Saturday 21 April 2018

நாஜிக் கொடுமைக்குப் பலியான ஐந்து லட்சம் நாடோடிகள்

மிரியாம் நோவிட்ச்


ஜெர்மனியில் நாஜிக்களின் ஆட்சியில் நாடோடி இன ஒழிப்பு முக்கிய திட்டமாக இருந்த்து. நாடோடிக்கு எதிரான அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகள் 1899-ல் தொடங்கின. பவேரியாவில் காவலர் ‘நாடோடி நடவடிக்கைப் பிரிவு’ ஒன்றை ஏற்படுத்தி நாடோடிகள் மீது சாட்டப்பட்ட குற்றங்களுக்கு, வழக்கு மன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை சேகரித்து வைத்தது. 1929-ல் இப்பகுதி தேசிய மையமாக ம்யூனிக்கில் இயங்கியது. அதன் பின்னர் அனுமதியின்றி நாடோடிகள் இடம் விட்டு இடம் செல்ல முடியாத நிலை உருவானது. பதினாறு வயதுக்கு மேற்பட்ட நாடோடி, தனக்கு வேலை உண்டு என நிரூபிக்காவிடில் சீர்த்திருத்த நிறுவனத்தில் இரண்டாண்டு சிறை தணடனை விதிக்கப்பட்டது.

கைதி முகாமுக்கு புதிதாக வந்துள்ள நாடோடிக் கைதிகள் இன்னும் சாதாரண உடையிலிருக்கின்றனர்.

ஹிட்லர் ஆட்சிக்கு வந்த 1933ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலைமை இன்னும் கடுமையாயிற்று. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நிரூபிக்க முடியாத நாடோடிகள் நாடு கடத்தப்பட்டனர். மற்றவர்கள் சமூக எதிர்ப்பாளர்கள் என்று சிறை வைக்கப்பட்டனர். அவர்களது இனம் பற்றிய கருத்துக்கள் வளரத் தொடங்கின. 1936-ல் ஹான்ஸ் குளோக் (இஅவர் நியூரம்பர்க் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்) நாடோடிகள் அன்னிய மரபைச் சார்ந்தவர்கள் என்று அறிவித்தார். அவர்கள் ஆரிய பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்பதை மறுக்கமுடியாத பேராசிரியர் ஹான்ஸ் எஃப். குந்தர், ’பல இனங்கள் இணைந்த, நிர்ணயிக்க இயலாத மரபினர்’ என்று கூறினார்.

டாக்டர் பட்ட ஆய்வுக்காக நாடோடிகள் இனம் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் நலத்துறையின் இன ஆய்வுப்பிரிவின் தலைவரான எவா ஜஸ்டின் ‘நாடோடிகளின் ரத்தம் ஜெர்மானிய இனத் தூய்மைக்கு ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டது’ என்று தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டார்.

1937, டிசம்பர் 14ஆம் நாள் கொண்டுவரப்பட்ட சட்டம் நாடோடிகளின் நிலைமையை மேலும் மோசமாக்கியது. இதன்படி இவர்கள் திருத்த முடியாத குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். 1937, 1938 ஆண்டுகளில் பலர் கைது செய்யப்பட்டனர். புசென்வால்ட் (BBuchenvald) குடியேற்றச் சிறைப் பகுதிகள் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டது. மாதாஸான் (Mauthausen),கூஷின் (Gusen), டாட்மெர்ஜன் (Dautmergen), நாட்ஸ்வீலர் (Natzweiler), ஃப்ளாசன்பர்க் (Flossenburg) போன்ற முகாம்களில் இறந்தோர் பட்டியலில் பல நாடோடிகளின் பெயர்களும் இடம்பெற்றன. ராவன்ஸ்பர்க்கில் பல நாஜி மருத்துவர்களின் கொடுமையான பரிசோதனைகளுக்கு பல நாடோடிப் பெண்கள் பலியானார்கள். ஜெர்மானியக் குடியானவரின் இனத்தூய்மையைக் கெடுப்பதால், நாடோடிகளை உழைப்பு முகாம்களுக்கு அனுப்பி, அனைவருக்கும் பலவந்தமாக குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர் போர்ட்ஸி (Portschy) என்பவர் ஹிட்லரிடம் பரிந்துரை செய்தார். 


இருண்ட வரிகளும், நாடோடிகளைக் குறிக்கும் கவிழ்ந்த முக்கோணமும்  உள்ள சிறையுடை அணிந்த இக்கைதிகள் கொடிய ஆஷ்விட்ச் மரண முகாமில் படமெடுக்கப்பட்டனர். ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து நாடோடிகள் இம்முகாமிற்கு அனுப்பப்பட்டனர். 

1938-ல் ஹிட்லர் தலையிட்டு நாடோடி விவகார மையத்தை ம்யூக்கினிலிருந்து பெர்லினுக்கு மாற்றும்படி ஆணையிட்டார். அந்த ஆண்டு பண்ணைகளுக்கும், திராட்சை தோட்டங்களுக்கும் உரிமையாளராக இருந்த நாடோடி இன மக்கள் 300 பேர் மான்           ஒர்த் (Mannworth) கிராமத்தில் சிறை வைக்கப்பட்டார்கள்.

ஹிட்லரின் ஆணைப்படி நாடோடிகள் பலவகையாக பட்டியல் படுத்தப்பட்டார்கள். கலப்பற்ற நாடோடிகள் (Z), கலப்பின நாடோடிகளில் பெரும்பாலும் நாடோடி இன ரத்தம் உடையவர்கள் (ZM+), ஆரிய ரத்தம் அதிகம் கலந்த கலப்பின நாடோடிகள் (ZM-), பாதி நாடோடி இன ரத்தம் பாதி ஆரிய இன ரத்தம் உடையவர்கள்(ZM) என வகைப்படுத்தப்பட்டனர்.ஜோஸஃப் பில்லிக் என்ற வரலாற்றாசிரியர் மக்களை கொன்று தீர்க்கும் மூன்று வழிகளை விவரிக்கிறார்.

1. அறுவைச் சிகிச்சையின் மூலம் பிறப்பினை அழித்தல்.
2. நாடு கடத்துதல்.
3. கொன்று ஒழித்தல்.

வேறு இனத்தவரை மணம் புரிந்துகொண்ட நாடோடிப் பெண்களுக்கு டுசெல்டார்ப்லீரன்பெல்ட் (Duusseldorflierenfeld) மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கருவுற்ற நிலையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதால் பலர் இறந்தனர். ராவன்ஸ்பர்க் மருத்துவமனையில் S.S மருத்துவர்களால் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட 120 நாடோடிப் பெண்கள் இறந்து விட்டனர்.

ஜெர்மனியிலிருந்து 5000 நாடோ இனத்தவர், போலந்தில் உள்ள லோட்ஸ் ஒதுக்குப்புறப் பகுதிக்கு நாடு கடத்தப்பட்டனர். அங்கு வாழ்க்கை மிக மோசமாக இருந்தபடியினால் யாருமே உயிர் வாழ முடியவில்லை.

நாஜிக்களின் முக்கியமான உத்தியே மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவிப்பது. 1941-ல் நாடோடி இனத்தாரை அடியோடு ஒழித்துக் கட்டுவது என முடிவு எடுக்கப்பட்டது. இதற்கென என்ஸா குரூப்பன் (Einsatzgruppen) என்ற கொலைப்படை அமைக்கப்பட்டது. எல்லா நாடோடிகளும் சிறை செய்யப்பட்டனர். 1938 டிசம்பர் 8ஆம் தேதி ஹிட்லர் பிறப்பித்த ஆணைப்படி எல்லா நாடோடிகளின் முகவரியும் காவலருக்கு தெரிந்திருந்த்து. 1939 நவம்பர் 17ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி அவர்கள் வெளியேற வேண்டியதாயிற்று.

போலந்துக்கு நாடு கட்த்தப்பட்ட 30 ஆயிரம் நாடோடிகள் பெல்செக், ட்ரெப்ளிங்கா, சோபிபார், மாஜ்டேனெக் மரண முகாம்களில் மரணமடைந்தனர். பெல்ஜியம் நெதர்லாந்து, பிரான்ஸ் நாடுகளிலிருந்து கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான நாடோடிகள் ஆஷ்விட்ச் முகாமில் உயிரிழந்தனர்.


டிசம்பர் 8, 1942 நாளிட்ட இக்கடிதம் நாடோடிகளை ஆஷ்விட்ச் முகாமிற்கு அனுப்பியதை குறிப்பிடுகின்றது. செக்கோஸ்லாவியாவை நாஜிக்கள் பிடித்த பின் ப்ரன் (ப்ரூனோ) நகர நாஜி குற்றவியல் காவல் அதிகாரி எழுதிய இக்கடிதம் ப்ராக் நகர அதிகாரிக்கு அனுப்பப்பட்டது. 

ஆஷ்விட்ச் முகாமின் பொருப்பாளராக இருந்த ஹாஸ் (Hoss) என்பவர் தனது நினைவுக் குறிப்புகளில் கூறியுள்ளபடி முகாமிற்கு கொண்டுவரப்பட்டவர்களில் பலர் நூறு வயதுடைய முதியவர், கருவுற்ற பெண்டிர் மற்றும் எண்ணற்ற சிறுவர்கள் இருந்தனர். அம்முகாமிலிருந்து தப்பித்து உயிர் வாழ்ந்த குல்கா, கிராஸ் போன்றோர் தமது ‘மரணத் தொழிற்சாலை’ (The Death Factory) என்றா நூலில், 1944 ஜூலை 31ஆம் தேதி இரவு ஏராளமான நாடோடிகள் கொல்லப்பட்ட கொடுமையை விவரிக்கிறார்கள்.

போலந்திலும், சோவியத் யூனியனிலும் கொலை முகாம்களிலும், கிராமப் புறங்களிலும் நாடோடிகள் கொல்லப்பட்டனர். ஜெர்மனிக்கும், சோவியத் யூனியனுக்குமிடையே 1941 ஜூன் 22ஆம் தேதி போர் மூண்டது. வான் லீர், வான்         பாக் வான் ருண்ஸ்ட்டட் ஆகியோரின் படைகளுக்கு பின்னா S.S கொலைப்படைகளும் சென்றன. பால்டிக் நாடுகள், உக்ரெயின், கிரீமியா ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கல்லறைகளாயினர்.1941 டிசம்பர் 26ஆம் தேதி சிம்விரோபோல் என்ற இட்த்தில் 800 ஆண், பெண் மற்றும் குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். நாஜிப்படைகள் சென்ற இடமெல்லாம் நாடோடிகள் சிறைப்படுத்தப்பட்டு நாடு கட்த்தப்பட்டனர், கொல்லப்பட்டனர். யூகோஸ்லோவியாவில் ஜாய்னிஸ் காடுகளில் 1941 அக்டோபர் மாதம் யூதர்களும், நாடோடிகளும் கொல்லப்படத் தொடங்கினர். கொலைக்கான வண்டிகளில் கொண்டு செல்லப்பட்ட குழந்தைகளின் ஓலம் இன்னமும் குடியானவர்களின் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.

இரண்டாவது உலகப்போருக்கு முன்னர் எத்தனை நாடோடிகள் ஐரோப்பாவில் வாழ்ந்தனர் என்பதையும், அதன் பின்னர் பிழைத்தவர் எண்ணிக்கையையும் மதிப்பிடுவது கடினம். ராவோர் ஹில்பர்க் என்ற வரலாற்றாசிரியர் ஜெர்மனியில் மட்டும் 34 ஆயிரம் நாடோடிகள் இருந்த்தாக கூறுகிறார். ஆனால் அதன்பின்னர் உயிர் பிழைத்திருந்தவரின் எண்ணிக்கை தெரியவரவில்லை. சோவியத் ரஷ்யாவில் இப் படுகொலைக்கு பொறுப்பாக இருந்த எய்ன் சாட்ஸ்க்ரூபன் (Ein-Satzgruppen) அறிக்கையின்படி ரஷ்யா, உக்ரெயின், கிரீமியா பகுதிகளில் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர். யூகோஸ்லோவியா கணக்குப்படி செர்பியாவில் மட்டும் 28 ஆயிரம் நாடோடிகள் கொல்லப்பட்டனர். போலந்தில் உயிரிழச்ந்தோரின் எண்ணிக்கையை அறிவது கடினம். ஜோசப் டென்ன்பாம் என்ற வல்லுநரின் கணக்குப்படி 5 லட்சம் நாடோடிகள் இங்கு உயிரிழந்தனர். 



முகாம் கைதிகளைத் தமது பயங்கரப் பரிசோதனைகளுக்கு பயன்படுத்தி கொடிய அவசர கால மருத்துவர் டாக்டர் . மெங்கெல் ஆஷ்விட்ச் முகாமில் சிறைப்பட்ட டினா கோட்லிபை நாடோடிக் கைதிகளின் உருவங்களை வரையுமாறு வற்புறுத்தினார். இந்த அம்மையார் தீட்டிய 12 நீர்வண்ணப் படங்களில் 7 மட்டுமே கிடைத்துள்ளன. நாடோடிப் பெண்ணின் இப்படம் அவற்றில் ஒன்று. டினா கோட்லிப் சிறை மீட்க்கப்பட்டு இப்போது அமெரிக்காவில் வாழ்கின்றார்.  

தீரமும், அறிவும் மிக்க மிகப் பழமையான இனத்தவரான நாடோடிகள் சாவினை எதிர்த்து போராடினர். எனினும் எதிரிகள் கொடுமையாலும், பலத்தாலும் தோற்றனர். பட்டினியாலும், நோயாலும் அவதியுற்ற நிலையிலும் ஆஷ்விட்ச் மரண முகாம்களில் பாடியும், நடனமாடியும் குழந்தைகளை உற்சாகப்படுத்தி நடனமாடச் செய்தனர். சில இளைஞர்கள் தப்பியோட முயன்றனர். டானுடா செக் என்பவர் குறிப்பேட்டிலிருந்து, அவர்கள் தப்பிச்சென்று மீண்டும் பிடிப்பட்டு பெரிய சுவர் அருகே சுட்டுத் தள்ளப்பட்டவர்களின் பெயர்களையும், கொல்லப்பட்ட தேதியையும் அறியலாம். போலந்தின் நீஸ்வீஸ் பகுதியில் போரிட்ட நாடோடிகளின் வீரத்தைக் கண்டவர்கள் அவர்களின் மாவீரத்தை விவரித்துள்ளார்கள். அவர்கள் கத்தியை மட்டுமே கருவியாகக் கொண்டு, மிகப்பெரிய ஆயுதம் ஏந்திய எதிரிகளிடையே எதிர்த்து களமாடிய வீரத்தை புகழ்கிறார்கள்.

நாடோடிகள் கூட்டமாக கொல்லப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. மனித இனத்தின் ஒரு பகுதியாக விளங்கிய அவர்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமையை நினைவுபடுத்துவதே இக்கட்டுரையின் ஒரே நோக்கமாகும்.



No comments:

Post a Comment