Wednesday 18 April 2018

ஏன் நமக்கு நீட்ஷே ?


அ.மார்க்ஸ்



தத்துவப் பாரம்பரியத்திலேயே மிகவும் மோசமாக புரிந்து கொள்ளப்பட்ட, மிகவும் தவறாக விளக்கம் சொல்லப்பட்ட ஒரு சிந்தனையாளன் உண்டென்றால் அது நீட்ஷே தான். பாசிஸ்டுகள் நீட்ஷேவை எடுத்துக் கொண்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதை மட்டும் வைத்துக்கொண்டு நீங்கள் நீட்ஷேவை மதிப்பிட்டுவிட முடியாது.


ஸ்டாலின் மார்க்ஸின் பெயரால், பொதுவுடமையின் பெயரால் தான் எல்லாவற்றையும் செய்தார். அதனால் ஸ்டாலினை மட்டும் வைத்துக்கொண்டு நீங்கள் மார்க்ஸியத்தை மதிப்பிட்டுவிட முடியுமா?

நீட்ஷேவை பாசிஸ்டுகள் தவறாக வாசித்து விட்டார்கள். உண்மையிலொ நீட்ஷே அப்படில்லை என்று நான் சொல்லவில்லை. எல்லவற்றையும் பிரதியாக பார்க்கும்போது எழுதியவனின் உள்நோக்கம் என்ன என்று ஆராய்ச்சி செய்வதில் அர்த்தமில்லை. அதோடு பிரதியை ஒரு மூடுண்ட பொருளாக கருதி அதற்கொரு சாரம் (Essence) இருப்பதாக பார்க்கிற அணுகல் முறையும் இப்போது காலாவதியாகி விட்டது. நீட்ஷேவின் பிரதியில் அமைந்துள்ள வித்தியாசங்களை பாசிஸ்டுகள் எவ்வாறு கையாண்டார்கள், பொருள் கொண்டார்கள், நாம் அவற்றை எவ்வாறு கையாளப் போகிறோம் என்கிற ரீதியில் சிந்திப்பதுதான் நமக்கு பயனுடையதாக இருக்கும்.

நீட்ஷே மட்டுமல்ல எல்லாப் பிரதிகளையுமே நாம் இப்படித்தான் அணுக வேண்டும். அவ்வாறின்றி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒரு வாசிப்பு முறையுடன் நீங்கள் பிரதியை அணுகும்போது பிரதியின் பல்வேறு அர்த்த சாத்தியங்கள் நசுக்கப்படுகின்றன ; ஒடுக்கப்படுகின்றன. பிரதியின் மீதான வன்முறையாக அது அமைந்து விடுகிறது. ஏன், வாசிப்பு சுதந்திரத்தை மறுப்பதன் மூலமாக வாசிப்பவன் மீதேயான வன்முறையாகவும் அது அமைந்து விடுகிறது.

என்னை நீட்ஷே ஈர்க்கிற அம்சங்களை நான் இப்போது சொல்கிறேன். மேலைச் சிந்தனையின் எல்லா அடிப்படைகளையும் இரக்கமேயில்லாமல் போட்டு நொறுக்கியவன் அவன். கடவுள், மதம், இறைநீதி, அறம், கருணை என எல்லாவற்றையும் முற்றாக மறுத்தவன் அவன்.

’கடவுள் இறந்து விட்டான்’ என்கிற அவனது புகழ் பெற்ற பிரகடனத்தின் மூலம் வெளியிலிருந்து மனிதனுக்கு கையளிக்கப்பட்ட எல்லாவிதமான பிரமாணங்களையும், அதிகார ஆதாரங்களையும் (Authority) தூக்கி எறிந்தான்.

முதன்முதலாக மனிதன் தனது சுயத்திற்கு (Selfhood) தானே அதிகாரியானான். நவீனத்திற்கு முந்தைய காலத்தில் (Pre-Modernity) கடவுள், மதம், வேதங்கள் என்பனவே சமூகத்தின் ஆதார மையங்களாகவும், நடுநாயகமாகவும் அமைந்தன. தனி மனித/சமூக அறங்களையும், மதிப்பீடுகளையும் இவைதான் உருவாக்கின. மதத்தின் பிடி வீழ்ந்து நவீனத்துவம் உருவானபோது மனிதன் விடுதலையடைந்து விடவில்லை. மதத்தின் இடத்திலும், கடவுளின் இடத்திலும் பகுத்தறிவு அமர்ந்து கொண்ட்து.

பகுத்தறிவு/தர்க்கங்களின் அடிப்படையில் உருவான கொள்கைகள், கோட்பாடுகள், நிறுவனங்கள் என்பன மனித மதிப்பீடுகளை நிர்ணயம் செய்கிற பிரமாணங்களாயின. ஆக மனிதன் சுய ஆதாரமுடையவனாக மாறவில்லை. மீண்டும் வெளியிலிருந்தே அவனுக்கு விழுமியங்களும், அறங்களும் வழங்கப்பட்டன. சுய ஆதாரம் (Authencity) அவனுக்கு மறுக்கப்படட்து.

’கடவுள் இறந்து விட்டான்’ என்பதன் மூலம் எல்லாவிதமான பிரமாணங்களுக்கும், விழுமியங்களுக்கும் மனிதன் பொறுப்பில்லை என உலகதிர முழக்கமிட்டான் நீட்ஷே. இதன்மூலம் தனக்கான மதிப்பீடுகளையும், விழுமியங்களையும், அறங்களையும் தனக்குள்ளிருந்தே, தனது வாழ்க்கையிலிருந்தே உருவாக்கப்பட வேண்டும் என்றாகிறது.

’எல்லா மதிப்பீடுகளையும் மறு மதிப்பீடு செய்’ என்பது நீட்ஷேயின் இன்னொரு பிரகடனம். எந்த அடிப்படையில் மறு மதிப்பீடு செய்வது? எந்த அடிப்படையும் கிடையாது. 

உனது வாழ்க்கைக்கான மதிப்பீடுகளை நீதான் உருவாக்க வேண்டும் ; நீ நீயாக இரு. எல்லாவற்றிலும் உச்சியில் நில். உனது வாழ்வை அதன் எல்லைவரை இட்டுச் செல். வாழ்வை முழுமையாக வாழ். சாகசம் நிறைந்ததாக உன் வாழ்க்கை அமையட்டும். போர்ச்சூழலை தக்க வை. உனது முதல் எதிரி உனக்குள்ளிருக்கு கோழைத்தனங்களே, உன் பலவீனங்களே, சாகசங்களுக்கு அஞ்சும் அச்சமே. இவ்வாறு நீ உன்னை உறுதி செய்து கொள்ளும் போது மற்றவற்றின் மீது நீ ஆக்கிரமிப்புத் தன்மையோடு (Agression) இருக்க வேண்டுவதில்லை. நீ உன்னை உறுதி செய்வது தான் அதிகாரத்திற்கான விருப்புறுதி (Will to Power). இத்தகைய விருப்புறுதியின் மூலம் அடையக்கூடிய அனைத்தையும் அடைந்தவனே அதி மனிதன் (Superman) என்றெல்லாம் நீங்கள் நீட்ஷேவை வாசிக்க முடியும்.

எல்லாவிதமான அறங்களையும் குறிப்பாக அடிமை அறங்களை (Slave Morality) எள்ளி நகையாடினான் நீட்ஷே. நீட்ஷேயை அவ்வளவு எளிதாக ‘நிகிலிஸ்ட்’ என்று சொல்லிவிட முடியாது. தீமைகளுக்கும் (Evil) துயரங்களுக்கும் விருப்புறுதி (Will) தான் காரணம் என்பது ஷோபன்ஹேரின் கருத்து. ஆனால் மனித வல்லமையின் ஆதாரமாக இதனை நீட்ஷே முன் வைத்தான்.

வாழ்க்கையை முழுமையாக உறுதி செய்தல் என்பதே நீட்ஷேவின் சிந்தனை. வெளியிலிருந்து பிரமாணங்கள், வழிகாட்டுதல்கள், விதிமுறைகள், ஆதாரங்கள், அதிகாரங்கள் ஆகியவற்றை நம்பியிராமல் தீர்வுகளுக்கான வழிமுறைகளை பிரச்சினைகளிலிருந்தே தேடுதல், முன் தீர்மானங்களின்றி பிரச்சினைகளை அணுகுதல், எதனையும் இறுதித் தீர்மானமாக சொல்லாமல் எப்போதும் திறந்து நிற்றல் போன்ற பல்வேறு அம்சங்களில் காண்ட், நீட்ஷே மற்றும் இன்றைய போஸ்ட் மாடர்னிச சிந்தனையாளர்களிடம் ஒரு ஒப்புமையைக் காணமுடியும். 

மேலும் சாரம் (Essence), தோற்றம் (Origin), அடிப்படை (Foundation) முதலான தத்துவார்த்த வகையினங்கள் இதில் அடிப்பட்டு போகின்றன. வித்தியாசங்கள் முதன்மை பெறுகின்றன. 


நன்றி : 

சுகனும், ஷோபாசக்தியும் தொகுத்த ’சனதருமபோதினி’ சின்னக்கதையாடல்கள் தொகுப்பில் பதிவிடப்பட்ட அ.மார்க்ஸ் பேட்டியில் நீட்ஷே குறித்த கேள்விக்கான பதிலொன்றில் …

No comments:

Post a Comment