Friday, 28 February 2025

இவ்வாறான நாட்களில்...

 கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்

 ஆங்கிலம் வழி தமிழில் : ராஜகோபால்




இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவரான கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் கொலம்பியாவிலுள்ள அரக்கான்டா நகரில் 1928-ஆம் ஆண்டு பிறந்தார். இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1982-ஆம் ஆண்டு பெற்றார். இவருடைய பிரசித்தி பெற்ற சிறுகதைத் தொகுதிகளின் பெயர்கள் No one writes to the Colonel and Other Stories (1968), Leaf Storm and Other Stories (1972), Innocent Erendira and Other Stories (1978). இங்கு பிரசுரமாகியுள் இச்சிறுகதைகள் Collected Storeis of Gabriel Garcia Marquez என்னுன் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இக்கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் Gregory Rabassa மற்றும் J.S. Bernstein.


திங்கட்கிழமை மழையோ வெயிலோ இல்லாமல் விடிந்தது. அதிகாலையிலேயே விழித்தெழும், பட்டம் எதுவும் பெற்றிராத பல் மருத்துவனான அவ்ரலினோ எஸ்கோபார் அவனுடைய அலுவலகத்தை ஆறு மணிக்குத் திறந்தான். பிளாஸ்டிக் மோல்ட் சட்டகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில செயற்கைப் பற்களைக் கண்ணாடிக் குடுவையிலிருந்து எடுத்து மேஜை மேல் பரப்பினான். கைக்கு அடக்கமான அந்தக் கருவிகள் அளவு வாரியாக அடுக்கப் பட்டிருந்த விதம் பார்வைக்கு வைக்கப்பட்டது போல் காட்சியளித்தது. எஸ்கோபார் கழுத்து இல்லாத கோடிட்ட சட்டை அணிந்திருந்தான். கழுத்துக்கு அருகிலுள்ள பித்தான் தங்கத்தில் வேயப்பட்டிருந்தது. கால்சராய்களைத் தோள்பட்டைக்கச்சை தாங்கிப் பிடித்திருந்தது. உயரமாகவும் எலும்பும் தோலுமாகவும் இருந்தவனின் பார்வை, சூழலோடு பொருந்தாமல் காது கேளாதவனின் பார்வையை ஒத்திருந்தது.

மேஜையிலிருந்த உபகரணங்களையெல்லாம் ஒழுங்கு செய்த பிறகு, துளையிடும் கருவியை, பல் சிகிச்சை செய்யும் நாற்காலியைப் பார்த்து இழுத்துவிட்டபடி செயற்கைப் பல்லை மெருகேற்றத் தொடங்கினான். அவனைப் பார்த்தபோது அவன் மேற்கொண்டிருக்கும் செயலைப் பற்றி யோசிக்காதவன் போல் காட்சியளித்தான். இருந்தபோதும் துளையிடும் கருவியை, காலால் இயக்கியபடி வேலையைச் சீராகத் தொடர்ந்தான். எட்டு மணி ஆனபோது வேலையைக் கொஞ்சம் நிறுத்தியவன், ஜன்ளலினூடாக வானத்தைப் பார்த்தான். யோசனையில் மூழ்கிய இரண்டு பருந்துகள் பக்கத்து வீட்டுக் கூரை முகட்டில் சிறகுகளை உலர்த்திக்கொண்டிருந்தன. மதியச் சாப்பாட்டுக்கு முன் மீண்டும் மழை பெய்யலாம் என்று யோசித்தவன் மீண்டும் வேலையில் ஈடுபடத் துவங்கினான். அவனுடைய சிந்தனையை அவனுடைய பதினோரு வயது மகனின் குரல் கலைத்தது.

"அப்பா"

"என்ன?",

"மேயர், அவருடைய பல்லுக்கு நீங்கள் சிகிச்சை அளிப்பீர்களா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறார்."

"நான் இங்கில்லை என்று சொல்.''

ஒரு தங்கப் பல்லை மெருகேற்றத் தொடங்கினான். கண்களைப் பாதி மூடியவாறு அதை கைக்கெட்டும் தூரத்தில் நிறுத்தி ஆராய்ந்தான். சின்ன வரவேற்பரையிலிருந்து அவனுடைய மகன் மீண்டும் கூச்சலிட்டான்.

 

"நீங்கள் இருப்பது அவருக்குத் தெரியுமாம். உங்களுடைய குரலைக்கூட கேட்க முடிகிறதாம்."

மருத்துவன் பல்லைத் தொடர்ந்து ஆராய்ந்துகொண்டிருந்தான். வேலையை முடித்து அதை மேஜையில் வைத்தபோது சொன்னான்: "அப்படியா மிகவும் நல்லது.'' துளையிடும் கருவியை மீண்டும் இயக்கினான். அட்டைப் பெட்டியிலிருந்து சில மரத்துண்டுகளை எடுத்து வெளியில் வைத்தான். தொடர்ச்சியாக வேலை இருக்கும் சமயத்தில் உபகரணங்களை அந்தப் பெட்டியில் வைப்பது அவனுடைய வழக்கம். தங்கத்தை மீண்டும் மெருகேற்றத் தொடங்கினான்.

"அப்பா"

"என்ன?"

அவனுடைய முகபாவத்தை அப்போதும் அவன் மாற்றிக்கொள்ளவில்லை.

'அவருடைய பல்லுக்குச் சிகிச்சை அளிக்க மறுத்தால் உங்களைச் சுட்டுக்கொல்ல வேண்டியிருக்கும் என்று சொல்கிறார்."

ஒரு கணம் எவ்விதப் பரபரப்பும் இல்லாத அசாத்திய மெளனம் நிலவியது. இயங்கிக்கொண்டிருந்த கருவியை நிறுத்தினான். நாற்காலியிலிருந்து கருவியை எட்டத் தள்ளிவைத்துவிட்டு, மேஜையின் கீழ் இழுப்பறையை முழுவதுமாகத் திறந்தான். அங்கு ஒரு துப்பாக்கி இருந்தது.

"சரி, வந்து சுட்டுக் கொல்லலாம் என்று சொல்.'

நாற்காலியை உருட்டிக் கதவிற்கு அருகில் நிறுத்தினான். இழுப்பறையின் ஓரத்தில் அவனுடைய கரம் ஓய்வெடுத்தது. மேயர் கதவருகில் தோன்றினார். முகத்தின் இடப்புறத்தைச் சவரம் செய்திருந்தார். மறுபுறமோ ஐந்து நாட்கள் வளர்ந்த தாடியோடு வீங்கியிருந்தது. சோர்வுற்ற அவருடைய கண்களில் பல இரவுகளாக அனுபவித்த வேதனையை மருத்துவன் பார்த்தான். விரல் நுனியால் இழுப்பறையை மூடியவன் அமைதியாகச் சொன்னான்:

""உட்காருங்கள். ''

"காலை வணக்கம்" என்றார் மேயர்.

"வணக்கம்" என்றான் மருத்துவன்.

கருவிகள் கொதித்துக்கொண்டிருந்தபோது நாற்காலியின் தலைமாட்டில் அவருடைய தலையைச் சரித்தவர் சற்று சௌகரியமாக உணர்ந்தார். சுவாசம் குளிர்ந்தோடிக் கிடந்தது. பழைய மர நாற்காலி, துளையிடும் கருவி, வேதியியல் பொருட்கள் நிரம்பிய கண்ணாடிக் குவளைகள். ஒரு எளிய மருத்துவ அறை அது. இருக்கைக்கு எதிரில் இருந்த ஜன்னலில் ஒரு பெரிய திரைச்சீலை தொங்கிக் கொண்டிருந்தது. மருத்துவனின் அணுகுமுறையைப் பார்த்த மேயர், நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்துகொண்டார். மெதுவாக வாயைத் திறந்தார். அவ்ரலினோ எஸ்கோபார் விளக்கை நோக்கி அவருடைய தலையைத் திருப்பினான். பாதிக்கப்பட்டிருந்த பல்லை ஆராய்ந்தவன் மேயரின் தாடையை விரல்களால் அழுத்தி மூடினான்.

"மயக்க மருந்து இல்லாமல்தான் சிகிச்சை மேற்கொள்ளப்படும்என்றான்.

"ஏன்"

"ஏன் என்றால் உங்களுக்குச் சீழ் கட்டியிருக்கிறது,"

மேயர் மருத்துவனின் கண்களை உற்றுப் பார்த்தார். "சரி" என்று கூறி புன்னகைக்க முயன்றார். மருத்துவன் சிரிக்கவில்லை. சுத்திகரிக்கப்பட்ட கருவிகளை அவன் பணி மேஜைக்கு எடுத்து வந்தான். அவற்றைத் தண்ணீரிலிருந்து, குளிர்ந்த ஒரு ஜோடி இடுக்கிகளைக் கொண்டு வெளியில் எடுத்தான். யாவும் எவ்விதப் பரபரப்பும் இல்லாமல் நிதானமாக நிகழ்ந்தன. ஷூவின் முனையால் நிலக்கூம்பைத் தள்ளிவிட்டவன், கைகளைக் கழுவுவதற்காக தண்ணீர்த் தொட்டியைப் பார்த்து நடந்தான், யாவற்றையும் மேயரைப் பார்க்காமல் மருத்துவன் நிகழ்த்தினான். ஆனால் மேயரோ அவன் மேலிருந்த கண்களைச் சிறிதும் அகற்றவில்லை.

அது ஒரு கீழ்வரிசை கடைவாய்ப் பல், கால்களை அகற்றியபடி நின்றுகொண்டிருந்த பல் மருத்துவன் பல்லைச் சூடான இடுக்கியால் பிடித்தான். நாற்காலியின் கைகளைப் பற்றியபடி மேயர் பாதத்தில் எல்லா பலத்தையும் தாங்கியபோது குளிர்ந்த வெறுமையொன்றைக் கல்லீரலில் உணர்ந்தார். ஆனால் சிறு சப்தத்தைக்கூட அவர் எழுப்பவில்லை. மருத்துவன் மணிக்கட்டை மட்டுமே அசைத்தான். எந்தவிதக் கோபமும் இல்லாமல் உறுதியான, கசப்பேறிய, மென்மையோடிய குரலில் சொன்னான்: "இப்போது எங்களுடைய இருபது மனிதர்களின் மரணத்திற்கு நீங்கள் விலை கொடுப்பீர்கள். ''

தாடையில் எலும்புகள் நொறுங்குவதை மேயர் உணர்ந்தார். கண்கள் கண்ணீரால் நிறைந்து வழிந்தன. பிறகு கண்ணீரின் ஊடாக அவருடைய வேதனையோடு தொடர்பில்லாமல் காட்சியளித்த அந்தப் பல்லை அவர் பார்த்தார். கடந்த ஐந்து இரவுகளாக அது அளித்த சித்ரவதையை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. வியர்த்து விறுவிறுத்து மூச்சுத் திணறிய அவர், சட்டைக் கையைத் தளர்த்தி விட்டுக்கொண்டார். பேண்ட்டில் கைக்குட்டையைத் தேடினார். பல் மருத்துவன் சுத்தமான துணியை அவருக்குக் கொடுத்தான்.

"கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள். ''

மருத்துவன் சொல்லிற்கு மேயர் கீழ்ப்படிந்தார். உடல் நடுங்கியது. மருத்துவன் கை கழுவிக்கொண்டிருந்தபோது, சிதிலமாகிவிட்ட கூரையை, அதில் வீடு கட்டியிருந்த சிலந்தியை, அதன் முட்டைகளை மற்றும் அங்கு இறந்து கிடந்த பூச்சிகளை அவர் கவனித்தார். கைகளைத் துடைத்துக் கொண்டு திரும்பிய மருத்துவன், "போய் ஓய்வெடுங்கள்' என்று சொன்னான். "வாய் கழுவ உப்புத் தண்ணீரைப் பயன் படுத்துங்கள்."

மேயர் எழுந்துகொண்டார். ராணுவ முறையில் வணக்கம் செலுத்திவிட்டு வழக்கம்போல் விடைபெற்றுக்கொண்டார். சட்டைப் பித்தான்களைப் போடாமல் கால்களை அகற்றியபடி கதவை நோக்கி நடக்கத் தொடங்கினார்..

"பில்லை அனுப்பு."

''உங்களுக்கா? அல்லது நகராட்சிக்கா?"

மேயர், மருத்துவமனையைத் திரும்பிப் பார்க்கவில்லை. கதவைச் சாத்தியவர் திரைச்சீலையினூடாகச் சொன்னார்: "எல்லா இழவும் ஒன்றுதான்."

No comments:

Post a Comment

தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்

 நா.மம்மது  உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...