Saturday, 20 January 2018

ஃபிடல்காஸ்ட்ரோ : கம்யூனிசக் கனவு தேசத்தின் தந்தை - வெற்றிக்கடிமை




கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ கடந்த 26.11-2016 –ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலமானார். அப்போது அவருக்கு வயது 90. ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள் உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தியை ஃபிடல் காஸ்ட்ரோவின் தம்பி ரௌல் காஸ்ட்ரோவும் உறுதிப்படுத்தியுள்ளார்

கியூபாவின் பிரான் அருகில் ஒரு கரும்பு தோட்டத்தில், 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் நாள் ஏஞ்சல் காஸ்ட்ரோ லினா தம்பதியருக்கு மகனாகப் பிறந்த அல்ஜாந்திரோ காஸ்ட்ரோ பிறப்பிலேயே ஒரு பெரும் பண்ணையாரின் மகன். சுகபோக வாழ்க்கை தனக்காக காத்திருந்தும், அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடியில் கியூபா சிக்குண்டு கிடப்பதைக் கண்டு மனம் வருந்தினார். ஹவானா பல்கலைகழகத்தில், படித்துக் கொண்டிருந்தபோதே கியூபா மக்களின் விடுதலைக்கு கம்யூனிசம் தான் மிகச்சரியானது என உணர்ந்த ஃபிடல், கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மக்கள் தாங்களாகவே வெகுண்டெழுந்து போரட்டங்களில் குதித்து உள்ள சம்பவங்கள் வரலாற்றின் பல காலகட்டங்களில் நிகழ்ந்து இருந்தாலும், வெற்றிகரமான சமுதாயப் புரட்சிகள் ஒரு சிலவே தோன்றியுள்ளன. ஒரு சமுதாயப் புரட்சி வெற்றியடைய வேண்டுமானால் அதற்கு வெகுமக்களின் ஆதரவு கண்டிப்பாக தேவை

இது மிகவும் தேவையான ஒன்றாக இருந்தாலும் அது மட்டுமே போதுமானதல்ல. ஒரு செம்மையான தலைமை இல்லாமல், ஒரு தெளிவான குறிக்கோள் மற்றும் நடைமுறைத் திட்டம் இல்லாமல் ஒரு புதிய பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை கட்டியெழுப்ப முடியாது.

1952-ல் கியூபாவின் ஆட்சியைப் பிடித்த பாடிஸ்டா ஒரு அமெரிக்கக் கைக்கூலி என்பதையும், கியூபாவில் இருந்துகொண்டு அமெரிக்க நலனுக்காக பாடுபடுகிற ஒரு சந்தர்ப்பவாதி என்பதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக 'குற்றம்சாட்டுகிறேன்' என்ற பத்திரிகையைத் தொடங்கினார் ஃபிடல் காஸ்ட்ரோ. அதைத்தொடர்ந்து பாடிஸ்டா கொடுங்கோலாட்சியை முற்றிலுமாக வீழ்த்த ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் செயல்பட்ட ஜூலை 26 இயக்கம் அறைகூவல் விடுத்தது. அந்த இயக்கம் பெரும்பான்மையான கியூபமக்களின் மீது ஏவப்பட்ட அடக்குமுறையை ஒழிப்பதோடு, அவர்களின் வாழ்வில் அடிப்படையான புரட்சிகரமான மாற்றங்களை கொண்டுவர உறுதி பூண்டது. விவசாயிகளுக்கு நிலங்கள் ; உழைப்பாளர்களுக்கு வாழத் தேவையான கூலி ; அனைவருக்கும் இலவசக்கல்வி ; அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள் எந்த வடிவில் இருந்தாலும், அதை முறியடிக்க தேவையான எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பது என்கிற திட்டவட்டமான முடிவுக்கு வருகிறனர்.

ஃபிடலின் எண்ணம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், பாடிஸ்டாவையும் கியூபாவிலிருந்து அடியோடு துரத்தி அடிக்கவேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தாலும், இது மட்டுமே போதாது கொரில்லா யுத்தமுறைகளையும் கையாளவேண்டும் என்பதை உணர்ந்து அதனை கற்றுக்கொள்வதற்காக மெக்சிகோவுக்கு பயணப்படுகிறார்.

அங்குதான்எங்கெல்லாம் அநீதிகள் தலை விரித்தாடுகிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்என்று முழங்கிய மாவீரன் 'சேகுவேரா' வை சந்திக்கிறார். கியூபாவின் பிரச்னையை அறிந்த 'சே', 'நானும் உங்களோடு கியூபா வருகிறேன்' என்று சொல்கிறார். கியூபாவின் விடுதலைக்காக ஃபிடல், சே என்ற இரண்டு மாபெரும் சக்திகள் இணைந்து அடர்ந்த வனப்பகுதியான சியாரா மேஸ்த்ரா காடுகளில் இளைஞர்களையும், விவசாயிகளையும் ஒன்று திரட்டி கடுமையான போர் பயிற்சிகளை வழங்கி, அசாத்திய திறன் கொண்ட கொரில்லா யுத்தப்படை வீரர்களாக அவர்களை தயார் செய்கிறார்கள். 1959-ம் ஆண்டு 9,000 கொரில்லா யுத்தவீரர்கள் ஹவானா வழியாக ஊடுருவி பாடிஸ்டா ராணுவவீரர்களுடன் யுத்தம் புரிந்தபோது, 'இனியும் இவர்களோடு சண்டையிட்டு நம்மால் தப்பிக்க இயலாது' என நினைத்த பாடிஸ்டா கியூபாவை விட்டு தப்பித்து ஓடுகிறான். இந்த யுத்தத்தின் மூலம் அமெரிக்க காலனி ஆட்சிமுறை கியூபாவில் முடிவுக்கு வருகிறது. கியூபாவின் அதிபராக ஃபிடல் காஸ்ட்ரோ ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார். 'சிறந்த தலைவன் ஃபிடல் என்றால், ஆகச்சிறந்த தளபதி சே' என்று உலக அளவில் இன்றும் மதிப்பிடப் படுகிறார்கள்.

1953- ஆம் ஆண்டு சாண்டியா கோடி கியூபாவிலுள்ள மான்கடா படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்றதற்காக காஸ்ட்ரோ மீது அன்றைய கொடுங்கோலாட்சி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக 76 நாட்கள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டு, பின்னர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டபோது ஃபிடல் காஸ்ட்ரோ நீதிபதியின் நிகழ்ந்தியவரலாறு என்னை விடுதலை செய்யும்என்கிற சுமார் நூறு பக்கங்களுக்கு மேல் நீளும் நான்கு மணிநேர வரலாற்று சிறப்புமிக்க உரையின் துவக்கம் இப்படி இருந்தது.

நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்வதற்கு முன், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் அவன் எத்தனை காலம் வேலை இல்லாமல் இருந்தான் எனக் கேட்டதுண்டா? 'உனக்கு எத்தனைக் குழந்தைகள்? வாரத்தில் எத்தனை நாட்கள் உனது குடும்பத்தினர் உணவு உண்பீர்கள்? எத்தனை நாட்கள் பட்டினி கிடந்தீர்கள்?' என்றெல்லாம் அவனிடம் கேட்டதுண்டா? அவனின் சூழ்நிலை பற்றியாவது விசாரித்ததுண்டா? இவைகளைப் பற்றி எதுவும் அறியாமல், அவனைச் சிறையில் தள்ளிவிடுகிறீர்கள். ஆனால், கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளை அடிப்பவர்களையும், மக்களின் உரிமைகளைச் சுரண்டுபவர்களையும் ஒருநாள் கூட சிறையில் தள்ளமாட்டீர்கள். இதுதான் உங்கள் சட்டம். நீங்கள் என்னை தண்டிக்கலாம். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில், வரலாறு என்னை விடுதலை செய்யும் !”

கியூபா மக்களின் மகத்தான தலைவனான ஃபிடல் காஸ்ட்ரோவை சாகடித்து விட்டால் கியூபாவின் ஆன்மாவை அடக்கிவிடலாம் என்ற கொடூர எண்ணத்துடன் அமெரிக்கா ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்வதற்கும், அவரது உடலை ஊனமாக்குவதற்கும் ஏறக்குறைய 638 வழிமுறைகளை கையாண்டு பார்த்து தோல்விச் சகதியில் விழுந்தது. இதை மையப்படுத்தி 638 வழிகள் என்கிற ஆவணப்படமே கூட வெளிவந்தது. ஃபிடல் காஸ்ட்ரோ பிடிக்கும் சுருட்டுக்குள் வெடிவைத்து அவர் முகத்தை சின்னாபின்னமாக்கக் கூட ஒரு முயற்சி நடந்ததாக கூறுவதுண்டு. ஆனால் அதுவும் பலிக்கவில்லை.

அத்துடன் நில்லாமல் வேறு பல யுக்திகளையும் அமெரிக்கா பரீட்சித்து பார்த்தும் ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான கியூபாவை அசைத்துப் பார்க்க முடியவில்லை. கியூபா மீது அமெரிக்கா விதித்த பல்வேறு பொருளாதாரத் தடைகள், சதிகள் யாவற்றையும் மீறி வளர்ச்சிப்பாதையில் அது நடைபோடவே செய்தது. உலகில் மக்களுக்கான மிகச்சிறந்த பொதுமருத்துவ வசதிகள் கிடைக்கும் நாடுகளில் கியூபா முதன்மையானது. நாட்டின் மொத்த வருமானத்தில் குழந்தைகள் நலம், கல்வி ஆகியவற்றுக்கு அதிகமாக பணம் ஒதுக்கப்படுகிறது. மனிதவளக் குறியீட்டில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் அந்நாடு இருக்கிறது. கியூபா அமெரிக்காவின் காலில் தைத்த முள்ளாக உலக வரைபடத்தில் இருக்கும். அந்த நம்பிக்கை தேசத்தின் நாயகன் தான் ஃபிடல் காஸ்ட்ரோ.

யாருக்கும் இல்லாத ஒரு பெருமை ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு உண்டு. உலகின் மேற்குப் பாதியில் முதன்முதலாக ஒரு கம்யூனிஸ தேசத்தை உருவாக்கியவர் அவர். கியூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும்.

சோவியத் யூனியனே சிதறிப்போன பிறகும், இன்று வரை கியூபா ஒரு கம்யூனிச தேசமாக உயிர்த்திருப்பதற்கும், இந்த வினாடிவரை அமெரிக்காவால் அசைத்துப் பார்க்கமுடியாத இரும்புக் கோட்டையாகத் திகழ்வதற்கும் ஒரே காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ என்கிற புரட்சிகர மனிதன் தான்.

தோழர் ஃபிடல் காஸ்ட்ரோவின் நினைவுகளுடன் நமது செவ்வஞ்சலியை சமர்ப்பிக்கிறோம். 

No comments:

Post a Comment