கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்
ஆங்கிலம் வழி தமிழில் : ராஜகோபால்
ஏறக்குறைய தன்னை முழுமையாகத் தூக்குவதற்கு ஆனா அவனை அனுமதித்தாள், பிறகு, அவளுடைய முழு பாரத்தையும் தன் கணவனுடைய கட்டமிடப்பட்ட சிவப்புநிற நாரியல் சட்டையின் மேல் சரித்தவள், அவனுடைய இடுப்பைக் கட்டிக்கொண்டு ஆசுவாசம் அடையும் மட்டும் அழுதாள்.
''உட்கார்ந்தபடியே தூங்கிவிட்டேன்" என்றாள் அவள். "திடீரென்று கதவைத் தள்ளிகொண்டு இரத்தம் ஒழுக நீ உள்ளே வருகிறாய்" டாம்சொ ஒன்றும் பேசாமல் அவளைச் சற்று தள்ளி நிறுத்தினான். மீண்டும் அவளைப் படுக்கையில் உட்கார வைத்தான். பிறகு பொட்டலத்தை அவளுடைய மடியில் போட்டுவிட்டு, சிறுநீர் கழிக்க முற்றத்திற்குப் போனான். அவள் பொட்டலத்தைப் பிரித்தபோது அதில் அடிபட்டுத் தேய்ந்து வெளிறிப் போயிருந்த மூன்று பில்லியர்ட்ஸ் பந்துகள் இருப்பதைப் பார்த்தாள். இரண்டு வெள்ளை; ஒன்று சிகப்பு.
டாம்சொ அறைக்குத் திரும்பியபோது, அவள் ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்ததைப் பார்த்தான்.
"என்ன இது?" என்று ஆனா கேட்டாள்.
அவன் தோள்களைக் குலுக்கினான்.
"பில்லியர்ட்ஸ் விளையாட."
அவன் அதை மீண்டும் பொட்டலம் கட்டி கைவிளக்கு, கத்தி, வீட்டுச் சாவி போன்ற சாமன்கள் கிடந்த பெட்டிக்கு அடியில் போட்டான். ஆனா உடை எதையும் களையாமல் சுவரைப் பார்த்துபடி திரும்பிப் படுத்துக்கொண்டாள். டாம்சொ அவனுடைய கால்சராயை மட்டும் கழற்றிவிட்டுப் படுக்கையில் சரிந்தான். சிகரெட் புகைத்தபடி, ஆனா விழித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணரும்வரை அவனுடைய சாகசங்களின் சுவடுகளை விடிகாலைப் பொழுதின் சலசலப்பொலிகளினூடே நினைவுகூர முயன்றான்.
"என்ன யோசித்து கொண்டிருக்கிறாய்?"
"ஒன்றுமில்லை" என்றாள் அவள்.
அவளுடைய கீச்சுக்குரல் கடும் கோபத்தின் காரணம் சத்தமாக ஒலித்தது. டாம்சொ சிகரெட்டை ஒருமுறை கடைசியாக இழுத்துவிட்டு அதன் முனையைத் தரையில் தேய்த்தான்.
"அங்கு ஒன்றுமேயில்லை" என்றான் பெருமூச்சு விட்டபடி. "ஏறக்குறைய ஒரு மணிநேரம் உள்ளே இருந்திருப்பேன்.”
''அவர்கள் உன்னைச் சுட்டுக்கொன்றிருப்பார்கள்.”
டாம்சொ நடுங்கினான். மணிக்கட்டால் படுக்கையிலிருந்த மரச்சட்டத்தைக் குந்தியவன், ''சே இழவு என்றான். சிகரெட்டும், தீப்பெட்டியும் இருக்கிறதா என்று தரையைத் துழாவிப் பார்த்தான்,
''ஒரு கழுதையைப் போல் நடந்துகொள்கிறாய்" என்றாள்–ஆனா. "தெருவில் சப்தம் கேட்கும்போதெல்லாம் உன்னைப் பிணமாகத்தான் கொண்டுவரு கிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன். தூக்கம் வராமல் உனக்காக ஒருத்தி காத்துக் கொண்டிருக்கிறாள் என்பது உன் நினைவில் இருக்க வேண்டும்" என்று சொன்னவள் பெருமூச்சு விட்டபடி தொடர்ந்தாள்:
''கடைசியில் எல்லாம் இந்த மூன்று பில்லியர்ட்ஸ் பந்துகளோட முடிய வேண்டும்."
"அந்த மேஜையில் இருபத்து ஐந்து சென்ட் பணத்தைத் தவிர வேறொன்றுமில்லை"
"அப்படியானால் நீ ஒன்றையும் எடுத்திருக்கக் கூடாது."
''உள்ளே நுழைவதுதான் சிரமம்" என்றான் டாம்சொ. "வெறுங்கையோடு திரும்ப எனக்கு மனமில்லை.''
”நீ வேறு எதையாவது எடுத்திருக்கலாம்.”
"அங்கு ஒன்றுமேயில்லை" என்றான் டாம்சொ.
"அந்த அறையிலுள்ள அளவிற்குப் பொருட்கள் வேறு எங்கும் கிடையாது."
"அப்படித்தான் தோன்றும். ஆனால் உள்ளே சென்று தேடிப் பார்த்தால்தான் கால்காசு தேறக்கூடிய பொருட்கள் எதுவும் இல்லை என்பதை நீ புரிந்துகொள்வாய்."
அவள் நீண்ட நேரம் அமைதியாக இருந்தாள். கண்களைத் திறந்தபடி நினைவின் இருட்டறைக்குள் விலைமதிப்புள்ள பொருட்களை அவள் தேடுவதாக டாம்சொ கற்பனை செய்துபார்த்தான்,
"இருக்கலாம்" என்றாள் அவள்.
டாம்சொ மீண்டும் பற்ற வைத்தான். போதை வேகமாக அலைஅலையாக இறங்கிக்கொண்டிருந்தது. உடலின் எடையை, உறுப்புகளின் பாரத்தை அவன் மீண்டும் உணர்ந்தான். "அங்கு ஒரு பூனை இருந்தது" என்று சொன்னான். "அது ஒரு கொழுத்த வெள்ளைப் பூனை.'' ஆனா புரண்டு படுத்தாள். பெருத்த வயிற்றைக் கணவனுடைய வயிற்றின் மீது வைத்து அழுத்தியவள் அவளுடைய கால்களை அவன் முழங்கால்களுக்கு இடையில் வைத்துக்கொண்டாள். அவளிடமிருந்து வெங்காய வாடை அடித்தது.
“ரொம்ப பயந்துவிட்டாயா?"
"நானா?"
"ஆம். நீதான்" என்றாள். "ஆண்களும் பயப்பட கூடியவர்கள்தான் என்று அவர்கள் சொன்னார்கள்."
அவளுடைய புன்முறுவலைப் பார்த்து அவனும் சிரித்தான். "கொஞ்சம்" என்றான். ''எனக்குச் சிறுநீர் கழிக்க வேண்டும். என்னால் அடக்க முடியவில்லை." அவளிடமிருந்து பெற்ற முத்தத்தைத் திருப்பிக் கொடுக்காமல் எழுந்துகொண்டான். பிறகு அவன், அந்த சாகசத்தின் அபாயத்தைப் பற்றி அறிந்திருந்தபோதும் அதைப் பற்றிக் கவலைப்படாமல், ஒரு சுற்றுப்பயணத்தின் ஞாபங்களை நினைவுகூர்வதுபோல், அவனுடைய சாகசத்தைப் பற்றி அவளிடம் விவரிக்க தொடங்கினான்.
நீண்ட அமைதிக்குப் பிறகு அவள் பேசினாள்.
"இது சுத்த பைத்தியக்காரத்தனம்."
"எங்கிருந்தாவது தொடங்கித்தானே ஆகவேண்டும்" என்றான் டாம்சொ கண்களை மூடியபடி. "மேலும், முதல் முயற்சி என்கிற மட்டில் இது அத்தனை மோசமில்லை."
வெக்கை மெதுவாக உள்ளே நுழைந்தது. டாம்சொ விழித்தெழுவதற்கு முன்னமே அவனுடைய மனைவி விழித்தெழுந்திருந்தாள். முற்றத்திலிருந்த குழாயடியில் தலையை முழுதாக விழித்துக்கொள்ளும் மட்டும் காட்டினான்.
கூடத்தின் ஒரு பகுதியாக இருந்த அந்த அறை, அதையொத்த பிற அறைகளிடமிருந்து திரைச்சீலைகளால் பிரிக்கப்பட்டிருந்தது. முற்றத்தைப் பிரித்த அந்தக் கருப்புச் சுவருக்கு எதிரில்தான் ஆனா ஒரு சிறிய அடுப்பை அமைத்திருந்தாள். சமையலுக்கும், இறைச்சி சுடுவதற்கும் அதை அவள் பயன்படுத்தினாள். இஸ்திரி போடுவதற்கும் உணவு உண்பதற்கும் அங்கு ஒரு சிறிய மேசை போடப்பட்டிருந்தது. கணவனின் நடவடிக்கைகளைப் பார்த்தவள், இஸ்திரி செய்து கொண்டிருந்த துணிகளை எடுத்து ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு அடுப்பை எடுத்து, காபியைச் சூடுபடுத்தினாள். வயதில் மூத்தவளாயிருந்தாள் அவள். வெளுத்த சருமம் கொண்டிருந்தாள். மேலும், எதார்த்ததைப் புரிந்துகொண்ட மனிதர்களிடம் காணப்படும். மென்மையான குணாதிசயங்கள் அவளுடைய நடை உடை பாவனைகளில் வெளிப்பட்டன.
தன் மனைவி பார்வையால் எதையோ தன்னிடம் பேச விரும்புகிறாள் என்பதைத் தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த டாம்சொ புரிந்துகொண்டான். அந்நேரம் வரை முற்றத்தில் ஒலித்துக்கொண்டிருந்த குரல்களை அவன் கவனத்தில் கொள்ளவில்லை.
“அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்" என்று காபியை அவனிடம் கொடுத்தவள் முணுமுணுத்துக்கொண்டாள்.
"கொஞ்சம் நேரத்திற்கு முன்தான் அங்கு எல்லோரும் போனார்கள்."
ஆண்களோ குழந்தைகளோ முற்றத்தில் இல்லாததை அப்போதுதான் டாம்சொ கவனித்தான். அவன் காபி குடித்தபடியே வெளியில் துணி உலர்த்திக் கொண்டிருந்த பெண்ணின் பேச்சை அமைதியாகச் செவிமெடுத்தான். கடைசியில் ஒரு சிகரெட் பற்ற வைத்தவன், சமையலறையை விட்டு நகர்ந்தான்.
“தெரேசா" என்று அழைத்தான்.
ஈரத்துணிகளை உடலில் வாரியிட்டிருந்த பெண்ணொருத்தி அவன் குரலுக்குப் பதில் கொடுத்தாள். "ஜாக்கிரதை" என்றாள் ஆனா. அந்தப் பெண் அருகில் வந்தாள்.
"என்ன நடக்கிறது?" என்று கேட்டான் டாம்சொ.
"பில்லியர்ட்ஸ் அறையில் நுழைந்த எவனோ ஒருவன் எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டான்" என்றாள் அவள்.
அவளுக்கு எல்லா விவரங்களும் தெரிந்திருந்தன. அவர்கள் அந்த இடத்தை எப்படித் தலைகீழாகப் புரட்டினார்கள்; எப்படி ஒரு அங்குலம் விடாமல் ஆராய்ந்தார்கள்; பில்லியர்ட்ஸ் மேஜையை எப்படிப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்கள் என்பதையெல்லாம் தெளிவாக விவரித்தாள். அவளுடைய பேச்சின் உறுதியைப் பார்த்தபோது டாம்சொவால் கூட அது உண்மையில்லை என்பதை நம்ப முடியவில்லை.
"இழவு" என்று முணுமுணுத்தபடி சமையலறைக்குத் திரும்பினான்.
ஆனா பற்களை இறுகக் கடித்தபடி சீழ்க்கை அடித்தாள். முற்றத்திலிருந்த நாற்காலியில் டாம்சொ கவலையை அடக்க முயன்றபடி முதுகைச் சாய்த்தான். மூன்று மாதங்களுக்கு முன் அவனுக்கு இருபது வயது ஆனபோது ஒரு விதமான இரகசிய மென்னுணர்வோடு அவனுடைய மீசையை அவன் பாதுகாத்தான். காரணம் அது அவனுடைய அம்மைத் தழும்பு நிறைந்த முகத்திற்கு ஒருவித முதிர்ச்சியை அளித்தது. அன்று முதல் அவன் தன்னை ஒரு முழு மனிதனாகத்தான் உணர்ந்தான். ஆனால் இன்றோ, தலைவலியால் அவதிப்படுவதற்கு முன்; இரவின் நினைவுகளுக்குள் மூழ்கியபடி, அவனுடைய வாழ்க்கையை எங்கிருந்து மீண்டும் தொடங்குவது என்று தெரியாமல் தடுமாறினான்.
ஆனா இஸ்திரி செய்து முடித்த பிறகு அந்தச் சுத்தமான துணிகளை இரண்டு சரிசமமான மூட்டைகளாகக் கட்டிக்கொண்டு கிளம்பினாள்.
"நீ ரொம்ப தூரம் போக வேண்டாம்" என்றான் டாம்சொ.
"வழக்கமான இடங்களுக்குத்தான் போகப் போகிறேன்.''
அறைக்குள் நுழைந்த அவளை டாம்சொ பின்தொடர்ந்தான். 'உன் சட்டை அங்கிருக்கிறது" என்றாள் அவள். "இனி அந்தக் கட்டம் போட்ட சட்டை நீ போட வேண்டாம்.'' ஆனா அவள் கணவனுடைய தூய்மையான பூனை விழிகளை எதிர்கொண்டாள்.
"உன்னை யார் பார்த்தார்கள் என்று நமக்குத் தெரியாது."
டாம்சொ வியர்வையை பேண்ட்டில் துடைத்தான்.
"யாரும் பார்க்கவில்லை."
"நமக்குத் தெரியாது" என்றாள் ஆனா. இரண்டு கைகளிலும் துணிமூட்டைகளைச் சுமந்துகொண்டிருந்தாள்; "மேலும், நீ வெளியில் செல்வது அவ்வளவு உசிதமில்லை. இதில் எல்லாம் விருப்பமில்லாதவள் போல் நான் அங்கு சென்று ஒரு சுற்று சுற்றிவிட்டு வரும்வரை நீ இங்கு பொறுமையாக இருக்க வேண்டும்."
நகரத்தில் மக்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனா அந்த நிகழ்வின் விவரங்களை ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் பல்வேறு விதங்களில் செவிமடுக்க வேண்டியிருந்தது. அவள் துணிகளை ஒப்படைத்த பிறகு, வழக்கமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் செய்வதுபோல் அல்லாமல் மார்கெட்டிற்குப் போவதற்குப் பதிலாக நேராக பிளாசாவிற்குள் நுழைந்தாள்.
பில்லியர்ட்ஸ் அறையில் அவள் கற்பனை செய்ததற்கு மாறாக ஒரு சில மனிதர்களே இருந்தார்கள். வாதுமை மரங்களின் கீழ் இருந்த நிழலில் ஓரிரு ஆட்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். மதிய உணவை முன்னிட்டு சிரியர்கள் திரைச் சீலைகளை இறக்கி விட்டிருந்தார்கள். கேன்வாஸ் பந்தலின் கீழ் இருந்த கடைகள் அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தன. ஹோட்டல் லாபியிலிருந்த சாய்வு நாற்காலியில் உதடுகள் திறந்திருக்க கால்களைப் பரப்பியபடி ஒரு மனிதன் உறங்கிக்கொண்டிருந்தான். மதிய வெக்கையில் எல்லாம் சமைந்திருந்தன.
ஆனா பில்லியர்ட்ஸ் அறையைக் கடந்து சென்றாள். கிடங்கிற்கு எதிரில் இருந்த வெற்றிடத்தை அவள் கடந்து சென்றபோது அங்கு குமிழியிருந்த கூட்டத்தைக் கவனித்தாள். அப்போது டாம்சொ சொன்ன விஷயங்கள் நினைவிற்கு வந்தன. எல்லோரும் அதைத் தெரிந்துவைத்திருந்தார்கள். இருந்தபோதும் அவ்விடத்தின் உண்மையான வாடிக்கையாளர்களால் மட்டுமே அதை நினைவுகூர முடியும்; பில்லியர்ட்ஸ் அறையின் பின்பக்கக் கதவிற்கு எதிரில்தான் அந்த வெற்றிடம் இருக்கிறது என்பதே அது. ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு, ஆனா கைகளை வயற்றில் கட்டியபடி பூட்டப்பட்டிருந்த கதவில் கண்களைப் பதித்தவாறு கூட்டத்தினுள் கலந்தாள். பூட்டு பழுதடையாமல் இருந்தது. ஆனால் அந்தத் தாழ்ப்பாள்களில் ஒன்று பல் இளித்தது. ஒரு கணம் கணவனுடைய முயற்சியால் விழைந்த சேதத்தைக் கவனித்தவள் அவனை நினைத்துப் பரிதாபப்பட்டாள்.
"அது யாராக இருக்கும்?” என்று கேட்டாள்.
திரும்பிப் பார்ப்பதற்கு அவளுக்குப் பயமாக இருந்தது.
'யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அது ஒரு வெளியாளாக இருக்கலாம் என்று பேசிக்கொள்கிறார்கள்" என்று பதில் சொன்னார்கள்.
"ஆம். அப்படித்தான் இருக்கும்" என்றாள் ஆனாவிற்கு அப்பால் நின்றுகொண்டிருந்த பெண். "இந்த ஊரில் திருடர்களே கிடையாது. எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும்" என்றாள் அவள்.
ஆனா புன்னகைத்தபடி தலையைத் திருப்பினாள். "நீங்கள் சொல்வது சரிதான்'' என்றாள். அவள் வியர்வையில் குளித்திருந்தாள். அவளுக்கு வெகு அருகில் ஒரு கிழவன் நின்றுகொண்டிருந்தான். அவனுடைய கழுத்தின் பின்புறத்தில் தழும்புகள் காணப்பட்டன.
"அவர்கள் எல்லாவற்றையுமா எடுத்துச் சென்று விட்டார்கள்?"
"இருநூறு பெசோக்களையும் பில்லியர்ட்ஸ் பந்துகளையும் எடுத்துச் சென்று விட்டார்கள்" என்றான் கிழவன். வழக்கமில்லாத ஆர்வத்தோடு அவளைக் கவனிக்கத் தொடங்கினான். "வெகு சீக்கிரத்தில் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு தான் நாம் தூங்க வேண்டும்."
ஆனாவின் பார்வை தொலைவில் நிலைத்திருந்தது. "சரிதான்" என்றாள் மீண்டும். கிழவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்தவள் அவனைத் தவிர்க்க முடியாததால் தலையில் ஒரு துணியைப் போர்த்திக்கொண்டு கிளம்பினாள்.
கால் மணி நேரமாக அந்த வெற்றிடத்தை அடைத்துக்கொண்டிருந்த கூட்டம், உடைக்கப்பட்ட கதவிற்குப் பின்னால் ஒரு மனிதன் இறந்து கிடக்கிறான் என்பதுபோல் நாகரிகமாக நடந்துகொண்டது. பிறகு அது எரிச்சடைந்து பிளாசாவிற்குள் கலைந்து சென்றது.
வாயிற் கதவருகில் மேயர் மற்றும் இரண்டு போலீஸ்காரர்களோடு பில்லியர்ட்ஸ் அறையின் உரிமையாளர் நின்று கொண்டிருந்தார். குள்ளமாகவும் குண்டாகவும் காட்சியளித்த அவர், குழந்தைகள் அணியும் கண்ணாடி போன்றொரு கண்ணாடியை அணிந்திருந்தார். பேண்ட் வயற்றின் அழுத்தத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. அதீத மரியாதையோடு நின்று கொண்டிருப்பதைப் போல் தோற்றமளித்த அவரைக் கூட்டம் மொய்த்துக்கொண்டது. சுவரில் சாய்ந்தபடி, கூட்டம் கலைந்துபோகும் வரையில் ஆனா அவருடைய அறிக்கைகளைச் செவிமெடுத்துக் கொண்டிருந்தாள். பிறகு வெக்கையில் குளித்தபடி அண்டை வீட்டாரின் ஆரவாரத்திற்கு இடையில் வீடு திரும்பினாள்,
படுக்கையில் படுத்திருந்த டாம்சொ தனக்குத்தானே அந்தக் கேள்வியைப் பலமுறை கேட்டுகொண்டான்; இரவு முழுவதும் புகைபிடிக்காமல் எப்படி ஆனாவால் தனக்காகக் காத்துக் கொண்டிருக்க முடிந்தது என்று வியர்வையில் நனைந்திருந்த துணியைத் தலையிலிருந்து அவிழ்த்தபடிச் சிரித்துக்கொண்டே அறைக்குள் நுழைந்த அவளைப் பார்த்தபோது குடித்துக் கொண்டிருந்த சிகரெட்டைத் தரையில் நசுக்கினான். கவலை அதிகரிக்க அவளுடைய பதிலுக்காகக் காத்திருந்தான்,
"பிறகு?"
ஆனா படுக்கைக்கருகில் முழங்காலிட்டு அமர்ந்தாள்.
"நீ திருடன் மட்டுமல்ல. ஒரு பொய்யனும் கூட."
"காரணம்?"
'காரணம் மேஜையில் ஒன்றுமேயில்லை என்று நீ சொன்னாய், ""
டாம்சொ முகஞ்சுளித்தான்.
”அங்கு ஒன்றுமேயில்லை."
"அங்கு இருநாறு பெசோக்கள் இருந்தன" என்றாள் ஆனா.
"பொய்" என்று கத்தினான். பிறகு படுக்கையில் உட்கார்ந்தவன் அவளுக்கு நம்பிக்கையூட்டும் குரலில், "அங்கு இருபத்தி ஐந்து செண்டுகள் இருந்தன என்றான்.
அவளை நம்ப வைக்க முயற்சித்தான். முஷ்டியை மடக்கியபடி, “அந்தக் கிழட்டுத் திருடன் மட்டும் என் கையில் கிடைத்தான், தொலைந்தான்..." என்றான்.
ஆனா வெடித்துச் சிரித்தாள்.
"மடத்தனமாகப் பேசாதே.".
டாம்சொவும் சிரிக்கத் தொடங்கினான். ஆனா சவரம் செய்யும்போது அவன் கண்டுபிடித்ததை எல்லாம் அவனிடம் பகிர்ந்துகொண்டாள். போலீஸ் ஒரு வெளியாளைத் தேடுகிறது. "வியாழக்கிழமை அவன் வந்து சேர்ந்ததாகவும், நேற்றிரவு துறைமுகத்திற்குள் அவன் சுற்றித் திரிந்ததைப் பார்த்ததாகவும் அவர்கள் பேசிக்கொண்டார்கள்" என்றாள் அவள். ''அவனை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் பேசிக்கொள்கிறார்கள்." டாம்சொ ஒருபோதும் அவன் பார்த்திராத அந்த அன்னியனைப் பற்றிக் கற்பனை செய்தான். ஒரு நிமிடம் அந்த அந்நியனைச் சந்தேகப்பட்டான். பிறகு சமாதானமடைந்தான்.
''அவன் இந்நேரம் ஓடிவிட்டிருப்பான்”என்றாள் அவள்.
வழக்கம்போல் உடை உடுத்த டாம்சொவிற்கு மூன்று மணி நேரம் தேவைப் பட்டது. முதலில் மீசையை நுணுக்கமாகக் கத்திரித்தான். பிறகு முற்றத்துக் குழாயில் நிதானமாகக் குளித்தான். முதல் தடவையாக அந்த இரவிற்குப் பிறகுதான், வழமையான விஷயங்களில் அவனுடைய ஆர்வம் குன்றவில்லை என்பதை ஆனா கவனித்தாள். டாம்சொ தலையை மெதுவாக வாரத் தொடங்கினாள். வெளியேறுவதற்கு முன், சிகப்புநிறச் சட்டை அணிந்தவன் கண்ணாடியில் அவனைப் பார்த்துக்கொண்டபோது ஆனா சோர்வாகவும் வயதாகிவிட்டதாகவும் தன்னை உணர்ந்தாள். டாம்சொ ஒரு தொழில்முறைக் குத்துச்சண்டை வீரனின் பாணியில் முரட்டுத்தனமாகக் குத்துவது போல் பாவனை செய்தான். ஆனா அவனுடைய மணிக்கட்டுகளைப் பற்றினாள்.
"உன்னிடம் பணம் ஏதாவது இருக்கிறதா?"
டாம்சொ கிண்டலாக, "நாள் பெரிய பணக்காரனாக்கும்" என்றான். "என்னிடம் இருநாறு பெசோக்கள் இருக்கின்றன."
சுவரைப் பார்த்துத் திரும்பிய ஆனா ரவிக்கைக்குள்ளிருந்து ஒரு கட்டு சீட்டுகளை எடுத்து ஒரு பெசோவைக் கணவனிடம் கொடுத்தாள். "எடுத்துக்கொள் அன்பே."
அன்றிரவு டாம்சொ அவனுடைய நண்பர்கள் கூட்டத்தோடு பிளாசாவிற்குச் சென்றான். நாட்டின் பல பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சந்தையில் பொருட்களை விற்பதற்காக மக்கள் வந்திருந்தார்கள். பிரெஞ்சு ஃப்ரைகளும் லாட்ட்ரி சீட்டுகளும் விற்றுக்கொண்டிருந்தவர்களுக்கு இடையில் அவர்கள் தங்களுடைய கடையை விரித்தார்கள். மதியத்திலிருந்தே அவர்களுடைய இரைச்சலை உங்களால் கேட்க முடியும். டாம்சொவின் நண்பர்களுக்கு பில்லியர்ட்ஸ் அறையில் நிகழ்ந்த திருட்டைக் காட்டிலும் ரேடியோவில் ஒலிபரப்பாகும் சாம்பியன்ஷிப் போட்டிகளின் மீதுதான் ஆர்வம் இருந்தது. ஆனால் பில்லியர்ட்ஸ் அறை மூடப்படிருந்ததால் அவர்களால் ரேடியோ கேட்க முடியவில்லை. பேஸ்பாலை பற்றிப் பேசிக்கொண்டே எந்தப் படம் ஓடுகிறது என்று தெரிந்துகொள்ளாமல் அவர்கள் ஒரு படத்திற்குப் போனார்கள்.
கேண்டிஃப்ளாஸ் நடித்த படம் ஒன்று அங்கு ஓடிக்கொண்டிருந்தது. பால்கனியின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த டாம்சொ கூச்சமில்லாமல் சிரித்தான். உணர்ச்சி கொந்தளிப்புகளிலிருந்து விடுபட்டுக் கொண்டிருப்பதை அவனால் உணர முடிந்ததது. அது ஒரு அருமையான ஜூன் மாத இரவு. அந்தத் திறந்தவெளித் திரையரங்கில் புரொஜெக்டர் கருவியின் மினுமினுப்பை உங்களால் பார்க்க முடியும்போது, அதன் மேல் மிதந்துகொண்டிருக்கும் நட்சத்திரங்கள் மௌனமாக அந்தத் திரையரங்கின் மீது கவியும்.
திடீரென்று திரையில் தோன்றிய பிம்பங்கள் மங்கலாக காட்சியளிக்கத் தொடங்கின. ஆர்கெஸ்ட்ராவின் பின்புறமிருந்து ஒரு சலசலப்பொலி எழுந்தது. டாம்சொ, எதிர்பாராது தோன்றிய வெளிச்சத்தால் அவனுடைய குற்றம் கண்டுபிடிக்கப்பட்டதாக நினைத்துத் தப்பி ஓட முயன்றான். ஆனால் சட்டென்று ஆர்கெஸ்ட்ராவிற்கு எதிரிலிருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்திருப்பதையும், ஆவேசமாக பெல்ட்டை கையில் சுற்றியபடி ஒரு மனிதனை - நல்ல ஆகிருதியுடைய ஒரு நீக்ரோவை - ஒரு போலீஸ்காரன் தாக்குவதையும் பார்த்தான். பெண்கள் அலறத் தொடங்கினார்கள். நீக்ரோவை அடித்துக்கொண்டிருந்த போலீஸ்காரன் பெண்களைக் காட்டிலும் அதிகமாக "திருடன்! திருடன்" என்று சப்தமிட்டான். நீக்ரோ நாற்காலிகளுக்கு இடையில் உருண்டான். இரண்டு போலீஸ்காரர்கள் அவனை வளைத்துப் பிடிக்கும்வரை இடுப்பில் மிதித்துக்கொண்டே இருந்தார்கள். பிறகு ஒரு போலீஸ்காரன் நீக்ரோவின் கையை மடக்கி வாரால் கட்டினான். மூவரும் சேர்ந்து அவனைக் கதவை நோக்கித் தள்ளிகொண்டுப் போனார்கள்.
சட்டென்று அது நடந்துமுடிந்து விட்டது. நீக்ரோ டாம்சொவைக் கடந்து சென்ற பிறகுதான் என்ன நடந்தது என்பதை டாம்சொ புரிந்துகொண்டான். சட்டை கிழிந்திருந்தது. முகத்தில் புழுதியும் வியர்வையும் ரத்தமும் அப்பியிருந்தன. ''கொலைகாரர்கள்! கொலைகாரர்கள்" என்று அழுதபடி அவன் டாம்சொவைக் கடந்தான்; அதன் பிறகு அவர்கள் புரொஜக்டரை ஆன் செய்தார்கள். படம் தொடர்ந்தது.
பிறகு டாம்சொவால் சிரிக்க முடியவில்லை. படத்தில் ஒன்றவும் முடியவில்லை. தொடர்ச்சியாக சிசுரெட் குடித்துக்கொண்டேயிருந்தான். படம் முடிந்து விளக்குள் எரியத் துவங்கியபோது எதார்த்ததைக் கண்டு பயந்துவிட்டது போல் பார்வையாளர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். யாரோ "நன்றாக இருக்கிறது" என்று குரல் கொடுத்தார்கள். டாம்சொ அவனைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை.
கேண்டிஃபளாஸ் நன்றாக நடித்திருக்கிறாள்" என்றான் டாம்சொ.
மக்கள் கூட்டம் டாம்சொவைக் கதவை நோக்கித் தள்ளிக்கொண்டு போனது. ஹோட்டல்காரர்கள் சாப்பாட்டைக் கூடையில் எடுத்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். மணி பதினொன்றைக் கடந்துவிட்டிருந்தது. இருந்தபோதும் ஏராளமான மக்கள் நீக்ரோவை எப்படி பிடித்தார்கள் என்று தெரிந்துகொள்வதற்காகப் படம் முடிந்து வருபவர்களை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
அன்றிரவு டாம்சொ மிகுந்த எச்சரிக்கையோடு அறைக்குள் நுழைந்தான். அரைகுறைத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த ஆனா, டாம்சொ படுக்கையில் சாய்ந்தபடி இரண்டாவது சிகரெட்டைப் பற்ற வைத்தபோது விழித்துக்கொண்டாள்.
"அடுப்பில் உணவு இருக்கிறது" என்றாள் அவள்.
“பசிக்கவில்லை” என்றான் டாம்சொ.
முழுதாக விழித்துக்கொள்ளாமல் ஆனா பெருமூச்சு விட்டவாறு, "நோவா வெண்ணையில் பொம்மை செய்வதாகக் கனவு கண்டேன்" என்றாள். சட்டென்று அவளை அறியாமலேயே அவள் தூங்கிவிட்டதை உணர்ந்தாள். கண்களைக் கசக்கிவிட்டவாறு எழுந்து கொண்டவள் டாம் சொவிடம் திரும்பினாள்.
”அவர்கள் அவனைப் பிடித்துவிட்டார்கள்" என்றாள்.
டாம்சொ பேசுவதற்கு முன், சற்று யோசித்தான்.
”யார் சொன்னார்கள்"
”திரையரங்கில் வைத்து அவனைப் பிடித்துவிட்டதாகப் பேசிக் கொண்டார்கள்” என்றாள் ஆனா. "எல்லோரும் அங்கு இருந்தார்கள் என்று சொன்னார்களே."
அவள் அந்தக் கைது பற்றி அரைகுறையாக விவரித்தாள். டாம்சொ அதைத் திருத்த முயலவில்லை.
"பாவம்" என்றாள் ஆனா.
"ஏன் பாவம்?" என்றான் டாம்சொ கடுமையாக ஆட்சேபித்தபடி. "சரி... அப்போது நானும் அந்த வலையில் மாட்டிக்கொள்ள வேண்டும் என்று நீ விரும்புகிறாயா?"
ஆனாவால் அதற்கு நல்ல பதில் கொடுக்க முடியும். இருந்தபோதும் அமைதி காத்தாள். விடிந்த பிறகும் ஒரு ஆஸ்த்மா நோயாளியைப் போல் அவன் புகைபிடித்துக் கொண்டிருந்ததை அவள் கவனித்தாள். பிறகு அவன் படுக்கையிலிருந்து எழுந்து அறையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். எதையோ அவன் தேடிக்கொண்டிருந்தான். அவனுடைய தேடலைப் பார்த்தபோது அந்தப் பொருளைக் கண்டடையாமல் அவன் ஆசுவாசம் கொள்ளமாட்டான் என்று தோன்றியது. படுக்கைக்கு அடியில் ஏறத்தாழ பதினைந்து நிமிடத்திற்கும் மேலாக அவன் தரையைத் துழாவிக் கொண்டிருந்ததை ஆனா கவனித்தாள். அவன் ஆடை களைவதைப் பார்த்தபோது அவனுக்குச் செய்யும் உதவியாக, சப்தம் எதுவும் எழுப்பாமல் புரண்டு படுத்தபடி நன்கு உறங்குவதான பாவனை செய்தாள். அவளுடைய உள்ளுணர்வில் ஏதோ பட்டது, டாம்சொ திரையரங்கில் இருந்ததை அவள் அறிந்துகொண்டபோது அவன் ஏன் பந்துகளைப் படுக்கைக்கு அடியில் புதைத்தான் என்பதை அவள் புரிந்துகொண்டாள்.
திங்கள்கிழமை பில்லியர்ட்ஸ் அறையைத் திறந்தபோது வாடிக்கையாளர்கள் அதைச் சூழ்ந்துகொண்டார்கள். பில்லியர்ட்ஸ் மேஜை ஒரு பழுப்பு நிற துணியால் மூடப்பட்டிருந்தது. அந்த இடமே ஒரு ஈமச்சடங்கு நடந்துமுடிந்த இடம் போல் காட்சியளித்தது. சுவரில் ஒரு குறிப்பு ஒட்டப்பட்டிருந்தது: "பந்துகள் இல்லாததால் பில்லியார்ட்ஸ் நடைபெறாது" மக்கள் சாரைசாரையாக வந்து அதை ஒரு செய்தியைப் போல் வாசித்தார்கள். சிலர் மட்டுமீறிய விசுவாசத்தோடு அதை மீண்டும் மீண்டும் வாசித்தபடி அதன் முன் பலமணி நேரமாக நின்று கொண்டிருந்தார்கள்.
டாம்சொ முக்கியமான வாடிக்கையாளர்களோடு நின்றுகொண்டிருந்தான், பார்வையாளர்களுக்காக இடப்பட்ட பெஞ்சுகளிலேயே அவனுடைய வாழ்க்கை பாதி கழிந்துவிட்டது. பில்லியர்ட்ஸ் அறையின் கதவு திறக்கப்பட்ட சமயத்திலிருந்தே அவன் அங்கிருந்தான். அது சற்றுக் கஷ்டம்தான். இருந்தபோதும் அது அவனிடமிருந்து இயல்பாக வெளிப்பட்டது. அவனைக் கடந்து சென்ற பில்லியர்ட்ஸ் அறையின் முதலாளியின் முதுகில் செல்லமாகத் தட்டினான்: "எவ்வளவு கஷ்டம், இல்லையா ரோக்?"
வலிந்து
சிரித்த முதலாளி "ஆமாம்" என்றார். கல்லாவிற்கு அருகில் கிடந்த ஒரு ஸ்டுலை இழுத்துப் போட்டுக்கொண்டு டாம்சொ உட்கார்ந்தபோது காத்துக்கொண்டிருந்த வாடிக்கையாளர்களை நோக்கி முதலாளி நகர்ந்தார்.
"என்ன வினோதம்!" என்றான் டாம்சொ.
''உண்மைதான்'' என்றான் டாம்சொவிற்கு அருகில் உட்கார்ந்திருந்தவன். "இதையெல்லாம் பார்க்கும்போது நாம் ஏதோ ஒரு புனித வாரத்தில் இருப்பது போல் தோன்றுகிறது"
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மதிய உணவிற்குக் கிளம்பிவிட்ட பிறகு, டாம்சொ ஒரு நாணயத்தை எடுத்து ஜூக் பாக்ஸில் போட்டுவிட்டு ஒரு மெக்ஸிக்கன் பாடலைத் தேர்வு செய்தான். அந்தக் கருவின் முள் எங்கிருக்கும் என்பது கூட அவனுக்கு மனப்பாடமாகத் தெரியும். ரோக் மேஜைகளையும் நாற்காலிகளையும் அரங்கின் பின்பக்கத்திற்கு நகர்த்திக்கொண்டிருந்தார்.
"என்ன செய்கிறீர்கள் ரோக்?"
"சீட்டு விளையாட வசதி செய்துகொண்டிருக்கிறேன்" என்றார். "பந்துகள் வந்து சேரும் வரை ஏதாவது செய்தாக வேண்டுமே. "
ஒவ்வொரு கையிலும் ஒரு நாற்காலியை சிரமப்பட்டுத் தூக்கி நகர்த்திக் கொண்டிருந்த ரோக்கைப் பார்த்தபோது, சமீபத்தில் விவகாரத்து பெற்றவர் போல் காட்சியளித்தார்.
''அவை எப்போது வரபோகின்றன ரோக்"
"ஒரு மாதத்தில் வந்துவிடும் என்று நம்புகிறேன்'
"அப்போது மக்களும் இங்கு மீண்டும் நடமாடத் தொடங்கிவிடுவார்கள்."
அங்கு போடப்பட்டிருந்த சின்ன மேஜைகளை ரோக் மனநிறைவோடு பார்த்தார். நெற்றியைப் புறங்கையால் துடைத்தவர் "அவர்கள் கை கழுவிவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன்" என்றார். "சனிக்கிழமையிலிருந்தே அந்த நீக்ரோவைப் பட்டினி போட்டுவருகிறார்கள். இருப்பினும் அவன் அதை எங்கே ஒளித்து வைத்திருக்கிறான் என்பதைச் சொல்ல மறுக்கிறான்.'' வியர்வையில் நனைந்திருந்த கண்ணாடி வழியாக டாம்சொவை அவர் அவதானித்தார்.
"நிச்சயம், அதை ஆற்றில் தூக்கிப் போட்டிருப்பான்."
டாம்சொ உதடுகளைக் கடித்துக்கொண்டான்.
"அந்த இருநூறு பெசோக்கள்?"
''அதையும் போட்டிருப்பான்!" என்றார் ரோக். 'அவனிடமிருந்து முப்பது பெசோக்களே கிடைத்தன."
இருவரும் ஒருவருடைய கண்களை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இருவருடைய பார்வையிலும் ஒரு சிக்கல் மறைந்திருக்கிறது என்பதை டாம்சொ உணர்ந்திருந்த போதிலும் அதை அவன் கவனத்தில் கொள்ளவில்லை. அன்று மதியம், குளியறையிலிருந்து ஆனா திரும்பியபோது ஒரு குத்துச்சண்டை வீரனைப் போல் டாம்சொ ஆடிக்கொண்டே வீடு திரும்புவதைக் கவனித்தாள். அவனைப் பின்தொடர்ந்து அறைக்குள் நுழைந்தாள்.
"எல்லாம் ஒரு வழியாக முடிந்தது" என்றான் டாம்சொ. "கிழவன் புதிய பந்துகளுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறான். இனி அதை அவர்கள் மறப்பதற்காகக் காத்துகொண்டிருக்க வேண்டியதுதான்."
"அந்த நீக்ரோ?"
தோள்களைக் குலுக்கியபடி "அது ஒரு பெரிய விஷயமேயில்லை" என்றான். “அவர்களால் பந்துகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அவனை விடுவித்து விடுவார்கள்."
மதிய உணவிற்குப் பிறகு வாயிற்கதவிற்கு வெளியே உட்கார்ந்தவர்கள் திரையரங்கில் ஒலிபெருக்கியை அணைக்கும்வரை அண்டை வீட்டாரோடு அளவளாவிக் கொண்டிருந்தார்கள். படுக்கைக்குத் திரும்பியபோது டாம்சொ தன்னை உற்சாகமாக உணர்ந்தான்.
"ஒரு பிரமாதமான யோசனை எனக்கு இப்போது தோன்றியது" என்றான் அவன்.
சாயங்காலத்திலிருந்தே அவன் எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை ஆனா உணர்ந்திருந்தாள். ''ஒவ்வொரு ஊராகப் போகப் போகிறேன்" என்று டாம்சொ தொடர்ந்தான். "ஒரு ஊரில் திருடிய பில்லியார்ட்ஸ் பந்தை மற்றொரு ஊரில் விற்பேன். ஒவ்வொரு ஊரிலும் ஒரு பில்லியர்ட்ஸ் அறை இருக்கிறது அல்லவா?"
''அவர்கள் உன்னைச் சுடும்வரை இல்லையா"
''சுடுவதா! யார்சுடுவார்கள்? அதெல்லாம் நீ படத்தில் தான் பார்க்க முடியும்'' என்றான் டாம்சொ. அறையின் மத்தியில் நின்றபடி அவனுடைய ஆர்வத்தை அவனே கேலி செய்தான். அதையெல்லாம் கவனிக்காதவள் போல் ஆனா உடை மாற்றத் தொடங்கினாள். ஆனால் உண்மையில் அவனுடைய பேச்சை அவள் மிகுந்த அக்கறையோடு செவிமெடுத்துக்கொண்டிருந்தாள்.
ஆட்காட்டி விரலால் சுவரில் ஒரு கற்பனையான அலமாரியை வரைந்தவன் ''நான் கொஞ்சம் கோட் சூட் வாங்கலாம் என்று உத்தேசித்திருக்கிறேன்" என்றான். "பார்! இதிலிருந்து அதுவரை ஐம்பது ஷூக்கள் வாங்கப் போகிறேன்.''
"ஆண்டவன் விரும்ப வேண்டுமே" என்றாள் ஆனா. டாம்சொ அவளை முறைத்துப் பார்த்தான்.
"என்னுடைய விஷயத்தில் உனக்கு ஆர்வமேயில்லை போலிருக்கிறது.”
”ஆமாம். இம்மாதிரியான விஷயங்களில் எனக்கும் உனக்கும் ரொம்ப தூரம்தான்” என்றவள் விளக்கை அணைத்துவிட்டுச் சுவரைப் பார்த்துத் திரும்பிப் படுத்துக்கொண்டாள். மிகுந்த கசப்புணர்வோடு 'உனக்கு முப்பது வயதாகும்போது எனக்கு நாற்பத்தி ஏழு வயதாகிவிடும்" என்றாள்.
"சிறுபிள்ளைத்தனமாகப் பேசாதே" என்றான் டாம்சொ.
பேண்ட் பாக்கெட்டில் தீப்பெட்டியைத் தேடினான். சற்று குழம்பிப்போய் "இனி இந்தத் துணிகளைக் கட்டிக்கொண்டு நீ மாரடிக்கத் தேவையில்லை" என்றான். ஆனா அவனிடம் தீப்பெட்டியைக் கொடுத்தாள். நெருப்பு எரிந்து அடங்கிய பிறகு தூக்கி எறியும்வரை அதைப் பார்த்துக்கொண்டே நின்றாள். டாம்சொ படுக்கையில் படுத்தபடி பேசிக்கொண்டே இருந்தான்.
"பில்லியார்ட்ஸ் பந்துகளை எதிலிருந்து தயாரிக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?"
ஆனா பதில் சொல்லவில்லை.
"யானையின் லத்தியிலிருந்து தயாரிக்கிறார்கள்" என்ற டாம்சொ பேச்சை மேலும் தொடர்ந்தான். "பந்துகள் வந்துசேர ஒரு மாதம் ஆகும் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லையாம். உன்னால் நம்ப முடிகிறதா?"
"தூங்கு" என்று குறுக்கிட்டாள் ஆனா, ''காலை ஐந்து மணிக்கு நான் விழிக்க வேண்டியிருக்கிறது."
டாம்சொ அவனுடைய இயல்பிற்குத் திரும்பினான். படுக்கையில் படுத்தவாறு புகைப்பிடித்தபடியே காலையைக் கழித்தான். மதியம் ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு வெளியே கிளம்ப தயரானான். இரவை, பில்லியர்ட்ஸ் அறையில் இருந்த ரேடியோவில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த பேஸ்பால் சாம்பியன்ஷிப் போட்டியைக் கேட்பதில் கழித்தான். அவனுடைய திட்டங்களையெல்லாம்.அவன் சந்தோஷமாக மறந்துவிட்டிருந்தான். காரணம் அதைப் பற்றி அவன் யோசித்தாக வேண்டுமே.
சனிக்கிழமை மனைவியிடம் "உன்னிடம் ஏதாவது பணம் இருக்கிறதா?" என்று கேட்டான்.
"பதினொரு பெசோக்கள் இருக்கின்றன. ஆனால் அது வாடகைப் பணம்" என்றாள் ஆனா.
"சரி, நாம் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வோம்."
"என்ன?"
"அதை என்னிடம் கொடு"
''நாம் வாடகை கொடுத்தாக வேண்டும்.'
"பிறகு கொடுக்கலாம்."
ஆனா அவசரமாக மறுத்தாள். அவளுடைய மணிக்கட்டைப் பற்றி அவளை மேஜையிலிருந்து எழவிடாமல் தடுத்தான். அங்குதான் சிறிது நேரத்திற்கு முன் அவர்கள் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டு இருந்தார்கள்.
அவளுடைய கையைக் கவனத்தைத் திருப்பும் விதமாகச் செல்லமாக வருடியவன். "எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான்" என்றான், “நான் பந்துகளை விற்றவுடன் எல்லாவற்றிற்கும் போதுமான பணம் கிடைத்துவிடும்."
ஆனா அதற்கு மசியவில்லை.
அன்றிரவு டாம்சொ அவளைத் திரைபடத்திற்கு அழைத்துச் சென்றான். இடைவேளையின் போது நண்பர்களைப் பார்த்து அளவளாவும்போது கூட அவளுடைய தோள்களின் மீது இட்டிருந்த கையை அவன் எடுக்கவில்லை. அவர்கள் அரைகுறையாகப் படத்தைப் பார்த்து முடித்தார்கள். படம் முடித்தபோது டாம்சொ பதற்றம் அடைத்தான்.
"இனி பணத்தை நான் கொள்ளை அடிக்கத்தான் வேண்டும்" என்றாள்.
ஆனா தோள்களைக் குலுக்கிக்கொண்டாள். “சந்திக்கப்போகும் முதல் மனிதனை நான் கொள்ளையடிக்கப் போகிறேன்" என்ற டாம்சொ அவளை அழைத்துக்கொண்டு திரையரங்கிலிருந்து கூட்டத்தை விலக்கியடி வெளியேறினான். “பிறகு கொலைக் குற்றத்திற்காக அவர்கள் என்னை ஜெயிலுக்குக் கொண்டுபோவார்கள்." ஆனா மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். அந்தக் கொந்தளிப்பான இரவிற்குப் பிறகு வந்த மறுநாள் காலையில் டாம்சொ பளிச்சென்று ஆடை அணிந்திருந்தபோதும் பதற்றத்தோடு காணப்பட்டான். அவன் மனைவிக்கு அருகில் சென்று உறுமினான் : “இனி நான் திரும்பப்போவதில்லை."
ஆனாவால் தன் நடுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. "உன் பயணம் சந்தோஷமாக அமையட்டும்” என்று கத்தினாள்.
கதவை அறைந்து சாத்திய பிறகு டாம்சொவிற்கு முடிவுறாத அந்த வெறுமையோடிய ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. எட்டு மணி பிராத்தனையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பெண்களும் அவர்களுடைய குழந்தைகளும் பளிச்சென்று ஆடை அணிந்திருந்தார்கள்.. சந்தோஷத்தைப் பரப்பியவாறு அவர்கள் பிளாசாவைக் கடந்துசென்று கொண்டிருந்தார்கள். காற்றிலோ வெக்கை அதிகரித்துக்கொண்டிருந்தது.
அன்றைய தினத்தை அவன் பில்லியர்ட்ஸ் அறையில் கழித்தான். காலையிலேயே ஒரு குழுவாக மக்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். மதிய உணவிற்குக் கொஞ்சம் நேரத்திற்கு முன் கூடத்தில் வாடிக்கையாளர் கூட்டம் முண்டியடித்தது. இருந்தபோதும் நிறுவனம் அதன் கவர்ச்சியை இழந்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது. மாலையில் பேஸ்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்துகொண்டிருந்தபோதுதான் அது பழைய ஸ்திதிக்குச் சிறிது மீண்டது.
பில்லியர்ட்ஸ் அறையை அவர்கள் மூடியபிறகு டாம்சொவிற்கு எங்கு போவது என்று தெரியவில்லை. பிளாசா வெறுமையோடிக் கிடந்தது. தொலைவில் ஒலித்துக்கொண்டிருந்த இனிமையான இசையைக் கேட்டபடி துறைமுகத்திற்கு அருகில் இருந்த தெருவில் நுழைந்தான். தெருமுனையில் ஒரு நடன அரங்கு இருந்தது. காகித மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பெரிய நடன அரங்கினுள் ஆட்கள் எவருமில்லை. அந்த நடன அரங்கிற்குப் பின்புறமிருந்த அறையின் மரமேஜையில் ஓர் இன்னிசைக் குழு பாடலொன்றை இசைத்துக்கொண்டிருந்தது. ஒப்பனைப் பொருட்களின் மணம் மூச்சடைக்கச் செய்தது.
டாம்சொ ஒரு மூலையில் அமர்ந்தான். இசைத் தொகுப்பு முடிந்தபோது அந்த இசைக் குழுவில் தாளம் தட்டிக்கொண்டிருந்த பையன் ஒருவன் நடனமாடிக் கொண்டிருந்த ஆட்களிடம் பணம் வசூலிக்கத் தொடங்கினான். அறையின் நடுவில் நடனமாடிக் கொண்டிருந்த பெண்ணொருத்தி அவளது ஜோடியைக் கழற்றி விட்டுவிட்டு டாம்சொவை நெருங்கினாள்.
""என்ன விசேஷம் வாலண்டினோ?"
டாம்சொ அவனுக்கு அருகிலிருந்த இருக்கையைக் காட்டினான். அதீத ஒப்பனையோடு காதில் பூ சொருகியிருந்த விடுதிப் பணியாளன் ஒருவன் உச்சஸ்தாயியில் குரல் கொடுத்தான்: "என்ன வேண்டும்?"
அவள்
டாம்சொவைப்
பார்த்தாள்.
"என்ன குடிக்கலாம்?"
”ஒன்றும் வேண்டாம்."
"இது என்னுடைய விருந்து."
"அதற்கில்லை.." என்று மென்று விழுங்கினான் டாம்சொ.
"எனக்குப் பசிக்கிறது"
'பாவம்'' என்று பெருமூச்சு விட்டான் விடுதிப் பணியான். ''அந்தக் கண்களைப் பார்த்தாலே தெரிகிறது.''
இருவரும் அறையின் பின்பக்கத்திலிருந்த உணவுவிடுதிக்குள் நுழைந்தார்கள். அவளுடைய உடல் வடிவைப் பார்த்தால் சின்னப் பெண் போல் தெரிகிறது. அவளுடைய ஒப்பனையும் உதட்டுச்சாயமும் உண்மையான வயதைத் தெரிந்து கொள்ள விடாமல் தடுக்கிறது. அவர்கள் உணவு சாப்பிட்ட பிறகு, டாம்சொ அவளைப் பின்தொடர, முற்றத்திற்குப் பின்னால் இருந்த இருட்டறைக்குப் போளார்கள். அங்கு உறங்கிக்கொண்டிருந்த மிருகங்களின் மூச்சொலியை அவர்களால் கேட்க முடிந்தது. குழந்தை ஒன்று படுக்கையை ஆக்கிரமித்து இருந்தது. நைந்துபோன துணியால் அது மூடப்பட்டிருந்தது. அந்தப் பெண் கந்தல் துணிகளை எடுத்து பெட்டியில் போட்டுவிட்டு குழந்தையை எடுத்து அதன் மேல் வைத்தாள். பிறகு பெட்டியைத் தரையில் எடுத்துவைத்தாள்.
"எலிகள் அவனைத் தின்றுவிடும்" என்றான் டாம்சொ.
“இல்லை. அவை அவனை ஒன்றும் செய்யாது" என்றாள் அவள்.
.அவள் சிகப்புநிற ஆடையைக் களைந்துவிட்டு, குட்டைக் கழுத்துடைய, பெரிய மஞ்சள் நிறப் பூக்கள் நிறைந்த ஒரு புதிய ஆடைக்கு மாறினாள்.
"இவனுடைய அப்பா யார்?"
"அதைப் பற்றி நான் கொஞ்சமும் யோசித்ததில்லை" என்றாள் அவள். பிறகு, வாயிலை நோக்கிப் போனவள் அங்கிருந்தபடியே, "நான் சீக்கிரம் வந்துவிடுவேன்" என்றாள்.
அவனுக்கு அவள் கதவைச் சாத்தும் சப்தம் கேட்டது. உடைகூடக் களையாமல் படுக்கையில் படுத்தவாறு பல சிகரெட்டுகளைக் குடித்துத் தீர்த்தான். சமயங்களில் இசையின் ஓசை அதிகரித்தபோதெல்லாம் அவன் படுக்கையும் அதிர்ந்தது. அவனை அறியாமலேயே அவன் தூங்கிவிட்டான். விழித்தெழுந்தபோது, இசை எதுவும் கேட்காததால் அறை பெரிதாகக் காட்சியளித்தது.
அவள் படுக்கைக்கு அருகில் உடை களைந்துகொண்டிருந்தாள்.
"இப்போது நேரம் என்னவாக இருக்கும்?"
"ஏறத்தாழ நான்கு மணி இருக்கும்" என்றவள், ''குழந்தை அழுததா?" என்று கேட்டாள்.
"அழுத மாதிரி தெரியவில்லை" என்றான் டாம்சொ.
அவள் டாம்சொவிற்கு அருகில் நெருக்கியடித்துக்கொண்டு படுத்துக் கொண்டாள். மெதுவாக அவனுடைய சட்டையைக் கழற்றத் தொடங்கினாள். அவளுடைய கண்கள் அவனையே ஆராய்ந்து கொண்டிருந்தன. அவள் அளவுக்கு அதிகமாகக் குடித்திருக்கிறாள் என்பதை டாம்சொ புரிந்து கொண்டான். விளக்கை அணைக்க முயன்றான்.
"அதை அப்படியே விட்டுவிடு" என்றாள் அவள். ''எனக்கு உன் கண்களைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.''
விடிகாலையில் அந்த அறையில் வெளிச்சப்தங்கள் கேட்கத் தொடங்கின. குழந்தை அழுதது. அதை அவள் படுக்கைக்கு எடுத்துச் சென்று பாலுட்டினாள். எல்லோரும் தூங்கி விழும்வரை மூன்று வரியுள்ள ஒரு தாலாட்டுப் பாடலை அவள் பாடிக்கொண்டே இருந்தாள். அவள் எழுமணிக்கு விழித்துகொண்டதும் வெளியே சென்றதும் டாம்சொலிற்குக் தெரியாது அவள் அறைக்குத் திரும்பியபோது கையில் குழந்தையில்லை என்பதை டாம்சொ கவனித்தான்.
"எல்லோரும் துறைமுகத்திற்குப் போகிறார்கள்” என்றாள் அவள்.
அன்றிரவு ஒருமணி நேரத்திற்கு மேல் தான் தூங்கவேயில்லை என்பதை டாம்சொ உணர்ந்தான்.
”எதற்காக?”
"அந்தப் பந்துகளைத் திருடிய நீரோவைப் பார்க்க" என்றாள் அவள். "இன்று அவனைக் கொண்டுபோகிறார்கள்." டாம்சொ ஒரு சிகரெட் பற்ற வைத்தான். “பாவம்” என்று பெருமூச்சுவிட்டாள் அவள்.
“எதற்குப் பாவம்?" என்றான் டாம்சொ. "யாரும் திருடனாகும்படி அவனைக் கேட்டுகொள்ளவில்லையே."
அவனுடைய நெஞ்சில் தலைசாய்த்திருந்த பெண் ஒரு கணம் யோசித்தாள்.
பிறகு மெல்லிய குரலில்! “அது அவனில்லை" என்றாள்.
”யார் சொன்னார்கள்?"
"எனக்குத் தெரியும்” என்றாள் அவள். “சூதாட்ட அரங்கில் திருட்டு நடந்த அன்று, பக்கத்து அறையில்தான் குளோரியாவோடு அவன் முழு இரவையும் கழித்தான். மறுநாளும் அவன் அங்குதான் இருந்தான். அவனைத் திரையரங்கில் வைத்துக் கைது செய்ததாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள்."
”குளோரியா அதை போலீஸிடம் சொல்லியிருக்கலாமே.”
”நீக்ரோ அதை அவர்களிடம் சொல்லியிருக்கிறாள்" என்றாள் அவள். குளோரியாவின் அறைக்குப் போள் மேயர் அதைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டு அவளைக் கைது செய்யப் போவதாக மிரட்டியிருக்கிறார்.. கடைசியில் எல்லாம் இருபது பெசோவிற்கு முடிந்தது."
எட்டு மணி ஆவதற்குச் சிறிது நேரத்திற்கு முன் டாம்சொ எழுந்து கொண்டான்.
“இங்கு இரு" என்றாள் அவள். ”உனக்காக மதிய உணவிற்கு ஒரு கோழி எடுக்கிறேன்.''
சீப்பைப் பின்பாக்கெட்டில் வைத்துக்கொள்வதற்கு முன் உள்ளங்கையால் துடைத்தவன். இடுப்பைச் சுற்றி வளைத்து அவளை இழுத்து, ''என்னால் முடியாது'' என்றான். அவள் முகம் கழுவியிருந்ததால் பார்ப்பதற்கு உண்மையிலேயே ஒரு சின்னப் பெண் போல் காட்சியளித்தாள். அவளுடைய நீண்ட பெரிய கண்களைப் பார்த்தபோது ஒரு சோகம் இழையாடுவது தெரிந்தது. அவனுடைய இடுப்பை அவள் கட்டிக்கொண்டாள்.
"இங்கு இரு" என்று வற்புறுத்தினாள்.
"நிரந்தரமாகவா?"
ஒரு கணம் அவள் முகத்தில் ஒரு வெட்கம் தோன்றி மறைந்தது. உடன் சமாளித்துக்கொண்டாள்.
"ஜோக்கர்" என்றாள் அவள்.
அன்றைய தினம், காலை வேளையின்போது ஆனா தன்னைச் சோர்வாக உணர்ந்தாள். ஆனால் நகரத்திலோ கிளர்ச்சி பரவிக்கொண்டிருந்தது. வழக்கத்திற்கு மாறாக அந்த வாரம் வெளுப்பிற்கான துணிகளை வேகமாகத் திரட்டிவிட்டு நீக்ரோவைக் கொண்டுபோவதைப் பார்ப்பதற்காகத் துறைமுகத்திற்குப் போனாள். புறப்படப்போகும் படகுகளுக்கு அருகே ஒரு கூட்டம் பொறுமையில்லாமல் காத்துக்கொண்டிருந்தது. டாம்சொவும் அங்கிருந்தான்.
ஆள்காட்டி விரலால் டாம்சொவின் வயிற்றில் குத்தினாள் ஆனா.
திடுக்கிட்ட டாம்சொ "இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்" என்று கேட்டான்.
"உள்னைப் பார்க்கத்தான் வந்தேன்" என்றாள் அவள்.
டாம்சொ அருகிலிருந்த விளக்குக் கம்பத்தை மணிக்கட்டால் குத்தினான்.
"இழவு" என்றான் அவன்.
ஒரு சிகரெட்டைப் பற்றவைத்த பிறகு காலிப்பெட்டியை ஆற்றினில் எறிந்தான். ரவிக்கைக்குள்ளிருந்து மற்றொரு சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவனுடைய சட்டைப் பையில் வைத்தாள் ஆனா. டாம்சொ முதல் முறையாகச் சிர்த்தான்.
"நீ திருந்தப் போவதில்லை" என்றான் அவன்
ஆனா "ஹா ஹா” என்று சிரித்தாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்கள் நீக்ரோவைப் படகில் ஏற்றினார்கள். கயிற்றைக் கொண்டு அவனுடைய கைகளைப் பின்புறமாகக் கட்டியிருந்தார்கள். கயற்றின் ஒரு முனையை ஒரு போலீஸ்காரர் பிடித்துக் கொள்ள பிளாசாவினூடாக அவனை அழைத்து வந்தார்கள். பக்கவாட்டில் துப்பாக்கி ஏந்திய இரண்டு போலீஸ்காரர்கள் அவனோடு நடந்து வந்தார்கள். அவனுடைய சட்டை காணாமல் போயிருந்தது. கீழ் உதடு கிழிந்து தொங்கியது. ஒரு குத்துச்சண்டை விரனைப் போல் புருவம் வீங்கியிருந்தது. கூட்டத்தின் பார்வையை அவன் கௌரவமாகத் தவிர்த்து நடத்தான். பில்லியர்ட்ஸ் அறையின் வாயிலில் இரண்டு தரப்புகளையும் பார்ப்பதற்காகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது. தலை கவிழ்ந்தபடி அமைதியாக அவன் கடந்து செல்வதை பில்லியர்ட்ஸ் அறையின் முதலாளி பார்த்தார். கூட்டம் அவனை ஆர்வத்தோடு கவனித்தது.
படகு உடனேயே கிளம்பியது. கைகள் கட்டப்பட்டபடி படகின் மேல் தளத்தில் அவன் நின்றுகொண்டிருந்தான். அவனுடைய கால்கள் எண்ணெய் பீப்பாயில் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. ஆற்றின் மத்தியில், கடைசி சீழ்க்கையை அடித்தபடி படகு திரும்பியபோது நீக்ரோவின் முதுகு மட்டும் தெரிந்தது.
"பாவம்" என்று கிசுகிசுத்தாள் ஆனா.
அவளுக்கு அருகிலிருந்த யாரோ ”திருட்டுப் பயல்கள்" என்று சொன்னார்கள். "இப்படிப்பட்ட வெயிலை ஒரு சாதாரண மனிதனால் தாங்க முடியாது."
ஒரு அசாதாரண குண்டுப் பெண்மணியிடமிருந்துதான் குரல் வருகிறது என்பதை டாம்சொ கண்டுகொண்டான். பிளாசாவை நோக்கி நகரத் தொடங்கியபோது ஆனாவின் காதுகளில் “ரொம்ப பேசுகிறாய்" என்று கிசுகிசுத்தான். "இனி நீ செய்ய வேண்டியதெல்லாம் ஊரைக் கூட்டி முழுகதையையும் சொல்ல வேண்டியதுதான்." பில்லியர்ட்ஸ் அறையின் வாசல் வரை ஆனா அவனைப் பின்தொடர்ந்தாள்.
அவனை விட்டு நகர்ந்தபோது "தயவுசெய்து வீட்டிற்குப் போய் உடை மாற்றிகொள்'' என்றாள். "நீ ஒரு பிச்சைக்காரனைப் போல் காட்சியளிக்கிறாய். "
அந்த நிகழ்ச்சியால் கிளர்ச்சியுற்ற ஒரு கூட்டம் பில்லியர்ட்ஸ் அறைக்குத் திரும்பியது. எல்லா மேஜைகளுக்கும் வேண்டியதைக் கவனிப்பதற்கும் பரிமாறுவதற்கும் ரோக் முயற்சி செய்துகொண்டிருந்தார். டாம்சொ ரோக் தன்னைக் கடந்து செல்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தான்.
"ஏதாவது உதவி தேவையா ரோக்"
அரை டஜன் பீர் பாட்டில்களையும் கழுத்து ஒடிந்த கிளாஸ்களையும் ரோக் அவன் முன் எடுத்து வைத்தார்.
"நன்றி பையா."
டாம்சொ பாட்டில்களை மேஜைக்கு எடுத்துச்சென்றான். நிறைய ஆர்டர்கள் எடுத்தான். மதிய உணவிற்காக வாடிக்கையாளர்கள் கிளம்பும் மட்டும் பாட்டில்களை எடுப்பதும் கொடுப்பதுமாக இருந்தான். விடிகாலையில் அவன் அறைக்குத் திரும்பியபோது அவன் குடித்திருக்கிறான் என்பதை ஆனா தெரிந்துகொண்டாள். அவன் கையை எடுத்து வயிற்றில் வைத்தாள்.
"இங்கு பார்" என்றாள். "உன்னால் உணர முடிகிறதா?"
டாம்சொ ஆர்வம் காட்டவில்லை.
"அவன் இப்போது உதைக்கிறான்" என்றாள் ஆனா. "இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் இரவில் ஒரு குட்டி உதை கொடுக்கிறான்."
அவன் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தான். மறுநாள் அதிகாலையிலேயே கிளம்பியவன் நள்ளிரவில்தான் வீடு திரும்பினான். ஒரு வாரம் இப்படியே கழிந்தது. வீட்டில் இருந்த கொஞ்ச நேரத்திலும் சிகரெட் குடித்தபடி படுத்துக் கிடந்தான். பேச்சை அதிகம் தவிர்த்தான். ஆனா, அவனுடைய கவனத்தைக் கருவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தினாள். ஒரு சமயம் அவர்கள் வாழ்க்கையைத் தொடங்கியபோது அவன் இம்மாதிரி நடந்துகொண்டான். அதன் பிறகு அவன் மனம் கோணும் விதத்தில் அவள் நடந்துகொள்ளவில்லை. ஒருமுறை டாம்சொ அவளைப் படுக்கையில் தள்ளி முகத்தில் குத்த அவளுக்கு இரத்தம் கொட்டியது.
இம்முறை அவன் பொறுமையாகக் கரத்திருந்தாள். விளக்கிற்குப் பக்கத்தில் ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்துவைத்தான். அவனால் பசியையோ தாகத்தையோ பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் கெரெட் குடிக்காமல் இருக்கமுடியாது என்பதை அவள் தெரிந்துவைத்திருந்தாள். இறுதியாக, ஜூலை மாதத்தின் மத்தியில் ஒருநாள் டாம்சொ சாயங்காலம் வீடு திரும்பினாள். அவ்வேளையில் அவன் அவளைத் தேடியதைப் பார்த்து அவள் மிகவும் குழம்பிப் போயிருக்கிறான் என்று நினைத்து ஆனா பதற்றம் அடைந்தாள். அவர்கள் மௌனமாக உணவு உட்கொண்டார்கள். படுக்கைக்குச் சென்றபோதும் டாம்சொ குழம்பியே காணப்பட்டான். பிறகு தைரியத்தைத் திரட்டிக்கொண்டு அவன் சொன்னான்:
"நான் இந்த இடத்தை விட்டுப் போக வேண்டும்.”
"எங்கு?"
“எங்காவது.”
அறையைச் சுற்றி பார்வையை ஓட்டினாள் ஆனா. சுவர்களில் பருவ இதழ்களின் அட்டையை எடுத்து ஒட்டியிருந்தாள் அவள். நைந்து சாயம் போன திரை நட்சத்திரங்கள் சுவரை ஆக்கிரமித்திருந்தனர். எவ்வளவு படங்களை ஒட்டியிருக்கிறோம் என்பதையோ சுவர்களின் வண்ணம் என்ன என்பதையோ அவள் மறந்துவிட்டிருந்தாள்.
"உனக்கு என்னைச் சலித்துவிட்டது" என்றாள் அவள்.
"அப்படியில்லை" என்றான் டாம்சொ. "இந்த நகரம்தான் எனக்குச் சலித்துவிட்டது.**
”மற்ற நகரங்களை போல்தான் இதுவும்."
"என்னால் பந்துகளை விற்க முடியவில்லை” என்றான் டாம்சொ.
”அந்தப் பத்துகளை விட்டுத் தள்ளு” என்றாள் ஆனா. "எவ்வளவு காலத்திற்கு இந்தச் சக்தியை கொடுக்க ஆண்டவன் தயாராக இருக்கிறானோ அவ்வளவு காலத்திற்கு இந்தத் துணிகளோடு மல்லுகட்ட தான் தயாராக இருக்கிறேன். இனி இம்மாதிரியான விஷயங்களில் நீ ஈடுபடக் கூடாது" என்றாள். பிறகு மெதுவாக: "எப்படித்தான் இந்த வேலையைச் செய்யவேண்டும் என்ற எண்ணம் உனக்குக் தோன்றியதோ."
பதில் சொல்வதற்கு முன் சிகரெட்டைக் குடித்து முடித்தான் டாம்சொ.
"இது மிகவும் சாதாரண விஷயம். இது ஏன் யாருக்கும் தோன்றவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்றான் அவன்.
”பணத்திற்காக யாரும் இப்படிப் பந்துகளைத் திருடமாட்டார்கள்” என்றாள் ஆனா.
"நான் இதையெல்லாம் யோசிக்கவில்லை" என்றான் அவன். "திரும்பும்போது கல்லாவிற்கு அருகில் ஒரு பெட்டியைப் பார்த்தேன். இவ்வளவு கஷ்டப்பட்ட பிறகு எதற்குக் கைவீசிக்கொண்டு திரும்ப வேண்டும் என்று எடுத்து வந்து விட்டேன்."
"அதுதான் உன்னுடைய தவறு” என்றாள் ஆனா.
டாம்சொவின்
மனம் தணிந்தது. "புதிய பந்துக்கள் இன்னமும் வந்து சேரவில்லை” என்றான். "இப்போதெல்லாம் விலை அதிகம் என்ற அவர்கள் சொன்னதால் ஆர்டரை ரத்து செய்துவிட்டாதாக ரோக் சொன்னார்." பேசியபடியே மற்றொரு சிகரெட்டைப் பற்றவைத்தான். கெட்ட சிந்தனைகளில் மூழ்கிக் கிடந்த அவனுடைய இதயம் அவற்றிலிருந்து விடுபடுவதாக உணரத் தொடங்கினான்.
பில்லியார்ட்ஸ் மேஜையை விற்றுவிடலாம் என்று அந்த முதலாளி முடிவு செய்திருப்பதை டாம்சொ ஆனாவிடம் தெரிவித்தான். அது அதிகம் விலைபோகாது. விளையாட்டைப் புதிதாகக் கற்றுக்கொள்பவர்கள் பில்லியர்ட்ஸ் மேஜையின் துணியை அவர்களுடைய தந்திரங்களால் கிழித்து வைத்திருந்தார்கள். சதுரம் சதுரமாக ஓட்டு போட்டு முதலாளி அதைச் சரிசெய்திருந்தபோதும் அதைப் பார்த்தபோது அதை முழுமையாக மாற்றி ஆகவேண்டும் என்று தோன்றியது. இதற்கிடையில் அந்த பில்லியர்ட்ஸ் பந்துகளோடு வளர்ந்தவர்களுக்கு பேஸ்பால் சாம்பியன்ஷிப் போட்டியைக் கேட்பதைத் தவிர வேறு சந்தோஷம் இல்லை என்று ஆகிவிட்டது.
''ஆக, நம்மை அறியாமலேயே நாம் இந்த முழு நகரத்தையும் வேதனைக்குள்ளாக்கிவிட்டோம் என்று தெரிகிறது" என்றான் டாம்சொ.
"ஒன்றுமில்லாத விஷயத்திற்காக” என்றாள் ஆனா.
"அடுத்த வாரம் போட்டி முடிந்துவிடும்" என்றான் டாம்சொ.
"அது கூட அவ்வளவு மோசமில்லை. ஆனால் அந்த நீக்ரோவின் பாடுதான் படுமோசம்" என்றாள் ஆனா.
அவனுடைய தோளில் சாய்ந்தவள்; பழைய நாட்களில் சாய்ந்தது போல்; அவன் என்ன யோசித்துக்கொண்டிருக்கிறான் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவன் சிகரெட் குடித்து முடிக்கும்வரை பொறுமையாகக் காத்திருந்தாள். பிறகு தாழ்ந்த தொனியில் அவள் சொன்னாள்:
"டாம்சொ"
“என்ன விஷயம்?"
"அதைத் திருப்பிக்கொடுத்து விடு."
அவன் மற்றொரு சிகரெட்டைப் பற்றவைத்தான்.
"அதைத்தான் நானும் பல நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்'" என்றான் அவன். “ஆனால்.. இழவு.. அதை எப்படித் திருப்பி வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை."
ஆக பந்துகளைப் பொது இடத்தில் விட்டுச்செல்வது என்று அவர்கள் தீர்மானித்தார்கள். பிறகு, பில்லியர்ட்ஸ் அறையின் பிரச்னையை அது தீர்த்துவைத்து விடும் என்றாலும் நீக்ரோவின் பிரச்னையை அது தீர்த்து வைக்காதே என்று ஆனா யோசித்தாள். போலீஸ் அவனைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்காமலேயே பிரச்னையைத் தீர்த்துவைக்க முயலுபவனைப் பல வழிகளில் தேடத் தொடங்கும். மேலும் ஒரு சாத்தியப்பாட்டை அவள் மறந்துவிட்டிருந்தாள். பந்துகளைக் கண்டெடுக்கும் ஒருவன் அதைத் திருப்பிக் கொடுப்பதற்குப் பதிலாக அதை விற்க முயலுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
"சரி, எப்படியிருந்தாலும் இதைச் சரிசெய்ய வேண்டும் என்று தீர்மானித்தாயிற்று" என்ற ஆனா "இதை இப்போதே சரிசெய்துவிடுவோம்" என்றாள்.
பந்துகளை அவர்கள் தோண்டி எடுத்தார்கள். ஆனா அதை நாளிதழ்களால் பொதிந்து கொடுத்த விதம் அதனுள் இருக்கும் பொருளின் வடிவத்தை மறைக்கும் விதத்தில் இருந்தது. பின்பு அதைப் பெட்டியினுள் எடுத்து வைத்தாள்.
"நல்ல தருணத்திற்காக நாம் காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்" என்றாள் அவள்.
ஆனால் அதற்காக அவர்கள் பல வாரங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. திருட்டு நடந்து முடிந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் மாத இரவில் இருபதாம் தேதி டாம்சொ ரோக்கைச் சந்தித்தான். கல்லாவிற்கு அருகில் உட்கார்ந்த ரோக் விசிறியால் கொசுக்களை விரட்டிக் கொண்டிருந்தார். ரேடியோ அணைக்கப்பட்டிருந்ததால் அவருடைய தனிமை தீவிரப்பட்டிருப்பது போல் தோன்றியது.
"நான் சொன்னேன் அல்லவா" என்ற ரோக்கின் குரலில் அவருடைய தீர்க்கதரிசனம் பலித்துவிட்டது என்பதின் சந்தோஷம் படர்ந்திருந்தது.
"தொழில் படுத்துவிட்டது.''
இசைப்பேழையில் டாம்சொ ஒரு நாணயத்தைப் போட்டான். அந்த இசையும் சப்தமும் அவருடைய விசுவாசத்தின் குறியீடாக இரைச்சல் மிகுந்த சாட்சியாக அவனுக்குக் காட்சியளித்தன. ஆனால் இதையெல்லாம் ரோக் கவளிக்கவில்லை என்கிற விதமான எண்ணமும் அவனுக்கு இருந்தது. ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அவர் அருகில் உட்கார்ந்தான். குழப்பமான காரணங்களை அடுக்கியபடி அவருக்கு ஆறுதல் சொல்ல முயன்றான். அவரோ விசிறியின் இரைச்சலில் அவனுடைய வாதங்களையெல்லாம் உணர்ச்சிவசப்படாமல் நிராகரித்துகொண்டிருந்தார்.
"இதற்காக ஒன்றும் செய்யமுடியாது" என்று அவர் சொன்னார். "பேஸ்பால் சாம்பியன்ஷிப் போட்டி ரொம்ப நாள் நீடிக்காது."
"பந்துகளைக் கொண்டுவந்தால்..."
"பந்துகளை எளிதாகக் கொண்டுவர முடியாது.'
"நீக்ரோ அதைச் சாப்பிட்டிருக்க மாட்டான்."
"போலீஸ் அதை எல்லா இடங்களிலும் தேடியாயிற்று" என்றார் ரோக் எரிச்சல் படர்ந்த தொனியில்.
"அவன் அதை ஆற்றில் எறிந்திருக்கலாம்.”
"ஏதாவது அதிசயம் நிகழலாம் அல்லவா."
''உன்னுடைய பிரமைகளை எல்லாம் மறந்துவிடு பையா" என்றார் ரோக். "துரதிஷ்டம் என்பது நத்தை மாதிரி. அற்புதங்களில் எல்லாம் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?"
டாம்சொ அவ்விடத்தை விட்டு நகர்ந்தபோது படம் முடிந்திருக்கவில்லை. அந்த இருண்ட நகரில் நீண்ட மற்றும் உடைந்த வசனங்கள் ஒலிபெருக்கியின் மூலமாக எதிரொலித்துக்கொண்டிருந்தன. திறந்து கிடந்த வீடுகளில் அப்போதைக்கான ஏதோவொன்று மறைந்து கிடந்தது. டாம்சொ படம் ஓடிக்கொண்டிருந்த திசையில் சுற்றித் திரிந்தான். பிறகு நடன அரங்கு ஒன்றில் நுழைந்தாள்.
ஒரே சமயத்தில் இரண்டு பெண்களுடன் நடனமாடிக் கொண்டிருந்த வாடிக்கையாளன் ஒருவனுக்காக ஓர் இசைக்குழு இசையமைத்துக் கொண்டிருந்தது. சுவருக்கு எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஜாக் கிரதையாக உட்கார்ந்திருந்த சிலர் தபால்காரனுக்காகக் காத்துக்கொண்டிருந் தார்கள். டாம்சொ ஒரு மேஜையில் சென்று உட்கார்ந்தாள். விடுதிப் பணியாளனை அழைத்து பீர் கொண்டு வரும்படி சைகை புரிந்தான். பீரை பாட்டி லோடு குடித்தான். மூச்சு விடுவதற்காக சற்று நிறுத்தியவன் மீண்டும் தொடர்ந் தான். கண்ணாடிக் குவளையின் ஊடாக இரண்டு பெண்களோடு நடனமாடிக் கொண்டிருந்த ஒரு மனிதனை அவதானித்தான். நடனமாடிக்கொண்டிருந்த மனிதன் அந்தப் பெண்களை விட குள்ளமாகக் காட்சியளித்தான்.
படத்திற்குச் சென்றிருந்த பெண் நள்ளிரவில் திரும்பினாள். ஆண்கள் கூட்டம் ஒன்று அவளைப் பின்தொடர்ந்து வந்தது. அந்தக் கூட்டத்தில் டாம்சொவின் தோழியும் இருந்தாள். அவளுடைய நண்பர்களைத் தவிர்த்துவிட்டு அவள் டாம்சொவின் மேஜையில் வந்து அமர்ந்தாள்.
டாம்சொவோ அவளை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அரைடஜன் பீர்களைக் குடித்திருந்ததோடு அந்த மனிதனையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனோ எவரையும் பொருட்படுத்தாது மூன்று பெண்களோடு நடனமாடிக்கொண்டிருந்தாள். சிக்கலான நடன அசைவுகளின் நிமித்தம் அவனுடைய கவனம் திசைதிரும்பியது. அவன் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தான். கைகால்களோடு ஒரு வாலும் இருந்தால் அவன் மேலும் சந்தோஷமாக இருப்பான் என்று டாம்சொவிற்குத் தோன்றியது.
"எனக்கு அவனைப் பிடிக்கவில்லை" என்றான் டாம்சொ.
"சரி, பார்க்காதே" என்றாள் அவள்.
விடுதிப்பணியாளிடம் அவள் மேலுமொரு கிளாஸ் ஆர்டர் செய்தாள். நடன அரங்கு தம்பதியரால் நிறையத் தொடங்கியது. மூன்று பெண்களோடு நடனமாடிக்கொண்டிருந்த அந்த மனிதன், தான் மட்டும் அரங்கில் இருப்பதான கற்பனையில் ஆடிக்கொண்டிருந்தான். ஒரு நடனத் திருப்பத்தில் அவனுடைய கண்கள் டாம்சொவின் கண்களைச் சந்தித்தது. டாம்சொவிற்கு அவனுடைய முயல் பற்களைக் காட்டிச் சிரித்தவன் ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்தான். அவன் எரிச்சலடைந்து முதுகைத் திருப்பிக்கொள்ளும் வரை கண் இமைக்காமல் டாம்சொ அவனையே வெறித்துப் பார்த்தான்.
''அவன் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறான்' என்றான் டாம்சொ.
"அவன் ரொம்ப சந்தோஷமாகத்தான் இருக்கிறான்" என்றாள் அவள். "ஒவ்வொரு முறை நகருக்கு வரும்போதும் எல்லா விற்பனையாளர்களைப் போல் அவனும் நடனத்திற்கு அதிகச் செலவு செய்வான்."
டாம்சொ பார்வையை அவளைப் பார்த்துத் திருப்பினான்.
"பிறகு அவனோடு போக வேண்டியது தானே" என்றான் அவன். "எங்கு மூன்று நபருக்கு இடமிருக்கிறதோ அங்கு நாலாவது நபருக்கும் இடமிருக்கும்.''
பதில் பேசாமல் அவள் முகத்தைத் திருப்பி நடனத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். ஒவ்வொரு மடக்காகக் குடித்தாள். வெளிறிய மஞ்சள் உடை அவளுடைய வெட்கத்தை அதிகரித்துச் செய்தது. அடுத்த ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள். அது முடிந்தபோது டாம்சொ முணுமுணுத்தான். அவளோ, "பசியால் செத்துக்கொண்டிருக்கிறேன்” என்றாள். கையைப் பிடித்து கல்லாவை நோக்கி அழைத்தவள், "நீயும் என்னோடு சாப்பிட்டாக வேண்டும்" என்றாள். எதிர்திசையிலிருந்து மூன்று பெண்களோடு மகிழ்ச்சிகரமான அம்மனிதன் எதிர்பட்டான்.
"நில்" என்றான் டாம்சொ.
அவன் நிற்காமல் டாம்சொவைப் பார்த்துச் சிரித்தபடி நகர்ந்தான். அவனுடைய கூட்டாளிப் பெண்களைப் போக அனுமதித்த டாம்சோ அவனுடைய பாதையை வழிமறித்தான்.
"எனக்கு உன் பற்களைப் பிடிக்கவில்லை."
அவனுடைய முகம் வெளிறியது. இருந்தும் அவள் தொடர்ந்து புன்னகைத்தான். "எனக்கும்தான்'' என்றான்.
டாம்சொவை அந்தப் பெண் தடுப்பதற்குள் அவனுடைய முகத்தில் டாம்சொ ஒரு குத்துவிட்டான். அவன் நடன அரங்கின் நடுவில் உட்கார்ந்துவிட்டான். வாடிக்கையாளர்கள் எவரும் குறுக்கிடவில்லை. மூன்று பெண்களும் டாம்சொவின் இடுப்பைக் கட்டிக்கொண்டு கூச்சலிட்டபோது அவனுடைய கூட்டாளி அரங்கின் பின்பக்கத்திற்கு அந்த மனிதனைத் தள்ளிக்கொண்டு போனான். அடிவாங்கியதால் முகம் வீங்கிவிட்டிருந்த அவன் எழுந்துகொண்டான். குரங்கைப் போல் நடன அரங்கின் மையத்தை நோக்கி குதித்துக்கொண்டு வந்து கத்தினான்: "இசையைப் போடு."
இரண்டு மணி ஆனபோது அரங்கு ஏறக்குறைய காலியாகிவிட்டது. வாடிக்கையாளர்கள் இல்லாத பெண்கள் சாப்பிடத் தொடங்கியிருந்தார்கள். நல்ல வெக்கை, பீன்ஸ் சாதமும் வேக வைக்கப்பட்ட மாமிசமும் எடுத்துக்கொண்டு அவள் மேஜையை நோக்கி வந்தாள். ஸ்பூனைக்கொண்டு எல்லாவற்றையும் சாப்பிட்டாள். டாம்சொ ஒருவித எரிச்சலோடு அவளைப் பார்த்தான். அவனுக்காக ஒரு ஸ்பூன் சாதத்தை எடுத்தவள்: "வாயைத் திற" என்றாள்.
எழுந்துகொள்வதற்காக மேஜையில் கைகளை ஊன்றினான். அவள் சமநிலையைத் தக்க வைத்துகொண்ட போது விடுதிப் பணியாள் அவன்முன் தோன்றினான்.
”ஒன்பது எண்பது ஆகிவிட்டிருக்கிறது" என்றான் அவன்.
"இந்த விருந்து வீட்டில் நடக்கவில்லை."
டாம்சொ அவனை விலக்கியபடி நடந்தான். "எனக்குக் கிறுக்கர்களைப் பிடிக்காது" என்றான் அவன்.
விடுதிப் பணியாளன் டாம்சொவின் சட்டையை எட்டிப்பிடித்தான். பிறகு அந்தப் பெண்ணிடமிருந்து கிடைத்த சைகையால் அவனைப் போக அனுமதித்தவன் சொன்னான்: 'நீ எதைத் தொலைத்திருக்கிறாய் என்று உனக்குத் தெரியவில்லை."
வெளியே டாம்சொ தள்ளாடினான். நிலவொளியில் எழுந்த ஆற்றின் பிரகாசம் மூளைக்குள் சில சுவடுகளைத் தெளிவுபடுத்தியது, அவனுடைய வீட்டுக் கதவைப் பார்த்தபோது தான், நகரின் மறுபக்கத்தில் இருக்கிறது. டாம்சொவின் வீடு, தூக்கத்திலேயே தான் நடந்துவந்திருக்கிறோம் என்பது அவனுக்கு புரிந்தது. தலையை உலுக்கிக் கொண்டான். தன்னைக் குழப்பமாக உணர்ந்தபோதும் தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பதை அவசரமாக உணர்ந்தான். கதவின் கீல் கீறீச்சிடாமல் இருக்கவேண்டும் என்பதற்காக கதவை ஜாக்கிரதையாகத் திறந்தான்.
பெட்டியில் எதையோ தேடிக்கொண்டிருக்கிறான் என்பதை ஆனா புரிந்துகொண்டாள். விளக்கிலிருந்து வந்த வெளிச்சத்தைத் தவிர்ப்பதற்காகச் சுவரைப் பார்த்துத் திரும்பிப் படுத்துகொண்டாள். பிறகு தான் அவளுடைய கணவன் உடை களையாமல் நின்றுகொண்டிருந்தது அவளுக்கு உறைத்தது. உள்ளுணர்வின் ஒரு கீற்று அவளைப் படுக்கையிலிருந்து எழச் செய்தது. பெட்டிக்கு அருகில் பந்துப் பொட்டலத்தோடு டாம்சொ நின்று கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்து ஆள்காட்டி விரலை உதட்டில் வைத்தான்.
ஆனா படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தாள். கதவைப் பார்த்து ஓடியவாறு. “கிறுக்கன்” என்று முணுமுணுத்தாள். சட்டென்று தாழ்ப்பாளைப் போட்டாள். கைவிளக்கை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் போட்டுகொண்டான் டாம்சொ. ஓரிரு கூர்மையான கம்பிகளையும் ஒரு கத்தியும் எடுத்துப் போட்டுக் கொண்டவன் பொட்டலத்தைக் கையில் இடுக்கிக்கொண்டு ஆனாவைப் பிடித்துத் தள்ளினான். ஆனா அவளுடைய முதுகைக் கதவில் சாய்த்துக்கொண்டாள்.
"நான் உயிரோடு இருக்கும்வரை நீ இங்கிருந்து போக முடியாது" என்றாள் அமைதியாக.
டாம்சொ அவளைத் தள்ள முயன்றான். 'வழி விடு" என்றான் அவன். இரண்டு கைகளாலும் தாழ்ப்பாளை இறுக பிடித்துகொண்டாள். இருவரும் ஒருவருடைய கண்களை ஒருவர் இமைக்காமல் பார்த்துக்கொண்டார்கள். 'நீ ஒரு கழுதை" என்று கிசுகிசுத்தாள் அவள். "ஆண்டவன் எதை உன் கண்களுக்குக் கொடுத்திருக்கிறானோ அதை மூளையிலிருந்து எடுத்து விட்டான்.'' அவளுடைய தலைமயிரைப் பற்றி இழுத்த டாம்சொ, அவளுடைய கைகளை முறுக்கி தலை குனியவைத்தான்; பற்களை நறநறவென்று கடித்தபடி, 'வழி விடு என்று சொன்னேன்" என்றான். ஆனா டாம்சொவை ஓர் ஓரப் பார்வை பார்த்தாள். அது நுகத்தடியில் மாட்டிய எருதுவின் பார்வையை ஒத்திருந்தது. ஒரு கணம் அவளுடைய கணவன் அனுபவிக்கும் வலியைக் காட்டிலும் அதீதமான பொறுக்க முடியாத வலியை அவள் உணர்ந்தாள். இருந்த போதும் அவன் அவள் கண்ணீர் உகுக்கும் மட்டும் அவளுடைய தலை மயிரை முறுக்கிக்கொண்டே இருந்தான்.
''என்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தையை நீ கொல்லப் போகிறாய்" என்றாள் அவள்.
தரதரவென்று அவளை இழுத்த டாம்சொ, ஏறக்குறைய அவளைத் தூக்கிப் படுக்கையில் எறிந்தான். அவன் அவளை விட்ட உடனேயே அவள் படுக்கையிலிருந்து துள்ளி குதித்து அவனுடைய கால்களை கட்டிக் கொண்டாள். இருவரும் படுக்கையில் விழுந்தனர். பிணைந்து கிடந்த அவர்கள் எழ முயற்சித்தார்கள். "நான் கத்தப் போகிறேன்" என்று ஆனா அவனுடைய காதில் கிசுகிசுத்தாள். கோபத்தில் சீறிய டாம்சொ பந்துப் பொட்டலத்தால் ஆனாவின் மணிக்கட்டில் அறைந்தான். ஆனாவிடமிருந்து ஒரு சிறிய அழுகை வெளிப்பட்டது. கால்களின் பிடியைத் தளர்த்தியவள், அவன் கதவை நோக்கிப் போவதைத் தடுப்பதற்காக அவனுடைய இடுப்பைக் கட்டிக்கொண்டாள். பிறகு அவள் கெஞ்சத் தொடங்கினாள். "சத்தியமாக நானே அதை எடுத்துச் செல்கிறேன்" என்றாள் அவள். ”யாரும் கவனிப்பதற்கு முன் நான் அதைத் திருப்பி வைத்து விடுவேன்.” கதவை நெருங்க நெருங்க பந்தால் கைகளில் அறையத் தொடங்கினான் டாம்சொ. வலி பொறுக்க முடியாமல் போகும்போது ஒரு கணம் அவளுடைய பிடி தளரும். அவனைப் போக அனுமதிப்பாள். பிறகு அவனைக் கட்டிக்கொண்டு மீண்டும் கெஞ்சுவாள்.
"அது நான்தான் என்று ஒத்துக்கொள்கிறேன்'' என்றாள் அவள். "இப்படியே அவர்கள் என்னை ஜெயிலில் போடட்டும்."
டாம்சொ அவளைப் பிடித்துத் தள்ளினான். "இந்த மொத்த நகரமும் உன்னைப் பார்க்கும்" என்றாள் அவள். "இன்று பௌர்ணமி என்பது கூட உனக்கு தெரியவில்லை. நீ ஒரு சுத்த மடையன்." என்றாள். அவள் தாழ்ப்பாளைத் திறக்கும் முன் மீண்டும் அவனைப் பிடித்துக்கொண்டாள். பிறகு கண்களை மூடியபடி, "மிருகம், மிருகம்" என்று கத்தியவாறு அவனுடைய முகத்திலும் கழுத்திலும் மாறி மாறி அறைந்தாள். டாம்சொ அந்த அடிகளிலிருந்து தப்ப முயன்றான். ஆனா தாழ்ப்பாளைப் பிடித்து இழுத்தாள். அது கையோடு வந்துவிட்டது. அதை அவன் மண்டையை பார்த்து எறிந்தாள். டாம்சொ விலக முயற்சித்தான். தாழ்ப்பாள் தோள் எலும்பைத் தாக்கியது. கண்ணாடிச் சில்லு உடைந்தாற் போல் ஒரு சப்தம் எழுந்தது.
"வேசியே" என்று கத்தினான் அவன்.
அதே சமயத்தில் கத்தி ஆர்பாட்டம் செய்யக் கூடாது என்பதிலும் தீர்மானமாக இருந்தான். புறங்கையால் அவளுடைய காதில் அறைந்தான். ஒரு பெரிய அழுகையும் உடம்பு சுவரில் சென்று மோதியதையும் அவளால் உணர முடிந்தது. இருந்த போதும் திரும்பிப் பார்க்காமல் நடந்தான். கதவைச் சாத்தாமல் அவ்வறை விட்டு நகர்ந்தான்.
ஆனா தரையில் அமர்ந்திருந்தாள். வலியில் உணர்வு மழுங்கியிருந்தது. வயிற்றில் ஏதோ நிகழப் போகிறது என்று காத்திருந்தாள். சுவரின் மறுபக்கத்திலிருந்து அவர்கள் அழைத்தது ஏதோ புதைகுழியில் இருந்து அழைத்தது போல் இருந்தது. அழுகையை அடக்க உதடுகளைக் கடித்துகொண்டாள். எழுந்து உடையைத் திருத்தினாள். அவளுக்கு ஏனோ அது தோன்றவில்லை - அது முதல் தடவையில்லை என்றபோதும் - டாம்சொ அறைக்கு வெளியில் நின்றபடி திட்டம் பாழாகிவிட்டது என்று அவள் கத்தியபடி வெளியே வருவதற்காகக் காத்திருந்தான்.
இரண்டாவது தடவையாக மீண்டும் அவள் அதே தவறைச் செய்தாள் : அவள் கணவனைப் பின்தொடருவதற்குப் பதிலாகக் கதவை மூடிவிட்டு ஷுக்கள் அணிந்துகொண்டு படுக்கையில் அமர்ந்தவாறு அவனுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.
கதவு மூடப்பட்ட பிறகுதான் தான் திரும்பிச் செல்ல முடியாது என்பது டாம்சொவுக்குப் புரிந்தது. தெருமுனை வரை நாய்கள் ஊளையிட்டபடி அவனைத் தொடர்ந்தன. அதன் பிறகு ஒரு மயான அமைதி நிலவியது. அவன் நடைபாதையைத் தவிர்த்தான். உறங்கிக்கொண்டிருந்த நகரத்தில் அவனுடைய நடையொலியே பெருத்த சப்தமாக எதிரொலித்தது. எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் பில்லியர்ட்ஸ் அறையின் பின்புறத்தை அடைந்தான்.
இம்முறை கைவிளக்கை பயன்படுத்தவேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்படவில்லை, கதவில் தாழ்ப்பாள் உடைந்த இடத்தை மட்டும் சீர் செய்திருந்தார்கள். ஒரு மரத்துண்டை வெட்டி எடுத்தவர்கள் ஒரு செங்கலையும் உருவியெடுத்திருந்தார்கள். பழைய தாழ்ப்பாளையே புதிய துண்டில் பொருத்திவிட்டுப் போயிருந்தார்கள். பிற அனைத்தும் முன்பு இருந்தது போலவே இருந்தது. இடதுகையால் தாழ்ப்பாளைப் பிடித்து இழுத்த டாம்சொ ஒரு கம்பியை எடுத்து தாழ்ப்பாளுக்கு இடையில் செருகி கியர் லிவரை மாற்றுவது போல் அதை வேகமாக முன்னும் பின்னும் அசைத்தான். மரத்துண்டு உடனேயே அசைந்து வழிவிட்டது. கதவைத் தள்ளித் திறப்பதற்கு முன், தரையில் அதன் கீறீச்சிடல் கேட்காமல் இருப்பதற்காக ஜாக்கிரதையாக முடிந்த மட்டும் சப்தத்தைத் தவிர்த்துக் கதவை பாதி மட்டுமே திறந்தான். இறுதியாக ஷுக்களைக் கழற்றிப் பந்துப் பொட்டலங்களோடு அறைக்குள் நழுவ விட்டான். உடம்பைக் குறுக்கி நிலவொளி நிறைந்திருந்த அறைக்குள் நுழைந்தான்.
அவனுக்கு முன்னிருந்த அந்த இருட்டான நடைபாதையில் பாட்டில்களும் காலிபெட்டிகளும் நிறைந்திருந்தன. அதற்குச் சற்று தூரத்தில், வானிலிருந்து விழுந்துகொண்டிருந்த நிலவொளிக்கு அப்பால் அந்த பில்லியர்ட்ஸ் மேஜை இருந்தது. அருகில் குட்டி மேஜைகள் போடப்பட்டிருந்தன. வாசல் கதவிற்கு முன்னால் நாற்காலிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த நிலவொளியும் இறுக்கமான அமைதியும் தவிர எல்லாம் முன்பிருந்தது போலவே காட்சியளித்தன. அது வரை பதற்றத்தைத் தணிக்க முயன்று கொண்டிருந்த டாம்சொ சட்டென்று ஒருவித வினோத கவர்ச்சிக்கு ஆட்பட்டான்.
இம்முறை உதிரி செங்கல்களை அவன் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. கதவை ஷூவால் மூடினான். நிலவொளியைக் கடந்தவுடன் கைவிளக்கை ஏற்றியவன் கல்லாவிற்கு அருகில் பந்துகள் வைக்கப்பட்டிருந்த அந்த சின்னப் பெட்டியைத் தேடினான். எவ்வித எச்சரிக்கையுமின்றி செயல்பட்டான். கைவிளக்கை இடமும் வலமும் நகர்த்தியபோது தூசி மண்டிய ஜாடிகள் ஒரு மூலையில் குவிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தான். ஒரு ஜோடி ஷூக்கள், எண்ணெய் பிசுக்கேறிய சட்டை மற்றும் அவன் தேடிய அந்தப் பெட்டி எல்லாம் அவன் விட்டுச் சென்றவாறே அங்கிருந்தன. கல்லாவிற்கு அருகில் செல்லும் வரை அவன் கைவிளக்கை அணைக்கவில்லை. அந்தப் பூனை அங்கிருந்தது. எந்தவித மர்மத்தையும் வெளிப்படுத்தாத அந்தப் பூனை வெளிச்சத்தை மீறி அவனைப் பார்த்தது. டாம்சொ விளக்கை அணைக்கவில்லை. அந்தப் பூனையை அந்த இடத்தில் அன்று தான் பார்க்க வில்லை என்பது டாம்சொவின் நினைவிற்கு வந்தபோது அவனுள் மெல்லிய நடுக்கம் பரவியது. கைவிளக்கை அதன் முன் வீசியவன் "பூனை...." என்று மிரட்டியபோது அதனிடமிருந்து எவ்வித சலனமும் வெளிப்படவில்லை. அவனுடைய தலைக்குள் சத்தமில்லாமல் ஏதோ நிகழ்ந்தது. உடன் அவனுடைய நினைவிலிருந்து அந்தப் பூனை சுத்தமாகக் காணாமல் போய் விட்டது. என்ன நடக்கிறது என்று அவன் உணருவதற்குள் அவன் கையிலிருந்து கைவிளக்கு நழுவி விட்டிருந்தது. பந்துப் பொட்டலத்தை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான். அறை விளக்கு ஏற்றப்பட்டது.
"நல்லது''
ரோக்கின் குரலை அவனால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. மெதுவாக எழுந்தான். வயிற்றை ஏதோ கலக்கியது. அறையின் பின்புறத்திலிருந்து ரோக் அவனை நெருங்கினார். கால்சட்டை அணிந்திருந்தார். கையில் ஓர் இரும்புத் தடி இருந்தது. திடீரென்று எழுந்த வெளிச்சம் கண்களைக் கூசச் செய்தது. பாட்டில்களுக்கும் காலிப்பெட்டிகளுக்கும் பின்னால் ஒரு படுக்கை போடப்பட்டிருந்தது. அதைக் கடந்துதான் டாம்சொ உள்ளே நுழைந்தான். அதுவும் முன்பிருந்தது போல் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது.
அவர்களுக்கு இடையிலான தூரம் முப்பது அடிக்கும் குறைவாக இருந்தபோது ரோக் நம்பிக்கை அளிப்பவராகக் காட்சியளித்தார். சட்டென்று டாம்சொ பந்துப் பொட்டலத்தால் அவருடைய கையைத் தாக்கினான். ரோக் நாசியை உறிஞ்சிக்கொண்டார். கண்ணாடி இல்லாதபோதும் தலையை நீட்டி அவனை அடையாளம் காண முயன்றார். "நீயா?" என்று ஆச்சரியப்பட்டார்.
டாம்சொ எல்லாம் ஒரு முடிவுக்கு வந்ததாக உணர்ந்தான். ரோக் தடியைத் தாழ்த்தினார். வாய் பிளந்தபடி அவனை நெருங்கினார். கண்ணாடியும் பொய்ப் பற்களும் இல்லாத அவர் பார்ப்பதற்கு ஒரு யுவதியைப் போல் காட்சியளித்தார்.
"இங்கு என்ன செய்கிறாய்?"
"ஒன்றுமில்லை" என்றான் டாம்சொ.
அவனுடைய நிலையை மெதுவாக மாற்றியவாறு முன்னேறினான்.
"இங்கு என்ன செய்துகொண்டிருந்தாய்?” என்று கேட்டார் ரோக்.
டாம்சொ பின்னகர்ந்தான். "ஒன்றுமில்லை" என்றான். ரோக்கின் முகம் சிவந்தது. உடல் நடுங்கியது. தடியை உயர்த்தியபடி முன்னகர்ந்தவர் "இங்கு என்ன செய்துகொண்டிருந்தாய்?" என்று கத்தினார். டாம்சொ பொட்டலத்தை அவரிடம் கொடுத்தான். எச்சரிக்கையாக, அதை இடது கையால் வாங்கிகொண்ட ரோக் விரல்களால் அதைப் பரிசோதித்தார். பிறகு அவருக்குப் புரிந்தது.
“இது…”
அவர் ரொம்பக் குழம்பிவிட்டார். தடியைக் கல்லாவின் மேல் வைத்துவிட்டுப் பொட்டலத்தைப் பிரித்தவர் டாம்சொ அங்கிருப்பதையே மறந்துவிட்டாற்போல் காட்சியளித்தார். அமைதியாக அந்தப் பந்துகளைப் பார்த்தபடி யோசனையில் மூழ்கினார்.
"இவற்றைத் திருப்பி வைக்க வந்தேன்" என்றான் டாம்சொ.
"நல்லது" என்றார் ரோக்.
டாம்சொ உறுதியை இழந்திருந்தான். போதை முழுதாக இறங்கி விட்டிருந்தது. அதன் சுவை மட்டும் நாக்கில் கொஞ்சம் படிந்திருந்தது. தனிமையாக உணர்ந்தான். பொட்டலத்தைக் கட்டிய ரோக் "ஆக இதுதாள் அந்த அதிசயம் இல்லையா" என்றார். "என்னால் நம்பவே முடியவில்லை, நீ இப்படியொரு மடையனாக இருப்பாய் என்று." அவர் தலையை உயர்த்தியபோது அவருடைய முகபாவம் மாறியிருந்தது.
"அந்த இருநூறு பெசோக்கள்?"
"மேஜையில் ஒன்றுமே இல்லை” என்றான் டாம்சொ.
எதையோ யோசித்தவர் வாயை வெறுமனே மென்றபடி அவனைப் பார்த்தார். பிறகு சிரித்தார். "அங்கு ஒன்றுமே இல்லைதான்" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டார். “ஆக அங்கு ஒன்றும் இல்லை" தடியை எடுத்தவர். மீண்டும் சொன்னார்: "இந்தக் கதையை நாம் இப்போது மேயரிடம் சொல்லப் போகிறோம்.'
கையில் படிந்திருந்த வியர்வையை டாம்சொ பேண்ட்டில் துடைத்தான்.
"அங்கு ஒன்றுமில்லை என்பது உனக்குத் தெரியும்."
ரோக் சிரித்துக்கொண்டே இருந்தார்.
"அங்கு இருநூறு பெசோக்கள் இருந்தன" என்றான் அவன். "இப்போது அவர்கள் நீ மறைத்து வைத்த இடத்திலிருந்து அதை எடுக்கப்போகிறார்கள். அது நீ திருடனாக இருந்ததற்காக அல்ல. ஒரு மடையனாக இருந்ததற்காக."
No comments:
Post a Comment