Sunday, 21 January 2018

இப்படியும் ஒரு தோழர்


பெருங்கூட்டத்திலிருந்து
தனித்து விடப்பட்டதொரு காலம்.
அப்போதெல்லாம்
அந்தத் தோழர் குறித்து எங்கள் வீட்டில்
அநேக எதிர்பார்ப்புகள்.
கட்சி ஏற்படுத்திய
எதிர் முதுகு காயங்களுக்கு மாற்றான
வார்த்தைகளை வடிவமைத்ததில்
அவர் மீதான பிடிப்பு அதிகமே.
எல்லாம் கேட்பார்.
எல்லோரையும் கேட்பார்.
அதில் சில ஆறுதல்.
மனம் குமைந்து வீட்டில்
சண்டை வரும் நாட்களில் கூட
தோழரிடம் முறையிடப் போவதான
நம்பிக்கை.
இவ்வளவும்            
வீட்டுக்கு அவர் வராமலேயே
வெளியிலிருந்து கொண்ட தொடர்புகள்.
ஆற அமர
இன்று யோசித்துப் பார்க்கும்போது
ஒன்று உறுதியாய் தெரிகிறது.
அந்தத் தோழர்
என் வீட்டுக்குத் தான் 
வரவில்லையே தவிர
பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கிறார்.
இன்னும் 
எதிர் வீட்டுக்கு
அடுத்தடுத்த தெருவுக்கு
பலமுறை எங்கள் ஊருக்கு.
கண்ணுக்கெட்டிய தூரத்தில் உள்ள
அலுவலகத்துக்கு என அநேக முறை.
அவரின் 
இடைக்கால விசாரிப்புகளை
தவிர்க்கவியலாமல் நடித்தார் என
சொல்ல முடியவில்லை தான்.
ஆனால் 
அதற்கான அத்தனை தடயங்களையும்
விட்டுச் சென்றுள்ளார்
அந்தத் தோழர். 


குறிப்பு :

இந்த பதிவுக்கு ’கக்கூஸ் கிறுக்கலும் கம்யூனிஸ்ட்  அரசியலும்’ என்று தான் தலைப்பிட்டேன். ஆனால் நானே (நான் குறிப்பிட்ட சில ஆண்டு காலம் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவன். பொதுவுடமை தத்துவத்தை இன்றைக்கும் என்றைக்கும் ஆராதிப்பவன் ; ஆதரிப்பவன்) அப்படி எழுதுவது என்பது சரியான ஒன்றல்ல என்பதால் இதற்கான தலைப்பு ‘இப்படியும் ஒரு தோழர்’.

இதற்கு ஏன் இப்படி ஒரு விளக்கம் என்றால் இடதுசாரி இயக்கத்தில் ஒரு உறுப்பினனாக நான் இணைந்திருந்த காலத்தில் எதிர்கொண்ட அனுபவங்களை அவசியம் கருதி பதிவு செய்யவிருப்பதால் இந்த கிறுக்கலும் குறிப்பும்  அதற்கான Lead அல்லது Trailer அல்லது வரப்போகும் யானைக்கான மணியோசை.

No comments:

Post a Comment

தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்

 நா.மம்மது  உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...