொள்ளாததன் விளைவாக இது நிகழ்ந்திருக்க்கூடும். ஆய்வறிஞர்கள் காண மறுத்த ஒரு பொருளைத்தான் பேலபெலாஸ் தனது கடிதத்தில் இன்னும் வலுவாக சுட்டிக்காட்டுகிறார். ’மக்களின் மனோநிலையை, கருத்துக்களை உருவாக்கும் சினிமாவை மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதல்ல. மாறாக துரதிருஷ்டவசமாக மக்களை அது பயன்படுத்துகிறது. சினிமா ஒரு மக்கள் கலையாக இருந்தும் அது குறித்த அறிவு, ரசனை அவர்களுக்கு நிராகரிக்கப் பட்டிருப்பதால் தான் சினிமா சக்தியின் முன் செயலிழந்து நிற்கிறார்கள்.’ இதன் தொடர்ச்சியான பாதிப்புகள் தமிழ்சினிமாவையும் விட்டுவிடாமல் இல்லை. திரைப்படத்தின் மூலம் கட்டியெழுப்பட்ட பிம்ப ஆளுமைகள் அதிகாரப் பீடங்களாகஇறுகிப்போயுள்ள நிலையில் மெய்யான கலாச்சாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு வியாபாரக் கலாச்சாரம் முன்னுக்கு வந்துள்ளது. ஆங்காங்கே சில ஒளிக்கோலங்கள் தோன்றினாலும் இருளின் வலை கிழித்து வெளிச்சம் கைவரப்பெறுவது இன்னமும் அசாத்தியமாகவே உள்ளது. 



ஒரு அதிவேகப் பாய்ச்சலில் தமிழ் சினிமா தனது  சுயத்தை முற்றாக  மறுதலித்து பின்னோக்கி நீச்சலடித்துக் கொண்டிருந்தபோது அபூர்வமாக ஒலித்த குரல்களும் உண்டு. அந்தக் குரல்வளைகளும் நெறிக்கப்பட்டு போனதன் பத்தியில் தலையை நீட்டிக்கொண்டு வந்தவர்களில் ஞானராஜசேகரனும் ஒருவர். தி. ஜானகிராமனின் மோகமுள்ளை தனது பயிற்ச்சிக்கான முதல் வித்தாக அவர் தேர்ந்து கொண்டது கூட வழமையான தமிழ் சினிமாவின் மாய்மாலங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம் தான். அளவில் சற்று பெரிய நாவலான இதன் மையக்கருத்து திரைப்பட வடிவத்தில் கவனத்துடன் அணுகப்பட்டிருந்தது. இரு பலரால் சிலாகிக்கப்பட்டாலும், வேறு சிலரால் விமர்சனத்துக்கும் உள்ளானது. இருந்து எழுத்து உருவாக்கும் அனுபவத்துக்கும் காட்சி உருவாக்கும் அனுபவத்துக்கும் உள்ள இடைவெளியைப் பேசி யமுனா ராஜேந்திரன் போன்றோர் அதன் திரைப்பட முயற்சிக்காக பாராட்டவே செய்தனர். 



இந்திய ஆட்சிப் பணியில் தற்போது தணிக்கை அதிகாரியாக பணியாற்றி வரும் ஞானராஜசேகரன் இலக்கிய உலகிற்கு அறிமுகமானது என்பதுகளில் வயிறுஎன்கிற நாடகத் தொகுப்பின் மூலம். யான குதிரை ஒட்டகம்என உருவக நாவல் ஒன்றையும் சமீபத்தில் கொண்டு வந்துள்ளார். இலக்கிய உலகிலிருந்து சினிமாவுக்குள் பிரவேசித்தவர்கள் தங்கள் சுவடுகளை ஒருவாறு பதியவைத்துப் போனதன் பின்னணியில் ஞானராஜசேகரனின் வருகை புதிதல்ல என்றாலும், வரின் அடுத்தடுத்த படைப்புகள் எடுத்துக்கொண்ட களம் தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் எதிமறையான அம்சம் என்பதால் அவரை நோக்கி கவனத்தை குவிப்பது தவிர்க்க முடியாததாகிறது.  





மேலும் அவர் தனது இரண்டாவது படைப்பாக கொண்டு வந்திருக்கும் ஒரு கண் ஒரு பார்வைஎனும் குறும்படத்தின் மூலம் தீண்டாமையின் வேர்கள் எங்கும் நீக்கமற கிளைத்துப் பரவியிருப்பதையும், சாதியத்தின் கறை அரசு நிறுவனங்களிலும் படிந்து கிடப்பதையும் சொல்ல முயன்றுள்ளார். தனம் என்ற சிறுமியின் கண் பறிபோனதில் முதல் காரணியாக சாதி செயல்பட்டதை சொல்லிய நிகழ்வு அது. அரசு நிறுவனத்துக்குள்ளிருந்தே அதனை எதிர்த்த குரலாக அது வெளிப்பட்டது சற்று ஆச்சரியமானதும் கூட. இந்த இரண்டு பிரதிகளுமே இந்திய அளவிலான அங்கீகாரம் பெற்றது ஆறுதலான விஷயமாக இருந்தும், அவரின் குறும்படம் இன்னும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட முடியாமல் முடங்கியே கிடக்கிறது. இந்நிலையில் தான் அவரது மூன்றாவது படைப்பான முகம்திரைப்படம் வெளிவந்திருக்கிறது.

II

குற்றத்தை எதிர் கொள்வதற்கான ஒரே வாய்ப்பு. அதை உணர்த்துவதிலும், ஏற்றுக்கொள்வதிலும் தான் இருக்கிறது. இன்று நம்மிடையே நிலவும் குற்றத்தை நம்முடை பொதுக் குற்றமாக ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. அதன் பிறகுதான் அது நம்மிடையே மாற்றத்தை ஏற்படுத்து.” 

- ஸிக்ப்ரீட் லென்ஸ்  (’நிரபராதிகளின் காலம்நாடகத்தில் மாணவன் )

முகம் திரைப்படத்தின் காட்சிகளில் பிட்படும் முகம் குறித்த விசாரணை எதை தூண்டுகிறது. படத்தின் இயக்குநர் பேட்டிகளில் சுட்டாததும், நமக்கு சட்டென நினைவுக்கு வந்து விடுவதும், தமிழக வரலாற்றில் கவர்ச்சியான பிம்பமாக உறைந்து போய்க் கிடக்கிற நடிகர் / முதலமைச்சர் M.G.R குறித்து கட்டமைக்கப்பட்ட்டுள்ள அதீத புனைவுகள் தான் அது. படத்தின் பிற்பாதி காட்சிகளும் இதனை உறுதிபடுத்தவே செய்கின்றன. அதன் நீடித்த சக்திக்கு தமிழக மக்கள் தந்த விலை அநேக ஆய்வாளர்கள் அறியாத ஒன்று. இனிவரும் காலங்களில் மாற்றுச் சினிமாவை விரும்பும் எந்த ஒரு சினிமா கலைஞனுக்கும் தொடர்ந்த சாபமாகவே அது இருந்து கொண்டிருக்கும். 



வரலாற்று ரீதியான எந்த ஒரு வளர்ச்சிக்கும் வரலாற்று ரீதியான விழிப்புணர்வு இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்-கள் உருவாகும்போது அதைப்பற்றி முன்கூட்டி எச்சரிக்கும் அமைப்பு இல்லாத சமூகங்களில் எம்.ஜி.ஆர்-கள் உருவாவதும் இயல்பு தான். இதற்கான மீட்சி கூட கட்டியெழுப்பட்ட பிம்பங்களின் புனித்ததை உடைப்பதான முன் நிபந்தனையால் மட்டுமே சாத்தியம். சமகால சமூக வாழ்வின் பிரச்சினைகளை பிரதிபலிக்காத எந்த ஒரு கலைக்கும் அதனளவில் முழுமையிருக்காது. அந்த வகையில் ஞானராஜசேகரன் கையாண்டிருப்பது நாம் எதிர்கொள்ளும் நிகழ்கால சிக்கலைத் தான். ஆம் ! சினிமா என்னும் சாதனத்தை துஷ்பிரயோகம் செய்ததால் இருவான கலாச்சாரச் சிக்கல் அது.

மற்றபடி எம்.ஜி.ஆர் கூட முகத்தை வைத்துத் தான் தனது செல்வாக்கை கட்டியமைத்தார் என சொல்லிவிட முடியாது. அவரது ஒட்டுமொத்த உடலை காட்சிப்பொருளாக பயன்படுத்தியது மட்டுமல்லாமல் கை, கால் என அவயங்களின் செயல்பாடுகளின் மூலமாகவும் தனது பிம்ப ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டார். பட வசனங்களில் கூட அவரின் சிவந்த நிறம், திரண்ட மார்பு, முக வசீகரம் என்கிற சிலாகிப்புகள் இடம்பெற்றன. குறிப்பாக காமெடியர்கள் இதனை பேசினார்கள். அதன்பிறகு முகம் என்பதற்கு பிரத்தியேக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிட காலகட்டத்தை உணர்ந்ததும் அதற்கு பிறகான திரைப்படங்களில் முகத்தை Close-Up-ல் நேராகக் காட்டும் காட்சிகளை அமைப்பதில் கவனம் செலுத்தினார். இது பார்வையாளர்கள் மத்தியில் அவரது முகம் உளவியல் ரீதியில் இறுக்கம் காண பெரிதும் காரணமாக அமைந்தது. நமது வாழ்நாளின் அநேக நேரங்களில் முகம் என்ற கருத்தமைவை தாங்கி வாழ நேர்ந்ததற்கு அது ஒரு ஆளும் கருத்தியலாக நிலைபெற்று விட்டதையும் காரணமாக கூறலாம். ஆயினும் அதற்கான முடிவுகள் ஒரே வழியில் பெறப்பட்டதாக சொல்ல முடியாது. 



சமீபத்தில் வெளியாகி பல வாரங்கள் ஓடிய TITANIC படக் கதாநயகியின் முகம் சர்வதேசத் தன்மை வாய்ந்த முகமாக பேசப்பட்டது. அது என்ன சர்வதேசத் தன்மை ? இதற்கான எளிமையான சூத்திரங்கள் அழகிப்போட்டிகளில் தங்கியிருந்தாலும், விளம்பரப்படுத்தலுக்கும், வியாபாரப்படுத்தலுக்கும் ஒரே வார்ப்புகளை கொண்ட ஏற்புக்குரிய உடல் + முகம் இதில் கோரப்படுகிறது. திரத்துறையில் நாம் காணும் நட்சத்திர ஆதிக்கம் என்பது கூட மக்கள் மனதில் முகம் குறித்த கருத்தியல்களை வடிவமைப்பதில் முக்கிய காரணியாக செயல்படுகிறது. தமிழக அரசியலிலோ எம்.ஜி.ஆர், அண்ணா, கருணாநிதி முகங்களுக்கு பிறகு ரஜினி முகம் பேசப்படுகிறது. இந்திய அரசியலில் கூட நேரு முகம் (சோசலிச சிந்தனை கொண்ட தலைவர் என்பதான பிம்பம்), இந்திரா முகம் (கவனம் : அவசர நிலைக்காலத்தில் ஹிட்லருக்கு ஒப்பான அவரின் பிம்பம்), ராஜிவ் முகம் (சிதைவுக்கு பின் அதிகமாக முன்னிறுத்தப்பட்டது) என வலம் வந்த பிறகு BJP ஒரு வாஜ்பாய் முகத்தையும், காங்கிரஸ் ஒரு சோனியா முகத்தையும் கொண்டு வந்திருக்கின்றன. இதில் உள்நாட்டு முகம் / வெளிநாட்டு முகம் போன்ற சர்ச்சைகளும் சேர்ந்துகொள்ள...  ஒரு கேள்வி எழுகிறது. ஆமாம் ! இங்கு யாருக்கு தான் முகங்களிருக்கிறது. ஒரு சர்வாதிகாரியின் கீழ் முகம் சதா கண்காணிக்கப்படுவதை, முகமே மனித வதைக்கு ஆதாராமாகிப்போனதை ’ஹெயின்ரிச் போயில்’ கதை ஒன்று கூறுகிறது. முகம் மட்டுமா? சிந்தனையும் தான் என்பதை ‘ஜார்ஜ் ஆர்வெல்’லின் ’1984’ நாவல் கூறியது. கௌதம சித்தார்த்தன் நகர ஜீவியாக முகமற்றுப்போன எந்திர மனிதனைப் பற்றி பேசும் தனது கதையில் முக மீட்சிக்கான உபாயமாக அவனது இயல்பான வேர்களை தேடிப்போகச் சொல்கிறார். அகதிப் போர்வைக்குள் முகம் இழந்து போனவர்களை பதிவு செய்கிறார்கள் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள். முகம் மறுக்கப்பட்டு வெறும் உடல்களாக மட்டுமே அறியப்படும் ஆண்களின் உலகில் ’சொல்லாத சேதிகள்’ இப்படிச் சொல்கிறது. 

“எனக்கு முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன.”

சரி ! முகம் சினிமா இதில் எதை பேசுகிறது. இந்திய இடதுசாரி இயக்குநர் மிருணாள் சென் கூறியதைப்போல சினிமா என்பதை அரசியல் துண்டுப் பிரசுரமாகவும், தகவல் சொல்லியாகவும் கருதினால் முகம் திரைப்படப்பிரதி சந்தேகத்திற்கிடமில்லாமல் ஒரு தகவலை சொல்லிச் செல்கிறது. நமது அக வாழ்வுக்கும், புற வாழ்வுக்கும் தினம் தினம் நடந்தேறுகிற மோதல் பற்றியது தான் அது. உள் முகத்துக்கும் வெளி முகத்துக்கும் நடக்கும் சண்டையில் ஜெயிப்பது எவர் வசம் உள்ளது.

எந்திரரீதியான ஒரு அமைப்பில் ஆதாரமான உணர்ச்சிகள் புறக்கணிக்கப் படுவது தவிர்க்க முடியாதது. இதில் தெரிவது சமூகத்தின் மொத்த குரூரமும் தான். கண்ணுக்கு தெரியாத அபாயத்தின் வெளிப்பாடான ஒரு நிகழ்ச்சியில் வெறும் பார்வையாளர் மட்டுமல்ல பங்கேற்பவர்களும் தான் என்பது தெரியாதது வெறும் அறியாமை தானா? அல்லது ஒரு சதியின் விளைவா?

III
முகம் (திரைப்படக்கதை)


சினிமா மேக்கப்-மேன் முத்தண்ணன் வீட்டில் தங்கியிருக்கும் ரங்கனுக்கு அவனது முகத்தின் காரணமாக எதிர்காலம் மறுக்கப்படுவது படத்தின் முற்பாதி வரை படிப்படியான நிகழ்வுகளாக காட்டப்படுகிறது. நாடக அரங்கில் திறமையிருந்தும் முகம் மறுத்து வெளியே அனுப்பப்படுகிறான். ராணுவ ஆள் எடுப்பிலும் அவன் கம்பீரத்தை தளர்த்தும்படியான அதே மறுப்பு. கோஷம் போடும் முகங்களுக்கிடையே கூட  அவனுடைய முகத்துக்கு தேவையில்லை. ஆதரவுச் சோறிடும் பெண்ணுக்கும் தனிமுகம் தேவைப்படுகிறது. முத்தண்ணன் கொண்டு வரும் சினிமா சான்ஸும் அவனுடைய நிஜ முகத்தின் காட்சி ரூபத்திற்கு தான் என்றாலும், திரையில் அந்த முகமும் அடித்து துவைத்து தீ வைக்கப்படும்போது, அவனுடைய முகமே அவனுக்கு தேவையில்லாமல் போகிறது. கையில் கிடைக்கும் ஒரு முகமூடியின் உதவியால் பொய்முகம் புனைந்து ஒரு Super Hero ஆகிப்போகிறான். ஆனால் கடந்த காலம் அவனை அத்துடன் விடுவதாயில்லை. பெயர் கூட இல்லாமலாகிப்போன ரங்கனை குற்ற உணர்வுகள் நமைச்சல்களாக அரித்தெடுக்கிறது. போலியான வாழ்க்கைச் சூழல்களுக்கிடையே அவன் நிம்மதியற்று தவிக்கின்றான். எல்லாம் இருந்தும் அவனிடம் இயல்பு தான் இல்லாமல் போகிறது. முகமூடியை கிழித்தெறிந்து விட்டு நிஜ முகத்துடன் வெளியே வரும் ரங்கனை சமூகம் மறுபடியும் குப்பையை நோக்கி வீசுகிறது. இனி சமூகத்தை எதிர் கொள்வதற்கான ஒரே வழி பொய்முகம் புனைந்து வாழ்வது தான் என்ற முடிவிற்கு வருகிறான். சமூகமும் அவனை நிமிர்ந்து பார்க்கிறது.



முகம் திரைப்படம் பல கவித்துவமான காட்சிகளையும், சிந்தனாரீதியான காட்சிகளையும் கொண்டதாய் கண்முன்னே விரிகிறது. படத்தின் Title காட்சிகளே ஒரு ஆரோக்கியமான சமூகத்தில் பலவித முகங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டிய தேவையைக் கோரி விதவிதமான முகங்களை திரையில் நிரப்புகிறது. ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் இடத்தில் ரங்கன் மறுக்கப்படுவதும் நமக்கு முன்கூட்டியே ஒரு காட்சியின் மூலம் உணர்த்தப்படுகிறது. Selection Officr-ன் முகத்துக்கு ஒரு Close-Up வைக்கப்படுகிறது. அந்த முகம் விசேஷமாக அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. முகத்தை அழகுபடுத்த அதிகமான கவனம் எடுத்துக் கொண்டுள்ள Officer ரங்கனை முகம் வைத்து Rejuct செய்யப்போகிறார் என்பதைத் தான் அந்த காட்சி சொல்கிறது. அதற்கடுத்த காட்சியும் அழகு குறித்த ஒரு விசாரணை தான். 300 வருட பாரம்பரியம் TV-யில் பெருமையாக ஓடிக்கொண்டிருக்கிறது. சார்லஸ் டயானாவின் திருமண நிகழ்ச்சி. அழகும் அழகும் மட்டுமே இணை சேர்ந்த நிகழ்ச்சி அது. அதனை கரைத்துக்கொண்டு ரங்கன் குடிநீர் வேண்டி கைபம்பினை அடிக்கும் சத்தம் மேலோங்குகிறது. அது பசியின் சத்தம். அழகை வைத்து முகம் மறுத்ததால் விளைந்த பசியின் சத்தம். இரு காட்சிகளும் மாறி மாறி காண்பிக்கப்பட்டு பார்வையாளனை ஒரு மூண்றாவது உண்மையை நோக்கி உந்துகிறது. அந்த அரசியல் கட்சியின் கொள்கை விளக்க மாநாட்டிற்கு கூட ரங்கன் மறுதலிக்கப்படும்போது உள்ளீடாக ஒலிப்பது இந்தக்குரல் தான். ” முகம் வைத்து அரசியலை பிடித்த கட்சிக்கு கோர முகங்கள் தேவையில்லை.”



மற்றபடி படத்தில் இடம்பெறும் அந்த தீயிடல் காட்சி அதீத கற்பனைத் தனமையுடன் படைக்கப்பட்டிருப்பதும் வேண்டுமென்றே செய்யப்பட்ட உத்தியாக இருக்க வேண்டும். படத்தின் இயக்குநருக்கு சினிமா உருவாக்கிய (குறிப்பாக தமிழகத்தில் என்று சொல்லலாமா?) பார்வையாளர்கள் - ரசிகர்கள் - மந்தைகள் போன்றோர் சமூகத்தில் முகம் பார்த்து மதிப்பளிக்கும் மனிதர்களின் முன்மாதிரி குழுக்கள் என்ற எண்ணம் இருக்கலாம். அதனால் தான் கொஞ்சம் நம்பமுடியாத தன்மையுடன் அந்த காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. அதுகூட நாம வாழும் காலத்தில் ஒரு முக்கிய கலையின் பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அந்தக் கலையை சீரழிவின் பக்கம் நகர்த்தியதை, மனித சமூகத்தை பிம்ப ஆதிக்கத்துக்கு அடிமையாக்கியதை நையாண்டி செய்யும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் மீறியும் இந்தக் காட்சி திரைப்படத்தில் கவித்துவத்துடன் கொண்டதாய் நம் கண்முன்னம் விரிகிறது. 

திரையில் தெரியும் ரங்கனின் முகம் பார்த்து பார்வையாளர்கள் கோபத்துடன் கூச்சலிடுகின்றனர். திரை முகத்தை கிழித்து தீ வைக்கின்றனர். கிழித்து கொளுத்தப்பட்ட முகம் பேசிக் கொண்டிருக்கிறது. ஒரு முகம் அழிக்கப்படுகிறது. அந்த முகமோ தனது அழிவின் இறுதிவரை தனக்கான நியாயத்தை  பேசிக் கொண்டிருக்கிறது. ரங்கனின் நிஜ உருவம் அடித்து துவைக்கப்படுபோது திரை முகம் வாதாடிக் கொண்டிருப்பதாக காட்சி விரிகிறது. கொஞ்ச நேரத்தில் நிஜமும், நிழலும் துடைத்தெறியப்படுகின்றன. இளையராஜாவின் இசையும், ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் இதயத்தை காயப்படுத்திச்சென்ற தருணம் அது. 

மதில் மேல் பூனையல்ல படைப்பாளனின் பணி. அவன் தான் வாழும் காலத்தில் சமகால அரசியல், கலாச்சாரப் பிரச்சினைகளை தனது படைப்புகளின் ஊடாக எதிரொலிக்க வேண்டும். ரங்கனின் முகமாற்றம் கூட செயற்கையாக நவீன மருத்துவத்தின் மூலம் மாற்றியமைத்திருக்க முடியும் காட்சியின் ஜோடனைகளால், தர்கங்களால். ஆனால் படத்தின் இயக்குநருக்கு இயற்கை குறித்த ஒரு சாய்வு இருப்பதால் தான் அதுவும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் ரங்கனின் முகத்தை ஒருவித மாயாஜாலத் தன்மையோடு புரட்டிப் போடுகின்றார். இந்த முகம் மட்டும் வேறாயிருந்தால், சமூக ஏற்புக்குரிய அந்த மாதிரியான முகச்சாயலை கொண்டிருந்தால்... ஒரு நவீன நாடகப் பிரதியை ஒத்ததான இதன் வடிவமும் கவனமாகத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். கோதார் படங்கள் பலவும் கூட ஆய்வுக்கட்டுரைத் தன்மையுடன் தான் அமைந்திருக்கின்றன. 




அடுத்ததாக முகம் திரைப்படத்தின் பிரதான இணை அம்சமாக குறிப்பிட வேண்டியது இளையராஜாவின் இசை. நெஞ்சைப்பிழியும் அந்த வயலின் இசை ஏற்படுத்திச் சென்ற உணர்வுகள் நீண்ட நாட்கள் மனதில் கனத்துக் கொண்டேயிருக்கும். பிரேம்-ரமேஷ் மிக அற்புதமாக குறிப்பிடுவார்கள். ”இந்திய இசைக்கலைஞர்கள் செயல்படும் பரப்பும், இளையராஜா செயல்படும் பரப்பும் வேறுவேறானது. தனித்தனியாக இங்கொன்றும், அங்கொன்றுமாக அவர்கள் செய்ததை இவர் இரண்டரை மணி நேர திரைப்படத்தை ஒரு சாக்காகக் கொண்டும், ஒரு நான்கு நிமிட பாடலை சாக்காகக் கொண்டும் ஒரே தளத்தில் செய்து முடித்து விடுகிறார்.” ஒரு சமூகத்தில் மிக ரகசியமாக சாத்தியப்பட்டிருக்கும் ஒரு சாதனையாக இதனைக் கொள்ளலாமா? பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், இப்படியான ஒரு முயற்சியில் அவரின் இணைவும் படத்தினை எவ்வளவு அழகாக விசாலப்படுத்திச் செல்கிறது. ஒரு நவீன சிறுகதை - நாடகம் போன்று தோற்றமளிக்கும் பிரதியை திரைப்பட வடிவமாக மாற்றுவதில் இயக்குநர் மேற்கொண்டுள்ள முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. மேலும் படத்தின் மற்றொரு முக்கிய பங்களிப்பான நாசர் குறித்தும், அவரது நடிப்பு குறித்தும் விரிவாகச் சொல்வதை விட தேடல் மிகுந்த மனிதராக என்றைக்கோ பயணத்தை துவங்கிவிட்ட அவர் தமிழ் ஊடக சூழலில் மாற்றுக்குரல்களில் ஒன்றாக பரிணமித்துக் கொண்டிருக்கிறார் என்பதை முகம் எளிதாக சொல்லிச் செல்கிறது. 

IV

இறுதியாக சில கேள்விகளும் ஆதங்கங்களும் :

இன்று உலகில் உள்ள பல்லாயிரக்கணக்கான முகம் மறுக்கப்பட்டு அதன்வழி குற்றவுணர்வுக்கு ஆளான மனிதர்களுக்காக பேசப்போன படம் அதன் இறுதியில் அவர்களை மீளாத வீழ்ச்சிக்குள் தள்ளிவிடுவது தான் மிகப்பெரிய சோகம். அங்கவீனர்களின் பிரச்சினைகளை எடுத்துக்கொள்ளும் எந்த ஒரு பிரதியும், அவர்களை பார்வையாளராக கொண்ட வடிவ - உள்ளடக்கத்தை கொண்டிருக்க வேண்டுமென்பது அவர்களின் உலகு குறித்த அக்கரை மற்றும் புரிந்துகொள்ளலாகத் தானே இருக்க முடியும். இந்த பொய்யான வாழ்க்கை மதிப்பீடுகளில் வெந்து மடியும் மனிதர்களின் மத்தியில் இன்னமும் முத்தண்ணன்கள் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள். போலியான முகங்களுக்காக வாழ்ந்து, வாழ முடிவெடுக்கும் ரங்கன் முத்தண்ணனுக்காக வாழ்ந்திருக்க வேண்டாமா? அந்த எரியாமல் தப்பிய முகமூடியும் நம்பிக்கையில்லா உலகத்தைதானே சுட்டுகிறது. ஒருவேளை அந்த முகமூடி எரிக்கப்பட்டிருந்தால் அது அந்த சமூகத்துடனான எதிர் நீச்சலாகத்தானே இருந்திருக்கும். தீர்வு சொல்வதல்ல கலைஞனின் பணி என்பதால் படம் இப்படியானதொரு முடிவைக் கொண்டிருக்கிறதா? 




'கலைப்படைப்பில் எந்த ஒரு பிரச்சினையும் தீர்க்கப்படுவதில்லை. அது வாழ்க்கையில் தான் தீர்க்கப்பட்டாக வேண்டும்' என்றாலும், அதனை நோக்கிய தூண்டல்களையும், சாத்தியக்கூறுகளையும் அந்த படைப்பு பேச வேண்டாமா? நிஜ முகத்தை தொலைத்து விட்டு பொன்முகம் (பொய்முகம்) அணியும் ரங்கன் இட்டு நிரப்பப்போகிற இடத்தை நிரப்ப நிறைய ஆட்கள் வருவார்கள் பஞ்சமிலாமல். ஆனால் ரங்கனின் நிஜ முகத்துடனான உலகில் என்றுமே அவர்கள் வர மாட்டார்கள். ரங்கன் போன்றவர்கள் மட்டுமே நிரப்ப வேண்டிய இடம் அது. அவர்களும் அந்த உலகை விட்டு போய்விடுவது தான் மனித வாழ்வின் நீடித்த சோகமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஜோஸ் வண்டேலுவின் ‘அபாயம்’ நாவலில் கீழ்கண்ட வரி வருகிறது. “முதல் நாள் ரயில்களின் சத்தத்தில் தூங்க முடியாத நோயாளிகளுக்கு, அடுத்த நாள் அந்த சத்தம் கேட்பதேயில்லை.” கடைசியில் ரங்கன் எல்லா மனிதர்களையும் போல சாதாரண மனிதனாகிப் போவது இப்படித்தான். இனி ரங்கனுக்கு நமைச்சலும், அரிப்பும் இருக்கவே இருக்காது.



படத்தில் இப்படி ஒரு காட்சி வருகிறது. ரங்கன் இயக்குநரிடம் விவாதிக்கும் காட்சி அது. ஒரே மாதிரியான கதைகள் - விஷயங்கள் - படம் பிடிக்கும் முறை - கதை சொல்லும் முறை - இருட்டிற்குள் பார்வையாளர்களை வைத்திருத்தல் - கனவை காசாக்குதல் என நீளும் ரங்கனின் வாதம் அவர்களின் விசித்திரமான பார்வையால், பதில்களால் நிலைகுலைய அதன் ஊடாக ஒரு காட்சி. இது வரையிலான இயக்குநர்கள், அவர்களின் இதுவரையான சினிமாக்கள், அதனை மாற்ற நினைத்த - எதிர்கொள்ள நினைத்த ஒரே ஒரு நபர் கூட எழுந்துகொள்ள அந்த நாற்காலி வெறுமையாக விடப்படுகிறது. அதில் அமரப்போவது யார்? ஆண்டாண்டு காலமாக அந்த நாற்காலி நமக்காகத்தான் விடப்பட்டிருக்கிறது. 





No comments:

Post a Comment