Saturday, 31 March 2018

அவள்


கண்ணீரின் உப்புச்சுவைக்கும்
மூச்சடைத்து உலகங்கள் ஸ்தம்பித்த
ஒற்றை முத்தம்
அவளுக்கானது.

குறிகளின் வானம்
வீழ்ந்த எங்களின்
பிரத்யேக இரவில்
நீலத்தாரகைகளை
விதைத்தது
காமம்.
உடலைத்திறக்கையில்
உருகி பாய்ந்தோடிய
உதிரநதி
வானமெங்கும் நனைத்தது.
வெளிச்சத்தில் தெரியாத
அந்த நிலாத்துண்டை
உடல்களில் பொருத்திக்கொண்டு
இருளின் அந்திம
நொடிகளில் விலகினோம்
பழகிய அவரவர் கூட்டிற்கு...

இந்த அதிகாலையின்
என் படுக்கை விரிப்பில்
சிதறிக்கிடக்கின்றன
சிரிப்பொலிகள்

இரவில் உன்
உடலின் வெளியேறும்
ஒளி என்னவென
கிளர்ந்து
கேட்கிறான்
இவன்
கவிதை
2
அப்போது நான்
முழுக்கை சட்டையும், கால் சராயும்
அணிவது வழக்கம
அப்போது நான்
மாதம் ஒருமுறையென
சீராக முடிதிருத்தி வந்தேன்
அப்போது நான்
ஆண்களுடன்..,
பள்ளியில் தான் படித்தேன்
இருந்தாலும் அவர்கள் கிண்டல் செய்தார்கள்
நான் ஆணில்லைன்று
இப்போது நான்
புடவை கட்டி,
ஒத்தசடை பின்னி,
பூ முடிந்து,
பாந்தமாக வலைய வந்தாலும்
அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்களாம்
நான் பெண்ணில்லையென்று.
அஃறிணைகள்
அது, இது என்ற
சுட்டுப் பெயர்களால் அறியப்படுபவை
அவற்றின் குரல்கள்
மனித சப்தங்களுக்கு பொருளற்றவை
சிலதோ செய்திகளில் அடிபடும்.
நல்லது ஆனால்,
இதற்காக வாக்கு சாவடிகளில் அனுமதிப்பது
நகைப்பிற்குரியது
அவற்றின் காதற் பண்புகள்
காயடிக்கத்தக்கவை
நல்ல பொழுது போக்கிற்கும் உதவினாலும்
ரேசன் ஒதுக்குவதற்கோ
இது போதுமான காரணமில்லையே
அஃறிணைகளின் பொருள்
அவை மனிதர்கள் இல்லை என்பது மட்டுமே
கையிருந்தால் என்ன?
காலிருந்தால் என்ன?
மேலும்
ஆறு அறிவு இருந்தால் தான் என்ன?

லிவிங் ஸ்மைல் வித்யா

பாலியல்பின் அரசியல் - திறந்த உரையாடலை நோக்கி...


மாற்றுவெளி ஆய்விதழ் – மாற்றுப் பாலியல் சிறப்பிதழில்…

. பொன்னி, அனிருத்தன் வாசுதேவன்

’பாலியல்புஎன்கிற சொல்லைக் கேட்டதும் சட்டென்று நமக்கு நினைவிற்கு வருவது, பாலியல் படங்களும் இச்சையைத் தூண்டும் இன்னும் பல பிம்பங்களே. இவ்வகைப் பிம்பங்கள் தவறானவை என்று கூறுவதல்ல நமது நோக்கம். அவை அவதூறாக அமைக்கப் படுவதும் உடல், பாலினம், மற்றும் பாலியல்பு சார்ந்த பல தவறான தகவல்களை நமக்களிப்பதுமே இதிலுள்ள சிக்கல்.

இந்தியச் சுழலில் இப்பொழுது பாலியல்பு பற்றிய கருத்தாக்கங்களில் முக்கியமாக நாம் காண்பது இச்சை, வன்முறை, சட்டத்தால் குற்றமாக்கப்படுவது ஆகியவை. தமிழ்ச்சூழலில் இவ்வரலாறு பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டிருக்கிறது என்பதைப் பற்றிய விவரங்கள் பல இவ்விதழில் கொடுக்கப்பட்டுள்ளன.


பாலியல்பு, மாற்றுப்பாலியல் இச்சை ஆகியவை ஏதோ கடந்த பத்து இருபது வருடங்களாகவே பேசப்படுகின்றன என்று பலர் நினைப்பதுண்டு. இத்தகைய நம்பிக்கையைச் சார்ந்த சொல்லாடலி லும் கருத்தாக்கத்தில் ஈடுபடுவதும் எழுதுவதும் வழக்கம். இவ்வகையான தவறான அபிப்பிராயங்களை மாற்றியமைப்பது இச்சிறப்பிதழின் ஒரு நோக்கமாகும். மேலும் தமிழ்ச்சூழலில் இவ்வரலாற்றைப் பெண்ணிய வரலாறு எழுதுதலின் ஒரு அங்கமாகப் பார்க்கும் முயற்சியும் இவ்விதழில் மேற்கொள்ளப்பட் டுள்ளது. உரிமை, உரிமைசார்/ அடையாளம்/ அடையாளக் குழுக்கள் சார் போராட்டங்கள் பற்றிய விவரங்கள் விரிவாகக் கொடுக்கப்பட்டிருந்தாலும் அது மட்டுமே இக்கருத்தாக்கம் மற்றும் போராட்டத்தை முழுதாக விளக்கவும் புரிந்துகொள்ளவும் போதுமானதல்ல என்பது இவ்விதழில் விவரிக்கப்பட்டுள்ளது.

இவ்வனைத்தையும் புரிந்துகொள்வதற்கான ஒரு பின்புலமாக உலகளாவிய அளவில் உள்ள கருத்தாக்கங்களை நினைவுகூர்தல் அவசியம். இவ்வரலாற்றைப் பல விதங்களில் எழுதலாம். இங்கு எளிமையான, புரிதலுக்கான, ஒரு சுருக்கமான வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கருத்தாக்கங்களின் அடிப்படையில் முதலில் தெரியவருவது, பாலியல்பு என்பது உடலுறவு அல்லது ஓர்பாலினச் சேர்க்கை பற்றியது மட்டும் அல்ல. பாலியல்பு என்பதன் தாக்கம் நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் செல்வாக்குச் செலுத்துகிறது.

கிரேக்க-ரோமானிய கருத்தாடல்களில் பல வகையான உடல் உறவுகளும் பாலின வகைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இவ்வகைகளுக்கு இடையிலான வித்தியாசங்கள் தெளிவுபடுத்தப் படவில்லை. அடையாளம் சார் மொழி எங்கும் காணப்படவில்லை.

இதையடுத்து மனவியல் கருத்தாக்கங்களில் பாலியல் சார்ந்த சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. இவ்வரிசையில் ஃப்ராயிட் முதல் சிந்தனையாளர் இல்லையெனினும் மிக முக்கியமான சிந்தனையாள ராவார். ஒருவித பகுத்தறிவற்ற, இன்றியமையாச் சிந்தனையான இது, இன்று ஆணாதிக்கச் சிந்தனையின் அங்கமாகவும் கருதப்படுகிறது. பல தலைமுறை பெண்ணிய சிந்தனையின் கோபத்திற்கும் நியாயமாக ஆளாகியுள்ள சிந்தனை ஃப்ராயிடி னுடையது. இருந்தாலும் பாலியல்பு சார்ந்த சொல்லாடல்களின் வரலாற்றில், ஒரு முக்கிய புள்ளியாக ப்ராய்டிசம் கருதப்படுகிறது. பாலியல்பை அலசிப்பார்ப்பதற்கான வரைமுறைகளை அமைத்துத் தந்தது. அவ்வரைமுறைகளை நாம் இன்று ஏற்றுக்கொள்ளா விட்டாலும் பாலியல்பு சார்ந்த கருத்தாக்கங்கள் பற்றிய விவாதங்களில் இவை இடம் பெற வேண்டியது அவசியம்.

லக்கான் (Lacan) இன்னொரு முக்கிய சிந்தனையாளரவார். இவர் தமது கருத்தாக்கத்தில், கருவில்மனித பாலியல் தற்சார்பு’ (sexual subject) பற்றிய சிந்தனையை மேற்கொள்ள முயன்றார். உதாரணமாகஆண்’, ‘பெண்ஆகியவை என்ன என்றறிய லக்கான் முயன்றார். இதில் அவர் முழு தெளிவு அடையாவிட்டாலும் இந்தத் தேடலை அவர் தொடங்கி வைத்தார். இந்தத் தேடல் பிந்தைய தலைமுறைகளில், பல்வேறு நிலைகளில், பல பெயர்களால் அழைக்கப்பட்டுத் தொடர்ந்து வருகிறது. லக்கானின் மிக முக்கிய பங்கு ஃப்ராய்டின் இன்றியமையாவாதத்தை உடைத்தெறிய உதவியது.

இவ்வாறு தனக்கு முன் வந்த பல சிந்தனையாளர்களின் தோள்களில் நிற்கிறார் ஃபூகோ என்னும் சிந்தனையாளர். பாலியல் தொடர்பான இவரது சிந்தனைகள் பற்றி ஒரு தனி இதழே வெளியிடலாம். அடிப்படையில் ஃபூகோபாலியல்பின் வரலாறுஎன்ற புத்தகத்தில், மூன்று பாகங்களில், அவரது மூல சிந்தனையானஅதிகாரம்பற்றிய கருத்தாடலை முன்வைக்கிறார். மனித சமுதாயத்தின் மற்ற அனைத்து அங்கங்கள் போல பாலியல்பிலும் அதிகாரம் சார்ந்த கட்டுப்பாடுகளும் உறவாடல்களுமே மையக் கருவாக இருக்கின்றன என்று வாதாடுகிறார். இவ்வதிகாரத்தை வெவ்வேறு கோணங்களிலிருந்து ஆராய்ந்து விளக்குகிறார். இந்த அதிகாரம் அரசின் அங்கங்களான மருத்துவமனைகளிலோ அல்லது சிறைகளிலோ வெளிப்படலாம், வீட்டை அரசாளும் குடும்ப வரைமுறைகளாகலாம்.

உலகளாவிய அளவிலான பெண்ணிய கருத்தாக்கங்களில், பாலியல்பும் ஒரு பாகமாகும். அவையனைத்தையும் இம்முன்னுரை யில் விவரிப்பது சாத்தியமன்று. அதன் ஒரு அடிப்படை சாராம்சம் கீழ்வருமாறு:
காத்தெரின் மெக் கின்னன் என்னும் சிந்தனையாளர் இதைத் தெளிவாக விளக்கியுள்ளார் :

மார்க்சீயத்துக்கு வர்க்கம் போல பெண்ணியத்திற்கு பாலியல்புஎன்கிறார்.

இப்பெண்ணிய கருத்தாக்கங்கள் ஒரு சில முக்கிய விஷயங்களை பற்றி அமைந்துள்ளன. அவற்றுள் வன்முறை, உடலுறவு இச்சை ஊட்டும் படங்கள் பற்றிய விவாதம், பாலியல் தொழில் பற்றிய விவாதம், உடல்நிலை சார் உரிமைகள், கர்ப்ப ஆட்சி பற்றிய விவாதங்கள் ஆகியவை அடங்கும். இதனுள் தனி நபரின் உரிமை பற்றிப் பேசுபவரும் உண்டு, பெண்களை ஒரு குழுவாகக் கொண்டு பேசுபவரும் உண்டு. அக்குழுவின் இடையிலான பாரபட்சங்களை விவரித்தவருமுண்டு. இவையனைத்தும்சுரண்டல்அல்லதுசெயலாளுமை’ (agency) ஆகிய வரையறைகளுக்குள் அடங்கு வதுண்டு. கம்யூனிஸ்ட் ரஷியாவில் இதற்குச் சற்று மாறாக அலெசாந்த்ரா கோலாந்தாய் போன்ற விளிம்பு நிலை சிந்தனை யாளர்கள் மற்றும் இன்னும் சிலர் வேலை, பாலினம் மற்றும் பாலியல்பு ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பும் இவ்வனுபவங்கள், புரட்சிசார் அரசியலில் கொண்டுவரும் தாக்கம் பற்றியும் எழுதினர். இது பின்பு இந்தியா போன்ற நாடுகளில் நாம் விரும்பத்தக்க அளவில் இல்லையெனினும் பெண்ணிய சிந்தனையில் ஓரளவு பயன்படுத்தப்பட்டது.

ஓர்பாலினச்சேர்க்கை சமூகங்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இவ்வகைக் கருத்தாக்கங்களை முன்னெடுத்தும் சென்றனர்; விமர்சனமும் செய்தனர். பாலியல் அடையாளம் மற்றும் அனுபவம், வேற்றுப்பாலின ஈர்ப்பிற்கு உள்ளே அடக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டினர். இவ்வடையாளங்களை முன்னிறுத்தி வேற்றுப் பாலியல்புசார் கட்டமைப்புகளைச் சிந்திக்காமல் ஏற்றுக்கொள்ளும் பழக்கத்தை உடைத்தெறிய அறைகூவல் விடுத்தனர். ஒருசிலர் அடையாளத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கட்டமைப்பு சார் விமர்சனங்களை முன்வைத்தனர். இன்னும் சிலர், அடையாளம்சார் உரிமைகளுக்காக மட்டும் வாதாடி, கட்டமைப்புகளை அப்படியே விட்டுவிட்டனர். இவ்வகை கருத்தாக்கத்தில் பாலியல் தொழிலாளர் களின் போராட்டங்களும் அதிலிருந்து எழும்பிய கருத்துக்களும் அடங்கும்.

பெண்ணியத்தில் உடல் மற்றும் பாலினம் என்று புரிந்து கொள்ளப்படுபவை ஆணாதிக்கக் கட்டமைப்பால் உருவாக்கப் படுகிறது என்னும் கருத்தை மாற்றுப்பாலின மக்கள் முன்னெடுத்துச் சென்றனர். இவை கட்டமைப்புகளாக மட்டு மில்லாமல் போராட்டக் களங்களாகவும் விளங்குவதுண்டு என்று எடுத்துக் காட்டியுள்ளனர்.

இவ்வகைக் கருத்தாடல்களின் மூலக்கருவைப் புரிந்துகொள்ள, கெயில் ரூபினின் கருத்துக்கள் உதவும். அவர் பாலியல்பு ஏற்றத்தாழ்வு அல்லது உடலுறவு ஏற்றத்தாழ்வு (sex hierarchy) சமூகத்தில் நிலவி வருகிறது என்று கூறுகிறார். ஒற்றை மணவாழ்வில், வேற்றுப்பாலினத்தவராகவும் பிள்ளை பெற்றவ ராகவும் இருப்பவர், படிக்கட்டு போன்ற இந்தக் கட்டமைப்பில் மேல் தட்டில் அமர்கிறார். அதன் அடித்தட்டில் மணமாகாத, ஓர்பாலின இச்சை கொண்ட, மாற்றுப்பாலின, பிள்ளை பெறாத, வரம்புகளை மீறும் இச்சைகள் கொண்ட நபர்கள் இருப்பர். இவ்வகையான அமைப்பினால் எவ்வகைப் பாலினம், பாலியல், உடலுறவு மற்றும் இச்சைஇயற்கையானவை’, எவைஇயற்கைக்குப் புறம்பானவைஆகிய ஆதாரமற்ற, அடிப்படையற்ற வரைமுறைகள் ஆக்கப்பட்டு நம்மேல் திணிக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறார். ‘இயற்கையின்வரைமுறைகளும் நம்மால்தான் இயற்றப்பட்டு இயக்கப்படுகின்றன என்பதைத் தெள்ளத் தெளிவாக்குகிறார்.

இவ்வகையான சமத்துவமற்ற அமைப்பின் ஒடுக்குமுறையை உணருவது மட்டுமல்லாமல், பல வகைப் பாலியல்புகள், பாலினங்கள், இச்சைகள் ஆகியவற்றின் இருப்பும் அவற்றின் சமூக நிலையும் வெளிக்கொணரப்படுகின்றன. அதே சமயம் அவை போராட்டக்களங்கள் என்பதும் தெளிவுபடுத்தப்படுகின்றன.

கெயில் ரூபனின் இவ்வாதத்தைச் சற்று முன்னெடுத்துச்சென்றால் அதில் சாதி, மதம், இனம், வர்க்கம் ஆகியவற்றையும் புகுத்திப் பார்க்கலாம். நமது சூழலில் இத்தகைய அமைப்பின் மேல்தட்டில் ஒற்றைமணவாழ்வு கொண்ட, வேற்றுப்பாலின, பிள்ளைபெற்ற, மேல் வர்க்கத்தைச் சேர்ந்த, மேல் சாதியவராக இருப்பர். அதன் அடித்தட்டில் மணமாகாத, ஓர்பாலின இச்சை கொண்ட, மாற்றுப் பாலின, பிள்ளை பெறாத, வரம்புகளை மீறும் இச்சைகள் கொண்ட, ஒடுக்கப்பட்ட சாதி மற்றும் வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருப்பர்.

இவ்வகை சொல்லாடல்கள் பலவற்றை நாம் படித்து அறிந்து கொள்வதால், பாலியல்பு தனிப்பட்ட முறையில் மட்டுமல்லாமல் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்குள்ள பல அலகுகளுள் ஒன்றாக நம்முன் நிற்கும்.

தெற்காசியச் சூழலில் பாலியல்பு பற்றிய சொல்லாடல்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் முறையாகப் பெண்கள் குறித்த விவாதங்கள் பொது வெளியில் பேசப்பட்டன. இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏறும்சதிசம்பிரதாயத்தை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடந்தன. அதே போல நாடெங்கும் விதவை மறுமணம், பெண்களுக்கான திருமண வயது ஆகியவை பற்றிய விவாதங்களில் பாலியல்பும் ஒரு அங்கமாக இருந்தது. அக்காலத்தில் பாலினமும் பாலியல்பும் இன்றுள்ள மொழியில் பேசப்படாவிட்டாலும் வரலாற்று ரீதியாக இவ்விவாதங் களின் கருத்துக்கள் இன்று நமக்கு முக்கியமானவையாக அமைகின்றன.

காலனித்துவ வரலாற்றை இன்று நன்கறிந்திருக்கும் நாம், அதிலிருந்து எழும்இந்தியாஎன்னும் பிம்பம் துல்லியமானது அல்ல என்பதை அறிவோம். இன்று இந்தியா என்று நாம் கருதுவதின் பல பகுதிகள் ஆங்கிலேயர் காலத்திலும் அதற்கு முன்பும் ஒரு நாடாக என்றும் இருந்தது கிடையாது. ஒவ்வொரு இடத்திற்கும் பிரதேசத்திற்கும் அதற்கான வரலாறு உண்டு. பாலியல்பு என்பதும் ஒரு சமூகத்தின், அதன் மக்கள் வாழ்க்கையின் மிக முக்கியப் பண்பு என்பதால் இடத்திற்கு இடம் தனித்துவம் மிக்க வரலாறுகளைப் பெறுகிறது. தமிழகத்தின் வரலாறு ஒரளவிற்கு இவ்விதழில் விவாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளில் பல புதிய போராட்டங்கள் தொடங்கியுள்ளன. பெரும்பாலும் அடையாளம்சார் உரிமைகள் கோரும் இப்போராட்டங்கள், பல கருத்தாக்கப் புதுமைகளையும் உருவாக்கியுள்ளன. உலகளாவிய அளவிலான போராட்டங்கள் போல இந்தியாவிலும் மாற்றுப்பாலியல்புள்ளவர், மாற்றுப்பாலின முள்ளவர், பாலியல் தொழிலாளிகள் ஆகியோர் பாலியல்பு, பாலினம் பற்றிய வரைமுறைகளை கேள்விக்குள்ளாக்கினர்.

இவ்வரலாற்றின் முக்கிய நிகழ்ச்சிகளின் பட்டியல் இவ்விதழில் வழங்கப்பட்டுள்ளது. போராட்டக் களத்தில் இன்னும் பலவகைப் பணிகள் செய்யவேண்டியுள்ளன. பலருடைய தினசரி வாழ்க்கையின் அடிப்படைப் புரிதல் கூட நமக்குக் கிடையாது. பிறப்பிலோ, வாழ்வின் ஒரு கட்டத்திலோ, பால் நிர்ணயிக்க முடியாத நிலையில் இருப்போரும் (intersex) இவர்களுள் அடங்குவர். நீதிமன்றம் போன்ற இடங்களில் ஒரு சில வெற்றிகள் பெற்றிருந்தாலும் பலரின் வாழ்வில் அவை எந்த மாற்றத்தையும் கொண்டுவராமல் போகலாம். கடந்த சில ஆண்டுகளாகப் பாலியல்பு பற்றிய சர்ச்சைகள் பொது வெளியில் ஓரளவு பேசப்பட்டு வருகின்றன. மற்ற போராட்டங்கள் போல இப்போராட்டத்திலும் சமூக ஏற்றத்தாழ்வுகளின் நீட்சியும் பாதிப்பும் காட்சியளிப்பதுண்டு. இவ்வனைத்து சவால்களையும் மேற்கொள்ள, இப்போராட்டத்தின் தினசரி வேலைகளுடன் சேர்த்து விமர்சனப்பூர்வமான கோட்பாடுகளையும் வளர்த்து விவாதிப்பது அவசியம். இப்படியான நிகழ்முறையை முற்றிலும் மேற்கொள்ளாத பல இயக்கங்கள், தம்மைத் தாமே அழித்துக்கொண்டு தம்மை எதிர்க்க முயன்ற கட்டுமானங்களையே உறுதிப்படுத்திய கதைகள் பல.

இப்போராட்டங்களிலிருந்து வெளிவரும் கருத்தாக்கங்களைப் புரிந்துகொள்ள நாம் அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, அடையாளம், அடையாளம் சார்ந்த குழுக்கள், அவர்களுக்கான சம உரிமை சார்ந்த ஒரு கோட்பாடு. இது பல சமயங்களில் சமூகம், குடும்பம், திருமணம் ஆகிய கட்டுமானங்களைக் கேள்விக்குள்ளாக் காமல் அப்படியே விட்டுவிடுவது மட்டுமல்லாமல் அவ்வப்போது இன்னும் வலிமைப்படுத்துபவையாக அமைந்துவிடுவதும் உண்டு. இருந்தாலும் புதியதொரு மொழியின்றி, பிம்பங்களின்றி, முன்னர் இருந்த பிம்பங்களும் அழுத்தமாக அமுக்கப்பட்டிருக்கும் சூழலில், அடையாளங்களின் வலிமையைக் குறைத்து எடைபோட முடியாது. இவ்வடையாளப் பெயர்களும் குழுக்களும் தனிநபர்களுக்குக் கொடுக்கும் சக்தியை நாம் கணக்கில் கொள்ளவேண்டும். அடையாள அரசியல் குறித்த கோட்பாடுகள் ஒருசில போராட்டங் களில் முக்கியக் கருவிகள் என்பதை மறுக்கமுடியாது. அதே சமயம் விமர்சன மனப்பான்மையின்றி இதனை உபயோகிப்பதன் மூலம், காலப்போக்கில் நாம் எந்த கட்டுமானங்களை உடைக்க முயன்றோமோ அவற்றையே மீண்டும் உறுதிப்படுத்துவதில் ஈடுபட்டுவிடுவோம். பாலியல் அடையாளங்களையும் அவற்றின் அரசியலையும் பல ஆண்டுகளாகக் கண்டு வரும் மேற்கத்திய நாடுகளில் இத்தகைய வரலாறு உண்டு. இவ்வரலாற்றின் தொடக்கத் தில் இருக்கும் நாம், இப்பொழுதே இவ்விமர்சனங்களை முன் வைப்பதும் சுயவிமர்சனம் செய்யப் பழகிக்கொள்வதும் அவசியம்.

இது தவிர, பாலியல்பு சார்ந்த அரசியல், அடையாளம் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டியதில்லை என்று வாதாடும் பெண்ணியம் சார்ந்த நிலைப்பாடும் உண்டு. இது ஒரு குழுவிற்கான உரிமை பற்றி மட்டுமில்லாமல் சமுதாய வரைமுறைகளை மறுபரிசீலனை செய்யும் ஒரு நிலைப்பாடாகும். இதில் பாலியல்பும் ஒரு அங்கமாகும். சமூகத்திலுள்ள பாலியல்/பாலினம் சார்ந்த அனுபவங் களின் மூலம்இயற்கையானதுஎனப் பேசப்படும் குடும்பம், மணம், பிள்ளைப் பேறு, இச்சையின்றிப் பிள்ளை பெறுதலுக்கு மட்டுமே என்றாகும் உடலுறவு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாரபட்ச ஒழுக்க நீதி ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்கும் கருத்தியலாகப் பெண்ணியத்தால் இருக்க முடியும். இக்கோட்பாடு கெயில் ரூபனின் கருத்துபோல சாதி, மதம், இனம், வர்க்கம் ஆகியவை பற்றிய வரைமுறைகளையும் ஒரே சமயத்தில் பிரச்சனைக்குள்ளாக்கும் ஒன்றாக இருக்கும். இவ்வனைத்து உண்மைகளும் தினசரி வாழ்க்கையில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து இருப்பது தானே உண்மை!

இப்படியெல்லாம் பலவாண்டுகளாகப் பேசப்பட்டு வரும் பாலியல்பு என்பது என்னவென்று கேட்டால், அதற்கானப் பதிலைச் சுலபமாக அளிக்கமுடியாது. நாம் பிறந்த நிமிடத்திலிருந்து பாலினமும் பாலியல்பும் நம்முடனேயே வருகின்றன. அவை நம் உடல், உணர்வுகள், ஆசை, இச்சை, வலி, வன்முறை, வாழ்க்கையில் மேற்கொள்ளும் முடிவுகள், கனங்கள் ஆகியவற்றில் பொதிந் துள்ளன. அது அரசு, குடும்பம், தேசம், சாதி, மதம், இனம், நிறம் ஆகியவற்றின் வரலாறுகளில் உள்ளது. முற்போக்கு சிந்தனையுள்ள எந்த நபரும் பாலியல் பற்றி கூச்சமோ, பயமோ, பாலியல் சார்ந்த பாகுபாடோ அல்லது ஆர்வமின்மையோ காட்டினால் அது அரசியல் ரீதியாகப் பிற்போக்கானது மட்டுமல்லாமல் அர்த்தமற்ற வெகுளித் தனமாகவும் அமையும். பாலியல் சார்ந்த கோட்பாடுகள் நாம் மேற்கொண்டு வரும் மற்ற பல இயக்கங்களைத் தனது பங்களிப்பு மற்றும் விமர்சனம் மூலம் உறுதிப்படுத்தும். அதே சமயம், பாலியல்பு பற்றிப் பேசிவருபவர் பல முற்போக்கு இயக்கங்களி லிருந்து கற்கவேண்டியவை நிறைய உண்டு. அடையாளம், குழு, உரிமை என்று சமூக மாற்றுச் சிந்தனையை கூறுபோட்டு விற்கும் இக்காலத்தில், இத்தகைய ஒருங்கிணைந்த அரசியல் உரை யாடல்களே ஒட்டுமொத்த மாற்றத்தையும் அதற்கான திட்டத்தையும் முன்வைக்க உதவும். மனிதர்களையும் சாதி, மதம், தேசம், என்று கூறுபோடும் இவ்வுலகில், ஒட்டுமொத்த சமூகமாற்றுச் சிந்தனையை நாம் மேற்கொள்ளாவிட்டால், ஆதிக்கச் சக்கரம் நிற்காமல் சுழன்றுகொண்டெ இருக்கும்.

தமிழகத்திலும் தேசிய அளவிலும் கடந்த சில ஆண்டுகளாக இது பற்றிய சர்ச்சை மெற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் வரலாறு, கடந்த சில ஆண்டுகளின் முக்கிய நிகழ்வுகள் பற்றிய குறிப்பு, விமர்சனப் பூர்வமான கருத்தாக்கம், இவையனைத்தும் பற்றிப் பல கோணங்களி லிருந்து இவ்விதழில் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் முழுமையான தொகுப்பல்ல. பொதுவெளி யில் நடந்துவரும் சர்ச்சையைப் புரிந்துகொள்ளவும் பங்குபெறவும் ஒரு சிறு ஆவணமாக இது பயன்படுத்தப்படலாம். இன்னும் பல இதழ்கள், சர்ச்சைகள், மாற்றங்கள் தமிழ்ச் சூழலில் நிகழும் என்ற நம்பிக்கையுடனும் வரலாறு சார்ந்த அறிதலுடன் இந்த இதழைத் திறந்த பாணியில், நிகழ்முறையின் ஒரு கணமாக உங்கள் முன் வைக்கிறோம்.

சற்று அச்சத்துடனும் புரிதலின்மையுடனும் இன்றும் சிறிதளவே பேசப்படும் பாலியல்பு மற்றும் மாற்றுப்பாலியல்பு பற்றி ஒரு சிறப்பிதழ் வெளியிட வாய்ப்பு கொடுத்து ஊக்குவித்த மாற்றுவெளி இதழாசிரியர் குழுவிற்கு நன்றி கூற விரும்புகிறோம். இவ்விதழின் இன்றைய சூழல் மற்றும் நாளைய வரலாற்றில் இச்சிறப்பிதழும் ஒரு அங்கமாகும். தமிழில் பாலியல்சார் கருத்தாக்க உருவாக்கத்தின் ஒரு செயலாக மட்டுமல்லாமல், மாற்றுவெளி இதழின் காலத்திற்கு உகந்தத் தன்மையை மெருகேற்றுவதில் ஒரு சிறு முயற்சியாக இவ்விதழை வெளியிட்டிருப்பதற்கு, நாங்கள், ஆசிரியர் குழுவை யும் வாசகர்களையும் வாழ்த்துகிறோம்.

நன்றி : மாற்றுவெளி ஆய்விதழ்