Friday, 28 February 2025

மூன்று தலைமுறைகள் இரண்டு மனிதர்கள் ஒரு வண்டி

சிறுகதை 

விஜயதாஸ் ஆத்மாநாம்


அன்றைய பொழுது முனியன் வழக்கம்போல சந்தையில் இருந்து காய்கறிகளை இறக்கி விட்டு தனது வில்வண்டியில் சாத்தூரின் பிரதான சாலை வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தான். 

அன்று காலையிலிருந்தே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வண்டியில் பூட்டப்பட்டிருந்த மாடு வாயை அசை போட்டபடி மெதுவாக சாலையில் நடை போட்டுக் கொண்டிருந்தது. அதன் கழுத்தில் பூட்டப்பட்டிருந்த சலங்கைகள் அதன் நடைக்கேற்றவாறு ஒருவித  ராக லயத்துடன் 'ஜல்.. ஜல்.. ஜல்.. என ஒலித்துக் கொண்டிருந்தது. முனியனின் மனதிலோ பலவித நினைவுகள் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அன்று காலை அவனது மனைவி செல்லாத்தா அவர்களின் ஒரே மகன் ரங்கனுக்கு ஸ்கூல் ஆண்டு விழாவிற்காக புதுத்துணி ஒன்று வாங்கி வரக் கேட்டிருந்தாள். 

பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் அவனது மகன் ரங்கன் எப்போதுமே தனக்கு ஏதாவது வேண்டுமென்றால் தனது அப்பாவான முனியனிடம் நேரடியாக கேட்க மாட்டான். அவனது அம்மா மூலமாகவே கேட்பது வழக்கம். இன்றும் அப்படித்தான் கேட்டிருந்தான். முனியனும் எதாவது கேட்க வேண்டுமென்றால் அவனது அம்மாவிடமே கேட்பது வழக்கம். அது அப்படியே அச்சுப் பிசகாமல் தனது மகனிடம் வந்து சேர்ந்திருப்பது அவனுக்கு ஆச்சரியமாகவும் ஒரு வகையில் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இம்முறை செட்டியாரிடம் வாங்கிய கடன் அடுத்த மாதத்தில் தான் முடிகிறது. ஆனாலும் இன்று இரவு அவரிடம் பணம் கேட்டு பெற வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.  

இந்த நினைவுகளுடன் முனியன் வில்வண்டியை ஒருமுறை கவனமாக பார்வையிட்டான். அவனது முகத்தில் ஒரு பெருமிதம் தோன்றி மறைந்தது.  ஒருநாளில் ஒரு தடவையாவது அவன் இப்படிச் செய்வது வழக்கம். அந்த வில்வண்டி மீது அப்படியொரு வாஞ்சையிருந்தது முனியனுக்கு. 

அந்த வில்வண்டி அவனோடு சேர்த்தால் மூன்று தலைமுறைகளை வாழ வைத்துக் கொண்டிருந்தது. முனியன் அவனது அப்பா அவனது தாத்தா மூவரையும் ஒரே நேர்கோட்டில் இணைக்கும் சங்கிலித் தொடராக  அது இருந்தது.  நூற்றிருபது ஆண்டுகளுக்கும் மேலான வில்வண்டி அது. அந்த வில்வண்டியை பார்க்கும்போதே அதன் பாரம்பரியத்தை கண்டுகொள்ளலாம். வண்டி மீது பூசப்பட்டிருந்த வண்ணங்கள் சற்று மங்கியிருந்தாலும் அதன் தேக அமைப்பு கம்பீரமாகவே காட்சியளித்தது. அவ்வளவு பழமையானதாக இருந்தாலும் அந்த வில்வண்டி மீது முனியனுக்கு இருந்த நேசம் அளவிட முடியாதது. ஒரு வகையில் பார்த்தால் தனது பெற்ற பிள்ளையை போல அதை அவன் நேசித்தான். அதற்கான காரணமும் இருக்கத்தான் செய்தது. 

அந்த வில்வண்டி கிருஷ்ணாபுரம் மிராசுதாரரான அழகிரிசாமி நாயக்கரால் அவரிடம் வேலை செய்து கொண்டிருந்த முனியனின் தாத்தாவிற்கு தானமாக வழங்கப்பட்டது. அழகிரிசாமி நாயக்கர் தான தர்மங்களுக்கு கட்டுப்படாத ஒரு மனிதர். தனது அந்திம காலத்தில் தன்னால்  தர முடிந்தது இதுதான் என்று சொல்லி அவனது தாத்தாவிற்கு  வில் வண்டியை  கொடுத்ததை அப்பா மூலமாக கேள்விப்பட்டிருந்தான். வண்டியின் உட்புறமாக வலது பக்கத்தில் பாலிதீன் கவரால் பாடம் செய்து சொருகப்பட்டிருந்த அழகிரிசாமி நாயக்கரின் மங்கிய புகைப்படத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டான். மூன்று தலைமுறைகளை வாழவைத்துக் கொண்டிருந்த அந்த வில்வண்டியின் பிரம்மாண்ட வடிவமாக அவர் காட்சியளித்துக் கொண்டிருந்தார். 

தூரத்திலிருந்த சாத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் ஹாரன் சத்தம் கேட்டது. முனியனின் அந்த வில்வண்டி  சாத்தூர் பஸ் நிலையத்தை சமீபத்துக் கொண்டிருந்தது. 

ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு வண்டி பஸ் நிலையத்தை கடந்த போது சாலையின் ஓரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் வண்டியை நிறுத்தும்படி கைகளால் சைகை செய்தார். அவரது கால்களுக்கு அடியில் சில பைகள் வைக்கப்பட்டிருந்தது. முனியன் மாடுகளுக்கு "ஹோய் ஹோய்' என்று சத்தம் கொடுத்து கைகளில் பிடித்திருந்த தாரை இழுத்துப் பிடித்து  வண்டியை நிறுத்தினான். கீழே நின்றிருந்த அந்தப் பெரியவர் ’வண்டி எங்கே போகிறது’ என்று கேட்டார். ’ஐயா நீங்கள் எங்கே  செல்ல வேண்டும்’ என்று முனியன்  அவரிடம் கேட்டான். ’கிருஷ்ணாபுரம் குறுக்குச் சாலை வரை செல்ல வேண்டும்’ என்று அவர் சொல்ல ’நான் அந்த வழியாகத்தான் போகிறேன் ஏறிக்கொள்ளுங்கள்’ என்று முனியன் சொல்ல, அந்தப் பெரியவர்  மகிழ்ச்சியுடன் கீழே வைக்கப்பட்டிருந்த பைகளை எடுத்துக் கொண்டு வண்டியின் பின்னால் சென்று ஏறிக்கொண்டார். முனியன் திரும்பிப் பார்த்து அவரிடம் ‘கிளம்பலாமா ஐயா’ என்று கேட்டான். ‘போலாம்பா’ என்று சொன்னார். 

முனியன் கைகளில் இருந்த தாரை தளர விட்டு வண்டியை நகர்த்தினான். சாத்தூரின் பிரதான சாலையைத் தாண்டி இடது புறமாக திரும்பிய ஒரு குறுகிய சாலையில் முனியன் வண்டியை திருப்பினான். சாலையின் இருபுறமும் வயல்வெளிகள் அடர்ந்து காணப்பட்டது.  வில்வண்டி சீரான வேகத்துடன் அதன் சக்கரங்கள் சுழல இயற்கை கம்பளம் விரித்தாற் போன்ற அந்த குறுகிய சாலை வழியாக சென்று கொண்டிருந்தது.

அப்போது வண்டியில் அமர்ந்திருந்த அந்தப் பெரியவர் வண்டியின் அதன் உட்புறத்தை சற்று நோட்டமிட்டார். அப்போது வண்டியின் முன்பக்கத்தில் சொருகப்பட்டிருந்த அழகிரிசாமி நாயக்கரின் புகைப்படம் அவரது கண்களில் தென்பட்டது. ஒருகணம் அவர் முகத்தில் ஆச்சரியத்தின் ரேகைகள் மின்னி மறைந்தது. சாத்தூரில் இருந்தே பேசாமலிருந்த அவர்  இப்போது வண்டியை கவனமாக ஓட்டிக் கொண்டிருந்த முனியனைப் பார்த்து ‘உன் பெயர் என்னப்பா என்று’ கேட்டார். ‘முனியனுங்கய்யா’ என்று சொன்னான். ’இந்த வண்டி உன்னோட சொந்த வண்டியாப்பா’ என்று கேட்டார். அவன் சிறிது தயங்குவது போல் தெரிந்தது. அவர் அவனது பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். சில நொடிப்பொழுது அவகாசத்திற்கு பின் ’இல்லீங்கய்யா’ என்று சொன்னான். ’அப்படின்னா இந்த வண்டியை வாடகைக்கு எடுத்து ஓட்டறியா’ என்று அவர் கேட்க முனியன் ’இல்லை’ என்பது போல் தலையாட்டினான். ’அப்போ யாரோட வண்டிப்பா இது’ என்று கொஞ்சம் அழுத்தமாகவே கேட்டார். அப்போது மாலையின் வெக்கைக்கு இதமாக  குளிர்ந்த காற்று ஒன்று அவர்களிருவையும் தழுவிச் சென்றது. அவன் புன்னகை தோய்ந்த முகத்துடன் உள்ளிருக்கும் அவரை திரும்பிப் பார்த்தான். அவரோடு சேர்ந்த நிலையில் அழகிரிசாமி நாயக்கரின் முகம் காட்சியளித்தது. ‘ஐயா இந்த வண்டியை பத்திச் சொல்லணும்னா எவ்ளோ சொல்லலாம். இந்த வண்டிக்கு  அவ்ளோ பெரிய கதை இருக்கு. ’சொல்லலாங்களாய்யா’ என்று முனியன் அவரிடம் கேட்டான். அவரும் அவனிடம் ஏதோ மிகப்பெரிய பதிலுக்காக காத்திருந்தார் போல் ‘பீடிகையெல்லாம் எதுக்கு முனியா. தாராளமா சொல்லு’ என்று அவன் பெயரை உரிமையுடன் அழைத்த நிலையில் சொல்ல, அதைக்கேட்டு முகம் மலந்த முனியன் வண்டியின் கதையைப் பற்றி சொல்லலானான். 

’ஐயா இந்த வண்டிய அவ்ளோ அல்ப சுல்பமாவெல்லாம் நெனக்க்க் கூடாதுங்கய்யா. எனக்கு மட்டுமில்ல. எங்க அப்பா, என்னோட தாத்தா மூணு பேருக்கும் இது தாய்யா ஒரே சொத்து. அதோ வண்டிக்குள்ள ஒரு போட்டோ இருக்கே.. பாத்தீங்களா’ என்று திரும்பியவாறு கேட்டான். 

அவர் புன்னகையுடன் ‘பார்த்தேன்’ என்பது போல் தலையாட்டினார். 

முனியன்  தலையை சாலை பக்கமாக ஓட்டியவாறு பேசத் தொடங்கினான். ’அவரு தான்யா கிருஷ்ணாபுரத்து மிராசுதார் அழகிரிசாமி ஐயா.. தான தருமத்துக்கு பேர் போனவரு. அவர பத்தி சொல்லனும்னா கூட எவ்வளவோ சொல்லம்யா..எங்க தாத்தா அவரு கிட்ட தான் வேலை செஞ்சிகிட்டிருந்தாரு. அவுரோட கடைசி காலத்துல எங்க தாத்தாவுக்கு கொடுத்த வண்டி தான்யா இது. அவ்ளோ கம்பீரமான வண்டிங்கய்யா இது. இப்பவே இப்படி இருக்குன்னா.. எங்க தாத்தா காலத்துல எப்பிடி இருந்துருக்குன்னு பாருங்களேன்’

’நீ அவர பாத்திருக்கியா முனியா’

‘அந்த கொடுப்பின எனக்கு இல்லிங்கய்யா.. ஆனா எங்கப்பா அவர ரெண்டு மூணு தடவ பாத்ததா சொல்லியிருக்காரு.. ஐயாவோட இந்த போட்டோ கூட அப்பா அவரு கிட்ட கேட்டு வாங்கியாந்தது தான். எங்க அப்பாரு எனக்கு இந்த வண்டிய தந்தப்போ  இருந்த போட்டோ அப்டியே அதே இடத்துல இருக்கு. என்ன.. கலரு தான் கொஞ்சம் மங்கிப்போச்சு.’

’உனக்கு பிள்ளைங்க எத்தன பேரு’

‘ஒரே பையன் தான்யா. பேரு ரங்கன். எங்கப்பாவுக்கு நான்  ஒரே பிள்ளை.  அதே போல எனக்கும் ஒரே பிள்ளை..’ 

’பையன் படிக்கிறானாப்பா’

‘ஆமாங்கய்யா.. பத்தாங்கிளாஸ்.. படிப்புல ரொம்ப கெட்டி..’ என்று சொல்லும்போது காலையில் செல்லாத்தா சொன்னது ஞாபகத்து வந்தது., அந்த நினைவு சில கணங்கள் அவனை மௌனத்திலாழ்த்தியது. அப்போது அவரின் குரல் அவனை நினைவுக்கு கொண்டு வந்தது. 

‘என்ன முனியா.. திடீர்னு பேச்ச நிறுத்திட்ட..’

‘ஏதோ வீட்டு ஞாபகம் அதான்யா’

‘அப்புறம் உங்கய்யா பத்தி சொல்ல நெறைய இருக்குன்னு சொன்னியே..’ 

இதைக்கேட்டதும் முனியன் சற்று ஆர்வமானான். 

’ஐயாவ நா நேர்ல பாக்கலன்னாலும் எங்கப்பா அவர பத்தி நெறைய சொல்லியிருக்காரு.. அவங்க ஊர்ல மட்டும் இல்லாம சுத்துபட்டு ஊருக்கெல்லாம் எவ்ளவோ தான தருமங்க செஞ்சிருக்காரு.. பள்ளிக்கூடம் கட்டி தந்துருக்காரு நெறைய குளங்கல தூர் வாரியிருக்காரு.. கோயில் கொடன்னு வந்துட்டா அவரு காசுல திருவிழாவே நடக்குமாம்.. உதவின்னு அவராண்ட போயி யாரு நின்னாலும் வெறுங்கையோட திரும்புனதில்லையாம்’ 

இதை முனியன் சொல்லியவாறு முனியன் உட்புறமாக திரும்பிப் பார்த்தான். உள்ளிருந்தவர் அவன் சொல்வதையே புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் எதிரில் இருந்த அழகிரிசாமி ஐயாவும் அதே புன்னகையுடன் முனியனை பார்த்துக் கொண்டிருந்தார். 

’இப்படியே செஞ்ச தர்மங்களால ஐயாவோட கடைசி காலத்துல கொஞ்சம் நொடிஞ்சி போய்டதா எங்கப்பா சொன்னாரு. அவரு இறப்புக்கு போனப்போ கூட்டம்னா கூட்டம். அவ்ளோ கூட்டங்களாம்.. அவரோட தான தருமத்தோட பலன அப்ப தான் நேர்ல பாத்ததா எங்கப்பா சொன்னாரு.. அந்த வாரம் முழுக்க இதையே பாக்கறவங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டிருந்தாரு.. அவரு எங்கிட்ட சொன்னதத் தான் நா உங்ககிட்ட சொல்லிட்டிருக்கேன்..’  

இதைச் சொல்லி முடிக்கும்போது இம்முறை முனியன் உட்பக்கம்  திரும்பவில்லை. சாலையை மங்கலாக்கி மாடுகளிரண்டும் நடை போட்டது. முனியன் கண்களில் நிழலாடிய நீர்த்துளிகளை தோளில் இருந்த துண்டால் ஒற்றியெடுத்தான். 

சற்று நேரம் இருவருக்கும் மத்தியில் மௌனம் நிலவியது. வண்டிச் சத்தத்தை தவிர அப்போது வேறெந்த சத்தமும் இல்லை. 

உள்ளிருந்தவர் சற்று தொண்டையை செருமிக் கொண்டார். அதைக்கேட்டு முனியன் அவர் பக்கம் திரும்ப..

‘அது சரி முனியா.. நா ஆரம்பத்துல வண்டி உன்னதான்னு கேட்டப்போ இல்லன்னு சொன்னியே.. அதான் உங்க அழகிரிசாமி ஐயா உங்க தாத்தாவுக்கு வண்டிய கொடுத்திட்டதா  சொல்றியே.. அப்படின்னா வண்டி உங்களோடது தானே.. அத சொல்ல ஏம்பா அவ்ளோ தயக்கம்’

இம்முறை முனியன் அழுத்தமாகவே உட்புறமாக திரும்பி ’ஐயா இது என்னோட வண்டின்னு சொல்ல அரம்பிச்சிட்டா.. நாளாவ நாளாவ ஐயா மேல எனக்கிருக்கற அன்பு எங்க கொறஞ்சிடுமோன்னு எனக்குள்ள ஒரு தயக்கம் அதான்.. எப்ப யாரு கேட்டாலும் உங்களுக்கு சொன்ன அதே பதில தான் சொல்லிட்டு வாரேன்’ என்று கூறினான். 

சில கணங்களுக்கு பிறகு ‘அது மட்டுமில்லங்கய்யா..’ என்று முனியன் வாயெடுக்கும் முன் உள்ளிருந்தவர் அவன் பேசுவதை தடுத்து ‘எங்க தாத்தாவும் அப்பாவும் கூட இப்டியே தான் சொல்லிட்டு வந்திருக்காங்கன்னு சொல்லுவியே’ என்று கேட்டு சிரித்தார். முனியனும் அதை ஆமோதிப்பது போல் சிரித்தான். அழகிரிசாமி ஐயாவும் இதை சிரித்தவாறே பார்த்துக் கொண்டிருந்தார். வண்டியில் இருந்த மாட்டின் சலங்கைகள் எழுப்பிய சத்தமும் அப்போது கலகலவென சிரிக்கிறார்போல் இருந்தது. 

வெகுதூரத்தில் கிருஷ்ணாபுரம் குறுக்குச்சாலை புள்ளியாக தெரிந்தது. 

உள்ளிருந்தவர் முனியனை அழைத்தார். அவன் அவரை திரும்பிப் பார்க்க அவரிடமிருந்த ஒரு பையை எடுத்து முனியனிடம் கொடுத்தார். 

‘என்ன்ங்கய்யா இது’ என்று முனியன் கேட்டான். 

’இதுல ஒரு பேண்ட் சர்ட் இருக்கு. பையனுக்கு கொடு’ என்றார். 

அவன் சற்று பதட்டத்துடன் ’அதெல்லா வேண்டாங்கய்யா’ என்றவாறு அவரிடமே பையை நீட்ட முனையும்போது, அவர் தடுத்து 

‘முனியா இதெல்லாம் என் சொந்தக்கார பிள்ளைகளுக்காக வாங்கியது. அதுல ஒரு பிள்ளையா ஒம் மகன நெனச்சிட்டு போறேன்.’ இதற்கு மேல் முனியனால் மறுக்க முடியவில்லை.

மேலும் அவர் தனது சட்டைப் பையிலிருந்து சிறிது பணத்தை எடுத்து அவனது சட்டைப்பையில் திணிக்க ‘ஐயா..’ என்று அவன் மறுபடியும் இழுக்க ‘துணிய தைக்க வேணாமா?’ என்று சிரித்தவாறே சொன்னார். அதற்குள் கிருஷ்ணாபுரம் குறுக்குச்சாலை வந்துவிட இதை கவனித்துவிட்ட அவர் ‘முனியா நா இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு. வண்டியை நிறுத்திக்கோ’ என்று சொல்ல முனியன் வண்டியை நிறுத்தினான். பைகளுடன் கீழிறங்கிய அவர் ‘பையன நல்லா படிக்க வைப்பா’ என்று  சோலியவாறே வண்டியின் முன்பக்கமாக வந்து நின்றார். 

’சரிப்பா.. நா வரட்டுமா’ என்று சொல்லி நகர ஆரம்பித்தார். அப்போது முனியன் ஏதோ நினைத்துக் கொண்டவனாய்  ’ஐயா மன்னிச்சுக்கங்க.. நீங்க யாருன்னு நான் கேக்கவே இல்ல.. ‘

அவர் புன்சிரிப்புடன் முனினைப்பார்த்து ‘நீ இவ்ளோ நேரம் சொல்லிட்டிருந்தயே. அந்த அழகிரிசாமி அய்யாவோட பேரன் தான் நான்’ என்றதும், முனியனுக்கு வெலவெலத்து போய்விட்டது. உடனே அவன் சுதாரித்துக்கொண்டு வண்டியிலிருந்து சடாரென கீழே குதித்து அவரிடம் ஓடிச் சென்று அவர் கைகளை பிடித்துக் கொண்டான்.

அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. நாத்தழுதக்க ‘ஐயா நா எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்.. என்ன பத்தியே பேசிட்டிருந்த நான் உங்கள மறந்திட்டேனே..’ என்று சொல்ல, அவர் அவன் கைகளை ஆதரவுடன் பற்றியவாறு ‘நீ எதையுமே நீ மறக்கலப்பா.. இன்னிக்கு பாக்கற ஒருத்தர நாளைக்கு தெரியலன்னு சொல்ற உலகத்துல மூணாவது தலைமுறைல உதவி செஞ்ச ஒரு மனிதரைப் பத்தி இன்னிக்கும் நெனச்சிட்டிருக்கியே.. அத என்னன்னு சொல்றது.. உன்னப்போல நானும் என் தாத்தாவ பாக்கல.. ஆனா இன்னிக்கு உன் மூலமா அவர பாத்தாப்போல இருக்கு. சரி நீ கிளம்பு. அதிர்ஷ்டம் இருந்தா இன்னொரு முறை சந்திக்கலாம்’ என்று சொல்லி பைகளை கையில் எடுத்துக்கொண்டார்.

‘ஐயா வீடு வரைக்கும் கொண்டு வந்து விடறேனே..’

‘வேணாம் முனியா.. இங்கிருந்து நடந்து போறது தான் என்னோட வழக்கம்.’ என்று சொல்லியவாறு நடக்க ஆரம்பித்தார். 

போகும்போதே அவர் குரலை சற்று உயர்த்தி ‘முனியா இது ஒன்னோட வண்டி தான். இனி யாரு கேட்டாலும் அதையே சொல்லு. ஐயா இருந்தாலும் இதையே தான் சொல்லியிருப்பாரு..’ 

முனியன் அவர் போவதையே நன்றி உணர்ச்சி மேலிட சிறிது நேரம் பார்த்துக்கொண்டு நின்றான். பின் வண்டியில் சென்றமர்ந்து மாடுகளை தட்டிக்கொடுத்து குரல் கொடுத்தவாறு கையிலிருந்த தாரை தளரவிட்ட்டான்.

அன்றைய நினைவுகளை தாங்கியவாறு அந்த வில்வண்டி அங்கிருந்து நகர ஆரம்பித்தது.

No comments:

Post a Comment

பறவை நோக்குதல் எனும் ரசனையான பணி

ராஜேந்திரன் பறவை என்பதை இப்படி எளிமையாக விளக்கலாம். உலகிலேயே சிறகு உடைய பிராணி பறவைதான். நமது பெருவிரல் பருமனே உள்ள மிகச் சிறிய ரீங்காரப் பற...