Tuesday 23 January 2018

சூரியபுராணம் : பேராற்றலின் உலக வடிவம் (பகுதி -1) - ஆத்மாநாம்


ஒரு குறிப்பு :

இந்த கட்டுரை ’வானம் வசப்படும்’ என்கிற தொலைக்காட்சி அறிவியல் நிகழ்ச்சிக்காக எழுதப்பட்டது. ஏறக்குறைய அந்த நிகழ்ச்சி படத்தொகுப்பு மேசையில் (Editing Table) 99 % முடிந்துவிட்ட நிலையில் அதனை தயாரித்த தனியார் தொலைக்காட்சி மூடப்பட்டுவிட்டது. ’வானம் வசப்படும்’ நிகழ்ச்சியில் நான் தொகுத்து வழங்கவிருந்த அறிவியல் விஷயங்களை தொடர்ந்து உங்களுடன் ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்கிறேன்.  



சூரியன் இல்லாத ஓர் உலகத்தை நம்மால் கற்பனை செய்து பார்க்கவே முடியாது . உலக சக்திகளின் பிறப்பிடம் சூரியன் தான் என்பதை இன்றைய விஞ்ஞானயுகத்தில் யாரும் மறுத்துப் பேச முடியாது. பூமியில் வாழும் அனைத்து உயிர்களின் ஆதார ஆற்றல் சூரியன் தான். பூமியின் காலநிலையும், வானிலையும் கூட சூரியனை சார்ந்துதான் மாறுபடுகின்றன. உலகம் முழுக்க சூரியனைப்பற்றி விதம்விதமான கதைகள் காலம்காலமாகவே தொன்றுதொட்டு இருந்து கொண்டு தான் வருகிறது. சூரியன் என்பது உலகளாவிய ஒன்று மட்டுமல்ல எல்லையில்லா இப் பிரபஞ்சத்தின் ஓர் முக்கிய குறியீடாகவும் அது திகழ்கிறது.  பூமிப்பந்தின் மாபெறும் உந்துசக்தியான அந்த சூரியனைப் பற்றிய பழங்கதைகளையும், தொல்நம்பிக்கைகளையும், விஞ்ஞான அதிசயங்களையும் இந்த கட்டுரையின் மூலம் ஒரளவு சொல்ல முயற்சி செய்கிறேன்.




சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்களுக்கு ஒரு புராதன கருத்து இருந்தது. மலைகள், கற்கள், மரங்கள், தாவரங்கள், மலர்கள், மிருகங்கள், நீர், நெருப்பு, காற்று இவை அனைத்துக்கும் சூரியனோடு ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக அவர்கள் நம்பினார்கள்அந்த நம்பிக்கைகளை பாறை ஓவியங்களாகவும், கல்லெழுத்துக்களாகவும், குறியீடுகளாகவும், சங்கேத வார்த்தைகளாகவும், தொல்கதைகளாகவும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் செதுக்கி வைத்துவிட்டு சென்றனர்அந்த சூரிய வட்டத்தின் வெளிச்சம் நற்பண்புகளின் தெய்வீக ஒளியாகவும், வழிபாட்டிற்குரிய ஒன்றாகவும் ஆதிகால மனிதர்களால் தொன்றுதொட்டு வணங்கப்பட்டு வந்துள்ளது.



பண்டைய எகிப்தியர் முதல் ஆஸ்டெக்குகள் வரைஅமேசான் நாகரிகம் தொடங்கி பால்டிக் நாடுகள் வரை புராணங்களிலும், மரபுகளிலும் கதிரவன் முக்கிய பங்கு வகித்து வந்திருக்கிறது. ஆசிய நாடுகள் மட்டுமல்லாது நமது இந்தியநாட்டின் பழம்பெறும் கதைகளிலும், புராணங்களிலும், வேத இதிகாசங்களிலும் சூரியனுக்கு என்று ஒரு தனி இடம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒவ்வொருதேசமும் அதற்கான கதைகளை விதம்விதமாக தொகுத்துக் கொண்டிருந்தாலும் அந்த மாறுபாடுகளின் மையமாக இன்றும் சூரியன் இருந்து வருகிறது. அந்தக்கதைகளை ஒருசேர தொகுத்துப் பார்க்கும்போது மனித இனத்தின் பாரம்பரியம் குறித்த அழகான வழித்தடம் ஒன்று காணக்கிடைக்கிறது. முதலில் நாம் இந்தப்பயணத்தை எகிப்திலிருந்து தொடங்கலாம்.  




தொன்மைக்கால எகிப்து மதத்தில் கூறப்படும் பிரபஞ்சத்தில் கதிரவன்தான் அவர்களின் மையப் பொருளாக இருந்தது. சூரியனை அவர்கள் கடினமான மேல் ஓடு உடைய ஒளிரும் ஓர் வண்டாக உருவகித்து வந்தனர். காலஓட்டத்தில் அதனை வட்ட வடிவமான ஓர் தகடாக உருவகித்தனர்.  அதைவிட கவனமாக சூரியனின் தினசரிப் பயணத்தை அவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். பகல்நேரம் முழுதும் ஒளிரும் சூரியன் இரவு நேரத்தில் எங்கே காணாமல் போய்விடுகிறது என்பதை அவர்கள் தங்களின் கதைகளில் ஒர் இரவுநேரப் பயணமாக விவரித்தனர். ஒவ்வொரு நாள் இரவும் சூரியக்கடவுளான ரே அவருடை மகன் பாரோவுடன் பாதாள உலகில் தன்னுடைய படகில் பயணம் செய்தார்.  அவருடன் பூமியில் பிறந்த அவரது மகனான பாரோவும் சேர்ந்துகொண்டார். ரே தனது பயணத்தில் பல சோதனைகளையும் சந்தித்தார். பல எதிரிகளை முறியடித்தார்




அபெபி என்ற ராட்சசபாம்பின் தாக்குதல்களை எதிர்கொண்டார். ஒருவகையில் சூரியக்கடவுளான ரே-க்கு ஒவ்வொரு விடியற்காலை என்பதும் ஏறக்குறைய மறுபிறப்புக்கு சமமாக கருதப்பட்டது.  ரே பூயின் தலைவனாக இருந்தபோது மனிதர்கள் அவருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். ரே கடவுள்களுடன் ஆலோசனை நடத்தி கிளர்ச்சியாளர்களை அடக்க அதிகப்பலசாலியான பெண் சிங்க வடிவிலான செஹ்மெட்டை அனுப்பினார்செஹ்மெட் தான் அவரது கண்ணாகவும் இருந்தது. சூரியனின் அனைத்து ஆற்றல்களின் உருவகமாக சூரியனின் கண் கருதப்படுகிறது. மனிதகுலத்தை முற்றாக அழிக்கவேண்டும் என்பது கடவுள்களின் நோக்கமல்ல. அவர்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்றே அவர்கள் கருதினார்கள். ஆனால் செஹ்மெட் சுயகட்டுப்பாட்டை இழந்து மனிதர்களை வெறியுடன் உண்ணத்தொடங்கியது. அதனால் செஹ்மெட்டை அமைதியடையச் செய்யவும், மனிதகுலம் முழுமையாக அழிந்துவிடாமல் பாதுகாக்கவும் எதிர்மருந்து ஒன்றை கண்டுபிடித்தார். ஏராளமான நீரை ஊற்றி அதில் சிவப்புச் சாயத்தை கலந்தார். பெண் சிங்கம் அதை குடித்து போதை ஏறியதால் அதன் கோபம் குறைந்தது. மனித குலம் காக்கப்பட்டது. நாளடைவில் மனிதர்களின் மீது அலுப்பு கொண்ட ரே பூமியை விட்டுப்போக தீர்மானித்து வானுலகத்து பசிவின் மீது ஏறி வானில் உயரே எழுந்தார்.

இயல்பு கடந்த நிகழ்ச்சிகளும், நம்பமுடியாத கற்பனைகளும் புராண, இதிகாசங்களின் தனிப்பண்புகளாகும். இவற்றில் சில சமயம் விலங்குகள் பேசும் ; பறவைகள் நெருப்பை கக்கும்; மனிதர்கள் விலங்குகளாக மாறுவார்கள்; செடிகொடிகள் பாம்பாக வடிவம் கொள்ளும்; கடவுளர்களும், கதாநாயகர்களும் அற்புத ஆற்றல்களை கொண்டவர்களாக இருப்பார்கள். ஒருவகையில் பார்த்தால் புராணங்களில் காணப்படும் கற்பனைகளுக்கு கட்டுப்பாடு என்று எதுவுமில்லை. உலக நிகழ்ச்சிகளை மூலப்பொருளாக கொண்டுதான் புராணங்கள் ஒரு கதையை உருவாக்கி கொள்கின்றனஇதன்மூலம் ஒரு கதையானது அது எடுத்துக்கொண்ட கருப்பொருளின் கைப்பாவையாக மாறி விடுகிறது என்று சொல்லலாம்.




ஆஸ்டெக்குகளின் பாரம்பரியக் கதைகளையே எடுத்துக்கொண்டால் இப்போது இருக்கும் சூரியனுக்கும் முன்னதாக நான்கு சூரியன்கள் இருப்பதாக அவர்கள் நம்பினர். இந்த கதைகள் அனைத்தும் ஸ்பானிய ஆக்கிரமிப்புக்கு பின் 1558ல் நஹூயாட்டலில் (Nahuatl) எழுதப்பட்ட சூரியன்களை பற்றிய கதையில் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு சூரியனும் ஒரு வித்தியாசமான காலத்தொடர்புடையதாக அவர்களால் விவரிக்கப்படுகிறது




நான்கு ஜாக்குவர்கள் (Four-Jaguar) என்கிற முதலாவது சூரியன் பூமியில் ராட்சதர்கள் வாழ்ந்த காலத்தில் ஒளிர்ந்துகொண்டிருந்தது.  ஆகாயம் சிதைந்தபொழுது அந்த இடிபாடுகளில் பூமியில் சிக்கிய அனைவர்களையும் ஜாக்குவார்கள் விழுங்கியதுஇரண்டாவது சூரியனானநான்காவது காற்றுபெறும் புயற்காற்றினால் அழிக்கப்பட்டது. அந்த புயற்காற்று மக்களை குரங்குகளாக மாற்றியது



மூன்றாவது சூரியன் எனப்படும்நான்கு மழைநெருப்பு மழையினால் அழிக்கப்பட்டது. அந்த நெருப்பு மக்களை வான்கோழிகளாக மாற்றியது. நான்காவது சூரியனாக கருதப்பட்டநான்கு தண்ணீர்பெறும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டதுஅந்த வெள்ளம் மலைகளை மூழ்கடித்தது. மக்களை எல்லாம் மீன்களாக உருமாற்றியது. அதில் உயிர் ஒரே ஒரு தப்பிய கணவன் மனைவியை மட்டும் இரவுக்கடவுளான டெஜ்காட்லிபோகா பாதுகாத்தார்




இந்த நான்கு சூரியன்களுக்கு பின்னர் ஐந்தாவதாக வந்ததுதான் இப்போதைய நமது சொந்தச் சூரியன். ஆஸ்டெக்குகள் இதனைநான்கு இயக்கம்என பெயரிட்டு அழைத்தனர். அது பூகம்பங்கள் மற்றும் பரவலான பஞ்சம் காரணமாக இறுதியில் அழிக்கப்படும். அந்த தீயநாளை தடுத்து நிறுத்திட சூரியனுக்கு தேவையான சக்தியை மனிதர்கள் வழங்கி அழிவை  ஒத்திபோட வேண்டியது அவசியம். மனிதர்களின் இந்த தியாகம் சூரியனுக்கு தேவையான எரிபொருளை வழங்குகிறது. உலகை உயிருடன் வைக்கிறது. ஐந்தாவது சூரியனை பற்றிய இந்த புராணக்கதை ஆஸ்டெக்குகள் மத்தியில் தியாகத்துக்கான புராணச் சடங்கு ஒன்று தோன்ற பின்னர் காரணமாக அமைந்தது.




ஃபிரெஞ்சு மானிடவியலாளர் கிளாட் லேவி-ஸ்டிராஸ் மனித மனத்தைகாட்டுமிராண்டி மனம்என்று வர்ணித்தார். அதே மனம்தான் தத்துவஞானிகளுக்கும், கணிதவியலாளர்களுக்கும் தீவிரமாக சிந்திக்கும் திறன் வாய்ந்ததாக இருந்து வந்திருக்கிறது. நாம் இருக்கும் உலகிலுள்ள தனிமங்களின் உதவியுடன் சிந்திக்கும் ஒரு மனமாகத்தான் அது விளங்குகிறதுஅதன் அடிப்படையில் பார்த்தோமானால்  புராணங்களில் வரும் கற்பனாரீதியான சில காட்சிகள் பல்வேறு இடங்களிலும், வரலாற்றுக் காலங்களிலும் தோன்றுவதில் வியப்பில்லை. ஆனால் இந்த காட்சிகள் யாவும் எங்கும் எப்போதும் ஒரே பொருளை குறிக்கும் என்று சொல்லமுடியாது.

அமேஸான் பகுதியை சேர்ந்த ஜிவாரஸ் இந்தியர்களின் புராணக்கதை இதை ஓரளவு மெய்ப்பிக்கக் கூடியதாகவே உள்ளதுஉலகை படைத்த கடவுளின் மகனான எட்சரா (Etsa) என்னும் பெயர் கொண்ட சூரியன் ஒருநாள் தூங்கும்போது தன்மீதே சேற்றை பூசிகொண்டார்.  அந்தச் சேறு நாண்டு (Nantu) என்ற சந்திரன் ஆனது. எட்சரா சூரியன் சந்திரனாகிய நாண்டுவுடன் இணை சேர விரும்பினார். ஆனால்  நாண்டு சூரியனுக்கு பதிலளிக்காமல் வான்வெளிக்குள் சென்று மறைந்துவிட்டது. எட்சரா சூரியன் நாண்டுவை மயக்கும் நோக்கத்துடன் தனது முகத்தில் வண்ணத்தை பூசிக்கொண்டு, மணிக்கட்டில் இரண்டு கிளிகளையும், முழங்காலில் இரண்டு குருவிகளையும் கட்டிகொண்டு  அது இருக்கும் இடத்திற்கு பறந்து சென்றார். இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மூண்டது.




இதனால் கோபமடைந்த எட்சரா சூரியன் நாண்டுவை அடித்தது. சந்திரமறைவு (Eclipse Of The Moon) ஏற்பட்டது. அதன்பின்னர் நாண்டு சூரியனை அடித்தது. கதிரவமறைவு (Eclipse Of The Sun)  ஏற்பட்டது. சூரிய-சந்திர கிரகணங்களை ஜிவாரஸ் இந்தியர்கள் இப்படித்தான் புரிந்து கொள்கிறார்கள். தொடர்ந்த சண்டையில் நாண்டு தோற்று அழுது முகம் சிவந்தது. அதனால்தான் வானில் சிவப்பு சந்திரன் தோன்றினால் மழைவரும் என்று இன்றும் நம்பப்படுகிறது. இறுதியாக சூரியன் எட்சராவும், சந்திரன் நாண்டுவும் கனுசா நதிக்கரையில் இணை சேர்ந்தனர்.இதனால் கர்ப்பமடைந்த சந்திரன் உனுசி எனும் கரடியை பெற்றது. அந்த உனுசி கரடிதான் ஜிவாரஸ் இந்தியர்களின் முன்னோராக கருதப்படுகிறது.

ஜிவாரஸ் இந்தியர்களின் இந்தக்கதை ஆதிகால மனிதமனங்களில் சூரியன் குறித்த அச்சமூட்டும் இருப்பும், முழு முதற்பொருளாக அது உலகில் இயங்கி வந்ததையும் காட்டுகிறது. அவர்களின் நம்பிக்கைகளின் படி கடவுள்கள் எவரும் கடவுள்களாக மட்டும் இல்லாமல், இயற்கையில் உறைந்து கிடக்கும் ஆற்றலின் வடிவமாக அல்லது பிரபஞ்ச அடிப்படை கூறின் ஒரு அம்சமாகவே அவர்கள் உள்ளனர். 




பால்டிக் நாடுகளின் பாரம்பரிய கதைகளில் வரும் லித்துவேனிய பாடல் ஒன்றில் சூரியன் ஆணாகவும், சந்திரன் பெண்ணாகவும் சித்தரிக்கப்படுகிறர்கள். சந்திரன் வைகறை நட்சத்திரங்களுடன் கூடி சூரியனுக்கு துரோகம் செய்ததால் அவர்கள் பிரிந்தனர் என்றும், கோபம் கொண்ட இடிக்கடவுளான பெர்குனாஸ் சந்திரனை வெட்டி அவனுக்கு தண்டனை வழங்கியதாகவும், இதன் காரணமாகவே சந்திரன் படிப்படியாக வளரும் நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.




பதின்மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்நூரி ஸ்டர்லூசன் என்பவரால் எழுதப்பட்ட ஐஸ்லாந்தின் பழங்கதை ஒன்றில்கூட காலத்தை வழிநடத்தும் முண்டில்ஃபரியின் குழந்தைகளாக  வரும் சூரியனும், சந்திரனும் சகோதர சகோதரிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர்.



கிரேக்க நாகரீக வரலாற்றில் அதன் கோட்பாடு மற்றும் இலக்கியங்களில் ஹைப்பீரியன் என்ற ஒளிக்கடவுள் பற்றியே அதிகமாக பேசப்படுகிறது. கிரேக்க இலக்கியங்களில் ஹீலியாஸ் எனும் இந்த புராதன கதாபாத்திரம் தான் சூரியனின் உருவகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிரேக்கர்களின் புராணக் கதையின் படி நட்சத்திரங்களின் இரவான யுரானசும், பூமி கடவுளான கேயியசும் இணைந்த போது அவர்களுக்கு ஹைப்பீரியன், தீயா எனும் டைட்டான்கள் பிறந்தனர். இவர்கள் இணைந்த போது சூரியக் கடவுளான ஹீலியாஸ் பிறந்தார். சிறப்பாக ரதம் செலுத்தும் வல்லமை கொண்ட ஹீலியாஸ் தனது சிறகுகள் பூட்டப்பட்ட ரதத்தில் கிழக்கிலிருந்து மேற்காக பூமியை சூழ்ந்திருக்கும் கடலின் மீது விடியற்காலை வரை பயணம் செய்பவராக இருந்தார். 

சூரியனுக்கு பாரசீகர்கள் வைத்த பெயர் மித்திரன். கிரேக்கர்கள் வைத்த பெயர் ஹீலியஸ். ரோமானியர்கள் வைத்த பெயர் சால் இன்விக்டஸ்.

(தொடரும்)

No comments:

Post a Comment