Jesse Olsen and Bernd Reinhardt
1920களின் இறுதிவாக்கில், மெக்சிக்கன் அரசாங்கம் கலைஞர்களுக்குத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அரசியல் சுதந்திரம் அளித்து வந்தது. 1928இல், வரவிருந்த சோலிச மாற்றத்தை வரவேற்க, டெய்கோ ரிவொரா கல்வித்துறை அமைச்சகத்தில் கம்யூனிஸ்டுகளை நினைவுகூரும் வகையில் அவர்களின் படங்களைச் சுவரோவியங்களாக வரையச் செய்தார். இந்த ஓவியங்களின் மையத்தில், ஒரு சிவப்பு நட்சத்திரத்துடன் ஒரு சிவப்புநிற சட்டை அணிந்து, ஆயுதங்களைக் கையிலேந்திய நிலையில் ஃப்ரைடா காணப்படுகிறார். அந்த ஆண்டு தான் மெக்சிக்கோ கம்யூனிஸ்ட் கட்சியில் (PCM) அவர் சேர்ந்தார்.
இது இடது எதிர்ப்புகளின் மீதான ஸ்ராலினின் தொடர்ச்சியான தாக்குதல்கள், சோவியத் ஒன்றியத்திலிருந்து ட்ரொட்ஸ்கியின் வெளியேற்றம், மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பல்வேறு பிரிவுகளிடையே "தனியொரு நாட்டில் சோசலிசம்" எனும் எதிர்-மார்க்சிச கோட்பாட்டை நிறுவிய காலக்கட்டமாக இருந்தது. இந்த சூழலின் ஏதாவதொன்று ரிவொராவின் படத்தில் காண முடிகிறதா? அது ஃப்ரைடாவை ஒரு புரட்சிகர செயல்வீராங்கனையாக காட்டுகிறது. கலைஞரும், சுவரோவியவாதியுமான டேவிட் ஸ்க்குரோஸ் (DAVID SIQUEIROS) படத்தின் இடதுபுறம் ஓரத்தில், சலனமற்ற பார்வையாளரைப் போன்று வரையப்பட்டிருந்தார். ஆனால் நிஜ வாழ்வில், அவர் ஒரு துடிப்பார்ந்த ஸ்ராலினிஸ்டாக முன்னேற்றமடைய இருந்தார்.
1929இல் (இந்த ஆண்டில் தான் அவர்களுக்குத் திருமணம் நடந்தது) ரிவெரா PCMஇல் இருந்து வெளியேற்றப்பட்ட போது, ஃப்ரைடாவும் அவரைத் தொடர்ந்து வெளியேறினார். ரிவெராவின் வாழ்க்கை வரலாறு குறித்து ஆண்ட்ரியா கெட்டென்மேன் (ANDREA KETTENMANN) எழுதுகையில் பின்வருமாறு எழுதுகிறார்: அவர் சோவியத் ஒன்றியத்தில் இருந்த போது, கலாச்சார மற்றும் அரசியல் விஷயங்களில் கட்சி நிர்வாகிகளுக்கும் அவருக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. இது, ஸ்ராலினிச அரசாங்கம் "அவரை மீண்டும் மெக்சிக்கோவிற்கே திரும்ப சொல்ல அறிவுறுத்தும் நிலைக்கு" இட்டுச் சென்றது. பின்னர், அரசாங்கத்திடமிருந்து பல விசாரணைக் கமிஷன்கள் அவர்மீது அமைக்கப்பட்டதைத் தொடர்ந்தும், மெக்சிக்கோவிற்கான அமெரிக்க தூதரான DWIGHT W. MORROW அளித்த குவர்னவாக்காவின் முன்னாள் கோர்டெஜ் மாளிகையில் ஒரு சுவரோவியத்தை வரைவதற்கான பணியை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்தும் அவர் மெக்சிக்கன் கட்சியிலிருந்து (MEXICAN PARTY) நீக்கப்பட்டார்.
“மாற்று சிந்தனையாளர்கள் மற்றும் உடன்படாதவர்களுக்கு எதிரான ஸ்ராலினிச நடவடிக்கைகளுக்கு இடையில், கட்சியின் அரசியல் போக்கில் தம்முடைய கலைத்துவ சுதந்திரத்தை அடிபணிய செய்யும் ஒரு கலைஞர் மீது பொய்மையாக திணிக்கப்பட்ட "பாட்டாளி வர்க்க கலாச்சார" கருத்துருவை ரிவொரா கவனிக்கத் தவறினார். பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், ஸ்ராலினிச மற்றும் ஏனைய பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான ஓர் அறிக்கையான For an Independent Revolutionary Art (1938) என்பதில் அவர் லியோன் ட்ரொட்ஸ்கியுடனும், மீஎதார்த்தவாதியான (surrealist) ஆண்ட்ரே பிரெட்டெனுடனும் சேர்ந்து செயல்பட்டார்.
1929ஆம் ஆண்டிலும் சமூக ஸ்திரமின்மை நிலவியது. எமிலோ போர்டெஸ் கில்லின் மெக்சிக்கன் அரசாங்கம், தேசிய புரட்சிகர கட்சி (NATIONAL REVOLUTIONARY PARTY – PNR) என்ற ஓர் ஒட்டுமொத்த கூட்டணியை அமைத்ததன் மூலமாக அரசு அதிகாரத்தை ஒன்றுதிரட்ட முயற்சித்தார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு வெற்றி பெறவில்லை. பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இலையுதிர் காலத்தின்போது, நியூயோர்க் பங்குச்சந்தை உடைந்தது. 1930இன் தொடக்கத்தில், புதிய மெக்சிக்கன் ஜனாதிபதி PASCUAL ORTIZ RUBIO மீதான ஒரு படுகொலை முயற்சி தோல்வியுற்றது.
கம்யூனிச விரோத ஆக்ரோஷம் தூண்டிவிடப்பட்டதில், ஒத்துவராத அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்களுக்கு எதிராக ஒரு வெறுப்பு பிரச்சாரம் எழுப்பப்பட்டது. இதன் கடுமையான விளைவுகள் அந்நாட்டை விட்டே பலரை வெளியேறும்படி செய்தது. 1930இல், காலோவும், ரிவொராவும் கூட ஒருசில ஆண்டுகளுக்கு அமெரிக்காவிற்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் முக்கியமாக கலைத்துறையிலும், மேல்மட்ட நடுத்தர வர்க்க வட்டாரத்திற்குள்ளும் இருந்து செயல்பட்டார்கள்.
“அங்கிருந்த அனைத்து பணக்காரர்களுக்கு எதிராகவும் இஃப்ரீதா ஓரளவிற்கு வெறுப்பை" உருவாக்கினார். ஆனால் மெக்சிக்கன் ஸ்ராலினிசவாதிகள், முற்றிலும் சுயநலத்துடன், “ரிவெரா வட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மற்றும் கோடீஸ்வரரான மோரோவின் ஒரு கையாள்" என்று வர்ணம்தீட்டி, அந்த தம்பதியினரின் பயணங்களை ஒரு மோசடியானதாகவும், போலிக்காரணங்களுக்கு உரியதாகவும் செய்தார்கள்.
ரிவெராவும், காஹ்லோவும் அமெரிக்காவில் இருந்தபோது, ஸ்ராலினிசத்திற்கு எதிரான இடது எதிர்பின் கருத்துக்கள் மற்றும் அதன் தலைவர் லியோன் ட்ரொட்ஸ்கியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்கள். அவர்களின் முயற்சியால்—ஆனால், ட்ரொட்ஸ்கி அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்—1937இல் Lázaro Cárdenas del Ríoஇன் மெக்சிக்கன் அரசாங்கத்தால் ட்ரொட்ஸ்கி மெக்சிக்கோவிற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அங்கே அவர் கொயொகனில் இருக்கும் இஃப்ரீதாவின் வீடான ப்ளூ ஹவுஸில் நாடுகடத்தப்பட்ட ஒரு நபராக தங்கியிருந்தார். முற்றிலுமாக ஆழமான அரசியல் மற்றும் கலாச்சார பரிவர்த்தனைகளுடன் பாத்திரப்படுத்தப்பட்டிருந்த ட்ரொட்ஸ்கியுடனான ஃப்ரைடா காலோவின் தொடர்பு, கண்காட்சியில் முட்டாள்தனமாகவும், புலனுணர்ச்சி சார்ந்ததாகவும் காட்டப்பட்டது.
இந்த காலக்கட்டத்தில், அதாவது 1937இல், ஜோன் டுவேயின் (John Dewey) தலைமையிலான ஒரு சுயாதீன விசாரணைக் குழுவின் முன்னால் தோன்றுவதற்காக ட்ரொட்ஸ்கி தயாராகி கொண்டிருந்தார். அவருக்கு எதிரான ஸ்ராலினின் அரக்கத்தனமான குற்றச்சாட்டுகளை அவர் அம்பலப்படுத்த விரும்பினார். இந்த அரசியல்ரீதியான அடக்குமுறை அதன் தன்மையில், ஓர் ஆண்டிற்குப் பின்னர் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்துடன் ஆழப்படுத்தப்பட்டது. 1939இல், ஹிட்லர்-ஸ்ராலின் உடன்படிக்கை—இதற்கு எதிராக தான் ட்ரொட்ஸ்கி நீண்டகாலமாக எச்சரித்து வந்தார்—ஸ்ராலினின் புரட்சிக்கு எதிரான பாத்திரத்தை மேலும் வெட்ட வெளிச்சமாக்கியது. கம்யூனிஸ்ட் அகிலமும், அதன் ஆதரவாளர்களும் நெருக்கடிக்குள் தூக்கி எறியப்பட்டார்கள்.
இதில் எதையும் குறிப்பிடாததன் மூலமாக, ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கியின் போராட்டத்தில் ரிவெராவும், காலோவும் அவருக்கு பக்கபலமாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கண்காட்சி புறக்கணிக்கிறது. மேலும் ரஷ்ய புரட்சியின் மிக முக்கிய தலைவர்களில் ட்ரொட்ஸ்கியும் ஒருவர் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்கு, அதன் பொது அறிவிப்புகள் மற்றும் குறிப்புகளைப் பயன்படுத்தவும் கண்காட்சி தவறி இருக்கிறது.
கண்காட்சியில் முக்கியமான ஒரு பிரமுகர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. கண்காட்சி குறிப்புகளின்படி, The Bus (1929) ஓவியத்தில் ஒரு குழந்தைக்குப் பால் கொடுத்து கொண்டிருக்கும் ஒரு பெண்மணி, டினா மொடொட்டி என்று குறிப்பிடப்படுகிறார். டெய்கோ மற்றும் இஃப்ரீதா இருவரையும் ஒன்றுசேர்த்த ஒருவராக மட்டுமே அவரைக் குறித்த விளக்கவுரை விளக்குகிறது. மொடொட்டி (1896-1942) இத்தாலிய வம்சாவழியில் வந்த அமெரிக்க கம்யூனிஸ்டாக இருந்தார். ஒரு புகைப்படக் கலைஞராக இருந்த அவர், தம்முடைய தோழியான ஃப்ரைடா காலோவை கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அறிமுகப்படுத்தி இருக்கலாம்.
1929 ஜனவரியில், மொடொட்டியின் தோழரும், கியூபா மாணவ தலைவரும், கம்யூனிஸ்டும் மற்றும் ஸ்ராலினிச இடதுசாரி விமர்னங்கள் மீது அறிவுபூர்வமாக ஒருமுனைப்பட்டிருந்தவருமான ஜூலியோ அண்டோனியோ மெல்லா, பட்டப்பகலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். ஒருவேளை இது கியூபா அரசாங்கத்தின் உத்தரவின்பேரில் நடந்திருக்கலாம். ட்ரொட்ஸ்கியின் ஒரு வாசகத்தைக் கொண்ட ஒரு துண்டு காகிதத்துடன், மெல்லாவின் தட்டச்சு இயந்திரத்திலிருந்த மொடொட்டியின் புகைப்படம்—எலிசபெத் வெயரால் அவருடைய ஆவணப்படமான Tina Modotti: Photographer and Revolutionary (1996)இல் குறிப்பிட்டிருந்தவாறு—ஒரு நினைவுச்சின்னமாக மாறியிருக்கிறது.
மெக்சிக்கன் புரட்சிகளும், ரஷ்ய புரட்சிகளும் இளம் கலைஞர்களை எவ்வாறு ஈர்த்தன என்பதற்கு மொடொட்டி ஓர் உதாரணம். எவ்வாறிருப்பினும், ஸ்ராலினிச அதிகாரத்தின்கீழ் ஒரு கொடூரமான விலை கொடுத்த பல கலைஞர்களில் அவரும் ஒரு துயரமான எடுத்துக்காட்டாக இருக்கிறார். 1930களின் மத்தியிலிருந்து ஸ்ராலினின் KGBக்காக (சோவியத் இரகசிய சேவை) மொடொட்டி பணியாற்றினார். மேலும் 1927க்கு முன்னர், மெக்சிக்கன் கட்சியில் (Mexican Party) ஒரு ஸ்ராலினிய துருப்பிலிருந்த இத்தாலிய ஸ்ராலினிச அதிகாரியான விட்டோரியா விடாலியுடன் (Vittorio Vidali) இணைந்திருந்தார். சுவரோவியவாதியான ஸ்க்குரோஸூடன், 1940இல் அவர் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்ய முயன்றார். முன்னாள் கம்யூனிஸ்டும், கலைஞருமான ஸ்க்குரோஸூம்—மெக்சிக்கோ கம்யூனிஸ்ட் கட்சியைப் போன்றே—ஸ்ராலினுடைய கருவியின் பாகமாகி இருந்தார்.
கம்யூனிசத்துடனான ஃப்ரைடா காலோவின் உண்மையான அரசியல் ஈடுபாட்டைக் குறித்து எதையும் கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் எதை கண்டறிய முடியுமோ அதுவும் பொதுவாக மேலோட்டமாக காட்டப்படுகிறது. இதுபோன்ற தகவல்களை பெரும்பாலும் பிரத்யேக ஆவணங்கள் அல்லது கடித தொடர்புகளிலிருந்து பெறலாம். ஸ்ராலினுக்கு எதிராக இருந்த இடது எதிர்ப்புகள் மீது காஹ்லோ காட்டிய அனுதாபமே, அவருடைய வாழ்வின் மிகவும் நிறைவான மற்றும் ஆக்கப்பூர்வமான காலக்கட்டத்தை நிரூபித்தது. இந்த உண்மையை வெறுமனே ஓர் அத்தியாயமாக குறைப்பதைக் கூட அனுமதிக்க முடியாது.
1930களின் போது, அமெரிக்க கம்யூனிஸ்ட் கழகத்தின் (Communist League of America) நியூயோர்க் ட்ரொட்ஸ்கிசவாதிகள், ரிவெராவுடன் “தோழி ஃப்ரைடாவும்” இருக்க வேண்டும் என்று பெரும்பாலும் கோரியதாக கண்காட்சியின் அட்டவணை விளக்குகிறது—அவர் அரசியல் கூட்டங்களில் பங்கெடுத்திருக்க கூடும் என்பதற்கான ஓர் குறிப்பாக இது இருக்கிறது. அமெரிக்காவிலிருந்து காஹ்லோ எழுதிய கடிதங்களில் ஒன்றில், அவர் எழுதுகிறார்: “நான் இங்கே நிறைய கற்றிருக்கிறேன். கம்யூனிசத்தின் மூலமாக மட்டும் தான் நாம் மனிதர்களாக மாற முடியும் என்று நான் மிகவும், மிகவும் நம்புகிறேன்.” முன்னாள் ட்ரொட்ஸ்கிசவாதியான ஆக்டாவியா பெர்னான்டஸ் (Octavio Fernández), நான்காம் அகிலத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராக அவரை புகழ்கிறார்.
ஸ்க்குரோஸ் முன்னெடுத்த படுகொலை முயற்சிக்கு வெறும் ஒருசில மாதங்களுக்குப் பின்னர், 1940 ஆகஸ்டில் நடந்த ட்ரொட்ஸ்கியின் படுகொலையால் ஆழமாக அதிர்ச்சியடைந்த பலரில் காலோவும் ஒருவராக இருந்தார். செம்படையின் ஸ்தாபகருக்கு-விளாடிமீர் லெனினின் கரங்களிலிருந்த முன்னாள் தோழருக்கு ஓர் அரை மில்லியன் மக்கள் தங்களின் இரங்கலைச் செலுத்தினார்கள். யாரோவொரு மெக்சிக்கன் இசையமைப்பாளரால் இசைக்கப்பட்ட, ட்ரொட்ஸ்கியின் மரணம் குறித்த துயரமான பிரபல நாட்டுப்புறப் பாடலும் கூட அப்போதைய அந்த உணர்விலிருந்து தோன்றி இருக்கக்கூடும். (mp3 audio: Gran Corrido de León Trotski).
எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியில் ஃப்ரைடா காலோ மீண்டும் சேர்ந்தார் என்பது ஒருபெரும் முரண்பாடாக தெரிகிறது. ஆனால் அந்த தலைமுறை கம்யூனிஸ்டுகளின் மீதான ஸ்ராலினின் நேரடியான நிர்மூலமாக்கலும், ஹிட்லரின் எழுச்சியும் மரண விளைவுகளைக் கொண்டிருந்தன. அது பல கலைஞர்களையும், அறிவுஜீவிகளையும் சிதைத்து, சின்னாபின்னமாக்கியது. தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு புதிய அகிலத்தை உருவாக்குவதற்கான போராட்டம் அவர்களுக்கு மிகவும் கடுமையானதாக இருந்தது.
சில குட்டி முதலாளித்துவ வட்டாரங்களில், குறிப்பாக 1941இல் சோவியத் ஒன்றியத்தின் மீதான ஹிட்லரின் தாக்குதலுக்குப் பின்னர், ஸ்ராலினைக் குறித்த எந்த விமர்சனமும், பாசிசவாதிகளுக்கு உதவுவதாகவும், “நிலவியிருந்த உண்மையான சோசலிசத்தைக்” காட்டிகொடுப்பதாகவும் பார்க்கப்பட்டது. ஸ்ராலினின் இராணுவ நேசநாடுகளாக அமெரிக்காவும், மெக்சிக்கோவும் யுத்தத்தில் நுழைந்த போது இன்னும் சிக்கலான பிரச்சினைகள் எழுந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, ஹிட்லரால் விரட்டியடிக்கப்பட்ட பல ஐரோப்பிய அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்களின் வருகை—1930களின் இறுதியிலிருந்து இவர்களுக்கு மெக்சிக்கோவில் அதிகளவில் அரசியல் அடைக்கலம் அளிக்கப்பட்டது என்பதுடன், இவர்களில் பலர் ஸ்ராலினிச கட்சிகளின் உறுப்பினர்களாக இருந்தார்கள்—நிச்சயமாக பெரும் சந்தேகத்திற்கிடமான மற்றும் எதிர்மறையான சூழலை ஏற்படுத்துவதில் பங்களிப்பளித்தது.
யுத்தத்திற்குப் பிந்தைய காலப்பகுதியில், சோவியத் இராணுவ வெற்றிகளாலும், கிழக்கு ஐரோப்பாவில் “சோசலிச” அரசுகளின் உருவாக்கத்தாலும், மற்றும் ஸ்ராலினிச குற்றங்களைக் கடந்தகால பிரச்சினையாக மாற்றிய 1949 சீன புரட்சியாலும் அறிவுஜீவிகளின் கூட்டம் தன்னைத்தானே சமாதானப்படுத்தி கொண்டது. காலோவும் வெளிப்படையாக இத்தகைய கருத்துக்களோடு உடன்பட்டு ஈர்க்கப்பட்டார். அவர் 1950களின் தொடக்கத்தில், எண்ணிலடங்காத ஸ்ராலினிச-ஆதரவு “அமைதி இயக்கங்களில்” ஒன்றுக்காக கையெழுத்துக்களைச் சேகரித்தார். ஸ்ராலினிசத்தை நோக்கி திரும்பிய அவரின் பரிணாமத்தை விளக்க முடியும். ஆனால் அது அந்த யதார்த்தத்தை எவ்விதத்திலும் ஈர்ப்புடையதாக ஆக்காது.
காஹ்லோ வெடிப்புமிக்க காலக்கட்டத்திலும், கிளர்ச்சியான சூழ்நிலைகளின்கீழும் வாழ்ந்தார். அதை மட்டும் தான் இங்கே எடுத்துக்காட்ட முடியும். ஆனால் இந்தவொரு விளக்கம், வலியையும், அழுத்தத்தையும் மற்றும் நிச்சயமற்றதன்மையையும் ஒருவித திடத்தோடு தாங்கிய அவருடைய திறனுக்கு சாட்சி அளிக்கிறது. எப்போதாவது அவருடைய கலையில் வெளிப்படும் அதிர்ச்சிகரமான கொடூரத்தன்மை, அப்போதிருந்த குழப்பத்தோடும், தொந்தரவான சூழ்நிலையோடும் இணைந்திருந்தது. இதை அவருடைய ஓவியங்களில் துல்லியமாக குறிப்பிட்டுக் காட்டுவது மிகவும் சிரமமாகும். இந்த பண்புகளை வெறுமனே உள்நாட்டு யுத்தத்திற்கு முந்தைய அவருடைய அனுபவங்கள் என்றோ, அவரின் தனிப்பட்ட பிரச்சினைகள் என்றோ, ரிவெராவுடனான அவரின் சிக்கலான உறவினால் ஏற்பட்டது என்றோ, மெக்சிக்கன் மனநிலையோடும், மரணத்தோடு தொடர்புடைய அதன் பிரத்யேகதன்மையோடும் உழலும் அவரின் போக்கு என்றோ கூறி குறுக்கிவிட முடியாது.
அது மெக்சிக்கன் பாரம்பரியத்துடனான அவரின் கலைத்துவ முரண்பாடுகளுக்கு இடையிலும், இருபதாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளின் சூழலிலும், கிராமப்புற கலையின் எதிர்மறையான இருபொருள்வாதத்தையும் மற்றும் இயற்கையின் முழுமையான சுழற்சிகளில் நாட்டுபுறக் கலைகளுக்கான வரவேற்பையும் சமாளித்து அவரால் சிறப்பாக செய்ய முடிந்தது என்பதில் உள்ளது. அவற்றில் இருக்கும் மறைமுக அடையாளங்களுடன், காலோவின் ஓவியங்களில் இருக்கும் பதற்றம் இந்த பழைய இருபொருள்வாதத்தை உடைத்துக் கொண்டு, ஓர் இலயமான இரட்டை தொனியை உருவாக்குவதன் மூலமாக எழுகிறது. அவருடைய இருபொருள்வாதம்—பெரும்பாலும் ரிவெராவுடனான அவரின் உறவின் வடிவில் வரையப்பட்டது; எடுத்துக்காட்டாக, EMBRACING THE UNIVERSE OR DIEGO, ME AND XOLOTL (1949) ஆகியவற்றில்—ஒற்றுமையின்மையைக் காட்டுவதாகவும் (STRIFE-TORN), சிலநேரங்களில் கடுமையானதாகவும், வெளிப்படையான எதிர்மறைத்தன்மையை அடிக்கோடிடும் சில விரோத உணர்வுகளாகவும் உள்ளது. இந்த படங்கள், யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டிருக்கும் அமைதி மற்றும் ஒற்றுமைக்காக கதறுகின்றன.
இந்த முரண்பாட்டை காலோவின் “சம்பிரதாய இயல்பிலும்” காண முடிகிறது. அவருடைய கருச்சிதைவு மற்றும் அவருடைய உடல்வியாதிகளுக்கான அடையாளங்களுக்கு முரண்பாடாக, கருவுறுதலுக்கான அடையாளங்கள்—வளமையான முனைப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட தெளிவு, இயற்கையான உயிராற்றல் போன்ற அடையாளங்கள்—முன் வந்து நிற்கின்றன. ஃப்ரைடா அவரை அவரே இயற்கையோடு கலந்தவராகவோ அல்லது பாரம்பரிய மெக்சிக்கன் உடையில் இருப்பவராகவோ காட்டுவதன் மூலமாக, அவர் செய்வதைப் போன்றே, அவருடைய இயல்பும், உடலும் அபிநயங்களாக மாறி இருக்கின்றன.
THE BROKEN COLUMN (1944) என்பது ஃப்ரைடா காலோவின் மிக பிரபலமான ஓவியமாக இருக்கிறது. இந்த ஓவியத்தின் மற்றும் ஏனைய ஓவியங்களின் பின்புல வரலாற்றை ஒருவர் எடுத்துப்பார்க்கும் போது, அவருடைய உடல் வியாதியைக் குறித்து சிந்திப்பதே சிரமமாக இருக்கிறது. அவருடைய ஆன்மாவில் வேறேதோவொன்று இருந்திருக்க வேண்டும். அது மட்டும் தான் அவருடைய கலையின் உதவியோடு சேர்ந்து, அவருக்குள் வலியோடு இருந்திருக்கக் கூடும்.
No comments:
Post a Comment