கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்
ஆங்கிலம் வழி தமிழில் : ராஜகோபால்
புனிதர்களின் முன் அவள் மண்டியிட்டாள். முதன்முறையாக, பீடத்தை நெருங்கி பிரகாசமான அன்றலர்ந்த ரோஜாக்களை நான் பறிக்க முயற்சித்து, அம்முயற்சியில் தோற்று அறையில் உலவுவதை நிறுத்தியபோது, அவள் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்ததைக் கவனித்தேன். ஒருவேனை இன்று என்னால் அதைச் சாதிக்க முடியும். ஆனால் அன்று, அந்தக் குட்டி விளக்கு கண் சிமிட்டியது, பரவசத்திலிருந்து விடுபட்ட அவள் தலையுயர்த்தி அம்மூலையைப் பார்த்தாள். அங்குதான் அந்த நாற்காலி கிடந்தது. அவள் நினைத்திருப்பாள்: "மீண்டும் இது காற்றுதான்." அவள் நினைத்தது சரியே. பீடத்தின் அருகில் எதுவோ கிறீச்சிட்டது. தளம் பெயர்ந்தாற்போல் உறைந்த நினைவுகள் நிறைந்த அந்த அறை ஒரு கணம் அதிர்ந்து அடங்கியது. பிறகு. ரோஜாக்களை அடைய பிறிதொரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது எனக்குப் புரிந்தது. காரணம் அவள் விழித்திருந்ததோடு நாற்காலியை உற்றுப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். மேலும் அவளுடைய முகத்தருகே என் கைகள் நகர்வதை அவள் உணர்ந்திருக்க வேண்டும். இப்போது அறையை விட்டு அவள் வெளியேறும் தருணத்திற்காக, மற்றொரு அறைக்குள் நுழைந்து, மாறாத, அளவான ஞாயிற்றுக்கிழமை மதிய தூக்கத்தில் அவள் அமிழ்வதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். பிறகு ரோஜாக்களோடு நான் வெளியேறுவதோடு, அவள் இவ்வறைக்குத் திரும்பி இந்நாற்காலியை உற்றுப் பார்ப்பதற்கு முன், அறைக்குத் திரும்பிவிடுவேன்.
கடந்த ஞாயிறு மிகக் கடினமாகக் கழிந்தது. அவள் மகிழ்ச்சியான மனநிலைக்குத் திரும்ப ஏறக்குறைய இரண்டு மணி நேரம் பிடித்தது. அது மட்டுக்கும் காத்திருந்தேன். சட்டென்று வீட்டில் தனிமை குறைந்ததை உணர்ந்தாள். அவள் கடும் வேதனையால் அலைக்கழிக்கப்பட்டவளைப் போல் அமைதி இழந்ததோடு, ஏதோ யோசனையில் மூழ்கியவளைப் போல் அவள் தோற்றமளித்தாள். பீடத்தில் ரோஜா பூங்கொத்தை விட்டுச் செல்வதற்கு முன் அறைக்குள் பல முறை அவள் சுற்றி வந்துகொண்டே இருந்தாள். தாழ்வாரத்தில் நுழைந்தவள், திடீரென்று திரும்பி அடுத்த அறைக்குள் நுழைந்தாள். அவள் விளக்கைத்தான் தேடுகிறாள் என்று எனக்குத் தெரியும். சற்று நேரம் கழித்து, அவள் கதவைக் கடந்து சென்றபோது கூடத்தின் வெளிச்சத்தில் அவளைப் பார்த்தேன். சிறிய ஜாக்கெட்டும் வெளிர் சிகப்பில் காலுறையும் அணிந்திருந்தாள். அதைப் பார்த்தபோது நாற்பது வருடங்களுக்கு முன் இதே அறையில் என் படுக்கையில் படுத்தவாறு.
''அவர்கள் பல் குச்சிகளைப் போட்டுவிட்டார்கள், உன் கண்கள் ஏன் வெறித்துப் பார்க்கின்றன?" என்று சொன்ன அதே பெண்ணைப் போலவே இவளும் எனக்குத் தோற்றமளித்தாள். இவள் அவளேதான். காலம் நகரவே இல்லை. அந்தத் தொலைதூர ஆகஸ்ட் மாத மதியத்தில் பெண்கள் அவளை அறைக்குள் அழைத்து வந்து சடலத்தைக் காட்டி இப்படிச் சொன்னார்கள்: ”அழுதுவிடு, இவனும் உனக்கு சகோதரன்தான்.” அவளும் மழையில் நன்கு நனைந்தவளைப் போல அதற்குக் கீழ்படிந்து, சுவற்றில் சாய்ந்து அழுதாள்.
மூன்று நான்கு ஞாயிற்றுக்கிழமைகளாகவே ரோஜாக்களை நான் எடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அவளோ கடந்த இருபது வருடத்தில் அவ்வீட்டில் நான் ஒருபோதும் பார்த்திராத பயம் கலந்த சுறுசுறுப்போடு பீடத்திலிருந்த ரோஜாக்களைக் கண்காணித்துக்கொண்டு இருந்தாள். கடந்த ஞாயிற்றுக்கிழமை விளக்கு வாங்குவதற்காக அவள் வெளியில் சென்ற போது, நான் நல்ல ரோஜாக்களை மட்டும் தேர்ந்தெடுத்துச் சிறந்த ரோஜாப் பூங்கொத்தொன்றை உருவாக்க முயன்றேன். சட்டென்று என் ஆசையைப் பூர்த்தி செய்துகொண்டேன். ஆனால் நான் நாற்காலிக்குத் திரும்ப உத்தேசித்த போது தாழ்வாரத்தில் அவளுடைய காலடிகளைச் செவிமடுத்தேன். பீடத்திலிருந்த ரோஜாக்களை வேகமாகத் திருத்தி அமைத்தேன். விளக்கை உயர்த்திப் பிடித்தபடி வாயிற்படியில் அவள் தோன்றினாள்.
சிறிய கருப்பு நிற ஜாக்கெட்டும், வெளிர் சிகப்பு நிற காலுறையும் அவள் அணிந்திருந்தாள். ஆனால் அவளுடைய முகத்தில் ஏதோவொன்று பிரகாசித்தது. இருபது வருடங்களாகத் தோட்டத்தில் ரோஜாச் செடிகள் வளர்த்தவளைப் போல் அவள் தோற்றமளிக்கவில்லை. மாறாக ஆகஸ்ட் மாத மதியத்தில் அழைத்து வரப்பட்ட அந்தக் குழந்தையைப் போல் அவள் தோற்றமளித்தாள். ஒரு விளக்கோடு வெளிப்பட்ட அவளைப் பார்த்தபோது அறைக்குள் நுழைந்து துணிகளைக் களைந்து வேறொரு உடைக்கு அவள் மாறுவதைப் போல் உடல் பருத்து, முதிர்ந்து மாறியிருந்ததைப் பார்த்தேன். நாற்பது வருடங்களைக் கழித்த முதியவளைப் போல் அவள் தோற்றமளித்தாள்.
என் ஷூக்கள் நாற்பது வருடங்களாக அவிந்த அடுப்பின் அருகில் கிடந்தும், அன்றைய மதியம் படிந்த களிமண் அதில் இன்னமும் ஒட்டிக்கொண்டு கிடக்கிறது. அதை எடுக்க ஒரு நாள் அங்கு போனேன். அது, அவர்கள் கற்றாழைச் செடியை வாசலில் இருந்து நகர்த்திவிட்டு ரொட்டி சாப்பிட்டபடியே மேஜை நாற்காலிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு கதவைச் சாத்திவிட்டு அவர்கள் போயிருந்தார்கள். இந்நேரம் வரை நான் உட்கார உதவிய மூலை நாற்காலியைத் தவிர மற்றெல்லாவற்றையும் அவர்கள் எடுத்துக்கொண்டு போய் இருந்தார்கள். ஷூக்களை மட்டும் உலர்வதற்காக வெளியே வைத்திருந்தார்கள் என்று எனக்குத் தெரியும். வீட்டை அவர்கள் கை துறந்துவிட்டுப் போனபோது அதை அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அதனால்தான் அந்த ஷூக்களை எடுக்கச் சென்றேன்.
பல வருடங்களுக்குப் பிறகு அவள் திரும்பினாள். காலம் பல கடந்து விட்டதால் அறையிலிருந்த கஸ்தூரி வாசனையோடு தூசியின் மணமும், புழுக்கமும், பூச்சிகளின் மெல்லிய சுவாசமும் கலந்துவிட்டிருந்தது. வீட்டின் மூலையில் தனியாக அமர்ந்தபடி நான் காத்திருந்தேன். மக்கிய மரக்கட்டைகளின் ஒலியை என்னால் எழுப்ப முடியும். நான் அத்திறன் கைவரப் பெற்றிருந்தேன். ஜன்னல்கள் சாத்தப்பட்ட படுக்கையறையிலிருந்த காற்றில் பழைய நெடி அடித்தது. அப்போதுதான் அவள் உள்ளே வந்தாள். கையில் பெட்டியோடு வாசலில் நின்றுகொண்டிருந்த அவளைப் பார்த்தபோது, பல வருடங்களாகக் கழற்றாத அதே சிறிய பருத்தி ஜாக்கெட்டையும், பழைய பச்சைத் தொப்பியுமே அவள் அணிந்திருக்கிறாள் என்று தோன்றியது. அவள் இன்னமும் சிறுமிதான். உடல் பருக்கத் தொடங்கவில்லை. காலுறைகளுக்கு அடியிலிருந்த கணுக்காலும் ஊதிப் பெருக்கவில்லை. ஆனால் இப்போது நிலை வேறு. அவள் கதவைத் திறந்தபோது தூசியும் சிலந்தி வலையும் என்னை மூடியிருந்தது. இருபது வருடங்களாக அறையில் எங்கோ இசைத்துக்கொண்டிருந்த சில்வண்டும் மௌனத்தில் வீழ்ந்தது. இதற்கிடையில், தூசிகளுக்கும் இச்சிலந்தி வலைகளுக்கும் இடையே, சில்வண்டின் திடீர் தயக்கமும் சேர, புது யுகத்தின் புதிய வருகையில், புயல் வீசிய அந்த ஆகஸ்ட் மதியத்தில் என்னோடு சேர்ந்து தொழுவத்தில் கிடந்த கூடுகளைச் சேகரிக்கச் சென்ற சிறுமியை அவளில் நான் சட்டென்று அடையாளம் கண்டுகொண்டேன். வைக்கோல் மூடிய தொழுவத் தரையில் அண்ணாந்த முகத்தோடு, உடைந்த படிக்கட்டுகளில் கைப்பிடியைப் பற்றியபடி நான் நின்றிருந்ததை அவர்கள் கண்டு பிடித்தபோது, வாசலில் கையில் பெட்டியோடும் பச்சை நிறத் தொப்பியோடும் அவள் நின்ற விதம் திடீரென்றுக் கூச்சலிடப் போவதைப் போல், முன்பு அவள் சொன்னதையே மீண்டும் சொல்லப் போவதைப் போல் எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. அவள் கதவைத் திறக்க கீல்கள் கிறீச்சிட்டன.
கூரையிலிருந்து குவியலாகத் தூசி கீழே விழுந்தது. அது கூரை முகட்டில் யாரோ சம்மட்டியால் அடிப்பதால் விழுவது போலிருந்தது. வாசலில் ஒரு கணம் தயங்கினாள். அறையின் பாதியைக் கடந்தவள், தூங்குபவரை எழுப்பும் யாருடையவோ குரலில் "பையா பையா!" என்று அழைத்தாள். நானோ நாற்காலியில் இறுக்கமாக, கால்களை நீட்டியபடி அசையாமல் உட்கார்ந்திருந்தேன்.
முதலில் அவள் அறையைப் பார்ப்பதற்குத்தான் வந்திருக்கிறாள் என்று நினைத்தேன். ஆனால் அவளோ வீட்டில் வசிக்கத் தொடங்கினாள். அவளுடைய வாசத்தால் அறையை நிரப்பினாள். அறையோ அவளுடைய பெட்டியைத் திறந்தால் வெளிப்படும் கஸ்தூரியின் வாசனையை ஒத்திருந்தது. மேஜை நாற்காலிகளையும், பெட்டியில் கிடந்த துணிமணிகளையும் பிற மனிதர்கள் அள்ளிச் சென்றிருந்தார்கள். அவளோ அறையின் வாசனையை மட்டும் எடுத்துச் சென்றாள். இருபது வருடம் கழித்து அதைத் திருப்பிக் கொண்டு வந்ததோடு, அவற்றின் இடத்தில் அதை வைத்து முன்பிருந்ததைப் போலவே ஒரு பீடத்தை மீண்டும் எழுப்பினாள். அவளுடைய இருப்பே காலமெனும் மாறாத தொழிற்சாலை அழித்ததை மீட்க போதுமானதாக இருந்தது. அதன்பிறகு அடுத்த அறையில் அவள் உண்பதும் உறங்குவதுமாக இருந்தபோதும் பகலை மௌனமாகப் புனிதர்களோடு உரையாடியபடி கதவுக்கு அருகிலிருக்கும் இவ்வறையில் பகலைக் கழிப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள்.
மதியங்களில் ஆடும் நாற்காலியில் உட்கார்ந்தபடி துணிகளைத் தைப்பாள். எவரேனும் ரோஜாப் பூங்கொத்தொன்றை வாங்க வந்தால், காசுகளை வாங்கி பெல்டோடு இணைந்திருந்த கைக்குட்டையில் முடிந்துகொள்வாள். பின் தவறாமல் சொல்வாள்: "வலதுபுறத்தில் இருப்பதை எடுத்துக்கொள்ளுங்கள். இடதுபுறத்தில் இருப்பது புனிதர்களுக்கானது."
இருபது வருடங்களாக இப்படித்தான் ஆடும் நாற்காலியில் உட்கார்ந்தபடி ஆடிக்கொண்டே பொத்தலான துணிகளை நாற்காலியைப் பார்த்தபடி தைத்துக் கொண்டிருக்கிறாள்; எவ்வாறு எனில் இப்போதெல்லாம் அந்தச் சிறுவனை அவள் கவனித்துக்கொள்ளவில்லை என்கிற ரீதியில். ஆனால் குழந்தைப் பருவத்து மதியங்களை அவனோடுதான் அவள் பகிர்ந்துகொண்டாள். நோயுற்ற அந்தச் சிறுவனோ அவனுடைய பாட்டிக்கு ஐந்து வயதாகும் சமயத்திலிருந்தே அந்த மூலையில் உட்கார்ந்துகொண்டிருக்கிறான்.
இது எப்போது சாத்தியமென்றால், தலையை அவள் மீண்டும் தாழ்த்தும்போது அந்த ரோஜாக்களை என்னால் நெருங்க முடியும். இதைச் சமாளிக்க முடிந்தால் சிதைமேட்டிற்குச் சென்று அக்கல்லறையில் இந்த ரோஜாக்களை வைத்துவிட்டு என்னுடைய நாற்காலிக்குத் திரும்பி எல்லா அறையிலும் ஓசைகள் அற்றுப்போகும் நாளுக்காக, அவள் திரும்பி வர முடியாத ஒரு நாளுக்காகக் காத்திருக்கத் தொடங்குவேன்.
அன்று எல்லாவற்றிலும் ஒரு மாற்றம் நிகழும். ஏனெனில் பாழடைந்த வீட்டில் வசிக்கும் ரோஜாப்பூ விற்கும் பெண்ணைச் சிதைமேட்டிற்கு எடுத்துச் செல்ல நான்கு பேர் தேவை என்பதை எவரிடமாவது சொல்வதற்காக வீட்டை விட்டு மீண்டும் நான் வெளியேற வேண்டியிருக்கும்.
பிறகு என்றென்றைக்குமாக அந்த அறையில் நான் தனியாக வசிப்பேன். ஆனால் இன்னொரு வகையில் அவளுக்கு அமைதி கிட்டும். எப்படி எனில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவளுடைய பீடத்தை நெருங்கி ரோஜாக்களைக் கலைத்தது கண்ணுக்குப் புலனாகாத காற்றல்ல என்பதை அவள் அன்று புரிந்துகொள்வாள்.
No comments:
Post a Comment