Tuesday 3 April 2018

Warriors Of The Rainbow : வானவில் போராளிகள் (தைவான் படம்)

Wei Te-Sheng | Taiwan | 2011 | 276 min. 



காலம் காலமாக மனிதனை மனிதன் அடக்கி ஆளும் மரபும், குனிந்தே பழகியவன் திடீரென்று ஒருநாள் முதுகெலும்பின் பயனறிந்து நிமிர்ந்து நின்று போராடத் தொடங்குவதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் 'தைவான்', 1930களில் ஜப்பானின் அதிகாரப் பிடியில் சிக்கிக்கொண்டு தவித்தது.

Seediq Bales என்றழைக்கப்பட்ட பல்வேறு இனக்குழுக்களாக வாழ்ந்து வந்த மண்ணின் மைந்தர்களான தைவானின் பழங்குடியின மக்களை அடிமைப்படுத்தி அந்நாட்டின் வளங்களைச் சுரண்டியது ஜப்பான். பெரும் ஜப்பான் சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து பழங்குடியின மக்கள் நடத்திய 'Wushe Incident' என்றழைக்கப்படும் எழுச்சிப் போராட்டத்தின் கதைதான் இந்த "Warriors of the Rainbow : Seediq Bale".





தைவானின் திரைப்பட வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம், சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இறுதி வரை பங்கேற்று ஈரானின் 'A Seperation (2011)' படத்திடம் தோற்றுப்போனது. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் Hard-Boiled, A Better Tomorrow, Face Off, MI-2, படங்களின் இயக்குனரானJohn Woo. ஹாங்-காங்கின் ஆக்‌ஷன் மன்னன். இந்தப் படத்திற்கு சற்றும் குறையாத Red Cliff படங்களை எடுத்தவர். படத்தின் இயக்குனர் Wei Te-Sheng. ரொமான்டிக் காமெடியான Cape No. 7 (2008) என்ற படத்தைஇயக்கியவர். Seediq Bale விற்கு எந்தப் படத்தையும் அடுத்து இயக்கவில்லை என்றாலும் 2014 இல் வெளியான Kano என்ற Sports Drama (Baseball) வை எழுதியுள்ளார்.


Wei Te-Sheng                      Jhon Woo

1895 ஆம் ஆண்டு ஜப்பானுடன் சீனா போட்ட ஒப்பந்தத்தின்படி (Treaty of Shimonoseki) தைவான் ஜப்பானின் மாகாணமாகிறது. அடர்ந்த மலைக்காடுகளில் வாழும் பல்வேறு பழங்குடி இனமக்கள், அந்நியர்களான ஜப்பானியர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட வேண்டிய சூழல் உருவாகிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தன் இனம் அழிந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக ஜப்பானியர்களுக்கு அடங்கி வாழ்ந்து தங்களது போபம், வீரம், கலாச்சாரம், பண்பாடு, முன்னோர் பெருமை என அனைத்தையும் உள்ளுக்குள்ளேயே புதைத்துக்கொண்டு வாழ்கிறான்மெஹெபுஎன்றஇனத் தலைவனான Mona Rudao. இந்தக் கதையின் நாயகன். குறைவான சம்பளத்திற்கு விலங்கை விடக் கேவலமாக நடத்தும் அந்நியர்களின் அட்டகாசங்களை பொறுத்துக் கொண்டு உள்ளுக்குள்ளே புழுங்கியபடியே 20 ஆண்டுகளைக் கழிக்கும் Mona Rudao, ஒரு நாள் வெடித்தெழுகிறான். தன் இனத்தவரின் குனிந்த தலைகளை நிமிர்ந்தெழச்செய்கிறான். 300 பேர் கொண்ட இவனது படை, அதிநவீன ஆயுதமேந்திய 3000 ஜப்பானியர்களை ஓட ஓட விரட்டுகிறது.



தங்களது வேட்டை நிலைங்களைப் பாதுகாப்பதை உயிரினும் மேலாகக் கருதுகின்றனர் Seediq Bale இன மக்கள். அவர்களிடம் ஒரு பழக்கம். வீரத்தின் அடையாளமாக முகத்தில் பச்சை குத்திக்கொள்வார்கள். அப்படிப் பச்சை குத்தப்பட்ட வீரனால் மட்டுமே இறந்த பின் வானவில்லில் வாழும் தங்களது முன்னோர்களிடம் சென்று சேர முடியும் என்பது நம்பிக்கை. பச்சை குத்திக்கொள்ளத் தகுதியாக எதிரியின் தலையைக் கொண்டு வர வேண்டும்.



பன்றி வேட்டையாடிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தை வேட்டையாடுகிறது மற்றொரு கூட்டம். Mona Rudao - 16 வயது இளங்காளை. ஆற்றின் மறு கரையிலிருந்தபடி எதிரி ஒருவனை அம்பெய்து வீழ்த்துகிறான். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து லாவகமாகத் தப்பித்தபடியே சீறிப்பாயும் ஆற்றில் தாவிக் குதிக்கிறான். தான் வீழ்த்திய எதிரியின் தலையை வெட்டி, முதுகில் தொங்கும் தோள் பையில் போட்டுக்கொண்டு கிளம்புகிறான். செல்லும் முன் என்பெய மோனோ ரூடோஅடுத்தமுறை இந்தப் பெயரைக் கேட்கும்போது எச்சரிக்கையாக இருங்கள்என்று தோரணையாகச் சொல்கிறான். இது தான் படத்தின் முதல் காட்சி! 




இந்த முதல் காட்சியே நாம் அடுத்தடுத்து காணவிருக்கும் பிரம்மாண்டத்திற்கு மிகச்சரியான ஆரம்பமாய் இருக்கிறது.


இரண்டு பாகங்களாக மொத்தம் நான்கரை மணிநேரத்திற்கும்அதிகமாக ஓடுகிறது படம். பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம். விண்ணைத்தொடும் பனிசூழ்ந்த மலைகள், மிக அடர்த்தியான ஆள்விழுங்கிக் காடுகள், அதனூடே பழங்குடியின மக்கள் குடியிருப்பு என்று படத்தின் செட்டப்பே நம்மை முதலில் மிரட்டிவிடும். பச்சை வண்ணம் போர்த்தப்பட்ட வனப்பரப்பில், வெள்ளை வெளேர் பனிமூட்டத்தின் மேல் சிவப்பு ரத்தம் தெறித்து விழும் காட்சிகள் - வன்முறையாகத் தெரியவில்லை, அழகியலாக அதிசியக்க வைத்தது!



பல நூறு வருடங்கள் சுதந்திரமாக வேட்டையாடி, உற்சாகமாக உற்சாக பானமருந்தி, முன்னோர்களை கடவுளாக வணங்கி, எதிரியின் தலைவெட்டி முன்னோர்கள் இருக்கும் இடத்திற்கு செல்வதே பிறவியின் லட்சியம் மோட்சம் என்று அவர்களது கலாச்சார வட்டத்திற்குள் மகிழ்ச்சியாக வாழ்ந்த மக்களை கூண்டோடு ஒழிக்க ஜப்பான் வானிலிருந்து வெடிகுண்டுகளை வீசும். பற்றி எரியும் பொன்னிற நெருப்பால் காடே தக தக வென்று மின்னும் அந்த அற்புத காட்சியைக் காணக கண்கோடி வேண்டும். மார்பில் வாளேறி, வாயில் ரத்தம் கக்கி, கீழே விழுந்து கிடக்கும் ஜப்பான் ராணுவ வீரன் ஒருவன் உயிர் பிரியும் தருவாயில் அந்த அற்புதக் காட்சியைக் காண்பான்!



உச்சகட்ட வன்முறையை தனது கடைசி தருணத்தில் அவன் காணும் பரவசம் படம் பார்க்கும் நம்மையும் தொற்றிக் கொள்ளும். படத்தில் இன்னும் கொஞ்சம் தலைகள் உருண்டால் இன்னும் கொஞ்சம் வெடிகுண்டுகள் வீசப்பட்டால் இன்னும் சில அற்புத காட்சிகள் காணக் கிடைக்குமே என்று என்னை ஏங்க வைத்த காட்சியமைப்புகள் அவை. கொஞ்சம் குரூரமாகத் தோன்றினாலும் உண்மை அதுவே!



பல மொழிகளில் பல நாட்டுத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுவரை எந்தவொரு படத்திலும் இத்தனை தலைகள் வெட்டப்பட்டு உருண்டு நான் பார்த்ததில்லை; இத்தனை உடல்கள் தூக்கில் தொங்கியும் பார்த்ததில்லை. வெட்டிய எதிரிகளின் தலைகளை ஒப்படைக்க வேண்டும் என்று ஜப்பான் ஆணையிடும் போது Mona Rudao தன் குடிலிலிருந்து இரண்டு பெரிய மூட்டைகளை எடுத்து வந்து கொட்டுவான். அனைத்தும் மனித மண்டை ஓடுகள்! ஆண்கள் சண்டைக்குப் போய்விட்டார்கள். அவர்கள் உயிருடன் திரும்பி வர வாய்ப்பே இல்லை. நாம் இறந்து விட்டால் உணவுத் தட்டுப்பாடாவது குறையுமே என்று கூட்டம் கூட்டமாக தூக்கில் தொங்குகின்றனர் Seediq Bale பெண்கள்!



முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் தொடங்கும் காட்சியில் மலைவீரன் ஒருவன், கடைசி வரிசையில் "புத்தரே" என்று அமைதியாக நின்று கொண்டிருக்கும் ஒரு ஜப்பான் போலீஸ் அதிகாரியின் தலையை வெட்டியெடுத்துக் கொண்டு ஓடுவான். ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. காரணம் அங்கு நடந்து கொண்டிருப்பது ஒரு பள்ளியின் ஆண்டுவிழா. கூட்டதின் நடுவே தலையிலாமல் ஒரு முண்டம். இப்படி படத்தில் திகைக்க வைக்கும் காட்சிகள் ஏராளம் உண்டு.


அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் தான் இந்தப்படம். இந்தப் படத்தைப் பாராட்டுவதால் 'அரிவாள் கலாச்சாரத்தை ஆதரிப்பது' என்று அர்த்தமாகி விடாது. நம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியாகிக்கொண்டிருக்கும் 'ஆதிக்க சாதி வெறிப் படங்கள்' இந்தப் படத்தின் கால் தூசுக்கு பெறாது என்பதே என் தாழ்மையான கருத்து. இப்படம் பேச வருவது புரட்சி, ஆனால் நம்மவர்கள் உண்டாக்க நினைப்பது கலகம். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. 



No comments:

Post a Comment