Saturday, 20 January 2018

சினிமா : மனித குலத்தின் மாபெறும் கலை வடிவம் ( பகுதி - 1 ) - ஆத்மாநாம்




திரைப்படம் தோன்றி நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன என்று ஓவ்வொருவரும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் திரைப்படத்திற்கு நூறு வயதுதான் என்று நம்புவது கடினமாக உள்ளதுஉலகில் உள்ள எந்த ஒரு கலையைப்பற்றி பேச முற்பட்டாலும் அதன் தோற்றநிலை பற்றிய கருத்தாங்களுக்கு பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கும். ஆனால் திரைப்படம் என்கிற கலைச்சாதனத்தை பற்றிய வரையரைகளுக்கு நாம் அவ்வளவு தூரம் செல்ல வேண்டியதில்லை. ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் சென்று பார்த்தாலே போதும். அதன் தோற்றுவாய்க்கான காரணங்கள், படிநிலை ரீதியான வளர்ச்சி மற்றும் அதன் தொடர் ஓட்டத்தில் நேர்ந்த வழிவிலகல்களும், அதற்கான காரணங்களும் என அனைத்தையும் கண்டறியலாம்.

திரைப்படம் என்னும் சாதனம் இளமையானதா? இல்லை முதுமையானதா? ஒரு நூறு ஆண்டுகளுக்குள் அது தன் நீண்ட பயணத்தை முடித்துவிட்டதாஅதில் முதுமையின் அறிகுறிகள் ஏதும் தோன்றவில்லையா? முதல் நூற்றாண்டே அதன் கடைசி நூற்றாண்டாகி விடுமா ? என்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டு நாம் மேலே செல்லலாம்.

பண்டைய காலத்து மரபுக்கலைகளில் எதுவும் திரைப்படக்கலையைப் போல் ஒரு கருவியில் இருந்து தோன்றியதில்லை. அதனால் தான் திரைப்படம் என்பது உண்மையில் ஒரு கலைதானா? என்ற கேள்வி அது தோன்றியதிலிருந்தே எழுப்பப்பட்டு வருகிறது. நமது கண்களுக்கு இயற்கையாய் அமைந்த பண்பைபார்வை நிலைப்பு தத்துவமாகவரையறுத்ததிலிருந்து தொடங்கி கண்டுபிடிக்கப்பட்ட எண்ணற்ற கருவிகள் யாவும் சினிமா என்னும் கலைவடிவம் அதன் கருவிலிருந்தே எந்திரத்துடன் கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமில்லாத உறவை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

பெருஞ்செல்வந்தர்கள் மற்றும் விஞ்ஞானிகள் என்னும் கூட்டணியில் உருவான சினிமா கண்டுபிடிப்புகள் யாவும் வெறும் கனவுகளாக மட்டும் இருக்கவில்லைவெகுமக்களின் ஆதரவு என்பது அதன் பிறப்புரிமையாக இருந்தது. அதற்கு பொதுமக்கள் அதுவும் குறிப்பாக நடுத்தட்டு வகுப்பினர் அளித்த அமோக வரவேற்பினால் குறுகிய காலத்திலேயே அதன் வியாபாரத்தன்மை இனம் காணப்பட்டு பின்னாளில் பெரும் பணம்கொழிக்கும், பணம் ஈட்டும் தொழிலாக அது மாறிப்போனது. திரைப்படம் கொண்டிருக்கும் பிரதான இந்த ஒற்றை நோக்கத்தையும் மீறி பல உயிர்ப்புமிக்க படைப்பாளிகள் ஆரம்பம் முதற்கொண்டே இயங்கி வந்திருக்கின்றனர்சார்லி சாப்ளின் தொடங்கி சொலானஸ் வரை இதற்கான நிரூபணங்கள் சினிமா வரலாற்றில் உள்ளன.

சினிமா தொடக்கத்திலிருந்தே பணம் திரட்டுவதற்கும், படைப்பாற்றலுக்கும் இடையில் அலைந்து கொண்டுதான் வந்திருக்கிறது. திரைப்படத்தின் மூலம் பணம் பெருக்க எண்ணுபவர்களுக்கும், தமது கலைத்திறனை காண்பிக்க முயல்பவர்களுக்கும் இடையே ஒரு போட்டியுணர்வு இன்றுவரை இருந்த வண்ணமே உள்ளது. மற்ற கலைகள் யாவும் வரவேற்பு கூடங்களிலும், அந்தப்புரங்களிலும் குலாவிக்கொண்டிருந்தபோது திரைப்படம் மட்டுமே மக்களிடம் வேரூன்றியதை அதன் சிறப்பான தன்மை என்று கூறலாம்.

ஆரம்பத்தில் திரைப்படம் வெறும் இயல்பு நிலைகளைத்தான் படம் பிடித்தது. அதாவது லூமியர் தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வெளியேறுவதையும், லாசியூட்டோ நிலையத்திலிருந்து ஒரு ரயிலின் வருகையையும் அது காண்பித்தது.



அப்புறம் அது மெல்ல ஒரு கதையையும் கூறத்தொடங்கியது. ’தோட்டத்து தண்ணீர் விடுகிற தோட்டக்காரன்என்ற சிறிய படத்திலிருந்து இதனை பார்க்கலாம். சினிமாவில் படைப்பாற்றல் என்பது இந்த அம்சத்திலிருந்து தான் தோன்றுகிறது. பிறகு அது வரலாற்று புதினங்களை மையமாக கொண்டு நீண்ட கதைகளை கூறத் தொடங்கியது. புராண வகைக் கதைகள், டார்ஜான்கதைகள், வெஸ்டர்ன்கதைகள், ஜேம்ஸ்பாண்ட் பாணி துப்பறியும்கதைகள் என்று பல கதைகளாக சினிமா உயிர்பெறத் துவங்கியது. இதில் முக்கியமானது என்னவென்றால் இப்படித் தோன்றிய திரைப்படம் தனது முதல் 50 ஆண்டுகள் வரை பேசாமலேயே இருந்து விட்டது. எவ்வளவு நீண்ட குழந்தை பருவம் பாருங்கள் !






இந்த மௌனப்படக்காலத்தில் தான் சாப்ளின் வருகிறார். இந்த வறண்ட உலகிற்கு நம்பிக்கையையும், சிரிப்பையும் அள்ளிக்கொண்டு வந்து தருகிறார். சினிமாவில் நம்மையும், நம் குழந்தைகளையும் சிரிக்க வைத்தது மட்டுமல்லாமல், நகைச்சுவையை ஒரு சமூக விமர்சனமாகவும் மாற்றியமைத்து விடுகிறார். சாப்ளின் நகைச்சுவையை இன்றைய காமெடியோடு போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது. அவரது நகைச்சுவை சமூகம் பற்றிய சீரிய விமர்சனம் கொண்டதுஇன்றைய காமெடி வெறும் வெட்டிக் கூச்சல் மட்டுமே. சாப்ளின் அன்று பேசாமலேயே செய்ததை இன்று எவ்வளவு பேசியும் செய்ய முடியவில்லை என்பது தான் யதார்த்தம்.



அடுத்து சினிமா பேசத் தொடங்குகிறது. சாப்ளினும் பேசுகிறார். ’தி கிரெட் டிக்டேட்டர்என்கிற படம் தான் அவரைப் பேச வைத்தது. ஹிட்லரின் வளர்ச்சியினால் ஏற்படக்கூடிய அபாயங்களை சுட்டிக்காட்டி உலகிற்கு எச்சரிக்கை விடுக்கிறார். அந்தப் படத்தில் சாப்ளின் ஏற்றிருந்த இரு வேடங்களில் ஒன்று சர்வாதிகாரி ஹிட்லரை பிரதிநிதித்துவப் படுத்தக் கூடியது. சர்வாதிகாரி ஹென்கெல்லாகவும், யூத இனத்தைச் சேர்ந்த தையற்காரனாகவும் இருவேடங்களில் நடித்து ஹிட்லரையும் அவனது பாசிச கொள்கைகளையும் ஏளனம் செய்தார். அதில் சாப்ளின் நிகழ்த்தும் உரை  கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாசிப்பதுபோல் இருப்பதாக கூறுபவர்களும் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு சில வசனங்களை பாருங்கள். ‘ போர் வீரர்களே! அடிமையாவதற்கு போரிடாதீர்கள். சுதந்திரத்திற்காக போரிடுங்கள். தேவனின் அரசாங்கம் மனிதனுக்குள் இருப்பதாக பைபிளின் 17-வது அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கிறது. உண்மையில் தேவனின் அரசாங்கம் ஒரு மனிதனுக்குள் மட்டும் இல்லை. அது எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கிறது. உங்களுக்குள்ளும் அது இருக்கிறது. நாம் எல்லோரும் ஒரு புதிய உலகத்திற்காக போராடுவோம். இளைஞர்களுக்கு எதிகாலத்தையும், மனிதர்களுக்கு வேலை வாய்ப்பையும், முதியவர்களுக்கு பாதுகாப்பையும் கொடுக்கும் ஓர் உலகத்திற்காக போராடுவோம்.” அந்தப்படத்தில் ஹிட்லர் வேடத்தில் சாப்ளின் இதனைப் பேசுவார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை ஹிட்லர் வாசிப்பானா? யோசித்துப் பாருங்கள். அதுதான் சார்லி சாப்ளின். உலகையே தனது நகைச்சுவையால் கட்டிப்போட்ட மாமேதை.

அதற்கு முன்னமே ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி மூலம் ஜார் ஆட்சி வீழ்த்தப்பட்டு கம்யூனிஸ்ட் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. ’கலை இலக்கியம் யாவும் மக்களுக்கேஎன்ற கொள்கை முன்வைக்கப்படுகிறதுஅதனைத் தொடர்ந்து மகத்தான ரஷ்யக் கலைஞர்கள் பலரும் சினிமாவை மனித குலத்திற்கான ஆக்க சக்தியாகக் கொண்டு தொழிலாளர் வர்க்க படங்களை புரட்சிகர கண்ணோட்டத்துடன் உருவாக்கத் தொடங்குகிறார்கள். அதன்மூலம் 1924-ல் சினிமாக்கலைக்கு இலக்கணம் வகுத்தவர் என்று சொல்லக்கூடிய செர்கய் ஐசன்ஸ்டைனின்ஸ்ட்ரைக்வெளிவருகிறதுமுற்றிலும் மாறுபட்ட வகையில் தொகுத்து தயாரிக்கப்பட்ட படம் இது. ஓர் ஆலையில் நடைபெறும் வேலைநிறுத்தம் தான்  கதையின் கரு. தொழிலாளர்கள் அனைவருமே கதாநாயகர்கள். அவர்களின் ஒற்றுமை, மன உறுதி, சந்திக்கும் இடர்பாடுகள் இவைகளை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது.

அடுத்து ஐசன்ஸ்டைன் தயாரித்தளித்தபோர்க்கப்பல் பொடெம்கின்இன்றுவரை சினிமா வரலாற்றில் முக்கியமானதொரு படமாகவும், பல்வேறு கல்லூரிகளில் பாடமாகவும் இருந்து வருகிறது. இந்தப்படத்தில்தான் எடிட்டிங் மூலம் காட்சியின் சிறப்பை உணரவைக்கும்மோண்டாஜ்(MONTAGE) என்னும் புதிய உத்தியை ஐசன்ஸ்டன் அறிமுகப்படுத்துகிறார்அதாவது இரண்டு வெவ்வேறான காட்சிகளை ஒன்றோடொன்று  இணைக்கும்போது அதனுடன் தொடர்புடையதாக தோன்றும் மூண்றாவது காட்சி ஒரு புதிய அர்த்தத்தை கொடுப்பதாக இருக்கும். இந்த மோண்டாஜ் படத்தொகுப்பை ஐசன்ஸ்டன் ஐந்து பிரிவுகளாக விளக்கிச் செல்கிறார்ஓர் இசை வடிவத்தைப் போன்று ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு இட்டுச் செல்வதாக அந்த படத்தொகுப்பு முறை இருந்தது. பின்னாட்களில் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ஜாம்பவான்களால் இந்த உத்தி பரவலாக பயன்படுத்தப்பட்டு, இன்று படத்தொகுப்பின் ஓரங்கமாக மாறிவிட்டது.




 





போர்க்கப்பல் பொட்டம்கின்கதை இதுதான். போர்க்கப்பலில் சில மாலுமிகள் புரட்சி செய்கிறார்கள். புரட்சி செய்யும் அவர்களுக்கு நகரமே உதவுகிறது. புரட்சியை அடக்கி ஒடுக்க ராணுவத்தினர் வருகிறார்கள். ராணுவத்தினர் புரட்சிக்காரர்களையும், அவர்களுக்கு உதவி செய்யும் நகர மக்களையும் தாக்குகிறார்கள். ஒடெஸ்ஸா நகர படிக்கட்டுகளில் அவர்களின் உடல்களை சல்லடைக் கண்களாக துளைத்தெடுக்கிறார்கள். முரட்டுத்தனம் மிகுந்த கொடூரத் தாக்குதலால் புரட்சி ஒடுக்கப்படுகிறது. ஆனால் மாலுமிகள் போர்க்கப்பல் பொட்டம்கினை கைப்பற்றிச் செல்கிறார்கள். அவர்களை தடுக்க அனுப்பப்படும் ராணுவத்தின் ஊழியர்கள் பொட்டம்கின் கப்பல் மாலுமிகளின் தீரமிக்க எதிர்ப்புணர்ச்சியின்பால் ஈர்க்கப்பட்டு அவர்களுடன் சேர்ந்துகொள்ள ஜார் மன்னனின் பீரங்கிகள் தலைதாழ்ந்து அவர்களுக்கு வழிவிடுகிறதுபோர்க்கப்பல் பொட்டம்கின் சுதந்திரமாக கடலில் செல்கிறது.




இதன்பின்னர் சினிமாவை மிகப்பெறும் பிரச்சார சாதனமாக பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்து ஜெர்மனியிலும் இதற்கான அடித்தளங்கள் இடப்பட்டன. ஹிட்லர் அதன் முழுவீச்சை இனம் கண்டு தனது பாசிச கொளகைகளுக்கு சினிமாவை தீவிரமாக பயன்படுத்தத் தொடங்கினான்அவனது பிரச்சாரன ஜோசப் கோயபல்ஸ் சொன்னான். “நமது கட்சிக் கொள்கைகளில் ஊறி வராத எந்தக்கலையும் நமக்குத் தேவையில்லை.” அதன்படியே ஹிட்லர் ஆட்சிசெய்த 1933 முதல் 1945 முடிய ஏறக்குறைய 12 ஆண்டுகால ஜெர்மன் சினிமா ஹிட்லரின் கைப்பாவையாகவும், நாஜிகளின் புகழ்பாடும் வெறும் விளம்பரக் கருவியாகவே இறுகிப்போய் கிடந்ததுபின்னர் ஹிட்லர் வீழ்ந்ததோடு ஜெர்மனியின் தனிநபர் பிரச்சார சினிமாவும் வீழ்ந்தது.


(தொடரும்)




No comments:

Post a Comment