Saturday 20 January 2018

கவிதைகள் - ஓர் தன்னிலை விளக்கம் ( எனது பெயருக்கான விளக்கமும் கூட ) - ஆத்மாநாம்


கவிதைகள் என இங்கு பதிவிடுவது கவிதை என  நான் நம்பவில்லை.  இதுவரை நான் வாசித்த சிறந்த கவிஞர்களின் படைப்புகள் எனது ஆழ்மனத்தில் (SUB- CONSCIOUS) செலுத்திய பாதிப்பின் விளைவுகள் தான் இவை என்று கருதுகிறேன். ஆக இவை கவிதைகளல்ல, கிறுக்கல்கள்.

தமிழ் கவிஞர்களில் காலஞ்சென்ற ஆத்மாநாம் மறக்க முடியாமல் நினைவில் நிற்பவர். அவரின் கவிதைகள் மற்றும் பெயர் பாதிப்பில் தான் ஆத்மாநாம் என்கிற எனது பெயர். ஆக நான் இங்கு / இனிமேல் பதிவிடுவது எல்லாம் கவிதைகளல்ல, கிறுக்கல்கள். அதுவும் ஆத்மாநாம் என்கிற பெயரில் அல்ல. நட்சத்திரவாசி எனும் வலைப்பக்க பெயரில். 

கவிதைகள் பிரிவில் நான் எழுதும்  பதிவுகளை ஆத்மாநாம் எனும் பெயரில் என்றுமே குறிப்பிட மாட்டேன். முதற்காரணம் மேற் சொன்னதே. இரண்டாவது சுப்ரபாரதிமணியனும், லஷ்மி மணிவண்ணனும். 

இவர்கள் இருவரும் என்னிடம் கேட்டது / கேட்டுக்கொண்டது :

சுப்ரபாரதிமணியன் கேட்டது :

ஆத்மாநாம் என்கிற பெயரில் ஒருவர் இருக்கும்போது அந்த பெயர் உங்களுக்கு தேவை தானா ?

அப்போது என் மனதில் தோன்றியது :

ஸ்டாலின், அம்பேத்கர், பெரியார், சேகுவேரா பெயர்களில் பலரும் இருக்கத்தானே செய்கின்றனர். அவர்களுக்கு அந்த பெயர்கள் அதன் மூலவர்கள் மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் இடப்பட்டது தானே. 

லஷ்மிமணிவண்ணன் கேட்டுக்கொண்டது :

ஆத்மாநாம் எனும் பெயர் என் ஆழ்மனதில் மிகுந்த பாதிப்புடன் உறைந்து போயிருப்பதால் தாங்கள் இனி அந்த பெயருடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க முடியுமா ?

நான் உடனே பதிலளித்தது : 

என்னால் புரிந்து கொள்ள முடிகிறது தோழர். இனிமேல் நான் எனது இயற்பெயரிலேயே தங்களை தொடர்பு கொள்கிறேன். 

ஆக கவிதைகள் வரையில் நான் ஆத்மாநாம்  அல்ல . ஆனால் எனது சிந்தனைக்கான அனைத்து விதமான சாத்தியங்களும்  ஆத்மாநாம் எனும் பெயரில் தான் வெளிப்படும். காரணம் அவர் தொடாத விஷயங்களை ( இது அவர் தேர்ந்து கொண்டது அல்ல ) நான் தொடுகிறேன். தொடவிருக்கிறேன். 

ஒருவகையில் நான் ஆத்மாநாமை பூரணப்படுத்துகிறேன். அது அன்பின் வெளிப்பாடும் கூட.

ஆத்மாநாம் பாதிப்பில் என் கிறுக்கல் :

தற்கொலைக் கணங்களிலேயே 
நகர்ந்து கொண்டிருக்கிறது
வாழ்வு.
இன்னமும் 
கைக்கெட்டாத தூரத்தின் மிச்சமாய்
மரணம்.

இனி எனது கவிதைகள் பதிவில் தொடர்ச்சியாக வரும் நட்சத்திரவாசியின் கிறுக்கல்களை வாசிக்கலாம்.





1 comment: