Friday 20 April 2018

நாடோடிகள் : உலகம் அவர்களின் உறைவிடம்

ஃபிரான்சுவா தெ வோ ஃபொலெத்தியர்



நாடோடிகள் தமது உழைப்பாற்றலாலும், இடையறாத உறுதியினாலும் தமது அலைச்சல்களின் போது தம் இனத்தின் தனித்தன்மையையும், ஆளுமையையும் காலம் காலமாக பேணிப் பாதுகாத்து வந்துள்ளனர்.


பயணங்களின் பயனாக அவர்கள் பல்வேறு நாட்டு மக்களுடன் தொடர்பு கொண்டனர். ஆயினும் அவர்களுடன் முற்றிலும் கலந்துவிடவில்லை. அதற்கு அவர்கள் நிலத்தில் வேரூன்றிவிடாதது மட்டும் காரணமாக இருக்கவில்லை. அவர்கள் உள்ளத்தில் இருந்த சமூக, மனிதப்பன்பு நெறிமுறைகள் காரணமாக எத்தனை மாற்றங்கள் நேர்ந்த போதிலும், அவர்களுடைய உலகளாவிய பயணங்கள் இடைவிடாத தொடர்ச்சியின் இயக்கமாக இருந்து வந்தது. நாடோடிப் பண்பாட்டின் வாய்மொழி மரபுகளும், அரிய பண்பு நெறிகளும் அவர்களை தனித்துவத்துடன் மிளிரச் செய்தது.

வாய்மொழி மரபானது ஆப்பிரிக்க நாடுகளின் வரலாற்றில்,  பெரும் பங்கு ஆற்றியுள்ளதை நாம் அறிவோம். நாடோடிப் பண்பாட்டின் இதயமாக விளங்கும் வாய்மொழி மரபு வரலாற்றின் தாக்குதல்களிலிருந்து தலைமுறை தலைமுறையாக நாடோடிகளின் தனித்தன்மையை பாதுகாத்து வந்திருக்கிறது. மேலும் இது பண்பாட்டு தனித்தன்மைக்கும், சுதந்திரத்துக்கும் உறுதியளிப்பதாகவும் உள்ளது. இதனாலேயே பழங்கதை மரபு சூழ்ந்த இவ்வினத்தவர் தம் வரலாற்றை தாமே வகுத்து வருகின்றனர். நாடோடிகளின் வாழ்க்கை முறைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் கூட,  அவர்களின் மரபு என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடிய ஒன்றாக இருக்கும். 



நாடோடிகள் : உலகம் அவர்களின் உறைவிடம்
பல நூற்றாண்டுகளாக நாடோடிகளின் தொடக்க வரலாறு ஒரு மறைபொருளாகவே இருந்து வந்தது. இன்றிலிருந்து நாளை செல்லும் புரியாத பழக்கங்களுடைய இந் நாடோடி கூட்டங்களைப் பற்றி அறிவதற்கு ஒரே இடத்தில் நிலையாக வாழ்ந்த மக்கள் ஆவல் கொண்டனர். அதனால் பல எழுத்தாளர்கள் அவர்களைப் பற்றிய புதிரை விளக்குவதற்காக நம்பத்தகாத கருத்துக்களை புனைந்தனர்.

19ஆம் நூற்றாண்டின் அறிவியல் ஆராய்ச்சி அதற்கு விடையளித்த போதிலும், இன்றும் நாடோடிகளைப் பற்றிய கற்பனை கதைகளுக்கு பஞ்சமில்லை என்று தான் தோன்றுகிறது. நாடோடிகளின் மொழி பற்றிய ஆழ்ந்த ஆய்வுக்கு பிறகு ஊக மூட நம்பிக்கைகளும், நம்பமுடியாத கற்பனைகளும் மறைந்து போயின. மறுமலர்ச்சி காலத்திலேயே அம்மொழி பற்றி அறிஞர்கள் ஓரளவு அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் அது எம்மொழிக் கூட்டத்தை சார்ந்த்து என்பதையோ, எங்கே தோன்றியது என்பதையோ உறுதியாக கூறவில்லை. ஆயினும் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிவியல் சான்றின் அடிப்படையில் நாடோடிகளின் தொடக்க வரலாற்றை அவர்கள் திட்டவட்டமாக அறிந்துகொள்ள முடிந்த்து. அதன் பிறகு இந்த அறிஞர்களின் ஆராய்ச்சியை தலைசிறந்த மொழியியல் வல்லுநர்கள் உறுதிப்படுத்தினர்.

நாடோடிகள் பேசிய மொழியின் இலக்கணமும், சொற்களும் சமஸ்கிருத மொழியிலுள்ளவை போலவும், காஷ்மீரி, இந்தி, குஜராத்தி, மராத்தி, நேப்பாள் போன்ற பேச்சு வழக்கிலுள்ள மொழியிலுள்ளவை போலவும் இருந்தன.
நாடோடிகள் தொடக்கத்தில் இந்தியாவில் இருந்தவர்கள் என்பதைப் பற்றி இன்றைய அறிஞர்கள் இப்போதெல்லாம் சந்தேகம் கொள்வதில்லை. ஆயினும் அவர்களது இனத்தொகுதி, சமூக வகுப்பு, முதலில் குடிபெயர்ந்த காலம் முதலான கேள்விகளுக்கு இன்னமும் விடை அளிக்கப்படமாலே இருக்கிறது. நாடோடிகளின் தொடக்க வரலாற்றை அறிவதற்கு மொழியியலே மிகச்சிறந்த வழிமுறையாகும். மேலும் மனித இனவியல், மருத்துவம், இனவியல் போன்றவைகளும் இதற்கு உதவக்கூடும்.

மேற்கு நோக்கி நாடோடிகள் குடிபெயர்ந்த்திலிருந்து அவர்களைப் பற்றி ஓரளவு திட்டவட்டமான செய்திகள் கிடைக்கின்றன. குறிப்பாக கற்பனையும், வரலாறும் விரவிய இரு பாரசீக ஆதாரங்கள் உள்ளன. பாரசீகத்திலிருந்து 12 ஆயிரம் ‘ஸாட்’ இசைவாணர்கள் வந்த்தாக இஸ்ஃபஹானைச் சேர்ந்த ஹம்ஸா 10ஆம் நூற்றாண்டின் மத்தியில் எழுதினார். அதன்பின்னர் அரை நூற்றாண்டுக்குப் பிறகு ‘The Epic of the Kings’ நூலை எழுதிய பாரசீக செய்தித் தொகுப்பாளரும், கவிஞருமான ஃபிர்தவ்சியும் இக்கதையையே கூறுகிறார். இக்கதை பெரும்பாலும் கற்பனையாக இருக்கலாம். ஆனால் இது இந்தியாவிலிருந்து வந்த பல நாடோடிகள் பாரசீகத்திலிருந்தனர் என்றும், வேளாண்மை விரும்பாமல் நாடோடிகளாக திரிந்து, சிறு களவும் செய்து வந்தனர் என்று தெரிவிக்கிறது.

ஆசியாவின் வழியே நாடோடிகள் அலைந்து திரிந்த்தைப் பற்றிக்கூறும் பண்டைய எழுத்து ஆதாரம் இவை தாம். மொழியியல் சான்றுகள் இன்றும் ஆதாரங்களை தந்துகொண்டே வருகின்றன. பாரசீகத்தில் நாடோடிகள் புதுச்சொற்களைக் கற்றுக்கொண்டனர். இவை பிந்திய ஐரோப்பிய பேச்சு வழக்குகளில் காணப்படுகின்றன. அவர்கள் இரு கிளைகளாக பிரிந்து சென்றார்களென்று ஆங்கிலேய மொழியியலாளர் ஜான் சாம்ஸன் கருதுகிறார். சிலர் மேற்கிலும், தென் கிழக்கிலும் தொடர்ந்து சென்றனர். மற்றவர்கள் வடமேற்கு நோக்கி சென்றனர். பிந்தியவர்கள் ஆர்மேனியா வழியாகச் சென்றனர். அதன்பிறகு அவர்கள் காக்கஸல் வ்வியாகச் சென்றபோது ஒசெட்டுகளிடமிருந்து புதிய சொற்களைக் கற்றுக் கொண்டனர்.

இறுதியாக அவர்கள் ஐரோப்பாவையும், பைசாண்டிய உலகையும் அடைந்தனர். அது முதல் நாடோடிகளைப் பற்றி பல புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக பாலஸ்தீனத்திற்கு சென்ற ஐரோப்பிய பயணிகள் எழுதிய விவரங்கள் உள்ளன.

1322-ல் சைமன் சிமியோனிஸ், ஹ்யூக் ஆகிய இரு சிறு துறவிகள் ஹாம் இனத்தோராக கருதப்பட்டவர்கள் கிரீஸில் இருந்த்தைக் கண்டனர். அம் மக்கள் கிரேக்க வைதீக முறையில் வழிப்பட்டனர். அரேபியரைப் போல் தாழ்ந்த கூடாரங்களிலோ, குகைகளிலோ வாழ்ந்தனர். கிரீஸில் அவர்கள் அட்கிங்கனொஸ் அல்லது அட்சிங்கனோஸ் என்று அழைக்கப்பட்டனர். இது இசை பாடி. குறி சொல்லும் ஒரு பிரிவினரின் பெயராக இருந்தது.

மொரியாவின் மேற்கு கரையின் அரண் அமைந்த நகரின் முக்கிய துறைமுகமான மோடன், வெனிஸிலிருந்து ஜாஃபாவுக்கு செல்லும் கப்பல்கள் தங்கிச் செல்லும் இடமாக இருந்தது. அங்கு ஐரோப்பிய பயணிகள் பெருவாரியான நாடோடிகளைக் கண்டனர். எத்தியோப்பியரைப் போல கருத்த நிறமுடைய அவர்கள் கொல்லர்களாக குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். அவ்விடம் ‘சிறிய எகிப்து’    (Little Egypt) என்று அழைக்கப்பட்டது. நைல் நதிக் கழிமுகம் போல், அதுவும் வரண்ட பகுதியின் நடுவிலிருந்த செழிப்பான நிலமாகையால் இப்பெயர் பெற்றிருக்கக்கூடும். அதனால் தான் அவர்கள் ஈஜிப்தியர், ஜித்தர், ஜிப்ஸி என்று அழைக்கப்பட்டனர். அவர்களின் தலைவர் கோமகன் அல்லது பெருமகன் என்று அறியப்பட்டார்.
நாடோடிகள் கிரீஸில் பல புதிய சொற்களைக் கற்றுக் கொண்டனர். எல்லாவற்றிர்கும் மேலாக, எல்லா கிறித்துவ நாடுகளிலிருந்து வந்த யாத்ரீகர்களிடமிருந்து புதிய வாழ்க்கை முறைகளைக் கற்றுக் கொண்டனர். யாத்ரீகர்கள் தனிச் சலுகைகளுடன் பயணம் செய்வதக் கண்ட நாடோடிகள் தாமும் யாத்ரீகர்களைப் போல் பயணம் செய்தனர்.

கிரீஸிலும், அண்மை நாடுகளான ருமேனிய அரசுகளிலும், செர்பியாவிலும் நீண்ட காலம் தங்கிய பிறகு பல நாடோடிகள் மேற்கே சென்றனர். பைசாண்டிய மற்றும் துருக்கிய படைகள் அடிக்கடி போர்புரிந்து பலமுறை திரும்பவும் கைப்பற்றிய இடங்களில் நாடோடிகள் நிம்மதியாக வாழ முடியவில்லை. அதனால் அந்த இடங்களை விட்டு வெளியேறி சமய அல்லது அரசாங்க அதிகாரிகளின் நம்பிக்கையை பெற முயற்சி செய்தபோது அவர்கள் எழுதிய குறிப்புகளில் இதற்கான சான்றுகளை காணலாம். எகிப்திலிருந்து வெளியேறிய பிறகு முதலில் கிறித்துவராக இல்லை என்றும், பிறகு கிறித்துவராக மதம் மாறினார்கள் என்றும், திரும்பவும் உருவங்களை வழிபடத் தொடங்கினர் என்றும், மறுபடியும் அரசர்களின் வற்புறுத்தலினால் கிறித்துவராக மாறினர் என்றும் அவர்கள் கூறினர்.

1418-ல் பெரும் நாடோடிக் கூட்டங்கள் ஹங்கேரி, ஜெர்மன் வழியாகச் சென்றன. அங்கு பேரரசர் சிகிஸ்மண்ட் அவர்களுக்கு பாதுகாப்புக் கடிதங்கள் கொடுப்பதற்கு இசைந்தார். அதற்கள் வெஸ்ட்ஃபேலியா, வடபகுதிச் சுதந்திர நகர்கள், பால்டிக் கரைப் பகுதிகள் ஆகியவைகளுக்கு சென்று, பிறகு திரும்பவும் தெற்கே திரும்பி லீப்ஸிக், மெய்ன் நதிக்கரையிலுள்ள ஃப்ராங்ஃபர்ட் ஆகிய நகரங்கள் வழியாக சுவிட்ஸர்லாந்துக்கு சென்றனர்.

1419-ல் ஃபிரான்ஸாக இருக்கும் எல்லைப் பகுதியைக் கடந்தனர். ஆகஸ்ட் 22-ல் ஷாட்டியோந் ஆன்- தோம்பிலும், இரு நாட்கள் கழித்து மாகோனிலும், அக்டோபர் 1-ல் சிஸ்தரோனிலும் அவர்கள் பேரரசரிடமிருந்தும், சவாய் கோமகனிடமிருந்தும் பெற்ற கடவுச்சீட்டுகளைக் காட்டியதாக தெரிகின்றது. மூன்று ஆண்டுகள் கழித்து பிற நாடோடிக் குழுக்கள் நெதர்லாந்துக்கு சென்றன.

கிறித்துவ நாடுகளின் வழியே பயணம் செய்ய வேண்டுமானால் அப்போது அனைவரும் ஏற்றுக்கொண்ட போப்பாண்டவரின் நன்மதிப்பை பெற வேண்டுமென்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஜூலை 1492-ல் ஆந்திரே கோமகன் பொலாஞா, ஃபோர்லி வழியே பெருங்கூட்டத்துடன்  சென்றார். அப்போது போப்பாண்டவரைப் பார்க்கப் போவதாக அறிவித்தார். ஆயினும் கிறித்துவ உலகின் தலைநகருக்கு அவர் சென்றதாக ரோமானிய நிகழ்ச்சிக் குறிப்புகளிலோ, வத்திக்கான் காப்பகத்திலோ சான்று இல்லை.

ஆகஸ்ட் 1427-ல் நாடோடிகள் முதன் முறையாக பாரிஸ் வாயிலில் நுழைந்தனர். அதை அப்போது ஆங்கிலேயர் கைப்பற்றியிருந்தனர். நாடோடிகள் லா செயிண்ட் தெனிஸில் ஷாப்பெல் (La Chapelle-Saint-Denis) முகாமிட்ட்தும் அவர்களைப் பார்க்க மக்கள் ஆவலுடன் கூடினார்கள்.

அப்போது விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் சில நடைபெற்றன. குறிசொல்வோர் கைரேகை பார்க்கும்போது பணப்பைகள் மறைந்தன. பாரிஸ் ஆயராகிய தலைமைக்குழு குருட்டு நம்பிக்கையுள்ள கிறித்துவர்களை கண்டித்தார். ஆகவே நாடோடிகள் அங்கிருந்து வெளியேறி போத்துவாஸ் (Pontoise) சாலை வழியாக சென்றனர். விரைவில் இக்கூட்ட்த்தினர் பிரான்ஸ் முழுவதுமாக செல்லத் தொடங்கினர். சிலர் தாங்கள் சாண்டியாகோ தே கோபெஸ்தெலாவுக்கு திருப்பயணம் செய்ட்வதாகக் கூறி ஆரகான், கடலோனியா வழியாகச் சென்றனர். அவர்கள் காஸ்டிலேயைக் கடந்து அந்தலூஸியாவை அடைந்தனர். அங்கு காஸ்டிலேயின் முன்னாள் தலைமைக் காவலரும், அமைச்சருமான மிகேல் லூகாஸ் தே இரான்ஸோ கோமகன் ஜேனிலிருந்த தன் அரண்மனையில் நாடோடிகளின் பெருமக்களை அன்புடன் வரவேற்ற்றார்.

நாடோடிகள் எகிப்திலிருந்து புறப்பட்டு ஆப்பிரிக்க்க் கரையோரமாக படகுகளில் வந்து அந்தலூசியாவை அடைந்தனர் என்று பல நூலாசிரியர்கள் சான்று எதுவுமின்றி கூறுகின்றனர். ஆயினும் ஸ்பானிய நாடோடிகள் அராபியச் சொற்கள் எதையும் பயன்படுத்தவில்லை. அவர்கள் பயண வழிகளும் விவரமாக கொடுக்கப்பட்டன. அந்தலூசியாவை அடைந்ததும் போப்பாண்டவர் மற்றும் பிரான்ஸ் அரசர், காஸ்டீல் மன்னர் ஆகியோரின் பாதுகாப்பை நாடினர்.

நாடோடிகள் முதலில் இந்தியாவிலே தோன்றினர் என இன்று வல்லுநர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆயினும் நாடோடிகள் மேற்கு நோக்கி நீண்ட பயணம் தொடங்கிய காலம் பற்றி அவர்களுக்கு உறுதியாக தெரியவில்லை. (பொதுவாக கி.பி 1000 எனக் கருதப்படுகின்றது. நாடோடிகள் ஐரோப்பா முழுவதும், பிறகு உலகம் முழுவதும் பரவினர். 

கீழே : சிந்து நதியின் இடக்கரை அருகிலுள்ள காதிர்பூர் கிராமம் (பாகிஸ்தான்)

மேலே : வடமேற்கு ஸ்பெயினிலுள்ள சாண்டியாகோ தே காம்போஸ்தெலா பேராலயம். இது ஜெர்மானியக் கலைஞர் மிக்கேல் வோஹில்ஜிமத் (Michael Wohlgemuth) (1434-1519) 1491-ல் மரத்தில் செதுக்கிய ஓவியம்.

அயர்லாந்தில் குடியேறிய நாடோடிகளுக்கு இடர்ப்பாடுகள் பல ஏற்பட்டன. அங்கு பழைய உலோகங்களை பழுதுபார்ப்போர் ஏராளமாக இருந்தனர். அவர்கள் புதிதாக நாடோடிகளை தங்களோடு போட்டியிடுபவர்களாகக் கருதி அவர்களை விரட்ட முயன்றனர்.

சிறிய எகிப்தை சேர்ந்த அந்துவான் காகினோ கோமகன் 1505-ல் ஒரு ஸ்காட்லாண்டின் மன்னரான 4ஆம் ஜேம்ஸ் அவரை டென்மார்க் அரசர் ஜானுக்கு அறிமுகம் செய்து பரிந்துரைத்தார். செப்டம்பர் 29, 1512-ல் அண்டோனியஸ் கோமகன் என்பார் ஸ்டாக்ஹோமினுள் ஆரவாரத்துடன் நுழைந்தார். அங்குள்ள மக்கள் இதைக் கண்டு பெருவியப்படைந்தனர்.

இவ்வாறாக 15 முதல் 18ஆம் நூற்றாண்டுகள் வரை ஐரோப்பிய நாடுகளுக்கெல்லாம் நாடோடிகள் சென்றனர். ஆப்பிரிக்க, அமெரிக்க குடியேற்ற நாடுகள் வரை அவர்கள் சென்ற போதிலும் முற்றிலும் விரும்பிச் செல்லவில்லை. ஸ்பெயின் நாடோடிகள் பலரை கடலுக்கப்பால் அனுப்பியது. 16ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து போர்ச்சுகல் ஏராளமான ‘ஸிகானோ’க்களை அங்கோலா, சாவ டோமே, கேப் வெர்டே, பிரேஸில் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பியது.

17ஆம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்திலிருந்த நாடோடிகள் ஜமெய்க்காவுக்கும், பார்படாஸுக்கும் தோட்டவேலைக்காக அனுப்பப்பட்டனர். 18ஆம் நூற்றாண்டில் அவர்கள் வெர்ஜினீயாவிற்கு அனுப்பப்பட்டனர்.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஏராளமான நாடோடிகள் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா சென்றுள்ளனர். அவர்கள் ஐரோப்பாவில் செய்வது போலவே அதேதொழில்களை செய்து, அதே வகையில் வழிபட்டு வருகின்றனர். எங்கிருந்தாலும் கவலையற்று வாழ்கின்றனர். ஏனேனில் நாடோடிகள் தாம் எங்கு இருக்கின்றார்களோ அந்த இடத்தை தங்கள் தாயகமாக கருதுகின்றனர்.

தமிழில் : வள்ளுவன் கிளாரன்ஸ்



ஃபிரெஞ்சு ஆவணக் காப்பாளர், வரலாற்று அறிஞர், நாடோடி வரலாற்று மாணவரான இவர், நாடோடிகளுடன் வாழ்ந்து அவர்களுடன் பயணம் செய்தவர். Gypsies are Mille Ans d’Historie des Tsiganes (1970), Les Bohemiens au XIX Siecle (1981) ஆகியவை நாடோடிகள் பற்றி இவர் எழுதிய நூல்கள். 1983-ல் பாரிஸில் Berger-Levrault –ஆல் வெளியிடப்பட்ட Le Monde des Tsianges என்ற நூலில் உள்ள கட்டுரை.

பல நூற்றாண்டுகள் வரை நாடோடிகள் பலவகை பயண  வண்டிகளையும், கூடாரங்களையும் பயன்படுத்தினர். 19ஆம் நூற்றாண்டின் நடுவில் தான் இங்கிலாந்தில் கூண்டு வண்டி முதலில் தோன்றியது. இன்று அது உந்து வண்டியாக மாறியிருப்பினும், இன்னும் பல நாடுகளில் குதிரை பூட்டிய கூண்டு வண்டி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 1875-1920-ல் இங்கிலாந்தில் பெர்க் ஷயரிலுள்ள ரெடிங்கில் பெற்ற ’ரெடிங் வண்டி’ எனும் பெரிய வகையான வாழும் வண்டி பயன்பட்ட்து. 

மேலே உள்ளது போன்ற வசதியுள்ள வண்டிகள் செதுக்கு வேலைகளால் அழகுபடுத்தப்பட்டிருந்தன.

’குதிரை இல்லாத நாடோடி நாடோடியல்ல’ என்பது ஹங்கேரியப் பழமொழி. பாஸ்பரஸ் ஜலசந்தி முதல் அட்லாண்டிக் வரை ஐரோப்பா முழுவதும் நாடோடிகள் குதிரை வாணிகம் செய்து வந்தனர். இன்று கூட ஒரு நாடோடிக்கு குதிரையானது சவாரி செய்யும் அல்லது சுமை தாங்கும் விலங்காகவோ, விற்பனைப் பொருளாகவோ இல்லாமல்  உண்மை நண்பனாகவும் இருக்கிறது. 

மேலே : உலகப் புகழ்பெற்ற குதிரைக் கண்காட்சியில் இங்கிலாந்தில் வெஸ்ட்மோர்லாண்டிலுள்ள ஆப்பிள் பியின் தெருவில் ஒரு நாடோடி தன் குதிரையின் ஓட்ட வேகத்தைக் காட்ட்டுகிறார்.   





No comments:

Post a Comment