Sunday, 21 January 2018

சில்லுகளாய் சில கிறுக்கல்கள்


1

அவரவர்க்கிடையே
ஒரு துண்டு ஆகாயம்
கிழிந்து தொங்குகிறது.
பற்றிக் கொள்ளத்தான்
மனசில்லை.


2

வார்த்தை கடக்கும் 
உன் நினைவு.
எப்போதும் போல்
எழுத ஒன்றுமே கிடைக்காமல்
நான்.

3

வழி நடத்தும் தூரத்தில் நீ
வழி தெரியாமல் நான்
கேட்காமலேயே திரும்பி விட்டேன்.

4

நீ நீயாக
நான் நானாக
நாம் நாமாக
நான் நீயாக
நீ நானாக
நாம் வேறாக

5

முதன் முதல்
எதன் முதலாய்
நாம்.

6

இருள் வழிப்பாதை
தனிமைப் பயணம்
தூரத்தில் மனிதன்
சின்னஞ்சிறு சிகரெட் நெருப்பாய்.

7

விலை மதிப்பற்றது சுதந்திரம்.
சொல்கிறார்கள்
நகைக்கடை முதலாளிகள்.

8

குகைக்கால தனிமை
கிலுகிலுப்பை பூக்காத காலம்
சிரிப்பே உதிராத நாட்கள்.

9

கடற்கரை மணலில்
நீண்டு கிடந்த நிழல்கள்
ஒன்றை ஒன்று
புணர்ந்து கொண்டிருந்தன.
மாலை நேர சூரியன்
விழித்திருந்து
பார்த்துக் கொண்டிருந்தான்.

10

இருள் பூசிய வானம்
சல்லடைக் கண்கள்
நட்சத்திரங்கள்.

11

ரயிலின் கடைசிப்பெட்டி

யாரோ சிலர்
என் முக வெளிச்சத்தில்
முகம் மினுக்கி மறைந்தார்கள்.

12

அந்த வண்டிச் சக்கரமும்
நிற்காமல்
ஓடிக்கொண்டு தானிருக்கிறது
சிலுக்கு

13

கட்சியில் இருந்தபோது
தேனொழுக கூப்பிடுவார்கள்
செங்கொடி அப்...பூ....
விலகி வந்த பிறகு சொன்னார்கள்
பெயரில் என்ன இருக்கிறது.

14

அகதிகள்

எல்லைக் கோடுகளால்
துரத்தப்படுபவர்கள்
கைவிடப்பட்டவர்கள்
ஆனால்
பாக்கியவான்களல்ல.

15

அன்னா ஹசாரே

கோட்பாடில்லாத நடைமுறை
காதறுந்த ஊசிக்கு ஒப்பானது
கவைக்கும் உதவாது

16

சிவகாசி பட்டாசும் தீபாவளி புஸ்வாணமும்

பிஞ்சுக் கரங்களில்
நஞ்சை தடவினோம்.
தேசமே
கொண்டாட்டமாக எரிந்தது.

17

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்

கொழு கொம்பை
தேடியபோது
பற்றிக்கொள்ள கிடைத்த
சிறு கோடு.

18

இந்த தேசம் என்னதில்ல.
சொன்னதுக்கே கோவப்பட்டியே
முதல்ல இந்த தேசம்
உன்னதில்லடா.

19

கொஞ்சம் மேல வந்ததும்
சேரிப்பக்கம் வேணாமின்னு
ஊருபக்கம் ஒதுங்கிட்டான்.
இன்ன வரைக்கும்
ஒதுங்கியே கிடக்குறான்.

20

எல்லோரும் சரி சமமாம்
செருப்பாலடி
பாப்பாபட்டிய கீரிப்பட்டிய
ஒரு தரம் நெனச்சி.

21

கடவுள்களை அகற்றிவிட்டு
அந்த இடத்தில்
மனிதர்களை வைத்தோம்
முதன்முதலாய் பயம் வந்தது.

22

அருவி கான் அழகு

மலை முகட்டின்
ஏதோ ஒரு பிளவிலிருந்து
வெளிப்படும் நீர்.
சிற்றோடையாய் பயணித்து
எங்கெங்கோ முட்டி மோதி சிதறி
பின் ஒன்று சேர்ந்து
சின்னதொரு ஓடையாக பரிணமிக்கும்.
மழைச்சரிவின்
கீழிருந்து விழும்
சாரல்கள் அனைத்தும்
பனித்தூவலாக
மையம் கொண்ட பின்
பெரியதொரு திட்டாக
நீர் தேங்கும்.
அதனுள் தெரியும்
அழகான
சிறிய பெரிய கூழாங்கற்களும்.
கற் குவியல்களுக்கிடையே
துள்ளி துள்ளி விளையாடும்
குட்டி குட்டியான மீன்களும்.
வாழ்வின்
அந்த கணப்பொழுதில் மட்டும்
சின்னதாய் ஒரு மாயாஜாலம்
வந்து ஒட்டிக்கொள்ளும்.

23

இந்தி..யா...ஆ...ஒளிரு...தாம்...


தின்னியத்துல மலம்
தலித்துக்களோட  வாய் என்ன
இந்தியாவோட கழிப்பிடமா ?
இந்தியா ஒளிர்கிறதாம் !
எவண்டா சொன்னான்
ஒளிர்கிற ஒவ்வொரு மூஞ்சிலயும்
வழிச்சி அடி.
அப்ப தெரியும்
இந்தியா ஒளிருதா ?
இல்ல நாறுதான்னு ?

( கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட தலித்தோட வாயில மலத்த திணிச்ச மே சாதி திமிரின் அடையாளம் - இந்தியாவில் தலித்துகளுக்கெதிராக தினம் தினம் நடந்தேறும் அவல உதாரணம் : தின்னியம் சம்பவம் )

24

உருளைக்கிழங்கின் தோலை சீவிக் கொண்டேயிருக்கும் பெண்

சோகங்களிலும்
துயரமான எமது இருப்பு
உங்களின்
வக்கிரமான அளவுகோல்களின் மூலம்
ஒரு நாளும்
உணரப்படப் போவதில்லை.

( ஜெர்மன் படமொன்றில் ஒரு பெண் தனது அன்றாட வேலையான  உருளைக்கிழங்கின் தோலை சீவிக்கொண்டிருப்பது ஏறக்குறைய 30 நிமிட காட்சியாக வரும். இருப்பு கொள்ளா மனநிலையுடன் பொறுமையிழந்து வெளியேறும் பார்வையாளர்கள். ஆனால் அதே வேலையை தினம் தினம் செய்து வரும் பெண்ணின் நிலை )

நன்றி : வெங்கட் சாமிநாதன் ( கலை, அனுபவம், வெளிப்பாடு )

25















தேன்சிட்டுகளுடன்
உங்களுக்கு
பரிச்சயமுண்டா ?
குச்சிக் கால்களுடன்
தத்தித்தாவும் அழகை
நீங்கள் ரசித்ததுண்டா ?
செடிக்கு நோகாமல்
நான்கு இலைகளை
சுருட்டிக்கொண்டு வாழ்வதை
பார்த்ததுண்டா ?
காற்று உதிர்த்த
ஒவ்வொரு இலையின் மீதும்
அதன் காலடித்தடங்கள்
பதிந்திருப்பதை கண்டதுண்டா ?

26

தலைவாசலின் நுழைவாசலில்

இரத்தம் ஓடினதோ இல்லியோ
உடல் ஒட்டிய பிரதேசங்களில்
கோடுகளாய்
எறும்புகளின் ஊறல்.
பிரேதமாக
ஒடுங்கிக் கிடந்த மனிதன்.
ஈக்களின் சங்கமத்தில்
தின்பண்டமாகவும்...
பார்த்தவரையில்
பரிதாபப்பட்ட உணர்வு.
இன்றைய நிஜங்களில்
நுணுக்கங்கள் இருப்பினும்
ஒப்பீடு இல்லை.

27

மன ஒட்டுதல்

சார்புகள் மறைவு
உதிரிகளும் அதன் வழி
கசப்பே அனுபவமாக
அந்திம காலம்
துளிர்த்த நம்பிக்கையில்
ஆதரவைத் தேடி
துணை நாடும்
இருவேறு கரங்கள்.

28

வித்தியாசமாக செய்கிறோம் என்று விழா நடத்தும் சிலர்

உன்னுடைய வித்தியாசம்
எவரது இருப்பையும்
கேள்விக்குள்ளாக்கவில்லை.
கேள்விக்குள்ளாக்காத எதுவும்
வித்தியாசமாக இருக்கப் போவதில்லை.

(இன்னும் வரும்)

No comments:

Post a Comment